பற்களை தட்டிக் கொண்டே யோசித்த மாநிற மனிதன்.... தலையை காற்றுக்கு அசைய விட்டு மூளையில் சறுக்கல் ஆடிக் கொண்டிருந்தான்.

மயிலனுக்கு மண்டை முழுக்க சுளுக்கு வந்தது போல இருந்தது.

அருகில் வந்த ஒரு பெரியம்மா தலையில் தண்ணீர் குடத்தை வைத்துக் கொண்டு......"பேரு என்ன, ஆதி.......யா.... அப்டி யாரும் எனக்கு தெரிஞ்சு இல்லையே..." என்றது. கண்கள் மயிலனை ஸ்கேன் செய்தன.

எதையோ யோசித்துக் கொண்டு எதையோ பேசுபவன் போல "பல்லு கூட காரை பல்லா இருக்கும்......." என்றான் மயிலன். ஏனோ அவன் உடல் ஒரு வித தடுமாற்றத்தில் இருந்தது. உடல் வியர்த்து கொட்டியது.

"எங்க ஊர்ல பாதி பேருக்கு காரை பல்லுதான்" என்று சிரித்த சிறுமிக்கு பற்களில் காரை பூ பூத்திருந்தன. வெண் முத்துக்களில்... குறுக்கே நீளும் வண்ணமென வாய்க்கு வந்த கற்கள் அல்லல்ல சொற்கள் என கூறி வைக்கலாம் போல.

முகமற்ற காற்று அந்த மதிய நேரத்தை மூச்சு விடாமல் சுழற்றிக் கொண்டிருந்தது.

"என்ன இது பேய்க் காத்து........! மட்ட மதியானத்துல.....?" என்று முனங்கிய பெருசு ஒன்று......." ஏய் சிங்கினி..........கிணத்து பக்கம் போகாத...ஆட்டுத்தோலன் அலையறான்னு நினைக்கறேன்" என்று பாதுகாப்பு வளையத்தை கைக் கொண்டு எவ்ளோ தூரத்துக்கு நீட்ட முடியுமோ அவ்ளோ தூரத்துக்கு பேத்தியை ஜாடை கொண்டு இழுத்தார்.

ஊர்த்திடலில் அமர்ந்திருந்த நாலைஞ்சு பெருசுகள்.....ஏழெற்று நடுத்தரங்கள்.......ரெண்டு மூணு சிறுசுகள்.... ஒருவருக்கும் ஆதியை பற்றி தெரியவில்லை. சூட்சுமமாய் ஊரை சூழ்ந்து கொண்டிருக்கும் வெப்பத்தின் சூடு ஏதோ வித்தியாசமாய் பட்டது.

"நீங்க...?"

"நான் கோயம்புத்தூர்ல இருந்து வரேன்..... நானும் ஆதியும் சின்ன வயசுல அந்தியூர் பள்ளிக்கூடத்துல ஒண்ணா படிச்சோம்... நான் சின்ன வயசுல ஆதியோட அக்கா கல்யாணத்துக்கு கூட நான் இங்க வந்திருக்கறேன். 20 வருஷம் ஆச்சில்லையா.....! எனக்கும் மறந்து போச்சுங்க... அதும் ஊரே மாறி போன மாதிரி இருக்கு..."என்ற மயிலன் சுற்றும் முற்றும் அனிச்சையாய் பார்த்தான். அவன் கண்களில்... 20 வருட தவிப்பு அலைமோதியது. காற்றும் புழுதியும் அவர்களை சுற்றிக் கட்டம் போட்டுக் கொண்டிருந்தன.

"ஊரெல்லாம் ஒன்னும் மாறலிங்க.. புதுசா பாக்க உங்களுக்கு அப்டி தெரியுது...அப்போல்லாம் சும்மா உக்காந்து பேசிட்டு இருப்போம்.. இப்போ உக்காந்துட்டு இருக்கோம்.. ஆனா பேசுறது இல்ல... எல்லாம் வாட்சப் தான்..." சொன்னவர் சிரித்தார். சிரிப்பெல்லாம் மெசேஜ்.

