செத்து விட்டேன் என்று தான் தொங்கிக் கொண்டிருப்பது, நம்ப வைத்துக் கொண்டிருந்தது.

திக்கென்று பிடரியில் எதுவோ நினைவு தட்ட படக்கென்று கண்கள் விழிக்க தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது. ஆனால் உயிர் இருக்கிறது. சந்தேகம் கால்கள் உரசின.

ஒரு கணம் நேற்றிரவு நடந்ததெல்லாம் சிறுமூளைக்குள் இருந்து எட்டிப் பார்க்கிறது. கொட்டியும் பார்க்கிறது. யாரோ என்னை சுற்றி விடுவது போன்ற கற்பனையில் கண்களை மெல்ல கீழே கால்களுக்கிடையே இறக்க..... கீழே... தன் உடலைத் தானே சுற்றிக் கொண்டு அந்த பிசாசு பெருங் கவலைக்குள் தன்னை ஒப்புக் கொடுத்தது போல குத்த வைத்து அமர்ந்திருக்கிறது. மீண்டும் கத்த முயற்சிக்கையில் கழுத்தில் இறுக்காத அளவுக்கு கட்டப்பட்டிருந்த கயிறு இடைஞ்சல் செய்தது. கரகரவென கால்கள் உதற மீண்டும் அங்கும் இன்றும் அல்லாட.. மேலே மின்விசியில் கட்டப்பட்டிந்த கயிறு அறுந்து விலக நான் சரியாக அந்த பேயின் மடியிலேயே விழுந்தேன். பற்களற்ற அந்த முகத்தில் ஆயிரம் சுருக்கங்கள்.

சினிமாவில் தூக்கிட்டு தொங்குவது போல என் கழுத்தில் தூக்கு கயிறை கட்டியிருக்கிறது பேய்.....

"அவளோ சீக்கிரம் கொன்றுவேன்னு பார்த்தியா.... யுத்தா......." என்ற கத்தியது பேய்.

ஒலியின் குரூரம் புழுக்களாக என் மீது பீச்சி அடித்தது. நான் முகத்தை அனிச்சையாய்த் துடைத்துக் கொண்டே உருண்டு எழுந்து சுவரோராம் சரிந்து எழுந்து நடுங்கிக் கொண்டே நின்றேன்.

"யார்றூ நீ யார்...உ... இங்க எதுக்கு வன்த்திருக்க..." நான் பேச பேசவே என் கெண்டக் காலை தொட்டு முப்பது நகங்களாலும் பிராண்டியது. அடுத்த கணம் என் காலில் ஒரு வித பச்சை பூசணம் பூத்தது போல வழுவழுவென சொட்டியது. நான் வெற்றிடத்தை உதறிக் கொண்டே அந்த அறை முழுக்க "குணா கமலை"ப் போல சுற்றினேன். பேயும் எனக்கு எதிர் திசையில் சுற்றியது. மின்விசிறி சப்தத்தின் தங்கையாக தானாக சத்தமிட்டு சுற்றிக் கொண்டிருந்தது. வண்டின் இரைச்சல் அதற்குள் இருந்து வெளி வருதாகப் பட்டது.

"என்ன வேணும்...... என வேணும்... "மூச்சு வாங்கிக் கொண்டே....." என்ன வேணும் என்ன வேணும்.. உனக்கு....... யார் நீ.. எதுக்கு இப்டி பண்ற.... நான் என்ன பண்ணேன்.... ஏன்... இப்டி..... யார் நீ...."

பெருமூச்சும் எச்சிலும் வழிய நான் சுவற்றில் தலை மோத சுவரும் என் தலையில் மோத மெய்ம்மறந்து ஒரு கட்டத்தில் அறையில் பறக்கத் தொடங்கினேன். கீழே நடுவில் அமர்ந்து கொண்டு பொக்கை வாய் சிரிப்பில் கன்னத்தில் கை வைத்து கண்ணடித்து சிரித்தது பேய்.

