*இக்கதையில் வரும் சம்பவங்கள், நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே....

மலை உச்சி.

எட்டி பிடித்தால் வானம் வசப்பட்டு விடும் என்று நம்பலாம்.

எங்களுக்கு கீழே மேகம் நகருவதைக் காணுகையில்..... இப்படியே மலை உச்சிவாசியாகவே இருந்து விடலாம் என்று தோன்றியது. கொள்ளை கொண்ட காட்சிகளை கையோடு கண்ணோடு நெஞ்சோடு இருத்திக் கொண்டே நின்றிருந்தேன். சில மக்கள் வெறும் கண்களை தொலைத்து விட்டு கேமரா கண்களில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாழ்வின் பெரும் பகுதி சூத்திரம் அறியாதோர்கள் அவர்கள். உடன் வந்திருந்த நண்பன் மயூரன் ஏதோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். சூனியம் பிடித்தவன். முன்னால் இருக்கும் இயற்கையோடு பேச துப்பில்லை. வாய் கிழிய காது வழிய அலைபேசியிடம் பேசிக் கொண்டிருந்தான். உடல் தழுவி செல்லும் காற்றின் கைகளை இனம் காண முடிந்தது. மேல் பட்டு தோல் தொட்டு செல்லும் சிறு துளி சாரல்கள் காற்று பட்டு வெற்றிடம் தொட்டு கீழே வராமல் சரிவாகவே மிதந்து கொண்டிருந்தது. காற்று திரி திரியாக பிரிந்து பறப்பது போல வெள்ளை நிற நூலலைகள் உடல் முழுக்க இலகுவாக்கியது. யாரும் செல்லத் துணியாத அந்த உச்சி முனையில் நிற்பது கம்பீரம். ஆயிரம் காலத்து மரமாக அசைந்தபடி நின்றேன்.

நான் எனக்கு பிடித்த தலைவர் முகத்தை முகத்தில் முகமூடியாக அணிந்திருந்தேன். முகமற்று அப்படி நிற்பது ஆனந்த கூத்தடியாது போல இருந்தது. முகமூடி அணிந்த பிறகு உடலற்ற சுதந்திரம் வந்து விடுகிறது.

மயூரன்..... அலைபேசியை அணைத்து விட்டு "இப்ப எதுக்கு இந்த முகமூடி......?!" என்றான்.

"முகமூடியிலாவது இந்த தலைவன் வாழட்டும்" என்றேன்,

"வர வர நீ லூசு மாறி பேசறடா" என்றான்.

"வேற வழி இல்லாம தான் லூசாக வேண்டி இருக்கு" என்றபடியே அவன் அருகே சென்று அவனை உற்றுப் பார்த்தேன்.

"ஏன்டா அப்டி பாக்கற....? கொலை பண்ண போறவன் மாதிரி....!" -சிரித்தான்.

சட்டென இடைவெளி விட்டு நானும் பயங்கரமாக சிரித்துக் கொண்டே பட்டென அவனைப் பிடித்து தள்ளினேன்.

நொடி நேரத்தில் மரண ஒலத்தோடு அவன் பள்ளத்தாக்கில் விழுந்து காணாமல் போனான். மலை உச்சி மரண உச்சியாக காட்சி அளித்த நொடிநேரம் சற்று முன் பறந்த பறவையாகி வானம் தொட்ட வெண்மதி. பாரம் விட்ட நிம்மதி என வேறு வேறு காட்சிகளானது.

*

சார் இன்னும் பாடி கிடைக்கல. ஒண்ணுமே பண்ண முடியல.. எஸ்... ஊரே சாட்சி. நியூஸ்ல போட்டு கிழிக்கறான்.... கொலை பண்றது அப்டியே லைவா இருக்கு. அங்கிருந்த பப்ளிக்ல நிறைய பேர் இந்த கொலைய படம் பிடிச்சிருக்காங்க... கொலை பண்றவன் நிதானமாக பக்கா பிளானோட கொலை பண்ணிருக்கான். அதுவும்......அந்த நல்லவரோட முகமூடியை போட்டுட்டு. இன்னும் சொல்ல போனா அவனே சூட் பண்ணி கியூ டியூப்ல அப்லோடு பண்ணின மாதிரி இருக்கு. செத்தவன் யாருனு தெரிஞ்சா தான் கொன்னவன் யாருனு தேட முடியும்.... இதுவரை யாருமே புகாரும் குடுக்க வரல. சாவ சொந்த கொண்டாடிட்டும் வரல. ஒன்னும் புரியல...... ஆனா இது தொடர்ந்து நடக்கும்னு மட்டும் தோணுது. ஏன்னா கொலை பண்ணின ஸ்டைல்....... வேணும்னே காட்டின அந்த தலைவர் படம் போட்ட முகமூடி...அதுவும் இத்தனை பேர் இருக்கும் போது பொது இடத்துல பட்ட பகல்ல நடக்குதுன்னா இது சாதாரண கொலை கேஸ் இல்ல. இது ஏதோ செய்தி சொல்ற கொலை. கவனம் திருப்பற கொலை.

காவல் துறை மாறி மாறி வார்த்தை விளையாட்டுகளில் ஜவ்வு மிட்டாய் செய்து கொண்டிருந்தது.