நினைவுக்கு திரும்பியவனின் முக்கோண கதை போல........"கொஞ்சம் குண்டு புள்ளைங்க...... நெத்தி கூட பெருசா இருக்கும்..." என்றான். முகவரியற்றவனின் மீசைக்குள் மினுங்கிய தூசியின் நிறத்தை வெளிச்சம் மின்னிக் காட்டியது போல.... ஒரு சமிக்ஜை குறுக்கு வெட்ட நீள் பரப்பில் அல்லாடியது.

"ஹெலோ தம்பி... சின்ன வயசுலயே குண்டு புள்ளைன்னு சொல்றீங்க.. இப்போ இன்னும் குண்டால்ல இருக்கும்.. எப்படி கண்டு பிடிக்க... ஆதினு எனக்கு தெரிஞ்சு இங்க யாரும் இல்ல..." என்றவரின் வாய் குழறியது.

"யாரா இருக்கும்...?" வீதியில் வெளி வந்த யாவரும் ஆதியின் உருவத்தை யார் என கொண்டு வர.. கண்கள் சுருக்கி வந்த புழுதிக்கு காட்சி மறைத்து யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

"சரி என்ன விஷயமா வந்தீங்க...?" என்று விஷமம் கக்கும் ஒரு குரல் மெல்ல அரச மரத்துக்கு பின்னால் இருந்து எட்டி பார்த்தது.

"இல்லைங்க... நாங்க ஸ்கூல் பிரென்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு மீட்டிங் போடலான்னு ஒரு யோசனைங்க......அது பேரு அலுமினினு சொல்லுவாங்க..." மயிலன் பேச பேசவே குறுக்கிட்ட சொற்றொடர் இப்படி இருந்தது.

"இந்த பழைய பிரன்ஸ் எல்லாம் சேர்ந்து படிச்ச ஸ்கூல்ல ஒரு நாள் முழுக்க பேசி... அழுது.... புலம்பி.... கடைசில சண்டை போட்டு பிரிவாங்களே.....அதுதான...?" என்று சொல்லி சிரித்தவன்... கல்லூரிக்காரனாக தெரிந்தான். அவன் கண்கள் முழுக்க கையில் இருந்த அலைபேசியில் மின்னிக் கொண்டிருந்தது. காதல்காரனாகவும் இருப்பான் போல.

"நல்ல யோசிச்சு பாருங்க.. இந்த ஊர் தானா... இல்ல... பக்கத்தூர் எதுவுமா.... இல்ல...மலை அடிவாரத்துல இருக்கற தட்டு பாளையமா......?" மீசை ஒன்று மயிரில்லாத தலையை துண்டைக் கொண்டு துடைத்துக் கொண்டே கேட்டது.

"இல்லைங்க நல்லா தெரியும்..... மலைக்காட்டு கோயில்தான்..."

கண்கள் சிவந்திருந்த மயிலன் காதும் சிவக்க காற்றின் இரைச்சல் கொந்தளித்தது.

"கருமம் புடிச்ச காத்து......இன்னைக்கு ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ணுது..." வானம் பார்த்த ஒரு ஜோடி கண்கள்... ராத்திரிக்கு மழை பிச்சுக்கிட்டு ஊத்த போகுதுடோய்..." என்றது. இடைச்செருகளுக்கு கண்கள் இட்டவர்கள்... மீண்டும் மயிலனுக்கு முகம் கொடுத்தார்கள்.

"ஆமா நம்மவூருதான்...!"

"சரி... அப்டியே இந்த ஊரா இருந்தா கூட அந்த புள்ள கல்யாணம் ஆகி வேற ஊருக்கு போயிட்டுருந்தா எப்படிங்க தம்பி தெரியும்...?"

