கதவு முக்கால்வாசி இறங்கியிருந்த ஜன்னல் வழியாக நான் பார்த்தபோது அந்த மனிதக்கால்கள் இரண்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. ஆடாமல் அசையாமல். ஒன்று இடது, இன்னொன்று வலது. பார்த்த அதிர்ச்சியில் கையிலிருந்த‌ மதனின் 'மனிதர்களும் மர்மங்களும்' புத்தகம் நழுவி விழுந்ததைக் கூட கவனிக்க எனக்கு தோன்றவில்லை.

man face 400அந்த வீட்டு சொந்தக்காரனின் ரசனையில் இடி விழ. வீட்டை சுற்றிலும் இப்படியா இரண்டு அடி அகலத்துக்கு முள் கம்பி வலையிட்டு செடிகள் வளர்த்து வைப்பது? கிட்டத்தில் போய் தெளிவாக பார்க்கக் கூட முடியவில்லை.. ஒருவாறாக இமைகளைச் சுருக்கி, விரித்து, உருட்டி, ஓரத்தில் வைத்து என எப்படிப் பார்த்தாலும் மனிதக்கால்களே தான்...அவசர அவசரமாக நான் வாசலுக்கு ஓடினேன். பூட்டியிருந்தது.

தாழ்ப்பாளை வேகமாக பிடித்து இழுத்துப் பார்க்கலாம் அல்லது கதவின் மீது மோதி உடைக்கலாம். நானோ வழிப்போக்கன். உள்ளே தொங்கும் ஆசாமி ஒரு வேளை கொலை செய்யப்பட்டிருந்தால், தாழ்ப்பாள் மட்டும் கதவின் மீது என் விரல் ரேகைகள் என்னையே கொலைகாரன் ஆக்கிவிடலாம் என்கிற லாஜிக் சட்டென என் மூளைக்குள் உதித்து பின் வாங்கினேன்.

வீட்டை சுற்றி வந்தேன். இரண்டாயிரம் சதுர அடியாவது இருக்கும். பின் பக்கத்திலெல்லாம் கதவுகள் இல்லை. அரசாங்கத்தின் பொதுப்பணித்துறையில் என்ன காரியம் செய்கிறார்கள்? இத்தனை பெரிய வீட்டிற்கு பக்கவாட்டிலோ, கொல்லையிலோ கூட ஒரு கதவு இல்லை. "முதல்காரியமாக பொதுப்பணித்துறைக்கு...." என்று ஏதோ தோன்றி, நிலைமையின் தீவிரம் உணர்ந்து, தோன்றியதை கைவிட்டு, இப்போதைக்கு உதவிக்கு யாரையேனும் அழைக்கலாம் என்று சுற்றிலும் பார்த்தேன். யாருமே இல்லை. அடுத்த வீட்டினரை உதவிக்கு கூப்பிடலாமென்றால் ரயில்வே குவார்ட்டர்ஸ் அது. தனித்தனியாக இடம் விட்டு வீடுகள். ஐம்பதடியாவது நடக்க வேண்டும். நடப்பது நேர விரயம் என்று ஓடினேன்.

மே மாதம் வேறு!!. ஆண்டு விடுமுறைகளில் சொந்தங்களை பார்க்க ஊர்ப்பயணம் போகும் மாதம். அங்கும் யாரும் இல்லை. அரசாங்க குடியிருப்புகளே இப்படித்தான். 24 வயதுக்கெல்லாம் அரசாங்க உத்தியோகத்தில் உட்கார்ந்தால் 27ல் திருமணம். இந்த மாதிரி மத்தியரக குடியிருப்புகளில் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் வயதில் இருப்பதால் பெரும்பாலும் மே மாதங்கள் குடியிருப்புகள் எல்லாம் லீவு விட்ட கணக்கு தான்.

அடுத்த வீடு, அதையும் தாண்டி இன்னும் ஐம்பதடிக்கு மேல் இருந்தது. அங்கு போனால், இந்த 'தொங்குகிற' ஆசாமியை விட்டு நூறடி தாண்டி விடக்கூடும். அங்கும் யாரும் இல்லையெனில், என்ன செய்வது? எத்தனை வீடுகளுக்குத்தான் போவது?

