புஸ்பவதி அக்கா வெளிநாடு செல்வதற்காக கொழும்பு Sugam Inn லொட்ஜில் தங்கியிருந்தபோது எனக்கு பதினைந்து வயது. நானும் வெளிநாடு செல்வதற்காக பக்கத்து அறையில் தங்கியிருந்தேன். தீவகத்தில் இருந்து வெளிநாடு செல்வதற்காக நாகறோமா கப்பலில் பயணம் செய்து வந்தவர்களால் லொட்ஜ் நிரம்பி வழிந்தது.

புஸ்பவதி அக்காவுடன் எனக்கு சின்ன வயதில் இருந்தே நல்ல பழக்கம். அவரின் வீட்டுக்கு தெற்குப்புறமாக உள்ள சிறிய பற்றைக் காட்டுக்குள் முயல் வேட்டைக்கு நானும் ராகவனும் அடிக்கடி செல்லும்போது, அக்கா கதியால் வேலிக்குள்ளால் அடிக்கடி தேநீர் கொண்டு வந்து தருவா. தரும்போது கூடவே நிறைய அட்வைசும் கிடைக்கும்.

"பாருங்கடா முயலுக்கும் குழந்தைகள் இருக்கும். நீங்கள் அதுகளை வேட்டையாடினால் அதுகளுக்கு அம்மா வேணும் எண்டு அழுங்கள். பாவமடா" எண்டு மிகவும் சீரியஸாக கூறுவார். அக்காவின் தேநீர் குடிக்கிறத்துக்கெண்டு அடிக்கடி முயல் வேட்டைக்குப் போவதால் நாங்கள் அவரது அட்வைஸை கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் நான் இதுவரை ஒரு முயலைக்கூட அந்தப் பற்றைக்குள் கண்டதில்லை என்பது வேறு விடயம்.

புஸ்பவதி அக்கா பொது நிறம்தான். ஆனாலும் அவரது கண்கள் அழகோ அழகு. அவர் நிறையப் படித்திருந்தாலும் எந்த வேலைக்கும் போனதில்லை. அவருக்குப் பின்னல் நிறையப் பெடியல் சுத்தியிருக்கிறார்கள். எப்பிடிப் பார்த்தாலும் அவரது வயசுக்காரர்களுக்கு அவர் ஒரு கனவுக் கன்னிதான்.

அது யாழ் குடாநாடு படியன்களிண்ட கட்டுப்பாட்டில் இருந்த காலம். அரசு தனது கட்டுப்பாட்டிலிருந்த தீவுப் பகுதிக்கு திருகோணமலையில் இருந்து நாகறோமா என்ற ஒரு சிங்கப்பூர் கப்பலை பயணிகள் போக்குவரத்து செய்ய ஒழுங்கு பண்ணியிருந்தது. இந்தக் கப்பல் பயணம் போல ஒரு வரலாற்றுச் சம்பவம் தீவகத்தில் முன்பொருமுறை நடந்ததாக எனக்கு நினைவில்லை. ஊரெங்கும் இதே பேச்சாக இருந்தது. பயணிகள் கப்பல் மட்டுமன்றி தாராக்கப்பல் என்று ஒரு சரக்கு கப்பலும் சேவையில் இருந்தது. தாரா போல மெதுவாக நீந்துவதால் அதற்கு அந்தப் பெயர். கப்பலுக்கு போவோம் என்பது அந்தக் காலத்தில் ஒரு பிரபலமான உரையாடல். பாடசாலைகளிலும் சனசமூக நிலையங்களிலும் ஆண்டு விழாக்களில் "கப்பல் ஒன்று வாறதால கதையெல்லாம் கூடிப் போச்சு" என்று இளைஞர்கள் ‘தாள லய நாட்டிய நாடகம்’ போட்டு நடித்துக் கொண்டிருந்தார்கள். இவற்றுக்குப் பின்னால் இடம்பெறப் போகும்  "ஐரிஸ் நோனா"  என்ற கப்பல் பயணம், பிறகு கப்பல் பயணத்துக்குப் பதிலாக லயன் எயார் என்ற விமானப் பயணம் போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு இன்னும் சில வருடங்கள் இருந்தன. அதற்கிடையில் சனங்கள் கப்பல் பயணத்தை கொண்டாடத் துவங்கினார்கள்.

