எனக்கு இதெல்லாம் பிடிக்காது. ஏன் அப்படினு கேட்டா அதற்குப் பதிலும் இல்லை. அப்படி என்னதான் நீ குற்றம் பண்ணிட்ட... இப்படியே இருட்டறையில் உட்கார்ந்து கொண்டு புலம்புற...? என்னமோ போ எதை எதையோ எதிர்பார்த்து எத்தனை நாளைக்கு தான் மனுச ஜென்மம் ஏங்கித் தவிக்கிறது. மாத்திரை வாங்க காசு இல்லை, சாப்பாடுக்கு காசு இல்லை. விளக்கு எரியக்கூட பில்... என்னுடைய புலம்பல் உங்களுக்கு எப்படி கேட்கும், புரியும்?

கொடுத்த மாதிரியே கொடுத்து நீங்களே வாங்கிக் கொண்டு எப்பொழுதும் ஆடும் கபட நாடகம் எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை. கோபம் அதிகமாக வருகிறது, உங்களுக்கும் அது தெரியும். ஆனா நீங்க கண்டுக்காம உங்க ஆட்டத்தைப் பாருங்க. எல்லாரும் இப்படித்தான். நான் இருட்டறையில் இந்த மூலையில் இருக்கிறேன்.

அவா அவா மனதும் இருளா மூழ்கி கிட்டே இருக்கிறது. போன வருடம் வரை நல்லாத்தான் இருந்தேன். அதிக உழைப்பு, அது கூட கொஞ்சம் எழுத்து அது நாலு பேர சந்திக்கிற வாய்ப்பு கொடுத்தது. யாருமே அதுல வருமானம் தேட விரும்பவில்லை. நான் மட்டும் எப்படி?

இந்த கயிறுக் கட்டிலில் படுத்துண்டு, என் பக்கத்தில் இந்த நாய் வேற, எனக்கு ஏதாவது கொடுத்தா ஒரு துண்டு அதுக்கும் வைப்பேன். அது பசிக்கிறது என்று சொல்லியது கிடையாது, அது பார்வையைப் புரிஞ்சுண்டு சில நேரத்தில் இருப்பதை அப்படியே வச்சிடுவேன்.

சில நேரத்தில் அது வெளியில் சென்று விட்டால் எனக்கு வருத்தமாக இருக்கும். அதை கட்டிப் போட்டு வைக்க வில்லை. சுதந்திரம் முக்கியம் என்று உணர்கிறவன் நான். எனக்கு எந்த சங்கிலியும் இல்லை. எப்படி நான் இந்தக் கட்டிலில் இத்தனை நாட்களாக ஒரே இடத்தில் சற்று புரியாமல் தான் இருக்கிறது.

கட்டிலில் உள்ள தேங்காய் நார்க் கயிறுகள் அனைத்தும் பிய்த்துக் கொண்டால் என்ன செய்வது? என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. வேண்டுமானால் இரண்டு புத்தகங்கள் இருக்கிறது.

அதுல நேற்று கூட ஒரு கதை படிச்சேன். ரொம்ப பிரமாதம். இலக்கியத்திலேயே ஊறிப் போனவர்கள் நடத்துகிற இதழ் ஒன்று இருக்கிறது. முதன் முதலில் டெல்லி அரசியலை எழுதி இப்போ முழு இலக்கிய இதழா மாறிப் போச்சு.

நிறையப் பேர் இலக்கிய இதழ் நடத்துறா, இதழ் நடத்கிறது எவ்வளவு சிரமம் என்று தெரியும், கோடி கோடியா பணம் வெச்சுண்டு இருக்கிற நாட்டுல இலக்கிய ஆர்வம் ஜாஸ்தி இல்லை. நானும் எதோ கொஞ்சம் எழுதுவேன். உங்களை படிக்கச் சொன்னால் நீங்க படிக்க மாட்டீர்கள். முயற்சி பன்னுங்கோ.
கண்பார்வை போய்டுச்சு... ஆனா இன்னும் எதாவது எழுதச் சொல்கிறது மனசு.

