violence

எதைச் செய்கிறோம் என்று தெரியாதவர்களை மன்னிக்கலாம்... எதைச் செய்கிறோம் என்று திட்டமிட்டு, தெளிவாகச் செய்தவர்களை எப்படி மன்னிக்க?!!!!

மறந்து விட்ட வழிகளில் மயக்க கலக்கத்தில், வட்டமடித்துக் கொண்டே இருந்தது, வானம் மறந்த கழுகொன்று....நின்று நிதானிக்க, உண்டு இளைப்பாற நினைக்காத நினைவு தப்பிய நிழல் நொடியில், வாய் கவ்விய சிறுமியின் விரல் ஒன்றை, விலா எலும்பு நோக எட்டிப் பிடிக்க முடியாமல், தவற விட்டது. புவியீர்ப்பின் இயலாமை, விழுந்த விரலை மெதுவாக, மிக மெதுவாக தரையிறக்கி, சொத்தென்று விழ வைத்த இடத்தில், புவியீர்ப்பை குறைத்த சக்திகளாய், மலை அளவு, கொத்து கொத்தாய், குன்றுகளின் திடீர் முளைத்தலாய் பிணங்களின் சங்கமம், பூமியை புதைத்துக் கொண்டிருந்தன....

கழுகின் வட்டமடிப்பு, தீரவேயில்லை...... அதன் கண்களில், காக்கைகளும், கழுகுகளும், பறவைகளும், குருவிகளும் கூட பிணங்களாய் காட்சி அளித்தன என்பதான பயங்களின் வலியில் சிறகுகள் தன்னை, மறக்கத் தொடங்கின.....மாலை மயக்கங்களில் தீராத கோபங்கள், ஈக்களாய் மொய்ப்பது போலொரு உறுமலில், மௌனித்துக் கிடந்தது, கண்ணுக்கெட்டிய தூரங்களின் பூமி....மரம் செடி கொடிகள் அற்ற மொட்டை தேசத்தில் திகிலடித்து வெயிலடித்து முடிந்து கொண்டிருப்பதாக, மயான சப்தங்கள் கசிந்து கொண்டிருந்தன....

பறக்க மறந்த கடைசி கழுகும், சற்று முன்னால் கனமாக விழுந்து சிதறியதில், எதன் மீது பட்டு தெறித்த எதுவோ, சொத்தென, நாள் கடந்த குருதியின் நிறத்தை அவன் முகத்தில் தெரித்தது.....துடைக்க மறந்தவன், குருதியற்ற தேகத்தில், வெளுத்துக் கிடந்த பாதங்களை, பிணங்களின் தோய்த்தபடியெ, நடுநடுங்கி, பைத்தியமான மனநிலையை, விழிகளாக்கி, உருட்டி திரட்டி, கண்ணீர் சுரப்பிகளை வாயில் கவ்விக் கொண்டு ஓடி வருவதாக வந்து கொண்டே காதை மூடிக் கொண்டான்....

"கத்தாதீங்க.... கத்தாதீங்கடா........ என்ன விட்ருங்க..... என்னால முடியல......." என்றபடியே பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடியே வந்து கொண்டிருந்தான்......"நானாடா...... மூணாவது உலகப் போர் பண்ணுங்கன்னு சொன்னேன்...... நீங்களா ஆரம்பிச்சு, நீங்களா முடிஞ்சுகிட்டீங்க........ பாவிகளா... மரணம் கூட மிச்சமில்லடா...... எனக்கு சாகவும் பயமா இருக்கே... யாராவது உயிரோட இருக்கீங்களா....." என்று கத்திக் கொண்டே, அவ்வப்போது வாந்தி எடுத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான்.....புழுதிகளினூடே, அவன் பின்னால் ஏதோ துரத்தல், அவனை நிலை குலைய செய்து கொண்டேயிருக்க, திரும்பி திரும்பி, " நாய்களா.. என் பின்னால் வராதீங்கடா... ஐயோ....." எனக் கத்திக் கொண்டே குலுங்கி குலுங்கி அழுது கொண்டே தொடர்ந்தான்....கால் வைக்கும் இடமெல்லாம் பிணங்களின் கூட்டு விதி கூடிக் கூடி சதி செய்வதாக அவனின் மனக் கண் அறுந்து வழிய, நிஜமான சுடுகாட்டை இப்போது தொட்டிருந்தான்.....

