பாரதியின் புகைப்படங்களை நீங்கள் கவனமாகப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றில் ஓன்றிலாவது அவள் புன்னகைத்திருந்தாளா? இல்லைதானே. அவளைப் புகைப்படம் பிடித்த யாருமே அந்நேரங்களில் அவள் புன்னகைத்துக் கொண்டிருந்தாளா என்பதை கவனிக்கவில்லை போலிருக்கிறது. அப்படி கவனித்திருந்தால் அவளைப் புன்னகைக்கும்படி  சொல்லியிருக்கக் கூடும். ஒருவேளை அவர்கள் சொல்லியிருந்தும் அவள் புன்னகைக்காமல் இருந்திருக்கலாம் தான்.

இதைக் குறித்து நானொரு தரம் அவளிடம் விசாரித்தேன்.

lady 330மனம் என்பதின் மலர்ச்சிதானே புன்னகை. வெம்பிக் கிடக்கும் மனத்திலிருந்து எப்படி புன்னகை என்பது மலரும்?  இதைத்தான் அவள் எனக்குப் பதிலாய் உரைத்தாள்.  அது எப்படி ஒரு முப்பத்தைந்து வயது பெண்ணால் ஒரு தரம் கூட புன்னகைக்காமலேயே இருக்க முடிந்தது என்ற கேள்வியை நான் அவளிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நான் அவளின் மனம் வெம்பிக் கிடந்ததின் காரணங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டேன். இரண்டும் ஒன்றுதான் என்பதை பாரதி புரிந்து கொண்டாள்.  அவள் பதிலாய் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள்.

நீ சிறுவயதில் கிளி ஜோசியம் கேட்டிருக்கிறாயா…. ??

எனக்கு ஜோசியத்திலெல்லாம் நம்பிக்கையில்லை என்றேன்.

இது நம்பிக்கையைப் பற்றியதான கேள்வியில்லை. அந்தக் கிளியைப் பற்றிய கேள்வி. கேட்டிருக்கிறாயா? தன் அலகால் பத்து அல்லது பன்னிரண்டு அட்டைகளை அவற்றின் அடுக்கிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்து கீழே போட்டு பின் ஒரேயொரு அட்டையை மட்டும் ஜோசியக்காரனின் கையில் கொடுக்கப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கும், சிறகு வெட்டப்பட்ட அந்த கிளி. அப்போது கிடைக்கும் ஒன்றிரண்டு நெல்மணிகளை மட்டுமே தின்று, வெட்டப்பட்ட தன் சிறகுகள் முளைக்குமென்ற நம்பிக்கையில் தன் உயிரைக் காத்துக் கொண்டிருக்கும். கொறித்து கொறித்து வளர்த்தெடுத்த சிறகுகளை கத்திரிக்கோலால் மீண்டும் மீண்டும் வெட்டிக் கொண்டிருப்பான் ஜோசியக்காரன். அந்தக் கிளியைப் புன்னகைக்கச் சொல்ல முடியுமா உன்னால்?

இறக்கைகள் வெட்டப்படாத கிளி கூட புன்னகைப்பதில்லை பாரதி

கிளிகள் சிரிப்பதில்லை என்று யார் சொன்னது உனக்கு. ஆலங்கிளைகளில் ஊஞ்சலாடும் கிளிகளை நீ பார்த்ததில்லை போலிருக்கிறது. அக்கிளிகளின் பேச்சை மரத்தினடியிலமர்ந்து கேட்டுப் பார். அப்போது அவைகள் சிரிப்பதை நீ கேட்கலாம். கிளிகள் மட்டுமில்லை. அம்மரத்தில் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருக்கும் அணிற்பிள்ளை கூட அவ்வளவு அழகாக சிரிக்கும். இப்போது அந்த ஜோசியக்காரனின் கிளிக்கு வருவோம். நான் அந்த ஜோசியக்காரனிடம் அடிக்கடி ஜோசியம் பார்த்துக் கொள்வேன். ஒவ்வொரு முறையும் இரண்டிரண்டு நெல் மணிகள் கிளிக்குத் தருவானல்லவா. அதற்காகவே மீண்டும் மீண்டும் போவேன். ஒரு நாள் அவன் கூண்டைத் தூக்கிக் கொண்டு போகும் அத்தனை தெருக்களுக்கும் போனேன். ஒவ்வொரு தெருவிலும் நான் அவனிடம் கிளி ஜோசியம் கேட்டேன். ஜோசியமா முக்கியம். கூண்டை விட்டு கிளி வெளியே வருவது தான் முக்கியம். ஒவ்வொரு முறை கிளி வெளியே வரும் பொழுதும் அதனைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட நினைத்தேன். ஆனால் கடைசி வரை என்னால் அது முடியாமலே போயிற்று.