கொக்கியிட்டவனை கம்பீரமாய் பார்த்தன சில கண்கள். சில கண்கள்... 'இந்த குறுக்கு கேள்விக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல' என்பது போல பார்த்தன. காற்றின் குரல்வளை கீச்சிட்டது. மலை உச்சியின் மினுங்கல்கள் வலை விரிந்தன. காடும் காடு சார்ந்த வாழ்வின் திசை மொழியற்று பிறழ்வதை போல ஒரு வகை தகிப்பு.......ஊரை சுற்றிக் கொண்டிருந்தது.

"ஆதி சைக்கிள்ல தான் பள்ளிக்கூடம் வருவா... அவுங்க அக்கா பேர் கூட ஜோதிமணி..." தூண்டிலை இம்முறை சரியாக போட்டு விட்டான் மயிலன்.

"அட....நம்ம காத்தவராயன் பொண்ணுப்பா... தம்பி..அந்த புள்ள பேரு ஆதின்னா சொன்னிங்க... அது பேர்.....சிந்தாமணிங்க..." என்றவன் முகத்தில் தேஜஸ். பற்களில் பகல் மின்ன பாதி ஜொலித்த முகத்தில்.. மீதிக்கு அலைபேசியைக் கொடுத்திருந்தான்.

"பள்ளிக்கூடத்துல அது பேரு ஆதி லக்ஷுமிங்க... இப்போதான் நினைவுக்கு வருது..." என்ற பெண்... தெரு குழாய்க்கு பக்கத்தில் தோண்டிய குழிக்குள் இருந்து உள்ளங்கை அளவு நீரை மொண்டு மொண்டு குடத்தில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

"அட குடிச்சே செத்தானே உலகநாதன்.... அவன் பொண்டாட்டிப்பா...."என்றவர் கடைசியில் உச் கொட்டிக் கொண்டார். 

அவர்கள் காட்டிய வழியே மயிலன் அந்த மதிய நேரத்தை கிழித்துக் கொண்டு நடந்தான். காடும் காடு சார்ந்த மலை வாழிடம் அது. மரமும்.....மதியமும் போட்டிக் போட்டுக் கொண்டு தலை ஆட்டின. இலையும் சருகும்...... இனம் புரியா புள்ளியில்... கண்கள் உருட்டி காற்றின் கழுத்திறுக்குவது போல பளீர் பளீர் வெற்றிடங்கள்.... வானமெங்கும்..

அவனுள் பள்ளி நாட்கள்... மலை ஏறத் தொடங்கி இருந்தன. எத்தனை நினைவுகள். எத்தனை அன்புகள்...

"20 வருடத்தில் எப்படி மாறி இருப்பாள். புருஷன் செத்து போய் விட்டான் என்கிறார்களே....!" மனதுக்குள் இனம் புரியாத வலை... பிடித்த மீன்களை விட்டுக் கொண்டிருந்தது.

"கடைசியா பார்த்த போது 'காதலிக்கிறேன்.... பிடிச்சா சொல்லு....' ன்னு சொன்னதுக்கு பார்த்துகிட்டே எதும் சொல்லாம போனாளே... இப்போ மாதிரி செல்போனா இருந்துச்சு... லேண்ட் லைன் கூட இல்லையே.... லெட்டராவது போட்ருக்கலாம்.... சரி நானாவது வந்து பாத்திருக்கலாமே... எல்லாமே கை மீறின விஷயமாவே இருந்துச்சு... பள்ளிக்கூடம் முடிஞ்சுது... அதுக்கு அப்புறம் விழுந்த அவ்ளோ பெரிய கோட்டை இந்த 20 வருசத்துல அழிக்கவே முடியல..."தானாகவே புலம்பினான் மயிலன். இப்போது கூட எப்படியாவது பார்த்து விட வேண்டும் வந்திருக்கிறான்... அலுமினி எல்லாம் பொய்தான்.