அக்கா என்றால் பிரியம். ஆவாளுக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும். முன்பெல்லாம் அடிக்கடி வருவா... இப்பொழுதெல்லாம் என்ன ஆச்சுனு தெரியில. ஆவா வருவதே கிடையாது. ஆவாகிட்ட அவ புருசன் என்ன சொன்னாருனு புரியல. அவரு கணக்கு போட்டு குடும்பம் நடத்துகிறவர். அடிக்கடி மூக்கு கண்ணாடிய பாதி இறக்கிவிட்டு பார்க்கிற பார்வை ஒரு மாதிரி வெறுப்பாகத்தான் இருக்கும்.

இந்த மனிதர்கள் எப்பொழுதும் பிரிவினையோடத்தான் வாழுறா.. மனசில ஏதாவது வன்மம் வஞ்சுண்டு பின்னால் கால் வாருவது... எப்பொழுதான் தான் மாறப் போகுதோ? புராணம், இதிகாசத்தில ஆரம்பித்து இன்னும் ஜென்ம ஜென்மமாய்த் தொடர்கிறது.

கொஞ்சம் டீ குடிக்கனும் போல் இருக்கிறது. இருங்கோ டீ எடுத்துண்டு வருகிறேன் என்று தன் சமையல் அறையை நோக்கிச் சென்று அடுப்பை பற்ற வைத்தார் நகுலன்.

இந்தாங்கோ சாப்பிடுங்கோ என்று கொஞ்சம் டம்பளரில் கொடுத்த உடன், இப்படித்தான் நான் யாராவது வந்தால் காலையில் காய்ச்சி வச்சிருக்கிற பாலை எடுத்து சூடு செய்து கொடுப்பது வழக்கம்.

எங்க ராமுவை காணோம்.. அவன் வந்தா கோபித்துக் கொள்வானே, கொட்டாங்குச்சியில் கொஞ்சமாக ஊற்றி வைப்போம். ஒரு நிழல் தெரிந்தது வா... த்... த்... உனக்குதான், "ராமு வாலை குழைப்பதை பார்த்திங்களா எவ்வளவு நன்றியுணர்வு". இது மனிதர்களிடையே கொஞ்சமும் இல்லை.

ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றி உணர்வா இல்லை. ஆட்சி பீடமும் அதிகார பீடமும் இப்படியே இருந்தா எப்படி?

இப்படித்தான் சென்ற வாரம் நண்பர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். வீட்டில் சேஷமாக இல்லையாம். நாடு நகரம் முழுவதிலும் மனுஷாள் எப்படி வதைக்கிறார்கள். ஒரு அனுசரணை இல்லை, ஒரு ஒத்தாசை இல்லை என்ன உலகம் இது அப்படினு புலம்புகிறார்.

எல்லாத் துறையிலும் இப்படித்தானாம். ஒருத்தனுக்கு வயிற்றுப்பசி இதுதான் கொடுமையானது. இன்னொருத்தனுக்கு வயிற்றுக்கு கீழே பசி... இப்படி எதிர்விவாதங்களிலேயே காலங்கள் ஓடிப் போச்சி அப்படினு சொல்லிக் கொண்டே இருந்தார். நான் அவருக்கு என்ன பதில் எழுதுவேன். இங்கேயும் இதே நிலைமை தான்.

சரி அடுத்த வாரம் திரும்பவும் கடிதம் வந்தா பதில் எழுதலாம் என்று அறையின் சுவற்றைப் பார்த்து பாழடைந்த வீட்டில் பேசிக் கொண்டிருந்தவரிடம், இந்தாடா ஒன்றும் உளராத இந்த மாத்திரையை போட்டுண்டு படுத்துக்கோ என்று தண்ணீரை நீட்டினார் நீண்ட நேரம் இவர் குரலைக் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வந்த சபாபதி.

- ப.தனஞ்ஜெயன்

Pin It