அது கூட பரவாயில்லை.

ஒரு நாள் சாயங்கால வேளையில் அந்த ஜோசியக்காரன் எல்லோருக்கும் ஜோசியம் பார்த்து முடித்து விட்டு தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அது தெரிந்த நான் அவன் பின்னாலேயே அவன் வீடு வரை சென்றுவிட்டேன். அங்கேயாவது அதை விடுதலை செய்ய முடியுமா என்று தான் நான் அங்கே போனேன். அங்கே என்ன நடந்தது தெரியுமா? அந்தக் கிளிக் கூண்டுக்குக் காவலாய் அவன் ஒரு பூனையை வளர்த்து வருகிறான். அந்தப் பூனை கூண்டின் வாசலுக்கு அருகில் படுத்துக் கொண்டு கிளி கூண்டின் கதவுக்குப் பக்கத்தில் வரும் ஒவ்வொரு முறையும் தன் காலில் உள்ள நகங்களால் கிளியைக் கீற முயன்று கொண்டிருந்தது. அந்தப் பூனையின் நகங்களை நீ பார்க்கவில்லையே. அப்படி ஒரு கூர்மை. நம் விரலில் பட்டால் கூட விரல் தோலைக் கிழித்துவிடக் கூடிய அளவில் கூராக இருந்தன. ஹா. என்ன ஒரு குரூரம். தன்னைக் கூரான நகங்களாலும் பற்களாலும் கிழித்துக் கடித்துத் தின்றுவிடக் காத்திருக்கும் ஒரு பூனை படுத்திருக்கும் கூண்டுக் கதவுக்குப் பக்கத்தில் எப்படி வரும் அந்தக் கிளி. கூண்டின் மறு ஓரத்திலேயே ஒண்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தது அது. காலும் கையும் திடகாத்திரமாய் இருந்த ஒரு பத்து வயது சிறுமியாலேயே அந்தக் கொடிய பூனையின் அருகில் போக முடியாத போது இறக்கையில்லாத அந்த சின்ன கிளி எப்படி வரும். இப்படித் தான் அந்தக் கிளியை என்னால் காப்பாற்ற முடியாமலேயே போய்விட்டது. ஒரு கிளியைக் கூட அதன் கூண்டிலிருந்து காப்பாற்ற முடியவில்லை என்கிற போது நான் எப்படி புன்னகைக்க?

அந்தக் கிளிதான் காரணமா நீ இன்று வரை புகைப்படங்களில் கூட புன்னகைக்காமல்  இருப்பதற்கு?

இல்லை அது ஒரு ஆரம்பந்தான்.  உனக்குப் பிடித்தமான நண்பனொருவனை வெட்டிக் கொன்றபோது நீ அருகில் இருந்து காப்பாற்ற முடியாமல் தவித்திருக்கிறாயா..? எனக்கு அந்த அனுபவமுண்டு. அதை நான் சொல்கிறேன் கேள்.

எங்கள் வீட்டில் பெரியதொரு தோட்டம் இருந்தது என்று சொன்னால் உன்னால் நம்ப முடியுமா? முடியாதில்லையா. ஆமாம். அப்போது பெரிய தோட்டமொன்று இருந்தது இந்த வீட்டின் பின்னால். அதில் ஒரு தென்னை மரமும் பூவரசு மரமும் கிணறு ஒன்றும் இருந்தது. அவற்றில் பூவரசு மரம் இருக்கிறதே அது தான் என்னுடைய அந்நாளைய உற்ற தோழன். ஆம். அது என்னுடைய தோழன் தான். தோழியில்லை. அத்தனை ஆறுதலாய் இருப்பான். என் பள்ளித் தோழிகள் மாதிரி அவனுக்குப் பொறாமைகள் கிடையாது. அவன் என்னைப் பற்றி பிறரிடம் அவன் கோள் மூட்டுவதில்லை. அதைவிட அவன் நான் என்ன சொன்னாலும் தன் இலை கிளைகளை ஆட்டி இரசித்தபடி கேட்டுக் கொண்டிருப்பான். அவன் நல்ல மன நிலையில் இருந்தால் சில சமயம் பதில் கூட  கூறுவான்.

