செந்தில் மென்மையானவன்.  ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பாட்டிக்குப் பத்து ரூபாய் கொடுத்து நான் பார்த்திருக்கிறேன்.  ஓட்டலில் சாப்பிட்டும் போது, பரிமாறும் சர்வரிடம் 'நீங்கள் சாப்பிட்டிங்களா?' என்று கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.  பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, 'ஒரு நாய்க்குட்டி இருந்தால் நல்லா இருக்குமே' என்று நான் சொன்னதற்காக, பத்து கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து மறுநாளே நாய்க்குட்டியோடு வந்து நின்றவன்.  'நாயைக் கட்டிப் போட்டு கொடுமைப்படுத்தாதீங்க.  சின்னதில் இருந்தே பழக்கினா, நாம சொல்றத நாய் கேட்கும்' என்று அந்த நாய்க்குட்டியின் சுதந்திரத்திற்காகப் பேசியவன்.  வீட்டில் புறா, பூனை, மீன் என்று எல்லாவகை விலங்குகளையும் வளர்ப்பான்.  தென்னை மரம் ஒன்று காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டிய இடத்தில் வளர்ந்த போது, மரத்தை வெட்டாதீர்கள்; அந்த இடத்தை விட்டு விட்டு சுவர் கட்டுங்கள் என்று தன் அப்பாவிடம் அழுததை நான் பார்த்திருக்கிறேன்.  

friends 340இப்படிப்பட்ட இளகிய மனம் கொண்டவனா கோபப்படுகிறான்?  இவனுக்கெல்லாம் கோபம் வருமா என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.  அந்த நினைப்பை இன்று நிஜமாக்கினான் செந்தில்.  செந்தில் எனக்கு முன்பே ஊரில் இருந்து சென்னைக்கு வந்து விட்டான்.  ஏறத்தாழ, 7,8 ஆண்டுகளாகச் சென்னையில் தான் இருக்கிறான்.  முதலில், சைதாப்பேட்டையில் அண்ணன் நண்பர்களுடன் இருந்து வேலை தேடினான்.  அங்கேயே சின்னமலையில் உள்ள ஒரு கம்பெனியில் ஐந்தாயிரம் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.  படிப்பில் செந்தில் சுமார் தான் என்றாலும் வேலையில் அப்படியிருக்கவில்லை.  ஏற்கெனவே, டெக்னிக்கலாகக் கொஞ்சம் திறமையானவனாக இருந்தவனுக்கு வேலையும் அது போலவே வந்தது ரொம்ப வசதியாகிவிட்டது.  முதல் கம்பெனியிலேயே மூன்றாண்டுகளில் இருபதாயிரம் வரைக்கும் சம்பாதித்தான்.  

பிறகு, ஏதோ பெரிய நிறுவனத்தில் வேலை என்று அம்பத்தூர் பக்கம் போய் விட்டான்.  நானும் வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் இருந்துவிட்டு கடந்த மாதம் தான் சென்னைக்கு மீண்டும் வந்தேன்.  இடைப்பட்ட நாட்களில் எனக்கு, செந்திலுக்கு, இஸ்மாயிலுக்கு என நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் ஆயிருந்தது.  நான் வேளச்சேரிப் பக்கம் குடித்தனம் இருந்தேன்.  நான் எப்படிப் பல வகைகளில் மாறியிருந்தேனோ, அப்படியே செந்திலும் மாறியிருந்தான்.  முன்பெல்லாம் 'நான் ப்யூர் நான் வெஜிடேரியன்' என்று சொல்லிக் கொண்டிருந்தவன், முழுக்க சைவத்திற்கு மாறியிருந்தான்.  

''டேய், நீ சாப்பிடுற கீரையை ஆடு சாப்பிடணும், அந்த ஆட்டைத் தான்டா நாம சாப்பிடணும்' என்று என்னிடம் பேசியவனா, இப்படி மாறிவிட்டான் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  எப்படி மாறினாய் என்று கேட்டேன்.  

'ஒரு நாள் முட்டையை ஆம்லேட் போட எடுத்தேன்.  உள்ளே இருந்து கோழிக்குஞ்சு அழுவது போல இருந்தது. அப்படியே விட்டுட்டேன்' என்றான்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  நான் அசைவம் இல்லை என்றாலும், அசைவம் சாப்பிடுவதை அவ்வளவு எளிதாக விட்டு விட முடியாது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  அதனால் இவன் திடீரென எப்படி மாறினான் என்று ஆச்சரியமாக இருந்தது. கல்யாணத்திற்குப் பத்திரிக்கை கொடுக்க ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தான்.

'கல்யாணத்துக்கு அப்புறம் மறுபடி நீ, பறக்குறது, ஓடுறது, நீந்துறது எல்லாம் சாப்பிட்டுத் தானே ஆகணும்' என்று கேட்டேன்.  

'ஆண்டவன் இருக்கான்டா, அவளும் சைவம் தானாம் - நான் வெஜ் டேஸ்டே பிடிக்காதாம், முட்டை கூடத் தொடமாட்டாளாம்' என்றவாறே கொஞ்சமாகச் சிரித்தான்.  

