நகரத்தைத் தாண்டி வெகு தொலைவுக்கு வந்து விட்டிருந்தது பேருந்து. அதுவரை என் கவனமெல்லாம் அருகில் தெரிந்த மலைகளின் மேலேயே இருந்தது. பயணத்தின் வெகு தொலைவுவரை அவை காணக்கிடைக்கும் என்ற ஆறுதலூட்டும்படி மலை நீண்டிருந்தது. அப்போது பேருந்து பயணத்தின் சீரான இயக்கத்தில் தடங்கல் உண்டாகும்படி ஏதோ நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து திரும்புகையில், என் இருக்கைக்கு நான்கைந்து இருக்கைக்கு முன்னே நடத்துனர் ஒரு பயணியிடம் எதுவோ விசாரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். 

“இப்ப டிக்கட் வாங்கப்போறயா, இறக்கி விடட்டுமா?’’ என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார். 

அவர் யாரை நோக்கி இந்தக் கேள்வியைத் தொடுத்தார் என்பது முதலில் தெரியவில்லை. அதற்கு வாய்பேற்படுத்தும்படி பிரச்சனைக்குரிய பயணி இப்போது எழுந்து நின்று கொண்டார். 

அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். முகத்தில் லேசான தாடி. வறுமையின் சுவடு எதுவும் அவரிடம் காணப்படவில்லை. ஏமாற்றுக்காரர் போலவும் தெரியவில்லை. பணத்தை எங்கேயாவது தொலைத்துவிட்டு எப்படியாது சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து பேருந்தில் ஏறிவிட்டிருக்கலாம். 

“நான் எதற்காக டிக்கட் வாங்க வேண்டும்?’’ என்று நடத்துனரிடம் அவர் கேட்டர். 

எகத்தாளமாக இல்லாமல் சாதாரணமாகத்தான் அவர் கேட்டார். 

இது என்ன கேள்வி? என்பதுபோல எல்லோரும் வியப்புடன் அவரைப் பார்த்தார்கள். சில கேள்விகள் சாதாரணமாகத் தோன்றினாலும் ஆச்சிரியப்படுத்துபவையாகத்தான் இருக்கின்றன; ஏதோ ஒரு புதிதான ஒன்றைப் பெறுவதற்காக வெட்டவெளியை நோக்கி வலைவீசுகின்றன. சம்பத்தைப்போல அவர் அடிப்படையான கேள்விகளில் உழல்பவராக இருக்கலாம். (‘இடைவெளி’ சம்பத்தைத்தைத்தான் சொல்கிறேன்) 

இந்தக் கேள்வி நடத்துனரை ஆத்திரப்படுத்தியது. 

“இது என்ன உங்கப்பன் வீட்டு பஸ்ஸுன்னு நெனைச்சியா? இந்த லொல்லெல்லாம் எங்கிட்ட வச்சிக்காதே, குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றயா?’’ 

அவர் குடித்திருப்பது போலத் தெரியவில்லை. 

அவர் சொன்னார்

“கலாட்டவெல்லாம் பண்ணவரல, நிஜமாகவே நான் டிக்கட் வாங்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவருக்குத் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்’’ 

“யாருக்கு?’’ 

பின்னால் திரும்பி ஆட்களை நோட்டம் விட்டவர், ‘அவர்தான்’ என்று நானிருந்த திசையில் கையைக்காட்டினார். 

‘யாரு அந்த நீலக்கலர் சட்ட போட்டிருக்கிறாரே அவரா?’ 

“அவருக்கு பக்கத்தில தாடிவச்சிருக்கிறாரே அவரு’’ 

என்னைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். நான் பயந்து போனேன். என்னை ஏன் இப்படி வேண்டாத சிக்கலில் மாட்டிவைக்க வேண்டும்

“அவர எதுக்காக கேட்கணுங்கிற? டிக்கட் எடுன்னா எடுக்க வேண்டியதுதானே’’ 

“தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும், இந்த விஷயம் அவருக்குத்தான் தெரியும்’’ 

நடத்துனர் என்னைத் திரும்பிப்பார்த்தார். நான் சங்கடத்துடன் நெளிவதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும். 

“அவரென்ன உன் கூட வந்தவரா?’’ என்று அந்த ஆளையே கேட்டார். 

“ஆமாம், அவர்தான் என்னை அழைத்து வந்திருக்கிறார்’’ என்றவர் என் பக்கம் திரும்பி ‘’சார் நான் டிக்கட் எடுக்க வேண்டுமா?’’ என்று கேட்டார். 

