அமராவால்  முடியவில்லை....

கட்டிலில் அகல விரிந்த கால்களோடு... முக்கி முனகி.. வேர்த்து... பற்கள் கடித்துக் கொண்டு தலையை அங்கும் இங்கும் ஆட்டியபடி துடித்துக் கொண்டிருந்தாள். சத்தம் வெளியே வரக் கூடாது என்பதற்காக துணியைக் கொண்டு அவளே தன் பற்களை இறுக்கி இறுக்க அழுத்திக் கடித்துக் கொண்டிருந்தாள்.  அவளின் உடல் வேர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது...அவளுக்கு அவளே தைரியம்.. ஆறுதல்....சொல்லிக் கொண்டாள். மனமெங்கும் குழந்தையின் நழுவலை உணர முடிந்தது.  இதோ இன்னும் சற்று நேரத்தில் வெளியே வந்து விழுந்து விடும் என்று முழுமையாக நம்பினாள்.  உடல் முழுக்க இருந்த சக்தியை... உணர்வாக்கி அழுந்த அழுந்த வெளியே தள்ளினாள்.

அந்த அறை முழுக்க பிரசவ வாசம் நிரம்பி இருப்பதாக நம்பினாள். முதுகை கட்டிலின் நெஞ்சில் அழுந்தக் கொடுத்து... எக்கி எக்கி பெருவிரல் அழுத்தி.....மெல்ல விரிந்திருந்த கால்களின் அசைவுகளை சமன் படுத்தினாள். அவளின் கண்கள்... மேல் நோக்கி... வானத்தை தாண்டி வெளியே விட்டு விட்ட பார்வையோடு வாய் திறத்தலின் சேர்க்கையோடு...... முகத்தை இன்னும் இன்னும் மேற் கூரை நோக்கி நேராக்கி அழுத்தம் செய்தபடியே இருந்தது.  இதோ இதோ... பெரும் சுமை பட்டென நழுவி கட்டிலில் விழுந்து விட்டதை உணர்ந்தாள்.  உயிர் மீண்டு வந்த திருப்தியில்.. மூச்சு விடவும் மறந்தவளாய் மௌனித்து கிடந்தாள். காலம் நின்று தொடங்கிய சிறு இடைவெளியில் சிறு புன்னகையினூடாக வழிந்த எச்சிலைத் துடைக்க வேண்டாதவளாய் மெல்ல எழுந்தாள். அந்த அறையின் நிறம் தனக்கு தகுந்தாற் போல மாறிக் கொண்டிருப்பதாக தோன்றியது அமர்க்கு.

நேராக நின்று தன் உடலை தானே சற்று நேரம் உற்று நோக்கினான் அமர்......

வேர்த்திருந்த தனதுடலை துண்டால் துடைத்துக் கொண்டே அவனில் இருந்து சற்று முன் நழுவி கட்டிலில் விழுந்த அந்த தலையணையை மெல்ல எடுத்து கட்டிலின் ஓரமாய் வைத்தான்...தூக்கையில் ஒரு குழந்தையை தூக்குபவன் போல பாவனை செய்து கொண்டான்.... முகம் கூட குழந்தை அளவுக்கு சுருங்கியது.  நேற்று... காதம்பரி தன் பிரசவ கதையைக் கூறியதிலிருந்தே அவனின் மனம்.. அதை சுற்றியே உப்பிக் கொண்டிருந்தது.  இன்று அவளைப் போலவே தன்னை உணர்ந்து ஒரு முறை அந்த பிரசவ வலியை...நிகழ்வை....உணர்ந்து பார்த்ததில்.....பிரமிக்கத்தக்க அனுபவம் ஒன்றை பெற்றவனானான்.  நிஜமாகவே அந்த வலியை உணர்ந்தவனாக உடல் வலிக்க உள்ளம் கலைக்க ஜன்னலோரம் அமர்ந்து வெறிக்கத் துவங்கினான்.

அவனுக்கு பிடித்ததைப் போல இந்த உலகம் சுற்றுவதை அவனே உருவாக்கிக் கொண்ட திருப்தியில் இன்னும் வெறித்துக் கிடந்தது அவனின் பார்வை. அதனுள் நீண்டு வளைந்த காட்சிகளின் கோர்வை அவன் சேர்க்காமலே இணைந்து கொண்டு தனக்கான அமைப்புகளாக அவனை சுற்றி இருப்பதை அவன் ஆக்ரோசமாக விரும்பினான்.  அது அவனின் அழகியலாக அல்லது மிகச் சிறந்த அந்தரங்கமாக இருப்பதாக உணர்ந்தான்... எல்லா உணர்வுகளின் கோட்பாடுகளையும் அவன் வசமே வைத்திருக்கும் அவனின் உலகம்... ஒரு நீண்ட நெடிய சித்திரம் வரையும்  தவத்தைப் போன்றது. அது....இன்னும்......இன்னும் தன்னை வரைந்து கொண்டிருப்பதாக அவனின் ஆன்மா அர்த்தப் படுத்திக் கொண்டது.....ஒரு பாதி காட்சியைப் போல.

அதே இரவு....

அவன் வீட்டு பின்னால் இருக்கும் சிலுவை மலை...

அழுகிறானா சிரிக்கிறானா எனத் தெரியாத மிகச் சிறந்த தருணத்தை உயிரில் ஏந்திக் கொண்ட ஒருவன்.. வேகமும்.. தாகமும் கொண்ட ஓட்டமும் நடையுமாக மலை ஏறிக் கொண்டிருந்தான். அவனின்.. அரட்டலும்...சிரிப்பும்... யோசனையும்........ இரவைக் கிழித்துக் கொண்டு தைத்தபடியே..சற்று முன் சொன்னதை....இல்லாமல் செய்யும் சூட்சுமக் காடுகளின் துகள்களென இறுகியிருக்கும் மதி மயங்கிய நிச்சயமற்ற தன்மையை அவனாகவே செய்து கொண்டது போல.. இன்னும் வேகமாய் ஏறிக் கொண்டிருந்தான்.