அம்பத்தூரில் இருந்த செந்திலின் மனைவிக்கோ வேலை சோழிங்கநல்லூரில்.  அம்பத்தூரில் இருந்து சோழிங்கநல்லூருக்குத் தினமும் வந்து போனால், 'முப்பது நாட்களில் முதுகு வலி வர வைப்பது எப்படி?' என்று புத்தகம் போட்டு விடலாம்.  அவ்வளவு அலைச்சல்!  9 மணி ஆபிசுக்குக் காலையில் 7.30க்குக் கிளம்புவாளாம் அவன் மனைவி.  திரும்ப மாலையில் வீட்டுக்கு வர 9 மணி ஆகிவிடும்.  இப்படியே, கணவனும் மனைவியும் இரண்டு மாதங்களை ஓட்டியிருக்கிறார்கள்.  வாரத்தில் வேலைக்குப் போகும் ஐந்து நாட்களும் இருவரும் பேசிக்கொள்ளவே முடியவில்லை.  அந்த அளவுக்கு நேரம் எல்லாம் போக்குவரத்திலேயே போய் விடுகிறதாம்.  

ஒரு சனிக்கிழமை அதிகாலையில் வீட்டுக்கு வந்தான்.  'என்னடா இவ்ளோ சீக்கிரம் இந்தப்பக்கம்?' என்றேன்.  சைக்கிள் வேணும், இன்னைக்கும் நாளைக்கும் வீடு தேடப் போறேன்.  வண்டில போய் தேடுறது கஷ்டம்.  சைக்கிள்னா மெதுவாத் தேட வசதியா இருக்கும்.  அதான், வெயிலுக்கு முன்னாடித் தேடலாம்னு சீக்கிரம் வந்தேன் என்றான்.  சரி, எடுத்துக்கோ என்றேன்.  ‘வேளச்சேரியிலேயே பார்க்கலாமே’ என்று கேட்டுப் பார்த்தேன்.  'முதலில், நங்கநல்லூர் பக்கம் தேடப் போகிறேன்.  அங்கே இருந்து அவளுக்கும் கம்பெனி பஸ் வருது, எனக்கும் டிரெயின் வசதியாயிருக்கும்' என்றான். செந்தில் ஒரு முடிவு எடுத்தால் தீர யோசித்துத் தான் எடுப்பான்.  எனக்கும் அவன் சொன்னது சரி என்று பட்டது.  

போனவன், பன்னிரண்டு மணி இருக்கும்.  வீட்டுக்குத் திரும்பி வந்தான்.  முகமெல்லாம் வாடி இருந்தது.  வெயிலில் சைக்கிள் மிதித்ததால் சோர்வு இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.  மோர் கொண்டு வந்து கொடுத்தாள் என் மனைவி.  

'என்ன வீடு எதுவும் அமைஞ்சுதா?' என்று கேட்டேன்.  

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான்.  'ஏன்டா, ஊர்ல தான் அப்படின்னா இங்கேயும் அப்படித்தானா?' என்று கேட்டான்.  

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  என்னது? எனக் கேட்டேன்.  

'நங்கநல்லூர், மடிப்பாக்கம் முழுக்க சுத்திட்டேன், ஒருத்தனும் வீடு தர மாட்டேங்கிறான்' என்றான்.  

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று எனக்குத் திரும்பவும் புரியவில்லை.  'ஏன்? என்னாச்சு?' என்றேன்.  

'பின்ன என்னடா?  எங்க போனாலும் 'வீடு வாடகைக்கு' போர்டு போட்டுட்டு '_____ ஒன்லி' அப்படின்னு வெளிப்படையா இப்படிச் சாதி போட்டிருக்கானுங்க, இவனுங்களுக்கெல்லாம் ஒடம்பு தான்டா வெள்ளை, மனசு முழுக்க இருட்டுத் தான். இந்தக் காலத்திலயும் இப்படி இருக்கானுங்க.. ரெண்டு வீட்டுல வாசல் கேட்ல நிக்க வச்சே அனுப்பிட்டானுங்க.. நானும் சைவம் தான் சார்னு சொல்லியும் பார்த்துட்டேன்.  சும்மா பூட்டி வச்சாலும் வைப்பாங்களாம், நமக்குக் கொடுக்க மாட்டாங்களாம்.. இதில, பாதிப் பேர் வீட்ல, முன்னாடி பெரிய கிருஷ்ணர் போட்டோ வேற, இந்த போட்டோல இருக்கிற கிருஷ்ணர், உங்க சாதியா? னு கேட்கலாம் னு நினைச்சேன்.  சரி, வெறி பிடிச்சவனுங்க கிட்ட என்னத்த பேசறது னு திரும்பி வந்துட்டேன்.  நாமளும் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து, அந்தச் சாதிக்காரப் பயல்களுக்கு வீடு கட்டித் தர மாட்டோம், பால் தயிர் விற்க மாட்டோம், அங்கவஸ்திரம் விற்க மாட்டோம்னு போர்டு மாட்டுனா தாங்க மாட்டானுங்க..சீ என்ன ஜென்மங்கடா இவங்க எல்லாம்!' என்று கோபத்தில் கொப்பளித்து விட்டு, “நேரமாயிருச்சு, அவளைக் கூப்பிடப் போகனும்” என்றவாறு கிளம்பிவிட்டான் செந்தில்.  

செந்தில் ஏன் அப்படிச் சொன்னான்? என்று நான் மெல்ல யோசிக்கத் தொடங்கியிருந்தேன். 

(தமிழர் சமயம் 2016 ஆகஸ்ட் இதழில் வெளியானது)

- முத்துக்குட்டி

Pin It