எங்கிருந்தோ விரட்டும் இந்த அமைதிக்கு சுற்றிலும் பற்கள் இருக்கின்றன.

நினைவிகளில் ரத்தம் சொட்டும் நாவின் சுழற்சியை இந்த அமைதி இப்போது திறந்து விட்டிருக்கிறது.

நான் ஓட ஆரம்பித்து விட்டேன். எங்கிருந்து எங்கென்று தெரியவில்லை. ஆனால் நிற்க முடியவில்லை. இந்த வாழ்வின் இறுதி கதவை திறந்து கொண்டு கொண்டு ஓடுவது போல ஓடுவது அத்தனை சுலபம் அல்ல. அதன் எல்லா வழிகளுக்கும் ஒரே வழிதான் திறந்து கொண்டிருக்கிறது. ஓடுவதில் பயம் கொண்ட மானுட இணக்கத்தை காண காண உள்ளூர ஊரும் உற்றுநோக்களின் வழி.......நிலைகொள்ளாத மறதியைக் கொண்டிருக்கிறது. அழகிய தேவதைகள் எல்லாம் ஒரு தும்மலுக்கு மறைந்து விடுகிறார்கள். கொடுத்த வாக்குகள் எல்லாம்... ஒரு இருமலுக்குள் இல்லாமல் போகிறது. இன்னபிற இத்யாதிகள் அண்ணாச்சி கடையில் எட்ட நின்று ஊறுகாய் வாங்க முயற்சிக்கிறது. குடித்து கிடக்கவும் முடியாத கல்தூணுக்குள் எட்டுக்கால் பூச்சியாக மாறிட நினைக்கும் வலைப்பின்னல்கள் சமரசம் வேண்டுகிறது.

ஆழமான உருமாற்றத்துக்குள் அயோக்கிய ஆடம்பரம் இப்போதும். அதிகாலை பூட்டிய அந்திமாலை.. நடுமதிய ரூபத்தை.... அந்திசாயும் தடுமாற்றத்தோடு அன்புமற்ற அழுகையுமற்ற ஆளுயர கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது.

மனிதனை மனிதன் வெல்ல செய்த வெடிகுண்டிகளின் சத்தம் ஒடுங்கும் சப்தம்.....ராக்கெட் பறக்கும் சத்தம்.....செவ்வாயை ஆராயும் சத்தம்..... நிலவை தோண்டும் சத்தம்...... சாதிக்கு விரட்டி விரட்டி வெட்டிய சத்தம்..... சாமிக்கு சண்டையிட்டு கொட்டிய குருதி சத்தம்.....வீதியில் இறங்கி தினமும் கத்திக் கொண்டே இருக்கும் அரசுக்கு எதிரான உரிமை சத்தம்...... என்று எங்கு திரும்பினும் என் காதுக்குள் யாரோ முணுமுணுக்கிறார்கள். எவர்களையோ நிரம்ப செய்யும் அணுகுண்டு சத்தத்தின் ரத்த துளிகள் என் செவிக்குள் சிற்றெறும்புகளாக ஊர்வதை என்னால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

பேராசைக்கும் பேரின்பத்துக்கும் வெற்றுப் புகழுக்கும்... வேதாந்த வீம்புக்கும் அற்ப கூப்பாடுகளை தூக்கி சுமந்த சத்தம் என் நெற்றியில் வியர்வையாய் வழிவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் மாற்றுரு கொண்டு மனதுக்குள் வேஷங்கள் சேகரித்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி பார்க்கிறேன். ஒன்றுமற்ற அந்தகாரம் நினைவில் மேகமூட்டம் கலைத்துக் கொண்டே இருக்கிறது. வாழ்வின் போக்கை மாற்றிய கற்பனையோடு பூமியின் முக்கோண சரிவுகளில் நின்று நான் எதையோ தேடிக் கொண்டிருக்கிறேன். தேடுவதென்பது நின்று நிதானிக்கும் சொல்லல என்று புரிகையில்... நடுங்கிக் கொண்டே தொடரும் பாதங்களில் இறக்கை முளைத்து விட சாபம் வேண்டுகிறேன்.

தன்னிலிருந்து தானை பிரிப்பது மிக கடுமையான செயலாக்கம். முகத்தை மறைத்துக் கொண்டிருப்பது முகமற்று இருப்பது.. முகமுடிக்குள் நிகழும் பெளதீக மாற்றம். செவி அடைக்கும் வாய் உளறல்களை நயம் பட பேசிவிட தீரா தனிமை தேவைப் படுகிறது. கதவு தட்டும் ஓசைக்குள் கால் கூசும் நடுக்கம்.

கோயில் கோயிலாக மசூதி மசூதியாக ஆலயம் ஆலயமாக வெடித்த குண்டுகளின் குரூரத்தின் சத்தம் மிக மிக மெல்லிய நகம் கடிக்கும் ஒலியில் சுழன்று கொண்டிருப்பதை உள்வாங்க முடியவில்லை. மானுட தலைவலிகளைவிட்டு முடிந்தளவு ஓடி விடுவது தான் சரி என்று யாரோ சொல்கிறார்கள். குரல் வழியே கசியும் குருதியை குறைந்தபட்ச ராட்சச சூட்டின் பிசுப்பிசுப்பிலிருந்து நான் வெகு தூரத்தில் இருக்கும் யாருமற்ற நிழல்களை கற்பனித்தபடி ஓடிக் கொண்டிருக்கிறேன்.

