"ஏய், என்னா பாத்துட்டே போறே... காசு தரமாட்டியா...?"  

யார் கண்ணில் படக்கூடாது என்று வேக வேகமாக அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தேனோ அவளின் குரல் மெல்லிசாகக் கேட்டபோது அது என்னை நோக்கித்தான் என்ற தவிர்க்க முடியாத உள்ளுணர்வில் அப்படியே நின்று விட்டேன் நான். என்னைக் கண்டால் அவள் நிச்சயம் ஏதாவது கேட்பாளே, கொடுக்க வேண்டி வருமே என்ற ஆதங்கம் கூட இல்லை எனக்கு. அவளைப் பார்ப்பதே மிகவும் மன வேதனைக்குரிய விஷயம் என்ற காரணத்தால்தான் அதைத் தவிர்க்க விரும்பினேன், அந்தக் பகுதியிலான என் அலுவலகத்திற்கு சமீபமாகத்தான் வந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதை விட அவளை அந்த நிலையில் காணச் சகிக்கவில்லை, என்பதே உண்மை.  

"ஏய், நீ சேகரன்தானே... ராஜா .... சேகரன்.... தானே.... ராஜாசேகரன்.... ராஜாசேகரன்... எங்கூடப் படிச்சீல்லே..."  

என்னை அவள் அப்படிச் சட்டென்று அடையாளம் கண்டு சரியாகக் கூப்பிடுவாள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அந்தப் பாலத்துக்கு அடியில் அதன் ஆரம்பத்திலிருந்த பஸ் ஸ்டாப்பிலிருந்து இறங்கி ரயில்வே கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தேன் நான். ஏழெட்டு ஆண்டுகள் தொலைதூரத்தில் பணியாற்றிவிட்டு, அப்பொழுதுதான் மாறுதலில் வந்து கொஞ்ச நாள் ஆகியிருந்தது. அடேயப்பா...எவ்வளவு மாறி விட்டன அந்தப் பகுதிகள்? ஏராளமான கடைகளும், பெரிய கட்டடங்களும், வங்கிகளும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும்.. ஆனாலும் நடந்து வந்த அந்தப் பாதையில் ஏனோ அத்தனை மாற்றங்கள் தென்படவில்லை. சங்கரன் நாயர் டீக்கடை மட்டும் அப்படியே இருந்தது. வழக்கம்போல் கூட்டம் இப்பொழுதும் மொய்த்துக்கொண்டு... ஒருசிறிய டிபன் சென்டர் வேறு. ரெண்டுக்கும் மத்தியில் டேபிள் சேர் போட்டு ஆட்டுக்கல் மாதிரி சப்பரமாய் அமர்ந்து வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார் நாயர். நாயர்வாள் என்று இப்பொழுது கூப்பிட்டால் அடையாளம் தெரியுமோ என்னவோ. சே...சே...! கூடாது...; அவருக்கும் வயசாச்சு...நமக்கும் ஆயிப்போச்சு... 

நான் வேலை பார்த்த மோட்டார் பம்ப் செட் கடை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன். அங்கு ஏதோ கணினி மையம் இயங்குவதாய் போர்டு தொங்கியது. இதெல்லாம் கிடக்கட்டும்...மெதுவாய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். எங்கே ஓடிப் போகிறது...ஆனால் இந்தச் சத்தம்...? 

“ஏய்...சேகரா...நில்லுடா...நில்லுடா...ட்ட்டாய்....” - அழைப்பு ரொம்பவும் வித்தியாசமாய் இருப்பதைக் கண்டு தவிர்க்க முடியாமல் திரும்பினேன். பயம் தொற்றிக் கொண்டது மனதில். பாலத்துக்கு அடியில் வீணாய்க் கிடந்த இடத்தில் குப்பை கூளங்கள். அசிங்கங்களுக்கு நடுவே இருந்து வெளியே வந்தாள் அவள். ஓடிவந்து என் கைகளைப் பற்றிக் கொண்ட வேகத்தில் நான் சற்றுப் பின் வாங்கினேன்.  

