ஊரே புது வருசத்தை எதிர் நோக்கி என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது, எப்போதும் போல.... ஆனால்... மனமெங்கும் அந்த திகிலின் தவிப்புகளோடு....


இளசுகள் கோவில் திடலில் அரட்டை அடித்துக் கொண்டும்.. திகில் விஷயத்தைப் பற்றி விவாதிக் கொண்டும் இருக்க.. பெருசுகள்.. மிரண்டு போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்...கிட்டத்தட்ட ஊரின் மத்தியில் பெரிய வீதியில், மக்கள் கூட்டம் காலியாகவே இருக்க... சந்திரன் பெரிய வீதியின் நடுவிலிருக்கும் போர் பைப்பில் தண்ணீர் எடுக்க குடத்தை எடுத்துக் கொண்டு சென்றான்... அங்கே ஏற்கனவே இவன் வருகையைக் கவனித்து நியந்தா  நின்று கொண்டிருக்க, இருவர் கண்களும் ரகசியம் பேசிக் கொண்டன...அது தீரா ரகசியம்.... தீர தீர ரகசியத்தின் கதவுகள் அடைத்துக் கொண்டே விரியும்...சங்கேத பாஷைகள்....

ஆங்காங்கே நின்ற சிலரும் அவர்கள் மேல் கண்களை விடாமல் இல்லை.. ஊருக்கே அரசல் புரசலாக தெரிந்த காதல் கதைதான். ஆனாலும் திரைக்கதையில் சூடு பிடிக்கும் நேரத்தை எப்போதும் காத்திருக்கும் கூட்டத்தில் சிலர், அங்கு தண்ணீர் பிடிக்க நின்று கொண்டிருந்ததும்... வடிவேலு வீட்டு வாசலில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்  கொண்டிருந்ததும்.... நியந்தாவையும்... சந்திரனையும் ஒன்றும் செய்யவில்லை.. அவர்கள் எல்லாம் கடந்த தத்துவத்தில் கலந்து மூழ்கி... அவளின் நிறை குடத்துக்கும் சேர்த்து போர் பைப்பை அடித்துக் கொண்டிருந்தான்...இருவரும் ஒருவரையொருவர் தின்றே விடுவது போல பார்த்துக் கொண்டார்கள்....சரிவாக மேல் நோக்கி நீண்டு இருக்கும் போர் பைப்பின் அடி முனையை அவன் பிடித்து அடிக்க, சற்று கொஞ்சம் தள்ளி, இடைப்பட்ட இடத்தில் அவள் பிடித்திருக்க, அவனின் வலது கை உள்ளங்கைக்குள் கொண்ட கடிதத்தை நொடியினில் அவளின் உள்ளங்கைக்குள் நகர்த்தினான்.. அதற்கும் குறைவான நொடியினில்...அவளும் உள் வாங்கிக் கொண்டாள்..பெண்மையின் உள் வாங்கும் திறன் என்றைக்குமே வியப்புதான் என்பது போல நீர் கொட்டிக் கொண்டிருந்தது....

கடிதம் கை மாறிய புள்ளியை காலம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டது போல.. மென் முறுவலைக் கொண்ட இருவரும்... மெல்ல சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டார்கள்........ இன்று இரவு... புது வருடம்... பிறக்கும் நேரத்தில் அனைவரும் சர்ச்சில் கண்கள் மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கையில் அவள் சர்ச்சை விட்டு வெளியே வந்து விட வேண்டும்... போட்ட திட்டத்தின் படி இருவரும் ஓடி விடுவதுதான் கடிதத்தின் சாராம்சம்... அவள் கடிதத்தை பாவாடை பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டாள், சட்டையின் கை மடிப்பை சுருட்டி விடுவது போல.......

"ஏன் ஒயிலா... டிவில சொல்ற மாதிரி இன்னைக்கு 4 மணிகெல்லாம் இருட்டாகும்ங்றது நிஜமா...?" என்ற ஒயிலா..கேட்டுக் கொண்டே "ஏன் சந்திரா ... இன்னும் எவ்ளோ நேரம் தண்ணி அடிப்ப..... நாங்களும் அடிக்கனும்ல"- என்று சந்திரனைப் பார்த்து கேட்க கேட்கவே அவன்,  குடத்தைத் தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்... நியந்தாவும், அவள் வீட்டை நோக்கி நடந்தாள்....பார்வையை அவர்கள் இருவர் மீதும் மாற்றி மாற்றி போட்ட பேபிக்கா..."ம்ம்ம்ம்.........................." என்று ஒரு பெருமூச்சு விட்டபடியே...... 

"அது என்ன அப்டி சொல்லிட்ட ஒயிலா... டிவில சொல்றது எத்தன நடந்திருக்கு...... அதுமில்லாம.. இதே மாதிரி 84வது வருசத்துல ஒரு டைம் அப்டி நடந்திருக்கு..  நானெல்லாம் சின்ன புள்ள, அப்போ.. நீயெல்லாம் பொறக்கவே இல்ல...வீட்ல இருக்கற ஆடு கோழியெல்லாம் அடிச்சு சாப்டோம்.. சாகத்தான போறோம்னு... அப்புறம் பார்த்தா... யாரும் சாகல...அந்த மாதிரிதான் இன்னைக்கும் நடக்க போகுது.... அது ஒண்ணுமில்ல.. பூமில நடக்கற கோளாறுதான்... இப்பிடி எல்லாத்துக்கும் காரணம்... அதும், இது நடந்தாலும் நடக்கலாம்.. இல்லானா இல்ல.. கவலைப் பட ஒன்னும் இல்லன்னுதான் அந்த டிவிக்காரன் சொன்னான்....." என்றபடியே அவளும்  நிறைந்த குடத்தைத் தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடை போட..அதற்குள் மறு குடத்தைத் தூக்கிக் கொண்டு நியந்தாவும்,.... சந்திரனும் வந்து விட்டார்கள்...

'ஆமா.. ஒவ்வொரு டிவிக்காரன் ஒவ்வொன்னு சொல்றான்... எதை நம்பறது" என்று புலம்பியபடியே ஒய்லாவும் குடத்தை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள்....

ஊருக்குள் ஆங்காங்கே.. அனைவரின் மனநிலையும் இந்த 4 மணிக்கு சூரியன் மறைவது பற்றிதான்.... கிட்டதட்ட அனைவருமே... சூரியன் மேலேயே  ஒரு கண் வைத்திருந்தார்கள்...குடத்தை நிறைத்துக் கொண்டே தன் காதலியின் கண்களை ஊடுருவிக் கொண்டும்.... மென் புன்னகையில் வார்த்தைகள் பரிமாறிக் கொண்டிருக்க.. சட்டென அது நிகழ்ந்தது..... ஊரே கத்த துவங்கியது...

