மீனாட்சி வராண்டாவிலிருந்து கீழே பாா்த்தாள். கீழே கிணற்றில் ரஞ்சி தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. இருட்டு அடை போல மேலே மேலே விழுந்து அப்பிக் கொண்டதுபோல கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தண்ணீரை குடத்தில் ஊற்றியபோது நாயுடம்மா வீட்டில் விளக்கேற்றியதில் கிணற்றடியின் ஒரத்தில் நின்றிருந்த ரஞ்சி குடத்தைத் தூக்கி வீட்டுக்குள் செல்வது தெரிந்தது. அவள் அம்மா ரஞ்சி அக்கா வருவதற்காக பதைபதை்துக் காத்திருந்தாள். தினமும் இதுதான். அவள் ஒருத்தி சம்பாத்தியம்தான். தறி ஓட்டுவாள், வேலை முடிந்து வரும்பொழுது உடலெல்லாம் பஞ்சாக இருக்கும். வந்தவுடன் குளிக்க வெந்நி வேண்டும்.

நாயுடம்மா உரலில் மூழ்கி அரைத்துக் கொண்டிருந்தவள் ஏதோ உந்த மீனாட்சியைப் பாா்த்தாள். அவளுக்கு பாா்வை காெஞ்சம் மந்தம். மீண்டும் அரைப்பதில் முனைந்தாள். மீனாட்சி "எம்மா, அய்யா இன்னும் வல்லயா" என்றாள்.

"இல்லையேடி அந்த மனுசன் போறாத காலத்தில வீட்டுல கெடயான்னா, நானெ்ன கெழவன்னா அப்பிடின்ற மனுசன்ட்ட என்னத்தப் பேச, அது ஆச்சு முப்பது வருசம், குழந்தையா புள்ளையா, ஏங்கணக்கு இப்படி எழுதியிருக்கு... என்னத்த, தனசேகரு வந்துட்டான்னா" என்றாள்.

"இல்லம்மா வரல"

"குழந்த எங்கேடி? ராஐிய அனுப்பு, கொழம்பு கொஞ்சம் இருக்கு கொடுத்தனுப்புறேன்"

"அவ எங்க வீட்டுல தங்குறா...? சின்னவன்தான் தூங்கிட்டு இருக்கான்"

" செரி, நீதான் வந்து வாங்கிக்கேயடி... ஆனாலும் இந்த காலத்துல ரொம்பத்தாம்மா பண்றிங்களேடி" என்பதை முணுமுணுப்பாக சொன்னாள்

"இல்லேம்மா... அவரு வந்தாலாவது சாப்பிடுவாரு. நாங்க என்னத்த, இருக்குறதேய சாப்பிட்டுக்குறுவோம்"

அதற்கு எந்த சத்தமும் இல்லை. மீனாட்சிக்கு சங்கடமாக இருந்தது. மாலாவின் அம்மா வராண்டாவில் நின்று காம்பவூண்ட்டின் வலதுபுறத்தில் இருந்த சிறிய திடலையும், அதை ஒட்டிச் செல்லும் குறுகிய பாதையில் விழுந்த இருட்டில் அசையும் நிழலுருவங்களையும் பாா்த்தபடி இருந்தாள். அந்த பாதை வழியே வெளியேறினால் வலதுபுறம் மற்றொரு வரிசை வீடுகள். அதையும் தாண்டி நேரே சென்றால் கம்மாய்க்கரை சாலை.

அந்த அம்மாள் தலையில் முல்லைப் பூ சூடியிருந்தாள். மஞ்சள் பூசிய முகம், பெரிய வட்டப் பொட்டு. காதுகள் மூளியாக இருக்கக்கூடாதென வௌக்கமார் குச்சியை சொருகியிருந்தாள். அவரின் முகத்திலும், மனதிலும் தெளிவும், அமைதியும் இருந்தது.

"அம்மா, மாலா இருக்காளா".

