man poor 413

இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. மாடசாமி குடிசையின் முன்புறம் இருக்கும் இரண்டடித் திண்ணையில், முழங்கால்களை வயிற்றோடு சேர்த்து மடித்து, தன் இருகைளாலும் இறுகக் கட்டிகொண்டு, குடிசையின் கூரையில் துருத்திக்கொண்டிருக்கும் காய்ந்து போன தென்னங்குச்சியில் மழைத் துளிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு கீழே இறங்குவதை ஒரு குழந்தையின் துள்ளளோடு ரசித்துக்கொண்டிருந்தான். அவன் வேலைக்குப் போய் இன்றோடு மூன்றாவது நாள். இப்படி இவன் திண்ணையில் உட்கார்ந்திருந்த விதம் குளிருக்கு இதமாக இருக்கிறதோ என்னவோ, மாடசாமிக்கு பசி கொஞ்சம் அடங்கியதைப் போலிருந்தது.

நாளை குழந்தையைக் கூட்டிக்கொண்டு செல்லம்மா கிராமத்தில் இருந்து முதல் வண்டிக்கு வந்து விடுவாள். இடுப்பில் சொறுகி வைத்திருக்கும் தன் கடைசி பீடியை ஆழ்ந்து ஒரு முறை முகர்ந்து அதைப் பற்ற வைக்கும் மனப் போராட்டத்தில் இறுதியாக வெற்றி பெற்று மீண்டும் இடுப்பிலேயே சொறுகிக் கொண்டான். மழையும் செல்லம்மாளைப் போல சில சமயம் சிணுங்கிக்கொண்டும், சில சமயம் தன் மூன்று வயதுக் குழந்தை பசிக்கு அழுவது போல வீரிட்டு பேரிறைச்சலோடும் பெய்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு சேகரித்த பேப்பர் குப்பைகள் அடங்கிய கிழிந்த பிளாஸ்டிக் சாக்கு மூட்டை முழுவதுமாக நனைந்திருந்தது. குறைந்தது ஒரு நாள் முழுவதும் நல்ல வெய்யிலில் காய்ந்தால்தான் கடைக்கு போட முடியும். அதற்கும் இப்போது வழி இல்லை என்றாயிற்று. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு நான்கு சாக்கு மூட்டைகள் நிறைய பேப்பர், பிளாஸ்டிக், பாட்டில்கள் தாராளமாகக் கிடைக்கும். இப்போதெல்லாம் குப்பை சேகரிக்கும் பஞ்சாயத்து வண்டி ஆட்களுக்கு அது தனி வருமானமாகப் போக மாடசாமியின் வருமானம் கணிசமாகக் குறைந்து போனது.

தீபாவளி பண்டிகை நாட்களில் கிடைக்கும் இனிப்பு அட்டை டப்பாக்களுக்கு கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கும். தெரு முனையில் இருக்கும் டாஸ்மாக்கில் வண்டி நிறைய பாட்டில் மூட்டைகளை ஏற்றுவதை பார்த்து பல நாட்கள் தனக்குள் ஏங்கியிருக்கிறான். மற்றபடி பொங்கல் நாட்களில் வண்டியில் வருபவர்களிடம் எல்லாவற்றையும் போட்டு விட்டு அதற்கு ஈடாக தெரு வாசிகள் வெங்காயம், சக்கரை வள்ளிக் கிழங்கை வாங்கி விடுவதால், மாடசாமிக்கு பொங்கல் மீதே ஒரு இனம் காணமுடியாத வெறுப்பு இருந்தது.

லேசான தூரலுடன் மேகங்களும் மெல்லக் கலைந்து சூரியனின் கிரணங்கள் எட்டிப் பார்க்க எங்கோ காக்கைக்கும், நரிக்கும் திருமணம் நடந்தேறியிருக்க வேண்டும் என்று தனக்குத்தானே மாடசாமி சிரித்துக் கொண்டான். காக்கை பாட்டியிடமிருந்து திருடிய வடையை நரி தந்திரமாகக் கையகப் படுத்திய பிறகுதான் , அவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்க வேண்டும். என்றும், இது போன்ற ஒரு தருணத்திற்காகத்தான் காதல் ஜோடிகள் காத்திருந்தாக வேண்டிய நிர்பந்தத்தை அவர்களின் பெற்றோர்கள்தான் ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான். காதலித்து செல்லம்மாவை கைபிடிப்பதற்குள் ஏற்பட்ட ஏராளமான தடைகள் அவன் மனக்கண்ணில் ஒரு நிழற் படம் போல ஓடியது.