"என்னமோ ஆரம்பிச்ச இடத்துலயே இந்த மனசு சுத்துது. அதுக்கு அவளை பார்த்தா தான்.. ஒரு கட்டம் வட்டமாகுன்னு தோணுது.. அதான்...." அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. வெளியின் நரம்புகள் அறுந்து விழும் சப்தம் யாவுமற்று இம்சித்துக் கொண்டிருந்தது. பூனைகளின் சாம்பல் நிற உலகம் அங்கே தாவி தாவி அந்த ஒற்றையடியை நிரப்பிக் கொண்டிருந்தது. நாய்களின் கண்களில்.. இரவின் நீள்வட்டம் உருண்டு குரைக்கும் மௌனத்தை ஊமையாக்கி விட்டிருந்தது.

வழி நீண்டு கிடந்தது. அவன் கால்கள் தடுமாறின... குடிச்சு செத்த உலகநாதனுக்கும் தனக்கும் வித்தியாசமில்லை என்று ஒரு வகை மன உளைச்சல் அவனுள் வழி மறித்து கேள்வி கேட்டது.

1 மணி நேரத்துக்கு முன்பாக...

மலைக் காற்று.... நீண்ட நாட்களுக்கு பின் நகர சுமையில் இருந்து விடுபட்ட தன்னிச்சை.... தார் சாலை முடிந்து ஊர் துவங்குமிடத்தில் இருந்து உள்ளே ஒரு மண் சாலை பச்சை நிறத்தில் ஊர்ந்து கொண்டிருக்க..... எதிரே தள்ளாடியபடியே வந்த இருவரின் கண்கள் சிவந்திருந்தன.

தட்டி விட்ட ஆழ்மனத்துக்குள் கொஞ்சம் சில்லென பீர் பாய்ச்சினால்... எல்லாம் நலமென இருக்கும் என நம்பினான் மயிலன்.

இன்னமும் சொல்லப் போனால்... ஆதியிடம் பேச.... என்ன பேச.... என எல்லாம் யோசிக்கும் தடுமாற்றத்துக்கு கொஞ்சம் போதையே தைரியம் என்றும் நம்பினான்.. சாக்கு போக்கு சிறு துரும்பும் பல் குத்தும்... சரக்கு ஏத்தும்.

பாதி பீர் நுரை ததும்ப உள் இறங்கி விட்டது. நினைவுக்குள்... தாவணி பாவாடையில் ஆதி... காரைப் பல் சிரிக்க... கண்களில்....காற்று வரைந்தாள். கண் மையில் இருக்கும் கருமைக்கும் அவள் முகத்தில் இருக்கும் கருமைக்கும் கொஞ்சமே கொஞ்சம்தான் இடைவெளி. அந்த இடைவெளியில்.... மயிலிறகு மினுங்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

கம்பு சோறும் கருவாட்டுக் குழம்பும் கொண்டு வரும் நாளில் எல்லாம் மயிலனின் தக்காளி சாதம் அவள் தின்பாள். ஆதியின் சோறு தின்னும் போது மட்டும் வயிறு நிரம்புவதே இல்லை எப்படி என்று அவளிடமே கேட்டிருக்கிறான். மனம் நிரம்பிய புன்னகையே பதில். அவள் அப்படித்தான். நிறைய பேச மாட்டாள். நிறைந்த முகம் மட்டும்
எப்போதுமிருக்கும்.

"இப்போதிருக்குமா....?"

"படித்து முடித்ததுமே தேடி வந்திருக்கலாமோ... இப்போ புருஷன் இல்லாம... ச்சே.. இன்னும் இதே மலை கிராமத்துல... அதுக்கு மேல படிச்சாளா இல்லையா.. எதுமே தெரியலையே....? என்ன மாதிரி மனுசனா இருந்திருக்கேன்...!"

அவனாகவே புலம்பிய போது 2 வது பீர் குடித்துக் கொண்டிருந்தான்.

துக்கம் பீறிடும் போதெல்லாம்....அக்கம் பக்கம் திரும்பினான். வெற்றுடம்பில் எலும்புகளோடு இருவர் ஒரு நீள் வட்ட சரக்கு போத்தலோடு உள் நுழைந்தார்கள். அங்கே காலியாக கிடந்த ஒரு போத்தலை எடுத்து டேபிள் மீது வைத்து அதன் கிடை மட்டத்துக்கு குனிந்து இரு போத்தல்களிலும் சரி சமமாக சரக்கை ஊற்றினார்கள். பின் அவரவர் திரும்பி மட மடவென குடித்து விட்டு எச்சிலை ஒரு மூலையில் துப்பி விட்டு கிளம்பி விட்டார்கள்.