சட்டென தோன்றியது. ஆஸ்பத்திரிக்கு போன் போட்டு, ஆம்புலன்ஸை வரவழைத்தால் என்ன? சூப்பர் ஐடியா.. 'ச்சே உனக்கு ஏன் இது முன்பே தோன்றவில்லை?' என்று என்னை நானே கடிந்துகொண்டே அதுதான் சரியென்று தோன்றி பாக்கேட்டில் கைவிட்டு மொபைலை எடுத்தேன்.

நோக்கியா லூமியா. டச் ஸ்க்ரீன். வீடியோ கேம் விளையாடியதில், அது ஏற்கனவே செத்திருந்தது.

மீண்டும் ஐம்பதடி ஓடி வந்து ஜன்னலூடாக பார்த்தேன். அதே கால்கள். அசைவில்லை.

யாராவது வருகிறார்களா பார்த்தேன். யாருமே இல்லை. மதிய நேரம் மணி மூன்று.

எவர் வருவார்? இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரும் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, அசந்து உறங்கும் நேரம். உண்ட மயக்கம் தொண்டனுக்கே உண்டு எனும்போது, கவர்மென்ட் சம்பளம் வாங்குபவர்களுக்கு என்ன?

ஏற்கனவே செத்திருப்பானா?

எனது ஆசான்கள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் , மதன், ஜெஃப்ரே டாமர் போன்றவர்களை படித்து தெரிந்து கொண்டது நினைவிருந்தது. செத்த உடல் பழுப்பு நிறமடையும். மீண்டும் பார்த்தேன். கால்கள் பழுப்படைய‌வில்லை. மேலும் கீழுமாக எக்கியும் தலை தாழ்த்தியும் பார்க்க முயற்சித்தேன். ம்ஹூம் மேலே ஜன்னல் கதவு மறைத்தது. பக்கவாட்டில் சுவர்கள் மறைத்தன. முள் கம்பி கிட்டத்தில் நெருங்கவே விடவில்லை.

அப்படியானால் நிச்சயம் சாகவில்லை. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கலாம். ஒவ்வொரு நொடியும் முக்கியம்!!

தலைதெறிக்க ஓடினேன். நூறு அடி ஓடியிருப்பேன். ஒருத்தர் விசிறியை வீசியடி, சாய்வு நாற்காலியில் சாய்ந்து, வியர்வை பூத்த தனது உடலை லேசான வெய்யிலில் வாட்டிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் மூச்சு வாங்கியபடியே விஷயத்தை சொன்னேன்.

சட்டென கையிலிருந்து விசிறியை அப்படியே வீசிவிட்டு, எழுந்து என்னுடன் ஒரு பத்தடி ஓடி வந்து, பின் எதையோ மறந்தவராய் மீண்டும் வீட்டுக்கு ஓடி, மொபைலை எடுத்துக்கொண்டு மீண்டும் என்னுடன் ஓடி வந்தார்.

'அந்தாளு நல்ல மனுஷன் சார்.. எல்லாருக்கும் உதவி பண்ணுவாரு.. அதுனாலயே நிறைய கடன் வாங்கியிருந்தாரு.. இப்படி பண்ணிக்குவாருன்னு நினைக்கலையே' வரும்போது சொல்லிக்கொண்டே வந்தார்.

ஜன்னல் பக்கம் வந்து நான் அவருக்கு காட்டினேன். அதிர்ச்சியில் உறைந்து பார்த்தார். எனக்கு மூச்சு வாங்கியது. உடனே தன்னுடைய மொபைலில் ஒரு எண்ணை தட்டி அழைத்துக்கொண்டே, 'ரெண்டு பேர் பத்தாது.. உதவிக்கு ஆள் கூட்டிட்டு வாரேன்' என்று சொல்லிக்கொண்டே அவரது வீடு நோக்கி ஓடத்துவங்கினார்.

அவர் போகையில் 'ஆங்.. ஹாஸ்பிடலா.. சார் ..சீக்கிரம் சார்.. டைம் இல்ல.. உசுரு போகுது இங்க' என்றபடியே போனது கேட்டது.

சற்றைக்கெல்லாம் ஒரு ஜீப்பும், ஆம்புலன்ஸும் வந்தது. ஒரு மருத்துவரும், போலீஸ்காரர் ஒருவரும் அவருடன் வெள்ளையில் சீருடை அணிந்த ஆண்கள் இருவரும் இறங்கினார்கள்.