காற்றற்ற இறுமாப்பின் இம்சையில் மலை... பச்சையாகி இரவை கசிந்து கொண்டிருந்தது. சிலுவை மலை புல்வெளிகளால் நிரம்பிய தோட்டம் போல காணப்பட்டது.  ஆங்கங்கே... பெண்களும் ஆண்களும்.. சிறுவர்களும்.. சிறுமிகளும்....வயாதானவர்களும்.... உலவிக் கொண்டிப்பதை அவனால் பார்க்க முடியவில்லை.  அத்தனை மூர்க்கமாக கடந்து செல்லும் அவனை அவர்களனைவரும் பார்த்தார்கள்.... அவர்களின் பார்வைகளில்....சலனமே இல்லை.... தேங்கிய புல்வெளி நீர்த்துளிகள் போல அத்தனை மிருதுவாக இருந்தது...... ஒரு மாதிரி புரிந்து கொண்டார்கள்.. அவனின் விதி செய்த கதியின் கடைசி தருணத்தை அவன் மூலமாக்கிட விரும்புகிறான்..  வரவற்ற தேவையின் நினைவற்ற புள்ளிக்குள்.....தன்னை இணைத்துக் கொள்ள போராடுகிறான். அவன்......நுட்பத்தின் வேர் தேடி,,... மானுடத்தின் நிழலை அழிக்க விரும்புகிறான்.

சிலுவை மலையின் மத்தியில்... மெய் சிலிர்க்கும்..... ஊதா நிறத்தின் சுவடுகளாய்.. கருமைக்கும் கனவுக்கும் இடையே உரு கொண்ட ஓர் உருவம் ஒரு பூச்செடியின் அடியே அமர்ந்திருக்க.....மலை மேல் ஏறி.... உச்சி செல்ல திரும்பியவன் கண்களில்... ஒரு கனவைப் போல... ஒரு கதிரியக்கத் துளிகளின்  சேர்க்கை போல... விழுந்தது அந்த உருவம். நொடியில் நான்கு கண்களும் சந்திந்துக் கொண்டன...பேச்சுக்கள் முற்றிலும் தவிர்க்கப் பட்டன.  சிலுவை மலை... ஸ்தம்பித்த ஓவியமாகி விட.. அவன் ஓடிச் சென்று அந்தக் கால்களில் விழுந்தான். அந்தக் கரங்களில் தவழ்ந்தான்.

"உன்கிட்ட என்ன பேசறதுன்னு கூட எனக்கு தெரியல.......எடுத்துக்கோ ..... அவளோ தான்... ஒரு கடவுளா உணர்றேன்... நீ இருக்கும் இந்த இடந்தான் என் மோட்சம்ம்னு நான் நம்பறேன்...எனது எல்லா புள்ளிகளையும் குமிச்சு உன் காலடில போடணும்னு தோணுது... என் அற்புதங்கள் எல்லாம் உன் பார்வைக்குள்ள போய்ட்ட மாதிரி இருக்கு... வா.. எடுத்துக்கோ.. இது நான் இல்ல.. நீ.. நீ நான் அப்டிங்கறத தாண்டி ஒரு உணர்வா...இந்த அத்துவான மலை எங்கும் நிறைஞ்சு இருக்கற அந்த அந்தகாரத்தின் சுவடுகளாய் மாறிட்ட மாதிரி ஒரு எண்ணம் வருது.. தயவு செஞ்சு வா.... எனதன்பே... நீ வந்தால் தான் நான் போக முடியும்.. இது நியமிக்கப் பட்ட கருமம்.  சூழலின் சூட்சும மந்திரம்....... நான் போகணும்..."- என்று கத்தி கத்தி.. ஒரு மிருகத்தின் வெறியைப் போல அவன் மரணத்தை வரவேற்பது தெரிந்தது......

"வா......." என்று அழைத்த சிலுவை மலைவாசி... அவனின் கழுத்தில் தன் கரங்களைப் பதிந்து... மெல்ல அழுத்தத் துவங்கினார். வந்தவன்.. கால்கள் உரச...... தவிப்புகளின் முன்னால் ஒரு பிதற்றலுடன் கத்தவும் முடியாத பிரேதத்துக்குள் மெல்ல மெல்ல நுழைய.....நிமிடத்தில் மரணத்தை அவனுக்குள் அழைத்து வந்தான்.  என் கடன் பணி  செய்து கிடப்பதே என்பது போல... உடலைத் தூக்கி மலை உச்சியில் இருந்து கீழே வீச.. சற்று நேரத்தில்... அவன்....... அந்த காடுகளில்.....முகம் மலர.. நடக்கத் துவங்கி இருந்தான்....... சற்று முன் நடந்து கொண்டிருந்தவர்கள் போல.

விடிந்திருந்தது......

ராஜ நடை..... கம்பீரத்தின் உருவமாய் வழக்கம் போல.. அலுவலகம் சென்றான்... அமர்.

எதிர்ப்பட்ட ரூபா....."ஹாய்...... அமர்ர்ர்ர்ர்........"- என்றபடியே பட்டென நின்று.....சற்று முகத்தை எக்கி அவன் காதருகே வந்து "செம ஸ்மார்ட் அமர் நீங்க...... சூப்பர்ப்......உங்க நடையே......நடைதான்...... இப்பவே உங்களுக்கு எல்லாத்துக்கும் ஓகே சொல்லிடனும் போல இருக்கு..." என்று சொல்லி.. நாக்கைக் கடித்தாள்.