சுர்ரென இருந்தது. இரண்டு மிடறு வேகமாய் குடித்தான். பீரின் குளுமை வெறித்த இம் மதியத்துக்கு தேவையாய் இருந்தது. உள்ளுக்குள் எரியும் மலைக்காடுகளின்இலைகளில் சொட்டிக் கொண்டிருக்கும் அதிவேக ஞாபகத்தின் பொருட்டு துளி துளியாய் தேவைகள் நிரம்பின.

"என்னவென்று பேசுவது..? இத்தனை நாளாய் ஏன் வரவில்லை? என்று கேட்டால் என்ன சொல்வது...! அதெல்லாம் தாண்டி... தன்னை யார் என்று கேட்டு விட்டால்.....!?" அயோ... நினைக்கும் போதே நெஞ்சுக்குள் பாறை வெடிக்கும் டமார் சப்தம்.

ஒரு கிழவனும் கிழவியும்.. அதே போல ஒரு போத்தலோடு வந்து பாதி பாதியாக்கி கிழவன் பக்கத்துக்கு டேபிள்காரரிடம் நீர் கேட்டு கையேந்த, கிழவி மட மடவென ராவாக அடித்து விட்டு......"ஏய்.... வரும் போது 30 ரூபாய்க்கு ஜார்ஜ் போட்டு விட்டுட்டு வா " என்று சொல்லி போனது.

"ஓஹ் ரீ சார்ஜா.....!" கண்கள் சிமிட்ட பீரில் கிழவி பற்றிய சந்தேகத்தை தணித்தான் மயிலன்.

காது கேட்டாலும் கேட்காத கிழவன்..... கடைசி பெஞ்ச்காரனிடம் சற்று கெஞ்சியதுக்கு பின் நீர் வாங்கியே விட்டார்,. அவன் அதற்கு பதில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தான். அது தானே பிரச்சினை. பேச ஆளில்லாத மனிதர்களே இங்கு நிறைந்திருக்கிறார்கள். கிழவனுக்கு நிஜமாகவே காது கேட்காது தான் போல....எதிர் வினையற்ற வயதுக்கு வந்திருந்தார்.

மண்டைக்குள் ஓடும் கானல் நீரில் சுட சுட காதலின் தீபங்கள். பக்கத்துக்கு டேபிள்காரன் தனித்து காதலின் தீபத்தை அலைபேசியில் கசிய விட்டுக் கொண்டிருந்தான். பாருக்குள் நிகழும் சம்பவங்கள் சுவாரஷ்யமானவை. ஏனோ தானாகவே சிரித்துக் கொண்டான் மயிலன். ஒரு நோக்கத்தோடு உள்ளே வருகிறவர்கள் நோக்கம் சடுதியில் அரங்கேற அதன் பின் அவர்கள் இல்லாமல் யாரோவாக வெளியேறும் போது அது அத்தனை பாந்தமாக இருக்கிறது. அது நாடகத் தன்மையோடு ஒப்பனை நிறைந்திருக்கிறது.

கசங்கிய கருப்பு அடித்த காக்கி உடையில் எல்லா வயதிலும் ஒருவர் என 5 பேர் கொண்ட குழு வந்தது. கப்பங்கிழங்கின் துணையோடு ஆளுக்கொரு கட்டிங். இப்போது தான் வேலைக்கு சேர்ந்திருப்பான் போல....சிறுவன் ஒருவன். முகமெல்லாம்.. சிரிப்பு.. மனம் கூட அவனுக்கு இப்போதைக்கு சிரித்துக் கொண்டுதான் இருந்தது. மூன்றாவது பியரை கப்பென திறக்கும் போது மயிலனுக்கு அடக்க இயலா அழுகை வந்திருந்தது.