ஒரு பக்கமாக இருந்து அணையும் லைட்டைப் போல.. சட சடவென சூரியன் தன் வெளிச்சத்தை நிறுத்திக் கொள்ளத் துவங்கினான்...அது ஓர் அதீத இருட்டை வெளிக் கொணர்ந்தது.... மிதக்க விட்ட இருட்டைப் போல.. ஒவ்வொருவரும் தனி தனி இருளாய் வெளியோடு நின்று புள்ளியானார்கள்... 

"ஹே....ஹே.........................ஹே................." என்று கூச்சலும் குழப்பமும்...மக்களை சிதறி ஓட வைக்க அல்லது ஒருவரையொருவர் பற்றிக் கொள்ள.. தடுமாறி.. பயந்து... நிலை இழந்து தவித்து... நடு காட்டுக்குள் அகப்பட்டுக் கொண்ட இருட்டைப் போல... மிரண்டு தவிக்க... .. .. சட்டென எதிரே இருந்த நியந்தாவின் கையைப் பிடித்து இழுத்து ....அணைத்தான்....

"டேய்.... என்னமோ நடக்குதுடா...." என்று வடிவேலு, அவன் வாசலில் நின்று சத்தம் போட்டுக் கத்த .... எதைப் பற்றியும் கவலைப் படாமல் சந்திரனும் நியந்தாவும் இதழோடு இதழ் பதித்து வெளிச்சம் உமிழ்ந்தார்கள்...

இரவின் பிடியில்.... மிகப் பெரிய அச்சம் காதலாகவும்... பெரும் அமைதியாகவும்.... வெளிப்பட்டன.... சட்டென்று கூச்சல் குழப்பங்கள் மெல்ல மெல்ல குறைந்து ஆழ்ந்த  மௌனத்துக்குள் ஒரு வித பெருமூச்சுக்கள் மட்டும் இரவைப் போர்த்திக் கொண்ட பெரும் பாம்பு போல... காற்றோடு மெல்லிய இரைச்சலாய் மிதக்கத் தொடங்கியது..... வானம் பார்த்த கண்களில் சூரியத் தேடல்கள் ஒரு 300 ஜோடிக் கண்களாக மின்னின...அது வழக்கம் போலான ஓர் இரவு இல்லை... அச்சங்களின் அச்சுக்களால் தூவப்பட்ட பயங்களின் ஆக்கிரமிப்பு.... பேச்சுகளை காவு வாங்கிய உமிழ்நீரின் விழுங்கல்.  தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த மரணத்தின் வாயில் மெல்ல விலகத் தொடங்கியது.... வானம் கொடுத்த கீற்று துகள்களின் வெளிச்சம் பட்டவுடன் மீண்டும் பிறந்த மனிதனாய்... புதிய பூமியாய்.... விடுபடத் துவங்கியது..... அடைபட்ட பறவைகளின் விடுதலையைப் போல மீண்டும் மெல்ல மெல்ல சத்தங்களும் கத்தல்களும்.. ஆரம்பிக்க....... ஆரம்பிக்க... விடுபட்டிருந்தார்கள்.. நியந்தாவும்.. சந்திரனும்...விட்டு விலகாமல் அவர்களைச் சுற்றியது... இதழ் சிவந்த முத்தங்கள்....

சூரியன் சில நிமிடங்களில் மெல்ல மீண்டும் தலை காட்ட.. அனைவரின் முகத்திலும் படர்ந்திருந்த இருளின் சாயம் மெல்ல விலகி இயல்பு நிலைக்கு வந்தார்கள்.....

இனி பயம் இல்லை என்பது போல ஊர் கலை கட்டத் துவங்கியது.... அது வரை நிறுத்தி வைக்கப் பட்ட கபடி போட்டி.... ஆட்டம் பாட்டம் ..... சரக்கு பார்ட்டி... அன்ன நடை, வண்ண நடை என்று குமரிகளின் அணிவகுப்பு... என்று ஊர் பட்டாசுகளுடன்.... 2005ஐ வழி அனுப்பிக் கொண்டிருந்தது...

நேரம்..மாலை 6 

ஒவ்வொரு புது வருடமும் ஒரு வித தவிப்பை தந்து விடுகிறது..... காரணமற்ற சந்தோசம் போலொரு தோற்றத்தை விதைத்து விடுகிறது....எதையாவது கொண்டாட சொல்லும் மனதுக்குள் ஒரு வித வழி இல்லாமல் அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனை போல மதில் எழுப்பிக் கொண்டு விடுகிறது...ஊர், அது பாட்டுக்கு தன் புது வருட கொண்டாட்டங்களுக்கான வேலைகளை பார்க்கத் துவங்கி விட்டது... அதுவும்... இப்படி ஒரு உயிர் போகும் பிரச்சினைக்கு பின் தப்பித்துக் கொண்ட மறு வாழ்வென.. பார்க்கும் கண்கள் எல்லாம்... பகைமை மறந்து பேரன்பு பெருக பார்த்தது...

நியந்தாவின் வீட்டுக்கு பின் புறம்... தன் துணிகள் அடங்கிய பேக்கை வைத்துக் கொண்டு பர பரக்க... சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றான் சந்திரன்... கொஞ்சம் முள் புதர்களும்.. புல்வெளிகளும் கொண்ட இயற்கையின் அரணாக அவனின் தலை மறைவு காக்கப் பட்ட மாலை மசங்கும் வேளையில் மொட்டை மாடியில் இருந்து நியந்தா தூக்கிப் போட்ட அவளின் பேக் சற்று பட படக்க வைத்து, நிமிட நேரக் காத்திருப்பை பூர்த்தி செய்தது...

கீழே விழுந்த அவளின் பேக்கில் இருந்த துணிகளை எல்லாம் எடுத்து, தான் கொண்டு போயிருந்த தன் பேக்கில் வைத்து விட்டு அவளின் பேக்கை புதர் மறைவில் போட்டு விட்டு வீதியின் கிழுக்கு முகம் நோக்கி நடக்கத் துவங்கினான்.... யாரும் பேக்கோடு அவனைப் பார்த்து விடக் கூடாது என்பதில் முழுக் கவனமும்.. மிரண்டு, சிலிர்த்துக் கொண்டிருந்தது.... வீதியின் குறுக்கு சந்துகளில் புகுந்து.. இடது வலது என்று மாறி மாறி நடந்து, மத்தேயு வீட்டுக்கு முன் வரும் போது எதிரே பரிமளாக்கா வந்து கொண்டிருந்தாள்.... 

"அயோ.. எமகாதகி.... மாட்னோம்... கதை முடிஞ்சது....." என்று யோசித்துக் கொண்டே, என்ன செய்யலாம் என்று பர பரத்த மூளையை ஒன்று திரட்டும் வேளைக்குள், பார்த்தே விட்டாள் பரிமளாக்கா...

