காலை ஏழு மணிக்கே சைரன் சத்தம் காதைப் பிளந்தது. இரண்டு நாட்களாக ஆம்புலன்ஸ் பாண்டியின் பழக்கடையை அடிக்கடி கடந்து கொண்டிருக்கிறது. அடுத்த தெருவுக்கு கொரானா வந்து விட்டது என அருகிலிருக்கும் கடைக்காரர்கள் பேசிக் கொண்டது உண்மைதான் போல.

பாண்டிக்கு சலிப்பாக இருந்தது. எத்தனை ஜரூராக அவனது பழக்கடையில் வியாபாரம் நடக்கும். அதுவும் அவன் விற்கும் பூவன் சைஸ் செவ்வாழையை வாங்குவதற்கென்றே ஒரு கூட்டம் வரும். 4 மாதம் முடிந்து விட்டது. வியாபாரம் ஒரேயடியாகப் படுத்து விட்டது. இரவு பழ மார்க்கட்டில் முன்னைப்போல பழங்கள் வருவதில்லை. மெழுகு தடவி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்களும், பளீர் நிற ஆரஞ்சுகளும், கரும்புள்ளிகளுடன் வெள்ளைக் கொய்யாக்களும், சுத்துப்பத்து கிராமங்களில் விளையும் மொந்தன், பூவன் பழங்கள் மட்டுமே வந்திறங்குகின்றன.

கொரானா பயம் காரணமாக மக்கள் பழம் வாங்குவதை வெகுவாகக் குறைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வயிற்றுக்குத் தான் கொரானாவைக் கண்டு கொஞ்சம் கூட பயமில்லை. நேரத்துக்கு பசித்துத் தொலைக்கிறது.

கடை என்பது அவனது வீட்டுக்கு முன்புறம் இருக்கும் தள்ளுவண்டி தான். பத்து வருடம் கடந்து விட்டது கடை விரித்து. பொதுமுடக்கம் வருவதற்கு முன்பு வியாபாரத்துக்குக் குறைவில்லை. ஆனால் இப்போது நிலைமை சரியில்லை. பேசாமல் பாண்டியம்மா கூறியது போல மாஸ்க் தைத்து விற்கலாமா எனக்கூட யோசித்தான். பெயர் பொருத்தத்துக்காகவே அவளை மறுபேச்சு பேசாமல் திருமணம் செய்து கொண்டிருந்தான் பாண்டி. அவளும் பாண்டியும் ஒருவருக்கொருவர் இணக்கமாகவே இருந்து குடும்பத்தை நடத்தினார்கள். குழந்தை இல்லையென்ற ஒன்றைத் தவிர அவர்களுக்கு குறைபட எதுவுமில்லை.

ஆப்பிள்களின் மீது தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கும்போது பின்னால் நிழலாட பாண்டி திரும்பினான். பாண்டியம்மாள் நிலைக் கதவைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

"தலைக்கு ஊத்திட்டேன்." அவளது கண்களில் வெறுமை தெரிந்தது.

பாண்டி எதுவும் பேசாமல் கையில் தண்ணீரை அள்ளி ஆப்பிளின் மீது தெளித்தான்.

"கெடக்குது போ. நமக்கு வாய்ச்சது கெடைக்கும்"

"ஆஸ்பித்திரி போகணும்"

"இதோட எத்தினிவாட்டி போயிட்டோம். இனி போயி புதுசா என்ன ஆகப் போகுது."

இரண்டு நிமிடம் நின்று கொண்டிருந்த பாண்டியம்மா உள்ளே சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

அவள் அழ மாட்டாள் என்பது பாண்டிக்குத் தெரியும். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு முறை தலைக்கு தண்ணீர் ஊற்றும்போதும் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு "நமக்கு கொடுப்பினை இல்லியா" என்று ஒருபாட்டம் அழுது தீர்ப்பாள். ஆயிற்று 9 வருடங்கள். அவர்களுக்கு இருந்த நம்பிக்கையும் அவளது கண்ணீரும் சுத்தமாக வற்றிப் போயிருந்தன.

யார் என்ன மருத்துவம் சொன்னாலும் பாண்டியம்மாள் செய்து விடுவாள். ஏறாத கோவில் இல்லை. கும்பிடாத தெய்வமில்லை. அலோபதி, சித்தா, யுனானி என்று எல்லா மருத்துவர்களையும் பார்த்தாயிற்று. இத்தனை ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டாயிற்று. பரிசோதனைகளில் இருவருக்கும் பெரிதாகக் குறை ஒன்றும் இல்லையென்று தான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனாலும் குழந்தை நின்றபாடில்லை. பாண்டி இப்போதெல்லாம் அதைப் பற்றி நினைப்பதைத் தவிர்த்து வந்தான்.

