அம்மா வந்து இருந்த பத்து நாளில் நூறு கதைகள் கடந்திருக்கும் தன் குட்டிப் பேத்தியைப் பற்றி...

இரவு சுட்டுத் தந்த தோசையில் அவளின் நிலா தோசையும் பகிரப்பட்டது..

காலையில் கோலம் போட்டு நகர்ந்த என்னிடம், "அவளும் போடறா புள்ள... உன்ன மாதிரியே நாலு இதழ் பூக்கோலத்தை" என்றாள் முகமெல்லாம பூவாக.

கால்வலி என படுத்த நாளில் அவள் பிஞ்சு கை கால் அமர்த்தி ஏதோ மந்திரம் சொல்லி அம்மாயி சரியாப் போய்டும் இப்ப பாரேன் என ஓடிய கதைகள் இல்லாமல் இங்கு இரவு நகர்வதே இல்லை....

எதிர் வீட்டுக்கு புதிதாய் வந்த அவள் வயது தோழியுன் காய் சமைத்து விளையாடிய போதும் அம்மாவை சேர்த்துக் கொள்வாளாம்...

எப்போது கதை கேட்டு முடித்தாலும் கை தட்ட மறக்காத அவளைப் பற்றி நிமிடத்திற்கொரு கவிதை பிறக்கிறது அம்மாவிடம்.

இதோ ஊருக்குப் போக பேருந்தில் ஏற்றிவிட்டு கிளம்ப காத்திருக்கும் என்னிடம், "ஹரி குட்டியப் பார்த்துக்க... அப்பிடியே உன் அப்பா மாதிரி"ன்னு கலங்கிய கண்ணோடு அம்மா நகர்ந்தாலும், எனக்கு ஆசுவாசமாய் இருந்தது... அவள் செல்லும் பாதையில் தான் அவளின் உயிர்த்திசை விரியும் என...

- இந்து

Pin It