என்றாவது தான் அதிகாலையில் எழுவாள் நிரஞ்சனா. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டினர் திட்டமிட்டதைப் போல இன்று குலதெய்வ வழிபாட்டிற்கு கிராமத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது... அப்பாவிற்கு திடீரென்று பணி நிமித்தமாக வெளியூர் போக வேண்டும், தவிர்க்க முடியாது வருந்திக் கொண்டே விடைபெற்றுச் சென்றார். பின்னே சொந்த ஊருக்குச் செல்வதென்றால் சும்மாவா.. அப்பா பிறந்து வளர்ந்த விளையாடிய பந்தமல்லவா... தன் சாவைக் கூட சொந்த ஊரில் தான் நிறைவேற்ற வேண்டும் என்னும் வழக்கம் கொண்ட மக்களின் பண்பாடு இவர்கள் கிராமத்து மண்ணுக்கும் உண்டு. இன்று சூரியன் உதிக்கத் தாமதித்த நேரம் பார்த்து எழுந்து கிளம்பி தயாராகிக் கொண்டாள் நிரஞ்சனா. அம்மாவிற்கு காலை உணவு தயாரிக்க கூடுதலாக சிறிது நேரம் பிடிக்கும் சமயத்தில், மெல்ல சூரியன் எட்டி பார்த்தான் .. அவனுடைய மழலைக் கிரணங்கள் அடுப்பங்கரைக்குள் தவழத் தொடங்கியது...

கூடத்திற்கு வந்துவிட்ட நிரஞ்சனா,என்னம்மா இப்படி லேட் பன்ற .. பாரு இப்பவே மணி ஏழாகப் போகுது.. சீக்கிரம் கிளம்பு. எத்தன தடவ சொல்லிருக்கேன். எங்க போனாலும் சீக்கிரம் போகணும்னு. அப்போதான் சீக்கிரம் வர முடியும்...

ஒரு ஆளா வேலை பாத்துட்டு இருக்கேன் காலைலர்ந்து.. யாராது எந்திருச்சு கூட வேலை பாக்குறிங்களா என்று முனகியவாறே இட்லிச் சட்டியிலிருந்து ஒவ்வொரு இட்லியாக எடுத்து நிரஞ்சனாவிற்கும் தனக்கும் வைத்து, இரண்டு தட்டுக்களையும் தூக்கிக் கொண்டு வந்தாள்.. ஒருவித அமைதி நிலவ இருவரும் சாப்பிட்டு முடித்ததும்,பூசை மற்றும் பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருட்களைச் சரிபார்த்துவிட்டு வீட்டைப் பூட்டி சாவியைப் பத்திரமாகக் கைப்பையுள் போட்டுக் கொண்டு மாநகரப் பேருந்து நிலையம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள்.... ஈச்சம்பாரி கிராமத்திற்கு நேரடியாகப் பேருந்து கிடையாது. நிறைய கிராமங்கள் இப்படித்தான் எங்கோ ஒரு மூலையில் கேட்பாரற்றே கிடக்கின்றன... வில்லாங்குடி வரைக்கும் ஒரு பேருந்தில் செல்ல வேண்டும். அதிலிருந்து ஈச்சம்பாரிக்கு ஒரு பேருந்து பிடிக்க வேண்டும். வில்லாங்குடியில் இறங்கி பூமாலைகள் வாங்கிப் பின்னர் ஈச்சம்பாரிக்குச் செல்வதாக உத்தேசித்திருந்ததாலும், வருடங்கள் பல கடந்து செல்வதாலும் செல்லைய்யாவை துணைக்கு அழைத்திருந்தார்கள். செல்லைய்யா நிரஞ்சனாவிற்கு பெரியப்பா மகன். திருமணமாகி சொந்த கிராமத்திலே விவசாயம் செய்து வருகிறான். நகர வாழ்க்கையில் எப்போதோ குடிபுகுந்த நிரஞ்சனா வீட்டார் அடிக்கடி கிராமத்திற்கு வர முடியாத சூழ்நிலைகள் தாம் வருடங்கள் தோறும்.. படிப்பு, வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தார்கள். தங்கையையும் சித்தியையும் வெகுநாட்களுக்குப் பிறகு காணப் போகிற மனதோடு வாஞ்சையாகக் காத்து நின்றிருந்தன செல்லையாவின் கால்கள் வில்லாங்குடியில்.