வழக்கம் போல.. வலது கண்ணை கீழ் இருந்து மேல் நோக்கி தூக்கி பட்டும் படாமல் கண் அடித்து விட்டு....அதே சமயம் அளவான அழகிய புன்னகை ஒன்றை தந்து விட்டு கடந்து சென்றான் அமர்.

அவன் இருக்கையில் அமர்ந்த அடுத்த நொடி....." சார்.. மேடம் கூப்டறாங்க...... செம கோபத்துல இருப்பங்க போல....அப்டி ஒரு சத்தம்......"

"எங்க அமர்...?" என்று மேடத்தின் குரலை இடத்துக்கு தகுந்தாற் போல பாவனையில் மட்டும் சத்தத்தையும்...... குரலில் மௌனத்தையும் கொண்டு காற்றினில் ஒப்பனை செய்வது போல சொல்லிப் போனான்.. குடினாதன்.

புருவத்தை ஒரு மாதிரி தூக்கிக் கொண்டே வேகமாய்..... ஆனால் அதே அலட்டல் இல்லாத உடல் மொழியோடு மேடத்தின் அறை நோக்கி சென்று அறையை மெல்லத் தட்டினான்.

"எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......"என்று ஒரு வெண்கலக் குரல்..... திடும்மென பூத்த பூந்தோட்டத்தின் நகலென வெளிப்பட.....பட்டும் படாமலும்... தொடாமல் பூப்பதைப் போல...மெல்ல கதவைத் திறந்தபடியே உள்ளே நுழைந்தான்.

"என்ன மேன் நினைச்சிட்டிருக்க...... நேத்து அந்த பச்சை பைல்ல அவளோ தப்பு.....எங்க இருக்கு உன் மைண்ட்...... இதுக்குதான் உனக்கு அவளோ சம்பளமா...... புத்தி முழுக்க இங்க இருக்கறதா இருந்தா வேலை செய்..."-கத்திக் கொண்டே மேடத்தின் கண்கள் அமர் திறந்து விட்டு வந்த கதவின் மேலேயே தொடர்ந்திருந்தது.

"வேலை பிடிக்கலனா......."- என்று குரல் தடுமாறுவதற்கும்..... கதவு மெல்ல நகர்ந்து கடைசியாக தான் அடைந்திருக்க வேண்டிய இடத்தில் சேர்ந்து கொள்ளவும் சரியாக இருக்க......

'ஹே.. அமரா........ வாடா.......வாடா......." என்று மெல்லமாக கத்திக் கொண்டே பட்டென தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி பக்கத்துக்கு சேரின் மேல் போட்டு விட்டு......டி சர்டோடு... அவன் முன்னால் வேகமாய் வந்து மேசையின் மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்தாள் காதம்பரி.

"என்ன....... சாப்டியா...?........ சாப்ட்ருக்க மாட்ட........ இந்தா உனக்குதான் கொண்டு வந்தேன்..." என்று மேசை அறைக்குள் இருந்து ஒரு டிபன் பாக்சை எடுத்து அவன் முன்னால் நீட்டினாள் காதம்பரி.

டிபன் பாக்சை வாங்கியபடியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அமர்...... வழக்கம் போல.

அவளும் அவனை கணம் ஒன்றில் உற்று நோக்கினாள். பின் நோக்கலின் உற்றுதலை அவன் முகத்தின்பால் பூசிக் கொண்டு...."சாரிடா..... நேத்து என் பிரசவக் கதைய சொல்லி போர் அடிச்சிடேன்ல......சரி விடு....இன்னைக்கு கலர்புல்லான நாட்கள் பத்தின கதை......சொல்றேன்..."

அவன் அவளை பார்வையாலே விழுங்கிக் கொண்டிருந்தான்.

"என்ன உம்ம்முன்னு பாத்துட்டே இருக்க... புரியலையா.......!...அதான்..... என்னோட 16 வயசுல நடந்த கதைய சொல்றேன்.. சரியா......?"-என்றாள்.

அந்த அறையின் செவிகள் படக்கென விடைத்துக் கொண்டன... இது வழக்கமாய் நடக்கும் கதைதான் என்றாலும்... கதைகளில் நமக்கு பிடித்தமான வாழ்க்கை எப்போதும் ஒளிந்து கொண்டிருப்பதை...யாவரும் உணர்ந்துதான் இருக்கிறார்கள்....கதைகள் எப்போதும் உணர்வுகளால் ஆக்கப் பட்டவை..... நல்ல கதை சொல்லியின் சுற்றம் காதுகளால் நிரம்பியே இருக்கின்றன.  காதம்பரி நல்ல கதை சொல்லி. காதுகளின் கவனத்தில் அமர் மீண்டும் மீண்டும்... பாத்திரத்தின் தன்மையை தன் மீது இம்முறையும் கொட்டத் துவங்கினான்.

"இது வேற......"- என்றபடியே போட்டிருந்த கொண்டையை அவிழ்த்து விட்டு.. கனத்த சாம்பல் பூக்கத் துவங்கி இருந்த கூந்தலை இருபக்கமும் பரப்பி... ஆல மரத்தின் பிடரிகளை இப்படியும் அப்படியும் பிடித்து அமர்ந்திருப்பதைப் போல அமர்ந்து கொண்டாள்......70 கிலோ அஞ்சலி பாப்பாவைப் போல.

அவன் காதுகள்... அவளை நோக்கி திரும்பிக் கொண்டன... கண்கள் அவளை நோக்கிதான் திரும்பி இருந்தன...

"எங்க ஊர்தான் தெரியுமே...மதிசோலை கிராமம்..."-எழுத்து போடுவதற்கு பிரீஸ் செய்வது போல நிறுத்தி பின்......தொடர்ந்தாள்.