கால்களை இறுகக் கட்டிய கைகள் தளர்ந்து பிடி அவிழ அடிவயிற்றை புரட்டிக்கொண்டு வலித்தது. குவளையில் சொட்டு சொட்டாக நிரம்பிய மழை நீரை குடித்தால் தேவலாம் என்று நினைத்தான். செல்லம்மாவும் பொடியனும் இல்லாத வீடு அவனுக்கு நரகமாகத் தெரிந்தது. எல்லப்பனிடம் முன் பணமாக கொஞ்சம் கேட்டுப்பார்க்க தீர்மானித்தான். போன பொங்கலுக்கு வாங்கிய ஆயிரத்துக்கே ஒரு வருஷமா பல தவணைகளில் கடனை அடைத்து வயிற்றையும் கழுவுவதற்கு அவன் பட்ட பாடு பெரும் பூதமாக கண் முன் மிரட்டியது.

விடிந்ததும் கடை வாசலில் எல்லப்பனுக்காகக் காத்திருந்தான். திறந்த வெளியில் இருக்கும் சாக்கு மூட்டைகளை எண்ணிக்கொண்டே பொழுதைப் போக்கினான். எல்லா சாக்கு மூட்டைகளிலும் குப்பைகள் பொங்கி வழிந்ததைப் பார்க்க தன்னை அந்தக் கடை முதலாளியாக நினைத்துக் கொண்டான். உடனே அவனுக்கு செல்லம்மாதான் ஞாபகத்திற்கு வந்தாள். சாக்கு மூட்டைகளில் இருந்து சிதறி கீழே விழுந்த குப்பைகளைப் பார்த்தவுடன் செல்லம்மா வழக்கம் போல மாடசாமியை திட்டித்தீர்த்துக் கொண்டே எடுத்து வைத்தாள். “லாரிக்காரன் வந்தா தெக்கு பக்கம் கிடக்கிற இருபது மூட்டையை எடுத்துக்கச் சொல்லு. லாரிக்காரன் பணம் கொடுத்தா பத்திரமா வாங்கி வை. இன்னிக்கி ராத்திரிக்கு சமைக்காதே. ஜெய விலாஸ் மெஸ்ஸில் இருந்து பிரியாணி வாங்கிக்கிலாம். நான் ஒரு நடை வூட்டுக்கு போயிட்டு வந்துடறேன்.” என்று செல்லம்மாவிடம் கட்டளைகள் இட்டுக்கொண்டே கல்லாப் பெட்டியைத் திறந்தான்.

“என்னா மாடா, வெள்ளென கடைக்கு வந்துட்டே. மூனு நாள் மழைக்கு ஒட்டுக்க ஊரிப்போச்சு. லாரிக்காரன் நேத்தே திரும்பிப் போயிட்டான். ஒரு நாள் காஞ்சா கூட போதும். கொஞ்சம் கூட மாட வந்து கிளறிப் போடுடா” என்று உரிமையுடன் கேட்க மாட சாமியின் பெருங்கனவு நொடியில் கலைந்து போனது.

முன்பணம் எவ்வளவு வாங்கலாம் என்ற யோசனையில், வழக்கம் போல குப்பைகளைக் கிளறிக் காய வைத்துக் கொண்டிருந்தான் மாடசாமி. “இப்போதான் இருபது வட்டிக்கு ஐயாயிரம் வாங்கிட்டு வந்தேன்.பழைய கடன், வீட்டுச் செலவு, மத்த செலவு போக இந்த இலுபது ரூபாதான் மிச்சம்” என்று தனக்குத்தானே புலம்பிக்கொண்டு தன் பையிலிருந்து நனைந்த இருபது ரூபாயை வெய்யிலில் தேவைக்கு மீறிய அக்கரையுடன் காயவைத்தான் எல்லப்பன்.

- பிரேம பிரபா

Pin It