மழை… எட்டுப்பட்டி ராசா ஊறிப்போயிருந்தது.

ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றேன். ‘சில்…’லென்று மழைச்சாரல் மேனியில் பட்டாலும் உரைக்கவில்லை. பதினொரு ஆண்டுகள் ஆகிறது நான் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி. சிலர் பார்த்தவுடனே என்னை அடையாளம் கண்டுகொண்டனர். பல இளைஞர்களுக்கு என்னைத் தெரியவில்லை. நின்றுக்கொண்டிருந்த கருப்பையா, சக்தி, சண்முகம் இவர்களை எனக்கு தெரிந்தது. பள்ளி சிறுவர்களாகப் பார்த்தது. தோற்றத்தில் இளம் வயது அடையாளங்கள் தெரிந்தன. மெல்லியதாகப் புன்னகை வந்தது. அருகில் அழைத்து நலம் விசாரித்தேன். புதிதாக பழகுவது போல் பயம் கலந்த கூச்சத்துடன் பேசினர்.

‘காலேஜ் படிக்கிறீங்களா…?’

சண்முகம் ‘ஆமாண்ணே…’

‘பைய குடுங்கடா நா வச்சுக்குறேன்…’

கருப்பையா ‘பரவால்லணே…’

சக்தி ‘அதுல ஒன்னுமே இல்லண்ணே. ச்சும்மா சீனுக்கு’

கருப்பையா அவனை அடிக்கப்போக மற்றவர்களுடன் நானும் சிரித்தேன். பேருந்து பாப்பாபட்டியைத் தாண்டியது. விரிச்சலாற்றில் பாலம் கட்டியிருந்தனர். முன்பெல்லாம் பெரு மழைக்காலங்களில் ஊருக்குள் பேருந்து வராது. ஆற்றில் வெள்ளம் வடியும் வரை ஊருக்குள்ளே முடங்கி கிடப்போம். அவசரக்காலங்களில் கோட்டையூர் வழியாக சுற்றித்தான் டவுனுக்கு வர வேண்டியிருக்கும். முன்பை ஒப்பிடுகையில் சாலைகள் பரவாயில்லை. பெரும்பான்மையான வயல்களில் விதைப்பு நடப்பதாகத் தெரியவில்லை. அதே மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும். புதிதாக ஆங்காங்கே தோப்புகளுக்குள் கோழிப் பண்ணைகள் இருந்தன. தலைக்கு மேலே மஞ்சள் விளக்குகள் எரிந்துக்கொண்டிருக்க வெள்ளைக் கோழிகள் திரிந்தன. செங்குளம் வந்தது. செங்குளத்தில் ஆட்கள் இறங்கும் போது அலைபேசியில் சிவாவை அழைத்தேன்.

சிவா ‘அல்லோ…’

‘செங்குளம் வந்துட்டேன்’

‘ஓய்…’

‘செங்குளம் வந்துடண்டா…’ கத்தி சொன்னேன்.

‘வா வா… மந்தையிலதேன் நிக்கிறேன்…’

பேச்சைக் கேட்க இனிமையாக இருந்தது. அழகான நடை. ‘ரெண்டு நாள் போனா நானும் பழய மாதிரி பேச ஆரம்பிச்சுடுவேன்’ எனத் தோன்றியது. வழக்கம் போலவே ஊருக்கு அறிவிப்பு கொடுக்கும் விதமாக ‘நான் வந்துட்டேன்’ என்பதை போல ‘பாம்…’ என்றது பேருந்து. சின்னதாகத் தூக்கம் போட்ட பலரில், துல்லியமாக ஆவிச்சிப்பட்டி ஆட்கள் மட்டும் எழுந்தனர். நான் மறுத்தும் கருப்பையாவும் சண்முகமும் உரிமையுடன் பையைத் தூக்கிக்கொண்டனர். சிவா குடையுடன் நின்றுக்கொண்டிருந்தான்.

‘வாடா… வா வா’ பைகளை வாங்கிக்கொண்டே என் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் வரவேற்றான்.

குடையை என்னிடம் கொடுத்துவிட்டு பச்சை வண்ண கதர் துண்டை தலையில் போட்டுக்கொண்டான். மழை விட்டபாடில்லை. அவனுக்கும் சேர்த்து குடையை நீட்டினேன்.

‘எனக்கு வேண்டாம்டா…’

எங்கள் வீட்டை நோக்கி நடந்தோம். சத்துணவு வாத்தியார் வீட்டு முன்பு புதியதாக தேநீர் கடை முளைத்திருந்தது. கடைக்குள்ளிருந்த பெருசுகள் பார்வையாலேயே அடையாளம் தேடினர். குடிசைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த முகங்கள் சத்தம் போட்டு நலம் விசாரித்தனர். சிவா எதுவும் பேசாமல் விர்ரென்று அதே போலவே நடந்தான். நான் குடையை உயரே பிடித்துக்கொண்டு ஊரைப் பார்த்துக்கொண்டே வந்தேன். கடலை கருக்கும் வாசம் வந்தது. மழைப்பெய்யும் சமயங்களில் கடலை சுட்டுத்தின்னும் சுகமே தனி. அந்நேரங்களில் எலியும் பூனையும் கைக்குலுக்கி கொண்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.