“ஏய்...என்னா...சும்மாயிருக்கமாட்ட...? .... நீங்க போங்க சார்...” - அவள் கையைப் பிடித்து உதறி விட்ட ஒருவர் இப்படிக் கூறினார். ஓங்கி அவள் கன்னத்தில் அறைவதுபோல் சைகை செய்தார். தலை முடியனைத்தும் சடை பிடித்துப் போய், கட்டை கட்டையாய்த் தொங்கிக் கொண்டிருக்க, என்னென்னவோ வாடிய பூச்சரங்கள் நாரும் பூவுமாய் அதில் தொற்றிக் கொண்டிருந்தன.  

கிழிந்த ரவிக்கையும், திறந்திருந்த மார்பும், புடவை என்று முழுசாக இல்லாமல் நார் நாராய்க் கிழிந்து தொங்கும் பாவாடையோடு, அதில் நீண்டு தொங்கிய நாடாவை இழுத்து வாயில் கடித்துக் கொண்டு ஈஈஈஈஈஈ.....என்று ஈறைக் காட்டிக்கொண்டு நின்றாள் அவள்.  

“நீங்க போங்க தம்பி... ஏதாச்சும் கடிச்சு வச்சிறப் போவுது...” என்ற அந்தப் பெரியவர், அவள் கையைப் பிடித்து இழுத்து கொஞ்ச தூரம் அவளை விலக்கி விட்டுவிட்டு நடையைக் கட்டினார்.  

“ஹூம்.... ம்ம்ம்ம்..... ஏய் சேகரா... என்னை அடிக்க வர்றாரு... பார்த்திட்டே போறீல்ல...?" சிணுங்கிக்கொண்டே அவள் மீண்டும் வந்து நிற்க... அந்தப் பெரியவர் பார்த்தவாறே போய்க் கொண்டிருந்தார்.  

“டீ சாப்பிடுறியா...?” முன்பு அவளிடம் வழக்கமாய்க் கேட்கும் அதே கேள்வி. அவள் பதிலை எதிர்பார்க்காமல் நாயர் கடையை நோக்கி நடந்தேன்.  

“நானு;...நானு....நானு... யேய்... நானும் வர்றேன்... நானு... நானு.... வேணு.... வேணு.... வேணு.....” 

என்னதிது? மாறி ஒலிக்கிறது? திரும்பிப் பார்த்தேன். பஞ்சமியின் வாய் முனகிக் கொண்டிருந்தது. வேணு...வேணு...வேணு... இப்போது அவள் அந்த மூலைக் குத்துக் கல்லில் உட்கார்ந்து அழ ஆரம்பித்திருந்தாள். இனி அவளுக்குத் தன்னைப் பற்றிய நினைவிருக்காது. தான் இப்படியே டீயைக் குடித்துவிட்டு அல்லது உடனேயே கூட நழுவி விட வேண்டியதுதான். இதுதான் சரியான சந்தர்ப்பம். இல்லையென்றால் இன்னும் சற்று நேரம் கழித்து என்ன ஆகும் என்று சொல்ல முடியாது. இப்பொழுது அழுது கொண்டிருக்கும் அவள் திடீரென்று எழுந்து வந்து என்ன ஆர்ப்பாட்டம் செய்வாள் என்று சொல்ல முடியாது. அதற்குள் இந்த இடத்தைவிட்டுக் காலி செய்து விட வேண்டியதுதான்... எண்ணங்கள் தந்த படபடப்பில் சிறு கூட்டத்திற்கு நடுவே புகுந்து மறைந்து நின்று கொண்டு அவளைப் பார்த்தேன். நிச்சயம் அவள் இன்று ஏதேனும் கலாட்டா செய்யக் கூடும். இனி அவளுக்குத் தன் நினைப்பு கண்டிப்பாக இருக்காது. 