வராண்டா என்பது நீளமான போா்டிகோ பாதை. வரிசையாக நாலைந்து வீடுகள். இதே போன்ற வரிசை வீடுகள் இங்கு நிறைய உண்டு. இது மீனாட்சி மாறி வந்த நான்காவது காம்பவூண்ட். இந்த வாடகைக்கு வேறு எங்கும் வீடு கிடைக்காது. கம்மாயை ஒட்டியிருப்பதால் கிணற்றில் நீர் வற்றுவதில்லை. காம்பவூண்ட் பின்னாலே நந்தவனமும் காடு போன்ற செறிவு கொண்ட புதர்களும் உண்டு. அதனால் ஆண்கள் அதற்கள் கக்கூஸ் சென்று வருவார்கள். இல்லையென்றால் ஒடுகாலில். பெண்களுக்கும் அதுதான் என்றாலும், தனித்தனி பகுதிகள் உள்ளது. கூச்சம் கொண்ட பெண்கள் தெரிந்தவர்களின் வீடுகளில் சாயுங்கால நேரத்தில் சென்று வந்தனர்.

முதல் வீடு கண்ணன் வீடு, அடுத்தது மீனாட்சி, அதற்கடுத்தது இந்திராணி அம்மாள் வீடு, கீழே இறங்கும் படியை ஒட்டிய கடைசி வீட்டில் யசோதா இருந்தாள். யசோதா ராஐியின் சிநேகிதி. ஆனால் ராஐி போல் தெருவில் புரண்டு விளையாடி மீனாட்சியிடம் அடி வாங்குவதில்லை. மேலே செல்லும் படிக்கட்டை அடுத்த சிறு அறையில் மாலாவும் அவள் அம்மாவும் இருந்தனர்.

மாலாவிற்கு மீனாட்சி வயதுதான் இருக்கும். பாா்க்க அவளை விட இளமையானவளாகவே இருந்தாள். கணவன் இறந்து விட்டான். இருவரையும் அவள் அம்மாவின் தூரத்து உறவுக்காரர் தான் பாா்த்துக் கொள்கிறார். அந்தாள்தான் மாலாவிற்கு போதை ஊசிகளையும், மாத்திரைகளையும், கஞ்சாவையும் பழக்கப் படுத்தியவன். அந்தாள் வந்து விட்டால் அந்த அம்மாள் வெளியே நின்றிருப்பாள். அந்த மாதிரி சமயங்களில் மீனாட்சி நடைவாசலுக்கு வரவே கூச்சப்படுவாள்.

"தட்டுவாணி முண்ட, எப்படி கெடந்து அலையிறாளுக பாரு... இவள்ளாம் பொம்பிளையா? நல்ல சாதிசனத்துல பெறந்தவளா?" என்று மனதுக்குள் பொருமுவாள். பின் அவளே சமாதானம் கூறிக் கொள்வாள் "ஆமா, அவளுக்கும் யாரு இருக்கா? பொம்பள என்ன கொளத்துத் தண்ணியா? அவ நெருப்பில்ல, அந்த சூட்ட தனக்குள்ளே போட்டு தன்னையே சிதையேத்திக்கிறதென்ன சும்மாவா..? ஆளு வேற கிளியாட்ட இருக்கிறா, கண்டவனும் கொத்திக்கிறதுக்கு இவன் கூட இருக்குறது பரவாயில்ல" என்பாள்.

இருந்தாலும் அவளுக்கு இருக்கும் ஒரே தோழி அவள்தான். தேவைப்படும்போது அவளிடம்தான் பணம் வாங்க முடியும். அவள் அழகா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் அவள் முகத்தை பாா்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். மாநிறம், கூர்மையா மூக்கில் அழகான தோடு போட்டிருந்தாள். சதை பிடிப்பில்லாத எடுப்பான அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கும். மை போட்டு போட்டு தனியாக கறுப்பேறிய சிறிய உருண்ட குழந்தைக் கண்கள். சிரிக்கும் போது அவளிடம் மட்டும்தான் கண்களும் சிரிக்கும். ஆரோக்கியம் தானே அழகு, அது அவளிடம் பூரணமாக இருந்தது.

