அறை எப்பொழுதும் சாத்தியே இருந்தது... உள்ளே எங்கும் கவிந்திருக்கும் இருட்டு... 'உள் மனதின் அடக்கத்தை வெளிக் காட்டுகிறாயே' எங்கோ உள்ளிருந்து எழும்பும் குரல்... எத்தனை முறை என்று தெரியவில்லை... திரும்ப திரும்ப ஒரே படிமம்.. இறங்கி வர அவனால் முடியவில்லை... லௌகீக அனுகூலங்கள், பொருளாதார அனுகூலங்கள் அவனை தடுத்து வைத்து திண்டாட செய்தது... 'இறங்கு இறங்கு இறங்கு............... மடையா இறங்கு................' எங்கேயும் குரல்கள்... எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது... ஒரு வினோதமான இசை எழுந்து எழுந்து எழுந்து எழுந்து வந்து அவன் பிரக்ஞையில் அடித்து கொண்டே இருந்தது... அவன் இங்கு இல்லை.... எங்கெங்கோ போனான்... ஆனால் அங்கேயே தான் இருந்தான் உடலால்.... கட்டுண்டு சுருங்கி சுருங்கி சுருங்கி கூனி குருகி, வெடித்து கிளம்பி கிளம்பி முட்டி மோதி மண்டையில் ஏகத்துக்கும் கணம் அதிகமாயிற்று....

man 208கணிணியில் ஹிந்துஸ்தானியை ஒலிக்க விட்டு அதைத் தொடர முயன்று தோற்றுப் போய்... மறுபடியும் ஒரு குதூகல இசையை ஒலிக்க விட்டு அதனிடமும் மண்டி மன்றாடி அழுது தோற்றுப் போய் அவனை கட்டிப் போட்டு நொறுங்கச் செய்து கொண்டிருந்தது.... பிடரியிலும், காதுகளின் மேல் பகுதியும் சொல்லவொண்ணாத வலியை கண்டு சித்திரவதை செய்து கொண்டிருந்தது.... எங்கும் இருட்டு எப்போதும் இருட்டு.......... ''உள் மனதின் அடக்கத்தை வெளிக் காட்டுகிறாயே''...........

அந்த பிம்பம் எப்படி வந்து வந்து தொலைகிறதோ...... விலகி விலகிப் போனாலும் வலுக் கட்டாயமாக வந்து தொலைகிறதே... இது நியாயமா... இன்னும் இன்னும் இன்னும் உள்ளே போய் அதனூடே ஓர் இன்பக் கிளர்ச்சியடைந்து அது பல்வேறு சமயங்களில் கைகூடாமல், அதனூடே மாட்டி தவித்து தவித்து எங்கு போய் முடியப் போகிறதோ....

'Hey Krishna… Just a minute…'

அவன் வேகமாக நடந்து அவன் இருக்கைக்குப் போய் லேசாக அமர்ந்தான்...

‘And…. To start with, this guy should have got this long before…. I think he deserves this and he is actually waiting for this I guess…’

‘Basically for his active participation and for handling more than 1 project… also for delivering quality work.. we are giving this to Krishnan….’

வலி வலி வலி.... இங்கே நிறுத்து... எங்கிருந்தோ வருவது போல் வேண்டாம் மாத்து, காட்சியை மாத்து, மாத்து...

‘Hey guys… Just a minute’

எல்லோரும் அவரவர் வேலையை விட்டு ஒன்று கூடும் தருவாயில் மறுபடியும் அதே சொற்பொழிவு... கொஞ்சம் கூட, குறைய இருந்தாலும் அதே பாணி வசனங்கள் தான்...

‘Finally…. he actually deserves this…’

ஏறு ஏறு... ஏறிப் போய் அவனை மிதி உதை உனக்கில்லாத உரிமையா? வேண்டாம் வேண்டாம் அடங்கு சற்று அடங்கு அப்படியெல்லாம் ஏற வேண்டாம்... செல்லாது... தத்ரூபம் முக்கியம்... முகத்தில் ஒரு லேசான சிரிப்பு வேண்டும்...

