“காலை வணக்கம் ஐயா “

நாற்பது மாணவர்கள் அடங்கிய வகுப்பறை பல குரல்களைத் தாங்கி ஒலித்தது. தனக்குக் கிடைத்த மரியாதையை தன் நெஞ்சை நிமிர்த்தி பெற்றுக் கொண்டு தன் இருக்கைக்கு நடை அளந்தார் கிருஷ்ணமூர்த்தி.

தன் வலதுகையில் அனைவரையும் அமருமாறு சமிக்ஞை காட்டினார்.

உடல் நலம் காரணமாக ஒரு மாத காலமாக மருத்துவ விடுப்பில் இருந்து, அன்று தான் பள்ளிக்குத் திரும்பி இருந்தார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதாலும், இவர் ஒரு மூத்த ஆசிரியர் என்பதாலும் இவருக்கு இந்தச் சலுகை இருந்தது. அமைதியை கக்கிக் கொண்டிருந்த வகுப்பறையில் மாணவர்களின் ரீங்காரம் கசியத் துவங்கியது. தன் கொண்டு வந்திருந்த பத்தாம் வகுப்புப் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தவர், தன் இருக்கையை விட்டு எழுந்து கரும்பலகை அருகில் சென்றார்.

“இன்று நாம் பார்க்கப் போகும் பாடம் நுண்கிருமியான பாக்டீரியாவைப் பற்றி…” என்று தன் குரலில் கர்ஜித்தார் கிருஷ்ணமூர்த்தி.

மாணவர்களில் சலசலப்பு அடங்கிப் போனது.

“பாக்டீரியா ஒரு செல் கொண்டும், பல செல்களைக் கொண்டும் இருக்கிறது..”

“இது எந்த ராஜ்ஜியத்தைச் சேர்ந்ததென்று யாராவது ஒருவர் எழுந்து சொல்லுங்கள்?”

நீண்ட மௌனத்திற்குப் பிறகு ஒரு மாணவன் எழுந்து குரல் நடுங்க “ஐயா .. அதிநுண்ணுயிரி “ என்றான்.

சட்டென்று மதயானை போல சினம் கொண்டு கிருஷ்ணமூர்த்தி, “முட்டாள்…” என்று அதிர்ந்தார்.

“யாருக்கும் பதில் தெரியல...”

“கோபால கிருஷ்ணா... நீ எழுந்து முயற்சி செய்!” என்று உரக்க ஆணை பிறப்பித்தார்.

ஒரு நிமிடம் நிசப்தத்தின் பிடியில் தொலைந்து போனவர்களாய் எஞ்சியிருந்தார்கள் மாணவர்கள்.

மெதுவாக ஒருவன் எழுந்து “ஐயா... கோ…பா..”என்று முடிக்கும் மாத்திரத்தில் "நீ வாய மூடு" என்று அதட்டினார்.

“சரியாகச் சொன்னாய் கோபால கிருஷ்ணா...”

“அது மோனேரா தான் வெரி குட்….” என்று கடைசி இருக்கையைப் பார்த்து தன் கட்டை விரலை உயர்த்தி தன் பாராட்டை சமர்ப்பித்தார்.

பள்ளி மணி ஒலித்தது.

தன் பாடத்தை நிறுத்திக் கொண்டு வகுப்பை கடப்பதற்கு முன், “கோபால கிருஷ்ணா இங்க வா..” என்று கூப்பிட்டு விட்டு வெளியே சென்றார்.

“நீ ஒருத்தன் தான் என் வகுப்பில் அனைத்தையும் கவனிக்கிறாய், உனக்கு பிறவிஞானம் வேரூன்றியிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு சிறந்த விஞ்ஞானியாக வலம் வருவாய்" என்று தாழ்வாரத்தில் நடந்து பேசிக் கொண்டு வந்தவரிடம் எதிரே வந்த அலுவலக உதவியாளர், “சார் உங்கள எச். எம் கூப்பிடறாரு...”

