அவன் தன் கழுத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை அவள் திரும்பிப் பார்த்த போது தான் அறிந்தாள். தோளுக்கும் கீழ் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் மெல்ல மேலேறி, அவன் தோளில் சாய்ந்து கொண்டு சற்றே சிரமப்பட்டு நிமிர்ந்து, அவன் கண்களைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“நான் முற்று முழுதாய் உன் முன் இருக்கிறேன். என்னை முழுதாய் ரசிப்பதை விட்டு விட்டுக் கழுத்தைப் போய் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே?” என்றாள். அங்குலம் அங்குலமாய் ரசிப்பதை நீ கேள்விப்பட்டதில்லையா? நாம் எவ்வளவு நேரமாக இப்படிக் கிடக்கிறோம்? இப்போது தான் உச்சந்தலையிலிருந்து ஒவ்வோரங்குலமாய் நேர்க்கோட்டில் கீழிறங்கிக் கழுத்துக்கு வந்திருக்கிறேன்” என்று புன்னகைத்தான்.

lovers 333“அப்படியானால் என் செவிகளை அதன் வளைவுகளை நீ ஏற்கனவே ரசித்து முடித்து விட்டாயா? அவ்வளவு ரசிப்பு போதுமானதா உனக்கு? என்றாள் குறும்பாக.

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உன் செவிகள் மீதும் எனக்கு விருப்பம் தான். ஆனால் ஆங்கிலத்தில் எவ்ரிதிங் ஹேஸ் டு மூவ் ஆன் என்று சொல்வார்களே அது போல ஏதோ ஒன்று உள்ளுக்குள் நகர்ந்து போகச் சொல்லிக் கொண்டேயிருப்பதால் வேறு வழியில்லாமல் கழுத்து வரை நகர்ந்து வந்திருக்கிறேன். இப்போதொன்றும் தலை போகிற அவசரமில்லை தான். இருந்தும் அந்தக் குரல்… அதுதான்.” என்று கூறி அவளை உற்றுப் பார்த்தவன், தொடர்ந்தான்.

“ஆனால் ஒன்று. உன் கன்னங்கள் மீது எனக்குப் பெருவிருப்பம் உண்டு. அவற்றை ரசிக்கக் காலம் நேரம் மணித் துளிகள் எல்லாம் போதாது. அதனால் அவைகளை இப்போதைக்கு விட்டு விடுவோம் என்று முடிவு செய்து சட்டென்று தாவிக் கடந்து கழுத்துக்கு வந்து விட்டேன்” என்று கூறிச் சிரித்தான்.

“ஏன் என் கன்னங்களை உனக்கு இவ்வளவு பிடிக்கிறது?” என்றாள் அவள் அரைக் கண்கள் மூடிய நிலையில். இதழில் புன்னகை தேங்கிக் கிடக்க, “ பிஞ்சுக் குழந்தைகளிடம் மட்டுமே நுகரக் கிடைக்கும் அலாதியான மணமொன்று உன் கன்னத்தில் நிரந்தரமாய்ப் படர்ந்து கிடக்கிறதென்பது உனக்குத் தெரியுமா?” என்றவன் மெல்ல அவளை நெருங்கி அவள் கன்னத்தில் நாசியைப் பதித்து ஆழமாக மூச்சை உள்ளிழுத்தான்.

இதைச் செய்கையில் அவன் கை அவள் பின்கழுத்தில் ஒட்டிப் படர்ந்திருந்த உட்கூந்தலின் இழைகளை நீவிய படியிருந்தது. குறுகுறுப்பில் கண்கள் திறக்காமலே சிலிர்த்த அவள் உதட்டில் ஏற்கனவே தேங்கிக் கிடந்த அவன் இதழ்களினின்றும் சிந்தி வழிந்தது போல் புன்னகை இறங்கி நின்று கொண்டது.