அவன் அவனையே சரிபடுத்திக் கொண்டிருந்தான்... எந்த கலர் சட்டை, எந்த கலர் பாண்ட்... ஒரே பாண்ட் தான் அவன் எப்போதும் போடுவது வழக்கம்... சட்டையை தேர்ந்தெடு... போடு அதே சிகப்பு கலர் சட்டையை போடு... மாற்று மாற்று மனக்கண்முன் சிகப்பு சட்டையை கொண்டு வா... ஏன் சிகப்பு சட்டை? வெட்கி கூனி குருகி நின்ற போதும் அந்த சட்டை தானே... ஆம் எல்லாம் தத்ரூபமாக இருக்க வேண்டும் இல்லையேல் அடங்காது... ஒரு பெரும் சுனாமி அடங்க எவ்வளவு பெரிய சுவர், அணை தேவைப்படும்? பத்தாது... இடையில் ஜே.கிருஷ்ணமூர்தியின் முகம்.... முன்பு எப்போதோ பார்த்த வீடியோ... ‘One should be free from fear....' ‘Man is traveling in a stream... The stream is full of sorrow, jealousness, pain and sufferings... He should get out of this stream… He should travel inwardly to come out of the stream" அட போய்யா தத்துவமாம் தத்துவம்.. எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் தத்துவம் வந்து மனதை ஆற்றாது.... ஆற்றும் வல்லமை அதற்கு கிடையாது... மனிதனின் existence தான் நிஜம்.. அந்த நேரத்தில், காலம் என்ற கூட்டுக்குள் என்ன நடக்கிறதோ அது தான் விதை அந்த விதையினூடே வளர்வது தான் இந்த பிலாக்கணங்கள்.... அவனுள்ளிருந்து ஒரு பெரிய ஒலி ‘Yup I am also a fucking shitty common man....'

விடாதே விடாதே அதை விட்டு விடாதே.... அந்த தத்ரூபமான காட்சியை பிடி.... சிகப்பு சட்டையில் விட்டது... ஆரம்பிக்கட்டும் அந்த காட்சி செவ்வனே ஆரம்பிக்கட்டும்... சிரி சிரி சிரி மாற்றாதே.. முகத்தில் எந்த வித போலித் தன்மையும் இருக்க கூடாது... 'உள்ளேயிருந்து சில குரல்கள் கோபி கிருஷ்ணனின் ஆக்கம் ஏன் இப்போது நினைவிற்கு வந்து தொலைய வேண்டும்.... இல்லை, எல்லோரும் மன நலம் குன்றியவர்கள் தான்.... வேறொரு காட்சி வருவதற்கு அனுமதிக்காதே... எங்கு விட்டாய்.. சிரிப்பு முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு....

ரீவைண்ட்... ரீவைண்ட்....


‘So…. He handled lot of things single handedly… and…. Everything went out with a quality… so… this time…. Krishnan’

எழுந்திரு எழுந்திரு போ போ.... முகத்தில் சிரிப்பு, சிகப்பு கலர் சட்டை ஏற்கனவே உன் இருக்கையில் நீ அமர்ந்திருக்கிறாய்... எழுந்திரு, சிரித்துக் கொண்டே வாங்கு... உஷ்ணம் உஷ்ணம் உஷ்ணம்... தலைக்கு ஏறுகிறது.... தாங்க முடியவில்லை... உடல் அவனை அறியாமலே அசைந்து கொண்டிருந்தது... ஒரு வித பரபரப்பு... நெருங்கு துரோகிகளை நெருங்கு நெருங்கு...

'கிருஷ்ணா....' பக்கத்து அறையிலிருந்து நண்பன்...

அனைத்தும் தடை பட்டது... கை தவறி விழுந்த மீன் தொட்டியிலிருந்து மீன்கள் துள்ளி துள்ளி வழுக்கி வழுக்கி ஏதோ ஒரு மூலையில் போய் உயிர் நீந்துவது போல அவனுள் இருந்த காட்சிகள் எல்லாம் நீர்த்துப் போனது....

'என்னடா... தூங்கலையா?'

'இல்ல...'