*

ஆறு மாதமாக காத்திருக்கிறேன்...

முகநூலில் எந்த குழுவில் எல்லாம் இருக்கிறேனோ அங்கெல்லாம் கொக்கை போல கனத்த அமைதியோடு காத்துக் கொண்டிருக்கிறேன்...

சூனியத்தின் சூனியம் புள்ளி என சுழலும் மையத்தில் ஆளில்லாத நானாக நிற்பதை போல உணர்கிறேன். இது பெரும் தவத்தின் பெருவெடிப்பு. என் கனவுகளின் நுனி உடைய உடைய பிடி மாறும் இரவின் நனவிலி. பேரிசை முழுக்க இதயத்தின் சுவாசத்தில் இயலாமை இனி இல்லை என்ற என் தர்க்கம் உடைபட ஒருபோதும் நான் விரும்புவதில்லை. கண்களில் காலம் பூத்து காத்திருக்கிறேன். ஒரு துளி ஒரே ஒரு துளி என்னை போல எங்கிருந்தாவது என்னை யாரென்று தெரியாமல் முளைத்து வந்து விடவே இந்த பரமபதம். ஆட ஆட ஆட்டத்தின் நகர்வே இங்கு பிரதானம்.

நான் இதுவரை என் புகைப்படத்தை முகநூலில் எங்கும் பதியவில்லை. எல்லாம் காரணம் தான். காரணியாக மாறும் நானே இங்கு காரணமாகவும் இருக்கிறேன். என் அடையாளம் கூட போலியானவையே. நான் என் முகநூலை தொடங்கியது என்னை யாரென்றே தெரியாத ஒருபோதும் தொடர்பில்லாத ஒருவரின் கணிப்பொறியில். அதுவும் இந்த ஊரில் இல்லை. மொத்தத்தில் நான் பெருங்கவிதையை பெரு விசனத்தோடு எழுதிக் கொண்டிருக்கும் அரைகுறை எழுத்தாளன். யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையே ஊசலாடும் வனத்தில் மனித குரங்கின் வால் பற்றி எரிந்து கொண்டிருக்கும் பரிணாமத்தை உற்று உற்று கொறித்துக் கொண்டிருக்கும் சமுதாய வன் பொறியாளன்.

என் அறை முழுக்க ஒரு கிறுக்கனின் டைரி நிறைந்திருக்கிறது. சுவரெல்லாம் என் கோபங்களும்....தாபங்களும் இன்னதென புரியாத என் மொழியில் கிறுக்கப்பற்றியிருக்கிறது. நான் அடைந்து கிடைக்கிறேன். எனக்கு நானே ஒரு சிறைச்சாலை செய்து கொண்டு அங்கே நானே கைதியாக அடைந்து கிடைக்கிறேன்.

இதுவரை யாருக்கும் என் மீது சந்தேகம் வரவில்லை.

ஆம் நான் ஆறு மாதத்துக்கு முன்பு ஒரு கொலை செய்தவன்.

எதற்கு கொலை செய்தேன்....!?

என்னை நானே ஆயிரம் முறை கேட்டுக் கொண்டேன். அடுத்த முறையும் கேட்கலாம். அதற்கடுத்த முறையும் என்னிடம் பதில் இருக்கிறது. நான் ஒரு தத்து பித்து மனநிலைக்காரன் என்றுதான் எல்லாரும் கூறுவார்கள். என்னால் இங்கே இந்த வாழ்வை சரி செய்ய முடியவில்லை. வீட்டு வாசலில் கொட்டிக் கிடக்கும் சாக்கடையை என்ன செய்வதென்று தெரியாமல் வெகு நேரம் அந்த காகத்தோடு அமர்ந்து வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கிறேன். குண்டும் குழியுமான சாலைகளில் நடக்கும் போது பலமுறை விழுந்து எழுந்து வந்து கொண்டு யாரிடமாவது இதற்கு ஒரு யோசனை கிடைக்காதா என்று சாக்கடைக்கு அருகிலேயே அல்லது பெரும்பாலும் அதன் மேலேயே காலை நெடி சலம்ப இருக்கும் டீ கடையில் ஈ விழுந்த 5 ரூபாய் டீயை குடித்தபடியே கேட்கிறேன். அவசர அவசரமாக பாதி கழுவியும் பாதி கழுவாமலும்...... டீ போட்டு வட வடவென கொடுக்கும் அந்த கடைக்காரனின் நகம் முழுக்க அழுக்கு படிந்திருக்கிறது என்பது என் யோசனையை முற்றாக மாற்றி போடுகிறது. கேள்விக்கு கேள்வியே பதிலாக கிடைக்கையில் நான் என்னதான் செய்வது.... பேசாமல் எல்லாரையும் கொன்று போட்டால் என்ன என்று தோன்றுவதை இயற்கையின் மறு சுழற்சி விதி என்கிறேன்.

இது பாட்டனின் மூன்றாம் விதியென இருந்தாலும் கவலை இல்லை.

