எனக்கும் என் உமையாழுக்கும் இடையில், இப்போதைக்கு ஒரு 8880km தூர இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியை தொலைத்தொடர்பு சாதனங்கள்தான் நிரப்பி எங்களை இணைத்து வைத்துள்ளது. நாங்கள் பேசிக்கொள்கிற மொழியே வித்தியாசமாக இருக்கும். அன்பை பரிமாறலும் அப்படியே. உருகி உருகி காதலித்தவர்கள் நாங்கள். இந்த பத்துவருட காதலில் நாங்கள் அருகருகில் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்போதெல்லாம் கடைக்கண்ணின் சின்ன அசைவில் கதைபேசிக் கொண்டோம். இப்போது சின்ன சின்ன மூச்சுக் காற்று அதை செய்கிறது. இங்கே இருந்து கொண்டு நான் நினைத்தால் போதும், உமையாழிடமிருந்து எனக்கு அழைப்போ அல்லது பகிரியில் ஒரு மெசேஜோ வரும். உமையாழிற்கு என்மேல் அந்த அளவிற்கு காதல். எனக்கும்தான். ஆனால் உமையாழ் அளவிற்கு என்னால் காதல் செய்ய முடியுமா என்றால், அது எனக்குத் தெரியாது. நான் இங்கு சொல்ல வந்த விடயத்தை என்னால் சரியாக விளங்கப்படுத்த முடியாது போகலாம். ஆனால் எங்களுக்குள் நடக்கிற சில விடயங்களை சொன்னால் ஒருவேளை உங்களாலும் இதைப் புரிந்து கொள்ளமுடியுமாய் இருக்கலாம். பார்க்கலாம். 

man dream

நேற்று இரவு வழமைபோல கதைத்துக் கொண்டிருந்தோம். 

'ஏதாவது பாடேன்' என்றார். 

'என்ன பாட'

'ஜானே மன் துஜிகோ.. பாடு'

'இல்லபா, இந்தி பாட்டு வேணாம். ஏதாவது ஒரு தமிழ் பாட்டு சொல்லுங்கள், பாடுகிறேன்'. நான் இந்தி பாட்டு வேணாம் என்று சொன்னதற்கு காரணம் இருக்கிறது. உமையாழ் ஒரு perfectionist. சின்னதாய் ஒரு உச்சரிப்பு பிழைத்தாலும் அங்கேயே நிறுத்தி, திருத்திக் கொள்ளச் சொல்வார். பாடுவதில் இருக்கிற அந்த மூடே இல்லாமல் போய்விடும். பலமுறை இவ்வாறு ஆகி இருக்கிறது.

'ம்ம்.. சரி, நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா பாடு. எனக்கு அந்த ஆரம்பத்தில் வார ஹம்மிங் உம் வேணும். அத மிஸ் பன்னாம பாடு'

என்ன ஒரு பாட்டில்ல அது, சுசீலாவிற்கு தேசிய விருது கிடைக்கக் காரணமாய் இருந்த பாடல். பாட்டை பாடிப் முடித்தேன். மறுமுனையில் நீண்ட அமைதி. பின்னர் ஒரு பெருமூச்சுடன் பாட்டின் வரிகளைப் பற்றிய சில கேள்விகள். விளக்கி சொன்னேன். மீண்டும் ஒரு பெருமூச்சு. 

'இப்போதைக்கு என்னுடைய நிலையும் அதுதான் இல்ல?' 

இதை பிரன்சு மொழியில் சொன்னார். எனக்கு ஓரளவுக்குப் புரிந்தது. 'ம்ம் ...' என்பதுடன் மட்டும் நிறுத்திக் கொண்டேன். 

உமையாழிற்கு ஒரு அலாதியான திறமை இருக்கிறது. கற்பனை செய்து கொள்றது. ஒரு விடயத்தை சொன்னால் சடுதியில் அதைப் பற்றிய ஒரு பெரிய விம்பம் மனத்திரையில் விரிவதாக சொல்வார். அதை ஒரு கோர்வையாய் அவர் விபரிக்கும் விதம் நம்மளையும் அந்த கற்பனையில் ஒரு பாத்திரமாக்கிவிடும். படைப்பாளிகளுக்கே உள்ள ஒரு தனி தன்மை இல்லையா அது? உமையாழிடம் அதை நிறைய முறை அவதானித்து இருக்கிறேன். அதனாலேதான்:

'நீங்கள் ஏதாவது எழுதலாமே. இந்த imagination power ஒரு giftப்பா' என ஒரு முறை சொன்ன போதும், 

'இந்த PhD க்காய் எழுதிறது போதும். இனியும் என்ன இருக்கு எழுத' என்று நகுலனின் கேள்வி போல நிறுத்திக் கொண்டார். 