திண்ணையில் பைகளை வைத்துவிட்டு வேட்டியில் சுருட்டி வைத்திருந்த சாவியை எடுத்தான் சிவா. வீட்டில் புதிதாக சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தது. பழைமை மாறாமல் அதே போலவே வீடு இருந்தது மனசுக்கு நிறைவை அளித்தது. வீட்டுக்குள் நுழைந்து மெதுவாக ஒரு சுற்று வந்தேன். பெரிய வீடெல்லாம் ஒன்றும் இல்லை. வாசலுக்கு முன் இடது புறத்தில் திண்ணை. வீட்டுக்குள் நுழைந்ததும் இடது ஓரத்தில் இரண்டு விறகு அடுப்பு, வலது ஓரத்தில் அம்மிக்கல், உரி போன்றவை. அதைத் தாண்டினால் வடக்கு தெற்காக நீள முற்றம். அதைத்தொடர்ந்து சிறிய அறை. சிறுக சிறுக சேமித்து அப்பா கட்டிய வீடு. நாங்கள் சென்ற பின்னர் சிவாவும் அவன் அப்பாவும்தான் வீட்டை பராமரித்தனர்.

தண்ணீர் எடுத்து கொடுத்துவிட்டு கதவோரத்தில் அமர்ந்தான். நான் தண்ணீர் குடித்துவிட்டு ‘வீட்ட நல்லா பாத்துக்கிட்டதுக்கு ரொம்ப தாங்ஸ்டா’ என்றேன். அவன் பதில் ஏதும் பேசாமல் துண்டை வாயில் திணித்து மந்தையில் இருந்து அடக்கிக்கொண்டு வந்த அழுகையை ‘குப்’பென்று கொட்டினான். நான் எதுவும் பேசவில்லை. பழைய காலங்கள் அவனுக்கு நினைவுக்கு வந்து அழத்தொடங்கியிருப்பான். அவன் அழுகட்டும்… திண்ணையில் அமர்ந்து மழையை வெறித்தேன்.

நான் அம்மா அப்பாவுடன் இந்த வீட்டில்தான் இருந்தேன். அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். இரண்டு ஏக்கரில் தென்னந்தோப்பு இருந்தது. மகிழ்ச்சியான வாழ்க்கைதான். எதிர்பாராத விதமாக இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மழை பொய்த்து விட்டது. கிணற்றிலும் தண்ணீர் வற்றியது. அன்றாட செலவுக்கே பணம் போதாமல் தென்னந்தோப்பு மீது வங்கியில் விவசாயக் கடன் வாங்கினார் அப்பா. அடுத்து வரும் காய்வெட்டில் கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அப்பாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கடுத்த ஆண்டுகள் பூச்சித்தாக்கி மரங்கள் வாடத் தொடங்கியது. அம்மாவின் நகைகளையும் விற்று அனைத்து வகையான மருந்துகளையும் அடித்துப் பார்த்தார். எதுவும் பயன் தரவில்லை.

வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு வரத் தொடங்கினர். கடன் வாங்கி வட்டி கட்டும் நிலைமை வந்தது. வங்கி அதிகாரிகளின் வருகை அதிகரித்து ஒரு கட்டத்தில் ஊரில் அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்பட்டார். இரண்டு மூன்று நாட்கள் மெளனமாகவே திரிந்தார். வீடே நிசப்தமாக இருந்தது. ஒருவித பயம் என்னை சூழும் நேரத்திலேயே அப்பா பூச்சி மருந்து குடித்து இறந்துவிட்டார். தனிமையில் நானும் அம்மாவும் மனதுக்குள்ளே கதறினோம். வங்கி அதிகாரிகள் தோப்பை கையகப்படுத்தினர். தோப்பை விற்று கடனுக்கு மேலிருந்த தொகையை அம்மாவிடம் தந்தனர். அந்தத் தொகையை கடன் கொடுத்தவர்களிடம் அம்மா கொடுத்த போது அவர்கள் அன்போடு வாங்க மறுத்தனர். பலர் தடுத்தும் அப்பா இல்லாத வீட்டில் இருக்க பிடிக்காமல் நானும் அம்மாவும் சென்னைக்கு சென்றோம். எனக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக வீட்டு வேலைகள் செய்து படிக்க வைத்த அம்மா நான் கல்லூரி முடிக்கும் காலத்தில் இறந்துவிட்டாள். சில நாட்கள் பித்து பிடித்தவன் போல் திரிந்தேன். தகவல் தெரிந்து சிவாவின் அப்பா சென்னைக்கு வந்து ஆறுதல் சொல்லிவிட்டு போனார். பேராசிரியர் ஒருவரின் அறிவுரையுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினேன். பெங்களூருவில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. அனைத்தையும் மறந்து இருந்த சமயம் திடீரென்று ஊரின் ஞாபகம்… அந்த ‘அழகியத் தருணங்களின்’ ஞாபகம். அவ்வப்போது கடிதம் மூலம் பேசிக்கொள்ளும் சிவாவை தொடர்பு கொண்டேன்.