சேலத்தில் இருந்து கோவை வரும் போது ஒரு நள்ளிரவில் இந்த அரசாங்கம் சொல்லாமல் கொள்ளாமல் பஸ் டிக்கட் விலையை திடும்மென ஏற்றி விட்டது. காசு பற்றாமல் நான் பட்ட பாடு......அய்யயோ.... அது ஒரு மகா கேவலம்.... சொன்னால் நம்புவது கடினம்தான். கடினமானதை நம்ப வைப்பதே என் வேலை ஆன பின் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

நம்புங்கோள்.

நான் பிச்சை எடுத்தேன். நாகரிகமான பிச்சை. 1000 ரூபாய் மதிப்புள்ள தாஸ்தாவெஸ்கி புத்தகத்தை 100 ரூபாய்க்கு தொண்டை தண்ணீர் வற்ற பேசி விற்றேன். வாங்கியவன் ஒரு குடிகாரன். அவன் உடலே பச்சை நிறமாக மாறி இருந்தது போல ஒரு தோற்றம். வீடு வரும் வரை வெட்கம் பிடுங்கித் தின்றது. வந்த பிறகு துக்கம் தின்று பிடுங்கியது.

இதுக்கெல்லாம் யார் காரணம். எதுதான் காரணம். ஒரு விதமான ஏகாதிபத்தியம் நம் எல்லாரையும் சூழ்ந்து கொண்டு அவரவர்க்கு தகுந்தாற் போல வலை பின்னிக் கொண்டு அதே வலையில் விழ வைத்துக் கொண்டிருப்பதை ஒரு மறதியைப் போல நான் புரிந்து கொண்டேன். எல்லா விதமான தப்பும் ஓட்டுக்கு காசு கொடுப்பதில் துவங்குவதாக நானே ஒரு வரையறை வைத்துக் கொண்டேன். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதில் அதன் தொடர்ச்சி இருப்பதாக என் கற்பனை நீளத் துவங்கியது. ஒருவேளை கற்பனை சரியாக கூட இருக்கலாம். சங்கிலித் தொடர் போல ஒரு தப்பு ஒரு மனிதன் அடுத்த தப்பு அடுத்த மனிதன்... என்று நீண்டு கொண்டே போவதை நான் ஏதோ ஒரு மனிதனாகக் கண்டேன். எனக்கு நானே பேசிக் கொள்ளும் நிலை கூட வந்து விட்டது. முகநூலை காரணமே இல்லாமல் விடிய விடிய சுற்றினேன். எவனோ என்னை அடிமையாக்கி அவன் பொருள்களை எனக்கு தெரியாமேலே எனக்கும் என் மூலமாக என்னை சார்ந்தவர்களுக்கும் சாராதவர்களுக்கும் விற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் வெந்து போனேன். இங்கு எதுவுமே என்னால் செய்ய முடியாதா என்ற கேள்வி என்னை குடைந்தது. கள்ளை தடை செய்து விட்டு அரசே சாராயம் விற்பதை நான் வன்மையாக எல்லோரையும் போல கண்டித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. குடி குடியை கெடுக்கும் என்று வீதி வீதியாக வீடு வீடாக சென்று சொல்வதை விட...கெஞ்சுவதை விட.... போராட்டம் செய்வதை விட இருக்கின்ற அந்த 10 கடைகளுக்கு சீல் வைத்து விட்டால் போதுமே...என்று யோசிக்கும் அதே நேரத்தில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலைமை என்ன ஆகும் என்று எங்கேயோ போகிற எதையோ எடுத்து என் மூளைக்குள் வீட்டுக் கொள்வதும் குளறுபடிகளின் பிசிறுகள் என்று தான் எடுத்துக் கொள்கிறேன்.

மாட்டுக்கு சேர்ந்த கூட்டம் மனுஷனுக்கு சேர மாட்டேன் என்கிறது. எல்லா கோபங்களுக்கும் வடிகால்.....நாலு வரி ஸ்டேட்டஸ் போதும் என்றாகி விட்டதை நான் மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். என் கோபத்தின் அரிப்பை எதைக் கொண்டு சொரிந்து கொள்வது.? நான் எனக்கு நானே ஒரு அந்நியனாக மாற வேண்டும் என்று மனதார நம்பினேன். நானும் ஒரு துரும்பை இங்கு கிள்ளி போட்டிருக்கிறேன் அல்லது இந்த சமுதாய பரிணாமத்துக்கு தொட்டில் ஆட்டி விட்டிருக்கிறேன் என்ற திருப்தி வேண்டும் என்று நினைத்தேன். நான் வரலாற்று நாயகனாக மாற முடிவு செய்தேன். என் மனம் முழுதாக சிதைந்து விடும் முன் எனக்கு நான் நல்லவனாக உண்மையானவனாக மாற முடிவெடுத்தேன். எல்லாவற்றுக்கும் தீர்வாக நான் ஒரு கொலை செய்துவதென்று முடிவெடுத்தேன். தீர ஆராய்ந்து யோசித்து அலசி அதற்கு பின் தான் இம்முடிவு வந்திருக்கிறது. மரண பயம் மட்டுமே மாற்றத்துக்கானது என்ற தத்துவத்தை முழுதாக இறுக்கமாக நெருக்கமாக நம்பினேன்.

