எனக்கு ஒன்றும் புரியவில்லை....... இந்த ஊர்.... என்னைப் பயப்படுத்துகிறது.......எல்லாரும் என்னை மிதிப்பது போல தோன்றுகிறது...... என்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை....எனக்கு ஒன்றும் புரியவில்லை...நான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்...நான் ஓய்ந்து போனது போல ஒரு வித மயக்கம் என்னை சூழ்கிறது....இதே திண்ணையில்... இதே கிணற்று மேட்டில்... இதே பெரிய வீதியில்.. இதே கோவில் வாசலில்... இன்னும் என் நினைவுகள் கிடந்து அல்லாடுகின்றன.... அவனைக் காணவில்லை...அவனை யாரும் தேடுவதாகத் தெரியவில்லை...சாமிகளும்.. சாத்தான்களும்.. சண்டையிட்டுக் கொள்ளும் இந்த ஊரில்.. நான் எந்த பக்கம் போவது என்று தெரியாமல்.. புலம்புகிறேன்.. என் குரல் ஒருவருக்கும் கேட்கவில்லை..அவர்களின் காதுக்குள்... அலைபேசி..... அடைந்துக் கிடக்கிறது.... அவர்களின் விழிகளுக்குள்... அவர்களாக ஒரு வகை மாயங்களை சிருஷ்டித்து கொள்கிறார்கள்...எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லிக் கொண்டேயிருக்கிறது அவர்களின் வாய்.. மனதுக்குள் ஆயிரம் ஊஞ்சல்களை கட்டி ஆட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.....

man 330நான் வேக வேகமாய் ஓடி சென்று அவனை வீட்டில் தேடுகிறேன்.... அவன் அங்கே இருப்பதற்கான அறிகுறியே இல்லை... யாரிடமும் கேட்க பிடிக்க வில்லை... கேட்டாலும்... பதில் வராத கேள்விக்குள் ஒவ்வொருவருமே... கேள்விக் குறிகளாக வளைந்து நெளிந்து.. இனம் புரியா தூரத்துக்குள் ஒரு வித முடை செய்த பிணியாகவே இருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன்,...

இங்கே அரசியலும் புரியாத அரிசியலும் புரியாத மனிதர்களைக் கொண்டு கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையே... ஒரு வித மனநலம் பிறழ்ந்த புள்ளிக்குள்தான் இந்த ஊர்... இருக்கிறது.... ஓட்டுக்கு இம்முறை 250 ரூபாய் வாங்க வேண்டுமென்பது எதிர்கால திட்டம்...கோவில் திண்ணையில் தாயம் விளையாடிக் கொண்டிருக்கும்.. மனிதர்கள்... எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்கள்.. வருவதும் போவதும் ஒன்றுதான்.. அவர்களின் நிலை..ஜென் நிலைக்குள்.. நிற்பது மட்டுமல்ல.. தூங்கவும் அவர்களால் முடியும்.. எல்லா நேரமும்... ஒன்றுதான் என்று புதுக்காலக் கணக்கை செய்வதில்... ஒவ்வொருவருமே.. ஐன்ஸ்டீனை மிஞ்சுவார்கள்.....அவர்களிடம் சென்று என்னவென்று கேட்பது....... இந்த மாதிரி என்று அவர்களிடம் பேச்சைத் துவங்கும் முன்பே அவர்கள்.....  வேறு ஒருவராக மாறி விடுவார்கள்... நான் திரும்பி வந்து விடுகிறேன்.. 

நீர் சேந்தும் பெண்களிடம் காது கொடுக்க கூட முடியாது.. பிறகெங்கே வாய் கொடுக்க.....பேசுவது எல்லாம் மற்றவரைப் பற்றி... அத்தனையும்..

வதந்தி.. வஞ்சம்... வக்கிரம்... காதுக்குள் காமம் பிசைந்து ஓடும் கேட்ட வார்த்தைகளின் வளைவுகளில்... கொஞ்சம் கசிந்துருகி நிற்கும் வயதை.. நான் கடக்கவும் முடியாத கிடக்கவும் முடியாத வட்டத்துக்குள் ஒரு கிணறு செய்து.. நீராய் மிதந்து கொண்டு சலம்பித் திரிகிறேன்..... அங்கிருந்து ஓடி வருகிறேன்.. எங்கே அவன்.. அவன் எங்கே.. எங்குதான் போனான்... 

சிறுவர்கள்......... சிறுமிகள்.... விஷம விளையாட்டில் இருக்கிறார்கள்.... அவர்கள்... பெரியவர்களின் உலகை சுலபமாக கடந்து விட வேக வேகமாய் தங்கள் உடலை வளர்க்கிறார்கள்.... அருகே போக துணியவில்லை... நான்... மெல்ல மெல்ல சோர்ந்தும் போய்க் கொண்டிருக்கிறேன்..... என் நா வரல்கிறது...நான் பேசும் திறனை இழந்து கொண்டே வருகிறேனோ.. என்னவோ.... என் கண்கள் இருளத் துவங்குகிறது....வருடம் ஒரு முறையாவது சாமிச்சண்டை போட்டுக் கொள்ளும் மனிதர்கள் மத்தியில் நான் இத்தனை நேரம் இருப்பதே... மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.. அவர்களின் வானத்தின் கீழ் நான் நிறமற்றுப் போகிறேன்.. அத்தனை முகமூடிகளை மாட்டிக் கொண்டும்.. கையில் வைத்துக் கொண்டும்... இடுப்பில் கட்டிக் கொண்டும்.... இருக்கும் அவர்களில் நான் அவனை எங்கு போய்த்தான் தேட.. அவனாவது... ஒரு புள்ளி வைக்கலாம்.. அல்லது... அழிக்கலாம்...

