கீற்றில் தேட...

சாலையோர மேடையில் தூணில் சாய்ந்தபடி மேய்ந்து கொண்டிருந்த அந்த இரு கண்களுக்கும் சொந்தக்காரன் ராகவன். 35 வயதைக் கடந்திருந்த அவனது இளமை தனக்கு ஜோடி சேர்க்க ஒரு பெண்ணைத் தேடியது. பஸ்ஸ்டாப், தான் வேலை பார்க்கும் இடம், திருவிழா, பேருந்து நிலையம் போன்ற இடங்களிலெல்லாம் அவனது கண்கள் தன்னிச்சையாய் தேட ஆரம்பித்தது பெண்களை. தனது இரு தங்கைகளுக்குத் திருமணம் செய்யும் பகீரத போராட்டத்தில் 35 வயதைத் தொலைத்திருந்தான். வேலை, வேலை என ஓய்வில்லாத போராட்டத்தில் தொலைந்து போன வாழ்க்கையைத் தூசி தட்டிப் பார்க்க முயற்சித்தான். தனது பள்ளிக் கால சேட்டைகளை தனக்குள் அசைபோட்டு ரசித்துக் கொள்வான். கடந்த ஏழு வருடங்களாக வராத ஏக்கமும் எதிர்பார்ப்பும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது ராகவனை.

எந்தப் பேருந்தும் நிற்காத அந்த பேருந்து நிறுத்தத்தில், அந்த பேருந்து அன்று வந்து நின்றது. பயணிகளை வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்த 10 நொடி இடைவெளியில் அந்த ஜன்னலோரக் கன்னியின் கண்களை சந்தித்தான் ராகவன். 30 வயதைக் கடந்திருப்பாள் போல. ராகவன் விழிகளை விதைக்க ஆரம்பித்தான் அவள் கண்களில். கண்கள் கூச அவள் பார்த்த பார்வை அவனது வியர்வை சுரப்பிகளை உயிர்ப்பித்தது. குதித்தெழும்பிய குரல் நாண் வறண்ட தொண்டையை வருடியது. உறுமிய பேருந்து தனது உயிர்ப்பை நினைவூட்டியது. பெரிதாக உறுமிக் கொண்டு சென்ற பேருந்து கண்களை பிடுங்கிக் கொண்டு சென்றது கொத்தாக. ராகவன் கண்ணற்ற குருடனானான். விழிகளை தொலைத்தவன் வீதி வழியே வீட்டுக்கு நடந்தே சென்றான்.

கண்களை பிடுங்கிச் சென்ற கன்னியின் நினைவு, ராகவனின் ராத்தூக்கத்தை சாப்பிட்டது. ராகவன் சாப்பிடவில்லை. பசி வந்தால் பத்தும் பறந்து போகும், ஆனால் ஒரு பெண்ணின் நினைவு பசியையும் மறக்கச்செய்யும் என்பது எல்லோரும் உணர்ந்த, யாருக்கும் தெரியாத விஷயம். ஜன்னல் வழியே நிலாவை பார்த்துக் கொண்டிருந்தான். நிலாவில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலாவிலும் பஸ் ஓடியது அவளை சுமந்து கொண்டு. விடிய விடிய கனவு கண்டான் தூங்காமல். இவ்வளவு உற்சாகமான இரவு, இவ்வளவு வேகமான இரவு, அவன் வாழ்க்கையில் சந்திக்காத முதல் இரவு.