இரைச்சலுடன் வாசல் முன்பு வந்து நின்ற குட்டியானையில் இருந்து மருதாச்சலம் இறங்கினார். பழக்கடை ஏஜென்ட் அவர். பத்து வருடங்களாக அவரது மண்டியிலிருந்து தான் பாண்டி பழங்களை வாங்கி விற்றுக் கொண்டிருந்தான். அவன் தொழிலில் காட்டிய நேர்மை மருதாச்சலத்துக்கு மிகவும் பிடித்துவிட ஒரு சகோதரனைப் போல அவனிடம் நடந்து கொண்டார்.

"என்னண்ணே காலைலியே"

"நேத்து மங்குஸ்தான் பழம் வாங்க பர்லியார் போயி இருந்தேன். உன் நெனப்பு வந்துச்சு. அதான் வாங்கியாந்தேன்" என அதை நீட்டினார். துரியன் பழம். சிறிய அளவு பலாப்பழத்தைப் போல கூரிய முட்களோடு பச்சையும் மஞ்சளுமாக இருந்தது.

"இதெல்லாம் எதுக்குண்ணே"

"அட சாப்புடுப்பா. தங்கச்சிக்கும் குடு. நல்ல எஃபெக்ட் இருக்கும். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் உறவுக்கார புள்ளைக்கு குடுத்தேன். கல்யாணம் ஆகி எட்டு வருஷம் கழிச்சு இப்போ முழுகாம இருக்கா. உங்களுக்கும் ஒரு கொழந்த வேணாமா"

பாண்டி சிரித்தவாறு அதை வாங்கிக் கொண்டான். "சரிண்ணே. நீ சொல்றதால வாங்கிக்கறேன். எத்தினி?"

"ஏன்யா.. உன்கிட்ட வியாபாரம் பண்றதுக்கா இத வாங்கியாந்தேன். பழுக்க 2 நாள் ஆகும். நைட்டு ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஒரு கிளாஸ் பாலக் குடிங்க. நின்னுச்சின்னா எனக்கு கோழி அடிச்சு விருந்து வைங்க.. அது போதும்" என்றவாறு குட்டியானையில் ஏறிச் சென்று விட்டார்.

பாண்டிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. தன்னிடம் பழம் வாங்கி விற்பவன் என்ற நிலையைத் தாண்டி தன்னிடம் அவர் அன்பு பாராட்டியதை நினைத்து அவனுக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

"பாண்டிம்மா" வீட்டின் உட்பக்கம் குரல் கொடுத்தான்.

வாசற்படியில் வந்து நின்ற அவளிடம் பழத்தை நீட்டினான்

"என்ன இது பலாப்பழமா?"

"இல்ல. இதுக்குப் பேரு துரியன்."

"இதான் துரியன் பழமா. அந்த கருவாட்டுக்கார அக்கா சொல்லி இருக்கு. அதோட தங்கச்சிக்கு இந்தப் பழத்த சாப்பிட்டு தான் கொழந்த நின்னுச்சாம். ஏது இது?"

"மருதாச்சல அண்ணன் குடுத்துட்டுப் போச்சு."

"உள்ள கூப்பிட்டிருக்கலாமே . ஒருவாய் டீ குடுத்திருக்கலாம்"

"நல்லது நடந்தா விருந்தே போடுவியாம்"

"அதுக்கென்ன போட்டுடலாம்." என்றவள் "ஏ அப்பா.. கருவேல முள்ளு மாதிரி இல்ல குத்துது" என்றவாறு பழத்தை ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

பாண்டிக்கு இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லை. மருத்துவமும் மருந்தும் செய்யாத அற்புதத்தையா இந்தப் பழம் செய்துவிடும்? தவிர கல்யாணம் ஆகி 10 வருடங்கள் கழிந்த நிலையில் தங்களுக்கு குழந்தை பிறக்குமென்று அவனுக்கு நம்பிக்கை இல்லை. தன் மீது அன்பு கொண்டு பழத்தை வாங்கி வந்திருக்கும் மருதாச்சலத்தின் மனது கோணி விடக்கூடாது என்பதற்காக அதை வாங்கிக் கொண்டானேயன்றி அவனுக்குப் பெரிதாக நம்பிக்கை எழவில்லை.