நேற்று இரவு உமையாழிடம் கதைக்க முதல், ஜி.குப்புசாமியுடன் பேசிக்கொண்டுருந்தேன். நிறைய விடயங்கள் பற்றி கதைத்திருந்தோம். குப்புசாமி சார், என்னைப் போலவே பப்லோ நெரூதாவின் பக்தன் என்று சொல்லலாம். நாளைக்கு காதலர் தினம் என்பதால், நெரூதாவின் 'Tonight I can write the saddest line' கவிதையை அவருடைய பேஸ்புக்கில் பதிவேற்றியதாக சொன்னார். நானும் பார்த்தேன். அந்த கவிதையை முன்னர் ஒரு முறை நான் வாசித்த போது எனக்கு அழுகை வந்து. நான் அதை அவரிடம் சொல்லவில்லை. அந்த கவிதையில் இப்படி ஒரு இடம் வரும்..

'I no longer love her, that's certain, but may be I love her Love is so short, forgetting is so long 
Because, through night like this one I held her in my arms My should is not satisfied that it has lost her'

இப்போதும் இதை எழுதுகிற போது எனக்கு அழுகை வருகிறது. ஏன் என்கிற காரணத்தை உங்களுக்கு என்னால் சொல்ல முடியாது. ஒரு கதை சொல்லிக்கும் தனிப்பட்ட விசயங்கள் இருக்கும், புரிந்து கொள்ளுங்கள். நான் மேலே மேற்கோள் காட்டி இருக்கிற அந்த வரிகளை முதல்முறையாக வாசிக்கிற போது, இதை தமிழில் கவிதைவடிவில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்திருத்தேன். அதை குப்புசாமி சாரிடம் சொன்ன போது, அவர் இந்த கவிதையை 2004யிலேயே மொழிபெயர்த்ததாக சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேடிப்பார்க்க வேண்டும். கிடைக்காவிட்டால் அவரிடமே கேட்டுவிட வேண்டும். பார்க்கலாம். 

இந்த சம்பாசனை பற்றி நான் உமையாழிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். உமையாழிற்கு தமிழ் தெரியாது. ஆனாலும் குப்புசாமி சார் பற்றி தெரிந்திருந்தது. 'யாரு, my name is read யை உன் மொழியில் மொழிபெயர்த்தவரா' எனக் கேட்டார். 

'ஆமா, அது எப்படி உங்களுக்குத் தெரியும்?'

'அதுதான் நீ சொல்லி இருக்கயே'

இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. பாமுக்கின் My name is read யை ஆங்கிலத்திலும் என் பெயர் சிவப்பை தமிழிலும் வாசித்துவிட்டு, கதையை தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்களோ என எண்ணத் தோன்றிற்று. அதை நான் உமையாழிடம் சொன்னபோது, எனக்கு தமிழ் தெரியாதே என வருத்தப்பட்டார்.

Erdag Goknarயை துருக்கியில் சந்திந்த போதும் அவரிடம் சொன்னேன். 'உங்களது மொழிபெயர்ப்பைவிட எங்கள் தமிழில் நன்றாக இருக்கிறது.' ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு வேளை எனக்கு துருக்கிய மொழி தெரிந்து இருந்தாலும், தமிழ்தான் சிறப்பாக இருக்கிறது என எண்ணி இருப்பேனோ என்னவோ? தமிழில் அது அவ்வளவு நேர்த்தியாய் இருக்கும். 

ஜி. குப்புசாமி சார் அளவுக்கு இந்த காதலர் தினத்தை பேஸ்புக்கில் கொண்டாடிய தமிழ் இலக்கிய ஆளுமை வேறு யாராவது இருப்பார்களா என எனக்குத் தெரியவில்லை. சார் நேற்றில் இருந்து ஒரே கூத்தும் கொண்டாட்டும். அவருடைய பேஸ்புக் ஸ்டேடஸ்சை பார்த்தால் உங்களுக்கும் நான் சொல்லவருவது புரியும். ஒரு பதிவில் இப்படி எழுதுகிறார்; "நெரூதாவை விட அழகான காதல் கவிதைகள் யாரிடம் கிடைக்கும்? நாளைய தினத்திற்காக" என்று சொல்லிவிட்டு, அந்த சிலி நாட்டு குண்டன், the ritual womanizer நெரூதாவின் ' I do not love you except because I love you' கவிதையை பதிவேற்றி இருக்கிறார். இதற்கு எப்படி நான் பதில் சொல்வது? எனக்கு Jacques Prévert ழாக் பிரெவரின் காதல் கவிதைகளின் மீதும் பெரும் ஈர்ப்பு இருப்பதால், ழாக்கின், This love என்கிற கவிதையை பதிந்துவிட்டு, ஐரோப்பிய, லத்தின்அமெரிக்க fusion Valentines ஆக்கிவிட்டால் என்ன என கேட்டேன். அவருக்கும் அது பிடித்திருந்தது. இந்த பியூசன் ஐடியா பற்றி உமையாழிடம் சொன்ன போது, 'Waw, நல்லா இருக்கும்டா' என்றார். உமையாழ், ழாக்கை பிரான்சிலும், நெரூதாவை ஷ்பானிஸிலும் வாசிப்பவர். அறிக. 