சட்டென  நின்று விட்டான் .. திரு திரு விழிகள்..திடும்மென வானம் பார்த்து, வாட்சைப் பார்த்து... ஏதேட்சையாக அந்த அக்காவைப் பார்ப்பது போல பார்க்க... அவனை கூர்ந்து கவனித்து விட்ட பரிமளா..... "என்ன சந்திரா... ஒரு படத்துல ரேஷன் அரிசியை குப்பைத் தொட்டில வெச்சுட்டு பேந்த பேந்த முழிக்கற பாக்கியராஜ் மாதிரி பாக்கற... ஏதும் ஒளிச்சு வெச்சிருக்கியா...?" என்று எட்டிப் பார்த்தாள், அவன் நின்ற இடத்தில் இருத்த குப்பைத் தொட்டியில்...

"அயே. என்னாக்கா... என்னென்னமோ பேசற..... ஒளிச்சு வைக்க என்ன இருக்க... மனச கூட நான் ஒளிச்சு வைக்கறது இல்ல... ஆமா... என்னக்கா... நைட் சர்ச்ல ஏதும் நாடகத்துல நடிக்கறியா!?" என்று கேள்வியை நடை மாற்றினான்...

"ம்கும்..... அது ஒன்னு தாண்டா பாக்கி.. என் பொழப்பே நடிப்பா நடிக்குது.. இதுல நான் வேற தனியா நடிக்கணுமா... கழுத... என்று முணகிக் கொண்டே கடந்து போக யத்தனிக்க.. 

"இல்லக்கா... முடி நரைச்ச மாதிரி இருக்கு...துணிக்கு மேல துணி போட்டு கொஞ்சம் குண்டான மாதிரி இருக்க.. அதான் கேட்டேன்..." என்று அவனும் முன்னோக்கி நடப்பவன் போல நடக்கத் துவங்கினான்... 

அவனைத் திரும்பி பார்க்காமலே... "என்ன.. புதுசா பாக்கற மாதிரி உளறிட்டு போறான்.. வயசான உடம்பு வரும்.. முடி நரைக்கும்.. இதுல நடிப்பென்ன வேண்டிக் கிடக்கு...உன்ன மாதிரியே ஒல்லிப் பிச்சானாவே எல்லாரும் இருக்க முடியுமாடா..." என்று புலம்பியபடியே பரிமளாக்கா நடக்க... முன்னோக்கி நடந்தவன் சட்டென திரும்பி ஓடி வந்து குப்பைத் தொட்டியில் ஒரு மூலையில் வைத்திருந்த பேக்கை எடுத்துக் கொண்டு ஓடினான்.. "நல்ல வேளை இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தா மாட்டிருப்பேன்" என்று, மனம் முணு முணுத்தது சந்திரனுக்கு......

நடப்பது போல சிறு ஓட்டம்.. ஓடுவது போல ஒரு நடை... ரவி வீட்டு திண்ணையில்... மயில்சாமி நண்பர்கள் நான்கு பேர் உட்கார்ந்து ஐந்து டம்ளரில் சரக்கு ஊற்றி... நான்கை எடுத்து ஒரே முகமாய் மேல் நோக்கி காட்டி "இது நம்ம ராஜாவுக்காக..." என்றபடியே மட மடவென குடித்தார்கள்.. அவர்களைக் கடந்து கொண்டிருந்த சந்திரன் கண்களில் இந்தக் காட்சி விழுக, மனித ஆர்வத்தின் நீட்சியாக சற்று ஓரமாய் நின்று அவர்களைக் கவனித்தான்...... 

"என்னடா இது...எல்லாருமே நாடகத்துல நடிக்க போறானுங்களா.... மயில்சாமிக்கு ஜடாமுனின்னு பேரே இருக்கு, அவ்ளோ முடி இருக்கும்... இப்போ இவ்ளோ சொட்டையா இருக்கான்... அட எல்லாருக்குமே தொப்பை.. வழுக்கை என்று ஆளே மாறி இருக்காங்களே..... அது என்ன ராஜாவுக்கு.... ஒன்னுக்கு போன கேப்ல அவன் சரக்கையும் சேர்த்துக் குடிக்க பண்ற ஏற்பாடுதான இது....!"  என்று யோசித்தபடியே.. "சரி.. நம்மல எவனும் பாக்காம இருந்தா சரி" என்று முணங்கிக் கொண்டே வீறு நடையை மாற்றி வேக நடையை கொண்டான்.... பதுங்கிச் செல்லும் புலியின் வேகத்தில் பேக்கை முதுகோடு போட்டுக் கொண்டு மலை ஏறுபவன் போல மூச்சை அளவோடு விட்டு வாங்கிக் கொண்டே நடந்தான்... 

"இன்னைக்கு மட்டும் நான் போய் சேர்ந்துட்டன்ன்ன்.. ஜெய்ச்சிட்டேன்ன்....." என்று கவுண்டமணியின் வசனம் கூட மண்டைக்குள் செந்திலாய் பார்த்தது.......

"என்ன சந்திரா.... என்னமோ திருடப்போறவன் மாதிரி போய்ட்டு இருக்க...... ஊரே.. கோயில்லயும்.. சார்ச்சுலயும் குமிஞ்சு கிடக்கு.. நீ எங்க கிழக்க போறவன்..." என்று மொட்டாயி திண்ணையில் படுத்திருந்த ஆறுமுகம் கேட்க,  சட்டென பக்கவாட்டில் இருந்து அதுவும் இருட்டுக்குள் இருந்து எதிர்பாராத சத்தமாக ஒரு குரல் வர, கண நேர மிரட்டலாய் மிரண்ட சந்திரன் பேக்கை சட்டென கையோடு இறக்கி கால் பக்கத்தில் போட்டுக் கொண்டு......வராத வார்த்தைகளை யோசனை கொண்டு கோர்த்தான்.... 

"இல்லை.. பங்காளிய பாக்க போயிட்டிருக்கேன்.. ஒரு சின்ன வேலை...... அதான்..." என்றான் முகத்தை  துடைத்துக் கொண்டு.. ஒரு பக்கம்... 'ஹேப்பி நியூ இயர்..." என்று மைக் செட்டில் பாட்டு ஓடிக் கொண்டிருக்க.. மறுபக்கம்..."ஆனந்தம் பொங்குதே,, ஆனந்தம் பொங்குதே.. ஆனந்தம் பொங்கி பொங்குதே...." என்று இன்னொரு மைக் செட்டில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.... கொஞ்சம் சத்தமாகத்தான் பேச வேண்டி இருந்தது...

"புது வருஷம் பொறக்க போகுது.. மாமன கவனிச்சுட்டு போடா சந்தரா..." என்று படுத்துக் கொண்டு காலாட்டியபடியே கேட்ட ஆறுமுகத்துக்கு 5 ரூபாயை எடுத்து கொடுத்தான்..... எடுத்துக் கொடுக்க, கொடுக்கவே.. "ஆமா மாமா.. எங்க மொட்டாயி காணோம்....." என்றான்.... அவன் பார்வையின் நினைப்பு முழுக்க அவன் காலடியில் கிடந்த பேக்கிலேயே இருந்தது.... கையில் வாங்கி கண் அருகே கொண்டு போன ஆறுமுகம்.. 5 ரூபாய் நாணயத்தை இருட்டை விலக்கி உற்றுப் பார்த்து....ஒரு முடிவுக்கு வந்தவனாய்...."ம்ம்ம்.. மொட்டாயி செத்துப் போய்ட்டா... உனக்குத் தெரியாது.....?... வெண்ணை...இந்தா இதை தூக்கிட்டு ஓடிப் போய்டு..." என்று கையிலிருந்த 5 ரூபாய் நாணயத்தை தூக்கி சந்திரன் மேல் எறிந்தான்........ 