சட்டென்று நினைவு வந்தவனாக, “ எனக்கேதும் அவசரமில்லையென்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உனக்கும் ஏதும் அவசர வேலை இல்லையல்லவா?’ என்றான். “ஏன் இருந்தால் என்ன செய்வதாக உத்தேசம்? எதற்காக இந்தக் கேள்வி?” என்றாள்.

“புரியவில்லையா அல்லது புரியாதது போல் நடிக்கிறாயா? இப்போது தான் சொன்னேனில்லையா? அங்குலம் அங்குலமாய் ரசிப்பதென்றால் என்னவென்று? இப்போது தான் கழுத்து வரை வந்திருக்கிறேன். நீ உன் பாட்டுக்கு ஏதேனும் அவசர வேலையிருக்கிறது என்று அதற்குள் எழுந்து உடைகளை அணிந்து கொண்டு விடப் போகிறாய்” என்று கூறிச் சிரித்தான்.

அவனைப் பார்த்த அவள் கண்களில் ஆச்சரியம் தெரிந்தது. அதைப் புரிந்தவனாக , “என்ன யோசனை?” என்றான். “பொதுவாகக் கூடிப் பிரிந்ததும், திடீரென்று வெள்ளம் பொங்கிப் பெருகியோடிப் பின் சந்தடியின்றி அடங்கும் காட்டாறு போல் துய்த்த சுவடின்றித் தம் இணையை விலக்கி உறக்கம் தழுவும் ஆண்கள் பற்றித் தான் இது வரை கேள்விப் பட்டிருக்கிறேன். கூடிப் பிரிந்த பின்னும் தன் இணையை ஒரு ஆண் அங்குலம் அங்குலமாய் ஆராதிப்பது ஆச்சரியம்” என்றாள்.

சிரித்தான். பின் கூறினான். “பொதுவாய்ப் பெரும்பாலான ஆண்களுக்குக் காமம் ஊற்றெடுக்க ஏதும் முகாந்திரம் தேவையாயிருப்பதில்லை. பெண் உடலையோ, பெண் முகத்தையோ ஏன் பெண் மணத்தையோ ஒரு சில நொடிகள் அவன் அனுபவிப்பதே காமத்தின் துவக்கத்துக்குப் போதுமானதாய் இருக்கிறது. ஆனால் எனக்கேனோ அப்படி இயற்கையில் வாய்க்கவில்லை.

எனக்கு எப்போதும் காமம் துய்க்க வலுவான காரணம் தேவையாயிருந்திருக்கிறது. என்னுடன் நன்று பழகிப் புரிந்த பெண்களன்றி வேறிடத்தில் இது வரை காம இச்சை ஏற்பட்டது கூட இல்லை. உன் விஷயத்தில் அந்த முகாந்திரம் உன் மீது எனக்கான ஈர்ப்பாயிருக்கிறது. அதற்குப் பொதுவுலகில் காதல் என்று பெயர்” என்றவன், “எல்லாம் சரி, இவ்வளவு விபரங்கள் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்றைய கூடல் உனக்கு மகிழ்ச்சியானதாயிருந்ததா என்று நீ சொல்லவேயில்லையே?” என்று கண்ணடித்தான்.

அவனையே உற்றுப் பார்த்தவள் மேலும் அவனை நெருங்கித் தன் வலது காலைத் தூக்கி அவன் இடையைச் சுற்றிப் போட்டுக் கொண்டவள், “பதில் என் செய்கைகளிலிருந்து உனக்குத் தெரிந்திருக்கவில்லையா?” என்றாள். சிரித்தவன் தொடர்ந்தான். “கூடல் முடிந்த பின்னும் உன்னை ஏன் ரசிக்கிறேன் என்றாயல்லவா. இந்த ரசிப்பு எனக்கு அடுத்த கூடலுக்கான ஆரம்பப் புள்ளி” என்று கூறிச் சற்று சப்தமாகவே சிரித்தான்.

