"அந்த டீயைக் குடிச்சிட்டு அப்பறமா வேலையப் பாரேன். ஆறிடப் போறது." -ஹெட் கிளார்க் காமாட்சி அம்மாள். என்னத்த டீயைக் குடிக்கிறது. எங்க கேண்டீன் டீயை மனுஷி குடிப்பாளா? (நான் குடிச்சுத் தொலையனும்).

lady sad 226அட்மிஷன் டைம் இல்லையா? மண்டை காய்ஞ்சிரும். இந்தம்மா இருக்கே இதெல்லாம் நல்லா வக்கனையா பேசும். ஆனா எல்லா வேலையையும் என் தலையில கட்டிரும்.

ஒன்னு சொல்லட்டுமா? இங்கே எல்லாருக்குமே ரெண்டு முகம். "ஒக்காரேண்டி. நீயும் மனுஷி தானே. எவ்வளவு நேரம் நிப்பே" ன்னு ஸ்வீப்பர் பரமேஸ்வரிக்கு இரக்கப்படுற காமாட்சி அம்மா தானே அவ குழந்தைக்கு சாக்லேட் குடுக்கறதுன்னாக் கூட அதை டேபிள் மேல வெச்சு எடுத்துக்கோன்னு சொல்லுது?

காலையிலேர்ந்தே ராதா ஞாபகமாவே இருக்கு. சரியா ஒரு வருஷம் ஆகப் போகுது அவளைப் பாத்து. அவுங்க அப்பா சாவுக்குப் போயிருந்தப்போ பாத்தது. பாவம். என்ன பண்ணிட்டு இருக்காளோ. திருச்சியில அவ சித்தி வீட்டுக்கு போயிட்டதா பூர்ணிமா சொன்னா. இப்போ அவ பூர்ணிமாவோடயும் டச்லே இல்ல போலத் தெரியுது.

சே! எப்படிப்பட்ட பொண்ணு அவ. விதி அவ வாழ்க்கையில விளையாடிருச்சுன்னு எல்லாரும் சொல்றாங்க. விதியா விளையாடிச்சு? நான் சொல்றேன் தைரியமா – இந்த காலேஜ் நிர்வாகம் தான் அவ வாழ்க்கையில விளையாடிருச்சு. சத்தியமா சொல்றேன். நன்றி கெட்ட நிர்வாகம். நாலாயிரம் ரூபாயெல்லாம் ஒரு சம்பளமா? என் கதை வேற. படிச்சு முடுச்சுடறேனேன்னு கெஞ்சக் கெஞ்ச கேக்காம பி.காமை பாதியிலேயே நிறுத்திட்டு கல்யாணம் பண்ணி வெச்சுட்டானுங்க. ஆனா இவ பிஎஸ்சி படிச்சவளாச்சே. எங்க காலேஜ் தான் இப்படியா இல்ல எல்ல காலேஜுமே இப்படித்தானா? அடுத்து ஒரு ஜென்மம் இருந்தா டெம்பரவரி ஸ்டாப்பா மட்டும் பொறக்கவே கூடாது. அதுலயும் இந்தக் காலேஜீலே… ஊம் ஹூம்

பெரிய மனுஷன் அப்படின்னு மதிக்கப்படற அவங்க எல்லாருமே பெரிய மனுஷங்களாத்தான் நடந்துக்கறாங்களா? இல்லையே. இந்த பத்மநாபன் சார் தராதரம் என்னான்னு தான் எனக்குத் தெரியுமே. பொறுக்க மாட்டாமே குமார் சொன்னாரே- குமார் கிட்டே இவர் கேட்டிருக்கார்:

"ஆமா, இந்த கலாவதிக்கு கல்யாணம் ஆயிடுத்தா?"