வில்லாங்குடி பேருந்து நிலையம்.. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து முடித்ததும் பூக்கடைக்குச் சென்று மாலைகள் வாங்கி வந்தனர். வருவதற்குள் ஈச்சம்பாரிக்குச் செல்லக்கூடிய பேருந்தொன்று இவர்களைக் கடந்து சென்றது. கைகளில் சாமான்களோடு கனத்திருந்ததால் லாவகமாக அந்தப் பேருந்தினை அணுக முடியாமல் தவறவிட்டனர். வேறென்ன செய்வது, . சுற்றிலும் கிராமங்கள் . எனவே வில்லாங்குடிக்கு வந்து தான் மற்ற கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். மணி பதினொன்று இருக்கும். உட்கார இடமில்லாததால் தெரிந்தவர் கடையொன்றில் இருந்த இரண்டு பிளாஸ்டிக் சேர்களை எடுத்து வந்தான் செல்லையா. இருவரும் அமர்ந்து, நிழற் கூரைக்கு வெளியே ஒழுகும் வெய்யிலின் கடுமையை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

இதுக்குத்தான் சொன்னேன் கேட்டியா சீக்கிரமாக் கிளம்புன்னு மீண்டும் காத்திரமாய் நிரஞ்சனா. விஜயாவிற்கு இந்தமுறை எந்தவித உணர்வுமில்லை. ஒருவேளை மகள் சொல்வது போலவும் நடந்திருக்கத் தான் செய்தது என்பது போலிருந்தாள்.. அடுத்த பேருந்து பனிரெண்டு மணிக்குத் தான் என்றதும் நிரஞ்சனாவிற்குக் கிறக்கமாய்ப் போனது.

ம்மா தாகமா இருக்கு... என்றாள் மெதுவாக அம்மாவிடம்.

கேட்டுக்கொண்டிருந்த செல்லையா,என்ன நிரஞ்சனா. வெயில் அதிகமா இருக்கா சர்பத் வாங்கிட்டு வரட்டுமா என்றான் தலையாட்டியதும், சித்தி உங்களுக்கும் வாங்கிட்டு வரேன் என்றவன் பக்கத்திலிருக்கும் சர்பத் கடைக்கு விரைந்தான்.

சிலர் இவர்களையே உற்றுக் கவனிப்பது போன்றிருந்தது நிரஞ்சனாவிற்கு. செல்லையாவும் பேருந்திற்குக் காத்திருந்த ஒரு தாத்தாவும் பேசிக்கொண்டிருந்ததில் அவரும் ஈச்ச்ம்பாரிக்காரர் தான் எனப் புரிந்து அவர்களைக் கவனிப்பதும் வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தாள். இடையிடையே அம்மாவிடம் எதையாவது பேசிக்கொண்டும் இருந்தாள்.

அப்போது ஒரு பேருந்து வந்தது. எல்லோருமாக தங்களுடைய சாமான்களை எடுத்துக் கொண்டு தயாராக எழுந்தனர் .. சிலர் ஓட்டமும் நடையுமாக விரைந்து இடம்பிடித்துப் போட்டனர். அண்ணனும் அப்படியே ஓடுவதையும் தேங்காய்ப் பையை ஜன்னல் வழியே கொடுத்து இடம் பற்றுவதையும் பார்த்துக் கொண்டே விரைந்து வந்தாள் பூமாலைப் பையோடு. விஜயா இவர்களுக்குப் பின், பலம் பொருந்தும் மட்டும் தான் வைத்திருந்த சாமான்களடங்கிய பையை இடுப்பில் சுமந்தபடியே வேகமாய்த் தொடர்ந்தாள்.

எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு ஏற முற்படுகையில் நடத்துனர் காரசாரமாக, வண்டி ஈச்சம்பாரி போகாதென்று இரண்டு மூன்று முறை அழுந்திக் கூவினார்.

அடடா... ம்ம்ச்ம் .. வீணே என்று ஒவ்வொருவராக அவரவர் பொருட்களை எடுத்தபடி வெளியேறினர்.

அப்பு .. நேத்து இந்த வண்டிகாரன் நம்ம ஊருக்கு போனாப்லையே ..

அது நேத்து என்னமோ மாத்திவுட்டாகளாம்.. கூட்டத்தில் உரசிச் செல்கிறது இப்படியான பேச்சுக்கள்.

மதிய உணவு வேளையை கிட்டத் தட்ட நெருங்கிவிட்டனர். எந்த வண்டியும் ஈச்சம்பாரிக்கு வந்தபாடில்லை. இடையில் ஒருமுறை செல்லையா இன்னொரு வண்டிக்கு கூட ஓடிப் பார்த்தான் அதுவும் மாற்று வண்டியாகவே போனதில் ஏமாற்றமும் களைப்பும் சலிப்பும் ஒரு சேர மீண்டும் காத்துக் கிடந்தார்கள்.

சித்தி மதியமாகிடுச்சு சாப்பிட எதாச்சும் வாங்கிவரட்டா... இங்க ஒரு கடைல லஸ்ஸி ஸ்பெஷலா போட்டுத் தருவான்... உங்களுக்கும் நிரஞ்சனாவுக்கும் முடிப்பதற்குள்,

ஐயையே.. எனக்கு வேண்டாம்பா .. அது எப்படி இருக்குமோ .. நீ சாப்பிடுறியாப்பா நிரஞ்சனாவை பார்க்க,

நல்லாருக்குமா .......

அதல்லாம் சூப்பரா இருக்கும்.... இப்போ சாப்டின்னா வீடு போறவரைக்கும் பசி தாங்கும்,... வீட்டுக்குப் போயி சாப்பாடு சாப்ட்டுக்கலாம் என்றான்..

சரி ... வாங்கிட்டு வா ...

அவர்கள் அமர்ந்திருந்த சிமெண்ட் திண்டிலிருந்து குதித்தவன் சில கடைகளைத் தாண்டி வளைந்து சென்றான்.

ஏம்மா லஸ்ஸி வேண்டாம் சொல்ற ..

எனக்கென்னமோ பிடிக்கல ... உங்கப்பா அந்தக் காலத்துல இந்தப் பழக்கத்துக்குத் தான் தயிர்ல சீனி போட்டுக் குடிப்பாரு சொல்லும்போதே முகத்தைச் சுளித்தாள்.

அய்யயோ நல்லாருக்குமான்னு தெரியலையே... சரி பார்ப்போம்..

ஒரு கண்ணாடிப் பாலித்தீன் பையில் வெள்ளையாக திட பானமாக இருந்தது. குழலுறிஞ்சியையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு வந்திருந்தான் செல்லையா.

கையில் வாங்கியபோதே சில்லிட்டது. மிகவும் ஆர்வமாய் வாங்கிப் பிரித்தவள் உறிஞ்சியைப் போட்டுக் குடிக்கத் தொடங்கினாள். கொஞ்சம் கொஞ்சமாய் அதன் ருசியைப் பருகிக் கொண்டவள்,

அம்மா நீ பாதி குடிக்கிறியா ....

நல்லாருக்கா .........

நல்லாதாம்மா இருக்கு...... கொஞ்சம் புளிப்பான இனிப்பா இருக்கு.... எப்படியும் நாம அண்ணன் வீட்டுக்குப் போறதுக்கு மதியமாகிடும்.... சாப்பிட லேட் ஆகும்... இது சாப்பிட்டா கொஞ்சம் பசி தாங்கும்ல அதுவரையும்...