இந்தக் கேள்வியை எதற்காக என்னை கேட்கவேண்டும், இந்த ஆளுக்குக்கென்ன பைத்தியமா

ஏதாவது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலும், இத்துடன் இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பதாலும் ‘ஆமாம், டிக்கட் எடுக்கவேண்டும்’ என்றேன். 

‘அப்படியானால் எனக்கும் நீங்கள்தானே டிக்கட் எடுக்கவேண்டும்?’ என்று அவர் கேட்டார். நான் அதிர்ந்து போனேன். 

ஓட்டுனர் அவ்வப்போது திரும்பிப்பார்த்து சிரித்துக் கொண்டே பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அவருக்கு இதெல்லாம் வேடிக்கையாக தெரிந்திருக்க வேண்டும். என் சக பயணிகளுக்கு இப்போது நானும் ஒரு வேடிக்கை பொருள் போல ஆகிவிட்டதை உணரமுடிந்தது. சிலர் என் மேல் பரிதாபப்பட்டிருக்கலாம், சிலர் என்னை துரோகியாகவும் நினைத்திருக்கக்கூடும்; உடன் அழைத்துக்கொண்ட வந்துவிட்டு இப்படி கஞ்சத்தனம் செய்கிறானே என்று. 

அவர் எதோ சதியுடன் செயல்படுவதாகப் புரிந்து கொண்ட நான் அதிலிருந்து விடுபடுவதற்கான எத்தனங்களை செய்ய முயற்சித்தேன். 

‘நீங்கள் யாரென்றே தெரியவில்லை, எதற்காக உங்களுக்கு நான் டிக்கட் எடுக்கவேண்டும்? ஏன் வீணாக என்னை தொந்தரவு செய்கிறீர்கள்,’ என்று கேட்டேன். 

‘என்னைத் தெரியவில்லையா?’ அவர் வருத்தத்துடன் கேட்டார். 

இந்த விதமான கேள்வி எனது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இப்போதுதான் முதன்முதலாக அவரைப் பார்க்கிறேன். பத்துரூபாய் டிக்கட்டுக்காக தெரிந்த ஒரு மனிதரை தெரியாதது போல காட்டிக்கொள்ளக்கூடிய அளவுக்கு சுயநலம் கொண்ட மனிதனா நான்? எப்படி இதை மற்றவர்களுக்கு புரியவைப்பது

திரும்பவும் அவர் கேட்டார்

‘நிஜமாகவே உங்களுக்கு என்னைத் தெரியவில்லையா?’ 

‘ஆமாம், தெரியவில்லை’ என்றேன். 

அவர் சிரித்தார். அதில் வருத்தம் கலந்திருப்பது போலத்தான் இருந்தது. ஒரு டிக்கட் விஷயத்திற்காக சகமனிதர்களை இப்படிக்கூட சங்கடத்திற்குள்ளாக்கி காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மனிதரா இவர்

அவர் கேட்டார், ‘என்னை ஏன் தெரியாதது போல நடந்து கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை, நீங்கள் யாரென்று நான் சொன்னாலாவது நம்புவீர்களா?’ 

சந்தேகமில்லை அவர் ஏதோ திட்டத்துடன்தான் வந்திருக்கிறார்.  

‘நீங்கள்தானே ஜீ.முருகன்? நீங்கள் ஒரு எழுத்தாளர். இதுவரை உங்களது இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. நாவல் ஒன்றும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும்’ 

நான் அதிர்ந்துபோனேன். ஆமாம், அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது, சந்தேகமில்லை. அவரிடமிருந்து இனிநான் தப்பிக்க முடியாது. ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறோம். போர்ஹேவைப்போல நிச்சயம் இன்னொரு வயதான நானாக அது இருக்க முடியாது (போர்ஹேவைத் தெரியுமில்லையா உங்களுக்கு). என்னுடைய முகத்திற்கும் அவருடைய முகத்திற்கும் சம்மந்தமேயில்லை. அந்த ஆள் நல்ல கறுத்த நிறம். கேசத்திலிருந்து தொங்கும் தேன்கூடு போன்ற வடிவத்தில் முகம். மேலும் என்னுடைய கடந்த காலம் மட்டுந்தான் இவருக்குத் தெரிந்திருக்கிறது. இனிவரும் காலத்தில் நான் எழுதப்போகும் புத்தகங்களைப் பற்றியோ நான் ஆகப்போகும் விதம் பற்றியோ இவர் ஒன்றும் சொல்லவில்லை. ஒருவேளை இவர் எனது வாசகராக இருக்கலாம். ஆனால் என்னுடைய பிரபல்யத்தைப்பற்றி எனக்கேத் தெரிந்திருக்கையில் இது எவ்வளவு மடத்தனமான எதிர்பார்ப்பு! அப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. 