ஒருமுறை, பேசாமல் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தவன் தெரிந்த வக்கீலிடம் அது பற்றிப் பேசியபோது அவர் சொன்ன விதிகளைக் கேட்டு மலைத்துப் போனான். பாண்டியம்மாவுக்கும் தத்து எடுப்பது அப்போது மனதுக்கு ஒவ்வாததாகவே இருந்தது. அதனால் அந்த எண்ணத்தை தற்காலிகமாகக் கை விட்டிருந்தான். ஆனால் குழந்தை இல்லையென ஒவ்வொரு முறை பாண்டியம்மா கண்ணைக் கசக்கும் போதும் சீக்கிரம் அவளை சமாதானப்படுத்தி தத்து எடுக்க சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என யோசித்து வைத்திருந்தான்.

"பால் வாங்கிட்டு வந்துடுறேன்" என்றவாறு கையில் பாத்திரத்துடன் பாண்டியம்மா வெளியே போனாள். வீதியில் கூட்டம் அதிகமாக இல்லை. மருத்துவமனை அருகில் இருப்பதால் நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் இவன் கடையில் ஆப்பிள் சாத்துக்குடி என்று வாங்குவார்கள். ஆனால் இப்போது கொரானா பயத்தின் காரணமாக மருத்துவமனைக்கு வருவதை பொதுமக்கள் தவிர்த்து விடுகிறார்கள். வியாபாரம் பெரிதாக இல்லை என்பதற்காக கடையை மூடி வைப்பதில் பாண்டிக்கு இஷ்டமில்லை. எப்போதும் போல கடையைத் திறந்து வைத்து விடுகிறான்.

"பாண்டி.. ஒரு சீப்பு பழம் குடுப்பா"

வீதி முக்கிலிருக்கும் பிள்ளையார் கோவிலில் பூஜை செய்யும் கணபதி குருக்கள் நின்று கொண்டிருந்தார். வழக்கமாக முந்தின இரவே அவனிடம் பழம் வாங்கி விடுவார். நேற்று வரவில்லை. எப்போதும் 5 மணிக்கு கோவிலைத் திறக்கும் அவர் இன்று 7 30 மணிக்கு பழம் வாங்க வந்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

"என்ன பூசாரி ஐயா... இன்னிக்கு இத்தன லேட்டு?"

கணபதி பல வருடங்களாக அவனிடம் தான் பழம் வாங்குவார் என்பதால் அவனிடம் நின்று பேசுவார். சில நேரங்களில் அரசியல் , விலைவாசி, குடும்ப விவகாரங்களைக் கூட இருவரும் பேசுவதுண்டு.

"பொண்ணு வந்திருக்கா"

"அப்பிடியா, மாப்பிள்ளையுமா?"

"இல்ல. அவர் வரல." சலித்துக் கொண்டார். "உனக்குத் தான் தெரியுமே. கலியாணம் ஆகி 4 வருஷம் ஆகறது. அவ வயித்துல இன்னும் ஒரு பூச்சி புழு ஜனிக்கல. அவா ஆத்துல கரிச்சுக் கொட்றா. மாசாமாசம் தலைக்கு தண்ணிய ஊத்தின மறுநாள் எங்காத்துக்கு அனுப்பி வெச்சிடுறா. எல்லாம் விதி."

"கவலப்படாதீங்க ஐயா. உங்க பொண்ணுக்கு அப்பிடியென்ன வயசா ஆயிடுச்சு? இன்னும் காலம் கெடக்கு. நம்பிக்கையோட இருங்க."

"அந்த நெனப்புல தான் தினமும் பூஜ பண்ணிட்டு இருக்கேன். பகவான் தான் கண்ண தொறக்க மாட்டேங்குறார்."

இவன் எடுத்துக் கொடுத்த பழத்தை வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தைக் கொடுத்தவர் விடுவிடுவென கோவிலை நோக்கி நடந்தார். பாண்டிக்கு அவரது வருத்தத்தை உணர முடிந்தது. குழந்தை இல்லாத வெறுமை அவனுக்குப் புதிதா என்ன? பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு ஸ்டூலில் உட்காரப் போனவனுக்கு பாண்டியம்மா கையில் எதையோ பொதிந்து கொண்டு வேக வேகமாக வருவது தெரிந்தது. இவள் எதற்கு இவ்வளவு பதட்டமாக வருகிறாள்?