மரம் பதில் சொல்லுமா பாரதி? நிசமாகத்தான் சொல்கிறாயா..?

ஆமாம். அவன் சொல்லும் பதில் நீயோ நானோ பதில் சொல்லுவது போல இருக்காது. அவனுக்கு நான் சொல்வது சரியென்று பட்டால் அல்லது அவனுக்குப் பிடித்திருந்தால் பூ ஒன்றை நேராய் என் மடி மீதே உதிர்த்துச் சிரிப்பான்.  பிடிக்கவில்லையெனில் காய்ந்த இலையொன்றை என் மேல் வீசுவான். காய்ந்த இலை இல்லையென்றால் ஒரு காயை என் தலை மேலேயே பொத்தென்று போட்டுவிடுவான். எப்படி வலிக்கும் தெரியுமா அது. என் பேச்சில் மிகவும் மகிழ்ந்து போய் விட்டானெனில் கை கால்களை பரபரவென வீசி மகிழ்வான்.

சரி அந்த பூவரசிற்கும் உன் புன்னகைக்கும் என்ன சம்பந்தம் பாரதி?

இருக்கிறது. அந்த பூவரசு என்னிடம் மட்டும் தோழமையாய் இருப்பது வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. அதுவும் அது ஒரு ஆணாய் இருப்பது யாருக்குமே பிடிக்கவேயில்லை. ஒரு பதின் வயது பெண் தன்னை விட மூத்த மிகவும் மூத்த ஆணுடன் தோழமையாய் இருப்பது யாருக்குப் பொறுக்கும்? அதனால் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ஹாஸ்டலில் தங்கிப் படிக்க என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்கள். அதுதான் அவர்கள் எனக்குத் தந்ததொரு மீப்பெரும் தண்டனை. அந்த இரவில் நான் எப்படி அழுதேன் தெரியுமா? எப்போதும் இரவெல்லாம் நான் தூங்கும் பொழுது தன் அசைவுகளில் சத்தமிட்டு தாலாட்டுவான் என் பூவரசு. அவனுடைய தாலாட்டுச் சத்தமில்லாமல் எத்தனை நாள் நான் உறங்காமல் இருந்திருக்கிறேன் தெரியுமா? உற்ற தோழனை அதுவும் ஒரேயொரு தோழனை இழந்தவள் எப்படி புன்னகைப்பாள்? நீயே சொல்.

படித்து முடித்து வந்தபின் அந்த நட்பைத் தொடர்ந்திருக்கலாமே.

நான் என் படிப்பை முடித்து வருவதற்கு முன்னர் தான் அவர்கள் தோட்டத்தையே இல்லாமல் செய்து விட்டார்களே. இப்போது அந்த பூவரசு மரம் இருந்த இடத்தில்தான் என்னுடைய இந்த அறை இருக்கிறது, உனக்குத் தெரியுமா? அந்த பூவரசை வெட்டித் தள்ளிய அந்த நாளில் நல்லவேளையாய் நான் வீட்டில் இல்லை. கல்லூரி ஹாஸ்டலில் இருந்தேன்.  தினமும் இரவெல்லாம் என் அறையில் அவன் அழும் சத்தம் கேட்கும். என்னை வெட்டும்படி இங்கே தனியாய் விட்டுவிட்டு நீ பாட்டுக்கு உன் படிப்பே முக்கியமென்று போய்விட்டாயே என்று என்னைப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது தெரியுமா. தினந்தோறும் நண்பனின் அழுகுரல் உன் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் போது நீ எப்படி புன்னகைப்பாய்?

கிளி, பூவரச மரமெல்லாம் ஒரு காரணமா பாரதி..?

ஏனிருக்க முடியாது? இப்போது உனக்குப் பிடித்த, நீ மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்புப் பலகாரத்தை நினைத்துக் கொள். உனக்கு இனிக்கிறதா இப்போது? பலகாரம் தானே இனிக்க வேண்டும். பலகாரத்தின் நினைவுகள் எப்படி இனிக்க முடியும்? ஆனாலும் இனிக்கிறது தானே. அது போலத் தான் இதுவும். கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு கிளியின் வலியை உணர்ந்து கொள்ள நீ ஒரு கூண்டுக் கிளியாய் தான் இருக்க வேண்டுமென்று ஒரு அவசியமும் இல்லை. அதுபோல மரஞ்செடி கொடிகளோடு நட்பு பாராட்டவும் மரஞ்செடியாய் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. சரி. உனக்குப் பிடித்த மாதிரியே இன்னுமொரு விசயத்தினைச் சொல்கிறேன் கேள்.