இதமாகத் தோன்றின நிரஞ்சனாவின் வார்த்தைகள். அம்மா மீதியை வாங்கிக் குடித்து முடித்தாள்.

இதென்னடி என்னமோ வெள்ளையா இருக்கு....

அதுவா... அது வெண்ணக் கட்டி.. லஸ்ஸில ஸ்பெஷலா போட்டுத் தருவாங்க என்றான் செல்லையா.

நீ சாப்பிடுறியாடி .....

வேண்டாம் வேண்டாம் .... ஏற்கனவே குண்டாயிருக்கேன் .... அதக் குடு குப்பத் தொட்டில போட்ருவோம்....

செல்லையாவை தண்ணீர் பாட்டில் வாங்கக் காசு கொடுத்து அனுப்பி வைத்தாள் அம்மா.

அவன் நடந்த திசையையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவள்,ஏம்மா அண்ணன் வீட்ல மதியம் சாப்பிட்டு சாயங்காலம் தான பொங்கல் வைக்க போகணும்...

சாப்ட்டு ஒரு ரெண்டு மணிக்குக்கே கெளம்பிடுவோம்... சாயங்காலம்னா லேட் ஆகிடும் திரும்பி ஊருக்குப் போக....

ம்மா .. சாப்பாடு பார்சல் வாங்கிட்டு போயிருவோமா ....

ஏண்டி....

அவங்க வீடெல்லாம் சுத்தமா இருக்குமோ என்னமோ .... அதுவும் சமையல்லாம் எப்படி இருக்கும்னு தெரியல...

ஆமா .. ஆமா.... அதான் தண்ணி கூட இங்கருந்தே வாங்கிட்டுப் போலாம்னு நெனச்சேன்.... ரொம்ப கிராமம்.... அதுவும் செல்லையா பொண்டாட்டி எச்சிக் கையால கூட ஈ ஓட்டாதவ....

பழைய கட்டம் போட்ட கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டே வந்தான் செல்லையா தண்ணீர் பாட்டில்களோடு.

என்னடா உன் பொண்டாட்டி சமைச்சு வச்சுருக்காளா....

நேத்தே ஊருக்கு போயிட்டா சித்தி... இன்னைக்கு காலைல தான் தகவல் குடுத்தேன் நீங்க வறீங்கன்னு.... கெளம்பி வந்துட்டு இருக்கா... வந்து சமையல் பண்ணி முடிக்கறதுக்கும் நாம போறதுக்கும் சரியா இருக்கும்....

எந்நேரம் வந்து எந்நேரம் சமைக்க ... பாவம் அவளும் ஊருக்கு போயிட்டு அசதில வருவா... பேசாம ஒரு சாப்பாடு பார்சல் வாங்கிட்டு போயிருவோமா..

ஒரு மாதிரி சங்கடமாய் பார்த்தான்... கொஞ்சம் சமாளிக்கவும் செய்தான் ஏதோ புரிந்து கொண்டவன் போல ...

அதில்ல ... அது வந்ததும் சமைச்சு வைக்குறேன்னு சொல்லுச்சு... இந்நேரம் வந்துட்ருக்கும் ........

சின்ன பிள்ளைகள வச்சுக்கிட்டு எப்படி சமைப்பா அதான் சொன்னேன்...... சின்னவனுக்கு இப்போ ரெண்டு வயசு இருக்குமா பேச்சை மாற்றியபடியே கைப்பையைத் திறந்தாள் அம்மா...

ஒரு சாப்பாடு எவ்ளோ இருக்கும்....

வேணாம் சித்தி வைங்க... என்கிட்டே இருக்கு .. ஒரு சாப்பாடு போதுமில்ல....