விட்டால் சரி என்பது போல குனிந்து அப்படியே பேக்கை இழுத்துக் கொண்டு ஓடியே போனான் சந்திரன்... 

'5 ரூ......வாய்க்கு ஊறுகாய் கூட கிடைக்காதுடா.... மசுருகளா... கோட்டர் 125 ரூவா.....டா....." என்று புலம்பியபடியே மீண்டும் புரண்டு படுத்துக் கொண்டான் ஆறுமுகம்..

மணி இரவு  7...

கனத்து மௌனித்து கிடந்தது வீதி.... மூச்சுக்கு கூட காற்று இருக்கிறதா என்றால் பெரு மூச்சு வாங்கித்தான் உணர முடியும்...நீண்டு கிடந்த மஞ்சள் நிற வீதியில்... அடுக்கி வைத்தார் போல இரண்டு பக்கமும் இருந்த வீடுகளை ஒரு முறை சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டான், சந்திரன்.. "நாளைக்கு இந்நேரம் என்ன ரணகளம் ஆகப் போகுதோ" என்று ஆழ்மனம் புலம்பியது வார்த்தைகளற்று... 

மோகினி போல சட்டென்று சித்திரக்குள்ளி குறுக்கு சந்து வழியாக வெளியே வந்தாள்... திக்கென்றாகி விட்டது சந்திரனுக்கு...

'எங்கண்ணா கிளம்பிட்ட...." என்றாள்..  தன் புடவையை சரி ...செய்தபடியே...

அவள் இன்னும் கூர்ந்து கவனித்து விடுவதற்குள் பேக்கை மறைக்க வேண்டும் என்ற படபடப்பில்,  பேக்கை சற்று வலது பக்கமிருந்த திண்ணையில் படாரென வைத்து விட்டு..... "சும்மா... சித்ரா... பங்காளிய பாக்க....." என்று அவளையே உற்று கவனித்தவன்.. என்ன சித்ரா... நீயும் நாடகத்துல நடிக்க போறியா... உங்கம்மா புடவைய கட்டிட்டு பெரிய பொம்பள மாதிரி கெட் அப் மாதிட்ட..." என்றான்...வார்த்தைகளை அளந்து அளந்து பேசுபவன் போல...

ஏதோ டப்பிங் படம் பார்த்த மாதிரி......" நாடகமா.. நானா.. அதெல்லாம் ஒரு காலம்ண்ணா....அப்புறம்........... இது ஒன்னும் எங்கம்மா புடவை இல்ல.. என் புடவைதான் .. எல்லாரும் ரெம்ப குண்டாகிட்டேனு சொல்றாங்க.. உனக்கும் அப்டிதான் தெரியுதா" என்றாள்.. இன்னும் அவள் புடவையை அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டேதான் இருந்தாள்...

"ஆமா... இல்ல.... என்ன சொல்றது ... ஆமா..கொஞ்சம் குண்டாத்தான் தெரியறா.. சொன்னா நம்பவா போறா"- என்று யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான் சந்திரன்.... அவள் பேக்கை பார்த்து விடக் கூடாது என்பதைப் போல பேக் இருந்த இடத்தை உடலைத் திருப்பி மறைத்தும் கொண்டான்... 

அவள் அவனைப் பார்க்காமலே... இன்னும் புடவையை சரி செய்தபடியே..."சரிண்ணா.. நான் கிளம்பறேன்...சர்ச்சுக்கு நேரமாச்சு..." என்று சொல்லி அவன் பதிலுக்கு காத்திராமல் போய்க் கொண்டிருந்தாள்...... 

"யப்பா வாயாடி... இன்னைக்கு ஏதோ கொஞ்சமா பேசிட்டு போறா...."-என்றபடியே பேக்கை தூக்கிக் கொண்டு கிழக்கு நோக்கி வேக வேகமாய் ஓடினான்.. 'ஓட ஓட தூரம் குறையல" என்பது போல.. குறையாமல் இருப்பது போல இருந்த கால்களின் வலிமைக்கு கிழக்கின் கோடியில் இருந்த புளிய மரத்தின் அருகாமை மிகப் பெரிய பிரமாண்ட பேயைப் போல பயமுறுத்தியது......... இந்த மரத்துக்கு ஊருக்குள் பேய் மரம் என்று தான் பெயரே..."இது தான் சரியான இடம்.. எவனும் கிட்ட கூட வர மாட்டான்" என்று நினைத்துக் கொண்டே... பேக்கை புளிய மரத்தின், சற்று மேலே வளைந்து சென்ற கிளைகளின் இடையே சொருகி வைத்தான்... "நைட் வர்றோம்.. பேக் எடுக்கறோம்.. இப்டி இந்த வழியே... பள்ளம் தாண்டி... சுடுகாடு தாண்டி, பவானி ரோட்டை பிடிச்சு ஈரோட பஸ் பிடிக்கறோம்... அப்புறம்.. போட்ட திட்டத்தின் படி கல்யாணம்...."- விடிஞ்சா கல்யாணம் என்று நினைக்கும் போதே உள்ளுக்குள் கட்டெறும்பு ஏறிய கரும்பாய் இனித்து சிவந்தது மனது..

புது வித நம்பிக்கையோடு.. மீண்டும் ஊருக்குள் நடக்கத் துவங்கினான்.. ஊரே ஏதோ மாறி விட்டது போல ஒரு வகை பழுப்பு நிறம் போர்த்தி இருந்ததை ரசிக்க கூட முடிந்தது... "ஊரின் எல்லையைத் தாண்டி விட்டால், பின் யாரும் தங்களை ஒன்னும்  செய்து விட முடியாது" என்பதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டான்.... நியந்தாவின் முதல் முத்தம் ஞாபகம் வந்தது.... முதலில் அவன் காதலிக்க துவங்கியது என்னவோ நியந்தாவின் அக்கா நிவ்யாவைத்தான்... அவள் "முடியாது" என்று கூறிய பின் "சரி கேட்டுப் பாப்போம்" என்று கேட்டதுதான்... நியந்தாவின் காதல்... அவளோ, தனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே அவனை காதலிப்பதாக கூறி மீண்டும் மீண்டும் சக்கரை ஆலையை விதைத்தாள்...நினைத்தாலே இனித்த அவளின் நினைவுகளில் தேங்கியே, ஊருக்குள் நடந்தவனின் பார்வையில், மயில்சாமி நண்பர்கள் விழுந்தார்கள்.... ஆளுக்கொரு பிளாஸ்டிக் டம்ளரில் சரக்கை வைத்துக் கொண்டு சலம்பிக் கொண்டிருந்தார்கள்.. "என்னடா அதுக்குள்ள இடத்தை மாத்திட்டானுங்க.." என்று முணங்கிக் கொண்டே பார்த்தவனுக்கு இம்முறை ராஜாவும் ஜோதியில் இருந்தது நன்றாக தெரிந்தது... "அட... மயில்சாமிக்கு மீண்டும் ஜடாமுனி போல கூந்தல் எப்படி முளைத்தது.....?..." தலையை முதன் முறையாக பிடித்துக் கொள்ளத் தோன்றியது சந்திரனுக்கு......."ஒருவேளை தான் தான் கற்பனை செய்கிறோமோ .." என்று ஒரு புயல் அவனுக்குள் விதையைப் போல விழுந்தது....." காட்சிகள் யாவும் காட்சிகளா.. மாயங்களின் பிடியில்... மாறும் சூழ்ச்சிகளா...?"

கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்த்தான்... முடி இருந்தது... "சற்று முன் ரவி வீட்டு திண்ணையில் பார்த்த போது சொட்டையாக இருந்தானே.. இப்போது எப்படி.. இத்தனை முடி மீண்டும்.. எது நிஜம்.. முடிக்கு டோப்பா வெச்சதா.. இல்ல.. சொட்ட  மாதிரி வேஷம் போட்டதா..."- என்று குழம்பிக் கொண்டே மனதுக்குள் புரண்ட பிழைகளோடு மீண்டும் நடக்கத் துவங்கினான்....முன்னோக்கி நடந்தவனக்கு அடுத்த அதிர்ச்சியாய்... விசும்பிக் கொண்டிருந்தது... சித்திரக்குள்ளியின் முழங்கால் கட்டிக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்த காட்சி....... மெல்ல அருகே சென்றான்.. அவள் விசும்பிக் கொண்டிருந்தாள்... 

"என்னாச்சு சித்ரா... ஏன் அழுதுட்டு இருக்க...?!" என்றான்.. அவளை கூர்ந்து பார்த்தபடியே..

"நான் அழுதா உனக்கென்னண்ணா... வேலைய பாத்துட்டு போ.. நானே எங்கம்மா.. என்னைய நாடகம் நடிக்க விட மாட்டேங்குதுன்னு அழுதுட்டு இருக்கேன்..."-என்றபடியே அவள் தொடர்ந்து விசும்பலை சரியாக செய்தாள்..

"அயோ.. என்னடா இது குழப்பம்......." என்றபடியே.. அட... நாடகம் நடிக்க விருப்பம் இல்லன்னு இப்ப தான சொன்ன.. அதும் புடவை கட்டிட்டு இப்ப தானே ஜாம் ஜாம்னு போன.. அதுக்குள்ளே என்னாச்சு..."- என்றவனை...கூர்ந்து பார்த்த சித்ரா...சட்டென்று  விசும்பலை நிறுத்தி விட்டு,... "நான் புடவை கட்டுனா நல்லாவா இருக்கும்..?.... எனக்கென்ன வயசு இருவதா...புடவை கட்டிட்டு திரிய.... பத்து தான....பாவாடை சட்டை தான் அழகா இருக்கும்.... நீ எங்கம்மாவ பார்த்து  நான்னு நினைச்சிருப்ப.. லூசு மாதிரி.... "-என்றபடியே மீண்டும் விசும்பத் தொடங்கினாள்... 

நெஞ்சே அடைத்து விடும் போல் இருந்தது.... தலை சுற்றி நடந்தவனை.. மொட்டாயி குரல் தடுத்தது.........

"யார் ரத்னமா பேரனா.... என்ன ஊரே... கோயில்லயும் சார்ச்சுலயும் கிடக்கு.. நீ இங்க உலாவிட்டு கிடக்க... ஏதும் சிநேகிதம் கீற இருக்காடா... பேர கெடுத்துக்காத..." என்று திண்ணையில் உடகார்ந்தபடி வெத்திலையை  குத்திக் கொண்டே பேசியது.......நின்று நிதானமாக மொட்டாயியை பார்த்தான்... திண்ணையை துலாவிய கண்களுக்கு ஆறுமுகம் அகப்படவில்லை...

"ஆயா..... ஆறுமுகண்ணன் எங்க.." என்று மெல்ல கேட்டான்...அவன் கண்கள் அந்த இருள் சூழ்ந்த திண்ணையை வெறித்தது.... "மொட்டாய் செத்துப் போய்ட்டா... உனக்கு தெரியாது...." என்று ஆறுமுகம் கோபத்தில் கத்தியது, காரணமே இல்லாமல் மீண்டும் ஒலித்தது சந்திரன் செவியில்....ஒலிப்பதெல்லாம்.... ஒலியா....என்பதைப் போல மௌனம் கலைத்த மொட்டாயி.... ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டது... "அந்த தறுதலை காணாம போய்தான் ரெண்டு மாசம் ஆச்சே... உனக்கு தெரியாதா...... அவன் உருப்படுவானா... அரிசி சோரா குடுத்து வளத்தேனே.. இப்படி அந்த ஓடுகாலி நாய் கூட சேர்ந்து ஓடிப் போய்ட்டானே.. குடிகாரன் நாயி....."-மொட்டாயின் குரல் தொடர.... நா வரளத் துவங்கியது சந்திரனுக்கு... "இல்ல.. இது சாதாரணம் இல்ல.. ஏதோ தப்பு நடக்குது...."

தலைக்குள் ரீங்காரம் மெல்ல அல்ல.. மிக வேகமாக சுற்றுவது போல.. அவனின் கற்பனையோ.... அல்லது கற்பனையின் அவனோ... சுற்றத் தொடங்கினார்கள்... .. மனதுக்குள் தீர முடியாத கேள்விகளோடு குழப்பங்களும் நிறைந்து கொண்டன... கால்கள் முன்னோக்கி நடந்தாலும். மனதுக்குள் சற்று முன் பார்த்த, மாறிய கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளை விரித்துக் கொண்டே சென்றது... எதிரே வந்து கொண்டிருந்த பரிமளாக்கா, இன்னும் எண்ணை ஊற்றினாள்.. சிக்கென்று, நடந்து வந்தவள்... அவன் முன்னால் நின்று... "என்ன சந்திரா.. இன்னைக்கு நீ ஆடப் போறியா... இல்லையா.. போன வருஷம் உன் ஆட்டம் மஜா டா.. "என்று கூறி விட்டு வேகமாக கடந்து போனாள்... வீதி லைட் வெளிச்சத்தில், அவளின் கறுத்த உடல் .. கணக் கச்சிதமாக அவனின் பாருக்குள் அலையாக ஆடியது....மீண்டும் கறுத்த முடியோடு...உடல் ஒல்லியாகி எப்பவும் போல இருந்தாள்... 