"எனக்கு தெரியாது சார்"

"இல்ல ஜாயின் பண்ண புதுசிலெயெல்லாம் ஸ்லிம்மா இருப்பாங்க, இப்ப கொஞ்சம் பெருத்துட்டாங்க. அதான் கேட்டேன்"

"சார் ப்ளீஸ் இப்டியெல்லாம் என்கிட்ட பேசாதீங்க"

பெரிய உபாத்யாயரோட யோக்கியதை என்னான்னு பாத்தீங்களா? ராஸ்கல். குமார் என்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். ஆனா இந்த உலகம் இருக்கே ரொம்ப மோசம். அதைப் பொருத்த வரைக்கும் பத்மநாபன் நல்லவர்; குமார் கெட்டவன். ஏன்னா அவர் பசங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்காமே அரசியல் சொல்லிக் கொடுக்கறாராம். அவர் தீவிரவாதியாம். பசங்களக் கெடுத்திடுவாராம். என்னத்தச் சொல்றது?

மத்தவங்க யோக்கியதை பத்தி யோசிக்கிறேனே நான் மட்டும் என்ன ஒழுங்கா? இப்போ ஏன் எனக்கு ராதா ஞாபகம் வருது? இப்போ மட்டும் அவ இருந்தா எவ்ளோ உதவியா இருந்திருக்கும். இந்த காமாச்சி அம்மா டார்ச்சர்லேந்து கொஞ்சம் தப்பிச்சிருக்கலாம். சரி அவ கதைக்கு வரேன்.

போன வருஷம் ஒரு நாள் காலை. கையெழுத்து போட நானும் ராதாவும் சேந்து தான் போனோம். பெரிய அதிர்ச்சி எங்களுக்கு. ரிஜிஸ்டரிலே ராதா பேரைக் காணோம். என்னான்னு சூப்பரின்டண்டைக் கேட்டா ’எனக்குத் தெரியாது ரிமூவ் பண்ணச் சொல்லிட்டாங்க பண்ணிட்டேன். போர்டு ஆபீஸ்ல கேட்டுக்கோங்க’ன்னு சொல்லிட்டாரு. மூணு மணி நேரம் கழிச்சு அழுதுகிட்டே வந்தா.

"என்னடீ ஏன் அழறே என்ன ஆச்சு"

"முடிஞ்சதுக்கா.. நா வெளியிலே போகனுமாம். எழுதி வாங்கிக்கிட்டாங்க"

"என்னடீது அராஜகமா இருக்கு. திடீர்ன்னு வீட்டுக்குப் போன்னு எப்படி சொல்ல முடியும்?"

"சொல்லிட்டாங்களேக்கா"

"நீ ஏண்டி ஒத்துண்டே?" இது காமாட்சி அம்மாள்.

"வேற என்ன மேடம் பண்ணச் சொல்றீங்க. நம்பளாலே இவுங்களை எதிர்த்து என்ன பண்ண முடியும்?"

"அந்த தைரியத்துலதான் இப்டி……" சவுண்டு அதிகமாயிருச்சுன்னு புரிஞ்சுகிட்ட காமாச்சி அம்மா பாதியிலியே நிறுத்திக்கிட்டாங்க.

அவ அப்பாவோட பெயிண்டிங் உத்தியோகம் மட்டும் அவங்க வாழ்க்கைக்குப் பத்தாது. இவ தலையெடுத்ததுக்கு அப்பறம் தான் கடன் இல்லாம அவங்க வாழ்க்கை போயிட்டு இருந்தது.

இதுல ஒரு விஷயம் சொல்லனும். ராதா மேலே மேனேஜ்மெண்டுக்கு ஒரு கோவமும் கிடையாது. ஆனா அவளை அனுப்பிச்சுட்டா அதை விட கம்மியான சம்பளத்துக்கு யாரையாச்சும் அமர்த்திக்கலாமே அதுக்குத்தான். எக்ஸ்பீரியண்ஸ் கூடக் கூட சம்பளம் கூடக் குடுக்கனுமே! எனக்கு வாயில கெட்ட வார்த்தை வருது.