பேசிக் கொண்டிருந்ததை மறந்து “இதோ வரேன்” என்று விரைந்தார்.

கிருஷ்ணமூர்த்தி திறமை வாய்ந்த அறிவியல் ஆசிரியர். புரிந்து கொள்ள முடியாத பாடத்தை தன் மொழியாளுமையாலும், அனுபவத்தினாலும் மிக எளிமை ஆக்குபவர். தன் உடல் மொழியால் மாணவர்களைக் கவர்ந்தவர்.

அன்று சனிக்கிழமை என்பதால் வேலைப் பளு குறைந்திருந்த காரணத்தால் பணியாளர் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

“என்ன கிருஷ்ணமூர்த்தி சார் இன்னைக்கு பிரீ யா…” என்றார் அந்தப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் சண்முகம்.

“ஆமா,.. வாரத்தில் இப்படி ஒரு இடைவெளி தேவைதான் …”

“என்ன செய்ய... வீட்டுல நான் ஒண்டிக்கட்ட. எல்லா வேலையும் நான் தான் செய்யணும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாதனால கல்யாணத்தையும் தட்டிக் கழிச்சிட்டேன். என்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டுட்டிருந்த என்னுடைய ஒரே சொந்த மாமா அவரும் போய்ச் சேர்ந்துட்டார். எனக்கு ஒய்வு தவிர என்ன வேணும்…..”

“சாரி சார்… நான் வேற உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன் …….” என்று நகர்ந்தான் சண்முகம்.

தனியாக அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்திக்கு தனிமை நிழல் விரித்தது.

திடீரென வாசலைப் பார்த்தவர்….

“வா.. டா.. கோபால கிருஷ்ணா….ஏன் வெளிலே நிக்கற உள்ள வா? என்ன புத்தகம் கையுமா ...”

“ஓ... இந்த செல் உறுப்புகளைப் பற்றிய சந்தேகமா? அந்தப் பாடத்தை நான் வரும் திங்களன்று திரும்பவும் நடத்தி சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன் ……”

“ஏன் கோபால கிருஷ்ணா சற்று முகம் வாடிப் போய் இருக்கிறது..?”

“கேள்விப்பட்டேன் ஆங்கிலத்தில் நீ வாங்கி இருக்கும் குறைந்த மதிப்பெண்ணை …..”

“கோபால கிருஷ்ணா... தமிழ் வழிக் கல்வி கற்பவர்கள் அனைவரும் முழுமையாக ஆங்கிலப் புலமை பெற்று விட முடியாது.. ஆனால் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் “       

“எந்த வலியையும், எந்த வழியையும் கடந்து விட்டால் நாம் வெல்லும் காலம் நிச்சயம். நீ தனி ஆளென்று ஒரு போதும் நினைக்காதே. உன்னை மறைமுகமா ஒரு சமூகம் உயர்த்திப் பிடிக்கும். உன்னுடைய உடைமை உன் அறிவும் அதைச் சுமக்கும் இந்த உடலும் தான். அறிவை வைத்து உடலை காப்பாற்றிக் கொள். நீ இந்த உலகுக்கு ஏதாவது விதத்தில் பயன்படுவாய்..”

“சரி உனக்கு வகுப்புக்கு நேரமாகி விட்டது கிளம்பு ...….”

கிருஷ்ணனுக்கு உபதேசக் கீற்றை தெளித்ததாக நினைத்ததுக் கொண்டு தன் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினார்.

“இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு சிறு பரீட்சை வைக்கப் போகிறேன்…”

“எல்லோரும் தயாரா….?”

மாணவர்கள் மத்தியில் முணுமுணுப்பு.

“கோபால கிருஷ்ணா...… நீ தயார் தானே …..”

மாணவர்கள் சட்டென்று அமைதியானார்கள்

ஒருவன் எழுந்து “ஐயா கோப …..ல”

“டேய் நீ பேசாதே…. நீ பேசறதுக்கு தான் லாயக்கி…”

“இல்ல சார் கோபா....”