பக்கத்து சந்தில் புகுந்து ஓடினேன். அவளைக் காதலித்து ஏமாற்றி விட்டு, அவள் வயிற்றில் சுமையையும் ஏற்றிவிட்டு, வசதியாய் வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இன்று அவள் மனச் சிதைவுக்கு முற்றிலும் காரணமாய் இருக்கும் வேணு என்கிற வேணுகோபால், அந்தப் பெருநகரத்தின் வேறொரு மூலையில்தான் இருக்கிறான் என்கிற உண்மை அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.  

“அவளுக்கென்னடா அழகாத்தானே இருக்கா...கட்டிக்கிட வேண்டிதானே...?”  

“நல்லாச் சொன்னீங்கடா...அவ ஜாதி என்ன என் ஜாதி என்ன? வீட்டுக்குத் தெரிஞ்சிதின்னா என்னை ரெண்டாக் கூறு போட்ருவாங்க தெரியும்ல...?”  

“அப்போ ஏண்டா அவளைக் காதலிச்சே...?” 

“யாரு காதலிச்சா...? இல்ல யாரு காதலிச்சான்னு கேட்குறேன்...என்னடா எல்லாருமாச் சேர்ந்து இப்டி ஒளர்றீங்க...? எதிர்த்த வீட்டுல இருந்திட்டு அவதானே என்னை சைட் அடிச்சா...? என்னை வம்புக்கு இழுத்தவளே அவதாண்டா... நானா அலைஞ்சேன் அவ பின்னாடி...?” 

“அடப் பாவி...அப்போ வெளியூர் போனது...சுத்தினது...லாட்ஜ்ல ரூம் போட்டது...இதெல்லாம் பொய்யா...?”  

“அதெல்லாம் அவ நச்சரிப்புத் தாங்க மாட்டாம செய்ததுடா...அவளுக்கு உடம்பு தேவப்பட்டுச்சு... ஆம்பிள உடம்பு... என்னைப் பயன்படுத்திட்டா...அவ ஆசையைத் தீர்த்துக்கிட்டா...அதுக்கு நானா பொறுப்பு?” 

அட நாசகாரா இப்படிப் பேசுகிறானே? பிடியே கொடுக்காமல்? கடைசி வரை மூச்சு விடவில்லையே பஞ்சமியும்... அதுவே அவள் அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாள் என்பதற்கான சாட்சி. இம்மி அளவுக்குக் கூட யாருக்கும் தெரியாது. நண்பர்கள் நாங்கள் நாலைந்து பேர் தவிர. ஒருவகையில் பார்த்தால் இந்தப் பாவத்தில் எங்களுக்கும் பங்கு உண்டுதான். ஆனால் ஒன்று...ஒரு நாள் ஒரு பொழுது கூட பஞ்சமி எங்களைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்டதில்லை. எங்களுக்கும் தெரியும் என்பதாகவே அவள் காட்டிக் கொண்டதில்லை. முழுக்க முழுக்க நான்தான் அவரை விரும்பினேன். நான்தான் அவரை நெருங்கினேன். இதில் வேறு எவருக்கும் பங்கு இல்லை. இது என் மனம் சார்ந்தது. என் தாகம் சார்ந்தது. என் வேட்கை சார்ந்தது. என் தாபங்களை வேறு எவரும் அறிவதற்கில்லை. அது என்னோடு பிறந்து என்னோடேயே அழிந்த ஒன்று. மனதிற்குள் புழுங்கிப் புழுங்கி மதி கலங்கிப் போனாள் பஞ்சமி.  