அவன் இதயத் துடிப்பின் பின்னணித் தாள லயத்தைக் கூட தெளிவாய்க் கேட்குமளவு அவள் தன் முகத்தை அவன் நெஞ்சில் இறுகப் பதித்திருந்தாள். அவள் விரல்கள் அவன் புஜத்தை வருடியபடி இருந்தன.

உன் கையின் வருடலில் என்னால் சில கேள்விகளை உணர முடிகிறதென்றான் அவன். சட்டென்று நிமிர்ந்தவள் லேசாய்த் திடுக்கிட்டிருந்தாள். பின் சுதாரித்தவள், “அப்படியெல்லாம் எதுவும் இல்லையே என்று பொய் சொல்ல மாட்டேன். சில கேள்விகள் முளைத்தன தான். ஆனால் அதை நீயெப்படி உணர்ந்தாய் என்பது தான் இங்கே விஷயம்” என்றாள். அவள் தலையை மென்மையாய்க் கோதியவன், “உன் உடலை அங்குலம் அங்குலமாய் ரசிக்கிறேன் என்று சொன்னேனல்லவா, கூடவே உன் எண்ணவோட்டங்களையும் ஓரங்குலமேனும் புரிந்து கொள்ள முயற்சி செய்தபடியிருக்கிறேன். அதன் பலன் தான் இது” என்றான்.

“சரி. அப்படியாயின் நான் எதைப் பற்றி யோசித்தேன் என்பதையும் சொல்லத் தலைப்படுவாயா? அவ்வாறாயின் என்னைப் பற்றிய உன் புரிதல் எவ்வளவெனச் சொல்வேன்” என்றாள் கண்களில் ஆர்வம் பொங்க.

“இதற்கு முன் எனக்கு ஏற்பட்டிருந்த ஈர்ப்புகள், என்னைக் கடந்து போன பெண்கள், அல்லது நான் கடந்து வந்திருக்கக் கூடிய வாய்ப்புள்ள பெண்கள். இதைப் பற்றித் தான் நீ யோசித்திருக்கக் கூடும். சரியா?” என்றான். ஆச்சரியத்தில் உறைந்தவள், “துல்லியம்” என்றாள். அத்தனை நேரம் குறும்பும் புன்சிரிப்புமாய் இருந்த அவன் முகம் சற்றே யோசனையிலாழ்வது தெரிந்தது.

சட்டென்று நகர்ந்து அவன் இதழில் மிக மென்மையாக தன் இதழை ஒற்றி எடுத்தாள். அவன் உதடுகளும் ஒத்துழைத்தன. “சொல்” என்று ஒற்றை வார்த்தையில் வாக்கியத்தைத் துவங்கி முடித்தாள்.

“உனக்கிணையான ஈர்ப்பு இது வரை உன்னைத் தவிர ஒரேயோரு பெண்ணிடம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை” என்றான். ஏன் என்பது போலிருந்தது அவள் பார்வை. “நான் எப்போதும் யாருடனும் எத்தனை நெருக்கம் பாரட்டினாலும் எனக்கென்று ஒரு சுவர் இருக்கிறது. ‘இது தான் நான்’ என்னும் சுவர். அந்தச் சுவரின் மறுபக்கம் நின்று என் செய்கைகளை நானே மூன்றாம் பார்வையிலிருந்து பார்க்க முடிவது மேலோட்டமாய்ப் பார்த்தால் வரம் போல் தோன்றினாலும், அது ஒரு சங்கடம்.”

“எந்தப் பெண்ணுடனும் என்னால் உட்தடங்கல்கள் இல்லாமல் ஒரு உறவை உண்டாக்கிக் கொள்ள முடிவதில்லை. அந்தப் பெண்ணுடன் மனம் ஒன்றி எவ்வளவு நெருங்கினாலும் சுவற்றுக்கு அந்தப் பக்கமிருக்கும் என்னின் இன்னொரு நான் அந்த உறவின் சாதக பாதகங்கள், அது தொடர்வதற்கோ தொடராமல் போவதற்கோ உண்டான சாத்தியக் கூறுகள் என்று தர்க்க ரீதியில் அசைபோட்டபடியே இருக்கிறது.”