மழை குறைந்து தூறலானது. சிவா தலை கவிழ்த்தபடியே இருந்தான். உள் அறையை பார்க்காலமென்று வீட்டினுள் நுழைந்த போது நிலைப்படியில் ‘படா’ரென்று தலை மோதியது.

‘பாத்து வாடா…’ எழுந்து என் தலையை அழுந்த தேய்த்தான்.

‘வந்தனுடயே ஒப்பாரி வக்கிறியான் பாரு… உள் வீட்டுச்சாவி எங்கடா?’ சிறிய கோவத்துடன் கேட்டேன்.

உரிக்குள்ளிருந்து சாவியை எடுத்துக் கொடுத்து ‘எத்தன நா லீவு போட்ருக்க?’

‘ரெண்டு மாசம் முலுசா இங்கதாண்டா… எல்லாத்தையும் மறந்து ஜாலியா இருக்கனும். இனிமே எல்லா லீவுக்கும் இங்கதான்’ அறையினுள் நுழைந்து ‘பலசயெல்லாம் ஞாபக படுத்தக்கூடாது…’ கண்டிப்புடன் கூறினேன்.

துண்டை உதறி திண்ணையில் அமர்ந்தான்.

‘என்னய அரங்கேனு நெனச்சியாக்கும்? நீ கல் நெஞ்சு காரந்தாண்டா’

திண்ணையில் அமர்ந்து அவன் சொன்னது வீட்டினுள் இருந்த எனக்கு மெல்லியதாக கேட்டது. அம்மா அப்பா இருவரும் சேர்ந்து நிற்கும் படத்தின் முன்பு கண்ணீருடன் கண்களைக் கசக்கினேன். வெளியில் வந்து திண்ணையில் அவனை உரசிக்கொண்டு அமர்ந்தேன்.

நான் ‘அப்பா எப்படி இருக்காரு?’

‘ந்தா வர்றாருல…’

கடமைக்காக இடுப்பில் வேட்டி, தோளில் ஒரு துண்டுடன் கம்பு ஊன்றி தளர்ந்த நடையில் வந்தார் சிவாவின் அப்பா. எழுந்தேன். மழைப்பள்ளத்தில் சிறிது தடுமாறினார். நான் அருகில் ஓடி தாங்கி அழைத்து வந்தேன்.

‘நாந்தேன் வீட்டுக்கு கூட்டியார்ரேனு சொன்னேன்ல… அதுக்குள்ள என்ன உனக்கு?’ சிவா கோவப்பட்டான்.

நிலைக்கல்லை பிடித்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார். எப்போதும் வெற்றிலைக் கறையுடன் காணப்படும் பற்கள் ஒன்று கூட இல்லை.

பொக்கை வாயினால் ஒலியைவிட காற்று அதிகமாக வெளியே வர ‘நல்லாருக்கியா?’ என்றார்.

‘நல்லாருக்கேப்பா… நீங்க நல்லாருக்கீங்களா?’

சில நொடி அமைதிக்குப் பின்னர் ‘தர்மாஸ்பத்திரில ஒரு வருசமா இருந்தேன். நத்தத்துல…’ சில நொடிகளுக்குப் பிறகு வலதுகை விரல்களை மேல்நோக்கி விரித்தார்.

நான் எதுவும் பேசவில்லை. அவரது உடம்பை மேலிருந்து கீழாகப் பார்த்தேன். ஓடுகளில் இருந்து நீர் சொடும் சத்தம் மட்டும் கேட்டது. மெதுவாகத் திரும்பி என் முகத்தை உற்று பார்த்தார். அந்தப் பார்வையில் வெளிப்படும் பல்லாயிரக்கணக்கான நல விசாரிப்புகள் எங்கள் ஊர் ஆட்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரிந்தது.

கம்பை ஊன்றி மெதுவாக எழுந்தார். சிவாவைப் பார்த்து ‘சாப்பிட கூட்டியா’ என்பது போல் சைகை செய்தார். வீடு வரை துணையாக செல்லலாம் என எத்தனித்தேன். மறுபடியும் என் முகத்தை நிமிர்ந்து பார்த்து ‘நா போயிர்வே’ எனத் தலையாட்டினார். திண்ணையில் வந்து அமர்ந்து அவர் செல்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

சிவா ‘ரொம்பா நா பெருசு தங்காது… ஏ பொண்டாட்டி இல்லாட்டி என்னைக்கோ போயிருக்கும்’

‘ஓ கல்யாணத்துக்கு கூட வரமுடியலடா. பொண்ணு எந்த ஊர்ரா?’

‘பன்னியாமலதேன். தல ப்ரசவம்ல அதேன் ஊருக்கு போயிருக்கு…’

‘கருவாயனுக்கு அவசரம்…’ அவன் இடுப்பை கிள்ளினேன்.