எப்படிப்பட்ட பெண் அவள். என்ன ஒரு ஆத்ம தரிசனம்? எப்படியான ஒரு தற்சார்பு நிலை? அவளை மட்டும் மணந்திருந்தால் வேணுவின் வாழ்க்கை எத்தனை அழகானதாயிருக்கும்? பரந்த சொத்துக்கு ஆசைப்பட்டு, முறைப்பெண் என்கிற பெயரில் ஒரு புளி மூட்டையைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கிறான் இன்று. மனசாட்சி இல்லாதவன். ஒரு பெண்ணால் முழுக்க முழுக்க விரும்பப்பட்ட ஆண் மகன் அவன். அந்த நேசத்தை, அன்பை, காதல் உணர்வுகளை ஆத்மார்த்தமாக உணராமல் போய் விட்டானே? உதறி எறிந்து விட்டானே பாவி? என்னதான் வாழ்க்கை அவன் வாழ்ந்து கழித்தாலும், அவன் மனசாட்சி அவனைச் சும்மா விடுமா? எங்கோ ஓர் ஓரத்தில் இருந்து அவனை மெல்ல மெல்லக் கொல்லாது? புத்தி பேதலித்து நிற்கும் நிலையிலும் வேணு...வேணு என்கிறாளே இவள். அவன் மனது இவளை இப்படி நினைக்குமா? நினைக்கும் நிச்சயம் நினைக்கும். வாழ்க்கையில் செய்த தவறுகளை உணராமல் போன மனிதன் எவனுமில்லை. அதற்காக ஒரு நாளேனும், ஒரு பொழுதேனும் வருந்தாமல் கழிந்த ஜீவன் எதுவுமில்லை. அதுதான் நியதி...அதுதான் சத்தியம்... இந்த நினைப்போN;டயே ஆபீஸ் போய்ச் சேர்ந்தேன் நான். வெகு நேர அமைதி என்னைத் தொற்றிக் கொண்டது. பஞ்சமியின் முகம் மனத் திரையில்.  

“என்ன சார்...சைலன்டாயிட்டீங்க...? உடம்பு சரியில்லையா?டீ சாப்டிட்டு வருவமா?” 

“ஒண்ணுமில்லீங்க...மனசு சரியில்லை...வர்ற வழில அந்தப் பஞ்சமியப் பார்க்க வேண்டியதாப் போச்சு...”  

“அய்யய்ய...அவ கண்ணுல பட்டுட்டாளா? சொன்னீங்களே...கூடப் படிச்சவன்னு...”  

“ஆமா...ரொம்பப் பாவமாயிருக்கு...அவ பார்க்கிற பார்வை இருக்கே... அப்பாடி... அதத் தாங்கவே முடியாதுங்க... நம்மளக் கிண்டிக் கெழங்கெடுக்கிற பார்வை அது...”  

“பழசையெல்லாம் ஞாபகப்படுத்தறாளாக்கும்...?”  

“பெரிய வேதனைங்க...அது சரி... அவ குழந்தை இப்போ எங்கன்னு சொன்னீங்க...?” மறந்துபோனவனாய்க் கேட்டேன்.  

“அதான் சொன்னோமே சார்...குருடுன்னு...” 

“என்ன சொல்றீங்க அமிர்தலிங்கம்...?” அதிர்ந்து போனேன் நான். உண்மையில் இதற்கு முன் இந்தப் பேச்சு வந்த நாளில் இச்செய்தி கருத்தில் வாங்கியதாகவே தோன்றவில்லை எனக்கு.  

“நாங்கதான் அன்னைக்கே சொன்னோமே சார்... நீங்க சரியாக் காதுல வாங்கல போலிருக்கு.. வள்ளுவர் நகர்ல ஒரு காப்பகத்துல விட்டுட்டாங்கன்னு...” 

“யாரு...?” 

“பஞ்சமியோட அப்பாருதான்...”  

“அவுரும் அவரு சம்சாரமும்...?”  

