என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர் - திருக்குறள்

சேரமான் பெருஞ்சேரலாதன், பாண்டியன் மற்றும் ஒன்பது வேளிர் தலைவர்களுக்கும், சோழ மன்னன் கரிகால் சோழனிற்கும் நடந்த வெண்ணிப் போர் வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒரு முடிவிற்கு வந்தது. கரிகால் சோழன் இறுதியில் தன்னை எதிர்த்து நின்ற ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை முறியடித்து வெற்றி வாகை சூடினான். போரில் திருமாள் வளவன் எய்த நெடு வேல் சேரனின் மார்பைத் துளைத்து ஊடுருவிச் சென்று முதுகின் புறத்தே புண் செய்தது. இப்படிப் புண் செய்வது புறமுதுகிட்டு ஓடுதலிற்கிணையான வீரக் குறைபாடு என்று கருதிய சேரன் அப்போதே வடக்கிருந்து உயிர் நீக்கப்போவதாக அறிவித்தான். தன் உடைவாளின் கூர் முனை கழுத்தை நோக்கி இருக்குமாறு நட்டு விட்டு அன்னம் தண்ணீர் தவிர்த்து உண்ணா நோன்பிருக்க ஆரம்பித்தான்.

போர்க்களம் அமைதியானது. சோழனின் வெற்றிமுரசு முழங்கவில்லை. பாணர் யாழிசை கூட்டிப் பாடவில்லை. வீரர்கள் வெற்றியைக் கொண்டாடிக் கள் பருகவில்லை. ஊரிலுள்ள மக்கள் சுற்றத்தாருடன் தேறல் அருந்தவில்லை. உழவர்கள் வயல்வெளியிலும் குரவை ஓசை எழுப்பவில்லை. சோழ மக்கள் வெற்றித் திருவிழாவை கொண்டாக்கூட மறந்துவிட்டனர்.

போர் முடிந்து அரண்மனையை நோக்கி அணி வகுத்துச் செல்லும் போர் வீரர்களின் ஒரு பிரிவை தலைமைதாங்கி வழி நடத்திய அரவான் பாதை இரு மருங்கிலும் நின்று கொண்டிருந்த மக்களிடம் மௌனமாக தன்னிடம் இருக்கும் வேலினை உயரே உயர்த்திக் காட்டிக்கொண்டே நடந்தான். அவன் அணிந்திருந்த இடுப்புக் கச்சையின் திடமான மடிப்புகளில் இருக்கும் குஞ்சங்கள் அவன் நடையின் அதிர்வைத் தாங்கமுடியாமல் தடுமாறியது. அவனுக்கு முன்னே சென்ற சோழனின் வெற்றிக்குக் காரணமான யானைப் படைகள், பிளிர மறந்து மௌனமாக அணி வகுத்தது. அரவான் தன் இளம் மனைவியை விரைவில் பார்க்கப்போகிறோம் ஒரு புறம் மகிழ்ந்தாலும் மறுபுறம் போர்க் களத்தில் சுயேச்சையாக தான் எடுத்த முடிவை அவள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறாளோ என்று உள்ளூர மருகினான்..

கரிகாலன் போர் புரிவதை மிக அருகில் இருந்து பார்த்தவர்களுள் அரவானும் ஒருவன். மின்னலென வின்னில் இறங்கிய மன்னரின் வாள்வீச்சையும், இடியென தகர்ந்து தரையைப் பிளந்த கேடயத்தின் தொடர் இரைச்சலையும் கேட்டு அப்படியே பிரமித்து நின்றான். இதை எப்படியோ ஓரக்கண்ணால் கவனித்த சோழன் அரவானை சுய நினைவிற்குக் கொண்டு வர குரல் எழுப்பினான். என்ன ஒரு கம்பீரமான குரல் என்று வியந்த அரவான் சுய நினைவிற்கு வர மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்து போரிட்டான்.