'ழாக்கினுடைய கவிதைகளில் ஒரு கனவுத்தன்மை இருக்கும், அவதானித்திருக்கிறாயா?' என்றவர், பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து, 'ஷ்ஷ்பா... உனக்குத்தான் கனவே வராதில்லை! உனக்கு கனவுகள் பற்றி என்ன தெரிய போகிறது?. நான் மறந்தே போனேன்' 

உண்மைதான். எனக்கு கனவுகள் வராது. அது பற்றித்தான் நான் இந்த சிறுகதையை எழுத வந்ததே. கதை எங்கெல்லாமோ போய்விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். 

இதற்கிடையில் இந்த கதையை வாசித்துக் கொண்டிருக்கிற என் நண்பி போகேஸ்வரி, 'டேய் இது கதையா இல்ல கட்டுரையா? சும்மா கதவிடாம சொல்லு பாப்பம்' என என்னையே கேட்கிறாள். நான் என்ன சொல்லட்டும்?

உமையாழிற்க்கு ஒரு வகையான கற்பனை செய்யும் சக்தி இருக்கிறது என்று சொன்னேன் இல்லையா? அதன் நீட்சியாய், கனவுகாண்பது என்றும் ஒரு வகையான சக்தி இருக்கிறது. அதாவது, எனக்கு இங்கே ஏதாவது பிரச்சினை என்றால் 8880kmக்கு அப்பால் இருக்கிற உமையாழிற்கு அன்று இரவைக்கு ஒரு கனவு வரும். அது நேரடியாக காட்டப்படுகிற கனவில்லை. அது குறியீடுகளுடனான கனவு. உதாரணமாக, அன்றும் அப்படித்தான், ஒரு பெண் என்னை பேஸ்புக்கில் 'உங்களை எனக்குப் பிடிக்கும் சார்' என்று சொன்ன அடுத்த நாள் காலை, உமையாழ் தன்னைச் சுற்றி நெருப்பு இருப்பது போல கனவு வந்ததாக சொன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆனாலும் நான் காட்டிக்கொள்ளவில்லை. உமையாழை வைத்துக்கொண்டு எந்த தப்புத்தண்டாவும் செய்ய இயலாது. இப்படியாய், எனக்கு உடம்பு சரியில்லை என்றால் ஒரு கனவு, ஓபிஸில் வேலை அதிகம் என்றால் ஒரு கனவு என, கனவுகளின் நாயகியாய்த்தான் என்னுடைய உமையாழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய எல்லா கனவுகளும் நான் சார்ந்ததாக மட்டும்தான் இருக்கும். அவருடைய கனவுகளுக்கான அர்த்தம் எனக்கு மட்டும்தான் தெரியும். உமையாழிற்கு கூட ஏன் இந்த கனவுகள் எல்லாம் தனக்கு வருகிறது என்கிற தெளிவு இல்லை. 

அவருடைய கனவில் நிறங்களைக் கண்டதாகவும், இலையுதிர்ந்த மரங்களைக் கண்டதாகவும் சொல்லுவார். பச்சையாய் இருக்கிற வயல்களுக்கு ஒரு பெண் நீர்பாய்ச்சக் கண்டதாகவும், பிங் நிறத்தில் உதடுகளைக் கொண்ட ஒரு குழந்தையை அவர் காசுகொடுத்து வாங்கிதாகவும் கூட சொன்னார். உமையாழுடைய கனவுகளை சுமந்த என் புத்தகத்தை வித்தை தெரிந்த ஒருவளிடம் கொடுத்துத்தான் மொழிபெயர்க்கச் சொல்ல வேண்டும். கனவுகளை மொழிபெயர்ப்பாளர்கள் நிச்சயமாய் ஊமையாய்த்தான் இருப்பார்கள். 

நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் இறுதியாய் கனவுகண்டது எப்போ என்பதைக் கூட எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கு கனவுகளே வராது என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை ரொம்ப கவலையுடன் உமையாழிடம் சொன்ன போது;

'People who work with brain do not get much dream. but people who work with heart does. be a man with heart' என்று சொல்லி சிரித்தார். 

Pin It