ஆயுதம் தீர்வல்லதான். சரி பிறகு எது தான் தீர்வு அஹிம்சையா...? அப்படியென்றால் என்ன விதமான அகிம்சையை போதிப்பது....? யாருக்கு போதிப்பது !

13 வயது பிள்ளையை காட்டுக்குள் வைத்து கதற கதற வன்கலவி செய்பவனிடம் சென்று எந்த வியாக்கியானம் பேசுவது...? அவனை சரியாக வளர்க்காத அவன் தாயை கொன்று விடலாம் அல்லது அல்லது அவனுக்கு சரியான பாடம் புகட்டாத அவன் ஆசிரியரைக் கொன்று போடலாம்... அல்லது அவன் பள்ளிக்கூடமே போகாத காரணம் அந்த பள்ளி சரியான சூழலில், அமைப்பில் இல்லை..... மழை வந்தால் ஒழுகும் கூரையோடு இருக்கிறது......வெய்யில் வந்தால் பாம்புகள் நுழைந்து வளையும் அபாயத்தில் இருக்கிறது......என்பதால் அவன் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை...... அதனால் அந்த பள்ளி தலைமை ஆசிரியரைக் கொன்று விடலாம்.....அவர் வேலைதானே செய்கிறார்.... அந்த பள்ளி இருக்கும் மாவட்டத்தின் உயர் அதிகாரியைக் கொன்று விடலாம்....... அவர் என்ன செய்வார்... அரசியல் அழுத்தம்....ஒன்றும் செய்ய முடியவில்லை.......அதனால் அந்த அரசியல் தலைவரைக் கொன்று விடலாம்.........அவருக்கு மேல் இருக்கும் அவர்... அவருக்கு மேல் இருக்கும் அவர்... என்று இது போய்க் கொண்டேயிருக்க யாரைத்தான் கொல்வது.....? அப்படியே கொலை செய்வது என்று முடிவெடுத்தாலும்.....இது சாத்தியமானதா...? அத்தனை இலகுவாக இங்கு ஒருவனைக் கொன்று விட முடியுமா ! அதுவும் ஒன்றுமே இல்லாத நான் எப்படிக் கொல்ல முடியும்.....?

இந்த உலகத்துக்கு நான் புத்தி புகட்ட வேண்டும்... என்று கிறுக்குத்தனமாக யோசிக்கிறேன்... நம்புகிறேன். இங்கு மாற்றம் என்னிலிருந்து தான் ஆரம்பிக்கும் என்பது குருட்டுத்தனமாக இருந்தாலும் நிஜம் என்று வெளிச்சம் போட்டு நம்புகிறேன். அதனால் நான் கொலை செய்யப் போவது உறுதி. ஒரு கொலை ஒரு ட்ரிகர் பாயிண்டாக இருக்கும் என்பதுதான் இவ்வாழ்வின் பெரும் திருப்பம். இங்கிருக்கும் சட்டத்தின் ஓட்டைகளை அடைக்கும் பள பளக்கும் பாய்ண்ட் அது.

சரி.. அவனைக் கொல்லலாம் என்று அவனை தீர ஆராய்ந்தால் அவன் செய்யும் எல்லா தவறுகளுக்கும் வேர் வேறொரு புள்ளியாக இருக்கிறது. திருட்டு அதன் பின் பசி அதன் பின் வேலையில்லாமை அதன் பின் வேலைக்கு லஞ்சம் அதன் பின் வாங்கிய கடன் அதன் பின் எவனோ வசூலித்த வட்டி.. என்று இந்த பட்டியல் நீள்கிறது. கரெக்ட் பண்ண முடிவெடுத்து பின்னால் செல்ல செல்ல கரப்ட் ஆன சமூகமே முன்னால் பெருந் நாக்கோடு வந்து நின்று வாலாட்டுகிறது. அதனால் நான் மிகவும் குழம்பி போனேன். யாரைக் கொல்வது என்ற என் சிந்தனை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருந்தது. ஒரு கொலைதான். ஆனால் அது சாவதற்கு தகுதியானவனாக இருக்க வேண்டும்.

எப்படி எப்படி எப்படி....?

தினமும் குடித்து விட்டு சண்டை போடும் பக்கத்து வீட்டுக்காரனை கொன்று விடலாமா என்று யோசித்தேன் அவன்....பிச்சைக்காரர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் காட்சி கண் முன்னால் வர அவன் சாக வேண்டியவன் இல்லை என்று ஒரு தீர்க்கம் என்னை சூழ்ந்தது. ஒரே இடத்தை இரண்டு பேருக்கு விற்ற ப்ரோக்கரை முடித்து விடலாம் என்று யோசித்தேன். அவனுக்கு கால்கள் ஊனமான ஒரு குழந்தை இருக்கிறது. போலியோ சொட்டு மருந்தில் ஊழல் செய்த மந்திரியை கொன்று விட தீர்மானித்தால் அவனை நெருங்குவதற்குள் எனக்கு வயதாகி விடும். நான் ஸ்பைடர்மென் ஆகி விட எல்லா கடவுளிடமும் கெஞ்சிப்பார்த்தேன். அதிகாலை ஒன்றில்...... கடலுள் காணாமல் போன சித்திரத்தில் நாசூக்காக கடவுள் சிலை திருட்டு என்று செய்தி வந்தது.

