ரிச்சி ரிச்சி ரிச்சி ரிச்சி ரிச்சி ரிச்சேய்!

ரிச்சியா? ஏறிக்க, ரிச்சி மட்டும் ஏறு, ரிச்சி மட்டும் ஏறு.

face 288நாமக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சிக்கான உச்சரிப்பு இப்படித்தான் இருக்கும். நடத்துனர் பாக்கு எதுவும் மெல்லாமல் இருப்பது தமிழுக்கான கொடை. பேருந்து நிலையங்களில் பெரும்பாலும் எனக்கு பிரச்சனை இருப்பதில்லை. அமைதியான சூழலும், காற்று வாசனை இல்லாத இடங்களும் தான் என்னை அச்சுறுத்துகின்றன. ஆகையால் பேருந்து நிலையம் என்பது என்னை முழுமனிதனாக காட்டிக்கொள்ள ஏற்ற இடம். ஏனெனில் அங்கே அமைதிக்கு இடமில்லை, துர்நாற்றத்திற்குப் பஞ்சமில்லை.

தட்டு தடுமாறிதான் வந்து சேர்ந்தேன். எப்படியோ அடித்துப் பிடித்து ஜன்னலோர இருக்கையைப் பிடித்து அமர்ந்து விட்டேன். ஜன்னலோர இருக்கை பிடித்து அமர்வதில் நிறைய வசதி உண்டு; பக்கத்து இருக்கையில் இருந்து தேவையற்ற விசாரிப்புகள் வந்தால், முகத்தை திருப்பாமல் வேடிக்கையைத் தொடர்ந்தபடி இறுக்கமாக பதில் சொல்லி விடலாம். தூக்கம் வந்தால் கண்ணாடியில் சாய்ந்து கொள்ளலாம். நடத்துனர் என் தோளை உராய்ந்து தோலை உரிப்பதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

எவ்வளவு யோசித்தும் இர்ஷாத்தின் குழந்தை பெயர் நினைவுக்கு வரவில்லை. அவள் பிறந்து மூன்றாண்டுகள் ஆகிறது. அவளைப் பார்ப்பதற்காகவே திருச்சி போக பேருந்தில் அமர்ந்திருக்கிறேன். இர்ஷாத்தின் அம்மாவிற்கு கொஞ்சம் ஜவ்வரிசியும், குழந்தைக்கு விளையாட்டு பொம்மைகளும் எடுத்துப் போகிறேன். அவள் பிறந்த பொழுதே பார்த்திருந்தால் நல்லது. இப்பொழுது என்னை காட்டிக்கொள்ள எவ்வளவு யோசனை செய்ய வேண்டியிருக்கிறது? குறைந்தபட்சம் என்னிடம் நேரடியாக கேட்காமல் இருந்தால் சந்தோசம்.

வண்டி ஏன் இன்னும் கிளம்பலை?

-------------------------‍‍‍‍

டேய்! மேல ஏறி சீட் இருக்கானு பாரு

ஒரே ஒரு சீட் இருக்குப்பா முன்னாடி!

சரி ஏறு!

அப்பா எனக்கு சீட்?

ஏன்டா நாலு வயசு கூட முழுசா முடியலை, உனக்கு சீட்டா? உனக்கு சீட்டும் கெடையாது, டிக்கெட்டும் கெடையாது. எல்லாம் என் மடியில உக்காந்துக்கலாம் வா.

அப்பா எனக்கு ஜன்னல் சீட்டு புடிச்சி தரேன்னு சொன்னல்ல? என்று அழ ஆரம்பித்தான்.

டேய், அங்கிள் ஏற்கனவே ஜன்னல் சீட்டை புடிச்சிட்டாருடா, என்ன சார்? நேத்து ராத்திரியே வந்து சீட்டு போட்டீங்க போல?

முகத்தைக் கூட திருப்பாமல் அந்த ஆள், இல்லை இப்பதான் என்றான்.

என்ன சார் நீங்க? நீங்களும் என்ன மாதிரியே அழகா கூலிங் கிளாஸ்லாம் போட்ருக்கீங்க.. சட்டை கூட ஒரே கலர்ல , கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க சார், பையன் அழுவுறான். சீட்டை மாத்தி உக்காரலாம்ல?

