திருவிழாக் கோலத்தில் கள்ளப்புலியூரே களை கட்டியிருந்தது. மின்விளக்குக் கம்பங்கள் ஒவ்வொன்றிலும் புனல் கட்டப்பட்டு அதில் அம்மன் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஊர் நாட்டாமைகளும் பெருந்தலைகளும் இளைஞர்களும் கெரகம் சோடிப்பதற்காகக் கும்பிலேரிக் கரைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் குளித்துவிட்டு வீடுகளைத் துடைத்துக்கொண்டும் சாணம் போட்டு மெழுகிக் கொண்டுமிருக்க, இளம்பெண்கள் ஒன்றாகக் கூடி தெருவில் வண்ண வண்ண கோலங்களைப் போட்டுக் கொண்டிருந்தனர். பள்ளிக்குப் போகவேண்டிய பிள்ளைகள் எல்லோரும் திருவிழாவை முன்னிட்டுப் பள்ளிக்கு முழுக்குப் போட்டிருந்தனர். அவர்கள் கைகளில் பலூன்களையும் சிறு சிறு விளையாட்டுப் பொம்மைகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

poor boy 339அம்மனுக்கு விரதம் இருந்து வேண்டிக் கொண்டவர்கள் உடம்பெல்லாம் எலுமிச்சம் பழங்களைக் குத்திக் கொண்டிருக்க, ஒருபுறம் நாக்கிலும் தாடைகளிலும் வேல் குத்துவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இதற்காக அந்த நுணுக்கம் தெரிந்தவர்கள் வெளியூர்களிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்தனர். இந்த களேபரத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதைப் போன்ற அறிவிப்புடன் இருந்தது மணிவண்ணனின் வீடு. வாசற்படியில் கன்னத்தில் கையை வைத்தபடி உட்கார்ந்திருந்தாள் அவன் அம்மா அன்னக்கிளி. அன்னக்கிளியின் கணவன் வேலாயுதம் எங்கோ வேலைக்குப் போயிருந்தான். திருவிழா செலவுக்குப் பத்து பைசாகூட இல்லாமல் இருந்தது அந்த வீடு. அவள் நடவு நட்டுவிட்டு வந்ததற்கான பணத்தையும் திருவிழா கழித்துத் தருவதாகச் சொல்லிவிட்டார்கள் காளியம்மாவும், சந்திராவும். மணிவண்ணன் மட்டும் தெருவில் சக நண்பர்களோடு விளையாடிவிட்டுச் சற்று நேரத்திற்கு ஒருமுறை வீட்டை வந்து பார்த்துவிட்டுப் போனான். சூரியன் கிழக்கிலிருந்து உச்சிக்குப் போய் மேற்கில் இறங்கியதே தவிர அவன் வீட்டில் எந்த விந்தையும் நடைபெற்றுவிடவில்லை.

அன்னக்கிளியும் திருவிழாவை எண்ணிப் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. எல்லா நாளைப்போல இதுவும் ஒருநாள் என்றுதான் அவள் எண்ணிக் கொண்டாள். இருந்தாலும் தன் மூன்று பிள்ளைகளுக்காகவாவது அவர்களின் ஆசைக்காகவாவது வீட்டில் படையல் போட்டு வாய்க்கு ருசியாகச் சமைத்துப்போட்டு ரசிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாள்.

பொழுது விடிந்து கண்ணுக்கு இருட்டாக இருக்கும்போதே ஊர்த் தெருவில் இருக்கும் செட்டியார் கடைக்கு ஓடிய அன்னக்கிளி, பூஜை சாமான், காய்கறி, அரிசிக்குக் கடன் கேட்டுக் கையேந்தி நின்றாள். செட்டியார் பழைய பாக்கிப் பட்டியலைக் காட்டி, இதை முதலில் கொடு பிறகு கடன் கேளு என்று கறாராகச் சொல்லிவிட்டார். பக்கத்து அக்கத்து வீட்டிலெல்லாம் கைநீட்டிக் கடன் வாங்கியிருந்ததால் யாரிடமும் கைமாத்து கேட்பதற்கும் அவளுக்கு வழியில்லை. விளையாட்டில் கவனமாக இருந்த மணிவண்ணனுக்குப் பசி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவன் தம்பியும் தங்கையும் அன்னக்கிளியை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். வேலைக்குப் போயிருக்கும் வேலாயுதம் பணம் கொண்டு வருவான் என்ற நம்பிக்கை சிறிதளவுகூட அன்னக்கிளிக்கு இல்லை. அவன் கொண்டுவரவில்லை என்றாலும் குடிவெறியில் இந்தக் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும் என்று கடவுளை உள்ளுக்குள் வேண்டிக்கொண்டாள் அன்னக்கிளி.

வேலாயுதம் வேலைக்குப் போய்க் குடித்துவிட்டு வரும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வீடு திருவிழாக் கோலமாகத்தான் இருக்கும். அதனால் இந்த திருவிழா அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. மூன்று பிள்ளைகளும் மூன்று திசைகளை நோக்கி ஓடுவார்கள். அவனும் சளைக்காமல் அவர்களில் யாராவது ஒருத்தரைத் தேடிப் பிடித்துவந்து உதையோ உதையென்று உதைப்பான். இதைக் கவனித்துக் கொண்டிருக்கும் மணிவண்ணன் அடிகளையெல்லாம் தான் வாங்கிக்கொண்டு தன் தம்பி, தங்கையை எங்காவது ஓடி பதுங்கிக்கொள்ளச் சொல்வான். போதை தலைக்கேறி தரையில் சாயும்வரை அன்னக்கிளியும் மணிவண்ணனும் அவன் பிடியிலிருந்து தப்பமுடியாது. முயன்றால் கல்லும் கட்டியும் அவர்களைத் துரத்தும். அதற்கு இதுவே பரவாயில்லை என்று விட்டுவிடுவார்கள் இருவரும்.