"வந்தது அவளை பார்க்க. இப்டி குடிச்சுட்டு அவகிட்ட பேசினா என்ன நினைப்பா.. அயோ.. இந்த மனச என்ன தான் பண்ண.. அது யார் பேச்சையும் கேட்க மாட்டேங்குதே...." எப்படியோ பேசி சேர்ந்து உழன்று புலம்பி......புலம்ப.....தானாகவே ஒரு கூட்டணி பக்கத்தில் எப்போது சேர்ந்தது என்று தெரியாமல் சேர்ந்திருந்தது. கொஞ்சம் சரக்குக்கு மிக்சிங் கேட்டார் அவர். தாராள மனதோடு ஊற்றினான்.

முதல் டேபிளில் நண்பர்கள்தான் போல. ஆனால் கார சாரமாக விவாதம் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் "காதல்னா என்னனு தெரியுமாடா உனக்கு.....?" என்று ஒருவன் கத்தினான். ஒருவன் தலை குனிந்து தலை ஆட்டிக் கொண்டே அழுதான். ஏனோ மயிலனுக்கு அங்கு அமர்ந்திருக்க பிடிக்கவில்லை. பிடிப்பும் இல்லை. போதை தலைக்கேறி இருந்தது. வேகமாய் வெளியே வந்த போது "காதல்னா என்னனு தெரியுமாடா உனக்கு...!" என்று அந்த மலை மீது நின்று ஆதி கேட்பது போலவே இருந்தது. தலைக்கறியில் எல்லாம் வெந்து தணியாத காதலும்.... வேகாத வெயிலின் தாகமும்...கூட நுரைக்க ததும்பும் போதையும்.

வழி முடியுமிடுத்தில் அவர்கள் கூறிய அந்த கடைக்கோடி வீடு தனித்திருந்தது.

சமீப காலமாக அவள் யாரிடமும் பேசுவதில்லை என்பது கூடுதல் தகவல். மலை முழுக்க முகவரியற்ற பெருக்காற்று அலைந்தலைந்து கூடடைவது போல அவனுக்குள் பெருமூச்சு நிதானமின்றி அலையும் வண்டாய் இருந்தது. உள் மூச்சிலெல்லாம் மூங்கில் உடையும் அனல் அடைத்துக் கொண்டிருந்து.

நின்று வீட்டைப் பார்த்தான். வீடும் பார்த்தது போல தான் இருந்தது. பழமையான வீடு.

"20 வருஷத்தில் வாழ்க்கை தரம் கொஞ்சம் கூட கூடவில்லையா ..? என்ன மாதிரி வாழ்வாதாரம் இங்கு இருக்கிறது... என்ன மாதிரி பொருளாதாரம்...." அடி மனதில் எம்பினாலும்... நா எழாத சொல்லைக் கொண்டு கதவைத் தட்ட யோசித்துக் கொண்டே நின்றான். எதிரே இருந்த வேப்ப மரம் வெப்ப மரமாகி இருந்தது. இடதும் வலதுமென அலைந்தலைந்து காற்றை கொப்பளித்துக் கொண்டிருந்தது அது.

"யார்னு மட்டும் கேட்றக் கூடாது..."

"எதுக்கு இவ்ளோ அவஸ்தை..... பேசாம திரும்பி போய்டலாமா...? உள்ளுக்குள் பேதலித்த புத்தியை எது கொண்டு அடித்து வீழ்த்துவது..." நடுங்கும் கை கொண்டு கதவைத் தட்டி விட்டான்... இதயத்தை சுத்தியல் கொண்டு தட்டுவது போல சுளீரென வலி மூளைக்குள்.

மீண்டும் தட்டினான்.

மீண்டும் தட்டினான். தட்டினான். சற்று சத்தமாகவே தட்டினான்.