அருகில் வந்தவள் "சீக்கிரம் உள்ள வாங்க" என்றவாறு வீட்டுக்குள் புகுந்தாள். "ஏய் என்ன ஆச்சு.. என்னன்னு சொல்லிட்டு போ" என்றவாறு உள்ளே நுழைந்த அவனை வீட்டுக்குள் இழுத்து, வாசல் கதவைத் சாத்திவிட்டு அவனது கைகளைப் பிடித்து உள் அறைக்குள் கூட்டி சென்று கையிலிருந்த பொதியை விலக்கினாள்.

பாண்டிக்கு திகீரென்றிந்தது. முட்டைக் கண்களை உருட்டியவாறு பிங்க் நிறத்தில் இருந்தது அந்தக் குழந்தை. துளி கூட அழவில்லை. தலை முழுதும் சுருள் சுருளாக முடி. அதன் உடலை ஏதோ ஒரு கந்தல் சுற்றி இருந்தது. இன்னும் தொப்புள் கொடி காயவில்லை. பிறந்து ஒரு நாள் கூட முழுதாக முடிந்திருக்காது. காது கருப்பாக இருந்தது. வெளிச்சத்தைப் பார்த்தவுடன் கண்களை மலங்க மலங்க விழித்தவாறு சிணுங்கத் துவங்கியது. பின்னாளில் கருத்த களையான பெண்ணாக வருவாள்.

"என்னடி இது யாரோட கொழந்த?" பாண்டி பதறினான்.

அருகில் பாண்டியம்மாள் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மூச்சிறைத்தது. பதட்டத்தில் அவளுக்கு பேச்சு வரவில்லை.

"பால் வாங்க தோட்டத்துப் பக்கம் போனேனா. அங்க அந்த புளியமரத்துக்கு அடில இருக்குற மினியப்பன் கோவில்ல இத சுத்தி வெச்சிருந்தாங்க. பக்கத்துல யாருமே இல்ல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரில. அந்த மினியப்பனே எனக்கு கொழந்த குடுத்த மாதிரி இருக்குது மாமா. யாருக்கும் தெரியாம அப்பிடியே மடியில சுத்திட்டு ஓடி வந்துட்டேன்."

"யாரும் பாக்கலியா"

"இல்ல மாமா.. மாமா இத அந்த மினியே நமக்கு குடுத்திருக்கு மாமா... நாமளே வெச்சுக்கலாம்"

"ஏண்டி உனக்கு அறிவு கிறிவு இருக்கா இல்லியா? அதெப்படி நாம வளத்த முடியும்?. யாரோட கொழந்தையோ என்னவோ. நாளைக்கு போலிஸு கோர்ட்டுன்னு போறதுக்கா? போலீஸுல சொல்லிடலாம்."

"மாமா நான் கொழந்தைய எடுத்தத யாருமே பாக்கல. அங்க யாருமே இல்ல. யாரோ வேத்தாளுக்கு பெத்து போட்டுட்டு போயிருக்காங்க. வீட்டுக்குள்ளேயே வெச்சு வளத்திக்கலாம். இல்லாட்டி வேற ஊருக்குப் போயி பொழச்சுக்கலாம். பழத்த எந்த ஊர்ல வேணாலும் விக்கலாம். நமக்கு என்ன தோப்பா தொறவா? இந்தக் கொழந்தைய பாரு மாமா. நமக்குப் பொறந்திருந்தாலும் இந்த மாதிரி கருவாச்சியா தான் இருக்கும். சொல்றதக் கேளு மாமா. யாருக்கும் சொல்லாம நாமளே வளத்துக்கலாம்."

குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவள் பிதற்றுவது பாண்டிக்குப் புரிந்தது. ஆனால் அது தவறு என்பதும் அவனுக்கு உறைத்தது. யாருக்கும் தெரியாமல் அந்தக் குழந்தையை வளர்ப்பது என்பது சாத்தியமில்லை. அதற்காக ஊரை விட்டெல்லாம் போக முடியாது. கந்தலைச் சுற்றி முனியப்பன் கோவிலில் வைத்ததிலிருந்து அது யாரோ முறையின்றி பெற்ற குழந்தை என்பது மட்டும் அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. எடுத்து வந்ததற்காக அதை சொந்தம் கொண்டாட முடியுமா? அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