ஆண்களின் இரகசியத்தை சொல்லுவாள். அவள் சொல்வதைக் கேட்டிருந்தாலும் இப்படி உடம்பெல்லாம் கூசிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. உடம்புக்கு அப்படி என்ன அலைதல்? ஏன் மான ரோசம், காசு பணம் எதையும் பாா்ப்பதில்லை என்று வெறுப்பாக வந்தது.

மாலா வந்தாள்.

"என்னடி?"

"ஒன்னுமில்ல, சும்மாதான்... என்ன அந்தாளு வந்திருக்கானா?"

"இல்லடி, அவரு வர நேரமாகும். நான் வரலான்னுதான் பாத்தேன். ஒன் வீட்டுக்காரரு வேற வந்தருவாருன்னுதான் வர்ல. அப்புறம் அப்படியே ஒரு புஸ்தகம் ஒன்னு வாங்கிட்டு வந்துருந்தாரு, வாசிச்சுட்டிருந்தேன்"

"வெளிக்கி போயிட்டு வருவமா"

இருவரும் நடந்து கம்மாக்கரைக்கு வந்தனர்.

"இன்னும் இந்த மாசம் விலக்கம் வல்லடி" என்றாள் மீனாட்சி.

தூரவானத்தில் தெரிந்த நட்சத்திரங்களையும், கம்மாயை அடுத்து தெரிந்த விளக்குகளையும் பாா்த்திருந்த மாலா மீனாட்சியை கட்டிக் கொண்டாள். அவள் நெருக்கத்தில் நெல் அறுத்த வயலின் பச்சை வாசனை வீசியது. மீனாட்சி கண்கள் கலங்கின.

"இதுக்கு ஏண்டி மூஞ்சிய தூக்கி வச்சுருக்க"

"ஆமா, ஏற்கனவே ரெண்டு கெடக்குது. அதுகளுக்கு பொங்கவே வழியக் காணோம்"

"எங்க ஒம் புருஷன்? அந்தாள்ட்ட சொன்னியா"

"அந்தாளு, இந்தாளுன்னு பேசாதடி. என் தலையெழுத்து, இப்படி... கெடந்து சீரழியிரேன். போற மனுஷன் வாறதெல்லாம், கண்ணுமண்ணு தெரியாத போதையில தான். எங்க சொல்ல? எனக்கு என்ன செய்யிறதுனு தெரியலடி. இது உள்ள இருக்குறது, பீய்ய சொமக்குறது மாதிரி இருக்கு"

"ச்சீ, என்ன பேச்சு? அப்டிலாலாம் பேசாதடி"

"எனக்கு அப்டித்தான் தோணுது. எவ்ளவோ வேணான்னு நெனச்சாலும், வந்து உள்ள ஏறிக்கிட்டு, உன்ன மாதிரி ஒர போட்டுக்கிட்டா பிரச்சன இல்ல"

"அப்டிப்பட்ட, அந்த எளவே வேணான்னு ஆபரேசன் பண்ணிக்குவந்தான" என்றாள். பின்பு குலைந்தவளாய் "இல்லடி ஒடம்பு பசி அப்டி.. இப்ப வாராணே அவனுக்கு எங்கப்பா வயசு. ஆனா கட்டிக்கிறப்ப எதுவும் தெரியிறதில்ல. எத்தனையோ முறை எதுவும் போடாமதான் செஞ்சிருக்கோம், ஆனா குழந்தன்றது சாமிடி, அது நெனச்சாத்தான் வரும். நாம வேணான்னு பெறங்கையால தள்ளிவிட்டா நம்மல அண்டாது"

"சேரி விடு.. ஆனது ஆச்சு, நம்ம கையில என்ன இருக்கு? நீ நெனச்சு இந்த வாழ்க்கைய வாழ்றையா என்ன? ஏதேதோ நடக்குது, நாம எதுக்கும் காரணம் ஆக முடியுமா? நடக்குறது நடக்குறபடிதான் நடக்கும்"

"இல்லடி, எனக்கு இது வேணா.. இத கலைக்கனும். என் கேவலம், கையாலாகத்தனம் எல்லாமா சேந்து உள்ள இருக்கற மாதிரி தோனுது"

"நம்ம ஆசைக்க அது என்னடி பண்ணும்?"