 கப்பல் காரைநகரில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறை ஊடாக திருகோணமலைக்குப் போகும். மறந்தும் கப்பல் கரையை நெருங்காது. ஒவ்வொரு வாரமும் கப்பலுக்குப் பயணம் செய்ய முன்அனுமதி பெற வேண்டும். ஒரு வெளிநாட்டுப் பயணம் செய்வதற்கு நிகரான ஆயத்தங்களை அதற்குச் செய்ய வேண்டும். எனக்கும் அப்பா அம்மாவுக்கும் முதலில் பாதுகாப்பு அமைச்சு அனுமதி குடுக்க மாட்டம் என்று சொல்லிப் போட்டங்கள். புஸ்பவதி அக்காதான் மெல்ல நைசா சிங்களத்தில சிரிச்சுப் பேசி தன்னோட சேர்த்து எங்களுக்கும் ஒருமாதிரி அனுமதி வாங்கித் தந்தவா. அம்மா இந்த உதவிய காலா காலமாக இப்பயும் சொல்லித் திரியிறா.

லொட்ஜில மூன்று குளியலறையும் ஒரு குடிதண்ணீர் பைப்பும் இருந்தன. விடிய வெள்ளனவே எல்லோரும் வரிசை கட்டிவிடுவினும். அதுக்கு மட்டுமில்ல வெளிநாட்டுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கிறதுக்கும் இரவு பகலா ஒரே வரிசைதான். லொட்ஜ் முதலாளி நல்லா சம்பாதிச்சாலும் அநியாயம் சொல்லக்கூடாது; நல்ல மனுஷன். இரவு ஒன்பது மணிக்கு மேல எல்லோரும் ரூமுக்குள்ள முடங்கி விடுவினும். இரவில் வெளியில் திரிவது அவ்வளவு நல்லதில்லை. அப்பிடியான நேரங்கள்ல புஸ்பவதி அக்கா எங்கட ரூமுக்கு வந்து தங்குவா. அவாவோட தாய்மாமா பாரிசில் இருந்தார். எப்பிடியாவது அக்காவை பிரான்சுக்கு கூப்பிட வேணும் எண்டதுதான் அவரோட நோக்கம். 

அக்காவோட வயதில அவருக்கு ஒரு மகன் அங்கே இருந்தான். அக்கா பைப்பில் தண்ணி பிடிக்கப் போகும்போது நானும் கூடப் போவன். ஏனென்றால் லொட்ஜில நாலு பெரிய பெருச்சாளிகள் இருந்தன. அவை எப்போதும் ரூமுகளுக்கு வெளியாலதான் சுத்தித் திரியும். சனங்கள் வீசின மிஞ்சின சாப்பாடுகளைத் தின்று கொழுத்து பயங்கரமான சைசில் உலா வந்து கொண்டிருந்தன. இதுகளை ஒழிக்கிறதுக்கு முதலாளி ஒரு பூனை ஒன்று வாங்கி விட்டிருந்தார். ஆனால் முதல் நாளிலேயே பூனை இதுகளைப் பார்த்து பயந்து விட்டது. மற்றும்படி கிரமம் தவறாமல் எலிகள் இல்லாத நேரமாப் பார்த்து பூனை ரோந்து வந்து கொண்டிருக்கும். எலிகளுக்கு பயம் விட்டுப் போச்சு. நான் அக்கோவோட தண்ணி எடுக்க போகேக்க ஒரு நல்ல தும்புத்தடியும் கொண்டு பொடிக்காட் மாதிரிதான் போவன். நான் முயல் வேட்டைக்குப் போனது இப்படிப் பயன்படும் என்று ஒரு காலமும் நான் நினைத்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு கிழமைதான் அக்காவுக்கு நான் காவலாப் போனான். அடுத்த கிழமை அக்காவுக்கு காவலா எலிகளை விரட்டும் வேலைக்குப் பொறுப்பா பாலா அண்ணை நின்றிருந்தார்.  