தலையைக் கவிழ்த்து வெட்கமாக சிரித்தான்.

நான் ‘ஊருணி வரையும் போயிட்டு வருவோமா?’

‘வீட்டுக்குல்ல கைலி இருக்கு. மாத்திக்கிட்டு வா’

வெகு காலங்களுக்குப் பிறகு எங்கள் ஊரின் மீது மகிழ்ச்சியான பொடி நடை. எதிர்படும் சொந்த பந்தங்களின் விசாரிப்புகளைக் கடந்து நடந்தோம்.

‘இன்னும் ஒரு வாரத்துக்கு ஓம்மேல பாசமா கொட்டுவாங்ஙே…’ என்றான் சிவா.

சின்னையா வீட்டருகில் செல்கையில் கடலை கருகும் வாசம். நினைத்தது போலவே சின்னையாவும் அன்னப்பூரணியும் கடலை சுட்டனர். ‘புஸ்ஸூ புஸ்ஸூ’ என்று அவர்களின் மகள் மகா தென்னை ஓலையால் தீயை வளர்த்தாள். இருவரும் என்னை கண்டுகொண்டனர்.

சின்னையா ‘யாரு அழகு மவனா…?’

‘நாந்தேன் மாமா. நல்லாருக்கீகளா?’

‘இருக்கேன் மாப்ள. வீட்டுக்கு வாங்க’

‘ந்தா வர்ரேன் மாமா’ சமாளித்தேன்.

அன்னப்பூரணி ‘கடல அள்ளி குடுஞ்சே…’ என்று மகாவின் முதுகில் தட்டினாள்.

சிவா ‘இருக்கட்டுத்த. அப்புறம் வாறோம்’ என்று என் கையை நெருக்கித் தள்ளினான்.

‘மூன் நாளைக்கி மின்ன புருசனும் பொண்டாட்டியும் கட்டி உருளாத கொற… இப்ப பாரு கடல சுட்டு திங்கிதுக’ என்றான் சிவா.

‘இன்னுமாடா சண்ட போடுதுக. பாவம்டா மகா’

‘அட நீ வேற. அது பெரிய ராங்கிடா’

மெல்லியதாகப் புன்னகைத்தேன். ஊருணி கரையில் அரச மரத்தடியில் அமர்ந்தோம். நெடு நேரம் வரை பேசியும், எங்கள் பேச்சு ஆவிச்சிப்பட்டியைத் தாண்டவில்லை. நினைவை அங்குமிங்கும் அலையவிட்டு கடைசியில் செம்மணிபட்டி கம்மாயில் வந்து நின்றோம்.

“இப்பதேன் ஞாபகம் வருது. நாளைக்கி செம்ணிபட்டி கம்மாயில ‘அளிய விட்றாய்ங்கலாம்’. நாம போவோமா?”

‘இது என்னடா கேள்வி? நாமதேன் மொத ஆளா நிக்கிறோம்’

விதைப்பு காலமெல்லாம் முடிந்து தண்ணீர் கிரண்டை காலுக்கு வந்தவுடன் ‘அளிய விடுதல்’ நிகழ்ச்சி நடைபெறும். வாய்ச்சொல் மூலமாகவே இந்த நாளில் இந்தக் கம்மாயில் ‘அளிய விடுறாங்க’ என ஊர் சனங்களிடையே தகவல் பரவும். கம்மாய்ப் பாசன பகுதியில் யாருக்கு அதிக நிலம் இருக்கிறதோ அவர்தான் கம்மாய் மீது அதிக உரிமை உள்ளவர். குறைந்த தண்ணீரில் மீன்கள் துள்ளிக்கொண்டிருக்க உரிமையானவர் கரை மீது ஏறி துண்டசைத்தால் மீன்களைப் பிடிக்க சனக்கூட்டம் உள்ளே பாயும்.

செம்மணிபட்டி கம்மாய் அந்தப் பகுதியிலேயே பெரியது. ஏழுக்கும் மேற்பட்ட மடைகள். முழுதாக பதின்மூன்று கிராமங்கள் இந்தக் கம்மாய் நீரை நம்பித்தான் உள்ளன. மடைத்தண்ணீர் மீனகளை அடித்து வரும் என்பதால், மடைகளைக் கணக்கிட்டுதான் ஆட்கள் வருவார்கள். எல்லாக் கிராமங்களிலும் இருந்தும் ஆட்கள் தென்பட்டனர். நாங்கள் காலை ஆறு மணிக்கே சென்றுவிட்டோம். எங்களுக்கு முன்னரே கூட்டம் அலைமோதியது. கரையில் ஆணும் பெண்ணுமாக அமர்ந்திருந்தனர். கூட்டத்தில் ஒருத்தியாக மகாவும் இருந்தாள். அவள் இருக்கையில் தண்ணீருக்குள் இறங்க எனக்கு கூச்சமாக இருந்தது.

‘சிவா…’

‘என்னடா?’

‘நீ மட்டும் எறங்குடா…’ தயங்கி சொன்னேன்.