"ஒருவேள வீட்ல இல்லயோ..." நெற்றி வியர்வை நிலத்தில் வீழ்ந்து ஆவியானது. கொளுத்தும் வெய்யிலின் அரக்க பறக்கும் சூட்டில்... இலை மறந்த வெப்பக்க காற்று... வீர் வீர் என கத்திக் கொண்டிருந்தது.

"ஆ...............தி...."

தொண்டையை கரகரப்பாக்கிக் கொண்டே ................"ஆ.................தி" என்று சற்று சத்தமாகவே கூப்பிட்டான்.

தகரக் கதவு மெல்ல கரக் கரக் என்று திறந்தது. காதுக்குள் விசுக்கென செல்லும் காற்றின் கூரில்...... காய்ந்த கொப்புளங்கள் உடைந்தாற் போல உள்ளுணர்வு வெடித்தது. கண்கள் காத்தே கிடந்தன.

கலைந்த கூந்தலோடு ஓவியத்தில் இருந்து எட்டி பார்ப்பது போல முதலில் முகத்தை வெளியே நீட்டியவள் பின்பு ஒருமாதிரி கழுத்தையும் நீட்டி.. பின்பு கதவை இன்னும் சற்று திறந்து ஆச்சரிய சந்தேகத்தோடு கண்கள் சுருக்கி... 'யா......ரு" என்று காரைப்பற்கள் தெரிய கேட்டுக் கொண்டே முழுதாக வெளி வந்தாள். பொந்துக்குள் இருந்து முயல் வந்தது போல இருந்தது அந்த காட்சி. வந்தது முயல் தானா என்பது போலவும் இருந்தது அந்த காட்சியின் பின்புலம்.

காலம் சற்று நின்றுதான் போனது. எதனை அடக்கியும் தடுத்து நிறுத்த முடியாத அழுகையை, முகம் கோணி...நெற்றி சுருக்கி... உதடு கடித்து.. சொட்டி விட்டு......."ஆ......தி" என்று கண்கள் விரிய அழைத்தான்.

சடுதியில் எல்லாம் புரிந்தவள்......" என் மயி..............லூ....." என்று கத்தி அழுதபடி.....சுவரோரம் புடைத்துக் கொண்டிருந்த திண்ணையில் தானாக சரிந்து அமர்ந்தாள். அது இயலாமையின் உச்சம்.

"இத்தனை லேட்டாவா வருவ...." அழுகையும் முணங்களும் கலந்திருந்தன.

'கையை பிடிக்கலாமா.......?" தாங்காத மனதோடு.......அவள் வேண்டும் போல தள்ளாட்டத்துடன்....அவளருகே திண்ணையில் அமர்ந்தான். ஒரு சிறுவனைப் போல இருந்தது அந்த அமர்வு.

இருவரும் மௌனத்தோடு மூச்சிழுத்து... வாய் விட்டே அழுதார்கள். 20 வருடம் என்பது அத்தனை நெருக்கமான இடைவெளி அல்ல. அது இரண்டு வாழ்வின் இரு முனைகள்.

'நீ தான் ஒன்னும் சொல்லலையே...?" மௌனம் களைத்தான்.

"என்ன சொல்லல...! எல்லாமே சொன்னாதான் புரியுமா...? மனசுல.. அவ்ளோ இருந்தும் வாயில ஒரு சொல் கிடைக்கலயே... மயிலு..."

அவன் அவளையே பார்த்தான். அவளும் தான்.

"பள்ளிக்கூடம் படிக்கும் போது உனக்கு காத்திருந்தேன்.. அதுக்கு அப்புறம் ஒரு குடிகாரனுக்கு வாக்கப்பட்டு அவனுக்கு காத்திருந்தேன்.. அப்புறம் இந்த வயித்துல புழு பூச்சி வேணும்னு அதுக்கு காத்திருந்தேன்.. அப்புறம் நூறு நாள் வேலைக்கு காத்திருந்தேன்....என் வாழ்க்கை முழுக்க காத்திருந்தே போய்டுச்சு மயிலு...இதோ இப்போ மறுபடியும் நீ வந்திருக்க.. நான் என்ன செய்ய....? வந்தது தான் வந்த... ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால வந்திருக்கக் கூடாதா....?" என்றபோது அவள் உள்ளே நீர் மொண்டு கொண்டிருந்தாள்.

