அந்த பனி சூழும் தேயிலை தோட்டத்துக்குள் அதிகாலை விலக்கும் காற்றின் உருவமென காயத்ரி தெரிந்தாள்.

அவள் ஒரு பிசாசின் அரூபமென தன்னை மறைத்துக் கொண்டே நகர்ந்தாள். அவ்வப்போது கீழே அமர்ந்து தேயிலை செடிகளின் நீள் வட்ட குறுக்கு வட்ட வழிகளில் சால் பிடித்து மெல்ல மெல்ல மேலேயும் கீழேயும் அலைந்தாள். கடந்த ஒரு வாரமாக இப்படி அதிகாலையில் அவள் ஓர் அந்நிய தேசத்துக்காரியின் அகத்தை தேடுவது போல தேடிக் கொண்டே திரிகிறாள். பச்சை தீ வெள்ளை மேற்பரப்பில் திரி கொண்டு முணுக் முணுக் என எரிவதாக இருந்தது அந்த தேயிலை தோட்டம்.

நன்றாக நினைவிருக்கிறது. சிறுவயதில் இப்படி இதே இடங்களில் நிறைய காளான்களை பறித்துக் கொண்டு வீடு சேர்ந்து மயில்சாமியோடு சமைக்க முயற்சிக்கும்போது ஓடி வந்த பாட்டி.... "அயோ சாமி.... இத திங்க கூடாது.... அவ்வளவும் விஷம்.... எனக்கு தெரிஞ்சே நாலஞ்சு பேர் தின்னுட்டு செத்திருக்காங்க....சமைச்சு திங்கும் போது துளி கூட வித்தியாசம் தெரியாது. ஆனா கொஞ்ச நேரத்துலயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்துடுவாங்க.... பொழைக்கறது ரெம்ப கஷ்டம்.... நல்ல காளான் நான் புடுங்கிட்டு வந்து சமைச்சு தாரேன்... இத தூக்கி போட்டுடு" என்று விஷக் காளான்களை பிடுங்கி தூக்கி வீசியது மனக்காட்டில் இன்றும் வெள்ளைக் குடை பிடித்துக் கொண்டிருக்கிறது. நல்ல காளான்களை வேறு ஒரு காட்டில் இருந்து பறித்து வந்து எண்ணையில் வதக்கி பொன் நிறத்தில் நீட்ட நீட்டமாய் நாவூறும் சுவை வடிய பாட்டி கிண்ணத்தில் போட்டு தர அதில் பிசைந்தே ஒரு தட்டு சோறு தின்றது தித்திக்கும் நினைவு.

தேயிலை குறுக்கு சால்களில் இரவில் படிந்திருந்த இன்னமும் வடிந்திருக்கும் பனியின் ஈரம் அவளின் இரு கைகளிலும் சிலீரென காட்டின் நடுக்கத்தை கொட்டியது. நினைவை சரி பார்த்துக் கொண்டே மீண்டும் மீண்டும் குனிந்து தேடினாள். இப்படி ஒரு பனிக்காலத்தில் தான் அப்படி ஒரு காளானை தான் பார்த்தும்.....பிடுங்கியும் வந்தது நன்றாக நினைவில் விரிந்தது. தேட தேட தூரங்கள் அலை அலையாய் தேயிலையின் தலை விரிந்த பனிக்காடுகள் அங்கே வெள்ளை யானையின் வரம்புக்குள் மூச்சு விடாமல் இருப்பதை மெல்ல எழுந்து அசைத்துப் பார்த்தாள். பின் அசையாது அமர்ந்து உட்கார்ந்தபடியே மண்டியிட்டு நடந்து கையில் கொண்ட டார்ச்சின் வெளிச்சத்தில் தூரமும் கிட்டமும் மாற்றி மாற்றி கடந்தாள்.

புதையல் கண்டவள் விழிகளின் நொடியில் பூத்த அவள் தேகம் சிலிர்க்க..........சவுக்கை மரத்துக்கும் தேயிலை (மரங்களின்) செடிகளின் இறுக்கத்துக்கும் இடையே தலை விரித்து பொக்கிஷமாய் பூத்து பரவிக் கிடந்தன காளான்கள். ஆவென கத்த தூண்டும் அதிசயங்களை கண்ட கணத்தில் மண் கொண்ட நட்சத்திரங்கள் மினுங்கிக் கொண்டு குடை விரித்திருந்தன. அதிலிருந்து பனி சொட்டிக் கொண்டிருந்தது. டோராவின் பொம்மை படம் பார்ப்பது போல இருந்தது. பனி சொட்டும் அதிகாலையை வேக வேகமாய் வேரோடு பறித்து கையோடு கொண்டிருந்த பையில் போட்டாள். பைகளில் முகம் மறந்து சிரித்துக் கொண்டிருந்தன காளான்கள்.