"இத வச்சு வளக்க காசு வேணாமா? போன தடவ சின்னவன் பொறக்குறப்ப அந்த நர்சு பேசுனது நீயுந்தான கேட்ட. கண்ட நாய்ட்ட நானும் பேச்சு வாங்கவா? கூதற முண்ட, என்னன்னலாம் பேசுனா... நெனச்சாலே ஒடம்பு கூசுது"

"அந்த களுதயில்லா பேசுறத காதுல வாங்கிட்டு... அவ கெடக்குறா. முப்பது ரூவாய்க்கு அழுவரலுவ"

"இல்லடி இருக்குற கஷ்டத்துல இதுவும் வந்தா தாங்காது. நான்தான் நாண்டுகிட்டு சாகனும்"

"செரி, என்ன பண்ணலாம்?"

"ஏங்கூட வா, சந்திரா டாக்டருட்ட போயி கலச்சிறலாம்"

"செரி, எப்ப போகலாம்"

"நாளைக்கு சாயுங்காலம்" என்றபடி காம்பவூண்ட் நோக்கி நடந்தனர்.

***

"எவ்ளவு நாள் ஆச்சுமா"

"ஆறேழு வாரம் ஆச்சுங்க மேடம்" என்றாள் மீனாட்சி

சில பரிசோதனைகள் செய்தார்.

"ஏம்மா, இப்ப வர்றீங்க? வச்சுக்கலாமா வேணாமான்னு யோசிட்டு இருந்தீங்களா? இந்த டயத்துல மாத்திர ஒன்னும் கேக்காது, ஊசிதான் போடனும்... வீட்டுக்காரரு என்ன பண்றாரு"

"பட்ரைல ஸ்பின்னரா இருக்காரு மேடம்"

"அப்புறம் எதுக்கு கலைக்கிறீங்க? நல்ல வருமானம் வருமே, எத்தன குழந்தைங்க?"

"ரெண்டாச்சு மேடம், இதோட மூணு... அவரு இப்ப கட்சில சேந்துட்டு சுத்திக்கிட்டு இருக்காரு. ஒத்த பைசா வீட்ல இந்தாடி வச்சு வீட்ட பாருன்னு கொடுக்குறதில்ல. வீட்டுக்கு வர்றதே அபூர்வமாயிருச்சு. எங்காவது வெளியூருக்குப் போயிட்டு நல்லா கூத்தடிச்சுட்டு, காசெல்லாம் தீந்தோனேதான் வீட்டுல கட்டுனவ ரெண்டு பிள்ள இருக்குன்ற ஞாபகமே வரும்"

டாக்டரம்மா அந்த நிலையிலும் சிரித்தார். அவர்களது சிரிப்பு மீனாட்சியை சங்கடப்படுத்தியது. மாலாவிற்க்கும் சிரிப்பின் ஏளனம் புரிந்தது.

"ஒங்க வீட்டுக்காரற கேக்காம எப்டி கலைக்க முடியும்? நாளைக்கு வந்து ஏதாவது பிரச்சன பண்ண மாட்டாருன்னு எப்டி சொல்ல முடியும்? எந்த கட்சில இருக்காரு?"