"எங்க பாரு பச்சை பசேல்ன்னுதான் இருக்கும்... மாட்டுவண்டியும்....மாந்தோப்பும்..... வயக்காடும்..... வாய்க்காலும்..... ஆறுகளும்..... குளங்களும்..... கோயில்களும்.... குமரிகளும்..... அப்டி ஒரு நகரும் போடோக்ராபி போல....இருக்கும்.  எப்ப பாரு..... சூரியன்....குளிச்சிட்டே இருக்கற மாதிரி ஒருமாதிரி குளுகுளுப்போடு இருக்கும்...அது வரை சின்ன புள்ளையா....எல்லார் கூடவும் விளையாட்டு......ஆட்டம்....பாட்டம்ன்னு இருந்தேன்......... பசங்க பொண்ணுங்கன்னு  இல்லாம ஒன்னாவே.....குளிக்கறது... பச்சக் குதிர தாண்டறது.. கில்லி விளையாடறது... பம்பரம் விடறதுன்னு அது ஒரு வண்ணமயமான வாழ்க்கை..."

............................................................

"பஞ்சு மிட்டாய் வாங்கி திங்கறது.. பனம் பழம் சுட்டு திங்கறது... குச்சி மிட்டாய்.. வாட்ச் மிட்டாய்...நொங்குன்னு....... திரிஞ்ச வாழ்கையில ஒரு நாள்.. எங்க அப்பத்தா....ரத்தத்தை வாரி இரைச்ச மாதிரி......" இனி நீ பெரிய மனுசி ஆகிட்ட.. இனி மேல் பசங்க கூட சேரக்கூடாதுன்னு சொல்லிடுச்சு.."

............................................................

"என்னடா இதுன்னு......ஒன்னும் புரியல..... அதுவரை... என் கூட விளையாடிட்டு இருந்த இளங்கோ ... அதுக்கப்றம் என்னை ஒரு மாதிரி உத்து உத்து பார்க்க ஆரம்பிச்சிட்டான்.... அப்பத்தா சொன்னது சரிதான் போலன்னு நினைச்சாலும் அவன் பாக்கறது பிடிச்சிருந்தது.  அவனும் என் கூடதான் உக்காருவேன்னு சொல்லுவான்.  கோயில்ல திரை கட்டி படம் போடும்போது... எனக்கும் சேர்த்து இடம் புடிப்பான்.  கொய்யாக்கா.. மாதுளம் பழம்.. நாவல் பழம்னு எல்லாத்தையும் முதல்ல எனக்குதான் குடுப்பான்.. அப்புறம்தான் அவனுக்கே எடுப்பான்.  அவன் எப்பவும் என் கூட சண்டை போடற பையன். இப்பெல்லாம் நான் என்ன சொன்னாலும் அதுதான் சரிங்கறான்.  எனக்கும் அவன் மேல ஒரு மாதிரி இது.... அதாது....அவன் எனக்கு மட்டும் தான் சேக்காலியா இருக்கணும்னு ஒரு இது..."

......................................................

"ஒரு நாள் என்ன பண்ணினா..தெரியுமா....? . ஒரு கல்யாண வீட்டுல சாப்டுட்டு இருக்கோம்.....இளங்கோ என் பக்கத்துலதான் உக்காந்திருக்கான்.. ஏதோ பேச்சு..... அவன் சேக்காலி கூட வாக்கு வாதம்..... காதம்பரி என்ன சொன்னாலும் கேப்பேன்னு சொல்லிட்டு சண்டை போட்டுட்டு இருக்கான்... நான் படக்குன்னு என் இலையில இருந்த உப்பை எடுத்து.......'இந்தா.... இத தின்னு பாப்போம்'னு சொல்லிட்டேன்.  அவனும் படக்குன்னு வாங்கி திங்கறான்... சரி கொஞ்சம்தானே..அதான் பயபுள்ள திங்குதுன்னு..... உப்பு வெச்சிட்டு போற சித்ரக்காகிட்ட கண்ண காமிச்சு..... ஒரு கை நிறைய உப்பு வாங்கி அவன் கையில கொட்டறேன்...... அதையும் மாடு புல்ல அடியோடு எடுத்து திங்குமே....அப்டி திங்கறான்...... எனக்கு பக்குன்னு ஆகிப் போச்சு....அவன அன்னைக்குதான் ரெம்ப நாளுக்கு அப்புறம் நேரா நிமிந்து முகத்த உத்துப் பார்த்தேன்.. மூஞ்சியெல்லாம் பருவோட......லேசா முளைச்ச மீசையோட பாக்கவே வேற மாதிரி இருந்தான்.  மெல்லமா அவன் மேல உரசிகிட்டேன்....அப்போ அப்டிதான் தோனுச்சு..... அவன் கண்ணுல ஒரு மின்னல் மாதிரி என்னமோ ஒரு இது.. அப்டியே அடிச்சது.... அந்த நேரத்துல அவன மட்டும்தான் பிடிச்சுது....."

....................................................?