மனதுக்குள் ஏதேதோ சிந்தனைகளை ஓட விட்ட சந்திரன்..."அக்கா ஒரு நிமிஷம்"- என்று போனவளை நிறுத்தினான்.. அவளும், நின்று மெல்ல திரும்பினாள்.... 

"அக்கா திரும்பாத....... திரும்பாமலே.. நான் கேக்றதுக்கு பதில் சொல்லு... என்றான் கணீர் குரலில்... 

திக் என்று நின்ற.... பரிமளா... கொஞ்சம் திரும்பிய கழுத்தைக் கூட வேகமாக முன் பக்கமாக திருப்பிக் கொண்டாள்...... "இது சந்திரன் குரல் மாதிரியே இல்லையே" என்று உடல் நடுங்க நினைத்த பரிமளா..... "ஏன் சந்திரா,.. என்ன கேக்க போற...ஏன் திரும்ப வேண்டான்னு சொல்ற...' என்று மெலிதாக.. ஆனால் பிசிறில்லாமல் வார்த்தைகளை விட......" கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இதே இடத்துல நாம பார்த்தோம் தானக்கா..."என்றான்..பயந்து கொண்டே.... வேகமாய் வியர்க்கவும் தொடங்கி இருந்தது . அவன் உடலும் மனமும்...

நின்றபடியே கண்களை இடதும் வலதும் திருப்பிய பரிமளா..... "என்ன கேக்கறான்.... இவன காலைல இருந்தே பாக்கலயே... ஏன் இப்டி கேக்கறான்... திரும்ப வேண்டானும் சொல்றான்... என்னாச்சு...." என்று தொடர்பற்ற யோசனையில் சிக்கி நிற்க... "சொல்லு.............க்கா...." என்று அடித்தொண்டையில் இருந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டான் சந்திரன்.. 

"இல்லடா.. இப்போதான் பாக்கறேன்...."என்று பயந்தபடியே பரிமளா கூற....." அயோ...பேயி........." என்று கத்திக் கொண்டு ஓடத் துவங்கினான் சந்திரன்... "அயோ.. பேயா...."- என்று பரிமளாவும் கத்திக் கொண்டு குறுக்கு சந்துக்குள் ஓடத் துவங்கினாள்......

மணி இரவு 9.30

கோவில் திடலில் நடந்து கொண்டிருந்த நாடகம் பார்க்க கூட்டத்தோடு நின்றான்...சந்திரன்....மனதுக்குள் பக் பக் என்றும் திக் திக் என்றும்.. ஏதேதோ... எண்ணங்கள் தடுமாற... ஒரே முகத்தில் இரண்டிரண்டு பேராக பலர் இருப்பது போல பிரமிக்கவும் செய்தான்.... 

"என்ன... முனியாண்டி... கொஞ்ச நேரம் சர்ச்... கொஞ்ச நேரம் கோயில்னு ரெண்டு பக்கமும் இருக்க...சாமி மாதிரி " என்று கேட்டபடியே செங்கல்ராஜ் நடந்து போக.. முனியாண்டி... அவனையும் பார்த்துக் கொண்டு.... இதை கவனித்துக் கொண்டிருந்த சந்திரனையும் பார்த்து.. "குடி....." என்பது போல, ஒரு மலையாளியைப் போல ஜாடை செய்தான்..........நேரம் ஓட ஓட.. சிந்தனையில்.. குழப்பங்கள் மறைந்து...நியந்தாவின் ஞாபகங்கள் தலைக்குள் சுழன்றன...

குளிரை போக்க பெரும்பாலைய மக்கள் தலையோடு குல்லா போட்டபடியும் ஸ்வெட்டர் போட்டபடியும் ஆவிகளைப் போல அலைந்து கொண்டிருந்தார்கள்..... இன்னும் சற்று நேரத்தில் புது வருடம் வந்து விடப் போகிறது... புது நம்பிக்கை பிறக்க போகிறது. என்று உள்ளுக்குள் கொண்ட குதூகலத்தை நடந்தே காட்டிக் கொண்டிருந்தார்கள்...மூளைக்குள் போட்டு வைத்த அத்தனை திட்டங்களையும்.. ஒரு சேர ஓட்டிப் பார்த்தான் சந்திரன்... அத்தனை குழப்பங்களையும் தாண்டி.......சில்லென்ற காற்று மெல்ல ஒரு ராணியின் விசிறியை போல... மிதந்து கொண்டிருந்தது....

நேரம் 11.55.

சர்ச்சில் அனைவரும் கண்கள் மூடி ஜெபிக்கத் தொடங்கினார்கள்... இன்னும் 5 நிமிடத்தில் புது விடியல்....

அடுத்த நிமிடம்... நியந்தாவும்... சந்திரனும் ஓடிக் கொண்டிருந்தார்கள்....... 

டிக் டிக் டிக் .......அடுத்த நிமிடம்.. பேக் அவர்கள் கையில்.. டிக் டிக் டிக் ......அடுத்த நிமிடம்... பள்ளம் தாண்டி..... ஓடிக் கொண்டிருந்தார்கள்.....டிக் டிக் டிக் ...... அடுத்த நிமிடம்.. பவானி சாலையில்.... 

அடுத்த நிமிடம்.... தூரத்தில் பின்னால்.. பட்டாசுகளும்... கூக்குரல்களும்.. கொந்தளிக்க.. சட்டென்று நின்று, நியந்தாவும் சந்திரனும் ஒருவரையொரு ஆரத் தழுவிக் கொண்டார்கள்.... புது வருடம்.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... என்று ஊருக்குள் கத்திய சத்தம் ஒரு சாரலைப் போல.. அவர்களை நொடிகள் இடைவெளியில் வந்து சேர்ந்தன...... முத்த மழையில் நனைந்து கொண்டார்கள்.... ஒரு முறை அவளைத் தூக்கி சுற்றினான்... ஒரு குழந்தையைப் போல....... அவள் மெது மெதுவாய் தழுவி வழுக்கினாள்.. ஒரு குமரியைப் போல.....

இருள் சூழ்ந்த சாலையில்.... அவளின் கண்கள் பிரகாசமாய் காதலை முணுமுணுத்தது... கண்களோடு இதழ் பதித்தவனுக்கு... பதில், கன்னம் கடித்து சொன்னாள்... இருவரும்.... இருள் புன்னைகையோடு மீண்டும் நடையும் ஓட்டமுமாக முன்னோக்கி நடக்க... பின்னால் தீப்பந்தங்களோடு ஒரு கூட்டம் அலறிக் கொண்டு வருவதை தூரக் காட்சிகளும்.. தூரக் கத்தல்களும்....உணர வைத்தன... மீண்டும் அதி வேகமாக அடிக்கத் தொடங்கிய இதயங்களை   கோர்த்துக் கொண்ட கை கொண்டு தைரியப் படுத்திக் கொண்டு வேகம் எடுத்தார்கள்.... மிரண்டு போன மனதோடு... எல்லாம் புரிந்து விட.... ஓட்டம்  வேகமெடுத்து... ஓடினார்கள்.. ஓடிக் கொண்டே இருந்தார்கள்...இருள் துரத்தும் அதே நேரத்தை...அவர்கள் துரத்துவது போல ஒரு ஓவியக் கரைதலாய் அவர்கள் காதலைக் கொண்டே கடந்து கொண்டு இருந்தார்கள்....