"அவருக்கு ஒன்னும் தெரியாது. வீட்டு நெலம அப்படி மேடம், தெரியாம நான் பாத்துக்கிறேன். வைரவமணிக்கூட சுத்துக்கிட்டு இருப்பாரு, கலைஞர் கட்சி"

"இப்பதக்கி மாத்தர கொடுத்து பாப்போம். சிலது கலஞ்சுரும்.. சாப்புடு, அதுவும் ஆகனே்னா, ஊசி போட்ரலாம். ஆனா அதுக்குல்ல ஒரு முடிவெடு. நீ தள்ளாடுறது உனக்கும் பிரச்சன, உள்ள இருக்குற கொழந்தைக்கும் பிரச்சன... அப்புறம் கரு விஸ்வரூபம் எடுத்துரும்"

இரண்டு மாத்திரைகள் கொடுத்தார். ஒன்றை சாப்பிட்ட அடுத்த நாள் இன்னொரு மாத்திரையை சாப்பிட்டாள். மாலா பப்பாளி, அன்னாசிப் பழங்களை வாங்கிக் கொடுத்தாள். அதிகமாக அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிடச் சொன்னாள். பெண்கள் மட்டும் தனியே சாமி கும்பிட்டு சாப்பிடும் கொழுக்கட்டை போல், யாருக்கும் தெரியாமல் இருட்டில் அமர்ந்து சாப்பிட்டாள். அப்போதெல்லாம் தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்வு துண்டாடியது. இந்திராணி அம்மாவிற்குத் தெரியும் என்று நினைக்கும் போதே நடுங்கியது.

அம்மா ஞாபகம் வந்தது, ஊர் ஞாபகம் வந்தது. கம்மாயில் நெற்கட்டை சுமக்க முடியாமல் தண்ணீரில் சிக்கிக் கொண்டு அம்மாவிடம் அடி வாங்கியது ஞாபகம் வந்தது. அனைத்தும் அவஸ்தையாக இருந்தது. வீட்டில் குழந்தைகளைப் பாா்த்துக் கொள்ள முடியவில்லை. இரண்டாவது மாத்திரையை சாப்பிட்டவுடன் கிறுகிறுப்பாக அசதியாக வந்தது. படுத்துக் கொண்டால், தூக்கம் வரவில்லை. மனம் செயலற்று இறுகிப் போய் இடி பாய்ந்தது போல் அதிர்ந்து கொண்டே இருந்தது. வயிற்றை தடவிக் கொடுத்துக் கொண்டாள். காய்ச்சல் வந்த மாதிரி அனத்தினாள். இந்திராணி அம்மாள் வந்து கவனித்துக் கொண்டார்கள். ஒமட்டலாகவே இருந்தது.

கரு கலையவில்லை. ஊசி போட்டு வந்தார்கள். இரவில் உறங்க முடியவில்லை. செருப்பில் சிக்கிக் கொண்ட முள் போல் ஏதோ ஒன்று கீறிக் கொண்டே இருந்தது.

"இந்த மாதிரி அல்லாடிக்கிட்டே இருக்காதம்மா" என்று எச்சரித்தாா் டாக்டர்.

அதிலும் கலையவில்லை. அன்று வெறி வந்தது போல் இருந்தது. ஏதோ தவறாக நிகழப் போகிறதென மனம் சலம்பியது. அதன் அதிர்வைத் தாங்க முடியவில்லை. மீண்டும் உறக்கமில்லாமல் இரவு கழிந்தது. தனசேகர் இது எதையும் கவனிப்பதில்லை. அவன் வரும்போதே கருக்கல் வெளுக்கத் தொடங்கி விடும். போதையில்தான் வருவான், படுத்தால் சாயுங்காலம்தான் எழுவான். எழுந்தவுடன் பிள்ளைகளைக் கொஞ்சுவான். கையில் காசிருந்தால் கடையில் வடையும், டீயும் வாங்கி வரச் சொல்லுவான். இல்லையென்றால் முகங்கழுவி சமைத்ததை எடுத்து வைத்து சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் அசந்திருப்பான். மீனாட்சி கையில் சுத்தமாக காசில்லாதபோது எதுவும் சமைத்து வைத்திருக்க மாட்டாள். ஏன் சமைக்கவில்லை என்றும் கேட்க மாட்டான். எப்பொழுதாவது மீன் எடுத்து வருவான், அன்று நன்றாக சாப்பிடுவாா்கள். அதற்கடுத்த நாள் சாப்பிட எதவும் இருக்காது. மீனாட்சியின் அம்மா ஊரில் இருந்து அரிசி அனுப்பியதில் ஒருவாறாக சென்று கொண்டிருந்தது.