ஒரு நவம்பர் மாதம் ஊர்காவற்றுறை சிவன் கோவிலில் புஸ்பவதி அக்காவுக்கும் பாலா அண்ணருக்கும் மிக எளிமையாக கல்யாணம் நடந்தது. அத்தோடு அக்காவின் பிரான்ஸ் பயணமும் கொழும்பு லொட்ஜ் வாசமும் முடிவுக்கு வந்தது.

பாலா அண்ணையைப் பற்றி நிறையச் சொல்லலாம். ஊர்ல முதன்முதலில் சவூதி போனது, மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் போனது, முதன்முதலில் மோட்டார் சைக்கிள் எடுத்தது, புத்தம்புது சவூதி ரேடியோ செட் அறிமுகம் செய்தது, ஸ்க்ரீன் போட்டு படம் காட்டினது, கடும் நெருக்கடியான காலத்தில கொழும்பில இருந்து நுவரெலியாக்கிழங்கு கொண்டு வந்து ஊர்ல எல்லோருக்கும் கொடுத்தது என்று அநேகமான ‘முதல்’ வேலைகள் ஊரில் பாலா அண்ணன்தான் செய்தவர். இதனால எங்களுக்கெல்லாம் பாலா அண்ணர் ஒரு ஹீரோ மாதிரியும் ட்ரெண்ட் செட்டராகவும் இருந்தார். இப்பவும் அவர் கொழும்புக்கு வந்தது வெளிநாடு போற அலுவலாக இல்லை. கொழும்பில் இருந்து வீடியோ செட், புது மொடல் TV, ரேடியோ, உருளைக்கிழங்கு, Fanta சோடா போன்றவற்றை கப்பல் மூலம் எடுத்துக் கொண்டு வந்து ஊர்ல நல்ல விலைக்குக் கொடுக்கத்தான். மாதம் ஒருமுறை திருகோணமலைக்கு செல்லும் கப்பலில் பாலா அண்ணைக்கு நிரந்தரமான இடமொன்று கட்டாயம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த வரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்போது இடையிலே வந்து சேர்ந்தார் சுரேஷ் அண்ணர். சுரேஷ் அண்ணரின் முக்கிய தொழிலே மினி சினிமா தியேட்டர் வைத்து நடத்துவதுதான். பொதுவாக சிறுத்தீவிலே காலம் மெதுவாக நகரும். கொழும்பில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்றது சில வாரங்கள் கழித்தான் சிறுதீவாருக்கு தெரிய வந்தது. அப்போது ஜனாதிபதியின் அலுவலகத்தில் முகம் பார்த்துப் பேசக்கூடிய தொலைபேசிக் கருவி இருக்கிறது என்று மாதமொரு முறை கொழும்புக்கு பயணம் செய்யும் கடைக்கார நாதன் வந்து சொல்லியிருந்தான். ஊரில் எல்லோரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்கள். ஊரில் நாதனுக்கு ஏற்கனவே புளுகன் நாதன் என்று பட்டப் பெயர். எனவே பலர் அவன் சொன்னதை நம்பவில்லை. ஆனால் திரைப்படங்கள் விடயத்தில் சிறுத்தீவில் மிக வேகமாக காலம் நகர்ந்து கொண்டிருந்தது. 