"மாமா, இனிமே நமக்கு கொழந்த பொறக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்ல. நாம அனாதையா கெடந்த ஒரு உசுருக்கு நல்லது தான் செய்யப் போறோம். ஒரு கொழந்தையோட அருமை எல்லாரையும் விட நமக்குத் தான் நல்லாத் தெரியும் மாமா. அங்கியே விட்டுட்டு வந்து, நாயோ நரியோ கடிச்சு கொதறி இருந்தா இந்த போலீஸும் கோர்ட்டும் உச்சு கொட்றதத் தவிர வேற என்ன பண்ணிடப் போகுது. நாம இந்த ஊர்லையே இருக்க வேணாம் மாமா. வேற ஊருக்கு கொழந்தைய தூக்கிட்டுப் போயிடுவோம். என் கொழந்த தான்னு சொல்லி வளத்துக்கறேன். எல்லாரும் மடிய அவுத்தா பாக்கப் போறாங்க? சொன்னா கேளு மாமா."

பாண்டியம்மாள் அழத் துவங்கி இருந்தாள். அவள் சொல்வதில் இருந்த நியாயத்தை பாண்டியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்த சமூகத்தில் இதற்குப் பெயர் திருட்டு. கண்டிப்பாக இது திருட்டுத்தனமாக தூக்கி வரப்பட்ட குழந்தை என்பது ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். குழந்தை திருடுபவனாக மற்றவர்கள் முன்பு கூனிக் குறுகி நிற்கும் காட்சியை அவனால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.

அவனுக்கு வக்கீலின் நினைவு வந்தது. ஆதரவு இல்லாத குழந்தைகளை தத்து எடுப்பதில் அவ்வளவு சட்டச் சிக்கல் இல்லை என சொல்லி இருக்கிறார். ஏற்கனவே அனாதை ஆசிரமங்களில் இருக்கும் குழந்தைகளை தத்து எடுக்கும் போது தான் வரிசைக் கிரமமாக தத்து கொடுக்கப்படும் என்றும், அதற்குத் தான் கால தாமதம் ஏற்படும் என்றும் சொல்லி இருக்கிறார்.

இந்தக் குழந்தையை யாருக்கும் தெரியாமல் வளர்த்து, நாளைக்கு உண்மை தெரிந்து, குழந்தையை பிடுங்கிக் கொண்டு போனால், அதனால் ஏற்படும் வலியை கண்டிப்பாக பாண்டியம்மாவால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

"கொஞ்சம் பொறு பாண்டிம்மா. இப்பிடியே எல்லாம் இந்தக் கொழந்தைய வளத்தீர முடியாது. சட்டப்படி செஞ்சுக்கலாம்"

"அப்பிடி குடுப்பாங்களா மாமா"

"அப்பிடித் தான் வக்கீல் சொன்னாரு.. நான் அவர்ட்ட பேசறேன்."

"ஆனா ஒண்ணு மாமா..என்ன ஆனாலும் சரி நான் இந்த கொழந்தையக் கொடுக்க மாட்டேன். இது மினியப்பனோட அம்சம். என் பொண்ணு" என்றவாறு குழந்தையைத் தூக்கி முத்தினாள்.

பாண்டி வக்கீலுடன் பேசுவதற்காக மொபைலை எடுத்த போது வாசற்கதவை யாரோ தட்டினார்கள். பாண்டிக்கு காரணமின்றி பயம் கவ்வியது.

"இரு மாமா நான் போய் பாக்குறேன்" என்றவாறு பாண்டியம்மாள் கதவைத் திறக்க வெளியில் கணபதியின் மகள் சுபத்ரா நின்று கொண்டிருந்தாள்.

"வாங்கம்மா, நல்ல இருக்கீங்களா. காலைல தான் அப்பாகிட்ட பேசிட்டு இருந்தேன். சீக்கிரமா நல்லது நடக்கும் கவலப் படாதீங்க" என்று பாண்டி சொல்லவும் சுபத்ரா சிரித்தாள்.

"பழ வியாபாரத்த விட்டுட்டு ஜோசியம் பாக்க ஆரம்பிச்சுட்டீங்களா?. ஒரு கிலோ ஆப்பிள் குடுங்க" எனச் சொல்லவும் பெட்டியின் அடியில் கைவிட்டு அடிபடாத ஆப்பிள்களை எடுத்துப் போட்டான். "வர்றேங்க" என்று சுபத்ரா பழத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் போது,

"கொஞ்சம் நில்லுங்க" என்றவாறு பாண்டியம்மா வாசற்படிக்கு வந்தாள். அவளது கையில் துரியன் பழப்பை இருந்தது.