வயிறும் நாளுக்கு நாள் வளர்ந்தது. இந்திராணி அம்மாளிடம் சொன்னாள். அவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. குங்குமம் எடுத்து நெற்றியிலும் தாலியிலும் பூசி விட்டார்கள். சாமியறைக்குள் கூட்டிச் சென்று தீபம் பொருத்தி அக்கினிக்கும், மீனாட்சியம்மனுக்கும் ஆரத்தி காட்டி, திருநீற்றை மீனாட்சி தலையில் போட்டு ஆசீர்வதித்தனர். கண்களில் துளிர்த்த கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டார். சாயுங்காலம் வரை பேசியிருந்து விட்டு தனசேகர் வந்ததும் விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றனர்.

"ஆத்தாட்ட சொன்னியா"

"இல்ல, இந்த மாசம் ஒங்க தம்பி வீடுல.. இங்கன வர்றதில்லயே" வெளியே கிளம்பிச் சென்றான். கொஞ்ச நேரத்தில் தனசேகரின் அம்மா வந்தார்கள். தனசேகர் வரும்பொழுது லெட்சுமி விலாஸில் மிளகுச்சேவும் அரைக் கிலோ அல்வாவும் வாங்கி வந்தான். மீனாட்சியின் மாமியாரின் மடியில் படுத்திருந்த சின்னவனை தூக்கி காதில் செல்லக் கடி கடித்தான். நரநரவென்ற மீசை குத்த சின்னவன் சிணுங்கினான். அல்வாவைப் பிரித்துக் கொடுத்தான். உதடுகள் ஈரமாக அல்வாவை சாப்பிடும் சின்னவனின் உடலை ஆசை தீர வருடிக் கொடுத்தான். அன்று குடிக்கச் செல்லவில்லை. பாய் கடையில் வாங்கி வந்த டீயை குடித்துக் கொண்டிருந்த பொழுது ராஜி வந்தாள். ராஜிக்கு தன்னை யாரும் இன்னும் தேடாதது வினோதமாகத் தோன்ற அவளே வீட்டுக்கு வந்தாள். "அப்பத்தா எனக்கு"

"என்னடி ஒனக்கு"

"திங்க என்னமாச்சு"

தட்டில் அல்வாவும் மிளகுச்சேவும் எடுத்துக் கொடுத்தாள்.

வெளியே ஒட எத்தனித்தவளைப் பிடித்து

"ஏடி, எங்க போற, இங்கனயே உக்காந்து தின்னு" என்றாள் மீனாட்சி. தரையில் சம்மணங்கால் போட்டு வாசல் கதவில் சாய்ந்தமர்ந்தாள். விளக்கு ஏற்றப்படாததினால் சாயுங்காலத்தின் வெளிச்சம் வீட்டுக்குள் இருந்த இருட்டில் தனியாகத் தெரிந்தது. சின்னவன் ராஜி முன் வந்து நின்றான். ராஜி, சேவை எடுத்து அல்வாவில் குத்தி கொஞ்சத்தை பிய்த்தெடுத்து, சேவில் ஒட்டியிருந்த அல்வாவை மட்டும் கடித்து சாப்பிட்டாள். மீண்டும் அப்படியே. சின்னவனிடம் வேணுமா என்றாள். அவன் தலையை ஆட்டிக் கொண்டே அப்பத்தாவின் மடியில் விழுந்தான்.