"டபக்ஜ் தப்பிவக் எனபக்" என்று மண்டைக்குள் இடி.

அறை முழுக்க ஒற்றைக் கம்பியில் மாட்டிய சட்டையை போல நான் சுழன்று முகம் வீங்கி கீழே விழுகையில் என் கையில் குத்தி கிழிக்க பேனாவைக் சொருகியது பேய். எதுவும் முடியாத உடல் வலியில் நான் பேயின் மடியில் விழுந்தேன். மண்வாசனை அந்த பேயின் தொடைக்குள் இருந்து எழுந்தது. பச்சை வாசம் அதன் முலைகளில் கசிந்தது. பறவைகளின் கீச் கீச் குரல் அந்த பேயின் காதுக்குள் இரைந்ததை கேட்க முடிந்தது.

கோடாரி சத்தம்... சாக்கடை சத்தம்...... மலக்கிடங்கு கொப்பளிக்கும் சத்தம்...... சாயக்கழிவு சத்தம்... ... மணல் அள்ளும் லாரியின் சத்தம்.... மானுடக் கொலைகளின் சத்தம்... துப்பாக்கி வெடிக்கும் துரோக சத்தம்....... கத்தித் குத்து சத்தம்....... வன்புணர்வுக்கு ஆளான பெண்களின் கதறல் சத்தம்....... யாருக்கும் உதவாத அலைபேசி சத்தம்....... குழந்தைகளின் தொடைக்குள்ளிருந்து பீறிடும் அழுகை சத்தம் என்று அந்த பேயின் வாயில் இருந்து விழுந்த முனங்கல்கள் என்னை நிலை குலையச் செய்தன. என் காதுக்குள் என்னவெல்லாமோ குரல் கேட்கிறது. மரண ஓலங்களின் ஈனக்குரல்கள் என் காதுக்குள் எரியும் கம்பியென நுழைந்தன.

என் மூக்கில் ரத்த வாடை, குமட்டலை கொண்டாடி ஈக்களை உருவாக்கி என் மூளைக்குள் ஓட விட்டது. நான் தலையைப் பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஒரு கரப்பான் பூச்சியாக அலைந்தேன். தரையில் தலை குப்புற விழுந்து கதறினேன். அரட்டினேன். என் கைகளை நானே கடித்து கொண்டேன். அந்த பேய் என் கழுத்தைக் கடித்து ரத்தம் உரியத் தொடங்கியது. காதுக்குள் எதையோ துப்பியது. அது இனம் புரியாத வார்த்தைகளாக துண்டாடி துண்டாடி அலைந்தன.

கெஞ்சிக் கேட்டேன்..... குதறப்பட்ட அந்த பேயின் காலில் விழுந்து மனமார மண்டியிட்டு நடுங்கிக்கொண்டே கேட்டேன்.

"என்ன வேணும்... சாத்தானே.. சொல்லு..! என்ன வேணும்...? நான் சாகவா.. கொன்று விடு.. கொன்று விடு என்னை...." என்று கத்திக் கதறி... அந்த பேயின் கழுத்தை பிடித்து நெரித்தேன். அந்தப் பேய் சிரித்துக் கொண்டே எதையோ சொல்லி முனகியது. நான் பட்டென்று கையை கழுத்திலிருந்து விலக்கினேன்.

"எழுது..... எழுத்து...... இது...." என்று சொல்லி என் கையை பற்றி தரையில் உரசி....சதை தெரிய கிறுக்க வைத்தது.

கீழே கிடந்த காகிகம் தாண்டி தரைக்குள் நறநறக்கும் பேனாவில் குருதி சொட்டத் துவங்கியது. என் தலைக்கடியில் காகிதங்களால் ஆனா பூக்களின் முட்கள் என் தலையை சுற்றி முள்கிரீடம் பூத்திருந்தது.

"காகிதப்பூ" தொடரும்

- கவிஜி

Pin It