இறுக்கமான முகத்தோடு கண்கள் பனிக்க ஆழமாய் பார்த்தாள் காயத்ரி. அத்தனையும் விஷக் காளான்கள்.

பார்த்து பார்த்து சமைத்தாள். விஷக் காளான்களோடு கொஞ்சம் நல்ல காளான்களையும் சேர்த்து பொன்னிறத்தில் எண்ணெய் வடிய நீள நீளமாய் சமைத்தாள். எச்சில் ஊரும் மரணத்தில் மிச்சம் மீதி சாவு மட்டுமே. அவள் கண்கள் வடித்த கண்ணீர் குருதி சொட்டுகளென வாணலியில் விழுந்து எரிந்தது.

வழக்கம் போல கணவனுக்கு மதிய சாப்பாட்டில் பொரியலாக சமைத்த காளானை கொடுத்தனுப்பினாள்......ஒரு வதத்துக்கு காத்திருந்த காயத்ரி.

எப்போது மணி ஒன்றாகும் என்று கடிகாரத்தை 10 மணிக்கே பார்த்தாள். பத்தாது வேகம் என்றது மூளை. இன்னமும் அதிகாலை குளிர் அவளின் இதயத்தில் சொட்டிக் கொண்டிருந்தது. ஈரமற்ற கோபத்தில் தானுமற்று அமர்ந்திருந்தாள். நேரம் நகர நகர... காலங்கள் தலை அசைத்து அவளை சுற்றிக் கொண்டு கண்கள் விரிய ஏன் இப்படி செய்தாய் என்று கேட்பதாக பட்டது.

அழும் மொழியை கை கொண்டு பொத்தினாள். மீறி வெடித்த அழுகையை ஆறாக்கடலென விட்டு விட்டு நெக்குருகி அமர்ந்தாள். 

6 மாதங்களுக்கு முன்

அந்த முகத்தை அவனுக்கு தெரியும். அது இன்று சொந்த முகமாக இல்லை. . .

"என்னாச்சு...." என்றான்.

கண்களை உற்று நோக்கிய நீல கண்களில் தேவதையின் நிறம் சற்று குறைந்திருந்ததாக தோன்றியது.

"என்னாச்சுன்னு கேக்கறேன்ல.....?" மதுரன் சற்று உரக்க கேட்டான்.

மாட்டிக் கொண்ட பூனையின் நடுக்கத்தோடு கதவை அடைத்துக் கொண்டு வந்து கட்டிக் கொண்டாள் திலோ.

"திலோ என்னாச்சுன்னு கேக்கறேன்ல.....!" தோள்கள் பற்றி உலுக்கினான் மதுரன்.

வார்த்தையை தொண்டை அடைத்துக் கொள்ளும் தவிப்பை திலோவின் சிவந்த கழுத்து வெடிக்க துடிக்கும் நரம்புகளின் மிரட்சியில் நீல நிறம் பூத்து துடித்தது.

"கோபப் படக் கூடாது" என்றவள் வார்த்தைகளை தேடி குரல் உடைந்த கழுத்தை அழுகைக்கு தந்து விட்டு அவன் மீது சரிந்தாள்.

"அயோ.... என்னாச்சுப்பா........" என்று கத்தியவன் மனதுக்குள் ஏதோ விபரீதம் என்பது மட்டும் ஆணி அடித்து மண்டை பிளந்தது.

"இன்னைக்கு பகல்ல மாப்பிள்ளை வந்தார்..."

"யாரு விகாஷ் ஆஹ்....?!"

"ம்ம்ம்ம்..... நகை வாங்கிட்டு வர சொல்லி காயத்ரி அனுப்பி இருக்கா...."

"சரி...."

"நகை எடுத்து குடுக்க பீரோவை திறந்து பார்த்துக்கிட்டிருக்கேன்... சட்டுனு பின்னால வந்து கட்டி பிடிச்சு முத்தம் குடுக்க ஆரம்பிச்சுட்டான்..."