அவன் இதை எதிர் பார்க்கவில்லை. கோவப்பட்டான். ‘டேய் என்னடா ஆச்சு ஒனக்கு. நேத்து என்னமோ மொத ஆளா வரணும்னு சொன்ன?’ கூட்டத்தை ஒரு சுற்று பார்த்தான். ‘கூட்டத்த பாத்தில…? வதிக்குள்ள போட்டு அமுக்கிபுடுவாங்ஙே. கூடமாட ஒத்தாசைக்கு நீயும் எறங்கு. ந்தா… ஆறுமுகம் வந்துட்டியான்’

காலங்காலமாக ஆறுமுகம் குடும்பத்திற்குதான் அந்தக் கம்மாயின் மீது அதிக உரிமை. ஒட்டு மொத்தக் கூட்டமும் ஆறுமுகத்தை நோக்கியது. தள்ளு முள்ளு அதிகரித்தது. ஆறுமுகம் கிழக்கு கரையின் மீது ஏறினான். சிலர் தண்ணீரில் இறங்க முயல, அவர்களை மற்றவர்கள் தடுத்தனர். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவசர கால அறிவுரைகள் வழங்கினர். இளைஞர்கள் அரைக்கால் சட்டையுடன் கையில் பையை வைத்துக்கொண்டு பாய தயாராக இருந்தனர். அனைவரும் ஆறுமுகத்தின் கையில் இருக்கும் துண்டின் மீது பார்வையை பாய்ச்சினர்.

மகா எவ்வித பதற்றமும் இல்லாமல் நின்றிருந்தாள். அவள் மீன் பிடிப்பதில் கெட்டிக்காரி. இரண்டு ஆண்கள் பிடிப்பதை அவள் ஒருத்தியே பிடித்து விடுவாள். எங்கள் பள்ளி பருவங்களில் அவளுக்கு இணையாக யாரும் மீன் பிடிக்க முடியாது. மீனுக்கு காயம் ஏற்படாமல் காலிலேயே அமுக்கி பிடிக்கும் அதே நேரத்தில் கையிலும் ஒரு மீனைப் பிடித்திருப்பாள். அவளின் கைகள் இறுக்கி பிடித்திருக்கும் கட்டைப் பையினுள் மீன்கள் துள்ளிக் குதிக்கும்.

யாரோ தண்ணீருக்குள் கால் வைக்க முயல ‘டேய்… சுப்பு மவனே…’ என்ற அதட்டலை சுப்பு மகன் பொருட்படுத்தினானோ? இல்லியோ? நான் கவனித்தேன். மகாவின் அதட்டல்தான் அது.

ஆறுமுகம் துண்டசைத்துவிட்டான். ‘வாடா… வாடா…’ என திரும்பி பார்க்க கூட நேரமில்லாமல் சிவா உள்ளே தாவினான். நான் இறங்கவில்லை. நொடிப்பொழுதில் கரையில் ஒருபய இல்லை. என்னைத் தவிர…

சிவா வீட்டில் சமையல் நடந்தது. இடையிடையே எனக்கு அவனிடம் இருந்து திட்டும்.

‘சரி விட்ரா… நீ ஒரு ஆளாவே இவ்ளோ புடிச்சிருக்க. இதுக்கு மேலயுமா வேணும்?’

‘நல்லா வாய் மட்டும் பேசு. ந்தா… கைய கழுவிட்டு வா…’ செம்பை நீட்டினான்.

நான் அப்பா சிவா மூவரும் சாப்பிட்டோம். சுவையாக சமைத்திருந்தான்.

நாட்கள் செல்ல செல்ல என் மீதிருந்த விருந்தினர் பார்வை அகன்றது. வயல், காடு, டவுன், மலை, நண்பர்களுடன் கச்சேரி என அழகாக பொழுது கழிந்தது. எனக்குள் ஒரு வெறி உண்டானது. சிறு பொழுது கூட வீட்டில் அமர்வதில்லை. பதினொரு ஆண்டுகள் பசியை ஒருசேர தீர்த்துக்கொள்ள துடித்தேன். எனக்கென்று சிறு வேலை கிடையாது, கடமை கிடையாது. ஊர் சுற்றுவது, சாப்பிடுவதுதான் அந்த நாட்களில் என் வேலை. என் வீட்டில் சமைப்பதற்கு ஆள் இல்லை எனினும், சொந்தகாரர்கள், தெரிந்தவர்கள் என யார் வீட்டிலாவது சாப்பிட்டு விடுவது. கிராமத்தில் உபசரிப்புக்கா பஞ்சம்? சில நாட்களில் சிவா மனைவியை பார்க்க செல்வான். நானும் இரண்டொரு முறை சென்று வந்தேன். நான் எதிர்ப்பார்த்தது போலவே மகிழ்ச்சியுடன் இருந்தேன். ஆனால் நாட்கள் செல்வதை நினைத்து உள்ளுக்குள் ஒரு கவலை. ‘பராவல்ல. ஊரு எங்க போகப்போது?’ என்று சமாதானத்தையும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

அன்று நல்ல தூக்கம். கிழக்கின் கீழ்வானத்துக்கும் உச்சிக்கும் நடுவே கதிரவன் தொங்கிக்கொண்டிருந்தான். நான் அப்பொழுதுதான் முகம் கழுவி திண்ணையில் வந்து அமர்ந்தேன். சக்தி ‘வெடுக் வெடுக்’ என படலுக்குள் வந்தான்.