கண நேர கீற்றாய் சட்டென ஒரு ஜீப் அவர்களைக் கடந்து முன்னால் சென்று,வேகமாய் நின்று... பின்.. அதே வேகத்தில் சர்ரேலென வந்து சர்ரென்று அவர்களின் அருகே நின்றது...

இருவரும் மிரண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பார்க்க....உள்ளேயிருந்து டிரைவர், "சீக்கிரம் ஏறுங்க.... வாங்க.... நான் உங்கள டிராப் பண்றேன்... நீங்க எவ்ளோ ஓடினாலும் அவுங்க உங்கள பிடிச்சிடுவாங்க... வாங்க... யோசிக்க இது நேரமில்ல"- என்று கிட்டத்தட்ட ஆணையிடும் தொனியில் கூறினான்... "பயப்படாதீங்க... ஏறுங்க.." என்று கேட்ட பாதுகாப்பின் சத்தத்தை... நம்பவும் இல்லாத நம்பவும் செய்கின்ற தடுமாற்றத்தோடு அந்த நேர முடிவாக, ஏறிக் கொண்டார்கள்.....வண்டி அதே வேகத்தில் கிளம்பியது.... மெல்ல திரும்பிப் பார்த்த சந்திரனின் கண்களுக்கு குட்டி குட்டி தீப்பத்தங்கள் தூரத்தில் தலை அசைப்பது தெரிந்தது.... நியந்தாவும் சந்திரனும்... ஒருவரையொருவர்.. அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டார்கள்.. வண்டி அதே வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது... இரு பக்கமும் இருள் சூழ்ந்த காட்டுக்குள் ஒரு கீற்றைப் போல ஜீப்பின் முகப்பு வெளிச்சம் கீறிக் கொண்டு போக அதன் பின்னால் ஜீப் போய்க் கொண்டே இருந்தது...... 

"ரெம்ப நன்றிங்க.. எங்கள ஈரோட்ல இறக்கி விட்ருங்க..." என்று ஒரு 30 கி மீ, ஒரு வகை மௌனம் கலந்த இருக்கதோடு கடந்த பயணத்தின் முமூடியையைக் கிழித்தான்  சந்திரன்...

மெல்ல புன்னகைத்துக் கொண்ட டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து கண நேரத்தில் விலகிய ஜீப் இடது புறமாக சரிந்து கவிழ்ந்து எதிரே இருந்த ஒரு புளிய மரத்தின் மீது மோதி சரிந்தது..... இருள் மிரண்டு ஒதுங்கிக் கொண்டது போல.. ஜீப்பின் முகப்பு வெளிச்சம் கோணல் மாணலாக  அங்கும் இங்கும் பரவி விரவி... பாதி கண்கள் திறந்து மயங்கியது போல புளிய மரத்தின் கிளைகளின் ஊடாக நீண்டு கிடந்தது...

கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்தது என்றே கணிக்க முடியாத சந்திரன் மெல்ல உள்ளே கிடந்த நியந்தாவை வெளியே இழுத்தான்.... ஆங்காங்கே சிராய்ப்புகளோடு நிற்க முடிந்தது அவனால்... திரும்பி தேடிய இருளுக்குள் முகப்பு வெளிச்ச பரப்பில், புளிய மரத்தின் அடியினில் ஒரு ரத்தக் காட்டேரியைப் போல முணகிக் கொண்டிருந்தான் ... டிரைவர்....

ஓடிச்சென்று அவன் அருகே நின்று அவனைத் தூக்க முயற்சிக்கையில் சந்திரன் அதிர்ந்தான்... இன்னும் நன்றாக அவனை உற்றுப் பார்த்தான்....ஆங்கங்கே அடி பட்டு முகம் கிழிந்து, ரத்தம் வழியக் கிடந்த அவனின் முகம் தொட்டு திருப்பி இன்னும் நன்றாகப் பார்த்தான்... மனதுக்குள் பெரும் குழப்பம்... அவனைக் கவ்வ, மிரண்டு இரண்டு அடி பின்னால் நகர்ந்து தடுமாறினான்.... ஆம்.. அவன் சந்திரனைப் போலவே இருந்தான்.. "என்ன விதமான குழப்பம்... இது.." என்று கண்களை அழுந்த அழுந்த தேய்த்துக் கொண்டு மீண்டும் அருகினில் சென்று பார்த்தான்.... ஒரு முறை, தான் தெளிவாகத்தான் இருக்கிறோமா என்ற சுய பரிசோதனைக்கு மனதை ஆட் படுத்திக் கொண்டான்.... மறுபடியும்  பார்த்தான்... ஆம்.. அதே முகம்... அதே உடல்... ஆனால் கொஞ்சம் வயதாகி இருந்தான்...... மற்றபடி ஒரே உருவம்தான்...ஆம்... அந்த டிரைவர்... அப்படியே தன்னைப் போலவே இருந்ததைப் பார்த்து... என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிய சந்திரனை டிரைவர் பார்த்து மெல்ல புன்னகைத்தான்.... .

தலையை பிடித்துக் கொண்டு, திக் திக் பார்வையோடு....... 'என்ன நடக்குது.. ஒன்னும் புரியல.. ஊருக்குள்ள ஒருத்தர் மாதிரியே வயசான ஒருத்தர் இருக்காங்க.. சரி ஒருவேளை என் கற்பனையோன்னு கூட நினைச்சேன்.. ஆனா.. இங்க என்ன மாதிரியே வயசான நீ...... எப்டி... என்ன நடக்குது ... ஆமா.. யார் நீ... எதுக்கு எங்கள காப்பாத்த வந்த... எங்கிருந்த வந்த.... ".. என்று பெரும் குழப்பத்தோடு மீண்டும் தலையில் கை வைத்துக் கொண்டு சரிந்திருக்கும் டிரைவர் அருகே அமர்ந்தான்.... லட்சம் பூச்சிகள் மனதுக்குள் அரிப்பது போல உடல் நடுங்கிய கோர்வையாய் ஒரு நிழலைப் போல கவனித்தான்....

தன்னைப் போலவே இருந்த சந்திரனைப் பார்த்து, "பயப்படாத.... எல்லாம் சொல்றேன்.." என்று மெல்ல பேசத் தொடங்கினான் டிரைவர்...

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்......

"சந்திரா.... விதி வலியது தெரியுமா.....' என்று பேசத் தொடங்கினான் டிரைவர்..

சட்டென கண்களை அகலமாய் திறந்த சந்திரன் "என் பேர் உனக்கெப்டி தெரியும்...?" என்று ஆச்சரியக் குறியில் அதிர்ந்தான்... .. முட்டியில் வழிந்த குருதியை உதறிக் கொண்டே...