நான் வேறு திட்டம் போட ஆரம்பித்தேன். ஆயிரம் பெயரை எழுதி அழித்துக் கொண்டே வந்தேன். நூறுக்கு வந்து நின்றது பெயர். பெயர் பட்டியலில் என் அறை முழுக்க பிசாசுகள் நிறைந்து வழிந்தன. அம்மணமாக திரியும் ஆதிகளின் பொருட்டு நான் அம்மணமாக அடைந்து கிடந்தேன். எனக்கு பைத்தியம் முற்றி விட இன்னும் சில காலமே இருப்பதாய் அவர்கள் எனக்கு அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

பூமியின் நீரை உறிந்து இருட்டு பாறைகளை நகர்த்தும் வறட்டு கரத்தின் பேரில் கொள்ளை நடப்பதை தடுக்க முடியாமல்... நான் இரவெல்லாம் கத்தினேன். என்னால் ஒரு முடிவை எட்ட முடியவில்லை. மணல் திருடர்களை ஒன்றுமே செய்ய முடியாதா என்ற ஏக்கம் என்னை தூள் தூளாக்கியது. திரும்பும் பக்கமெலாம் தப்பும் தவறுமாக என் சமுதாயம் என் பரிணாமம் நொண்டி அடித்துக் கொண்டிருப்பதை காண சகிக்கவில்லை. கண்ணுக்கு சிக்கும் ஒருவனை முதலில் கொன்று விட்டு பிறகு யோசிக்கலாமா என்று கூட யோசித்தேன். 35 வயதாகியும் திருமணமாகாத ஆண்களின் அவசியத்தை பல பேருந்து நிலைய கழிவு அறைகளில் காணும் போது பெண்ணாக மாறி யோனி திறந்து விடலாமோ என்று கூட புத்தி பேதலிக்கிறது. திருமணம் தடை பட காரணமாக இருக்கும் குறி சொல்லுபவன் ஒருவனை கொன்று போடலாமா....? போலி கௌரவம்.. வறட்டு பிடிவாதம்.. போட்டி பொறாமை என்று சாவு வீடும் திருமண வீடும் எல்லைகளை வகுத்துக் கொண்டு வாய் நிறைய சிரிப்பும் அழுகையும் துப்புகையில்....அயோ என மனம் பதறுகிறது. சாவு சோறில் விஷம் கலக்கலாமா என யோசிக்கிறேன். திருமண வீட்டில் சாதி பார்த்து கடைசி பந்திக்கு காத்திருக்க சொல்லும் வெள்ளை வேட்டி முட்டாள் ஒருவனை வெட்டி போடலாமா என்று யோசிக்கிறேன்...

முக நூலில் கூட முதலில் யார் ரெக்வெஸ்ட் கொடுப்பது என்று ஈகோ வந்து நிற்பதை காரி காரி துப்புகிறது பால்ய நட்புகளின் காலம். பெண் பிள்ளைகள் என்றால் வரிசை கட்டி விருப்ப குறியிடுவதும் பகிர்வதும் ஓடி ஓடி நட்பு விண்ணப்பம் தருவதும் பார்க்க பார்க்க அருவருப்பு கூட்டுகிறது. அவர்களில் ஒருவனை போட்டு தள்ளலாம்.

எதுவும் சரியான தீர்வாக இல்லை. ஒரு தொடக்கம் இல்லாத கதையின் பக்கத்தை போல நுழைய முடியவில்லை. மீண்டும் யோசித்தேன். யோசித்தேன். யோசிக்க யோசிக்க... கசியும் மூளை பிளவின் மடிப்புகள் ஆற அமர சிந்தித்தது. அதை தொடர்ந்து வந்த திடமான வலிமையான உறுதியான யோசனையில் யாரோ கரப்ட் ஆனதற்கு யாரோ காரணம். அவர்களை தேடுவதை விட நான் கரப்ட் ஆனதுக்கு யார் காரணம் என்று தேடலாமே என்று ஒரு யோசனை வந்தது. இடம் மாறி இடம் மாறி கிழக்கு மேற்கு திசை மாறி பட் பட்டென மாற்றி மாற்றி பூக்கும் பூக்களின் நடுவே தோட்டக்காரனாய் இருப்பது கொடுமையின் வாசம். அங்கே பிருந்தாவனம் குணம் மாறி பூத்துக் குலுங்குவதை தடை செய்ய ஏதுமின்றி சரணடைந்தேன்.

நான் என் வாழ்வில் பின்னோக்கி பின்னோக்கி அவன் இவன் என்று செல்ல செல்ல நூல் பிடித்த மாதிரி 13 வயதில் பக்கத்து வீட்டு அக்கா குளிப்பதை எட்டி பார்க்க கூட்டி சென்ற மயூரனிடம் போய் நின்றது எனது தேடல்.

எஸ்....அவன்தான் என் முதல் தவறின் மூலம்.