போதும் .. போதும்... அதிலயே ரெண்டு பேரு சாப்பிடுற மாதிரி தான் கட்டிக் குடுக்குறாங்க... அப்டியே பிள்ளைகளும் சாப்பிட்டுகிறுங்க....

சரிங்க சித்தி என்று சாப்பாடு வாங்க ஓடினான். அவன் வாங்கி வருவதற்கும் ஊர் வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது.

அவசரமாக வந்தவனோடு நிரஞ்சனாவும், அம்மாவும் தத்தம் பைகளோடு சேர்ந்து விரைய, பேருந்து அவர்களை நோக்கி வளைந்து நின்றது. அடித்துப் பிடித்து ஏறியவர்களோடு இவர்களும் முண்டியடிக்கக் கற்றுக் கொடுத்தான் செல்லையா.

பேருந்து ஈச்சம்பாரியை நோக்கிப் புறப்பட்டது. அம்மாவிற்கு மட்டும் இடம் கிடைத்தது. நிரஞ்சனாவிற்கும் ஒரு இடத்தை வேண்டி பரிதவித்து நின்றான் ஒவ்வொரு நிறுத்ததிலும். மூன்று நான்கு நிறுத்தங்கள் கடந்து இருவர் அமரும் இருக்கை காலியானது.

நிரஞ்சனா ... அந்தா அங்க போயி உட்காரு ...

சுட்டிக்காட்டிய திசையிலுள்ள இருக்கையில் சன்னலோரத்தில் அமர்ந்து கொண்டாள். செல்லையா கொஞ்சம் தயங்கியவாறு அவளிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்தான்.

வழியில், மூக்கில் கண்கள் வரைந்த லாரி,அங்கங்கே ஒண்டியாக நிற்கும் பனை மரங்கள்,மூன்று மற்றும் ஐந்து வளையங்களை கொண்ட தள்ளு வண்டிகளை ஓட்டிச் செல்லுவோர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

சிறிது தூரம் சென்றதும் சாலைக்கு இரு மருங்கிலும் பொட்டல் காடுகளில் நிறைய மக்கள் நிரம்பிய கூட்டம். துணியால் குடில்கள் அமைத்தும் சமைத்தும், நல்ல உடுப்புகள் உடுத்தியும் காணப்பட்டனர்.

இங்க என்ன நடக்குது....

அதுவா கெடாவெட்டு... அந்தா அந்த பக்கம் பாரு ஒரு மாரியம்மன் கோயில் தெரியுதா...

ஆமா....

இன்னைக்கு சாமி கும்புட்றாக.... எறங்கிருவோமா....

சிரித்து மட்டும் வைத்தாள்... இருவரும் வெவ்வேறு பக்கங்களில் வேடிக்கை பார்த்தபடியே தொடர்ந்தார்கள்.

ஊர் நிறுத்தம் வந்துவிட்டது. நடந்து செல்லும் தூரத்தில் வீடு. மீண்டும் வளையங்கள் கொண்ட தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு செல்வோரைக் கண்டாள் நிரஞ்சனா. இது என்ன வண்டி எதற்காக இப்படி இருக்கிறதென்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததும் கிராமத்து வாசனை. சாணத்தால் மெழுகியிருந்தார்கள் தரையை.

ம்மா ... பாத்ரூம் போகணும் ....

இரு ...

ஏதோ ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த செல்லையா வீட்டிற்குள் வந்ததும்,

இங்க பாத்ரூம் எங்க இருக்கு...

சித்தி இங்க பாத்ரூம்லாம் இல்லையே..

என்னடா இந்த காலத்துல இன்னும் பாத்ரூம் கட்டாம இருக்க... சொந்த வீடு இருக்கு... அதான் இப்போ கவர்மென்ட்லர்ந்து காசு வேற குடுக்குறாங்க....

அவசரத்துக்கு எல்லாம் கம்மாக்கரை பக்கம் ஒதுங்குறது தான்.. அப்படியே பழகிடுச்சு..... இனிமே தான் கட்டனும் சித்தி...