"அதுக்கப்றம் அதே வாரத்துல கோயில் திருவிழா அன்னைக்கு சாமி தெரியலன்னு நெஞ்சளவுக்கு இருக்கற மதிலுக்கு இந்தப்றம் நின்னு எட்டி எட்டி குதிச்சிட்டு இருக்கேன்.. பட்டுன்னு பின்னால இருந்து இடுப்ப பிடிச்சு தூக்கிட்டான்... அவன் நல்ல உயரம்... அப்பவே 20 வயசு பையன் மாதிரி உடம்பு.. நான் இத்துனூண்டுதானே இருப்பேன்.. தூக்கிட்டான்.  அவன் கை என் இடுப்பைத் தாண்டி ஒரு கட்டத்துல.. அப்டியே மேல போய்டுச்சு.... அவன் விரலு விரியுது...... நான் கத்தறத அடக்கிகிட்டு துள்ளவும்... இன்னும் வேகமா என் பாரம் அவன் மேல இறங்கிடுச்சு.... அவன் நிலை தடுமாறி கீழ விழ....நான் அவன் மேல மல்லாக்க விழுந்திட்டேன்... அந்த வானமெல்லாம்.....நட்சத்திரத்தை தூவற மாதிரி இருந்துச்சு.. கொஞ்ச நேரம் செத்த பாம்புக மாதிரி அப்டியே கிடந்தோம்.. அப்டி கிடக்கவும் புடிச்சுது..."

.................................................!

"என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்... ம் கூட கொட்டாம கேட்டுட்டு இருக்க......"என்று எழுந்து வந்து அமரின் தலையை ஒரு முறை தடவிக் கொண்டே "நீ நல்ல பையன்டா... உன்ன எனக்கு ரெம்ப பிடிக்கும்.. நீ மட்டும் அப்போ என் கிராமத்துல இருந்திருந்தா.. . என் கதையே மாறி இருக்கும் இல்ல......"- என்று சொல்லிபடியே திரும்பி அவள் இருக்கைக்கு சென்றாள்.. அது வழக்கமாக சொல்லும் வசனம்தான் என்றாலும்... வழக்கம் போலவே... அவளை இன்னும் ஆழமாய் பார்க்கத் தூண்டியது அவனை.

"இங்க தானே வெச்சேன்..." என்று முணங்கிக் கொண்டே.....தேடியபடியே......."அமரா....... நேத்து ஈவினிங் ஒரு பங்க்சனுக்கு போகறதுக்காக ஒரு புடவை கொண்டு வந்து இங்க வெச்சேன்..... ஆனா காணோம் பாரு..... நேத்து பங்க்சனுக்கும் போகல.. புடவை ஞாபகமும் இப்போதான் வருது" என்று சொல்லி கப கபவென காதம்பரி சிரிக்க... நேற்று.. அவள் புடைவைக் கட்டிக் கொண்டு பிரசவத்தின் பாடுகளை கட்டிலில் சுமந்ததை நினைத்துப் பார்த்தபடி பட்டென எழுந்தான் அமர்.

அவன் எழுவதைக் கண்ட காதம்பரி "என்ன....... வேலை இருக்கா........?..... சரி போய் வேலையப் பாரு..... லஞ்சுக்கு வா...... வேற ஒரு கதை சொல்றேன்..." என்றபடியே தலை கவிழ்ந்து மேசையில் சரிந்து அமர்ந்தாள்.  அவளின் வழக்கம் அதுவென இருந்தாலும்... ஏனோ அவளை இன்னும் கொஞ்சம் நேரம் பேச சொல்ல வேண்டும் போல இருந்தது அமருக்கு.  அவளைக் கடக்க முடியாத பக்கத்தில் ஒரு தூரத்தை கலைந்து கொண்டே இருப்பது அவனின் தவம் கலைத்தல் விதி.

வேலை செய்ய மனம் ஒப்பவே இல்லை...காதம்பரியின் வாழ்க்கைக் கதைக்குள் சித்ராக்காவுக்கு பதிலாக இவன் நுழைந்து.....இளங்கோவின் கையில் காதம்பரி வைத்த உப்பின் அளவை கூட்டிக் கொண்டே இருந்தான்... இளங்கோவும்... முதலில் தன்னை நிரூபிக்க உப்பை வாங்கி வாங்கி தின்றவன் ஒரு கட்டத்துக்கு மேல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாயைக் கோணிக் கொண்டு.. தடுமாறி.. வாந்தி எடுத்து.. அந்த இடத்தையே களேபரப் படுத்தினான்...

ஆனாலும் காதம்பரியின் பார்வை இளங்கோவின் மீதே இருக்க...கோபத்தை ஏன் அடக்க வேண்டும் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு....எல்லோரின் பார்வைக்கும் பதில் அளிக்கும் விதமாக..." இல்ல...சும்மா தான்..... எது வரைக்கும் போறான்னு பார்த்தேன்" என்றபடியே... இளங்கோவுக்கு முதலுதவி செய்யத் துவங்கினான்... அமர்.

"யாருப்பா நீ...? இது.....வரை பார்த்ததே இல்ல" என்று யாரோ கேட்க.....

"இங்க.... தான்...... பக்கத்தூரு... சொந்தந்தான்"- என்று பொத்தாம் பொதுவாக.....கூறியபடியே அவர்களைக் கடந்து வந்தான்....அமர்.

"என்ன..... அமர்... உக்காந்துட்டே தூக்கமா......இல்ல.....முழிச்சிகிட்டே கனவா......?"- என்று ரூபா கேட்க..... பட்டென நினைவுக்குள் விழுந்த கல்லின் சுமையோடு உடல் திரும்பினான். உள்ளம் மறுத்தாலும் உதடு மெல்ல சிரித்தது.....

'ஒன்னும் இல்ல' என்பது போல தலை ஆட்டினான்....அவளுக்கு அது போதும் என்பது அவன் உடல் மொழி.

மறுபடியும்.... அதே காலத்துக்குள் நுழைந்து... இளங்கோ அவள் இடுப்பை பற்றி தூக்கையில்..... அவர்களை கடந்து போகிறவன் போல.. இளங்கோவின் கால்களை இடற வைத்து விட்டு சாமி பார்ப்பவன் போல இயல்பாய்...பார்க்க.. அப்போதும்.. அவர்கள்.. கீழே விழ.. அதே நட்சித்திரங்கள்... பூக்கள் தூவின...