“ரெண்டும் இந்த வேதனைலயே மண்டையப் போட்ருச்சுங்க....” தன் தாயை ஏமாற்றி இப்படிப் பேதலித்து அலைய விட்டவனை என்றாவது பார்க்க நேர்ந்தால் கூடப் பாவம் என்று அந்தச் சிசு நிரந்தரமாய்த் தன் கண்களை மூடிக் கொண்டதோ? இறைவா...! இந்த உலகத்தில் ஏனித்தனை சோகங்களையும், வேதனைகளையும், உலவ விட்டிருக்கிறாய்? மனசு இம்மியும் தாங்காத அளவுக்கான இந்த அவலங்களெல்லாம் என்று முற்றிலும் அழிந்து படும்?என்ன வரம் வேண்டும்? கேட்டார் கடவுள். என்ன கேள்வி இது? அது கூடத் தெரியாத நீ என்ன கடவுள்? மனதின் வேதனையை மீறி தொடர்புடைய கவிதை வரிகள். கசிந்துருகும் எண்ணங்கள்.  

“எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்...தாய்ளி...வீட்;டுல சும்மாக் கெடக்காம கலகமா பண்றே? இன்னிக்கு ஒன்னை வெட்டிப் பொதச்சுடறேம்பாரு...”  

“ஐய்யய்யோ...விட்ருங்கோ... விட்ருங்கோ... வேண்டாம்... இனிமே உங்களைக் கூப்பிட்டு விட மாட்டேன்... என் பிள்ளையைக் கொன்னுடாதீங்கோ... அவன் எப்டியோ இருந்திட்டுப் போகட்டும்... நான் பார்த்துக்கிறேன்.... பகவான் மேல சத்தியம்.... அவனை விட்ருங்கோ...” 

“எடு அந்தச் சங்கிலிய... இந்தத் தூணோட சேர்த்துக் கட்டிப்போட்டாத்தான் அவன் பேசாமக் கெடப்பான்... அப்பத்தான் எல்லாருக்கும் நிம்மதி...” அம்மா தலையிலடித்துக்கொண்டாள். அப்பாவின் குறுக்கே விழுந்து காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். எத்தனை வருடங்கள்? என்ன பாடு? என்ன ஒரு கோரத் தாண்டவம்? இன்று நினைத்தாலும் உடம்பெல்லாம் நடுங்கத்தான் செய்கிறது.  

“வீட்டுல இருக்கிற நாலு பெண்டுகளுக்கும் காலா காலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்க வேண்டாமா? எத்தன நாளைககு இவனை இப்படிக் கூட வச்சிண்டு உழண்டுண்டிருப்பேள்? எங்கேயாவது ஆஸ்பத்திரில கொண்டு சேருங்கோ...அதான் சரி...” 

ஊரை விட்டுக் குடும்பத்தையே மாற்றியபோது சொல்லாமல்தானே கிளம்பியது. அத்தோடு ஒழிந்ததுதானே வெங்கு அண்ணாவின் அல்லல். அதற்குப் பின் அவர் யார் கண்ணிலும் படவேயில்லையே? 

“அய்யோ... என் பிள்ளை எங்க சீரழியறான்னு தெரியலையே... ஈஸ்வரா... நான் என்ன பாவம் செஞ்சேன்... என் தலைல ஏனிப்படி எழுதிட்டே? என் பையனைக் காப்பாத்து... என் பையனைக் காப்பாத்து...” - புலம்பித் தவித்துப் புழுங்கி என்ன பலன்? கடைசியில ஒண்ணுமில்லாமல்தானே போயிற்று.  

“அண்ணா... நாந்தான் ராமன் பேசறேன்... நம்ப வெங்கடேசன்.. உடம்பு முடியாமக் கெடந்து இங்கே கன்னாபட்டில காலமாயிட்டான்... போலீஸ் விசாரிச்சிண்டு வந்து என்கிட்டே சொன்னா... நீங்க ஒண்ணுக்கும் கவலைப் படாதீங்கோ... காரியமெல்லாம் முடிஞ்சிது... எப்பயும்போல உங்க ஜோலியப் பாருங்கோ... வச்சிரட்டுமா...?”  