நின்று உணவருந்த இடமில்லை. தானியம் பதுக்கி வைத்த குடோன் எங்கே. தின்று கொழுத்த எலிகளின் கீச்சொலி இதயம் கிழிக்கிறது. எல்லா காரியங்களிலும் குழப்பம் செய்த அயோக்கியர்களின் மீசை நறநறக்கும் சத்தம் மூக்கில் நமநமக்கிறது. நான் அலைபேசியை அணைத்து விட்டேன். அலைபேசியின் அதிர்வு கூட அல்லல் விடும் ஆளுயர அற்புதம் செய்து என்னுள் புழுக்கள் நெளிகின்றன. நான் எதிர் வீட்டுக்காரனின் கண்களை எப்போதும் உற்று நோக்கியதில்லை. இப்போதும் நோக்க இயலவில்லை. உதவிக்கு நீட்டாத கையில்.. எப்போதும்... விமர்சனங்கள்தான். வெற்றுக் கூப்பாடுகளில் வீரியமற்ற வெயில் தேசம்... நிழல் தேடி அலைவதைத் தவிர வேற என்ன செய்யும். எங்கோ பார்த்தவனின் அருகாமையை வெறுத்து ஒதுங்கி ஓடி ஒளிகிறேன். ஓடி ஒளிவதில் ஒரு குரூரம் இருப்பதை ஆழ்மனம் விரும்புகிறது.

ஊர் உறவு.. சொந்தம் பந்தம்.. நட்பு காதல்.. அன்பு அரவணைப்பு எல்லாம் எல்லாம்.. நொடியில் மாறி விட்டன. நோகாமல் நோம்பி கும்பிட்ட சாபம்.. கோவில்களையும் அடைத்து விட்டன.

எல்லாம் ஜடமாகிப் போன பின் ஒரு எண்ணுக்குள் நான் அடைப்பட்டு விட்டேன். போற்ற சாபமற்ற....... இயலாத ஒன்றுமற்ற ஒன்றாக நடப்பதை விட ஓடுவது தான் சிறந்தது. கத்தி கத்தி ஓய்ந்த எல்லாம் உருக்குலைந்த ஒளியின் வால் பிடித்து ஒரு காத தூரம்....ஒரு சதுர தூரம்.... ஒரு மைல் தூரம்..... ஒரு ஊர் தூரம்..... ஒரு நாடு தூரம்..... ஒரு வான தூரம்.... இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கிறேன். சிறகு பொருத்தி கற்பனித்த காலங்கள் துரத்துவது தான் அச்சத்தின் அச்சமாக இருக்கிறது. வீதி வீதிக்கு நின்றிடும் கருத்துக்கள்......ஒரு போதும் தீர்வு தராது என்று புரிந்த போது... சாதியில் நாங்க தான் பெருசு என்று விளையாட்டுக்கு சொல்லிக் கொண்டதெல்லாம்...... சிறு பூச்சி தத்துவம் என்றுணர்க. அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும்.... கோஷங்கள் தாண்டி.. குவளை தேநீர்க்குள் தவறி விழுந்த எறும்பின் படபடப்பைக் கொண்டிருந்த ட்ரேப். காலத்தின் இயக்கியை இப்படி போட்டுத் தாக்கும் என்று புரிகையில்.. டிக் டாக்கில் அரை குறை ஆடையில் ஆடியதெல்லாம் கண் முன்னால வந்து பல்லிலிருக்கிறது.

அந்திம காலத்தில் எல்லாமும் எல்லாமுமாக சாக கிடைக்கும் என்பது மெய்ப்பொருள். ஆன்ம பலிப்பின் அசுர வேகத்தில் கொண்ட வேடம் தன் காலைத் தூக்கி கொள்ளும் அற்புத கணத்தில் வேறு வழியில்லாமல்.. எல்லாம் விட்டு ஓடவேண்டி இருக்கிறது. உண்மைக்கு புரியாத பொய்கள் இல்லை. பொய்களுக்கு புரியாத உண்மையும் இலை. இரண்டும் இரு துருவங்களில் என்று புரிந்த போது இடையில் கொண்ட இருத்தலை கவ்விக் கொள்கிறான் மனிதன். வெற்றுடம்பில் மறதிக்கு நினைவூட்டும் புன்னகையை சட்டை பைக்குள் இருந்து எடுத்து பார்த்துக் கொள்கிறேன். கைக்குட்டையின் வடிவத்தில் முகம் மாறிய கணக்கை கண் கொள்ளா காட்சிக்கு நீரற்ற காற்று ஆற்று நடுவில் நகல் எடுக்கவும் மறந்து பறக்கிறது. தெரிந்து செய்த துரோகங்கள்.. தெரியாமல் செய்த சதிகள் எல்லாம்...... நிழலை போல படர்கிறது.

பாதையில்.. மரங்களாகிற மொழியின் நமநமப்பை என்ன செய்தும் அடக்க முடியவில்லை. பின்னோக்கியும் செல்லும் அரூபத்தின் ஆயுள் அதற்கு.

நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் இருந்து.......அவர்களிடமிருந்து.......எல்லாரிடமிருந்தும்.... இந்த உலகிடமிருந்தும்.... ஓடிக் கொண்டிருக்கிறேன். நான் ஓடிக் கொண்டேயிருக்கிறேன்..... இதோ இதோ என்னிடம் இருந்தும்...

- கவிஜி

Pin It