பிரசாந்த் நடித்து வெளிவந்த படம் ‘எங்க தம்பி’ வெளியான சில நாட்களில் சிறுத்தீவுக்கு வந்துவிட்டது. கப்பல் மூலம் தவறாமல் கொழும்பு சென்று வீடியோ கொப்பி கொண்டுவந்து போட்டுக் காட்டுறதில சுரேஷ் அண்ணர் விண்ணன். நேவிக்காரங்களையும் படம் பார்க்கக் கூப்பிடுவார். அவரது தகப்பன் கண்டியில் கடையில வேலைக்கு நிண்டவராம். சுரேஷ் அண்ணருக்கு சிங்களம் தண்ணி பட்ட பாடு. சாரத்தையும் வலு ஸ்டைலா கட்ட முடியும் எண்டு அவரிடம்தான் நான் கற்றுக் கொண்டேன். சில்க் சேட்டும், பற்றிக் டிசைன் போட்ட புதுச்சாரமும், நல்ல ஸ்டைலான செருப்பும், உயர்தரமான கூலிங்கிளாசும், பொன்னிற சங்கிலி போட்ட ரோலெஸ் வாட்ச்சும் அணிந்தபடி இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு சுரேஷ் அண்ணர் ஜெற்றியில (Jetty) நிக்கும்போது அந்த ஸ்டைலை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதுக்கு மயங்காத பெண்கள் பெண்களே இல்லை. ஆண்களுக்கோ பொறாமையும் எரிச்சலும் மாறி மாறி வரும். எனக்கு வளர்ந்து மினி தியேட்டர் ஒண்டு வைக்கவேணும் என்ற கனவை மனசுக்குள் சுரேஷ் அண்ணன் உருவாக்கியிருந்தார்.

இந்தக் கதையின் தலைப்பில் சொல்லிய மரகதக்கல் மூக்குத்திக்கும் சுரேஷ் அண்ணைக்கும்தான் தொடர்பு இருக்கிறது. மிக அழகான மரகதக்கல் பதித்த மூக்குத்தி ஒன்றை கொழும்பில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து சுரேஷ் அண்ணர் புஸ்பவதி அக்காவுக்கு கொடுத்தவராம். இந்த விவகாரம் அரசல் புரசலாக ஊர் வாயில் அகப்பட்டு விட ஒருநாள் பாலா அண்ணர் காதுக்கு வழமைபோல மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தது.

"எடியே எளிய ஓடுகாலி வேசை" என்று மூக்கில் பலமாகக் குத்தினார் பாலா அண்ணர். மீன்சந்தைக்குப் போன அக்காவை மீன்சந்தையில் இருந்து தலைமயிரில் பிடித்து நடத்தியே இழுத்துக் கொண்டு போனார் பாலா அண்ணை. ஒவ்வொரு நாளும் மூக்கில் குத்து விழுந்து கொண்டிருந்தது. புஸ்பவதி அக்காவுக்கு சாத்திரத்தில் நல்ல நம்பிக்கை. இவை எல்லாம் தனது ஜாதகத்தில் ராகு, கேது செய்யும் குழப்பம் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மட்டுமல்லாமல் கொழும்பு மட்டக்குளியில ஒரு பெண்ணோட பாலா அண்ணருக்கு தொடுப்பு இருக்கென்றும், அதை மறைக்கவே தன்னைப் பழி சொல்வதாகவும் புஸ்பவதி அக்கா ஒரேயடியாகச் சாதித்தார். 

நான் ஒருபோதும் ஊரவர் சொன்ன அந்த மூக்குத்தியைப் பார்த்ததில்லை. ஆனாலும் புஸ்பவதி அக்கா போன்ற, எப்போதும் வாழ்க்கையை அதன் போக்கிலேயே அணுகுகிற, டேக் இட் ஈஸி மனப்பான்மை கொண்ட ஒரு பெம்பிளையிடம் ராகு கேதுவின் வேலை பலிக்காது என்பதால் நிச்சயமாக அவர் சொன்ன அந்த இரண்டாவது காரணம் தான் சரி என்று பட்டது. பாலா அண்ணர் கொழும்புக்கு வந்தால் மட்டக்குளியில்தான் தங்கியிருக்கிறவர்.

ஒரு மார்கழி மாதம் நல்ல சுபமுகூர்த்த வேளையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றில் புஸ்பவதி அக்காவுக்கும் பாலா அண்ணைக்கும் விவாகரத்து சிறப்பாக நடந்து முடிந்தது.