கங்கம்மாவைத் தெரியுமல்லவா உனக்கு. ஆம். அவள்தான். அப்படிச் சொல்லாதே. மிட்டாய்க் கடைக்காரரின் தங்கை என்று சொல். அவள் அப்படி இருப்பதற்கு அவள் எப்படி பொறுப்பாவாள்? பிறக்கும் பொழுதே  அப்படியே அவள் பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே பிறந்திருந்தால் கூட அவளை இப்படிக் கவனிக்காமல் விட்டுவிடுதல் சரியா? கவனிக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. அவள் இப்படி இருப்பதால் தான் மிட்டாய்க் கடைக்காரர் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாராம். அது கூட நல்ல விசயம் தான். ஒரு பக்கம் உடல் நிலை சரியில்லாத வயதான அம்மா. மறுபக்கம் மனநிலை சரியில்லாத தங்கை. அவரும் என்னதான் செய்வார்? நல்லவேளை அவர் பார்ப்பதும் சமையல் சம்பந்தப்பட்ட தொழிலாக இருப்பதினால் வீட்டில் இருவருக்கும் சமைத்து வைத்துவிட்டு கடைக்குப் போகிறார்.

சரி நாம் கங்கம்மாவுக்கு வருவோம். நீ அவளிடம் பேசியிருக்கிறாயா, இல்லையா? ஒருதரம் பேசிப் பார். அவ்வளவு இனிமையாய் பேசுவாள். ஜோசியக்காரனின் கிளி ஒருவேளை பேசும் கிளியாய் இருந்தால் அது எவ்வளவு இனிமையாய் பேசியிருக்குமோ அவ்வளவு இனிமையாய் அவளது குரல் இருக்கும். அந்த கிளியும் கங்கம்மாவும் ஒருவிதத்தில் ஒன்றுதான்.  அந்தக் கிளிக்கு எப்படி சிறகுகள் இல்லையோ அது போலத்தான் கங்கம்மாவுக்கும் புத்தி சுவாதீனம் இல்லை. என்ன ஒன்று இவளுக்கு ஒரு கூண்டோ அல்லது அந்தக் கூண்டுக்குக் காவலாய் ஒரு பூனையோ இல்லை. இருந்திருந்தால் கூட நல்லது தான்.

என்ன பாரதி? ஏன் கங்கம்மாவுக்கு கூண்டு வேண்டுமென்கிறாய். அவளைப் பூட்டி வைப்பது தான் நல்லது என்று சொல்லுகிறாயா?

இல்லை நான் அப்படி அர்த்தத்தில் சொல்லவில்லை. அவளுக்கு என்ன நடந்ததென்று  கேள். நான் எதற்காக அப்படிச் சொன்னேன்று உனக்குப் புரியும். கங்கம்மாவுக்கு சாக்லேட்டுகள் என்றால் மிகவும் பிரியம். நான் ஹாஸ்டலிலிருந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம் வாங்கி வந்து கொடுத்திருக்கிறேன். அதனாலேயே அவள் என்னைப் பார்க்கும் போதிலெல்லாம் சாக்லேட்டுகள் கேட்பாள். யாருக்குத்தான் சாக்லேட்டுகள் பிடிப்பதில்லை. ஆனால் அந்த சாக்லேட்டுகளே அவளுக்கு வினையாகிவிட்டது.

ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு விடலைப் பையன், அவன் யாரா? யாராய் இருந்தால் தான் என்ன, அவன் பெயரெதற்கு உனக்கு,  சாக்லேட்டுகளைக் காண்பித்து அவளை இதோ இரண்டு வீடுகள் தள்ளி ஒரு புதிதாய் வீடொன்று இருக்கிறதல்லவா, அது அப்போது பழைய இடிந்த ஆளில்லாத வீடாய் இருந்தது, அந்த வீட்டினுள் அழைத்துக் கொண்டு போய்விட்டான். ஆமாம். உச்சுக் கொட்டாதே. உனக்கு கோபம் பீறிட்டு வந்திருக்க வேண்டும். கங்கம்மாவோ அந்த ஜோஸியக்காரனின் கிளியைப் போல தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாய் அதன் அடுக்கிலிருந்து அவிழ்த்துப் போட்டிருக்கிறாள். கிளி தேர்ந்தெடுத்த கடைசி  அட்டையை ஜோஸியக்காரன் கையில் கொடுத்து விடுவது போல அவளையே அவன் கையில் கொடுக்கச் சொல்லியிருக்கிறான் படுபாதகப் பயல். இவள் சாக்லேட்டுக்காக சத்தமிட்டு அழத் தொடங்கினாள். அப்போது தான் நான் அந்த வீட்டைத் தாண்டி நடந்து கொண்டிருந்தேன்.