சட்டென முடிவெடுத்தவனாய்..." என்ன... ராஜேந்திரண்ணே....எப்டி இருக்கீங்க......?"- என்று இருட்டைப் பார்த்து சும்மா கேட்டான் அமர்... எல்லாம் ஒரு ட்ரிக் என்பது அவனது வில்லன் புன்னகை..

"ஏய் உங்க அப்பா வர்றார் போல.. எழுந்திரு... ஓடிடுவோம்... '- என்று இளங்கோ காதம்பரியின் காதுக்குள் கிசுகிசுக்க...

"லூசு.. எங்கப்பா.. சந்தைக்கு மாட்ட ஓட்டிகிட்டு அவரசமா போயிருக்கு..... காலைலதான் வரும்..." என்று பதில் கிசு கிசுத்தாள்.

என்ன செய்தாலும் அவளின் பார்வை இளங்கோவின் மீதே இருப்பதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அமரால்.

"திரும்பு காதம்பரி.. உனக்கு நான்தான் பொருத்தம்... அவன் இல்ல... அவன் பாரு எவ்ளோ உயரமா குண்டா இருக்கான்.. நான் பாரு..... ஸ்லிம்மா.. அளவான உயரத்துல... எவ்ளோ அழகா இருக்கேன்.. பாரு......ஐயோ நான் நிக்கறதே உனக்கு தெரிய மட்டேங்குதே......" என்று காதம்பரியை சுற்றி சுற்றி ஒரு பூனையின் முனங்கலோடு புலம்பிக் கொண்டிருந்தான் அமர்.

மனதுக்குள் காட்டாறு உடைந்து ஓடுவதைப் போல உணர முடிந்தது. எழுந்து வேக வேகமாய் காதம்பரியின் அறைக்குள் சென்றான்.. அவள்.. ஒரு குழந்தையைப் போல..... சோபாவில் தூங்கிக் கிடக்க...இடுப்பு தெரிய விலகிக் கிடந்த டி சட்டையை.....மெல்ல குனிந்து இழுத்து மூடி விட்டு மெல்ல வெளியேறினான்...

"லூசு... லூசு....'-மனதுக்குள் திட்டியபடியே பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்...

இரவு, அவன் வீட்டில் கொலுசொலி......அணிலின் கீச்சொலிகளை தூவிக் கொண்டே இருந்தன. மதிசோலை கிராமத்தில் காதம்பரி மேல் விழுந்த நட்சத்திரங்களை பெருக்கி கூட்டிக் கொண்டிருந்தான்....... அமர். அத்தனை பளிச்சிடல்கள் அவன் வீடெங்கும்.  அவன்.....கைகளில்.. கண்ணாடி  வளையல்கள்....மினுங்கின. 

"மஞ்சக் கலர்ல கை நிறைய கண்ணாடி வளையல போட்டுகிட்டு நான் மதிசோலை கிராமத்தோட எல்லா சந்து பொந்துகல்லயும் ஓடி ஒளிஞ்சு விளையாடுன நாள்கள்.....அற்புதமான கனவுலுக  நீட்சிகள்"ன்னு காதம்பரி போன வாரம் கூறியது.... இன்னமும் வளையலின் ஓசைகளை சுமந்து கொண்டு அவனெங்கும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

மருதாணி கொண்ட அவளின் நகங்கள்... தாளமிடும் அசரீரி சப்தங்களை அந்த அறையெங்கும் எழுப்ப.. அப்போதுதான் அரைத்த மருதாணி குழைவை  நகங்களில் அப்பிக் கொண்டு...... கட்டியிருந்த பட்டுப் பாவாடையை.... பட்டும் படாமல்.....இரு கைகளாலும் தூக்கிப் பிடித்த வண்ணம்.... சமையலறைக்கும் முகப்பறைக்கும் தத்திதாவும் மான்களின் கூட்டத்தின் நாயகி என..... நடந்து கொண்டும் தாவிக் கொண்டும் இருந்தான் அமர். அது ஓர் அற்புத வனத்தின் அகல விரிந்த ஓவியம் போல... கண்கள் சிமிட்டின.

காதம்பரி கூறிய அந்த சிவப்பு வண்ண செருப்பு தன் கால்களுக்கு எடுப்பாக இருப்பதை உணர்ந்து புன்னகைத்துக் கொண்டான். முத்து விலகிடும் முல்லைப் பூ புன்னகை அது.  அவளைப் போல..... வலது பக்க நேர் எடுத்துக் கொண்டு...தலை வாரி...இடது பக்க மூக்கு குத்தி....... அதே கல்யாண வீட்டுக்கு சென்று... சாப்பிட அமர்ந்தான்....அமர்....காதம்பரி.....

"என்ன காதம்பரி...... ஆளே மாறிட்ட... கொஞ்சம் உடம்பு வந்த மாதிரி இருக்கு...மூக்குத்தி வேற புதுசா இருக்கு..." என்றபடியே சித்ராக்கா சோறு போட்டு நகர....அப்பளம் எடுத்து பட்டும் பாடாத பற்களால் கடித்தாள் காதம்பரி.  அருகினில் உடைந்து நொறுங்கிய இளங்கோ அவளையே பார்த்துக் கொண்டிருக்க..... அவன் கையில் உப்பு வைத்துக் கொண்டிருக்கும் அமரை.... வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தொடங்கினாள் காதம்பரி.

"யாரிவன்... இத்தனை நாளாய் எங்கிருந்தான்!!!!!"- என்பது அவளின் வியப்புக் கனிகளின் மேல் விழுந்த வேல் விழிகளின் குறியீடு.