அடுத்து வரும் காலங்கள் இதை வாசிப்பவர்களுக்கு முக்கியமான காலங்கள். யாழ்ப்பாணம் அப்போதுதான் எதோ புதிய உலகத்தை கண்டது போல அல்லோலகல்லோலப்பட்டது. நவீனத்துவம் கண்டுபிடித்த சில புதிய பொருட்களை அவர்கள் அப்போதுதான் சுவைக்கத் தொடங்கியிருந்தார்கள். மதுபான சாலைகளில் பள்ளிப் படிப்பை முடித்த சில இளைஞர்களும் கிழப்பருவம் எய்திவிட்ட சில முதியவர்களும் தங்கள் வாழ்வில் புதிதாக எதோ அனுபவிக்கக் கிடைத்ததுபோல மயங்கிக் கிடந்தார்கள். இளைஞர்கள் மத்தியில் இதைவிட எதோ ஒரு நல்ல உலகம் வெளியில் இருக்கிறது என்ற எண்ணம் தோன்றியிருந்தது. கம்யூனிகேஷன் வைத்து பிழைப்பதும், போட்டோ கொப்பி (Xerox) கடை வைப்பதும் யாழ்ப்பாணத்தாரின் முக்கிய தொழில்களாக மாறியிருந்தன. லண்டனிலும், பாரிஸிலும், கனடாவிலும் இரவு ஒன்பது மணி தாண்டும்போது ஏறக்குறைய எல்லா யாழ்ப்பாணத்தவர்களும் கம்யூனிகேஷன் கடைகளுக்கு முன்னால் தொலைபேசி எடுக்க தவம் கிடந்தார்கள். 

இலங்கையில் நடக்கும் எல்லா சம்பவங்களும் உடனுக்குடன் வெளிநாடுகளுக்கு நேரலை வழியாக சென்று  சேர்ந்து கொண்டிருந்தது. பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு எடுக்கும்படியும், செலவுக்குக் காசு அனுப்பும்படியும் மன்றாடினார்கள். ஒவ்வொரு கிழமையும் நிறைய படங்களை தாங்கியபடி வெளிநாட்டு ஏரோக்ராம் (Aerogram) அஞ்சல் உறைகள் வடபகுதிக்கு வந்து கொண்டிருந்தன. அவற்றின் உள்ளே பல்வேறு கோணங்களில் உறவினர்கள் வசந்த காலப் பூக்கள் மத்தியிலும், கொட்டும் பனிக்கு மத்தியிலும் காரின் முன்னால் புன்னகைத்துக் கொண்டு இருந்தார்கள். ஹலோ என்று கதைத்தால் கிலோவில் காசு வரும் என்பது அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபலமான வாசகமாக இருந்தது.

நானும் மினி சினிமா நடத்தும் ஆசைகளை மூட்டை கட்டிவிட்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானேன். அப்பாவின் சேமிப்புக் காசை செலவழித்துக் கொண்டு கொழும்பில் பம்பலப்பிட்டியில் ஒரு லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தேன். அந்த விடுதி முழுவதும் என்வயதை ஒத்த இளசுகள் வெளிநாடு போகத் தங்கியிருந்தார்கள். விடுதி எங்களாலும் ஏஜென்சிகளாலும் எப்போதும் நிரம்பி வழிந்தது. ஏஜென்ஸிமார் பெரிய நாட்டாமைகளாக விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தனர். அருகிலே வெள்ளவத்தையில் மூன்று நேர சாப்பாடு எடுத்துக் கொண்டு மிக அதிக நேரம் விடுதி அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். விடுதியில் இருக்கும் சிறுதீவு ஆட்கள் மூலமாக எனக்கு புஸ்பவதி அக்கா பற்றி அடிக்கடி கதைகள் வந்து கொண்டிருந்தன. பாலா அண்ணர் எங்கோ போய்விட்டாராம். சுரேஷ் அண்ணர் வன்னிக்குப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டதாம். எனவே அவரைப் பற்றி ஒருவருக்கும் ஒரு கதையும் தெரியவில்லை. புஸ்பவதி அக்கா மகனுடன் ஊரைவிட்டுப் போய்விட்டாராம். எங்கே போனார் என்பது எவருக்கும் தெரியவில்லை. வேறு கலியாணம் செய்து கொண்டார் என்றும் சிலர் பேசிக் கொண்டார்கள்.