குளிர், பனி என்று பாராமல் போர்க்களத்தில் புண்பட்ட மறவர்களை சோழன் நள்ளிரவானாலும் கண்துயிலாது ஆறுதல் படுத்துவதை கடமையாகக் கொண்டிருந்தான். அப்படியான ஒரு இரவில்தான் அரவானையும் சோழன் சந்தித்தான். அவன் தோள்களை தட்டிப் பாராட்டியவன் “போர் களத்தில் நடக்கவேண்டும். கனவில் அல்ல வீரா! ” என்று கூறி அந்த இடமே அதிரும் வண்ணம் சப்தமாகச் சிரித்தான். அரவான் ஒன்றும் கூறாமல் “மன்னருக்கே வெற்றி. மன்னருக்கே வெற்றி “ என்று வெறி கொண்டவன் போல கையை உயர்த்தி மற்ற மறவர்களையும் ஒருமித்து குரல் எழுப்பச் செய்தான். போரில் பெரும்புண்பட்டு வீழ்ந்த மறவர்களுக்கு மருத்துவம் செய்யும் போது அவர்களின் வேதனையை மறக்க விறலியர் ஆடிப்பாடுவது வழக்கம். புண்பட்ட ஒவ்வொரு வீரரையும் சந்தித்து ஆறுதல் கூறிய சோழன் தன்னைப் பின் தொடர்ந்து வந்த அரவானை திரும்பிப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான். அந்த ஒரு நொடியில் அரவானின் மனதில் பெரும் வெளிச்சமெனத் தோன்றிய தீர்மானத்தை துளியும் அறியாதவனாயிருந்தான் சோழன் அப்போது.

அரவான் வருவதை கதவிடுக்கின் வழியாகப் பார்த்த முல்லை வேகமாக சாலைக்கு ஓடி வந்தாள். அவனை வரவேற்க சுற்றங்கள் இரவில் இருந்தே காத்துக்கொண்டிருந்தார்கள். மதர்த்து திமிறிய தோள்கள். அகன்ற விழி. தெறித்துச் சிவந்த கூறிய நாசி. சிறிய புன் முறுவலுடன் மீசையை முறுக்கிக்கொண்டே அரவான் முல்லையைத் தொடர்ந்து ஓரக் கண்ணால் யாரும் அறியாவண்ணம் உற்று பார்த்துக்கொண்டேயிருந்தான். முதலில் நாணித் தலை குனிந்தவள் வாசல் திண்ணையில் வைத்திருந்த நிறை கும்பத்தை எடுத்து அவனை வரவேற்றாள். தன்னைக் காண வந்திருந்த ஊர்ப்பெரியவர்களை அனைவரையும் வணங்கி நன்றி தெரிவித்தான் அரவான். பிறகு வீட்டினுள் நுழைந்தான். தன் தலையில் அணிந்திருந்த மகரந்தங்கள் உதிர்ந்த வாகை மலரை எடுத்து முல்லையின் நெற்றி, விழிகள், நாசி, இதழ்கள், சங்குக்கழுத்து வழியாக அப்படியே தீண்டிக் கொண்டு வர தன்னிலை மறந்த முல்லை அவனை வெட்கத்துடன் நெஞ்சோடு நெஞ்சாக இறுக அணைத்துக் கொண்டாள்.

இரவு முல்லையிடம் போர்க்களத்தில் தான் நேரில் கண்ட சோழனின் வீரத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தான் அரவான். “முல்லை நம் மன்னரின் வெற்றிக்காக நீ என்ன கொடுப்பாய்?” இந்தக் கேள்வியின் ஆழத்தை அந்த அளவிற்குப் புரிந்துகொள்ள முடியாத முல்லை அவனையே மிரண்டபடி பார்த்தாள். மறுபடியும் அதே கேள்வியை வெறு விதமாகக் கேட்டான். “முல்லை, நம் மன்னரின் வெற்றிக்காக நீ என்னை கொடுப்பாயா?” கேள்வியை தனக்குள் ஒரு முறை கேட்டுக்கொண்டவள் “நம் மன்னரின் வெற்றிக்கு உங்களை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேனே, பிறகென்ன?” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள். முல்லையை மேலும் தெளிவுபடுத்த தயக்கத்துடன் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து மெதுவாகப் பேசினான் அரவான். “முல்லை நான் கூறுவதை மிகவும் கவனமாகக் கேள். எந்த சந்தர்ப்பத்திலும் உணர்ச்சிவயப்படமாட்டேன் என்று நீ வாக்களித்தால் மட்டுமே நான் இதைக் கூறுவேன்” என்றான். அரவானின் கைகளை இறுகப் பற்றி தன் சம்மதத்தை தெரிவித்தாள் முல்லை. “தனி ஒரு நாடாக நின்று பாண்டியரையும், சேரனையும், ஒன்பது வேளிர் தலைவர்களையும் போரில் முறியடித்து வெற்றி பெற்ற நம் மன்னருக்கு நாம் ஏதாவது பரிசு அளிக்க வேண்டாமா? நான் ஒரு வேளை கவிஞனாயிருந்தால் மன்னரின் போர்த் திறமையை வர்ணித்து ஒரு நெடிய போர்ப்பரணியே பாடியிருப்பேன். மன்னர் வெற்றி பெற போர்க்களத்திலேயே நான் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன் முல்லை” என்றான். சிறிது நேர இடைவேளிக்குப் பிறகு அரவான் தொடர்ந்தான். “அரசரின் வெற்றிக்கு கொற்றவையிடம் வேண்டி நவகண்டம் ஏற்க தீர்மானித்துவிட்டேன்”, இதைக் கேட்டு அதிர்ந்த முல்லை அவன் மேல் மூர்ச்சையுற்றுச் சரிய, அவளை அப்படியே அள்ளிப் படுக்கையில் கிடத்தினான்.