இவ எப்படிடா போவா....

இருங்க வாரேன்...

பத்து நிமிடங்கள் கழித்து வந்தான்.

நிரஞ்சனா பக்கத்துல பழைய சாமான்கள் போட்டு வச்சுருக்க ரூம் இருக்கு .... சேலைல தெர போட்ருக்கேன்... பக்கெட்டுல தண்ணி எடுத்து வச்சுருக்கேன்....

புரிந்து கொண்டாள் நிரஞ்சனா. அந்த அறை முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை.

நிரஞ்சனா வரவும், அண்ணியும் குழந்தைகளும் வந்து சேர்ந்திருந்தனர்.

நலம் விசாரிப்பு எல்லாம் முடிந்து சாப்பிட அமர்ந்தனர்.

சாப்பிட்டதும் ஓய்வாய் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டாள் அம்மா. எவ்வளவு சொல்லியும் அண்ணி சமைக்கத் தொடங்கினாள். விறகடுப்பில் தான் சமைக்கிறாள்.

நிரஞ்சனா (மனதிற்குள்),நல்ல வேலை பார்சல் வாங்கிட்டு வந்தது.. இல்லனா என்னைக்கு சமைச்சு ... என்னைக்கு சாப்பிட்றது...

பிறகு அண்ணியின் குழந்தைகள் நிரஞ்சனாவோடு தத்தமது விளையாட்டுப் பொருட்களை எடுத்து வந்து விளையாட்டு காட்டினார்கள்.

இரண்டும் ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு நான்கு வயதிருக்கும். இளையவன் இரண்டு வயதுக்காரன். படுசுட்டி. எதையாவது பேசிக்கொண்டே ஒரு இடத்தில் அமைதியாய் இராது அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டே இருந்தான்.

நிரஞ்சனா இவர்களோடு கொஞ்சம் கொஞ்சமாக ஒன்ற ஆரம்பித்தாள். செல்போனில் அவர்களோடு சேர்ந்து படமெடுத்துக் கொண்டாள். பேசினாள். படங்களை அவர்களுக்கு காண்பித்து அதை பார்த்து அவர்கள் மகிழ்வதைக் கண்டு ரசிக்க நேரம் இரண்டரை மணியானது.

ஒவ்வொருவராகக் கிளம்ப தாம்பாளத் தட்டு, பொங்கல் பானை, பூசை சாமான்களை எல்லாம் ஒரு பெரிய ஓலைக் கூடையில் வைத்து,தலையில் சுருமாடு கட்டி தூக்கி வைத்துக் கொண்டாள் அண்ணி.

நல்ல வெயில் ...

என்னங்க பசங்க வெயில்ல நடக்க மாட்டாங்க ... நம்ம வண்டிய எடுத்துக்குவோமா ..

ஆமா தண்ணி வேற தேவைப்படும்....

அதே தள்ளு வண்டி.. நான்கு வளையங்களோடு. சின்னவனும் பெரியவனும் ஒவ்வொரு வளையத்திலும் ஏறி அமர்ந்து கொண்டார்கள். அப்படியே மாலைப் பைகளையும் அதில் ஏற்றிகொண்டார்கள்.

வண்டி என்றதும் ஏதாவது பழைய வகையறா டூவீலரா இருக்குமென நினைத்த நிரஞ்சனாவிற்கு இப்போதும் இந்த வண்டியின் பயன்பாடு சரியாக விளங்கவில்லை.

ஊரணி, கம்மாய் என்றழைக்கபடும் கம்மாக்கரை வழியாக நடந்து சென்றார்கள் . செல்லும் வழியில் தான் அந்த வளையங்கள் உள்ள வண்டிகள் நிறைய தென்பட்டன. எல்லா வளையங்களிலும் தண்ணீர் குடங்கள் சரியாகப் பொருந்தியிருந்தன.