சக்தி‘அண்ணே…’

‘வாடா… என்ன நீ மட்டும் வார? எங்க ஓ கூட்டாளிலாம்?’

‘கம்மாய்க்கு போயிட்டாங்ஙே. நீயும் வந்துரு’

‘ஏண்டா…’ கொட்டாவியின் ஊடே கேட்டேன்.

“சாப்புட வந்துரு. இன்னைக்கு ‘தெரக்கல்’லு. காசு வேணும்ணே’ உரிமையுடன் கேட்டான்.

‘சட்டைக்குள்ள இருக்கும் எடுத்துக்க’ உள் வீட்டினுள் ஆணியில் தொங்கிய சட்டையை காண்பித்தேன்.

பணம் எடுத்துக்கொண்டு என்னருகில் வந்தவன், ‘சரிண்ணே. நீ போ. நா கறி வாங்கியார்ரேன்…’

சிறிது நேரத்தில் கம்மாய் பக்கம் புறப்பட்டேன். வெயில் ‘சுள்…’ என்று இருந்தது. அறுவடை முடிந்த வயல் நாற்றுகளில் கால் வைத்து நடக்க இதமாக இருந்தது. ஆங்காங்கே ஆடு மாடு மேய்ச்சல் நடந்து கொண்டிருந்தது. ஏரக்காபட்டி மலையில் மேக பூதம் விளையாடிக் கொண்டிருந்தது. கம்மாய் கரையில் ஏறி இறக்கத்தில் வேண்டுமென்றே ஓடி இறங்கினேன். எனக்கு முன்னமே சிவா மற்றும் ஏழெட்டு பேர் அங்கே இருந்தனர்.

‘நீ எப்படா வந்தே?’

சிவா ‘வெயிலு குண்டியில சுடுற வரைக்கும் என்னால தூங்க முடியுமா…?’ என்னை குத்தி காண்பித்தான்.

வேலைகள் மும்முரமானது. சக்தியும் வந்து சேர்ந்தான். அவன் வண்டி சாவியை கருப்பையா மற்றும் அய்யனாரிடம் ஒப்படைக்க, அவர்கள் ஒரு கட்டைப் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினர். எல்லோர் முகத்திலும் ‘நல்லா வரவேண்டும்’ என்ற பதபதைப்பு.

‘தெரக்கல்’ என்பது சிறிய சமையல் வேலைதான். சிறுவர்களுக்கான கூட்டாஞ்சோறு மாதிரி. எந்த வேலையும் இல்லாத சமயங்களில் எங்கள் ஊர் இளைஞர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறம் தெரக்கல் தயார் செய்வார்கள். பெற்றோர்களுக்கு தெரியாமல் சற்று பெரிய பாத்திரம், பட்ட மிளகாய், கொஞ்சம் எண்ணெய், ஆட்களின் எண்ணிக்கையை பொறுத்து கடையில் ஆட்டுக்கறி அவ்வளவுதான். இதில் மிளகாயும் எண்ணெயும் கூட கறியுடன் சேர்த்து கடையில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் யாருக்கும் தெரியாமல் பாத்திரம் எடுப்பதுதான் சிரமமான வேலை. ‘என்னைக்காது ஒரு நாளு பயலுக ஒன்னா சேந்து ஜாலியா சமச்சு சாப்புறதுக்கு கூட, வீட்ல பாத்திரம் தர மாட்றாங்ஙே’ என்று இளசுகள் கோவப்பட முடியாது. ஏனெனில்…

‘அண்ணே பீரு கூலிங் இல்லையாம்…’ என்று கருப்பையாவும் அய்யனாரும் அலைபேசியில் கேக்க, பதிலுக்கு ‘பரவாயில்ல வாங்கிட்டு வா…’ என்றான் துரைச்சாமி.

சருகு, சுள்ளிகளை போட்டு அடுப்பூட்டி பாத்திரத்தை வைத்துவிட்டான் சிவா. சக்தி கம்மாய் தண்ணீரில் கறியை அலசி கொடுத்துவிட்டு, இலை அறுக்க சென்றான். சிவா ‘மட மட’வென்று எண்ணெயை ஊற்றி பட்ட மிளாகயை வதக்கிவிட்டு, கறியை அள்ளிப்போட்டான். சிறிது நேரம் எண்ணெயில் கிண்டி விட்டு எடுத்தால் ‘தெரக்கல்’. உப்பு, காரம் எல்லாம் கிடையாது. சிவா அடுப்பை இறக்கி வைக்கவும், கட்டைப் பை வருவதற்கும் சரியாக இருந்தது. ஆளுக்கு ஒன்றாக எடுத்து ஆரம்பித்தோம்.

