சீராகக் குழிகளைத் தோண்டிவிட்டு போத்துகளை (மரக் கிளைகள்) அதில் நட்டு ஈர மண்ணை சரித்து, நிமிர்ந்தால் போதும் மணி பனிரெண்டு, ஒன்று ஆகிவிடும். அல்லது தொலைவில் வாங்கு ஒலிக்கும். கருக்கலில் அவன் கூறை விட்டுக் கிளம்பி வரும்போது, வெறும் தெளிவுத் தண்ணியை கொஞ்சம் சோத்தோடு கரைத்து குடித்துவிட்டு வருவதை வயித்தோரப் பசி சொல்லும். ஈர மண்ணை அடிக் கடப்பாறையால் சதக்கிவிட்டு, அப்படி செய்யும் போது போத்தில் உரசாமல் கவனமாக செய்ய வேண்டியிருக்கும். பிறகு வரிச்சி பிடித்தால், அந்தி மசன்டை ஆகிவிடும். அதெல்லாம் முன்பு. அப்போது அவன் தொழில் முறை வேலைக்காரன் இல்லைதான் என்றாலும், மரங்களை நட்டு வேலி அடைப்பது என்றால் உடனே ஒத்துக் கொண்டுவிடுவான்.

man 320அது வேலை என்று சொல்ல மாட்டான். வீட்டில் குழந்தைகளைத் தூக்கிவைத்துக் கொள்வதை எந்தத் தாயாராவது வேலை என்று சொல்வாளா? பிசிறில்லாமல் கத்தரித்த மரத் துண்டுகள் ஒவ்வொன்றும் அவனுக்கு குழந்தைகள் தான். இடுப்புத் துண்டை தலையில், முண்டாசாக்கிக் கொண்டு ஏறினான் என்றால், மரக்கிளைகள் ஒவ்வொன்றையும், தோளில் குந்தியிருக்கும் பிள்ளைகளைப் போல கவனமாக கீழே இறக்கிப் போடுவான். சின்ன அதிர்வென்றாலும் அது பிறகு வேர் பிடிக்காது. மரங்கள் அத்தனை சிணுங்கிகள்!. மேலத் தெரு இராசாங்கம் சொல்வார், ‘நானும் எட்டூரு பாத்துப்புட்டேன் ஒங்கையிப் பட்டு போத்து புடிக்கிறாப்புல வேறெ எவனுக்கும் சில்லாவில கைத்துலுப்பு இல்ல.’ இவனை அடைப்புக்கு கூப்பிடும் யாதொருவரும் இப்படித்தான் சொல்வார்கள்.

வழக்கமாக, ஆடுகள் அழிச்சாட்டியம் பண்ணும் இடங்களில், வாய் வச்சி கரண்டி போடாமல் இருக்க சாணிக் கரைசலை போத்தில் தெளித்துப்போட்டு கரையேறுவதோடு அந்த நாள் வேலை முடிந்தாக அர்த்தம். ஆனால் அவன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான். ஆடுதொடா இலைகளை இடைக்கிடை ஊணிவைப்பான், அந்த வாடைக்கு அவை மரங்களைத் தொடா, தப்பித்தவறி சிலதுகள் ஒதியம் போத்து ருசிக்கு பட்டை உரித்துவிடும். அப்போது மட்டும் போத்தில் சாணிக் கட்டியை எடுத்து வந்து காய்ச்சல் பிள்ளைக்கு மரப்பாச்சி பத்து இடுவதுபோல வெள்ளை எழும்பு துருத்தும் ஒதியம் கிளைக்கு மொழுகுவான். ‘வெள்ளாட்டு வாய்ப்பட்ட வெள்ளாமை விளங்காது’ என்பது போல, சிலது பட்டுப்போகத்தான் செய்யும். ஆனால் இவன், வேலியிடும் நாள் வரை பார்த்து, பாத்து தண்ணி ஊத்துவான். காயம்பட்ட பிள்ளைக்கு கரிசனங்காட்டுவது போல கொஞ்சம் அதிகபடியாகவே அந்த கிளைக்கு தண்ணி ஊத்தி நிற்பான். வாரம் ரெண்டிலேயே துண்டு மரக் கிளை துளிர்த்திருப்பதை, வேலண்ணணோ, துரைக் கண்ணுவோ இவனிடம் சொல்லி பூரிப்பார்கள். ஓங்கைக்கு பட்ட மரமே துலுக்கும் என்பார்கள்.

