என்னால் அடங்கி இருக்க முடியவில்லை... கையில் கிடைத்த சாவி என்னை திறந்து கொண்டே இருந்தது.... நானும் என் வீட்டு கதவு பூட்டுக்கு பொருத்திப் பார்த்தேன்... திறக்க முடியவில்லை.. பின், வீட்டுக்குள் இருந்த உள் அறைக்கான பூட்டில் பொருத்திப் பார்த்தேன்.. .ம்ஹும்.. சரியாக மாட்டிக் கொள்ள வில்லை...

door lock"அப்படி என்றால் இந்த சாவி யாருடையது....? எதற்கு என் கையில் கிடைத்திருக்கிறது...! என்னால் தூங்க முடியவில்லை.. இரவுகளின் கும்மாளம் நிறமற்றுக் கிடந்த கருவிழிக்குள் கருமை அடித்தது போலவே நினைத்துக் கொண்ட நான்...மெல்ல வெளியே .கிளம்பினேன். சாவி இருக்கிறதென்றால்.. கண்டிப்பாக பூட்டும் இருக்கும். இல்லாமல் போவது போல ஒரு பிரமை இப்போது இருந்தாலும்.. இல்லாமல் போகாது பூட்டு.. மாயப் பூட்டுகளுக்கு கூட மாய சாவிகள் உண்டு என்பதில் திண்ணமாய் ஒரு முறை சாவியை எடுத்துப் பார்த்துக் கொண்டேன்.... மாயங்களின் சாவியோ என்று மனம் மயங்கியது... ஒருவேளை இதில் திறக்கும் பூட்டுக்கு பின் ஒரு பூதம் கூட இருக்கலாம்.. தேய்க்க தேய்க்க தங்க மழையாக கொட்டலாம்... பணம் புரளும் ஆற்றைக் கூட நான் திறக்க போகும் பூட்டு தரலாம்.. என்று கற்பனையின் திறவுகோலை திறந்து கொண்டே நடந்தேன்...

அடுத்த வீதியில் ஒரு கதவு பூட்டப் பட்டிருக்க..... மெல்ல அருகில் சென்றேன்.. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றேன்..... நிலா மட்டுமே சாட்சி... அதைக் கூட பூட்டிதான் வைத்திருக்கிறார்கள் போல என்பது போல ஒரு புன்னகையோடு அருகில் சென்று திறக்கத் தொடங்கினேன்...

கரக்... சடக்.. என்று சத்தம் வந்ததே தவிர பூட்டு திறந்தபாடில்லை... எனக்கு நெற்றியில் கோடாய் வியர்வை சூடாய் வழிந்தது......வேகமாய் எழுந்து கொண்டேன்..... "இந்த பூட்டுக்கு பின் வெறும் வீடுதான்.."- என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே மீண்டும் நடக்கத் தொடங்கினேன்... அடுத்த வீதியில் ஒரு கதவு வெறுமனே சாத்தி இருந்தது...

ஆர்வம் உந்தித் தள்ள... மெல்ல கதவைத் தொட்டேன்.. அது தானாக திறந்து கொண்டது ஒரு பேய் வீட்டுக் கதவு போல....

'திக்'- என்று உணர்ந்து சுதாரித்துக் கொண்ட நான் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தேன்... அது வரண்டாவாக நீண்டு கிடக்க.. மெல்ல, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே உள் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.... இடது பக்கம் வலது பக்கம் என்று அறைகள் பூட்டிக் கிடந்தன.. எல்லா கதவுகளிலும் வித விதமான பூட்டுக்கள் தொங்க,... எனக்கு மனம் வலுத்தது......

'சரிதான்..... காரணம் இல்லாமல் இந்த சாவி நம் கையில் எப்படி இருக்கும்..?... இவைகளில் ஒரு பூட்டுக்கு இந்த சாவி சொந்தம்.. திறந்த பின் கண்டிப்பாக அதியசம் ஏதோ நடக்க போகிறது......"- என்று என் மூளை யோசிக்க யோசிக்க கை வேலை செய்தது....

இது நான்காவது பூட்டு.. ம்ஹும்.... திறக்க வில்லை.. அடுத்து.................. அடுத்து...................அடுத்து............ என்று என் உடல் தொப்பலாக நனைந்து விட்டது.. பயம் இருந்தும் பரவசம் மேலோங்கிக் கொண்டே போக.... இதோ.... இதோ ......இந்த பூட்டு திறக்க போகிறது....... அதோ.... அதோ அந்த பூட்டு திறக்க போகிறது என்று மனம் ஊசலாடிக் கொண்டே இருந்ததில் தவிப்பும் பயமும் மாறி மாறி மனதை நிறைத்தன...

சோர்வு மட்டுமே மிச்சம்.. வெளியே வந்தேன்...மனம் ஒரு முறை திரும்ப சொன்னது... மெல்ல திரும்பினேன்...

திக் திக் திக்.. மனதுக்குள் சம்மட்டிக் கொண்டு அடித்தது போல.. இருந்தது.. நான் கடைசியா திறந்து கொண்டு வெளியே வந்த கதவு, அதாவது.. முன்பு உள்ளே செல்லும் போது பூட்டாமலே இருந்த கதவு..... இப்போது பூட்டிக் கிடந்தது....நான் அனிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தேன்... மனம் மாயைக்குள் சுழன்றது... இல்லை, நன்றாக ஞாபகம் இருக்கிறது.... முன்பு உள்ளே போகும் போது இந்தக் கதவில் பூட்டு இல்லை..பூட்டியிருக்கவும் இல்லை... பின் எப்படி இப்போது.....?..... நான் மெல்ல பயத்துக்குள் போனேன்... திரும்பி வீட்டை நோக்கி வந்து விடத் தோன்றியது ... சரி.. இந்தப் பூட்டையும் திறந்து பார்த்து விடலாமா என்றும் தோன்றியது.. மெல்ல பூட்டின் அருகே சென்றேன்... மனதுக்குள் பயம்.... தவணை முறையில் அதிகரித்துக் கொண்டேயிருக்க.... சட்டென திரும்பி வீடு நோக்கி ஓடி வந்தேன்...

அந்த பூட்டிய கதவுக்குள் பணக் கட்டுகள் பறந்து கொண்டிருந்தன... இதே போல ஒரு கதாபாத்திரம் நாளை இந்த சாவிக்கு தகுந்தாற் போல ஒரு பூட்டைத் தூக்கிக் கொண்டு சுத்துவதாக இதே கதையாசிரியன் வேறு ஒரு கதை கூட எழுதலாம்.. இன்றோ.... நாளையோ....

- கவிஜி

Pin It