நடுங்கி......பேச்சற்று... திறந்திருந்த கதவுக்குள் ஏதேட்சையாய் எட்டிப்பார்த்த மயிலனின் கண்களில்......ஆதி தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருக்கும்... காட்சி... அவன் தலையை நூறு சுக்காய் வெடிக்க வைத்துக் கொண்டிருந்தது...

தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பும் போது......தான் தொங்கிக் கொண்டிருக்கும்.....காட்சியை மயிலன் பார்த்து விட்டான் என்பதை ஆதியின் ஆன்மாவும் பார்த்து விட்டு
அப்படியே சரிந்து விழுந்து அழுதது.

"அயோ........ அ........யோ" என உள்ளம் நடுங்க அவன் கத்தினான். ஆனால் அவனுக்கே கேட்காத குரல் அது.... அவளின் கண்கள் அவனை ஊடுருவியது.

"எல்லாம் போச்சு.... எல்லாமே போச்சுடா....." என்று அழுதவள் வெள்ளை நிறக் கண்களில் சாம்பல் நிற திருப்புக்காட்சி....

பச்சைக்கடையில் இருந்து வெளி வந்த மயிலன் தள்ளாடியபடியே மண் சாலை கடந்து தார் சாலைக்கு வந்து ஓரத்தில் நிறுத்தி இருந்த தன் காரை எடுத்துக் கொண்டு வேகமாய் அதிவேகமாய்......நிறம் பிரியாத வேகத்தில் ஓட்ட.. 13 வது கொண்டை ஊசி வளைவில் போன வேகத்தில் ப வடிவத்தில் திரும்ப.....எதிரே வந்த பொக்லைன் வண்டியின் அகப்பைக்குள் மாட்டி சப்பலிந்து...... பொக்லைன் வண்டியும் எதிர்பார்க்காத இந்த விபத்தில் இன்னும் முன்னோக்கி வேகமெடுக்க.......நொடியில்....கார் மலையில் இருந்து கீழேசரிந்தது. உடைந்து நொறுங்கி அப்பளம் போல தெறித்தது.

மூச்சடைத்து பரிதவித்த ஆதி.....தான் ஓட்டி வந்த பொக்லைன் வண்டியை காட்டுக்குள் விட்டு விட்டு வேகமாய் வீட்டுக்கு ஓடி வந்தவள், பயத்தில்... கண நேர தடுமாற்றத்தில் தூக்கிட்டுக் கொண்டாள். வாழ்க்கை முழுக்க இருந்த அழுத்தம் வெளிப்பட இங்கே ஒரு காரணி கிடைத்ததை அவளின் ஆழ்மனம் வரவேற்றது. சாக காத்திருந்தவளுக்கு ஒரு சந்தர்ப்பம் என அவளுக்கே தெரியாத உந்துதல்.... சாத்தானின் அலைக்கழிப்பை சரி என்றது.

அவன் அவளையே பார்த்து கதறி அழுதான். "குடிச்சிருக்க கூடாது ஆதி... தப்பு பண்ணிட்டேன்...."

புரிந்து கொண்ட ஆதி... "அந்த கார்ல வந்தது நீயா மயிலு.....!" அயோ.... நெஞ்சிலும் தலையிலும் மாறி மாறி அடித்துக் கொண்டவள்.... காற்றினில்... கரையக் கரைய கேட்டாள்.

"நீ................யும் குடிப்பியா...?"

*

இத்தனை நேரம் ஊரை தூக்கி வீசிக் கொண்டிருந்த அந்த பெருங்காற்று சற்று ஆசுவாசமடைந்திருந்தது.

சற்று நேரத்தில் இருவரும்..... அந்த மலை உச்சி நோக்கி சேர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். கைகள் கோர்த்த மாதிரிதான் இருந்தது.

- கவிஜி

Pin It