மறுநாள் அலுவலகத்தில் ராகவனால் வேலைகள் செய்யப்பட்டன. மதியம் ராகவனால் உணவு சாப்பிடப்பட்டது. அவன் ஒரு அஃறிணைப் பொருளானான். கண்களை இழந்த குருடன் கடமைகளைச் செய்தான். பெண்ணிச்சையில் தன்னிச்சையாய் செயல்பட்டான். என்ன வேலை செய்தான் என்றால் எதுவும் தெரியாது. மது அருந்தியவனைப் போல மயக்கத்தில், சாதுவைப் போல நித்திரையில் நினைவில்லாமல் மனத்தின் மிதப்பில், நினைவின் கதகதப்பில் மாலை வரை வேலை செய்தான். மாலை உயிர்ப்பித்தது அவனை.  மாலை தூக்கம் கலைத்தது அவனை. மாலை தண்ணீர் தெளித்தது அவன் முகத்தில். நித்திரை கலைந்த அவன் நினைவில் அவள் முகம் அழைத்தது அவனை. மறைந்தான் அவ்விடம்.

அந்த பேருந்து நிறுத்தம் பக்தனின் தவப்பீடமாய் ஜொலித்தது. கண்கள் சுளுக்க ஒவ்வொரு பேருந்தாய் தேடினான் தேவதையை. பக்தனின் பரிதவிப்பு பன்மடங்காகியது. அவ்வளவு கூட்டத்திலும் அவளைக் காணும் ஆவல் அவளைக் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கை, தன்னம்பிக்கையின் வியாக்யானத்தில் விவேகானந்தருக்கு இரண்டாமிடம் தான். காத்திருப்பதின் வேதனையும் சுகமும், ஒட்டு மொத்த தாக்குதலை நடத்தியது. எரிமலைக் குழம்பு கடல் நீரில் கலப்பது போல, சுடவைத்து குளிரவைத்து, வேதனைப்படுத்தி, சுகப்படுத்தி வார்த்தெடுக்கப்பட்டான் காதல் ஜுரத்தில். உருக்குலைந்த இரும்புக் குழம்பு வார்ப்பைத் தேடியது உருப்பெற. சத்தமில்லாத புயல், ரத்தமில்லாத போர், இனிமையான கொலை, மென்மையான விபத்து அவன் சந்தித்த அழகான வேதனை, வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்தில். ராகவனின் ஒவ்வொரு செல்லிலும் ஆயிரம் ஊசிகள் குத்தி நின்றது மொத்தமாக.

அந்த கத்திக் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். பற்றி எரிந்தான். பாதம் தளர்ந்தான். அந்த கூர்மை ஆயுதம் கருத்தில் குத்திச் செருக இரத்தம் கசிந்தான் இனிமையாய். மற்றுமொரு தாக்குதல் கஜினியின் மகளோ இவள். இவள் கண்கள் தரும் காயம் புரிய வைப்பது பெண்ணின் வீரம்.

பார்வை நேரம் தொடர ஊர்ந்தது பேருந்து. அது எப்பொழுது காந்தமானது. இழுக்கப்பட்டான். ஈர்க்கப்பட்டான் ராகவன். இன்னொரு இரவை இவள் நினைவு கொல்லும். இன்னொரு இரவு இவனையும் கொன்றுவிடும். தற்காப்பு நடவடிக்கையாய் ஓடிச் சென்று தொற்றிக் கொண்டான் பேருந்தில். கூட்டத்தின் நடுவில் அந்தக் கண்களைத் தேடினான். கண்கள் கிடைத்தன கண்களுக்கு. திரும்பிப் பார்த்த அந்த இரு கண்களை அந்தப் பாலைவனத் தலை (சொட்டைத் தலை) மறைத்தது. இவள் கண்கள் பார்த்த திசையில் அந்த பாலைவனத்தின் கண்களும் திரும்பிப் பார்த்தன. அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள்.

ராகவனின் மண்டைக்குள் பலத்த சத்தம், மண்டைக்குள் இடி இடித்தது போன்றதொரு உணர்வு. "என்ன உரிமையாக தொட்டு பேசுகிறான், சொந்தக்காரனாக இருப்பானோ?" மண்டையில் முடி இல்லாத கிழவன் தந்தையாகத்தான் இருக்க முடியும். அந்த ஒரு நிமிடம் உலுக்கல் ஏற்பட்டது பேருந்துக்குள் இல்லை. ராகவனின் மனதுக்குள். மனதிற்குள் மாமனாருக்கு மரியாதை செலுத்தினான். இவ்வளவு அழகான மகளைப் பெற்ற மாமனாரின் மலர்ப் பாதங்களை ஒற்றி எடுத்தான் தனது இமைகளால். தன் காதலியின் தோள்களில் மாமனாரின் கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தான்.