ஊரிலிருந்து மீனாட்சியின் அம்மாவும், அண்ணனும் வந்தார்கள். காம்பவுண்ட் முழுவதும் சந்தோசம் பரவியது. தனசேகர் வாரத்தில் மூன்று நாட்கள் கவுச்சி எடுத்து வந்தான். தனசேகரின் அம்மா, மீனாட்சியின் அம்மாவின் அண்ணி. முன்பிருந்தே பூசல்கள் இருந்தன. சிறு சிறு மனக்கசப்புகள். மீனாட்சி உள்ளுர பயந்து கொண்டுதான் இருந்தாள். ஆனால் இருவரும் அபூர்வமாய் விட்டுக் கொடுத்துக் கொண்டனர். அப்போதப்போது இந்திராணி அம்மாவும் யசோதாவின் அம்மாவும் பலகாரம் செய்தால் வந்து கொடுத்தனர். யசோதா தன் பிஞ்சுக் கையால் குழந்தையை தொட்டுப் பாா்த்து பூரித்தது.

"அத்தே, எப்பத்த பாப்பா வெளில வரும்"

மீனாட்சி அவளை ஆதுரமாக அணைத்துக் கொண்டாள். குழந்தை பத்திரமாக வெளி வர வேண்டும் என்ற கவலை பிடித்தது. தினமும் கோரமான கனவாக வந்து பாதியில் எழுப்பி விட்டது. தண்ணீர் குடித்துவிட்டு தூக்கம் வராமல் படுத்திருப்பாள். காலை விடியும் போது கண் அசரும். கரு உதிரத்துடன் கலைந்து கால்களை நனைத்து வெளியேறுவது போல கனவு வந்தது. பதறி எழுந்தவளின் உடல் வியர்த்திருந்தது. முகத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். கால்களைச் சுற்றி குளம்போல் உதிரம் தேங்கியிருந்த சொதசொதப்பை உணர்ந்து கூசினாள். பின் தன் கற்பனையை நினைத்து ஆசுவாசம் கொண்டாள்.

வயிற்றை தடவிக் கொடுத்தாள். தனித்திருக்கும் பொழுது குழந்தையிடம் மன்னிப்பு கோரினாள். தாங்க முடியாத சோகத்தில் கதறி அழுதாள். தான் அழுவதை யாரும் கேட்டு விடுவார்களோ என முந்தானையால் வாயை மூடிக் கொண்டாள். மாலாவைப் பாா்ப்பதை தவிர்த்தாள். பதட்டத்துடனும் பயத்துடனும் விழித்தாள், உறங்கினாள், சமைத்தாள். சாயுங்காலத்தை, நீல வானத்தை வேடிக்கை பாா்த்தாள்.

தன்னுள் ஊற்றெடுத்த விதை வயிற்றுக்குள் விருட்சமாவதை உணர்ந்து ஆனந்தம் கொள்ள முடியாமல் இது கலைந்துவிடும் என்ற நம்பிக்கையின்மை உறுதியாகி பயமுறுத்தியது. கிணற்றில் தண்ணீர் எடுத்து மாடி ஏறியவளுக்கு வலிப்பு வர, மாலா கம்மாஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றாள். அதே நர்சு தான் இருந்தாள். எரிச்சலோடு சொன்னாள்

"ஏம்மா, வயித்த சுத்தம் பண்ணிட்டு வாம்மா"

"குழந்த பெறந்தோன்னே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செஞ்சிர்றோம்" என்றாள் மாலா.

நர்ஸ் வயிற்றை சுத்தம் செய்ய ஒரு கரைசலைக் கொடுத்தாள். கொஞ்ச நேரத்தில் வலி அதிகமானது. ஆண் குழந்தை பிறந்தது. மலமும் நிணமும் ரெத்தமும் சேறாய் அப்பியிருந்த குழந்தையை எடுத்து சுத்தம் செய்துவிட்டு நர்ஸ் சொன்னாள்

" கொழந்த அழகாயிருக்கும்மா, ராஜா மாதிரி"

மீனாட்சிக்கு சந்தோஷமாக இருந்தது.

- ஆதவன் கந்தையா

Pin It