வண்ண நிறப் பந்தல் அந்த வீட்டின் முன் குடை விரிந்திருந்தது. கல்யாணம், காது குத்து, வளைகாப்பு, புதுமனை, பூப்புனித நீராட்டு விழா,பிறந்தநாள் இப்படி அனைத்து சடங்கு சம்பிரதாயங்களை தனக்குள் அடைகாத்துக் கொண்டு அக்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிலைமையை ஊரறியச் செய்கிறது.

ஆனால் இந்த வீட்டின் முன் இருந்த பந்தல் அந்த வீட்டில் ஒரு மரண செய்தியை சொல்வதறியாமல் நின்றிருந்தது.

எப்போதும் போல ஒரு கூட்டம் ஆங்காங்கே நின்றிருந்தது. மௌனமாய் சிரிக்கத் தெரிந்தவர்களின் கூட்டம் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது. மரணத்தைத் தாண்டி இந்த உலகு மாய சிருஷ்டி என்று சுய பிரச்சாரம் செய்யும் முதியோர் கூட்டம் அந்த இடத்தை மிரட்டிக் கொண்டு இருந்தது. எந்த ஒரு சூழலிலும் நட்புப் பாராட்டும் கூட்டம். “கண்நின்று கண்அறச்......" என்ற புறங்கூறாமை அதிகாரத்தின் அடிபிழையாமல் நின்ற உறவுக் கூட்டங்கள் மௌனம் உடைந்து மெய் வழிந்து விடாமல் இருக்க தங்களது கைகளை சேலையாலும், கைக்குட்டையாலும் சுற்றி வாயை அடைத்துக் கொள்கிறார்கள்.

இத்தனை நிறமிகள் நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் அந்த வீட்டின் நடுவில் பிணம் என்ற வாடையுடன் படுத்திருந்தாள் மீனாட்சி.

"அஸ்வினி... போதும் டி... அழுகாதே.." என்றாள் அவள் தோழி ரேஷ்மா.

குருதி கூட கண்ணீராய் மாறிக் கொண்டிருந்தது அஸ்வினியின் விழியில்.

வாழ்வின் மொத்த இறுக்கத்தையும் அந்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

பழனிச்சாமியின் தினக்கூலி அவன் மனைவி மீனாட்சிக்கும், மகள் அஸ்வினிக்கும் அரணாய் நின்றிருந்தது. மீனாட்சி, வருமானத்தின் வரம்புக்குள் குடும்பத்தை பதப்படுத்திக் கொண்டிருந்தாள். இன்று தன்னார்வு ஒய்வு பெற்றவளாய் அந்த வீட்டின் மத்தியில் கிடத்தப் பட்டிருந்தாள்.

“பழனிசாமி ஆக வேண்டிய வேலைய பாருப்பா.....” என்றது அந்த வீட்டின் முற்றத்திலிருந்து வந்த குரல்.

தன் கையில் தலைக்கு முட்டு கொடுத்து மீனாட்சியின் தலைமாட்டில் அமர்ந்திருந்த பழனிசாமியின் முகத்தில் கண்ணீர் திரித்து, எச்சில் பிசுபிசுத்த திரவமாய் ஒழுகிக் கொண்டிருந்தது .

"பிணத்தை.... வடக்க பார்த்து படுக்க வைய்யுங்கப்பா... அந்த விளக்கை கொஞ்சம் அடர்த்தியா, ஒரு ஐயரைப் பார்த்து………. அந்தம்மா நோய்வாய்ப்பட்டு இறந்ததனால... பனைமரத்தூர் மின்மயானதுக்கு பதிவு பண்ணுங்க..." இப்படி அங்கும் இங்குமாக குரல் ஆட்சி மட்டுமே நடந்தது.

நாற்பத்தி ஐந்தை மட்டுமே வயதாகக் கொண்ட மீனாட்சிக்கு திடீரெண்டு வரும் மரணத்துக்கு மாரடைப்பல்லாத ஒரு புதிய சொல்லாக்கத்தை இந்த மருத்துவ சமூகம் முன்வைக்க வேண்டும்.

அந்த வீட்டின் மௌனம் கலைத்தது அங்கு வந்த அமரர் ஊர்தி. அதில் வந்த இரண்டு ஆண்கள் ஸ்ட்ரெச்சருடன் வீட்டினுள் நுழைந்தனர்.