அப்பா அவரு கருப்பு கலர்ல சட்டை போட்ருக்காரு, நீ கரும்பச்சை கலர்ல சட்டை போட்ருக்க.?

டேய் , ரெண்டுத்துக்கும் ஒன்னும் பெருசா வித்தியாசம் இல்லடா, என்ன சார் நான் சொல்றது?

அதற்கும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை, ஜன்னல் வழியாக எதையோ தொலைத்துவிட்டு தேடுவதைப் போன்று முகத்தை வைத்துக் கொண்டான்.

சனியன் தொலையிறான் போ, தம்பி நீ அழுவாதடா, நாம திருச்சிலர்ந்து வரும்போது ஜன்னல் சீட்டு புடிச்சி உக்காந்துட்டு வரலாம் என்று என் மகனுக்கு சமாதானம் சொன்னேன்.

-----------------------------‍‍‍‍

நான் மேற்கொண்ட பயணங்களில், என் பக்கத்து இருக்கையில் என்னோடு வந்தவர்களைப் பற்றி எனக்கு எந்த அபிப்ராயமும் இருந்ததில்லை. அவர்கள் அனைவரது குரலும் எனக்கு ஒன்று போலவே நினைவில் நிற்கின்றது. சாராய வாடை, வியர்வை வாடை, என்னை சீண்டி பார்ப்பது என நான் நினைக்கவே அருவருக்கும் இடம் என் பக்கத்து இருக்கை.

இப்போது என் பக்கத்தில் அமர்ந்திருப்பவன் எல்லா இம்சைகளுக்கும் மேல், இவனோடு திருச்சி வரை போக வேண்டுமென்பதை நினைக்கும் பொழுதே பயமாய் இருக்கிறது. இவன் மகனுக்கு ஜன்னலோர இருக்கை தான் வேண்டுமென்றால் நிதானமாய் அடுத்த பேருந்தில் வர வேண்டியது தானே? இதே பேருந்து தான் வேண்டுமாம், அதிலும் ஜன்னலோர இருக்கை தான் வேண்டுமாம். அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது.

இந்தப்பய பேசறத பார்த்தா, இவனுக்கும் இர்ஷாத்தின் மகள் வயதுதான் இருக்கும். இவனிடம் பேசிப்பார்த்தால் அவள் என்னிடம் எப்படி பழகுவாள் என்று தெரிந்துவிடும், பேசி பார்ப்போமா ?

அய்யோ வேண்டாம், அதே சாக்கா வெச்சிக்கிட்டு என்னை எந்திரிக்க சொன்னாலும் சொல்லுவானுங்க.

டிக்கெட்ஸ், டிக்கெட்ஸ்

குரல் கேட்ட திசையை நோக்கி பணத்தை நீட்டினேன்.

தொர கூலிங் கிளாஸ் கூட கழட்டாம காச எங்க தர்றாரு பாரேன்! என்று தன் மகனிடம் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தான்.

-------------------‍‍‍‍

பஸ் ஸ்டாண்டைப் பார்த்தாலே சிகரெட் புடிக்கிற ஆசை வந்துடுது, பையனுக்கு முன்னாடி அடிக்கிறதுக்கு ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருந்துச்சு, இப்பலாம் அந்த சொரணையே இல்லை.

அப்பா ஒன்னுக்கு வருது.

இருடா முழுசா இன்னும் ரெண்டு இழுப்பு கூட இழுக்கல

அப்பா அங்க பாருப்பா, நம்மகூட வந்தவரு இப்பத்தான் பஸ்ஸ வுட்டு இறங்குறாரு

ஏன்டா அவன் பண்ண கடுப்ப மறக்கத்தான் இழுத்துக்கிட்டு இருக்கேன், நீ அவன கூப்ட்டு காட்ற?

அப்பா அப்பா! அங்க பாருப்பா

அப்பா அவரு படில கால் தடுமாறி கீழ விழுந்துட்டாரு பா, அங்க பாரு

வுழுவுட்டும் நாயீ!