அதுமட்டுமல்ல. ஊர் முழுக்க பல தீமைகளை விதைத்தவன். கோழி திருடி விற்றவன். வாத்து திருடி மேட்டாங்காட்டில் சுட்டு தின்றவன். ஊர் கோயில் திருவிழா அன்று கூட்டத்தில் வண்ணமொழியின் இடது மார்பை பிசைந்து விட்டு மறைந்தவன். என் போன்றோருக்கு குடிக்க கற்றுக் கொடுத்தவன். நான் பத்தாவது பெயிலானது அவனால்தான். அவனோடு சேர்ந்துதான் சீட்டாடி பழகியது. அவன்தான் இளநி திருட கற்றுக் கொடுத்தது. இன்னமும் சொல்ல போனால் புத்திசுவாதீனம் இல்லாத அவன் பாட்டியை பல முறை வீதியில் போட்டு அடித்து உதைத்தவன். வழிப்போக்கன் ஒருவனை ஏமாற்றி 5 பவுன் நகை கொள்ளை அடித்தவன். ஆசிரியர் தண்ணீர் போத்தலில் சிறுநீர் அடித்து வைத்தவன். செய்த அத்தனை சிறு சிறு தவறுகளுக்கும் தீ பொறி அவன்தான். முதல் முறையாக விலைமகளிடம் அழைத்து சென்றவனும் அவன்தான். வாரம் ஒரு முறையாவது இரண்டு வீடுகளுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் வேடிக்கை மனிதன் அவன். நான் தனி மனித ஒழுக்கம் தவறியதற்கு அவன் தான் காரணம். கிணற்று நீரில் சிறுநீர் கழிக்க கற்றுக் கொடுத்தவன் அவன்தான். எனக்குள் எல்லா வக்கிரங்களும் முளை விட காரணமானவன் அவன். பின்னாளில் நான் விட்டேத்தியாக ஊர் சுற்றி... ஓட்டு கூட போட விரும்பாத ஆளாக மாறியதற்கும் என் சிறு வயது வாழ்க்கைக்கும் அதிக தொடர்பு இருப்பதாக நம்புகிறேன். அறிவியலும் அதையேதான் கூறுகிறது. தூங்கும் நாய் மீது கல்லெடுத்து போட்டு கொன்றது.... நான். கொல்ல சொல்லி பீர் வாங்கி தந்தது அவன். நான் பொறுப்பற்றவனாக ஆனதற்கு என் சிறுவயது வாழ்வே காரணம். அது முழுக்க முழுக்க அவனால் வடிவமைக்கப் பட்டவை.

எஸ்ஸ்ஸ்ஸ்.... அவன் தான் சரியான தேர்வு..

என் கோபத்தின் சுவடுகளின் அரிப்புக்கு அவன் சாவே மருந்து காணும். எனக்கு அவன் மரணமே வடிகால். அவன்தான் என் சமூகத்தின் கரும்புள்ளி. எனது வாழ்வுக்கு அவனே ஆதி தவறு. என்னால் இன்று இயல்பான ஒரு வாழ்வை வாழ முடியவில்லை என்றால் அதற்கு உள்ளே முள்ளாக உறுத்தும் என் இளமையின் கட்டற்ற போக்குதான் காரணம். அதை வழி நடத்தியவன் அவன். எல்லா தவறுக்கும் யாரோ எங்கோ ஒரு விதை போடுபவன் இருக்கிறான். அவனை வேரறுக்க வேண்டும். அவனே விதை. நான் அவனை அறுக்க துணிந்தேன்.

20 வருடங்களாக எவ்வித தொடர்பிலும் இல்லாத அவனை எங்கிருக்கிறான்.....எப்படியிருக்கிறான் என்று தேடினேன். மயூரன் மருத்துவனாக கிடைத்தான். எங்கும் எதுவும் பதிவு செய்யப்படாத சந்திப்பை வெகு கவனமாக நிகழ்த்தினேன். பிக்னிக் என்று சென்ற மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டதில் அவன்...பாவங்கள் கழுவப் பட்டு மறித்து போனான். நான் பெயர் சொல்ல விரும்பாத ஒரு தேசத் தலைவரின் முகத்தை என் முகத்துக்கு முகமூடி போல மாட்டி இருந்தேன்.

நான் தள்ளி விடுவது அவன் சாவது நான் திரும்பி சிரித்துக் கொண்டே கை ஆட்டிக் கொண்டு போவது எல்லாம் அடுத்த சில மணி நேரத்தில் வலைத் தளங்களில் தொலைகாட்சி செய்திகளில்.... பகீர் காட்சிகளாக திரும்ப திரும்ப காட்டப் பட்டது.

கோடியை தாண்டி விட்டது க்யூ டியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை. நான் விரும்பியது தான். எனது திட்டப்படி தான்.