“அந்தப் பெண் இந்தச் சுவற்றை நன்றாகப் புரிந்து கொண்டாள். இதை உடைக்க அல்லது கரைக்க, என்னிலிருந்து என்னை வெளிக் கொணர சிரத்தையாய் முயற்சிகள் மேற்கொண்டாள். ஆனால் அவை பலனளிக்கவில்லை என்று தெரிந்ததும் இருவர் நலனும் கருதி உறவிலிருந்து என்னை விடுவித்து விட்டாள். இந்த வரியை முடிக்கும் போதே உன் மனதில் உதித்திருக்கும் அடுத்தக் கேள்வியை என்னால் உணர முடிகிறது.” என்று கூறி நிறுத்தினான்.

அவள் எதுவும் பேசவில்லை. அகன்ற சாளரத்தின் வழி தூரத்தில் விளக்கொளி நிறைந்து வழிந்து கொண்டிருந்த பரபரப்பு மிகுந்த சாலையின் போக்குவரத்தின் கண் சிமிட்டியபடி சென்று கொண்டிருந்த வாகனங்களின் மேல் இலக்கின்றிப் படர்ந்திருந்தது அவள் பார்வை.

அவன் கழுத்தை மாலையாய்ச் சுற்றியிருந்த அவள் கரமும், அவன் இடையைச் சுற்றியிருந்த அவள் காலும் மேலும் இறுகிக் கொண்டன. அவன் தொடர்ந்தான்.

“உன்னை அறியாமலேயே நீ அதைச் செய்து கொண்டிருக்கிறாய். முயற்சி செய்யாமலே உனக்குச் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது அது. உன்னுடன் இருக்கும் நேரங்களில் நான் அதிகம் என்னுள்ளிருக்கும் என்னை உணரத் துவங்கியிருக்கிறேன். என்னால் உணர முடிகிறது. உன்னுடன் செலவழிக்கும் மணித் துளிகள் பெரும்பாலும் முன் முடிவுகளோ யோசனைகளோ இல்லாதவையாயிருக்கின்றன எனக்கு. இது எனக்கு மிகப் பிடித்திருக்கிறது.” என்றான்.

நிமிர்ந்து தீவிரமாய் அவன் கண்களுக்குள் பார்த்தவள், அவன் முகத்தோடு தன் முகத்தை உரசித் தேய்த்தாள். சிறு குழந்தையைக் கொஞ்சுவது போல் மூக்கோடு மூக்கை உரசினாள். அவன் தாடியின் ரோமங்களை மெல்ல உதடுகளால் பற்றியிழுத்தாள்.

பின் ஆசுவாசமடைந்தவளாகப் புரண்டு படுத்துக் கொண்டு பெருமூச்சு விடுத்தாள். “எனக்குச் சுடச் சுடத் தேநீரொன்று அருந்த வேண்டும் போலிருக்கிறது. உனக்கும் வேண்டுமா” என்றாள். “ம்” என்றவன் “நீ படுத்திரு. நான் சென்று இருவருக்குமாய்த் தேநீர் தயாரித்து எடுத்து வருகிறேன்” என்று சொல்லியபடியே எழுந்தவன், உள்ளாடையைத் தேடியணிந்து கொண்டான். அவன் நடந்து போவதையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், மெல்ல எழுந்தாள். கையில் ஆடையை அணிய எடுத்தவள் ஓரிரு விநாடிகள் யோசனைக்குப் பின் கையிலிருந்த ஆடையைக் கட்டில் மீதே மீண்டும் வீசினாள்.

முகத்தில் குறும்புப் புன்னகையுடன் தேநீர் கொதிக்கும் மணம் வரத் துவங்கியிருந்த சமையலறையை நோக்கி மென்மையாய் அடியெடுத்து நடக்கத் துவங்கினாள்.

- ஹரீஷ்

Pin It