கை கால்கலை சோம்பல் முறித்து கொண்டே, 'என்ன ஆச்சு ரொமப ஒரு மாத்ரி இருக்க'.. கிருஷ்ணன் எங்கேயோ பார்த்துக் கொண்டு 'தூக்கம் இன்னும் வரல'

நண்பன் மறுபடியும் முறித்துக் கொண்டு 'இன்னிக்கு ஏதோ உன் டீம்க்கு ஸ்பாட் அவார்ட்(spot award) லாம் கொடுத்தாங்க போல' கிருஷ்ணன் முகத்தில் ஒரு செயற்கையான சிரிப்போடு, 'ம்...' என்றான்.. 'டே அந்த நார்த் இண்டியனுக்கு ஏண்டா கொடுத்தாங்க? அப்படி என்ன கிழிச்சான் அவன்...' ஏறு ஏறு ஏறு... உள்ளிருந்து ஏறி கொண்டு முட்டி மோதி..... 'ம்... க்.யூஸி(Q.C - Quality check) காக...' 'க்.யூஸிக்காகவா...?' பெரும் ஆச்சரியத்துடன் நண்பன் கேட்டான்... கேட்டு விட்டு எதுவும் பேசாமல் அவன் அறைக்குச் சென்ற பிறகு, கிருஷ்ணன் மொட்டை மாடி நிலவில், குளிரில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு... இடுப்பு உசரம் இருக்கும் சுவரில் கை வைத்து கீழே பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென்று கீழே கொஞ்சம் சத்தம் கேட்கவே காறி துப்பிக் கொண்டிருந்தான்... 'த்தூ... த்தூ..... '

மணி 12.30 தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது.... 'எரிகிற தீயில் எண்ணையை ஊற்றினாற் போல்'... கிருஷ்ணன் அப்படியே மெத்தையில் சாய்ந்தான், இல்லை விழுந்தான்... எழுந்து விளக்கை அணைத்து விட்டு அப்படியே படுக்க நினைக்கும் போது, கதவு சாத்தப்பட்டதா? என்று எப்போதும் வரும் கேள்வி மனதில் தொத்திக் கொண்டு அவனை அமைதி இழகக்ச் செய்தது... ஏன் இந்த நம்பிக்கையின்மை... விளக்கைப் போட்டு கதவின் மேல் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தாலும், அதை தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டான்... நன்றாக அழுத்தி கட்டை விரல் வலிக்கும் வரை தேய்த்து பார்த்துக் கொண்டான்.... கீழ்மை அவனை மறுபடியும் தொத்திக் கொண்டது... கீ.......ழே போய்க் கொண்டிருந்தான்.... எவ்வளவு முடியுமோ அவ்வளவு....

திரும்ப அந்த பாதாள உலகத்திற்கு சென்று கொண்டிருந்தான்... இடையில் ஒரு குரல்..

முதல் குரல்: நீயெல்லாம் இலக்கியம் படிச்சு என்னத்த வளத்துக்கிட்ட... கொஞ்சம் கூட மெசூரிட்டி இல்லாம...

முரண்: ஏன் ஏன் ஏன்? இலக்கியம் படிச்சா மெசூரிட்டி என்ன இலவசமா வருமா...

முதல்: அப்படி இல்ல.... மனம் ஒரு பக்குவத்தோட இருக்கணும் பாரு அதுக்காக சொன்னேன்

முரண்: மயிரு... பெரிய பக்குவ மயிரு.. நீ மயிராட்டம் இருந்து பாரு.. அப்ப உனக்கு புரியும்...

முதல்: தத்துவம்லாம் அடிக்கடி பேசுவியே, எல்லா கீழ்மையிலேர்ந்தும் விலகி போனா தான் நீ முதிர்ச்சி அடைஞ்சிருக்கனு ஆகும்

முரண்: பெரிய முதிர்ச்சி மயிரு... எல்லா முதிர்ச்சியான ஆட்களும் ஒரு நாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல கீழ்மைய நோக்கி போவாங்க... என்ன இயல்பா இருக்க விடு... இப்போதைக்கு என்னால செயற்கையா என்ன பக்குவப்பட்ட ஆளா நினச்சுக்க முடியாது.. ரொம்ப ரொம்ப கஷ்டம்... நான் இப்படியே கீழ்மைய நோக்கி பயணிக்கிறேன்... அது எனக்கு மன சாந்திய கொடுக்கும்...