நவகண்டம் என்பது தனது நாட்டு அரசன் போரில் வெற்றி பெற்றால் தான் தன் உயிரையே பலியிடுவதாக வேண்டிக்கொள்வார்கள். அவ்வாறு அரசன் வெற்றி பெற்றவுடன் வேண்டுதலை நிறைவேற்ற உடம்பில் கை, கால் என 9 இடங்களில் வெட்டிக்கொண்டு, முடிவில் கழுத்தில் கத்தியால் வெட்டி தங்களது உயிரை பலி கொடுப்பார்கள்.

மீண்டும் அவள் கண் விழிக்க அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தத்தைப் பதித்தான். படுக்கையின் தலைமாட்டில் இருந்து நறுமணப் புகை அறை முழுவதும் வெண் மேகம் போல் பரவ அரவாணின் மார்பு ஒரு முறை விம்மி அடங்கியது. சிவந்த கண்களுடன் காலையில் எழுந்தவள் கலைந்த உடைகளை நேர் செய்து கூந்தல் கோதி அறையிலிருந்து வேளியேறினாள்.

அடுத்த நாள் ஊர்ப் பெரியவர்கள் அரவானைக் காண வந்திருந்தார்கள். அனைவரிடமும் அரவான் தன் முடிவை பணிவுடன் தெரிவித்தான். அன்றிலிருந்து தினம் ஒரு குடும்பமென அரவானுக்கு மிகவும் பிடித்த உணவினை சமைத்துக் கொண்டு வந்தார்கள். விழாவிற்காகக் கொற்றவையின் கோயிலை மீள் புணரமைத்தார்கள். நீண்ட சடைமுடியுடன், புலித்தோல் ஆடையுடன், புலிப்பல் தாலியுடன், முறுக்கிய கொம்புகளையுடைய கலைமான் மேல் அமர்ந்து கையில் வில்லுடன் அனைவருக்கும் அருள் பாலித்துக்கொண்டிருந்தாள் கொற்றவை. விழாவின் தொடக்கத்தில் வண்ணக் குழம்பு, சுண்ணப்பொடி, மணமுள்ள சந்தனம், எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, நறுமணப் புகை தூபம் தாங்கி பெண்கள் ஊர்வலத்தில் வர, உடன் வருபவர்கள் பறையடித்து மக்களை உற்சாகப்படுத்திக் கொண்டே வந்தார்கள். சோழ நாட்டில் அரவான் தன்னை நவகண்டம் ஏற்க தயாராயிருந்த அதே சமயம் சேர நாட்டில் வடக்கிருந்து உயிர் துறக்கும் வரை உண்ணா நோன்பு ஏற்ற மன்னனைக் காண கண்ணீருடன் தொடர்ந்து மக்கள் திரண்டு வந்து கொண்டிருந்தார்கள். அரண்மனை வைத்தியரிடம் தலைமைச் சேனாதிபதி “மன்னரின் தற்போதைய நிலை எப்படியுள்ளது” என்று கேட்க “மன்னர் தன் சுய நினைவை வேகமாக இழக்க ஆரம்பித்து விட்டார்” என்று உதிரம் படிந்த மன்னரின் கழுத்தை காண்பித்தார். மூர்ச்சையுற்ற மன்னனின் தலை சற்றே சரிந்து நிலை தடுமாற தரையில் நட்டிருந்த வாளின் நுனி மன்னரின் கழுத்தை அறுத்து ரணமாக்கியது.