அவன் கைப்பட்ட மரம் துளிர்ப்பது என்னவோ வாஸ்த்தவம் தான். ஆனால் காமாட்சி வயிற்றில்தான் ஒன்றும் துளிர்த்து தளிர் விடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இது பற்றி அவளுக்கு முறைப்பாடு இருந்தது. அதெல்லாம் கல்யாணமாகி பிந்தி சில வருசங்களுக்குத்தான். மூஞ்சை தூக்கிவைத்து கொண்டிருப்பாள். ஆயிசா வீட்டுக்கு வேலி வைத்து பனையோலை அடைத்து வந்து நாளாம் நாள் சொல்வான், “வக்காளி தண்ணி இல்லாம்னா என்ன கிளுவ, கிளுவதான் அத்தனையும் மொளச்சிகிச்சி!”. சோறு பொங்கிக் கொண்டு கிடந்தவள் கண்கள் ரெண்டும் திரண்டது. ”அதும் மரம் மொளைக்கும். நாம என்ன மரமா மட்டையா!” என்றாள், தவறிய வாயோடு. தன்னறியாமல் தீ தள்ளி அடுப்பில் எரிந்து வந்த சிராக் குச்சி சுட்டதும் தான், தான் என்ன சொன்னோம் என்று நாக்கை கடித்துக் கொண்டாள். வரிச்சி பிடிச்ச கருவம் விளார் பச்சை முள்ளு கணக்கா அவனுக்கு சுர் ரென்றிருக்க வேண்டும் அவள் வெடுவெடுக்கவும், எழுந்து துண்டுவுதறிப் போனான்.

அன்னைக்கு சாயங்காலம் மாரிமுத்து சாராயக் கடையில் ரெண்டு பட்டை நீஞ்சி வந்து வீட்டில் வுழுந்தான். முள்ளு வேலி கட்டும் நாளைத் தவித்து அவன் பட்டை போட மாட்டான். அது சனியன் பிடிச்ச வேலை. அப்படியான நாளில், அஞ்சு சீர், நாலு சீர் வரிச்சி பிடித்து நின்றும், ஒக்காந்தும் எழும்ப வேண்டும். தென்னம் பாலை நார் வைத்து நுழைத்து இழுத்து கட்ட வேண்டும். நல்ல பாம்பு வளைக்குள்ளிருந்து புடுங்குவது போல, மரத்துக்கும் வரிச்சிக்கும் இடையில் இலைதலைக்குள்ளாக இருந்து ஊசி போல நறுக் கென்று போடும். கடுப்பும் இரத்தமும் ஒடனே எட்டிப்பார்க்கும், விரலை சப்பிக் கொண்டு இருந்துவிட்டு சிறிது சுண்ணாம்பு வைப்பான். ஒடம்பு வலி கண்டுவிடும் சாராயக் கடைக்கு ஓடுவான். கைகள் பொத்த காயங்களில் சிறிது ஊத்துவான் எரிச்சலில் அவை ரெண்டு நாளில் சரியாகிப் போகும். பிறகு ஒரே மூச்சில் குடித்து விட்டு பூனை போல வீட்டில் ஆர்ப்பட்டமில்லாமல் அமுங்குவான். பம்மிக் கொண்டு சாரத்தை இழுத்து போத்தும் போதே காமாட்சிக்கு தெரிந்துவிடும். எனினும் கூலியாக வாங்கிய காசையோ, நெல் மணிகளையோ கவனமாக அவளிடம் குடுத்துவிட்டுதான் தோப்புக் கடைக்கு போவன்.