முதல் குரல்: இருந்தாலும் இந்த சின்ன விஷயத்துக்கு, அதுவும் காரணம் என்னனு தெரிஞ்ச சின்ன விஷயத்துக்கு, அதுவும் நீ எந்த தப்பும் பண்ணாத விஷயத்துக்கு, வெறும் புறக்கணிக்கப்பட்டு இன்னொரு தகுதி இல்லாதவன் புகழ்ச்சி அடஞ்சிட்டான்ங்குற அல்ப விஷயத்துக்கு நீ இப்படி அலட்டிக்க தேவ இல்லனு தோனுது..

முரண்: அல்ப விஷயமோ சின்ன விஷயமோ, நான் விழுந்துட்டன்... போட்டு என்ன இங்கயும் அங்கயும் அலைக்கழிக்காத... இன்னைக்கு நரகம் தான்... அந்த நரகத்துல முங்கி முங்கி என்ன நான் சமாதானப்படுத்திக்கனும். ப்ளஸ் என் கிட்ட இண்டெல்லெக்சுவல் ஹானஸ்டி(Intellectual Honesty) இருக்கு, இலக்கியவாதிகளுக்கு இல்லாத ஒன்னு..

முதல் குரல் அப்படியே பின் வாங்கி, முரண் மேலோங்கி வளர்ந்து மாபெரும் உருவெடுத்து அவன் மனதினுள் பெரும் பிரளயத்தையே உண்டு பண்ண காத்துக் கொண்டிருந்தது.. எந்த வித ஏற்பாடும் இன்றி, செயற்கையும் இன்றி, தானாகவே மனம் கீழ்மையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது... எங்கே விட்டாய் எங்கே விட்டாய்.. சிரிப்பு, சிகப்பு சட்டை அடுத்தது நெருங்குதல்.. ஹா... பிடி பிடி... திடீரென்று உச்சத்துக்குப் போக முடியாத நிலை... இடையில் இடைசெருகல்கள் போன்ற ஒலிகளால்... இடையில் இன்னொரு இடைசெருகல்

இரண்டாவது குரல்: 'நீ ஓநாய்களால், சொம்பு தூக்குபர்களால், பச்சோந்திகளால், அறம், ஒழுக்கம் இல்லாதவர்களால் சூழப்பட்டிருக்கிறாய்.... நீ கவனிக்கப்பட மாட்டாய்... அரசியல் செய்யும் நயவஞ்சகர்கள் இருக்கும் இடத்தில் உன் போன்ற உண்மையானவர்களுக்கு, சுருக்கென்று கோபமடையும் ஆட்களுக்கு இடமில்லை.... வெளியே போ... வெளியே போ...'

முரண் 2: இல்லை எப்படி.. என்னை நம்பி ஊரில் மூன்று இரண்டு கால் ஜந்துக்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறதே... எப்படி வெளியே போக... வெட்கமற்றவனாக, சூடு சொரணை இல்லாதவனாக இருந்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் உணர்ச்சி கொண்டு வெகுண்டு எழும் தைரியமாவது எனக்கு வந்திருக்க வேண்டும்... இந்த ரெண்டுங்கெட்டான் நிலை தான் எப்போதும் என் நிலை....

இரண்டாவது குரல்: நீ உன் உணர்ச்சிகளை பெருக்கி கொள்ள வேண்டும்... இதே கோபம் நாளை வெடிக்க வேண்டும்...

முரண் 2: அதுவும் முடியாது... பொருளாதார நிலைமை அவ்வளவு மோசமில்லை என்றாலும் என்னால் செயற்கையான கோபத்தோடு என்னை ஈடுபடுத்தி கொள்ள முடியாது...

இரண்டாவது: அப்படி என்றால் இப்படியே கிடந்து சாவு....

முரண் 2: மிக்க நன்றி...