பக்தியுடன் அரவானை அழைத்து கொற்றவைக் கோயிலிற்கு அழைத்து வந்தார்கள். இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலம் பூண்டு இருந்தான் அரவான். கோயிலின் முன்புறம் இருக்கும் திடலில் அவனை அமர வைத்தார்கள். திருமஞ்சனமாடுவித்து, திரு நீற்றுக் காப்புமிட்டு, புது ஆடையுடுத்தி, ஆபரணங்கள் பூட்டி அலங்கரித்து, பரிமள கஸ்தூரிகள் பூசி, வீர சந்தனம் இடுவித்து, பாக்கு வெற்றிலையை அவன் கையில் கொடுத்தார்கள். வாசனைத் திரவியங்கள் கலந்த நீரினால் முல்லை அவன் பாதங்களைக் கழுவினாள். கை நிறைய சந்தனம் எடுத்து அவன் பாதத்தில் பூசி, நெற்றியில் திலகம் இட்டாள். எதற்கும் கலங்காமல் வாளுடன் அமர்ந்திருந்த அரவானை கடைசியாகப் பார்த்தாள் முல்லை. கொற்றவையைப் பார்த்தபடி முழங்காலிட்டு நின்ற அரவான் தன் கற்றைத் தலைமுடியை இடது கையால் இறுகப்பிடித்து மேலே உயர்த்தி வலது கையில் இருக்கும் வாளினால் கழுத்தை அறுத்துக் கொண்டான். வீரக் கொம்பு, வீர மல்லாரி, வலம்புரி சங்கின் ஒலியுடன் பறை ஒலியும் பெண்களின் குரவை ஒலியும் சேர அரவான் பூவுலகம் சென்றான். மக்கள் அனைவரும் அரவானை மனதார வாழ்த்தி வழி அனுப்பினார்கள். சிரசற்ற உடல் தரையில் சரிய அதை அப்படியே முல்லை வாரிச் சேற்று அணைத்துக் கொண்டாள்.

பாலில் ஊரவைத்திருந்த வீரக்கல்லில் அரவானின் உருவத்தை பொறித்து அவன் இறந்த இடமான கொற்றவைக் கோயிலின் முன் இருக்கும் திடலில் நட்டு, மாலை சூட்டி, பூச்சொரிந்து, சந்தனம் குங்குமம் சாற்றி, வீரக்கல்லைச் சுற்றி மயிற்பீலியால் அலங்கரித்து வந்திருந்த அனைவரும் காப்பு நூல் கட்டிக்கொண்டார்கள். துடி என்னும் பறையை முழக்கி, நெல்லிலிருந்து தயாரித்த தோப்பி என்னும் கள் வைத்து, செம்மறியாட்டைப் பலிகொடுத்து படையல் போட்டார்கள். வீரக்கல்லைச் சுற்றி வில், வேல், வாளால் வேலி அமைத்தார்கள். அந்த இடத்திலேயே முல்லை தன் அணிகலன்களையும் கூந்தலையும் களைந்து வழித்த தலையுடன் கைம்மை நோன்பு ஏற்றாள்.

ஒரு இளைஞன் மன்னனைப் பார்க்க நீண்ட நேரம் காத்திருப்பதாக தலைமைக்காவலாளி பணிவுடன் மன்னரிடம் கூற, அவனைப் பார்க்க கரிகாலன் அனுமதி கொடுத்தான். “மன்னருக்கே வெற்றி, மன்னருக்கே வெற்றி” என்று உரத்துக் குரலெழுப்பிக் கொண்டே அந்த வீரன் மன்னரை நோக்கி வந்தான். தான் போரில் வெற்றி பெற நவகண்டம் ஏற்று உயிர் துறந்த அரவானின் குரல்தான் அது என்று அறிந்த மன்னன் அந்த இளைஞனை ஆவலுடன் நெருங்க, அறை முழுவதும் பரவிய நறுமணப் புகையின் மெல்லிய காலை பனியொத்த மூட்டத்தில் கரிகாலனின் பார்வையிலிருந்து அரவான் மெல்ல மெல்ல மறைந்து கொண்டே போனான்.

- பிரேம பிரபா

Pin It