"பேர் என்ன...! எல்லாமே தெரியும்..." என்று இடைவெளி விட்ட டிரைவர் ....." என்னை பத்தி எனக்கு தெரியாதா.....?" என்றான்.....

இன்னும் கூர்ந்து கவனித்த சந்திரன்... என்ன இது... "என்னை பத்தி எனக்கு தெரியாதா.....!"- ஒன்னும் புரியல' என்று முணங்கினான். வெற்றுப் பார்வையில் மிகப் பெரிய பயம் கலந்து நின்றது....இரவாக...

டிரைவர் மெல்ல சிரித்துக் கொண்டு.... "இன்னைக்கு சாயந்தரம் சூரியன் 4 மணிக்கே மறைஞ்சதுல ஏற்பட்ட கால மாற்றத்துல...கால குழப்பத்துல 2005ம் 2015ம் கலந்துடுச்சு சந்திரா... அதான்.. 10 வயசு வித்தியாசத்துல ஒரே மாதிரி ரெண்டு ரெண்டு பேரா இன்னைக்கு ஊருக்குள்ள இருக்காங்க... ஒரே கிணறு உனக்கு மூடி இருக்கற மாதிரி தெரியுது......எனக்கு திறந்து இருக்கற மாதிரி தெரியுது........ராஜா இல்லாத நண்பர்களை முதல்ல நீ பார்த்தது 2015... அதுல ராஜா இல்ல... ரெண்டாவது, ராஜாவோட சேர்ந்து அந்த கூட்டத்தை நீ பார்த்தது 2005.... 2010ல ராஜா செத்துப் போய்ட்டான் சந்திரா... அதான் 2015ல நீ பாக்கும் போது ராஜா இல்ல... ஆனா அவனே 2005ல இருந்தான்ல.." 

சந்திரனுக்கு தலை சுற்றி வாந்தி வருவது போல இருந்தது.... "என்ன மாதிரியான ஆங்கில பட குழப்பம் இது?" என்று மனதுக்குள் முணங்கியவன் .. ஒரு முறை இன்று நடந்த அத்தனை குழப்பங்களையும் மனக் கண்ணால் ஓட்டிப் பார்த்தான்...பரிமளாக்கா ...... சித்ரா...மொட்டாயி, ஆறுமுகம்.... செங்கல் ராஜ்.... இன்னும் கண்ட அத்தனை இரட்டை வேடங்களுக்கும் காரணம் புரியத் தொடங்க... இந்த பிரபஞ்சத்தின் மீது இனம் புரியாத பயம் வந்தது.. நிழலைப் போல ஒன்று நம்மை கண்காணித்துக் கொண்டே இருப்பதாய் அறிந்த வியாக்கியானத்தின் பிடியில்... மனிதன் ஒன்றுமே இல்லை என்ற சிந்தனைக் குழப்பம் தெளிவாய் புரிந்தது...... 

"அப்டினா... என்னோட 2015, நான் தான் நீ......... இல்லையா...!" என்று ஆச்சரியப்பட்டான்... அவன் கண்கள் ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கி நீந்தியது.....2015 சந்திரனை உற்று.. ஏதோ கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது போல பார்த்தான்...........2005 சந்திரன்....அவர்களை சுற்றி பூமி வேக வேகமாய் சுற்றுவதைப் போலொரு  மாயம்... மிதப்பதை உணர்ந்தார்கள்...இயல்புக்குள் கலந்து கொண்ட மாய தத்துவங்களின் கைகளில் மூளை பிசையப் படும் காட்சிக்குள் பின்னோக்கி தலைகீழாய் சரிவது போல் இருந்தது... சூழலின் இருண்மை...

வரட்சியான பார்வையோடு,  2015 சந்திரன்....... "சரி சந்திரா...நீங்க கிளம்புங்க....அவுங்க கைல மாட்னா அவ்ளோதான்....." என்றான்... தவிப்போடு........

"நீ... நீங்க......?"-தன்னையே வேறு ஒருவனாக பார்த்து பேசுவது என்பது இனம் புரியாத தவிப்பின் உச்சம் என்று உள் மனம் அசை போட்டது சந்திரனுக்கு...  

"நான் என்னை பாத்துக்குவேன் ...., நீங்க போங்க...  நாளைக்கு மறுமடியும் சூரியன் வழக்கம் போல உதிச்சிட்டா.. இந்த 2015 இருக்காது...நானும் இருக்க மாட்டேன்....இந்த குழப்பம் தீர்ந்திடும்... ஏன் அப்டி பாக்கற... அதான் நீ இருக்கியே... நீ தான நான்...இது என் நியந்தா தான.... "என்று சொல்லி மென் புன்னகையோடு கண்ணடித்தான்... 

"சரி" என்ற சந்திரன்.. எழுந்து  நியந்தாவைக் கூட்டிக் கொண்டு ஓடத் துவங்கு முன் சற்று நின்று.. திரும்பி... "சந்திரா ... எங்க கல்யாணம்...... நடந்திடும் தான... நீ எதிர்காலத்துலதான இருக்க.. அப்போ என்ன நடந்துதுன்னு உனக்கு தெரியும் தானே...? என்றான்...முகம் பிரகாசிக்க...

2015 சந்திரன்... மெல்ல புன்னகைத்து விட்டு.. "காலத்தின் கணக்கை முன் கூட்டியே கணிக்கலாம்.. வாழ கூடாது... நீ போ... எல்லாம் புரியும்" என்றான்.....ஒரு வித அமானுஷ காற்று, அந்த இடத்தை நிரப்பியது....இருண்மையின் சிலிர்ப்புக்குள் மிதக்கத் துவங்கிய மாயக் கண்கள் புன்னகை செய்தன....

சந்திரன்  நியந்தாவைக் கூட்டிக் கொண்டு ஓடினான்... ஓடி புள்ளியாகி இருட்டுக்குள் மறைந்து போனான்....

வேண்டும் என்றே ஜீப்பை கவிழ்த்திய காட்சியை ஒரு முறை நினைத்துப் பார்த்தான்....2015-சந்திரன்.... அவனுக்கு முன்னால் கவிழ்ந்து கிடந்த ஜீப்புக்கும் தரைக்கும் இடையே நசுங்கி செத்துக் கிடந்தாள் நியந்தா....

"ஒரே ஆளாக இருந்தாலும்.. மனசு வேறடா...அது வருசத்துக்கு வருஷம் என்ன... நிமிசத்துக்கு நிமிஷம் மாறும்....இது என் நியந்தாடா.... நியந்தா எனக்கானவன்.. உன் கூட போக விடுவேனா...." என்ற 2015-சந்திரனின் மனம் ஒரு பேயைப் போல கண்கள் விரித்தது.....

ஓடிக் கொண்டிருந்த சந்திரனின் கைகளில் இருந்த நியந்தாவின் கை மெல்ல காற்றோடு கரையத் துவங்கியது....

- கவிஜி 

Pin It