கறி தீர்ந்துவிட்டது. ஆனால்… அனைவருக்கும் நல்ல கிறுக்கு. பொழுது சாயும் வரை ஆளுக்கொரு திசையாக தூங்கி போனோம். இருளும் உணர்வு அனைவருக்கும் ஏற்பட, கண்விழித்து ஊர் பார்த்து சென்றோம். மந்தைக்கு அருகில் செல்லும் போதே சின்னையா வீட்டில் போர்க்குரல். ஊரே அங்கு கூடி மல்லுக்கட்டி கொண்டிருந்த கணவன் மனைவியை சமாதானம் செய்து கொண்டிருந்தனர். இதை பயன்படுத்திக் கொண்டு பாத்திரம் எடுத்து வந்தவன் யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்துவிட்டு கூட்டத்தில் ஒருவனாக கலந்தான். மகா சோகமாக அமர்ந்திருந்தாள். எல்லோரும் கல்யாண வயதில் இருக்கும் அவளை நினைத்து கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பர். நானுந்தான்…

இன்னும் முன்று நாட்களில் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். சிவா என் முகத்தில் சோகத்தைப் பார்த்திருப்பான் போல, ஆறுதல் வார்த்தைகள் சொன்னான்.

தேவையான பொருட்களை எடுத்து பெட்டியினுள் நானும் சிவாவும் நிரப்பிக்கொண்டிருந்த போது, கையில் ஒரு படிவத்துடன் கண்ணுச்சாமி வந்தார்.

திண்ணையில் அம்ர்ந்து ‘மாப்ள… ஊருக்கு பொறப்டாச்சா…?’

‘ஆம மாமா… என்ன கையில?’

‘இதுக்குத்தேன் மாப்ள வந்தேன். இத நெரப்பிக்குடு மாப்ள’

கையில் வாங்கிப் பார்த்தேன்.

‘லோன் போடுறீங்களா?’

‘ஆமா மாப்ள. இருக்குறதே ஒரே பொண்ணு. அதுக்கு கூட ஒலுங்கா சீர் செய்யலேன்னா… எலக்காரமா நெனப்பாங்ஙே. ஆனா, கையில ஒரு பொட்டு காசு இல்ல. அதேன் இருக்குற நெலத்த வச்சு லோன் போடலாம்’னு…’

நான் அதுக்கு மேல் எதுவும் பேசவில்லை. சிவா என்னை பார்த்துக்கொண்டே இருந்தான்.

‘இப்ப லோன் எடுத்தா, எப்ப மாமா திருப்பி அடைப்பீங்க?’

படிவத்தில் கேட்டிருக்கிறார்கள் என்ற நினைப்பில் பதில் சொன்னார் ‘ரெண்டு மூனு வருசத்துல…’

நான் பணத்தை எடுத்து நீட்டி ‘மூனு வருசத்துல குடுத்துருங்க…’ என்றேன்.

அவர் திகைத்து விட்டார். சிவா மெல்லியதாக புன்னகைத்தான். அவனுக்கு பழைய நினைவுகள் வந்திருக்கும்…

‘வைங்க மாமா. எனக்கு பணத்துக்கு கஷ்டமில்ல. எப்ப உங்களால கொடுக்க முடியுதோ அப்ப கொடுங்க’

சிவா ‘அதேன் சொல்றான்ல… எதுக்கு லோனு அது இது’னு அவிங்கள்ட்ட போயி தொங்குற? பணத்த வாங்கி வையி’

சிறிய பூரிப்புடன் வாங்கி கொண்டார். அவருக்கு என்ன பேசுவெதென்று தெரியவில்லை. சிவா பேச்சுக்கொடுத்து சிறிது நேரம் உரையாடினான். சிறிது நேரத்தில் விடைப்பெற்று சென்றார்.

அவர் சென்றவுடன் ‘சிவா உனக்கு ஏதாவது…?’ தயக்கத்துடன் கேட்டேன்.

‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்டா. நா நல்லாத்தேன் இருக்கேன். எனக்கு எதுவும் தேவைனா நானே கேக்குறேன். ஓங்கிட்ட கேக்குறது எனகென்னடா…?’

சிறிது நேரம் கழித்து இருவரும் அப்பாவை பார்க்க சென்றோம். நான் ஊருக்கு செல்வதை அவரிடம் சொல்லி, அவரின் கைகளுக்குள் சில நூறு ரூபாய் தாள்களை திணித்தேன். ஒரு தாளை மட்டும் எடுத்து கொண்டு என் முகத்தை ஆழமாக உற்று பார்த்தார். அவரை உரசிக்கொண்டு கதகதைப்பை அனுபவித்தேன். வீட்டிற்குள் சென்ற சிவா வந்ததும் அப்பாவின் கையை தொட்டு விடைப்பெற்று கொண்டேன்.

இரவு நெடுநேரம் வரை மந்தையில் அமர்ந்து நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம். என்னை மகிழ்ச்சியாக வழியனுப்பும் நோக்கத்துடன் அனைவரும் உற்சாகமாக பேசினர். விடிவதற்கு சிறிது நேரம் இருக்கையில் தூக்க மிகுதியால் ஒவ்வொருவராக கலைய தொடங்கினர். நான் மந்தையிலயே உறங்கிவிட்டேன்.