"நான் காதம்பரிக்காக எதுனாலும் செய்வேன்"னு உப்பை அமரிடம் இருந்து வாங்கி வாங்கி தின்று வாந்தி எடுத்து....வயிற்றைப் பிடித்து இளங்கோ சுருள..........

"லூசு... எவனாவது  இவ்ளோ உப்பத் திம்பானா.. எப்பப் பாரு...... கிறுக்குத்தனமா ஏதாவது பண்ணிகிட்டே இருக்கறதுதான் இளங்கோவுக்கு வேலை.... ச்சே..மானம் போகுது..."-என்று முணங்கிக் கொண்டே அமரைப் பார்த்தாள் காதம்பரி. அது ஆகாயம் பூமி வந்த தருணம்.. அமர்க்கு. அவளுக்கும் அப்படித்தான் என்பது சாளரம் தாண்டிய தென்றலின் சுவாசம்.

"இங்கதான்....பக்கத்தூரு...... சொந்தம்தான்"என்று அமர் கூறிய சொல் கொல்லிமலைத் தேனாய்.... கொள்ளி வைத்துக் கொண்டிருந்தது. "தேவதைகளின் வம்சம் நான் என்றால் வரங்களின் இம்சை இவனோ...." என்று காதம்பரியின் பதின்பருவத்து பரு ஒன்றாய் பூத்து விட்டு நாக்கு கடித்துக் கொண்ட கவிதையை தண்ணீர் விட்டு வளர்ந்தாள்.

கண்கள் நான்கும் சந்தித்த வேளையில்.. சிந்திக்காமல்..குளறுபடி நிவர்த்தி செய்யப்பட்டதாக நம்பினான் அமர். அவளாக தானே ஆவதில் இருக்கும் உணர்தலை... தவிப்புக்களின் அடங்குதலை..... கண்டுணர்ந்து வியர்த்து..... வியந்து...... இடைவெளியின் சுவரை உடைத்தெறிந்து விட்ட சொர்க்கத்தை தான் மட்டுமே படைக்க முடியும் என்று முழுமையாக நம்பியபடியே சாமி ஊர்வலம் செல்லும் சாலையை ஒட்டி இருக்கும் சுவற்றுப் பக்கம் சென்றான்...காதம்பரியாக.

இளங்கோ அவளின் இடுப்பை பற்ற முற்படும் வேளையில்... பட்டென திரும்பிய காதம்பரி....."இதெல்லாம் எனக்கு பிடிக்காது...சின்ன புள்ளைல தொட்டு விளாடியது எல்லாம் ஓகே...... இப்போ சரி இல்ல இளங்கோ..... எங்கப்பாகிட்ட சொல்லி வெச்சிருவேன்....."என்று முணங்கிக் கொண்டே கொண்டே சப்தமின்றி கத்த....அருகினில் ஆண்மையின் சுவடாய்....அழகின் திறவாய் அமர்.. நிற்க... அவனைப் பார்த்தபடியே...."பார்....ஆம்பளன்னா இப்டி இருக்கனும்.. என்ன ஒரு மேன்மை... பொண்ணுங்கள தொட அலையக் கூடாது. எப்போ தொடுவான்னு பொண்ணுங்கள வழிஞ்சு நிக்க வைக்கனும்....." என்று நாக்கைக் கடித்துக் கொண்டு வசனம் பேசி விலகி சென்றாள் காதம்பரி... சாமி ஊர்வலம் நடக்க நடக்க.. கைகள் கோர்த்த கனவாய்.. காதம்பரியும் அமருமாய்...சேர்ந்து விட்ட புகைப் படம்...காலத்தின் ஓவியமென படரத் துவங்கியது......

"அம்மா.. என் பட்டுப் பாவாடைய காணோம்மா...... இங்கதான் கொடில காய போட்ருந்தேன்..."-என்று பக்கத்துக்கு வீட்டு பெண் பார்கவி கத்திக் கொண்டு போனதில் படக்கென்று சுயம் திரும்பி விழித்தான் அமர்.  தானே காதம்பரியாகவும் ஆகிவிட்ட நிலையில் ஒரு தத்துவத்தை உருவாக்கி விட்டதாக நம்பினான்.. அது அவனுக்கு போதுமானதாகவும் இருந்தது.

வீட்டுக்குள்.. காதம்பரியின் காலடி சுவடுகளை ஒரு பெயர் தெரியா பெண் கடவுளின் பாதங்களென பதித்தான்.  அவள் நிரம்பி நிற்கும் வீட்டில் அவளின் புன்னகையைக் கோர்த்தான். அவனின் அறை முழுக்க அவள் அணிந்து பார்த்த அத்தனை பெண்ணாடைகள் உள்ளாடைகளோடு ஓவியங்களை கொட்டிக் கொண்டும்......தாபங்களை சொட்டிக் கொண்டும் இருந்தன.  வீடு முழுக்க காதம்பரியின் பெண் வாசனை நிரம்பி இருக்க......அவன் வாசனைத் திரவியத்தை தன் மீது பூத்துக் கொண்டே இருந்தான். அவளிடம் இருந்து எடுத்த கொண்டை ஊசிகள்....தன் ஊசிக் கண்களைக் கொண்டு... குத்துவதாக தன் நிர்வாணக் கூச்சங்களை....உணர்ந்தான். காதம்பரியின் புன்னகையை அப்படியே சிந்தினான்.... சிந்துவதெல்லாம் விளைகிறது போல... மீண்டும் சிரித்துக் கொண்டான்.  சிரிக்கையில்...... இடது கன்னம் மட்டும் சற்று உள் வாங்கும் தருணத்தில்..... களுக்கென சொட்டி விடும் உயிர்க் கரைதலை அன்றும் உணர்ந்தான்.  அற்புதக் கவிதைகளை ஆய்ந்து எடுத்து ஆண்டவன் எழுதுவதைப் போல.. காதம்பரி சுவரெல்லாம் கிறுக்கி குழந்தையின் பிதற்றலைத் தீட்டினாள். தீட்ட தீட்ட சுவராகும் உள் வெளியில் தீரவேயில்லை... கவிதைகள். அவர்களும்.