இப்பொது தான் அஸ்வினி இதயம் உடல் முழுவதும் துடித்தது.

சாங்கியம் பேசுபவர்கள் சவத்தை தொட்டுத் தூக்குவது கிடையாது. இந்த வீட்டுக்கு சிறிது காலத்தில் உறவாய் போனவர்கள் தோள் கொடுக்கிறார்கள்.

மின்மயானத்தில் கூடியது மீனாட்சியைத் தொடர்ந்த அந்த கூட்டம்.

இறுதிக் கிரியைகள் மதம் சார்ந்த ஒரு பொருட்டாக பல கிளைகளை விரித்துக் கொள்கிறது. அதுவும் ஒரு தலைமகன் அல்லாத வீட்டில் பெண் ஈமச்சடங்கை செய்வதில் அடங்கிப் போகிறது வெப்பத்தில் தகிக்கும் அந்த மயானம். ஆளுக்கு ஒன்றைச் சொல்லி கடைசியில் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது மீனாட்சியின் உடல்.

மணிக்கொரு உடலை மென்று புகைவிடும் மின் மேடை வாயைப் பிளந்து காத்திருந்தது. இந்த உலகில் அம்மாவின் இடத்தை மட்டும் யாரும் நிரப்புவதில்லை. சுமையை மட்டும் தன் வாழ்நாள் உடைமையாக வைத்திருப்பவள் அவள். தனக்கான ஆசையைக் கூட பௌத்தம் கடந்து தெளிந்தவளாய் எப்போதும் நின்றிருப்பாள்.

எப்போதுமே அம்மாவை விட்டுப் பிரியும் போது இருந்த வலி இன்று பெரிதும் ரணமாய் கொப்பளித்தது அஸ்வினியின் பார்வையில். எதையோ இந்த உலகில் கடைசி முறை பார்ப்பதாய்த் தோன்றியது. இன்று நடந்தது ஒரு கனவாய் போக பல முறை விழி முடி திறந்தது.

நீண்ட கரும்புகையுடன் அஸ்வினியின் ஒப்பாரியும் புகை போக்கி வழியாக விண்ணை எட்டியது.

மீனாட்சி இன்றி நிசப்தத்தில் கனத்திருந்தது வீடு. படையலுக்கான வேலை செவ்வென நடந்தேறியது. இருக்கும்போது பரிமாறாத பல பண்டங்கள் அன்று இலையை மொழுவி இருந்தது. இறந்தவர்களை சாமியாக்கும் சடங்கு முடிந்தது.

"கா.... கா.... க்.... கா... கா..."

அஷ்வினி படையலை வீட்டின் முகப்பில் உள்ள சுவரில் வைத்துவிட்டு காகத்தை தன் அழுது விம்மிய குரலில் அழைத்தாள்.

வெகு நேரமாய் காகம் வந்த பாடில்லை.

"கா.... கா.... க்.... கா... கா..."

என்ற விடாமுயற்சி தோல்வியில் முடிந்தது.

பித்ரு லோகத்தின் தூதுவனாய் பார்க்கப்படும் காகம், ஒருவர் இறந்த பிறகு மட்டும் நினைவில் வரும் காகம், இப்போதெல்லாம் தென்படுவதில்லை. மனிதம் கற்றவர்களாய் தீர்ந்து போனார்கள். மரணத்தின் மன்னிப்பு வேண்டி வேற்று கிரகவாசிகளானார்கள். கருமையை மரணத்தின் நீட்சம் இல்லை என கரைந்து சென்றார்கள். தங்கள் இன கலங்கத்தை கொத்திச் சென்றார்கள்.

சமூக பிழையை பழித்துப் போனார்கள். மாசுஅகற்றிகளாக வந்தவர்கள் மனிதனின் சடங்குகளில் சிறகொடிந்து போனார்கள்.

கத்தி ஓய்ந்த அஸ்வினியின் காதுகளில் இறக்கையின் படபடப்பு விழுந்தது. அனைவரது பார்வையையும் அந்த ஒலி ஈர்த்தது.

அழகாய் தன் சிறகுகளை மடித்து படையல் இலையில் வந்து அமர்ந்தது, ஓர் அன்னம்.

- சன்மது

Pin It