சித்தப்பாவிடமிருந்து வந்த தொலைபேசிச் செய்திதான் கடைசியாக அவரைப்பற்றி அறிந்தது. வீட்டில் அம்மா, அப்பா, நாங்கள் என்று ஒருவர்கூட அவரை இறுதியாய்ப் பார்க்கவில்லையே? இப்படிச் சீரழிந்து காணாமல் போவதற்கு ஒரு பிறவியா? என்ன தலையெழுத்து இது? எந்த மூத்தோர் செய்த பாவம் இது? முடிஞ்சிது... என்று ஒரு வார்த்தை சொன்னார் அப்பா. அம்மாதான் நொடித்துப் போனாள். வெகு காலத்திற்கு அவளால் அந்தத் துயரத்திலிருந்து மீளவே முடியவில்லை.  

“ஏம்ப்பா ராமா... எல்லாம் முடிச்சிட்டுப் பேசின நீ மின்னாடியே ஒரு வார்த்தை சொல்லியிருக்கப் படாதோ... நான் வந்து கடைசியா என் பிள்ளையைப் பார்த்திருக்க மாட்டேனா... நா உனக்கு என்ன பாவம் பண்ணினேன்... ஏண்டாப்பா...?”  

“அய்யோ...மன்னி... நிலைமை புரியாமப் பேசறேளே... நான் என்ன செய்யட்டும்...? நான் பார்த்த போதே உடம்பு ரொம்ப அழுகிக் கெடந்தது. ஈ மொச்சிண்டிருந்தது... எங்கயும் தூக்கிண்டு கொண்டு வர்ற நிலமைல இல்லே... போலீஸ் வேறே நிக்கிறா சுத்திவர... என்னை என்ன பண்ணச் சொல்றே? நாலு பேரைச் சரி பண்ணி, சேர்த்து, தோள் சுமந்து, சூறைக்காட்டுல கொண்டு போடுறதுக்குள்ளே ஒம்பாடு எம்பாடு ஆயிடுத்து. அதப் புரிஞ்சிக்கோ... அந்தக் கிராமத்து மனுஷா மட்டும் ஒதவலேன்னா போலீஸ் அதை என்னென்னவோ மாதிரிக் கொண்டு போயிருப்பாளாக்கும்... நான் ஒருத்தன் ஒத்தையா நின்னுண்டு என்ன பண்ணுவேன். எனக்குக் கையும் ஓடலை... காலும் ஓடலையாக்கும்... கேள்வி மேல கேள்வியாக் கேட்குறான் அந்தப் போலீஸ்... உண்மையிலயே விசாரிக்கிறானா இல்ல காசு புடுங்கவான்னு தெரில... எப்படியோ சமாளிச்சு காரியத்த முடிச்சிட்டு வந்திருக்கேன்னா... என்னென்னவோ பேசறியே நீ... ஏதோவொரு டீக்கடைல தண்ணி சுமந்து விட்டிண்டிருந்திருக்கான்... அவா கொடுக்கிறதச் சாப்டுண்டு, அங்கயே வராண்டாவுல படுத்துண்டு.... என்னவோ அவனோட சட்ட துணி, அது இதுன்னு எதையோ கொடுத்தா... அதெல்லாம் வேண்டாம்னுட்டேன்.... யாருக்குத் தெரியும் இந்த விபரமெல்லாம்... எப்படி விசாரிச்சிண்டு எங்கிட்டே வந்து சேர்ந்தான்னே இன்னும் எனக்குப் பிரமிப்பா இருக்குதாக்கும்... போலீஸ்காரா சாதாரணப்பட்டவா இல்லே... இல்லேன்னா நம்ப குடும்பத்துலே யாருமே அவனைக் கடைசியாப் பார்க்க முடியாமப் போயிருக்கும்... அநாதைப் பொணமாப் போய்ச் சேர்ந்திருப்பான்...”  