ஆடிக்கும், அமாவாசைக்குமாக குடிக்கும் இவன், முள் வேலி கட்டாத நாளில் நீஞ்சி வந்தபோதே காமாட்சிக்கு விளங்கிவிட்டது. அவனைக் கட்டி அழுதாள். தனது கடுஞ்சொல்லுக்கு வருந்தினாள். செய்த தப்பிற்கு வேலி முள் வருந்தாது. அவள் வருந்தியது மனசு காயம் ஆறியது போலிருந்தது. இனி அவனுக்கு சாராயம் தேவைபடாது.. வேலி முள் குத்தினால் என்ன.. இருக்கவே இருக்கிறது கார சுண்ணாம்பு. அதற்காகவே வெத்திலை போடக் கத்துக் கொண்டான். அதும் மிஞ்சிப்போனல் அவள் தவுட்டுத் துணியில் ஒத்தடம் வைக்கப் போகிறாள்.

கருக்கலில் மரமேறினால், தறித்துப் போடும் பூவரசு, ஒதியன், கிளுவை, வாகை என்று மருத நிலத்து மரம் போல வேலிக்கு ஒத்துவருவது வேறெங்கும் கிடையாது. வேலி வைச்சு கட்டினால் கல்யாணத்துக்கு சீர் கொண்டு போகும் பெண்டுகள் கணக்கா ஒரு ஒழுங்கில் நிற்கும். காடு கரையோ, வீதி ஒழுங்கையோ, வேலி யென்றால் அதுதான் வேலி. உயிர் வேலி. இப்போதெல்லாம் யார் வேலி வைக்கிறார்கள். ஒன்று மச்சு வீடோ, குச்சு வீடோ சுற்றி சுவர் எழுப்புகிறார்கள். அல்லது, கம்பியோ, கல்லோ வைத்து கட்டுகிறார்கள் குளிப்பதும், கழுவுவதுமான ஓடும் சாக்கடைகளை அவை ஒரு போதும் உறிஞ்சா. அக்கம் பக்கம் என்று நாலாபக்கமும் நாறிப் போகும். வசதியான வாழ்க்கை என்கிறார்கள். சாக்காட்டு வசதி. உயிர் வேலி என்பது பச்சை மரங்கள் பசேலன தலையாட்டி, வீட்டுத் திண்ணைக்கு காற்றை விசிறி கொடுக்கும்.. எப்படி என்றாலும் முற்றிவரும் பூவரசு பொண் சீதனத்துக்குப் பீரோ, கட்டிலாகப் போகும். ஒதியம் என்றால், தூங்குபலகையாகும் மரம் வெட்டிய வெறுமை சகியாமல் இவன் வந்து மீண்டும் பச்சைபிடிக்கும் வரை மரங்கள் நட்டு வேலி வைத்து போவன். இதற்கென்றே சுற்று வட்டம் இவனைத் தேடும்.

வீட்டு மனை விற்போரும், மச்சு வீடு கட்டுவோரும் போட்டிப் போட்டு எடத்தை வளைச்சி போட்டாலும், வேலி வேலை என்று முறை வைத்து கூப்பிடும் ஆட்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்று இப்போது தெரியவில்லை. நகரம் வேலி மரங்களையும், இவனையும் சேர்த்தே முழுங்கிவிட்டது. சுத்துப்பட்டு ஊரெல்லாம் போய் உயிர் வேலி வைத்தவனுக்கு உயிர் கருகியது. ஒரு துளுப்பும் தெரியவில்லை. ஆடுகள், வைத்திருப்போருக்கு அந்தி குழை கட்ட என்ன செய்வார்கள் என்று யோசித்தான். சில ஆடுகள் இரவில், ரோட்டில் அசை போட்டு கிடக்கின்றன. ஒதிய மரம் உத்திரத்திற்கு ஆகாது என்பார்கள், வேலிக்கும், நிழலுக்கும் அதுபோல வருமா என்ன, மாசம் முழுசும் தரையில் கிடந்தாலும், எடுத்து ஊன்றினால் பலசமயங்களில் துலுத்துவிடும். உயிர் வேலி இல்லாத ஒதிய மரம் போல தானுமென்ற நினைப்பு சில நாள்களாக அவனுள் ஓடியது. அப்போதெல்லாம், காமாட்சிதான் ஆறுதலாக ஏதாவது சொல்வாள். அந்த தெம்பிலேயே வெளியேறிப் போவான்.