படுக்க படுக்கவே தூங்கி விட்டேன். என் ஆன்மா ஒரு மாதிரி சமாதானம் ஆகி விட்டதாக நம்பினேன். இந்த சமூகத்துக்கு என்னால் ஆன நல்ல காரியத்தை செய்து விட்டதாக நம்பினேன். விடியலில் ஒரு எண்ணம் மலர்ந்தது. இது தொடர வேண்டும். இந்த கொலைகள் கண்டிப்பாக தொடர வேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம் என்று இந்த மக்களின் மனதில் பதிய வேண்டும். ஆனால் தொடர்ந்து நான் கொலைகளை செய்ய முடியாது. ஏனென்றால் நான் கொலைகாரன் இல்லை. அது என் வேலையும் இல்லை. ஒருவேளை அப்படி நான் தொடர்ந்து செய்தாலும் மாட்டிக் கொள்வேன். ஆனால் என்னை போலவே இன்னொருவர் இதே மாதிரி ஒரு கொலையை செய்ய வேண்டும். அந்த கொலையோடு அவரும் நிறுத்தி விட வேண்டும். அதன் பிறகு இன்னொருவர் இதே போல செய்ய வேண்டும். அதன் பிறகு அவரும் நிறுத்தி விட வேண்டும். ஆனால் எனக்கு பிறகு செய்ய போகிறவருக்கு நான் யாரென்று தெரிய கூடாது. என் கான்செப்ட்டை நான் சொல்லாமலே அவர் புரிந்து கொள்ளவேண்டும். அவர் சொல்லாமலே அடுத்த அவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மிக வலுவாக.... அமைதியாக யோசித்தேன்.

எப்படி எனக்கு பின்னால் என்னை போலவே கொலை செய்ய போகிறவரை நான் உருவாக்குவது..? அது பெரிய சிக்கலாக இருந்தது. யோசித்தேன். பல கணங்கள் அறை முழுக்க மூலைகளாக முளைக்க மூளையில் கனத்தோடு கவிதைகளால் அலங்கரிக்கப்பட்ட வழி உருவானது.

பின்னிரவு 3 மணிக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது.

நான் முகநூலில் தேடத் துவங்கினேன். ஒவ்வொரு குழுவிலும் கண் கொத்தி பாம்பாய் தேடினேன். வீரத்தோடு அமெச்சூராக.. கத்தி கொண்டு... ஒற்றை படையில் அவன் இவன்.. நீ.. நான் என்று வெட்டியாக கவிதை போல எழுதி போடுபவர்களை கண்காணிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து தேடிதேடி சலித்தேன். வீதிக்கு ஒரு கவிஞன் இருந்தது அந்த காலம். இருப்பவன் எல்லாம் கவிஞனாக இருப்பது முகநூல் காலம். அதும் கவிதை எனும் பெயரில் வார்த்தைகளை உடைத்து ஒளித்து துப்பி வைப்பவரைக் கண்டாலே விரட்டி விரட்டி வெளுக்க தோன்றியது. சிரித்துக் கொண்டு தேடினாலும்.... தீ எரியும் பிறழ் நிகையே உயிர் முழுக்க எனக்கு.

கடைசியில் 3 பேர் நான் தேடும் எல்லா குணத்தோடும்... வேகத்தோடும்.... முட்டாள்தனங்கள் நிறைந்த குருட்டுக் கோபத்தோடும் கிடைத்தார்கள்.

மூவரையும் முழுதாக படித்தேன். வழி தெரியாமல் முட்டி மோதும் தன்மானம் மிக்கவர்கள் என்பதை புரிய முடிந்தது. அஹிம்சை மீது ஆத்திரம் கொண்டவர்களாக இருந்தது வசதியாக இருந்தது. நான் யோசித்தேன். இரவும் பகலும் யோசித்தேன். ஒரு வதத்துக்கான ஒத்திகையை என் அறை நிகழ்த்திக் கொண்டிருந்தது. சரியில்லாத சிஸ்டெத்தை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என்று வெறித்தனமாக நம்பினேன். நிறைய படித்தேன். இந்த சட்டம் தண்டிக்காமல் விட்ட தவறுகளுக்கு நான் தண்டனை கொடுக்க விரும்பினேன்.

இந்த மூவரிடமும் நான் நேரிடையாக பேசக் கூடாது. எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது. இந்த குழுவில் மட்டும் 1500 பேர் இருக்கிறார்கள். தினமும் அதில் 1000 பேராவது எதையாவது எழுதித் தொலைக்கிறார்கள். நானும் தத்து பித்து என்று எழுதி தொலைகிறேன். ஆனால் அவர்கள் மூவருக்கு மட்டும் அவர்களின் உணர்ச்சியைத் தூண்டும்படி.... இன்னொரு தலைவரின் முகமூடியை போட்டுக் கொண்டு நீயும் நியாயத்தின் பக்கம் நின்று தீமை செய்யும் ஒருவனை அழி, கொன்றொழி என்று சொல்லாமல் சொல்லி புரிய வைக்க வேண்டும். இது நான் எழுதும் சூட்சும கவியாக இருக்கலாம். குறுங்கதையாக இருக்கலாம். பின்னொரு நாளில் யாராவது படித்து பார்த்தாலும் அதற்கும் இக்கொலைக்கும் தொடர்பில்லாதது போல இருக்க வேண்டும்.

அப்படி இந்த இடம் எனக்கு மிகவும் சிக்கலான இடமாக இருந்தது. ஒரு வழியாக மூளை கிழிந்த ஒரு பொழுதில் தவம் களைந்து வரம் கிடைக்க பெற்றேன்.