மணிவண்ணன் வகுப்பில் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன். அடுத்த ஆண்டு ஏழாம் வகுப்பிற்குப் போகும் அவனுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பேர் உண்டு. படிப்பில் படு சுட்டியாக இருக்கும் அவனுக்குச் சில நேரங்களில் நோட்டும் பேனாவும் அவர்களின் உபயத்தால் கிடைப்பதுண்டு. கிழிந்துபோன பழைய சட்டையையும் கால் சட்டையையும் பார்த்த ஆசிரியர் ஒருவர் அவனுக்குப் புதுத் துணி வாங்கிக் கொடுத்திருந்தார்.

ஊர் நாட்டாமை ஒருவர் சாமி வீதிவுலாவுக்கான தகவலை ஒலிப்பெருக்கியில் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னர் கோயில் வளாகத்தில் சாமிக்கு வர்ணிப்பு நடைபெறும் என்பதையும் மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொண்டிருந்தார். எல்லோரும் குடும்பம் குடும்பமாகக் கோயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். அன்னக்கிளி மட்டும் வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு தன் பிள்ளைகள் விளையாட்டைப் பார்த்துக்கொண்டும் வேலாயுதத்தின் வருகையை எதிர்நோக்கிக் கொண்டுமிருந்தாள். மணிவண்ணன் அன்னக்கிளியிடம் சொல்லிவிட்டு கோயிலை நோக்கி ஓடத்தொடங்கினான். கைகளை வீசிக்கொண்டு ஓடிய மணிகண்டனை யாரோ பற்றி இழுப்பதைப் போன்றிருந்தது. திரும்பிப் பார்த்து அதிர்ந்துபோனான் அவன். எட்டிக்கொட்டையைப் போல் சிவந்த கண்களுடன் மணிவண்ணன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான் வேலாயுதம்.

இருவரும் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர். மணிவண்ணனின் தம்பியும் தங்கையும் எங்காவது ஓடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். வேலாயுதத்தின் காப்பேறிய கரங்கள் அன்னக்கிளியையும் மணிவண்ணனையும் துவைக்கத் தொடங்கின. வளைந்து வளைந்து கொடுத்தான் மணிவண்ணன். அன்னக்கிளியும் அவன் அடிகளை வாங்கிக்கொண்டு கதறிக் கொண்டிருந்தாள். அவனை எதிர்த்து தாக்கக்கூடிய சக்தி அவளுக்கு இருந்தாலும் தனக்கான மரபை மீறி அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஊரார் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்ற அச்சம் அவளைக் கட்டுப்படுத்தியது. மணிவண்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வெளியேறிக் கொண்டிருந்தது. இன்று ஒரு முடிவு எடுத்துவிட வேண்டும் என்ற மனநிலைக்கு வந்திருந்தான் மணிவண்ணன். வேலாயுதத்தின் பிடி தளர்ந்தது. அவன் போதையின் உச்சத்திற்குப் போயிருந்தான். இனி விடியற்காலையில்தான் அவனுக்கு நினைவு திரும்பும். களைந்துபோன ஆடையையும் தலைமுடியையும் சரி செய்துகொண்டிருந்தாள் அன்னக்கிளி. மணிவண்ணன் கண்களைத் துடைத்துக்கொண்டு நேராகக் கோயிலுக்குக் கிளம்பினான். கருவறையிலிருந்து சாமி வீதிவுலாவிற்குத் தயாராக இருந்தது. இரண்டு கைகளையும் கூப்பி வணங்கியவன் விபூதியை எடுத்து நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டான். அங்கு கொடுக்கப்பட்ட இரண்டு மூன்று பிரசாதங்களை வாங்கி வயிற்றை நிரப்பிக்கொண்டு ஊர்வலத்தில் தானும் கலந்துகொண்டான்.

இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. கூத்து நடப்பதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. அன்னக்கிளி தன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கூத்துக்குக் கிளம்பியிருந்தாள். கூத்து நடைபெறும் இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்துகொண்டு நீண்டநேரம் கூத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த மணிவண்ணன் மனது ஊரிலிருந்து சென்னைக்குப் போய் பிழைப்பவர்களை எண்ணிக்கொண்டிருந்தது. சென்னையில் கட்டிட வேலை செய்யும் பக்கத்துத் தெரு முருகேசனின் முகவரி அவன் நினைவில் வந்து போனது.

விடியற்காலை மணி மூன்று இருக்கும். கூத்து நடைபெறும் இடத்தைவிட்டு நேராக வீட்டிற்கு நடக்கத் தொடங்கினான் மணிவண்ணன். வீட்டிற்கு வெளியில் போதை தெளியாமல் கை ஒரு பக்கமும் கால் ஒரு பக்கமுமாகக் கிடந்தான் வேலாயுதம். அவனைக் கடந்து வீட்டிற்குள் நிழைந்த மணிவண்ணன் நான்கைந்து சட்டை சராய்களை எடுத்துக்கொண்டு அதிகாலை நான்கு மணி வண்டியைப் பிடிப்பதற்காக நடக்கத் தொடங்கினான். திடீரென்று பின்னோக்கித் திரும்பியவன் தன் வீட்டு வாசலை நோக்கி நடந்தான். வாசலில் வேலாயுதம் கழற்றி வைத்த சட்டைமீது சிறுநீரைக் கழித்துவிட்டு சென்னை பேருந்தைப் பிடிப்பதற்காகப் புறப்பட்டான்.

Pin It