அவன் பேச முனைந்ததும் 'பளார்….’ என்று அவன் கன்னத்தில் அறை விட்டார் கிருஷ்ணமூர்த்தி.

“என்ன கிருஷ்ணமூர்த்தி உங்கள ஒரு தரமான திறமையான ஆசிரியர் என்று தானே நினைச்சிட்டு இருந்தோம். ஆனா ஒருத்தன இப்படி மயங்கி விழுகிற அளவுக்கு அறஞ்சிருக்கீங்க..”

மௌனமாக எச். எம் அறையில் தலைகவிழ்ந்து நின்றிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

“சொல்லுங்க கிருஷ்ணமூர்த்தி இங்கே யாரும் இல்ல...….”

“யாரு அந்த கோபால கிருஷ்ணன்….”

“சார் அது பத்தாம் வகுப்பு மாணவன்...”

“என்ன கிருஷ்ணமூர்த்தி உங்களுக்குப் புத்தி ஏதாவது ஆயிருச்சா...….”

“அப்படி ஒரு பெயர் உள்ள மாணவன் நம்ம பள்ளிலேயே இல்ல….”

“உங்கள கிறுக்கு மூர்த்தின்னு கூப்பிடறாங்க பசங்க …”

“நீங்க தாழ்வாரத்தில் தனியாக பேசிக் கொண்டிருப்பதாக பியூன் சொன்னான். பணியாளர் அறையில் தனியாக பேசிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதை நான் பெரிதாகப் பார்க்கவில்லை, நிலைமை இன்று அத்துமீறிப் போனதை பார்த்து உறைந்து போனேன்”

“தயவு செய்து மீண்டும் விடுப்பு எடுத்து ஒரு மருத்துவரைப் பார்த்து உங்களை சரிசெய்து கொண்டு பள்ளிக்குத் திரும்புங்கள் …”

நடந்ததெல்லாம் கிருஷ்ணமூர்த்தியின் முன் ஒரு கனவாக நிழலாடியது.

"நீங்க ஒரு மாதமா வைரஸ் காய்ச்சலை இருந்ததால உங்க மூளை சற்று பாதிக்கப்பட்டிருக்கு இதை ‘போஸ்ட் மைலிட்டிஸ்’ என்று குறிப்பிடுவார்கள். அதனால ஏற்பட்ட திரிபுணர்ச்சி, அப்படி ஏற்பட்ட கற்பனைத் தோற்றம் தான் இந்த கோபால கிருஷ்ணன். அதுமட்டுமல்ல உங்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது என்ற தாழ்வுணர்ச்சி மற்றும் தனியாக இந்த உலகில் வாழ முடியுமா என்ற தேக்கநிலை. ஆனால் உங்களை இன்னொரு புறம் நீங்களே தேற்றிக் கொள்ளும் மனோபாவம்... இவை அனைத்தும் தான் கோபால கிருஷ்ணன் என்ற உருவம் கொடுத்து உங்களை நிலை கொள்ளச் செய்தது. உங்களுக்கு நீண்ட ஒய்வு தேவை. நான் கொடுக்கற மாத்திரையை தவறாம எடுத்துட்டு வந்தைங்கன்னா இது குணமாக வாய்ப்பு இருக்கு" என்று மனநிலை மருத்துவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மூன்று மாத காலம் கழித்து,

“என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள், என்னுடைய தவறு தான். நான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது...” என்று கிருஷ்ணமூர்த்தி மாணவர்களிடம் வகுப்பில் மன்னிப்பு கோரிக் கொண்டிருந்தார்.

அப்போது வகுப்பு நுழைவாயிலிருந்து ஒரு குரல்…

“அய்யா என் பெயர் கோபால கிருஷ்ணன்… நான் இந்தப் பள்ளியில் இன்று புதிதாக சேர்க்கப்பட்ட மாணவன்…”

திரும்பிப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி திகைத்துப் போனார்.

சன்மது

Pin It