‘Hey guys just a minute… Can you all come here… so…. For handling multiple projects at a time and for taking so much effort in sending error free deliverables, it goes to Krishnan this time’

வந்தே விட்டது.... அந்த தருணம்.... சிரிப்புடன் சென்று, அவர்கள் முன்னால் நின்று எல்லோரையும் திரும்பிப் பார்த்து, கொடுத்ததை கையில் வாங்கிக் கொண்டு திரும்பி எல்லோரையும் பார்த்து ஒரு வெற்றிக் களிப்புடன் சிரித்து, கிருஷ்ணன்

‘Yup I was just waiting for this moment’என்று சிறிது நேரம் அதை கையில் பிடித்து பார்த்துக் கொண்டு....முகத்திற்கு நேராக வைத்து கிழிக்கத் தொடங்கினான்...

தலையணையில் முகம் புதைத்து படுத்திருந்த உடல் உணர்ச்சி பெருக்கால் அசையத் தொடங்கியது... நேராக அந்த கற்பனை உலகத்திற்குப் போய் விட முடியாதா என்று தவித்தான்... அவனால் அந்த கிழிக்கப்படும் காட்சியை முழுதாக கொண்டு வர முடியவில்லை... எவ்வளவு எத்தனித்தும், தோற்றுப் போனான்... தோற்றுப் போய் தோற்றுப் போய், முயற்சி செய்து அந்தத் தாள் தன் கைகளால் கிழிக்கப்படும் தருணத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வலுவாக்கி கொண்டே சென்றான்... அது உண்மையிலேயே தன் கைகளால் கிழிபடுவது போல உணரத் தொடங்கினான்... இதயம் படபடக்கத் தொடங்கியது... வேகமாக அடிக்கத் தொடங்கியது.... என்ன செய்யலாம் என்ன செய்யலாம்... அடித்துக் கொண்டிருந்தது... வேறு ஏதாவது செய்ய வேண்டும்... அவ்வளவு மகிழ்ச்சி... அதில் கலந்து, முக்கி மூழ்கி போய் கொண்டிருந்தான்...

இரவு இவ்வளவு வலிமையானதா... இவ்வளவு ஆழமானதா... சற்று கண் திறந்து பார்க்கும் போது எல்லாம் தனக்குள் இருக்கும் ஆழத்தை சொல்லிற்று... எங்கும் இருட்டு.... உணர்ச்சி மிகுதியால் எழுந்து உட்கார்ந்து, இரு கைகளையும் முட்டியோடு அணைத்துக் கொண்டான்... போதாது போதாது... இன்னும் இன்னும் இன்னும் கீழே போ... இதயத் துடிப்பு வெகு வேகமாக அடிக்கத் தொடங்கியது.... கால் விரல்களெல்லாம் சொடுக்கு பிடிக்கத் தொடங்கின... கை விரல்களை பின்னி பிசைந்து கொண்டிருந்தான்...

முரண்1, இரண்டாவது குரல்: கீழே போ, கீழே போ.....

அந்த காட்சியை இன்னும் வலிமையாக்க, ‘Only beggars receive this shit…. Its not even worth to clean my shit…’என்று சொல்லி 'க்க்க்கா... த்தூ....' என்று துப்பி விட்டு, அதை மிதி மிதி என்று மிதித்து விட்டு, அதை எடுத்து அப்படியே அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டான்... அருகில் இருந்த விருது கொடுத்தவர் முகத்தை மிகவும் ஏளனமாக பார்த்துவிட்டு தன் இருக்கையில் ஒரு வெற்றிக் களிப்போடு உட்கார்ந்தான்...

மணி சரியாக 3... அடுத்தடுத்து பல விதமாக இதே காட்சியை வெவ்வேறு விதமாக நினைத்து நினைத்து பின் மண்டையில் வலி எடுத்து, போதும் என்று தோன்றினாலும் அந்த குரல்கள் அவனை விடாது துரத்திக் கொண்டே இருந்தன.... விடியும் போது அவன் எப்படித் தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை...

கதை ஆசிரியன்: பல இடங்களில் கிருஷ்ணனின் மனப் போக்கை முழுதாக உக்கிரமாக வெளிப்படுத்த தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு வார்த்தைகள் இரட்டை இரட்டையாக தேவைப்பட்டன... கிருஷ்ணனைக் கேட்டால், 'இரண்டு என்ன நூறு முறை போட்டிருந்தாலும் என் மன உஷ்ணத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது' என்கிறான்.

- எஸ்.பிரசன்னகிருஷ்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It