பேருந்து பயணம் செய்த தூரம் தெரியவில்லை அவனுக்கு. அவர்கள் இறங்கிய அதே இடத்தில் அவனும் இறங்கினான். பின் தொடர்ந்தான். தெருக்களும், சந்துகளும் கடந்து போயின. அந்த தெரு முனையில் தரையிலமர்ந்து மல்லிகைப் பூவை  முழ‌ம் போட்டுக் கொண்டிருந்த பூக்காரியிடம் நின்றார்கள். அந்தப் பாலைவனம் பைக்குள் கையை விட்டு சிறிது பணத்தை எண்ணிக் கொடுத்து அரை முழப் பூவை அள‌ந்து வாங்கியது. ராகவனின் இதழில் புன்சிரிப்பு.

"அடுத்த வருடம் நான் வாங்கிக் கொடுப்பேன்"

கண்களை சிமிட்டிக் கொண்டான். பூவை வாங்கிய பாலைவனம், மேகம் போன்ற அவளது அழகிய கூந்தலில் கையோடு சேர்த்து பூவை திணித்தது. ராகவனின் நெஞ்சை பிளந்து சென்ற அந்த பீரங்கிக் குண்டு முதுகு வழியாக சென்றது. இருப்பினும் தன்னைத் தேற்றிக் கொண்டான். இன்னும் ஐம்பது சதவீதம் உயிர் இருந்தது அவன் உடலில். கண்களில் இன்னும் கண்ணீர் வரவில்லை.

தனது இருண்ட கண்களின் வழியாக ராகவன் பார்த்தான். அந்த பாலைவனம் தத்தி தத்தி தளர் நடையில், அவளது இடைபிடித்து நடந்து சென்றது. என்னதான் தந்தையாக இருந்தாலும், பெற்ற மகளின் இடைபிடிப்பானா? கேள்விக் கணைகள் நெஞ்சை துளைக்க, களையிழந்த முகத்தில் தெளிவை வரவழைத்துக் கொண்டு முகம் சுளிக்க பின் தொடர்ந்தான். அந்த பெரிய வீட்டின் முன் நாய் குரைக்கும் சத்தத்தைத் தொடர்ந்து வேலைக்காரனின் வரவேற்பில் உள்ளே நுழைந்தார்கள் இருவரும்.

அப்போது அப்பா என்று கத்திக் கொண்டு ஒரு குழந்தை ஓடி வந்து அந்தக் கிழவனை கட்டிப்பிடித்துக் கொண்டது. ராகவன் தனது சகிப்புத் தன்மையின் உதவியோடு சகித்துக் கொண்டான். இந்த வயதில் அந்தப் பாலைவனத்துக்கு ஒரு குழந்தையா? தன் காதலிக்கு ஒரு தங்கச்சியா? தனக்கு ஒரு மைத்துனி இருக்கிறாள், அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் பொறுத்துக் கொண்டான்.

கிளைமாக்ஸ்

அந்த குழந்தை வேகவேகமா அந்த கிழவரை விட்டு கீழே இறங்கியது. ஓடிச்சென்று அந்த பெண்ணின் கைகளுக்குள் தஞ்சம் அடைந்தது. அந்தக் குழந்தை தனது கொஞ்சும் மழலைக் குரலில் கேட்டது.

"அம்மா அம்மா எனக்கு சாக்கலேட் வாங்கிட்டு வந்திங்களா"

ராகவன் உயிர் துறந்தான்.

-சூர்யா