வெளிநாடு போகும் எண்ணம் பிழைத்துப் போகவே கடைசி யுத்த காலகட்டத்தில் நான் இந்தியாவுக்குப் பயணமானேன். சென்னையில் ஈழத்தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் கியூ பிரிவு போலீசார் சிவில் உடையில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். எங்கு போனாலும் ஈழத் தமிழர்களை இந்தக் கண்காணிப்பு விடாது துரத்திக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்குப் பின் எங்கள் ஊர் ஆக்கள் நிறைய இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ராமேஸ்வரம் போனேன். அங்கேதான் மீண்டும் புஸ்பவதி அக்காவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அக்கா மிகவும் உருக்குலைந்து போயிருந்தார். என்றாலும் எப்போதும் கண்ணில் தெரியும் அந்தத் துறுதுறுப்பு மட்டும் குறையவேயில்லை. கடலுக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பழைய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். அந்தக் குறிச்சியில் எவரைக் கேட்டாலும் புஸ்பவதி அக்காவின் வீட்டை உடனே காட்டினார்கள். அரசாங்கம் மூலமும் சில உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மூலமும் அவ்வப்போது கொஞ்சம் உதவி கிடைப்பதுண்டு. வீட்டுக்கு உள்ளே சென்று நாற்காலியில் உட்கார்ந்ததும் யன்னலோரமாகக் கிடந்த பழைய சாய்வு நாற்காலியில் சோர்ந்து போய் படுத்திருந்தார் பாலா அண்ணர்.

சிறுத்தீவு முழுவதும் மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக சுற்றித் திரிந்த பாலா அண்ணனை இந்த நிலையில் பார்க்க எனக்குச் சற்றும் பொறுக்கவில்லை. 

 "ஏன் அக்கா அண்ணர் இப்பிடிப் பழுதாப் போனார்" எனது குரல் உண்மையில் உடைந்திருந்தது.

"கன காலமா இவர் கொஞ்சம் கஸ்ரப்பட்டுப் போனார்டா. எடுத்த பிசினஸ் எல்லாம் நட்டமாகப் போய்விட்டது. போதாக்குறைக்கு குடிக்கவும் தொடங்கீட்டார். கொழும்பில கொஞ்ச காலம் தொழில் செய்து பார்த்தார். அதுவும் சரி வரேல்ல. நான் இங்க வந்து கொஞ்ச காலத்தில படகில் வந்து சேர்ந்தவர். இவருக்கு கொஞ்சம் உடம்பில வியாதிகள் கூடிப் போட்டுதடா. இங்கேயுள்ள ஆஸ்பத்திரியில தான் காட்டிறனான். இப்போ சாப்பிட்டில கொஞ்சம் கட்டுப்பாடு வந்து ஓரளவுக்கு தேறியிருக்கிறார். ஒரு ஆறு மாசத்துக்கு முதல் பார்த்திருந்தால் தாங்கியே இருக்க மாட்டாய் "

உண்மையிலேயே அக்காவின் குரலில் கவலையும் பாசமும் ஒரு சேர இழைந்து வந்தன. மகனுக்கு பாரிசில் இருக்கிற பாலா அண்ணற்ற சொந்தக்காரப் பெட்டையை பேசி எழுத்து எழுதினவுடனே அனுப்பி வைச்சிட்டினமாம். அவன்தான் இப்போது இருந்திருந்திட்டு காசு கொஞ்சம் அனுப்பிறவனாம்.