வாசல் உட்புறத்தில் நிறைந்து கிடந்த அத்தனை ஜோடி செருப்புகளும் காதம்பரிக்கு பிடித்த வடிவமைப்புகள். ஒவ்வொரு முறையும் அதைப் போட்டுக் கொண்டு அவன் நடக்கும் சப்தங்களில் பூனைகள்.. ஆடை பயிலும்....திருட்டுத்தனமும் அரங்கேறும்.

காதம்பரி இரண்டு கால்களுக்கும் இடையே தலையணையை வைத்துக்கொண்டுதான் தூங்குவாள்.. சிறு வயது பழக்கம் என்று அடிக்கடி கூறுவாள்.. அன்றும் அப்படித்தான் தூங்கினான் அமர்.

கால்களுக்கிடையில்.. இருக்கும் கனவின் நுகர்தலை.. முழுமையாக்க ஒரு தலையணையால் முடிந்து விடுகிற நெருக்கத்தை இந்த வயது இழந்து  விடுகிறது என்பது அவளின் வருத்தம். அன்றைய நாட்களுக்கு அது போதுமானதாக இருந்தது.. இன்றைய கால்களுக்கு எதுவும் போதுமானதாக இல்லை.. என்பது அவளின் திறந்த கொவ்வை செவ்வாயின் பேசா இறுக்கம்.  அனைத்தும் அறிவதில் அமரின் நிறைவு... யட்சியின் சுவாசத்தை ஒத்தது.  ஓர் இருட்டு தேசத்து ராஜாவின் கம்பீர நடையை பெண்மைக்கு உரிய நெளிவு சுசுளிவுகளில் அடைத்து அந்த அறையை பெண்ணுடல் பூத்த ஆணின் சொர்க்கமாய் படரவிடும் ஓவியத்தின் நுட்ப வேலைப்பாடுகளை காண காண உள்ளம் நிறைகிறது. ஓவியங்கள் வரையப்படாமலும் காணலாம் என்பது அமரின் நுண்ணிய சொல்.

காதம்பரியின் சிறகுகள் முழுக்க ஒரு முறை சிரிப்பாலும் மறுமுறை அழுகையாலும்... ஆக்கப் பட்டிருக்கின்றன. காரண காரியம் ஒரு போதும் இல்லை.. அவளின் தூரத்தில்.. மதிசோலை... மட்டுமே இருக்கிறது.  அங்கே....அவளின் நுட்பக் கனவுகளை இன்னும் டயர் வண்டியாய் ஓட்டி விளையாடிக் கொண்டிருப்பது அமர்.  அங்கே அவள் காணும் குளக்கரைகள்...யாருமறியா வண்ணங்களை கசிய.... மெல்ல அதை அதைக் கொத்தித் தின்னும் கொக்கின் தாபத்தில் அமரே நிற்கிறான்...எல்லாவற்றையும் மாற்றி விட்ட..... காதம்பரியின் நிழல்.....இல்லவே இல்லை.. அது...நிஜம்.

தூங்கி வழியும் முகத்தில்.. காதம்பரி... மாநிறத்து மாலையாய்... மினுங்கி சரிந்தாள். தூக்கம் வந்த பிறகு... தூக்கம் என்ன.. தர்க்கம் என்ன.. ஒண்ணுமில்லை போ... என்பதை அவள் சொல்லி அவளே கேட்கும் தருணத்தை அமர் இன்று கொண்டான்....தூங்கி தவித்த பொழுதில்...பாதி தூக்கத்தில் சிலுவை மலைக் கனவு வழக்கம் போல அவனை எழுப்பி விட்டது. எதிர் பார்த்தவன் போல எழுந்தமர்ந்தவன் முட்டி வரை ஏறி இருந்த பாவாடையை...கீழ் நோக்கி உடல் வளைந்து இழுத்து விட்டுக் கொண்டே இளங்கோவை எட்டி உதைக்கும் பாவனையோடு....மெல்ல எழுந்தாள். இடது பக்கம் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த அமரை "போடா...."என்று செல்லமாக சொல்லிக் கொண்டே......போதையின் மிகப்பெரிய தூவலை உள்ளடக்கியபடியே கதவைத் திறந்து வீட்டுக்கு பின்னால் இருக்கும் சிலுவை மலையை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

பச்சக் குதிரை ஆடியபடி... டயர் வண்டி  ஓட்டியபடி... கிணற்றில் எட்டிக் குதித்து நீச்சல் அடித்தபடி...பஞ்சு மிட்டாய்க்காரன் பின்னாலேயே கத்திக் கொண்டு ஓடியபடி... சாமியின் காதில்.. ரகசியம் சொல்லி... வாய் மூடி சிரித்தபடி...சிலுவை மலையின் திசைகள் எல்லாம் மதிசோலை கிராமத்தின் சுவடுகளை பசுமையாக்கி...புல்வெளியாக்கி திரிய விட்டிருந்தது.

அங்கே காதம்பரி இரண்டு கைகளையும் விரித்து அவனை வரவேற்க காத்துக் கொண்டிருந்தாள்......வேக வேகமாய் மூச்சிரைக்க பாவாடையை தரை உரசாமல் தூக்கிப் பிடித்துக் கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தான் அமர்........

சிலுவை மலையில்.... சுமக்க இன்னும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது கதைகளும்.. காதல்களும்...அடிக்கடி வரும் கனவுகளும்....

- கவிஜி

Pin It