முதலில் அவர்கள் மூவருக்கும் தொடர்ந்து லைக் போட்டேன். அவர்கள் கவனம் என் பக்கம் திரும்பியது. அவர்களும் அவ்வப்போது எனக்கு லைக் போட்டார்கள். நான் பாவத்தின் சம்பளம் மரணம்.. சில போது நாமே கடவுளாகி தான் அந்நியன் போல தண்டனை தர வேண்டும் என்று மறைமுகமாக படிமம் வைத்து புதுக் கவிதையாக மரபுக்கவிதையாக வெண்பா எழுதினேன். என் பா சேர்த்து குற்றமே தண்டனை என்று இருந்து விட முடியாது. குற்றமும் தண்டனை.... குற்றத்துக்கு தண்டனை என்று மிக கடுமையாக தண்டனை பற்றி கஸல் எழுதினேன். தொடர்ந்து எழுதினேன். நான் செய்த கொலையைப் பற்றியும் அடுத்து அதே போல ஒரு கொலை நிகழுதல் உன் கையில் தான் இருக்கிறது. சாமானியன் கத்தி பிடித்தால் பிணமாகும் அரசு என்பதை உரைக்கு சொல். உரக்க சொல். நீயும் வரலாற்றில் இடம் பிடி.. நீ தான் தேவ தூதன்... நீ தான் கடவுள் .. உன் சாக்கடையை நீ தான் சுத்தம் செய்ய வேண்டும்... என்று சங்கேத மொழி கொண்டு தொடர்ந்து எழுதினேன். வேறு வேறு வடிவத்தில் திரும்ப திரும்ப எழுதினேன். கொஞ்ச நாட்களுக்கு முன் தலைவர் முகமூடி போட்டுக் கொண்டு நடந்த கொலையை சற்று உற்று கவனி. அதில் உனக்கு செய்தி இருக்கிறது என்று அவன் உள் வாங்கும் எழுத்துக்களின் மூலமாகவே அவன் மூளைக்குள் நான் நுழைந்தேன். அவன் இதயத்தோடு பேசத் தொடங்கினேன். யாரென்றே தெரியாத ஒருவனிடம் யாரென்று தெரியாத ஒருவன் இது தான் அதுவென்று தெளிவாக இல்லாத ஒன்றை இன்ன மொழி என்று எதுவும் இல்லாமல் இனி நீ தான் அடுத்த நான் என்று சொல்வது அத்தனை சுலபமாக இல்லை. கண்ணும் இல்லாமல் காடும் இல்லாமல் அர்த்த ராத்திரியில் அலைவது. அலைபவனும் அங்கு இருக்க மாட்டான் என்பது தான் நுட்பம். அலைந்த காற்றில் அர்த்தம் புரிந்து சமகால வாழ்க்கை புரியும் கூறுகள் பற்றிய ஒத்த சிந்தனை உள்ளவன் தானாவே என் ஆயுதத்தை எடுப்பான் என்று குருட்டுத்தனமாக ஆனால் வலிமையாக நம்பினேன். நம்புவதில் தான் இந்த உயிரே இருக்கிறது என்பது தான் நிஜம்.

தட்ட தட்ட கதவு திறந்தே தீரும். அதுவும் தட்டுவது நிஜம் என்றால் நிஜமாய் திறக்கும் நிஜமும்.

அந்த மூவரில் ஒருவன் என் கவிதைகளுக்கு பதில் கூறுவது போல ஓர் அதிகாலை கவிதையில் எழுதியிருந்தான்.

ஆறு மாதமாக காத்திருந்ததற்கு பலன் கிடைத்து விட்டதாக நம்பினேன்.

அடுத்த சில நாட்கள் கழித்து வந்த அதிகாலை ஒன்றில் வந்த செய்தியில் (வேறொரு )ஒரு தலைவர் முகம் கொண்ட முகமூடி போட்டுக் கொண்டு ஒருவன் ஒருவனை அணையில் தள்ளி விட்டு கொல்லும் காட்சி செய்தியாக விரிந்தது. எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது. இனி நான் தேவை இல்லை. இனி அவன் 3 மாதம் காத்திருந்தால் போதும். அந்த ஆயுதத்தை இன்னொருவன் எடுத்துக் கொள்வான். அதன் பிறகு அவன் ஒதுங்கிக் கொள்வான்... நான் முழுதாக நம்பினேன். என் ப்ராஜெக்ட்டில் நான் வெற்றி வாகை சூடிக் கொண்டு மலை உச்சியில் என் சமுதாய கடமையை ஆற்றி விட்டதென ஒரு சிவப்பு கொடியை நட்டி வைத்தது போல நம்பினேன். என் அரிப்பு அடங்கியது. ஒருவேளை காவல் துறை எல்லாம் தெரிந்து என்னிடம் வந்தால் வரட்டும். அதற்கும் தயாராக தான் இருக்கிறேன். நான் என் முக நூல் கணக்கை முடக்கி விட்டு தூங்க........ நல்ல விடியலைக் காணப் போவது போல முழுக்க முழுக்க ஜுவாலை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. என் இருட்டு அறையில் சூரியன்... அப்பழுக்கில்லாமல் நுழைந்த வெளிச்சம் என் அறையில் இருக்கும் அந்த தலைவரின் முகமூடியை எரித்துக் கொண்டிருந்தது.

- கவிஜி

Pin It