அடடா இது தண்ணி எடுக்குற வண்டியா... வித்யாசமாய் உணர்ந்தவளாய் நிரஞ்சனா கேட்க,

ஆமா இங்க காட்டு வேலைலாம் இருக்கும் ... அதுக்கு தண்ணி கொண்டு போகணும் ... நல்ல தண்ணி பாத்தியா இவ்ளோ தூரம் வந்து தான் எடுக்கணும்.. ஒரு ஒரு கொடமா எடுக்க முடியாதுல்ல.. காடும் ஒவ்வொன்னும் ஒரு தூரத்துல இருக்கும்...

ஏண்டா அப்போ இந்த வண்டில தான் தண்ணி எடுத்துட்டு போகணுமா தெனமும் சிரமம் காட்டிய அம்மாவிடம்,

ஊருல தண்ணி கெடைக்குறது கஷ்டம் சித்தி... கம்மாயில பாருங்க தண்ணியே கொஞ்சமா தான் இருக்கு.. மழையே இல்லையே...

ஆமா.. ஆமா எல்லா ஊர்லயும் மழைக்கு பஞ்சம் தான் .....

கோவிலை அடைந்தார்கள். பூசாரிக்கு முன்பே சொல்லி வைத்ததனால் அவரும் சரியாக வந்து சேர்ந்தார். சுற்றிலும் கருவேல மரங்கள் சூழ நடுவில் முனீஸ்வரர் கோவில். நிரஞ்சனாவின் குல தெய்வம்.

என்ன தாயி நானே பொங்கல் வச்சிடவா .. நீங்களே வைக்கிறீங்களா ... எவ்ளோ அரிசி வாங்கியாந்தீங்க...

ஒரு கிலோ பச்சரிசி ....

அப்போ என்கிட்ட ஒரு பானை இருக்கு .. நீங்க ஒண்ணு வச்சுருகீகல்ல அதுவும் சேர்த்து ரெண்டு பொங்கலா வச்சுடுவோம்... சரி தானா ..

அண்ணி பொங்கல் வைக்க தேவையான விறகுகளைச் சேகரிக்க, அண்ணன் கோவில் சுற்றுப் புறத்தை கூட்டிப் பெருக்கினான். பசங்க குதியாட்டமும் விளையாட்டுமாக இருந்தார்கள்.

நிரஞ்சனா பானைக்கு பொட்டு வைப்பது, பூசை சாமான்கள் எடுத்துக் கொடுப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளைச் செய்தாள்.

பூசாரி சாமியைக் குளிப்பாட்டி விட்டு மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்து குங்கும சந்தனப் பொட்டுக்களை வைத்துக் கொண்டிருந்தார்.. இடையிடையே பொங்கலைக் கவனித்தபடியும். அண்ணியும் பொங்கலைக் கவனிப்பதும் அம்மாவோடு பேசுவதுமாக இருந்தாள்.

பொங்கல் வைத்தாயிற்று. சாமிக்குப் படைக்க வாழை இலைகளை விரித்தார் பூசாரி.

சின்னவன்,ம்மா எனக்கு பொங்கல் நான்தான் மொதல்ல சாப்டுவேன்.. எனக்கு போடு என அடம்பிடித்தான் ... யாரும் கவனிக்கவில்லை. சாமி கும்பிடத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

இதைக் கவனித்த நிரஞ்சனா, டேய் சாமிக்கு வச்சுட்டு தான் சாப்டனும் சரியா....

மீண்டும் மீண்டும் அடமாக பேசிக் கொண்டிருந்தவன் பூசாரி வாழை இலையில் படைத்துக் கொண்டிருக்கும்போதே ஓடிச்சென்று பொங்கலில் கை வைத்து, சூடு தாங்காமல் எடுத்து வாயில் வைத்துச் சுவைத்தான்.

ம்மா .. ம்மா பொங்கல் நல்லாருக்குமா .. எனக்கு கொஞ்சம் போடு... மழலை கொஞ்சினான் மீண்டும்.