நான் ஜன்னலைக் காட்டி, 'இங்க தான்' என்றேன்.

போலீஸ்காரர் என்னிடம் வந்தார். அங்கே கீழே கிடந்த அந்த 'மனிதனும் மர்மங்களும்' புத்தகத்தை எடுத்து, 'உங்களுதா?' என்றார். 'ஆம்' என்றேன் புத்தகத்தை வாங்கிக்கொண்டே.

'பாடியை அவங்க பாத்துக்குவாங்க... நீங்க எங்ககூட வந்து ஒரு ரிப்போர்ட் குடுத்திடுங்க.. இதுக்கெல்லாம் இப்போ இது ரொம்ப முக்கியம்' என்றுவிட்டு அந்த ஜீப்புக்கு அழைத்துப்போனார்.

நாங்கள் மருத்துவமனைக்கு வந்தோம்.

'நீங்க இங்க உக்காருங்க' என்று என்னை வரவேற்பறையில் அமரவைத்துவிட்டு போலீஸ்காரர் உள்ளே ஓடினார். மருத்துவமனை கொஞ்சம் பரபரப்பாக இருந்ததாகப்பட்டது. அந்த உயிர் காப்பாற்றப்படுமா? என்கிற கேள்வி என் மண்டைக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

காப்பாற்றப்பட்டுவிட்டால் எத்தனை சாகசமான அனுபவம்? அந்த ஆள் யாரென்று தெரியாது. இன்றைக்கு நான் பார்க்கவில்லை என்றால் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. யாரும் பார்த்திருக்கவில்லை என்றால் காப்பாற்ற முயற்சி கூட செய்யலாகாது போயிருக்கும். எப்போதும் நான் அந்த வழியில் செல்பவனல்ல. இன்றைக்கு ஏன் சென்றேன்? இதுதான் விதியா? என் மூலமாக அந்த ஆள் காப்பாற்றப்பட வேண்டும் என்று இருந்திருக்குமோ? எனக்கு பலவாறாக தோன்றியது.

அந்த போலீஸ்காரர் வந்தார்.

'என்னாச்சு?' என்றேன் பதட்டமாக.

'நல்ல காரியம் பண்ணீங்க. ஒரு அஞ்சு நிமிஷம் தாமதமா வந்திருந்தோம்ன உசிரு போயிருக்கும்.' என்றார்.

எனக்கு மண்டைக்குள் ஜில்லென்று இருந்தது.

'வாங்க.. ஒரு சின்ன ஃபார்மாலிட்டி.. அதை முடிச்சிட்டா நீங்க கிளம்பலாம்' என்றான். நான் நிம்மதியாக அவருடன் ஜீப்பில் ஏறினேன்.

வழியெங்கும்,

'ரொம்ப நல்ல விஷயம் பண்ணீங்க.. இந்த காலத்துல யார் இதெல்லாம் பண்றா? எனக்கென்னான்னு போறவங்க தான் அதிகம்.. உங்களை மாதிரி நாலு பேர் இருக்கிறதுனால தான் நாட்டுல‌ மழை பெய்யிது' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார்.

எனக்கு அந்த கால்கள் மட்டும் நினைவுக்கு வந்த வண்ணம் இருந்தது. முகத்தை ஒருமுறையாவது பார்த்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது. ஃபார்மாலிட்டி முடிந்ததும் போய் பார்க்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையிலேயே, ஜீப் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தது.

தபதபவென இரண்டு பேர் ஓடி வந்தார்கள். என்னை அலாக்காக தூக்கி இறுக்கமாக பிடித்துக்கொண்டு என் வாயைப் பொத்தினார்கள். நான் திமிறினேன்.

'ரொம்ப டேஞ்சரான பைத்தியமா இருக்கும் போலருக்கு. கண்டகண்ட பொஸ்தகத்தையும் படிச்சிட்டு நட்டு கழண்டு போன கேசு... யாருமில்லாத வீட்ல கொலை அதுஇதுன்னு என் தாலிய அறுக்குறான். சாவுகிராக்கி.. ' என்று அந்த போலீஸ்காரர் கத்துவது எனக்கு தெளிவாகக் கேட்டது.

- கெளதம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It