பாண்டியின் முகத்தில் கேள்விக்குறி படர்ந்தது.

"இத சாப்பிடுங்க. சீக்கிரம் உங்க பிரச்சனையை எல்லாம் மினியப்பன் தீத்து வைப்பான்."

"என்ன இது. வாசம் பலமா இருக்கு?"

"இது துரியன் பழம்மா. 2 நாள் ஆகும் பழுக்க. நீங்களும் உங்க வீட்டுக்காரரும் சாப்பிடுங்க. அடுத்த வருஷம் ஒரு குட்டி பையனோ புள்ளையோ வந்துரும்" என்றவாறு பையை வாங்கி சுபத்ராவிடம் கொடுத்தான் பாண்டி.

"ஓஒ இதானா அது? இத பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப தேங்க்ஸ்ன்னா. இது எவ்வளவு?" என்றாள் சுபத்ரா.

"இது விக்கறதுக்காக வாங்கலம்மா. நாங்க சாப்பிட வாங்கினது. இனிமே இது எங்களுக்குத் தேவைப்படாது. நீங்க எடுத்துக்கோங்க."

"ஓஓ." என்றவள் பாண்டியம்மா பக்கம் திரும்பி "மாசமா இருக்கீங்களா" என்று கண்ணடித்தாள். பாண்டியம்மாவுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் மையமாகச் சிரித்து வைத்தாள்.

"ஆனா நான் பணம்லாம் தராம வாங்கிக்க மாட்டேன். நீங்க கண்டிப்பா பணம் வாங்கிக்கணும்" என்றவள் கற்றையாக ரூபாய் நோட்டுகளை பாண்டியிடம் நீட்டினாள்.

"விட மாட்டீங்க போல" என்றவாறு அதிலிருந்து 10 ரூபாயை மட்டும் உருவிக் கொண்டான் பாண்டி.

சுபத்ரா "ரொம்ப தேங்க்ஸ்னா, நான் அப்பாகிட்ட சொல்றேன்" என்றவாறு நடந்தாள்.

"ஏண்டி பழத்த தூக்கிக் குடுத்துட்ட"

"நமக்கு தான் கொழந்த பொறந்திருச்சில்ல. அப்புறம் எதுக்கு பத்தியம்."

"ஆனா இந்த உலகத்திலியே வலியே இல்லாம கொழந்த பெத்த மொத பொம்பள நீதாண்டி" என பாண்டி சொன்னவுடன் ச்ச்சீய் என்று பொய்க் கோபம் காட்டினாள் பாண்டியம்மா.

"எதுக்கு பழத்தக் குடுத்துட்டு. பேசாம கொழந்தயவே தூக்கிக் குடுத்திருக்கலாம் இல்ல" என்ற பாண்டியை கூர்மையாகப் பார்த்த பாண்டியம்மா, "கொடுத்திருக்கலாம் தான்.. ஆனா அவங்க அய்யரூடு. ரொம்ப சுத்த பத்தமா இருப்பாங்க. மினியப்பன் மடில கந்த துணிய கட்டிட்டுக் கெடந்த கொழந்தையெல்லாம் அங்க செட்டாவாது மாமா. அங்க எல்லாம் ஸ்லோகம் சொல்லி பெருமாள கும்பிடுற கொழந்தைகளுக்குத் தான் மருவாதி" எனச் சொல்லி சிரித்த பாண்டியம்மாவின் முகம் சட்டென இறுக்கமானது.

"அவங்களுக்கு சின்ன வயசு. கண்டிப்பா கொழந்த கெடைக்கும். ஆனா இந்தக் கொழந்தைக்கு நம்மள விட்டா நல்ல ஆயி அப்பன் கெடைக்காது மாமா" என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் வடியத் துவங்கியது.

பாண்டிக்கு அவள் பேசுவதைக் கேட்கையில் பிரமிப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அவளது சந்தோஷத்தை குலைத்துவிடக் கூடாது. என்ன ஆனாலும் சரி இந்த குழந்தை இனிமேல் இந்த வீட்டில் தான் வாழ வேண்டும் என முடிவு செய்தவன் செல்போனில் வக்கீலின் நம்பரைத் தேடி எடுத்து டயல் செய்தான். வீட்டுக்குள் குழந்தை பசிக்கு அழ ஆரம்பித்திருந்தது.

- காலச்சித்தன்

Pin It