திக்கென்று உடல் நடுங்க... இன்னும் அவளருகே நகர்ந்தவன்... அவளையே உற்று பார்த்தான். அவன் உயிர் நடுங்கியது.

"அப்புறம்....?" சொல் எச்சில் விழுங்கியது.

"அப்புறம் புடிச்சு தள்ளி விட்டுட்டு........ 'ஒழுங்கா வெளிய போய்டு.......கத்தி ஊற கூட்டிட்டுடுவேன்னு' சொல்லவும்.....மன்னிப்பு கேட்டு.....'தெரியாம பண்ணிட்டேன்.. மன்னிச்சிக்குங்க........ உங்கள நான் அக்காவா நினைக்கல,........அதான் தனியா இருக்கவும் மைண்ட் டிஸ்டர்ப் ஆகிருச்சு... பிளீஸ்.... பெருசு படுத்தாதீங்கன்னு'...... சொல்லிட்டு போய்ட்டான்...." என்றவள்... மதுரனை கட்டிக் கொண்டு அழுதாள்.

பதிலற்று அவளை தேற்றிக் கொண்டிருந்தான் மதுரன்.

"எத்தன நாள் சோறு போட்ருப்பேன்....... தம்பி தம்பின்னு எத்தனை நாள் எப்படி எல்லாம் கவனிச்சிருப்பேன்........ எப்போ வந்தாலும்... ஆடு கோழின்னு எத்தன நாள் நானே கடைக்கு போய் வாங்கிட்டு வந்து சமைச்சு போட்ருப்பேன்........! இப்டி நடந்துக்க எப்படி மனசு வந்துச்சு.... ? அக்காவுக்கும் பொண்டாட்டிக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கு தங்கச்சிய குடுத்துட்டோமே...."

திலோவின் விம்மல் பெரும் அச்சத்தை கொடுத்தது. மதுரன் கண்கள் கலங்க அவளை அணைத்துக் கொண்டான்.

"இத இப்டியே விட்ருங்க... நம்ம புள்ள அங்க இருக்கா...." மூக்குரிந்த மொழியில் வார்த்தை தடுமாறியது அவளுக்கு.

"அதுக்கு.... தப்ப தப்பாவே விட்ற சொல்றயா.... தப்பு திலோ.... அவன் நல்லவன்னு நினைச்சு தான தங்கச்சிய கட்டி கொடுத்தோம்.... இவ்ளோ கேவலமா இருக்கானே.... நாளைக்கே தங்கச்சியை எங்கையாவது வித்துட்டான்னா என்ன பண்ண...." என்று பேசிக் கொண்டே அலைபேசியில் விகாஷ் க்கு அழைத்தான். காலப் பிழையாக அழைப்பு மணி சிணுங்கி கொண்டே இருந்தது.

விகாஷ் எடுக்கவில்லை. மீண்டும் அழைக்கையில் அலைபேசி செத்திருந்தது.

அறைக்குள் அங்கும் இங்கும் ஒரு கொலைக்கான கோபத்தோடு நடந்தான்.

"நீ அவனை சும்மா விட்ருக்க கூடாது. செருப்பாலேயே நாலு போட்ருக்கனும்...இல்ல...இரு கதவை சாத்திட்டு வர்றேன்னு சொல்லி... வெளியே போய் கதவை சாத்திட்டு எனக்கு போன் பண்ணிருக்கணும்.......அத விட்டு இப்டி புலம்பி அழுதுகிட்டு இருக்க..... ஐயோ......... நாட்டோடு பண்பாடு வீட்டுக்குள்ள இருந்து தான் வளரணும். இப்படி வீட்டுக்குள்ளேயே சீர் கேட்டு கிடந்தா அப்புறம் நாடு எப்படி உருப்படும்.......ஊரெல்லாம் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசறேன்....ஆனா என் வீட்டு பொண்ணுங்களுக்கே பாதுகாப்பு இல்லங்கறத என்னனு எடுத்துக்கறது..... ஏதாவது பண்ணனும்....அவனை சும்மா விடக் கூடாது..."

லேண்ட் லைனில் இருந்து அழைக்கையில் கிடைத்து விட்டது...

"அண்ணா சொல்லுங்ணா.....என்ன இந்த நேரத்துல...?" தங்கை காயத்ரி வழக்கம் போல பேசினாள்.

"அந்த தறுதலை வந்துட்டானாம்மா...."

தொலைபேசியில் கோப அதிர்வுகள்.... நெளிந்து நெளிந்து எதையோ நேர் படுத்திக் கொண்டிருந்தது.