இரவின் பிடியில் நாடே சுடுகாடாய் பியிந்து தொங்க, சுடுகாடு மட்டும் இயற்கையிடம் தஞ்சமடைந்த அமைதிப் பூங்காவாய், அழகியலோடு உறங்கிக் கிடந்தது....நடந்தவன், கடந்தவன், கல்லறைகளின் இடையே ஒளிய முற்பட, சட்டென ஒரு கல்லறைக்குள்ளிருந்து ஒருவன் வெளிப்பட்டான். வெளிறிய முகத்தில், வெள்ளையான தேகம் சுமந்து, இடுங்கிய கண்களில், எங்கோ உற்று நோக்க, அடுத்தடுத்த கல்லறைகளில் இருந்து இன்னும் நான்கு பேர் வெளியே வந்தார்கள். அவர்களும் வெளுத்தே நின்றார்கள்....வாயில் பிணம் ஒழுக, காதுக்குள் ரீங்காரமிடும் ஈக்களின் இரைச்சலுக்கு தலையாட்டிக் கொண்டே, "என்னைக் காப்பாத்துங்க........ அவனுங்க, என்னை விரட்டரானுங்க...... அடங்காத ஆத்மாக்களா என்னை தொந்தரவு பண்றாங்க....... காப்பாத்துங்க........" என்று கதறியபடியே கல்லறைகளிடம் தஞ்சம் அடைய, அந்த ஐந்து பெரும், பற்கள் தெரிய, ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டார்கள். சற்று, எட்டி பின்னால், வந்த வழியை பார்க்க, அங்கே யாருமற்ற பிணங்களின் பாதை ஒன்று, சதைகளால் நிரம்பிக் கிடப்பதை மட்டுமே காண முடிந்தது...

நடுங்கிக் கொண்டிருந்த அவன், அவனாகவே தன்னை அமைதியாகி ஆசுவாசப் படுத்திக் கொண்டான்...."யாரு, என்ன, எந்த ஊரு" என்று கேள்விகளே இல்லாத உரையாடலில் மறுமுனை புன்னகைக்க முடிந்தது அவனுக்கு....

"மூன்றாம் உலகப் போருக்கான அவசியம் என்ன?..... ஏன் ஒருத்தனை ஒருத்தன் கொல்லனும்.... இனி இந்த பூமி, தழைக்கும்னு நான் நம்பல .... எப்படி, இனி புல் பூண்டும், ஞாயிறும் முளைக்கும்.....? எந்த மண்ணுலயும், இனி பொணம் மட்டுந்தான் விளையும்....எல்லாத் தண்ணிலயும் ரத்தந்தான் ஓடும்.... எத்தன அமைதியான பூமி நமக்கு கிடைச்சது...... சுடுகாடா மாத்திட்டோமே...!!!!!." -

அவன் உளற உளற, அவர்கள் மௌனமாய் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள் எங்கோ........

" அயோ....மீனுக்குட்டி.... ஏன் என்கூட பேச மாட்டேன்ங்கற .. ஏன் திடீர்னு, யார்கிட்டயோ பழகற மாதிரி பழகற.......என்னை ஏன் புதுசா பாக்கற மாதிரி பாக்கற...? எனக்கு மன்னிப்பே கிடையாதா?.... நான் என்ன பண்ணினேன்....? மிலிட்டரிக்காரனா இருந்தது என் தப்பா?

காற்றோடு கலந்த வார்த்தைகள், ஏதோ ஒரு அலைவரிசையாய் பயணிப்பதை, ஆறு பெரும் கவனம் கடந்து கேட்டார்கள்.... அவர்களுக்கு முன்னால் யாரோ நடப்பது போல் ஓர் அசைவின் வெற்றிடம், கணங்களை அசைத்ததில் அச்சம் படர, அதிர்வு தொடர, மீண்டும் நடுங்க ஆரம்பித்தான் அவன்..... ஐவரும், சட்டென கல்லறைக்குள் காணாமல் போனார்கள்....

பைத்தியம் பிடிப்பதை நன்கு உணர முடிந்தது. மனப் பிறழ்வின் அடுத்தடுத்த கட்டங்களை உள் வாங்கி சிரிக்க, அவனால் முடிந்தது.....ஐவரும் மெல்ல வெளியே வந்தார்கள்.... அவரவர் கல்லறை மீது அமர்ந்து கொண்டார்கள்..... இரவின் நகங்கள், கீறி கீறி வானத்தில் வெள்ளி முளைப்பதாக அவர்களின் ஒற்றைச் சிந்தனை பார்வைகளானது....வெறித்த பார்வையில், ஒரு ராக்கெட் தீ பிடித்து செல்வதாக கண்கள் மூடிக் கொண்டார்கள்.... கவனம் கலைவதில்லை என்பதாக நிலைகுத்திய பார்வையில், அவன் கதறுவதும், புலம்புவதும் ஒன்றுமில்லை என்பதாக நீண்டது சிந்தனை.....

அவன், மார்பில் தன்னைத் தானே அடித்துக் கொண்டான். இனி இந்த மனித ஜென்மம் மீண்டும் எப்படி முளைக்கும்? எந்த மண் கொண்டு எப்படி உயிர் கொடுப்பது? இன்னும் கோடி யுகம் நீந்தும் உயிரணு, உருவம் பெறுவது சாத்தியமா? காதல், காமம், கருணை, கோபம், அன்பு, ஆத்திரம், முயற்சி, செயல், நாகரீகம், பண்பாடு, இன்னும் இன்னும் செய்தலுக்குரிய எதுவும் ஒரு கருப் பொருளாய் உடைந்து, உறைந்து, ஒன்றுமில்லாத பிணமாய் மாறி விட்டதில், இனி வெற்றுக் கிரகமாய், பால்வீதியில் முகமற்று சுற்றும் காற்றடைத்த பந்தாய், யாரின் தொண்டைக் குழிக்குள் யாருக்கு நினைவு படுத்தும்?

