கதை கிடைக்காத போது இப்படி நெடுஞ்சாலை பயணம் அமையும்.

நானும் தம்பி ராஜ்-ம் ஷைலோவில் ஓர் அற்புதமான பயணத்தில் இணைந்திருந்தோம். எது பற்றியெல்லாமோ பேசி விட்டு எங்கெங்கோ சென்றது தேடல்.

"என்ன செய்யலாம்...? ஒன்னும் சிக்க மாட்டேங்குதே...! என்றேன்.

அவன் வண்டியை ஓட்டிக் கொண்டே...சில ஐடியாக்களை கொடுத்துக் கொண்டே வந்தான் வழக்கம் போல.

"தம்பி மாட்டிருச்சுடா... " என்றேன்.....உற்சாகத்தின் விளிம்பில் அமர்ந்தபடி. எனக்கு கதையின் கரு கிடைப்பதுதான்.....எப்போதுமே சந்தோஷமான விஷயம். அவனும் ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்தான்.

"இப்போ... ஒரு நாளைக்கு எவ்ளோ ஆக்சிடெண்ட் நடக்குது... போன மாசம் மட்டும் நம்மூர்ல நடந்த முக்கியமான விபத்துகளை சொல்லு பாக்கலாம்....!" என்றேன்.

அவன் யோசித்துக் கொண்டே....."நிறைய நடக்குதுண்ணா... எவ்ளோன்னு எப்படி சொல்ல.....?" என்றான்.

"சரி, நானே சொல்றேன் கேளு...போன மாசம் மட்டும்... நம்மூர்ல அஞ்சு பெரிய ஆக்சிடெண்ட்ஸ் நடந்திருக்கு. அஞ்சுலயுமே அடிபட்டவங்க பொழைக்கல...இப்போ முதல் கேஸ் எடுத்துக்கோ... ஒரு லாரி.. ஒரு கார் மேல மோதி காருக்குள்ள இருந்த 3 பேருமே ஸ்பாட் அவுட்.. இல்லையா...?"

"சரிண்ணே... கதைக்கு வாங்க..."

"இரு இரு.. வந்துட்டே இருக்கேன்.. அந்த மூணு பேருமே குடிச்சிட்டு கலாட்டா பண்ணி தாறுமாறா ஓட்டுனவுங்க......." என்றேன்.

"சரிண்ணே...! என்ன சொல்ல வர்றீங்க...?" என்றபடியே எதிரே ஏறி வந்த காருக்கு வழி விட்டு மீண்டும் சாலையில் ஏறினான்....."இப்டியெல்லாம் வந்தா என்ன தான் பண்ண..." முணங்கிக் கொண்டான்.

"இரு அடுத்து வர்றேன்...." என்றேன். அவன் வண்டி ஓட்டுவதில் இன்னும் கொஞ்சம் கவனமானான்.

"ரெண்டாவது.... பைக்கும் பைக்கும் மோதிடுச்சு.... செத்தவன் செயின் ஸ்னேச்சர்ன்னு தெரிய வருது....."

தம்பி திரும்பி பார்த்தான். கதை சுவாரஷ்யமாகிவிட்டால் இப்படித்தான் பார்ப்பான்.

"மூணாவது விபத்து...ஒரு மணல் லாரி மேல இன்னொரு லாரி மோதி மேம்பாலத்துல இருந்து கீழ தள்ளி விட்ருச்சு....."

"நாலாவது ஆக்சிடென்ட்...ஹால்ட்டுக்கு வந்த தனியார் பஸ் மேல மோதின இன்னொரு பஸ்... அதுல அந்த பஸ் டிரைவர் நசுங்கி சாவு. செத்த அந்த ட்ரைவர் வழக்கமா ரெம்ப ஸ்பீடா தான் போவாராம்.. எது பத்தியும் யோசிக்கவே மாட்டாராம்..."

தம்பி முகத்தில் பளிச்சென மின்னியது எதிரே ஜன்னலில் புகுந்த சூரிய வெளிச்சம். அவன் கண்களில் கதையின் கண்ணிகள் அற்புதமாய் கோர்த்துக் கொண்டிருந்தன.

"அஞ்சாவது இன்னும் இன்ட்ரஸ்டிங்... ஆட்டோ மேல கால் டேக்சி மோதி ஆட்டோ டிரைவர் பலி... அப்புறம் விசாரணையில் ஆட்டோ டிரைவர் எல்லாரையும் மரியாதை இல்லாம தான் பேசுவார்ன்னு தெரிய வருது.."

"அண்ணே... கதை செம பார்ம்... அடுத்து.....?" என்றான் தம்பி. ஆர்வம் அவனில் வேகமாய் பயணித்தது. நான் தொடர்ந்தேன்... ஆசுவாசமாய் என் முகத்தில் பட்ட வாடைக்காற்றில் மதிய வெப்பம்...மத்தியில் நுட்பம்.

"எல்லா கேஸ்லயும் ஆக்சிடென்ட் பண்ணினவன் எஸ்கேப்........ செத்தவன் எல்லாம்... சாலை விதிகளை மனித உரிமைகளை மீறினவங்க......."

"சூப்பரா இருக்குண்ணே... சரி......கிளைமாக்ஸ்.....!?" என்று கத்தினான் தம்பி. சந்தோசம் தாங்காமல் ஹாரன் அடித்துக் கொண்டான். நான் சிரித்துக் கொண்டேன்.

தலையைக் கோதிக் கொண்டே..."இந்த எல்லா விபத்தையும் பண்ணினது ஒருத்தன்தான்......! எப்டி ஹீரோயிசம்......?" என்றேன்.

"அண்ணே.... கதை கலக்குது.... அப்புறம்...?" என்ற தம்பியை பார்க்காமலே... ஜன்னலில் கண்கள் பதிய......." சரி சரி... தம்பி......கொஞ்சம் முன்னால பாரு.... ஒரு பைக்ல மூணு பேரு...... ஒருத்தன் கூட ஹெல்மெட் போடல...... ஹைவேல இருந்த டாஸ்மாக்குல இருந்துதான் வெளிய வந்தானுங்க... கண்டிப்பா சில்லறை வாங்க போயிருக்க மாட்டானுங்க...... யோசிக்காம வண்டிய மேல விட்டு ஏத்து......." என்றேன். சூரிய ஒளி என் முகத்தில் தகதகத்தது.

"என்னண்ணே சொல்றீங்க...?!!!!!" என்றபடியே பயத்தோடு என்னை பார்க்கும் தம்பியை நான் பார்க்கவில்லை. ஆனால் ஸ்டியரிங்கை பிடித்திழுத்து திருப்ப ஆரம்பித்திருந்தேன்.

- கவிஜி

Pin It