ஆனா இப்ப வரைக்கும் அந்த வேக்கன்சிக்கு ஆள் போடவே இல்ல. அப்ப அந்த வேலையையும் யார் பாக்கறதுன்னு கேக்குறீங்களா? அதுக்குத் தான் இருக்கோமே ரெண்டு இளிச்ச வாயிகள்- நானும் காமாச்சி அம்மாவும்.

இன்னும் அவ கத முடியல…

அவ போன ரெண்டாவது நாள் அவங்க அப்பா செத்துப் போயிட்டாருன்னு தகவல் வந்தது.

அவளுக்கு கல்தா கொடுத்த அடுத்த நாள் சாயங்காலம் அவ அப்பா காலேஜீக்கு வந்து தகராறு பண்ணிருக்கார் போல. செக்யூரிட்டி அவரை விரட்டி விட்டிருக்காங்க. நல்ல போதை வேற. பெரியார் பஸ் ஸ்டாண்ட் டர்னிங்லே வேகமா வந்த பஸ் அவர் மேலே மோதிருச்சு. மார்ச்சுவரி வாசல்ல அவளக் கடைசியாப் பாத்தது. தலைவிரி கோலமா அவ நின்னது இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு. பாவம் அம்மா இல்லாத பொண்ணு.

எவ்ளோ வேலை இருந்தாலும் பதட்டமே இல்லாம எல்லாத்தையும் சீக்கிரமா முடிச்சிருவா. இந்த வருஷ அட்மிஷன் வேலையெல்லாம் அவ இல்லாம எப்டி முடிக்கப் போறேனோ நெனச்சாலே மலைப்பா இருக்கு.

இதுல பிரின்சிபால் முகுந்தன் சார் வேற ரிட்டயர்ட் ஆகப் போறதா பேசிக்கிறாங்க. எக்ஸாம் செக்சன்லே வேலை பாக்குற மாலா கூடச் சொன்னா. எங்களுக்கெல்லாம் இந்தக் காலேஜ்லே ஒரே ஆறுதல் அவர் மட்டுந்தான். ராதாவப் பத்தி யோசிக்கிறப்போ முகுந்தன் சார் ஞாபகம் வராம இருக்காது. அவளுக்காக எவ்ளோ போராடினார்? அதுக்குள்ள தான் அவ அப்பா செத்துப் போயி அவ திருச்சி போயிட்டாளே.

"ஏண்டீ டீயக் குடிக்கச் சொன்னா ரொம்ப நேரமா டீயையே உத்துப் பாத்திண்டிருக்கே?"

"இல்ல மேடம் ராதாவப் பத்தி யோசிக்கிறேன்"

"ஹீம்…. ஆறு மாசம் ஆச்சா அவ போயி?"

"போன வருசம் அட்மிஷன் முடிச்ச கையோட அனுப்புனாங்க. சரியா ஒரு வருசமாச்சு"

"என்னமோம்மா. எனக்கு இன்னும் ரெண்டு வருஷம். அது வரைக்கும் தாக்குப் பிடிச்சுட்டா ஏதோ ரெண்டாயிரமாவது பென்ஷன் வரும்"

"அது சரி"

மாலா போன் பண்றாளே!

"என்ன மாலா? நான் எங்க ஆபீஸ்லே இருக்கேன்"

"………."

"ஏய் அழறியா?

"என் பையனை இந்தக் காலேஜிலே சேத்தது குத்தமாம். எக்ஸாம் செக்சன்லே வேலை பாக்குறவங்க குழந்தைங்களுக்கு இங்கே சீட் கிடையாதாம். என்னை வர்ற முப்பதோட ரிலீவ் ஆகச் சொல்லிட்டாங்கக்கா"

காமாச்சி அம்மா: "என்னவாம் மாலதிக்கு?"

நான் சொல்ல ஆரம்பிக்கிறேன்..

- ஹரி

Pin It