அடுத்த பக்கம் திக்கென்று பெருமூச்சு வாங்கும் சபதம்.....

"என்னாச்சுன்னா.. யாரை கேக்கறீங்க..!" காயத்ரி தடுமாறினாள்.

"அவன்தான் உன் புருஷன்......அந்த நாயி இங்க என்ன பண்ணிட்டு போயிருக்கு தெரியுமா....?" எல்லாம் சொல்லி முடித்தான்.

"தங்கச்சி இருக்கா......அண்ணன் பாசமலர் சிவாஜி மாதிரி வசனம் பேசி வாழ்த்திட்டு இருப்பான்னு நினைச்சிட்டானா அந்த பொறம்போக்கு.......அவன் காலைல இங்க வரணும்.. அண்ணி கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும். இல்ல......... வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிருவேன்......" மதுரன் குரலில்... ரத்தம் சொட்டியது. அதற்குள் வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விஷயம் தெரிந்து வீடே சாவு வீடாகி அமைதி இழந்திருந்தது.

"மதுரா கொஞ்சம் பொறுமையா இரு... விசாரிக்கலாம்" அம்மாவின் பதபதப்பில் மகளின் வாழ்வு கண்களில் காலத்தை உருட்டியது.

"எப்டிம்மா பொறுமையா இருக்க முடியும்..." என்று சொல்லிக்கொண்டே தறுதலையின் அம்மாவின் அலைபேசிக்கு அழைத்திருந்தான் மதுரன்.

நடந்த விஷயத்தை சொல்லி... திட்டி தீர்த்தான். குரல் நடுங்கும் தடுமாற்றத்தில் திலோவின் மீது கொண்ட காதல்..... நிறமற்று இரவை பூசிக் கொண்டு அலை அலையாய் அவ் வீட்டை சுற்றுவதாகப் பட்டது.

"கொஞ்சம் பொறுமையா இருங்க......பையன்கிட்ட விசாரிச்சிட்டு காலைல வீட்டுக்கு வர்றோம்" அலைபேசி துண்டிக்கப்பட்டது.

உறங்க மறக்கும் கண்களை அறுத்தெறிந்து விட்டால் தேவலை என்று பட்டது.

"எத்தனை தைரியம். எத்தனை துணிச்சல். தவறை இத்தனை நேர்த்தியாக ஒருவன் வீட்டுக்குள்ளயே செய்ய துணிந்திருக்கிறான்....... என்றால் அவனின் மனப்போக்கு எத்தகையது. அவன் அன்று காலை முதலே இரண்டு முறை வீட்டுக்கு வந்து போயிருக்கிறான். முதல் முறை பணம் வாங்கவும்... இரண்டாம் முறை நகை வாங்கவும். ஆனால் முதல் முறை வரும் போது குழந்தை இருந்ததை கவனித்து விட்டு குழந்தை மதியம் பரிச்சைக்கு சென்ற பிறகு இரண்டாம் முறை நகை வாங்க வந்திருக்கிறான். அத்தனையும் திட்டம். நோட்டமிட்டிருக்கிறான். முதல் முறை வந்த போதே பணத்தையும் நகையையும் வாங்கிக் கொண்டு போயிருக்கலாம். அப்போது தான் திட்டம் வலுப்பட்டிருக்கிறது. பையன் மதியம் பரிச்சைக்கு சென்று விடுவான் என்று பையனுடன் வழக்கம் போல பேசுகையில் தெரிய... அதன் பிறகே பணம் மட்டும் போதும் என்று சொல்லி வாங்கி சென்றிருக்கிறான். மதியம் 2 மணிக்கு மேல் நகை வாங்கும் சாக்கில் மீண்டும் வீடு வரலாம் என்பது தான் யோசனை. பெண் அமைதியானவள். காதும் காதும் வைத்தது போல முடித்து விடலாம் என்பது நோக்கின் உச்சம். நான் உங்களை அக்காவாக நினைக்கவே இல்லை என்று சொல்லும் போதே பல நாள் இந்த எண்ணம் அவனுக்கு இருந்திருக்கிறது... என்று அர்த்தப்படுகிறது..."