அவன் விழுந்ததில் அவன் கொண்டுவந்த ஜவ்வரிசியும், பொம்மைகளும் நாலாபக்கமும் சிதறி விழுந்தன. விழுந்த மாத்திரத்தில் யாரும் தன்னை தூக்க வந்து விடக் கூடாதென்பதற்காக, மிக வேகமாக எழுந்துகொண்டான். அவன் நின்றதிலிருந்து இரண்டடி தள்ளி கிடந்தது அவன் அணிந்து வந்த கூலிங் கிளாஸ். எந்த அசைவுமின்றி சிலை போலவே நின்றிருந்தான். முகத்தில் மட்டும் அப்படியொரு கூச்சம், அவமானம். அவன் கண்களை உற்று நோக்கியபோது தான் எனக்குப் புரிந்தது.

என் மகன் அந்த காட்சியை ஒட்டி ஏதேதோ பேசிக்கொண்டும், கேட்டுக்கொண்டும் வந்தான், எதற்கும் பதில்பேச முடியாதவனாய், வாய மூடுடா, என்றேன் கோபமாக.

------------------‍‍‍‍

இர்ஷாத்திற்கு என்ன பதில் சொல்வது? இல்லடா இன்னக்கி வர முடியலங்கற வழக்கமான பதிலை தான் சொல்லணும்.

இது நாமக்கல் நோக்கி செல்லும் பேருந்து, அதே ஜன்னலோர இருக்கை தான் இம்முறையும். நான் நிம்மதியாய் பயணிக்கும் பயணங்களில் இதுவும் ஒன்று. பக்கத்து இருக்கையில் யாரும் இருக்கவில்லை.

யாருமில்லாத பக்கத்து இருக்கை எனக்குத் தரும் நிம்மதியையும், அமைதியையும் ஏன் சக மனிதனை கொண்டிருக்கும் எந்த இருக்கையும் எனக்குத் தருவதில்லை?

உடலில் கொண்டிருக்கும் ஊனத்தை பெரும்பாலும் மனிதர்கள் மறைக்க விரும்புவதில்லை. அவ்வாறு மறைக்க விரும்பும் தருணங்கள் யாவிலும், அவர்களே அவர்களின் இயலாமையால் தோற்றும் போகின்றனர். உடல் ஊனம் பெற்றுத்தரும் அவமானங்களில் இருந்தும், பகடிகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ள ஒரே வழி, என் ஊனத்தை வெளிப்படையாக காட்டிக்கொள்வதே என்பதை நானறிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

சக மனிதன் என் மேல் கொண்டிருக்கும் ஆர்வத்தை எப்படியாவது குறைத்திட, நான் தனித்தவன் அல்ல என்று எனக்கிருக்கும் தவிப்பினை நீக்கிட, மனிதர்களுக்கு இருக்கவே முடியாத மிதமிஞ்சிய போலி நம்பிக்கைகளை அறிவுரையாக கேட்கும் கொடுமைகளிலிருந்து விடுபடவே, வீட்டிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு நாளும் நான் என்னை முழுமனிதனாக காட்டிக்கொள்ள வேடம் கொள்கிறேன். ஆனால் நான் கொள்ளும் வேடேமே என்னை இன்னும் உற்று கவனிக்க செய்கிறது; தயவு தாட்சண்யமின்றி என்னாலேயே கிழித்து எறியவும் படுகிறது.

அடுத்த முறை திருச்சிக்கு வரும் போது, எனக்கு கண் தெரியாது என்பதை இர்ஷாத்தின் மகளிடம் சொல்ல சொல்லிவிட வேண்டும்.

நான் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும் என்னிடத்தில் அழிக்க முடியாததொரு பதிவினை விட்டு செல்கிறான், இன்று எனக்கு கிடைத்த பதிவு யாதெனில் , "கரும்பசைக்கும், கருப்பு நிறத்துக்கும் என்ன வித்தியாசம்?".

பேருந்து நின்றது.

முசிறி இருக்கா? முசிறி முசிறி .

என் பக்கத்து இருக்கையில் யாரோ ஒருவர் வந்து அமர்ந்திருக்கிறார், வியர்வை வாடை நன்றாகவே வந்தது.

- த.நி.ரிஷிகேஷ் ராகவேந்திரன், ராசிபுரம்.

Pin It