அதன் பிறகு பல வருடங்கள் அக்காவை நான் பார்க்கவில்லை. பாலா அண்ணரும் புஸ்பவதி அக்காவும் அகதிகளை மீளத் திருப்பியனுப்பும் செயல்திட்டத்தின் கீழ் சிறுதீவுக்கே வந்திருந்தனர். பாலா அண்ணர் முன்னைப்போல இல்லை. குடியை நிறுத்தி விட்டார். பக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கும் ஊர்க்காவல்துறையில் உள்ள அவரின் கலியாணம் நடந்த சிவன் கோவிலுக்கும் அடிக்கடி அக்காவுடன் போய் வந்தார். மகன் பாரிசுக்கு வரும்படி இருவரையும் வருந்தி அழைத்தும் இருவரும் போகவில்லை. அவன்தான் இப்போது மாதாந்தம் காசு அனுப்பிக் கொண்டு இருக்கிறான். கொழும்புப் பயணங்களையும் வெளிநாட்டுப் பயணங்களையும் அறவே நிறுத்தி விட்டார். சிறுத்தீவு விட்டால் ஊர்க்காவல்துறை, ஊர்க்காவல்துறை விட்டால் சிறுத்தீவு என்று இருவரும் கதியாகக் கிடந்தனர்.

ஒரு மழைக் காலத்தின் இறுதிக் காலத்தில் மாலைப் பொழுதில் அக்காவின் கையால் பாலா அண்ணர் இஞ்சி தேத்தண்ணி வாங்கிக் குடித்தார். அப்போதுதான் மழை விட்டு வானம் வெளித்திருந்தது. அக்கா முட்டைக்கோழிகளை கூடைக்குள் அடைத்துவிட்டு வரும்போது அப்பிடியே சாய்மனைக் கதிரையில் சாய்ந்த படியே பாலா அண்ணர் மூச்சை நிறுத்தியிருந்தார். எப்போதும் வெளியூர்களுக்குப் பயணம் செய்து கொண்டேயிருக்கும் பாலா அண்ணர் அன்று சிறுதீவின் ஒரு பகுதியில் என்னலோரமாக கிடந்த சாய்மனைக் கதிரையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்த விடயம் எனக்குத் தெரிய வந்தபோது இரு வாரங்கள் கடந்திருந்தன. அக்கா வீட்டுக்கு நான் போயிருந்தபோது மாலையாகி விட்டிருந்தது. படலையை திறந்து நான் உள்ளே போனபோது அக்கா ஓடிவந்து கட்டிக் கொண்டார். "அவர் போய்ட்டாரடா தம்பி" என்று கதறி அழுத அக்காவைப் பார்க்க எனக்கு உண்மையில் பொறுக்கவில்லை. எப்போதும் துறுதுறு என்று இருக்கும் கண்கள் வீங்கி வற்றிப் போயிருந்தன. உடல் பெருமளவு இளைத்துப் போயிருந்தது. அவரின் பொது நிறம் இப்போது மேலும் குறைந்து கருமை படர்ந்து விட்டிருந்தது போல எனக்குப் பட்டது. 

உண்மையில் அக்கா நம்பிய ராகு கேதுவின் தோஷம் இப்போதுதான் அக்காவைப் பிடித்து உலுப்புகிறது என நான் எண்ணிக் கொண்டேன். அவரின் கண்களில் வரும் கண்ணீரையும், எப்போதும் சந்தோசத்தை மட்டுமே பிரதிபலித்துப் பழகியிருந்த முகத்தையும் இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. வாழ்வில் மகிழ்ச்சியை மட்டுமே எடுக்கத் தெரிந்த அபூர்வமான மனுஷி புஸ்பவதி அக்கா. எந்தத் துன்பமும் அவரை வாட்டியதில்லை. இப்போது இந்த நிலையில் அவரை எப்பிடி சமாதானப்படுத்துவது என்றே எனக்குப் புரியாமல் இருந்தது. சிறு வயது முதல் எனது உடன்பிறப்பு போலவே பழகி வந்த அவரை ஒருவாறு ஆறுதல்படுத்தி, அழுகையை நிறுத்தி, கண்ணீரைத் துடைத்து விட்டு நிமிர்ந்தேன்.

அப்போதுதான் கவனித்தேன். அக்காவின் முகத்திலே நட்சத்திர வடிவமான சிறிய பச்சை நிற மரகதக்கல் பதித்த அழகான மூக்குத்தி. கண்ணீரால் நனைந்த மரக்கதக் கல்லின் மீது மாலை வெயில் பட்டு மூக்குத்தி ஒளிர்ந்தது.

- அலைமகன்

Pin It