ஊருக்குத் தெக்கே, முள்வேலி போட்டார்கள் பெரிய கம்பெனிக்காரர்கள். முள்கம்பியும், கட்டரும் வைத்து இழுத்து கட்ட வேண்டும். றால் பஃண்டிலும் கூப்பிடுவார்கள், வேலை பழக சிலரோடு போனான். கம்பி இழுக்கிறேன் என்று கை, காலை கிழித்துக் கொண்டு வந்தான். உயிர் வேலி என்றால், அந்தியில் ஊறவைத்த தென்னம் பாலைகிழித்து, எடுத்து வருவான். தென்னம் பாலை மரம் வளர விரிந்து கொடுக்கும், வரிச்சி நடுவே மரங்கள் அசையாது காக்கும். அதற்குதான் பாலை. கையில் நாள் முழுசும் தென்னங்குளிர்ச்சி வெயில் சூட்டை தணிக்கும், மார்கழி உயிர் வேலிவைக்க தோதானது இதமானது. வேலை சுணங்காது. உடம்பும், மனசும்தான். இங்கு ஒதுங்கி நிற்க மரம், மட்டை கிடையாது. எந்நேமும் வெயில் மண்டை பிளக்கும். ஈடுபாடு இல்லாத மண்ணும், மனிதர்களும் என்று அவனுக்குத் தோன்றும். கம்பி குத்திய காயங்கள் சீழ் வைத்து அடிக்கடி வேலைக்கு போகவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. வேலையிடத்துக்கு ஒரு நாள், தர்மாசுபத்திரிக்கு ஒரு நாள் என்று அலைகிழிய வேண்டிய தாயிற்று.

ஒரு பகலில், முள் வேலி சுற்றி நடந்தான். முகத்தில் அனல் அடித்தது. விரல்களில், கெண்டைக்கால்களின் சீழ் காயத்தில் விண்ணென்று வலி கிளம்பிற்று. ஏற்கனவே முள்ளில் விழுந்த கந்தல் துணியென ஆகியிருந்தான். வெயில் பட்ட கம்பி முற்கள் வேறு, தம் கோரை பற்களை காட்டி இவனை பயமுறுத்துவது போல இருந்தன. வெற்றிலை துப்பினான். அது தகிக்கும் வெயிலுக்கு காய்ந்து வெளிறியது. கண்ணுக்கு எட்டிய வரை ஒரு பச்சை இல்லை. தலையாட்டும் மரங்களின் துளிர் பச்சை இலைகள் என்றால் ஒரு பாடு தூங்க தாலாட்டும். காமாட்சி மடிபோல, நினைத்துக் கொண்டவளாக ஒரு நேரம் சொல்வாள், ‘நமக்கு நாமதான் குழந்தை வேறெ என்ன வேணும்?!’ இப்போது அவனிடம் தளிர்த்து, துளிர்த்து நிற்கும் ஒரே உயிர் வேலி மரம் அவள் மட்டும்தான். வரிச்சி போல இறுக்கி அணைக்கும் அவளது கரங்களும், சொற்களும் அவனுள் அடைகாப்பாய், பிறகெப்போதும் கிடைக்காத இளைப்பாறலாய் அது இருக்கும்.

-          இரா.மோகன்ராஜன்

Pin It