காலை பதினொரு மணி பேருந்துக்கு செல்வதாக ஏற்பாடு. காலையில் இருந்தே வானம் இருண்டிருந்தது. மழைக்கு பயந்து அனைவரும் வீட்டினுள் பதுங்கினர். சிவா குடையுடன் வந்தான். மழை குமுறிக்கொண்டு வந்தது. பெருமழை. ‘இப்புடியே இருந்தா நல்லது’ என்று மனதுக்குள் ஒரு நினைப்பு. மழை நீடித்தது. வானத்தை நோக்கி முகத்தை நீட்டினால் ‘சுள்’ளென்ற ஊசிக் குத்தல்.

ஊருக்குள் கடலை கருக்கும் வாசம் பரவியது. எனக்கும் ‘கடலை சுட்டு திங்க வேண்டும்’ என்ற ஆசை வந்தது.

‘வீட்ல கடல இருக்காடா…?’ சிவாவிடம் கேட்டேன்.

‘ஏண்டா… எடுத்து போறியா?’

‘சுட்டு திங்கலாம்’னு பாத்தேன்…’

அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

‘சின்னையா வீட்டுக்கு போவமா…?’

‘பைய எடு… பஸ்சு வந்தா அப்புடியே ஏறிக்கலாம்’

மழையின் ஊடே இருவரும் சின்னையா வீட்டு படலுக்குள் நுழைந்து ஓடினோம். நான் நினைத்தது போலவே சின்னையா, அன்னப்பூரணி, மகா மூவரும் கடலை சுட்டனர். எனக்கு எச்சில் ஊறியது.

சின்னையா ‘வாங்க… வாங்க…’ மகாவை பாத்து ‘ஆத்தா துண்ட எடுத்து குடு’

தலையைத் துவட்டினேன். அன்னப்பூரணி கை நிறைய கடலை அள்ளிக்கொடுத்தாள். நான் சிவாவின் துண்டை பிடுங்கி அதில் வாங்கி கொண்டேன். ஆசைத்தீர உடைத்து தின்றேன். நான் முடித்து விட்டதைப் பார்த்த அன்னப்பூரணி மகாவிடம் இன்னும் கொஞ்சம் அள்ளிக்கொடுத்து என்னிடம் கொடுக்குமாறு கூறினாள். மகா என்னிடம் கொடுத்துவிட்டு, வீட்டினுள் சென்று கொஞ்சம் கருப்பட்டி வெல்லத்தையும் எடுத்துவந்து கொடுத்தாள். சிலரின் வயிறு கடலையை ஒப்புக்காது. வயிற்று போக்கு ஏற்படும்.

சின்னையா ‘நல்லா மென்னு தின்னுட்டு, வெல்லத்த கடிங்க மாப்ள…’

மழை குறைந்தது. அனைவரின் மனமும் பேருந்து வரப்போவதை உணர்ந்தது.

அன்னபூரணி ‘துனூரு போட்டு விடுங்க’ மகாவிடம் ‘துனூரு எடுத்தாஞ்ச…’

சின்னையா ஊரில் முக்கிய சாமியாடி இல்லையென்றாலும், எப்பவாவது அருள் வரும். சிவாவிற்கும் சேர்த்து பூசிவிட்டார். பேருந்து வருகைப்பதிவு போட்டதும் நானும் சிவாவும் மந்தைக்கு புறப்பட்டோம். சிவா என்னிடம் சுமைகளைக் கொடுக்க மறுத்தான்.

அன்னப்பூரணி ‘போங்க…’ என்பது போல சின்னையாவிடம் சைகை செய்தாள்.

சின்னையாவும் ஒரு பையை வாங்கிக்கொண்டு எங்களுடன் வந்தார். அன்னப்பூரணியிடமும், மகாவிடமும் விடைபெற்றேன். என்னை வழியனுப்ப சிறுகூட்டமே பேருந்துக்குள் ஏறி சலசலப்பு செய்தது. எனக்கு சிறிய கூச்சமாக இருந்தாலும், உள்ளுக்குள் அன்புக்கான ஏக்கம். ‘பாத்து போ’ என்பதையே ஆளுக்கொரு விதமாக சொல்லிவிட்டு கீழே இறங்கினர்.

‘ஊருக்கு போயிட்டு போன் போட்றா…’ என்பதுடன் சில கண்ணீர் துளிகள் சேர்த்து சிவா நிறுத்திக்கொண்டான்.

பேருந்து இவ்வளவு நேரம் நின்றதே பெரிது. ஓட்டுனர் சிறிய உறுமலுடன் கிளப்பினார். அடுத்த முறை வரும் போது சின்னையாவிடம் பேச வேண்டும் என சபதம் எடுத்தேன். என் மனம் மகாவையே சுற்றி சுற்றி வந்தது.

மழை…

- பிச்சையம்மான்

Pin It