வெங்கு அண்ணாவின் கதை முடிந்த கதை. படமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது மனதில். எங்கெங்கு பார்த்தாலும் எப்படி எப்படியோ ஆன துயரங்கள். சோகங்கள். வாழ்க்கை சந்தோஷமிக்கதாய், நிம்மதியானதாய் எவன் சொல்லி வைத்தது? ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு பிரச்னையை, சோகத்தை, வேதனையை மனதில் அழுத்திக் கொண்டுதான் அலைகிறான். . அதோடுதான் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது. அல்லது மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் மனத் தடைகளை நீக்கி மீண்டும் இயங்க வைப்பது வெறும் எண்ணங்கள் மட்டும்தானா? அனுபவ முதிர்ச்சி மட்டுமே ஒரு மனிதனைத் தூக்கி நிறுத்தி விடுகிறதா என்ன? மனிதன் வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து மீண்டு எழுவதற்கு ஆதார ஸ்ருதியாய் எவையெல்லாம் .அவனை வழி நடத்துகின்றன? பொருளாதாரத் தேக்க நிலையுடன் கூடிய பின்னடைவு இருக்கும் இடங்களில் இந்த சோகங்களெல்லாம் என்ன விகிதங்களில் பிரதிபலிக்கின்றன? அல்லது என்ன எதிர் வினைகளை எதிர்நோக்குகின்றன? எந்த உணர்வுகளில், பின்னணியில் பயணப்பட்டு தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றன?  

இந்தச் சக்கரங்கள் சுழன்று கொண்டேதானே இருக்கின்றன? நின்றால் உலகமே ஸ்தம்பித்ததாகி விடாதா? பிறகு மீண்டும் முடுக்கி விடுவது யார்? நமக்குள் நாமே தானே? இந்த வாழ்க்கை எத்தனை சோகங்களையும், வேதனைகளையும், அவலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது? மனித ஜீவராசிகள் எப்படியெல்லாம் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன?கேள்வி மேல் கேள்வி. அடுக்கு மேல் அடுக்கு. சேர்ந்துகொண்டேதான் போகிறது. எல்லாக் கேள்விகளுக்கும் என்றுதான் விடை கிடைக்கும்? அல்லது அப்படியே விலகாத திரைகளோடு இந்த வாழ்க்கை முடிந்து போய் விடுமா? அப்படித்தான் போய்க் கொண்டிருக்கின்றனவா? ஒரு முழுமையற்ற அந்த நாளின் இருள் சேரும் மாலைப் பொழுதினில் அங்கிருந்து கிளம்பி நடை பிணமாய் வெளியேறி வந்து கொண்டிருந்த வேளையில் சாலையோரமாய் இருந்த அந்தக் கோயிலின் கிண்டா மணி டணால் டணால் என்று தொடர்ந்து வேகமாய் ஒலித்து அந்தப் பிராந்தியத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தது.  

கற்ப+ர ஆரத்தி ஜெகச் ஜோதியாய் ஒளிர பக்திப் பரவசத்தோடு இருபுறமும் பக்தர்கள் கூடி நிற்க, நேர் பிராகாரத்தைப் பார்த்து சற்றே விலகி, தனித்துவமாய் வாய்கொள்ளாத வெள்ளைச் சிரிப்போடு எதையோ எதிர்நோக்கி இரு கைகளையும் ஏந்தியவாறு நின்று கொண்டிருந்த பஞ்சமியைக் காண நேரிட்டபோது, காலையில் மேற்கொண்டு எந்தக் கலகமும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதாக அவளின் அந்த வெள்ளந்தியான இருப்பு குறித்து உணர, இதற்கு முன் அந்தப் பகுதிக் கடைக்காரர்கள் சிலர் அம்மாதிரி ஒரு நிகழ்வின்போது அவளை சதும்ப அடித்துக் காயப்படுத்தியிருந்தது நினைவில் வந்து துன்புறுத்த, அம்மாதிரி எதுவும் இல்லை என்ற ஆறுதலே அப்போதைக்கு அவன் மனதை சாந்தப்படுத்துவதாய் இருந்தது.

- உஷாதீபன்

Pin It