"தங்கையின் வாழ்வை இப்படி கெடுத்து விட்டோமே......நல்லவன் மாதிரியே தானே இருந்தான். அப்படி ஒரு அமைதியான முகம். அவன் கள்ளையே குடித்தாலும் பார்ப்பவர் 'இல்லை இல்லை அவன் பால்தான் குடிக்கிறான்' என்று கூறும் அளவுக்கு சாந்தமான சாதகமான முகம். ஆனால் அதில் பிசாசு குடி கொண்டிருக்கும் என்று நினைக்கவில்லையே..." உள்ளம் கொப்பளிக்க... உடல் தடுமாறி இரவெல்லாம் எழுந்தெழுந்து அமர்ந்து கொண்டிருந்தான் மதுரன்.

திலோ கணங்களில் ஈரம் காயவேயில்லை. கண்களிலோ சொட்டுவதெல்லாம் சுருதி என்றே சொல்லலாம். வீடு முழுக்க கொப்பளித்த சூட்டு வெளிகளின் ரணம் அடைத்திருக்கும் மூச்சின் பிளிறலை கழுத்திறுக்கிக் கொண்டே இருந்தது காலம்.

விடிந்தது.

"விகாஷ் அப்டி பண்ணக்கூடிய பையன் இல்லண்ணா.....நகையை வேகமா வாங்கும் போது கன்னத்துல கை பட்ருக்கு... அவ்ளோ தான். அதுக்கும் அத்தனை தடவை மன்னிப்பு கேட்டாச்சு.... அத போய் இவ்ளோ சீரியசா எடுத்துக்கிட்டு அண்ணி ஊதி ஊதி பெருசாக்கிட்டாங்க....எப்ப பார்த்தாலும் பிக்சன் நாவல படிச்சிட்டே இருக்கறதுனால வந்த வியாதி இது.. முடிஞ்சா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காட்டுங்க......அத விட்டு இப்டி நடு ராத்திரியில போனை பண்ணி அபாண்டமா பழி போடாதீங்க.......நல்ல மனுசனா இருக்கவும் பொறுத்துக்கிட்டார்... உங்கள மாதிரி தொட்டதுக்கெல்லாம் கோபப் படற ஆளா இருந்தா என் நிலைமை என்னாகும்....அதும் மரியாதை இல்லாம எங்க மாமியார்கிட்ட நீங்க பேசினத்துக்கு நான் தான் உங்கள திட்டனும்......இனி இந்த வீட்டுக்கு நாங்க வர மாட்டோம்......" 'கிளம்புங்க' என்று விகாஷ் - ஐ கூட்டிக் கொண்டு வேகமாய் காயத்ரி செல்ல.... மதுரனின் அம்மா திலோவை திட்ட தொடங்கினாள்.

"உன் கற்பனைக் கதைக்கு என் புள்ள வாழ்க்கை தான் கிடைச்சுதா... புடிச்சிருக்கான் பாரு....." என்று மதுரனின் பக்கம் கண்களை விரட்டியவள் மீண்டும் திலோவின் கண்களை பார்த்து.... "உன் கண்ண பார்த்தாலே பயமா இருக்கு...குடும்ப புள்ள கண்ணா அது....." வார்த்தை முனங்களுக்கு தாவி மீண்டெழுந்தது.

"ஒழுங்கா இருந்தா இருங்க.. இல்ல தனிக்குடித்தனம் பாருங்க... நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன். கை தெரியாம பட்டதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா.... இல்லல்ல என் புள்ளைய என்கிட்டே இருந்து பிரிக்க போட்ட திட்டம் இது. இது கூடவா எனக்கு புரியாது..." சமையலறைக்குள் இருந்து தொடர்ந்து வந்து கொன்று கொண்டே இருந்தன தேநீர் வார்த்தைகள்.

என்ன செய்வது.... யாரோ பின் மண்டையில் சுத்தியல் கொண்டு தாக்கியது போல எதுவும் சற்று நேரத்துக்கு தோன்றவில்லை மதுரனுக்கு.

"ஒருவேளை திலோவின் கற்பனையோ...? திலோவுக்கு பிக்சன் நாவல்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறது...." அவன் மெல்ல திரும்பி திலோவை பார்க்க........

"ஆமா எனக்கு பைத்தியம்.... நீங்க எல்லாரும்.... நிஜம்... நான் தான் ஹாலுசினேஷன்ல இருக்கேன்...." என்று சொல்லி துணிமணிகளை எடுத்து பேக்கில் திணித்துக் கொண்டு அவளின் அம்மா வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.

"திலோ.. இரு... விசாரிக்கலாம்.. ஏன் அவசரப்படற....."