கேலிகளாலும்... கிண்டல்களாலும்.. தங்களை மறைத்துக் கொண்டே திரியும் இவர்களோடு .. நாய்கள் சிலதும்... இருக்கின்றன.. அவைகளின் அருகே செல்கிறேன்... அவைகள் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கின்றன.. அவைகளின் மனதுக்குள் விரியும்... வீதிகள்.... பெரும்பாலும்.. சினிமாஸ்கோப் அகலத்தில் இருப்பதாக இருக்குமோ என்று ஒரு வகை தேடலை நான் வலிய போய் சுமக்கிறேன்.. என்ன செய்ய...... நான் ஒரு மாதிரி மாறிக் கொண்டேயிருக்கிறேன்...... மழை தேடும் விழிக்குள்..... வெயில் சூடும் மொழிக்குள் நான் இடையினில் பனி தேடி.. இலையுதிராகி பறக்கிறேன்...இந்த ஊர் என்னை கை விட்டு விட்டதோ...... நான் விளையாடிய பால்யங்களின் வண்ணங்கள்... நிறமிழந்து கொண்டே போவது போல.. நான் ஆசிர்வதிக்கிறேன்.. என் கடன் அன்பு செய்து கிடப்பதே என்பதை இப்போதும் என்னால் கூற முடியுமென்று தெரியவில்லை..... அவளை அடித்துக் கொன்ற இந்த ஊரில்.... அவன் என்னதான் ஆனான்... என்பது எனது பெரும் சோகமாக இருக்கிறது...பிரித்து வைப்பது ஒரு வகை சூட்சுமம்.. அது ஒரு வகை ஆழமான சந்தோசத்தை...விதைப்பதாக பக்கத்தூர் பிராய்ட் கூறினார் என்று அவன்தான் கூறுவான்.. அவன் அவமானத்தின் சின்னமென இந்த ஊரின் வீதிகள்... அவனின் பாத சுவடுகளை அழித்தன....

அழிய அழிய ஆரம்பிக்கும் ஆத்மாவுக்குள்.. அதுவும் அப்படித்தான் போல.... போல இருத்தலின் வாழ்வுதனை எதுவும் கவ்வும் என்று ஓ வென சத்தமிட்டு அழும் நான் இன்னும் அவனைத் தேடுகிறேன்..... அவனை தேடுவதுதான் எனது நீட்சி.. இதோ எப்போது வேண்டுமானாலும்..... நான் இல்லாமல் போக முடியும்.... அதுவும்.. நிஜம்.. இங்கே நிஜம் இல்லாமல் போவது... பிறகு பொய் என்பது இருந்தே போவது...எதிரே இருக்கும் சினிமாத் தியேட்டரிலும் அவனைத் தேடி விட்டேன்.. அவன் அங்கும் இல்லை... அவன் மாயக்காரன்.. யாருக்குத் தெரியும்..... திரையைப் பிரித்துக் கொண்டு படத்துக்குள் கூட நுழைந்து விடுவான்..... அல்லது அவன் பாட்டி கூறும் கதைகளினூடாக கரைந்து விடவும் கூடும்.. அவன்.. தேடும் செவ்வந்திப் பூக்களில்... எல்லா வண்டுகளும்... நியாங்கள் செய்வதென்பது தான் அவனின் கூற்று.....

வீடுகளினாலும்... வீதிகளினாலும்... ஊர் செய்யலாம்... மனிதர்களை செய்ய முடியாது.... சக மனிதனைப் புரியாத சமூகம்.... பண்பாட்டிலிருந்து மெல்ல தன்னை விளக்கிக் கொள்ளும்... சாதியும்.. சாமியும் இருக்கும் வரை.. சாக்கடைகளும்.. சாணக்கியனும் இருக்கவே செய்வார்கள்... செய்யும்....இப்படித்தான் அவன் பேசிக் கொண்டு திரிவான்... தண்டவாளக் கதைகளில்... கத்திக் குத்துகளில்.. சாவதை அவன் ஒரு போதும் விரும்பாதவன்..... வாழ்வது சாவதற்கே என்றாலும்.. சாவதிலும் வாழ்வது தான் அவனின்.. தீர்க்கம்.. அவனை யாராவது பார்த்தால் என்னிடம் கூறுங்கள்.. அல்லது அவனிடமே கூறுங்கள்...

இந்த மரத்தினடியில் எப்போதும்.. ஒரு நிழலைப் போல அமர்ந்திருப்பான்.... இன்று அவனின் நிழல் நான் அமர்ந்திருக்கிறேன்.... இன்னும் எத்தனை நேரம் என்பது என்னைக் கடந்து கொண்டிருக்கும் சூரியனுக்கே  வெளிச்சம்....

- கவிஜி

Pin It