கங்கம்மாவின் சத்தமாய் இருக்கிறதே, அதுவும் இந்த இடிந்த வீட்டினுள் என்று ஒரு நிமிடம் நின்றவள், கங்கம்மமா கங்கம்மா என்று அவள் பெயரைச் சொல்லி கூப்பிட்டவாறே நான் அந்த வீட்டிற்குள்ளே போனேன். என் குரல் கேட்டதும் அந்தப் பையன் கங்கம்மாவை அப்படியே விட்டுவிட்டு என்னைத் தாண்டி வாசல் வழியே ஓடிவிட்டான். நான் உள்ளே சென்று அவளைப் பார்த்ததும் தான் நடந்தவற்றை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. என் உடம்பெல்லாம் உதறிப் போய்விட்டது. அழுது கொண்டிருந்த கங்கம்மாவைச் சமாதானம் செய்து அவளுக்கு உடைகளை அணிவித்து அவளை அழைத்துக் கொண்டு போய் அவள் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். அப்போது அவள் வீட்டில் உடல்நிலை சரியில்லாத அவளம்மா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஏன் அந்த விசயத்தைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

அன்றிரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. யாரிடம் இதைப் பற்றி என்ன சொல்ல என்று தெரியவில்லை. என்னுடைய தோழனான பூவரசு மரம் இருந்திருந்தாலாவது அவனிடம் நான் இப்போது என்ன செய்ய வேண்டுமென்று கேட்டிருந்திருப்பேன். அன்று எனக்கு வழிகாட்ட யாருமே இல்லாத மாதிரி ஒரு தனிமையில் வாடிக் கொண்டிருந்தேன்.  இரண்டு நாட்களுக்கு அப்புறந்தான் மனதில் ஒரு தெளிவு வந்தது.  தெளிவு வந்த அன்றைய நாள் இரவு நான் மிட்டாய்க் கடைக்காரரைத் தனியே அழைத்து அவரிடம் விசயத்தைச் சொல்லி கங்கம்மாவைப் பத்திரமாய் பார்த்துக் கொள்ளும்படிச் சொன்னேன். அன்று அவர் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுததை நீ பார்த்திருக்க வேண்டும்.

என்ன.. அந்தப் பையனைச் சும்மாவா விட்டாய் என்று கேட்கிறாயா? என்ன செய்வது அவனை? போலிஸில் பிடித்துக் கொடுக்க வேண்டுமா? அது மேலும் பல பிரச்சினைகளை கங்கம்மாவுக்கும் அவளண்ணனுக்கும் கொண்டுவந்து சேர்க்குமே தவிர வேறொன்றும் செய்யாது. அந்தப் பையன் அதற்கப்புறம் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டோ அல்லது பயந்து போயோ பார்ப்பான். அவனைப் பார்க்கும் ஒவ்வொரு வேளையும் நான் அவனைக் கண்டு கொள்ளாமல் போய்விடுவேன். ஆயினும் அவ்வேளைகளில் அன்று அவன் முன்னால் நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த கங்கம்மாவைப் போல நானும் நிர்வாணமாய் நிற்பதைப் போலத்தான் உணர்ந்திருக்கிறேன். உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் கோபத்தீயை என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்றும் செய்யாமல் இருப்பதும், நடுத்தெருவில் நிர்வாணமாய் நிற்பதும் ஒன்றுதானே.

இப்போது சொல் நான் எப்படிப் புன்னகைக்க?

என்னால் இப்போது பாரதிக்குப் பதிலேதும் சொல்ல முடியவில்லை. மேற்கொண்டு அவள் சொல்லப் போகும் காரணங்களைக் கேட்கக் கூட தெம்பில்லாமல் நான் எழுந்து வந்து விட்டேன். என்னாலும் இனி புன்னகைக்க முடியுமா என்பது சந்தேகந்தான்.

- சுரேஷ் பரதன்

Pin It