நிரஞ்சனாவிற்கு கொஞ்சம் கோபமாக இருந்தது. சாமிக்கு வைப்பதை யாராது எடுப்பாங்களா சத்தம் போட,

விடு தாயி குழந்தைக்கு என்ன தெரியும்.... அதுக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியுமா.. சாமினா என்னனு தெரியுமா.... குழந்தையும் சாமியும் ஒண்ணுனு சும்மாவா சொல்லிருக்காக....

கொஞ்சம் அமைதி நிலவத் தொடங்கியது.

பூசாரி சாமிக்கு பூசை போட ஆரம்பித்தார். எல்லோரும் கண்மூடி அவரவர்க்கு ஏற்ப வேண்டிக் கொண்டார்கள்.

மாலை நான்கு முப்பது இருக்கும் மணி.

எல்லோரும் அமர்ந்து பிரசாதப் பொங்கலை உண்டனர். சின்னவன் நிரஞ்சனாவின் இலையில் ஓரமாகச் சாப்பிட்டான்(இருவரும் ஒரே இலையைப் பகிர்ந்து கொண்டனர்).

பூசாரியிடம் விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டும், மீதிப் பொங்கலை தூக்குவாளியில் அடைத்துக் கொண்டும் அனைவரும் கிளம்பி கோவிலை விட்டு சிறிது தூரம் நடந்த போது,

இந்தக் கோவில சுத்தி கருவேல மரங்களா தான் இருக்கு... பூசாரி சொன்னாரே ஒரு முள்ளு கூட பாதைல கெடக்காது செருப்பில்லாம தான் நடந்து வரணும்னும் நெனச்சுக்கிட்டே ஏதோ யோசனையாகவே வந்தாள் நிரஞ்சனா. ஓரமாகக் கிடந்த முள்ளைப் பார்த்ததும் “குத்துதான்னு பார்ப்போம்னு தெரிஞ்சோ தெரியாமலோ காலை வைக்க முள் தைத்தே விட்டது. வலி தாங்காதவள் இடது பாதத்தை தூக்கி செய்வதறியாது நிற்க செல்லையா,

நிரஞ்சனா அத புடுங்கிப் போடு ...

காலில் இருந்து முள்ளைப்பிடுங்கி எறிந்தவளுக்கு மனம் குத்தியது. பாதத்தில் வலி பெரிதாகத் தெரியவில்லை.

ஐந்து மணி கூட ஆகாததால் வெயிலால் உக்கிரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கட்டுப்படுத்திக் கொண்டே வர முடிந்தது.

இருந்தாலும் மண் பாதை என்பதால் நன்றாகச் சூடு கண்டன எல்லோரின் பாதங்களும். குறிப்பிட்ட தூரத்தில் எல்லோரும் செருப்புகளை அணிந்து கொள்ள. , பசங்க இருவரும் செருப்பில்லாமல் திண்டாடினர்.

வரும் போது வண்டியில் வந்ததால் தெரியவில்லை. வண்டியை எடுத்துக் கொண்ட செல்லையா தண்ணீர் தொட்டிக்கு கொஞ்சம் முன்னேறிக் கிளம்ப,

ம்மா சுடுதும்மா ... ம்மா சுடுதும்மா ... சின்னவன் துடிப்பதையும்

அண்ணி இடுப்பில் மீதியுள்ள பொருட்களைச் சுமந்து வரும் சிரமத்தையும் கண்ணுற்ற நிரஞ்சனா அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள் ..

புழுதி படிந்த அவன் கால்கள் என்னவோ செய்தது...

அண்ணி இங்க செருப்புக் கடை இருக்கா..

இல்லம்மா அதுக்கெலாம் டவுனுக்குத் தான் போகணும்...

சின்னவன் இப்போது இடுப்பில் கனப்பதாகத் தானிருந்தது நிரஞ்சனாவிற்கு.

- புலமி

 

Pin It