"இனி என்ன விசாரணை வேண்டிக் கிடக்கு....... மதுரன்... நான் சொல்றேன்... அந்த நாயி கட்டி பிடிச்சான்.. முத்தம் குடுக்க வந்தான்..... உங்க தங்கச்சி அத நம்ப மாட்டிக்கிறா... பெரிய மனுஷி மாதிரி எப்டி பேசிட்டு போறா பாருங்க.. அவளை எப்படி எல்லாம் பார்த்து பார்த்து வளர்த்திருப்பேன்... அவள் கல்யாணம் ஆகி போறப்போ எப்படி அழுதேன்.......கொஞ்சம் கூட என் பேச்சுல நம்பிக்கை வேண்டாமா.. அயோ கடவுளே... இந்த மனுஷங்க ஏன் இப்டி இருக்காங்க....." என சொல்லி இயலாமையின் விளிம்பில் நின்று அழத் தொடங்கினாள். நேத்து வீர வசனம் பேசிட்டு தங்கச்சி அம்மா பேச்சுல மதி மயங்கி நிக்கறீங்க நீங்க... நான் என்ன தான் பண்ண... விட்ருங்க... நான் கிளம்பறேன்.. எது பொய் எது நிஜம்னு தெரியாத மனுஷங்க கூட வாழ்றதுக்கு வாழா வெட்டியா இருக்கலாம்..."

அவள் கிளம்பி விட்டாள். பேய் பிடித்தால் தேவலை என்பது போல குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் மதுரன்.

"எது நிஜம்.... அவன் செய்தது தவறென்றால்..... இத்தனை தீர்க்கமாக மீண்டும் வீட்டுக்குள் எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் வருவானா...!"

"இல்லையே... கற்பனை என்றால்... அதற்கு இத்தனை மூர்க்கமாக எதிர்வினை காட்டுவாளா திலோ......!"

தலைக்குள் பம்பரம் சுழன்று கொண்டிருந்தது. கோபம் அழுகையானது... எது சரி எது தவறு... தடுமாறும் சமன் நிலையை தவற விட்டது சிந்தனை. நாட்கள் நகர்ந்தன.

*
இன்று
***********

வாணலியில் மிச்சம் இருந்த கொஞ்சம் காளானை சாப்பிட்டபடியே வந்த மாமனார்........"திட்டம் இன்னும் சரியா ஒர்க் அவுட் ஆகத்தான்... நானும் கொஞ்சம் சாப்பிட்டேன். சந்தேகம் வரக் கூடாதுல்ல...... பயப்படாத பொழைச்சுக்குவேன். அவுங்க அம்மா கோவில்ல இருந்து வரும் போது அவன் சாவு செய்தி காத்திருக்கும்...."

"..............................................!"

"என்னம்மா பாக்கற..... நீ இந்த ஜன்னல் வழியா பார்த்த. நான் அந்த ஜன்னல் வழியா பார்த்தேன். இவனையெல்லாம் கொல்றது தான் சரியான முடிவு.... பயப்படாதா.... அவன் சாவு நிச்சயம்..." என்றார் மயங்கி சரிந்த மாமனார்.

மனக்கண் முன் வந்து போன 3 மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அந்த கோர காட்சி.... நினைக்கும் போதெல்லாம் அவளை அதிர வைத்தது.

தன் கணவன் விகாஷ்.... அந்த 5 வயது பக்கத்து வீட்டு சிறுமி கையில் சாக்லேட் கொடுத்து வேக வேகமாய் ஆடை அணிவித்து தானும் அணிந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபடியே கதவைத் திறந்து வீட்டுக்கு போக சொன்னதை நடுங்கும் உடலோடு......அடக்கிய கண்ணீரின் தழு தழுப்போடு.......மிரண்ட விழியோடு வலப்புற ஜன்னலின் பின்னால் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.... மார்க்கெட்டுக்கு சென்று சீக்கிரமே திரும்பி விட்ட காயத்ரி.

*

சொல்லி வைத்தாற் போல விகாஷ் - இன் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு அதிர அதிர காயத்ரியின் அலைபேசியில் கத்தியது. அந்த கத்தல் சிறுமியின் நிர்வாணத்துக்கு ஆடை பூசுவதாக இருந்தது. அண்ணியின் அழுகைக்கும் மன்னிப்பு கேட்பதாக இருந்தது.

- கவிஜி

Pin It