ஏதோ ஒரு வகை கடுங்குளிர், போர்வையாய், நிழல் போல மிதந்து வர, மீண்டும் அந்த ஐவரும் ஓடிச் சென்று அவரவர் கல்லறைக்குள் ஒளிந்து கொள்ள, நடு நடுங்கி, உயிர் விறைத்து, பற்கள் உடைபட, கண்கள் கழன்று பூமியில் மிதக்க, வந்து போன குளிராய், பனிக்கட்டியாய் மாறியிருந்தான் அவன்.....

"மீனுக்குட்டி, உனக்கு ஏன் என்னைப் புரியல,...... நீ நினைக்கற மாதிரி, நான் கொலைகாரன் இல்ல,...... உன்னால என்னைக் கொல்ல மட்டும் தான் முடியும்....என்னால மட்டும் தான் மீனுக்குட்டி... உனக்காக சாகவும் முடியும்....." -உறைந்திருந்தவனின் காதுகள் உடைந்து விழுந்தன....காற்றோடு மீனுக்குட்டியும், மிலிட்டரிக்காரனும் கடந்து கொண்டிருப்பதை இனி கேட்க முடியாத வருத்தத்தில், அவன், இன்னும் இன்னும் வேகமாய் அழுதான்.... ஐவரும், வெளிறிய முகத்தில், கல்லறைக்குள் கிடந்த எலும்புக் கூடுகளை கடித்துத் தின்றபடியே, ஒடுங்கி அமர்ந்து கண் அயர்ந்தார்கள். பூமி சுற்றுவதை உணர்ந்த நொடியில் ஒருவன் வாந்தி எடுக்கத் தொடங்கினான்...

வெளியே நின்றிருந்த அவனைக் கடந்த ஒரு அலைவரிசையில், ஒரு கூட்டம், " டே.... கடவுள் இங்க இருக்கான்டா.... உன்னைத் தேடித் தாண்டா அலையறோம்....." என்று அவனை நெருங்க, அவன் கல்லறைக் கதவைத் தட்டி, கெஞ்சத் தொடங்கினான்..........ஐவரின் மிச்ச நேரம், பால்வீதிக்குள் இரவாக தன்னை தீர்மானித்துக் கொண்டு, சீக்கிரம் மரணித்து விட வேண்டுகிற, கைகூப்பலுடன், பைத்தியம் பிடித்த தலையை, சுவற்றில் முட்டிக் கொண்டே ஆனந்தம் கண்டார்கள்....மீண்டும் ஓடத் துவங்கும் கடவுள் என்பவன், தீராப் பலியை, பாவங்களாய் சுமந்து, ஓடத் துவங்கினான்....... வெற்றுக் கிரகத்தின் வாசல் தெரியும் வரை அவன் ஓடியே தீர வேண்டும் என்பதே, அவனுக்கு அவனே கொடுத்துக் கொண்ட சம்பளம்... என்று அசை போட்ட ஆன்மாவை கொஞ்சம் கொஞ்சமாய் உருவத் தொடங்கியிருந்தான், பிணங்களின் பாதங்களில் படும் சுவடுகளாய் நிலை மாறி .....

அவ்வப்போது, அலைவரிசையில் இல்லாமல் போன பெருமூச்சுகள், இடம் என்பதன் அர்த்தம் தேடி அலைவதை, அவன் கண்கள் கேட்பதாக ஒரு யுகங்களின் பயம் ஒரு ஆப்பிள் விதையை அவனுள் தூவுவதாக....

சொட்டிக் கொண்டிருக்கும், ஏதாவது ஒரு மீனுக்குட்டியின் குருதியில் வலி, நிழலாய் நீந்திக் கொண்டிருந்தது..... உலகமே ஆத்மாக்களை சுமந்து திரிய, ஒன்றுமில்லாமல் போன கடவுள் ஒருவனை, தேடித் திரியும் பெருமூச்சுக்களோடு, மீந்த ஐந்து உயிர்கள் இனி தழைக்க வேண்டுமா, பிழைக்க வேண்டுமா.... தழைக்கவும் பிழைக்கவும் வேண்டுமா? என்பதன் கேள்வியையும், பதிலையும், கழுகு தவறவிட்ட சிறுமியின் விரலில் பதியப் படுவதாக என் கற்பனை நிற்கிறது......

இனி மூன்றாம் உலகப் போர் முடிவு செய்யும் எதையும்.....?!!!!!

- கவிஜி

Pin It