நான் கேட்டேன்

‘உண்மைதான், உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் உங்களை யாரென்று தெரியவில்லையே’ 

‘என்னைத் தெரியவில்லையா?’ வியப்புடன் அவர் கேட்டார். 

நான் என்ன சொல்வது? ஏதோ ஒரு விபரீதம் வெளிவரப்போகிறது என்று அச்சத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

‘நீங்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ‘அதிர்ஷ்டமற்ற பயணி’ கதையின் பிரதான கதாப்பாத்திரம்தானே நான்? இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு நீங்கள் தானே அழைத்து வந்திருக்கிறிர்கள்?’ என்று அவர் கேட்டார். 

அப்போதுதான் எனக்கு விளங்கிற்று. இந்த குதர்க்க விளையாட்டுக்குள் தான் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன் என்று. தர்க்கப்படி அவர் சொல்வதும் சரிதான். நான்தான் அவருக்கு டிக்கட் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பஸ்ஸில் பயணிக்கும் கதாப்பாத்திரங்களுக்கெல்லாம் டிக்கட் வாங்கவேண்டுமென்றால் எந்த எழுத்தாளனும் கதையில் அவர்களை நடக்க வைத்தே அல்லவா கூட்டிக் கொண்டு போவான். இன்றைக்குப் பார்த்து என் நிலமைவேறு சரியில்லை. என்னிடம் இப்போது ஒரு கோட்டருக்கு மட்டும் தான் பணம் இருக்கிறது. அங்கே நண்பர்கள் எனக்காக காத்திருப்பார்கள். அவர்களுடைய பொருளாதார நிலை எப்படியிருக்கிறதோ தெரியவில்லை. இந்த அழகில் இவருக்கு நான் டிக்கட் எடுக்கவேண்டுமாம். 

அவர் சொன்னார்

‘உங்கள் உதாசீனம், உண்மையாகவே என்னை வருந்தச் செய்கிறது. ஒரு மனிதனின் எதார்த்த இருத்தலைப் பற்றியோ, அவனுடைய துயரமிகு மனோபாவத்தைப் பற்றியோ நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை. உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கதை.’ 

எங்களுடைய இந்த உரையாடல் மற்ற பயணிகளை வியப்படையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடத்துனர் கூட இது எப்படி முடியப்போகிறதோ பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் இருப்பது போலப் பட்டது. 

நானும் விட்டுக் கொடுப்பதாக இல்லை, எனக்கான நியாயங்களை சொல்லியாக வேண்டும் இல்லையா?  

‘நீங்கள் சொல்லும் அந்த துயரம், ட்ராஜடி எல்லாம் கடந்த நூற்றாண்டோடு காலாவதியாகிவிட்டது. எழுத்தாளன் அவனுடைய கலைக்கு மட்டுந்தான் பொறுப்பேற்க முடியும், மற்றபடி அவன் கருணையற்றவனாகவும் இருக்கலாம் என்று வில்லியம் பாக்னர் சொல்லியிருக்கிறார் (வில்லியம் பாக்னர் - அதுதான் அந்த அமேரிக்க எழுத்தாளன்). அவனுக்கு வேண்டியதெல்லாம் காகிதம், உணவு, சிகரெட், கொஞ்சம் விஸ்கி...’  

‘நிதானம் தவறிய ஒரு குடிகாரனாகவோ, வறுமையின் இயலாமையில் கௌரவத்தை இழந்து நிற்கும் மனிதனாகவோ, ஏன் ஒரு ஏமாற்றுக்காரனாகக்கூட இருந்திருக்கலாம், நானோ அதிர்ஷ்டமற்ற ஒரு பயணியாகிவிட்டேன்’ என்று அவர் முணுமுணுக்கையில், (எதிர்பாராத) அந்த சம்பவம் நடந்தேறுகிறது. நாங்கள் பயணம் செய்யும் பேருந்து பயங்கர விபத்தொன்றில் சிக்கிக்கொள்கிறது. எதிரே வந்த லாரி ஒன்றை தவிர்க்கும் பொருட்டு இடது பக்கமாக திரும்பி, ஒரு புளிய மரத்தின் மேல் மோதிவிடுகிறது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிர் துறக்கிறார்கள், நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. இறந்தவர்களில் ஒருவர் யாரென்று தெரியவில்லை; இன்னொருவர் ஓட்டுனர் மற்றவர் டிக்கட் வாங்கியிராத நம் பயணி.  

இந்த கதையின் முடிவில் ஏதோ சதி நடந்திருப்பதாக உங்களுக்குத் தோன்றக் கூடுமென்றால் நான் ஓன்றும் சொல்வதற்கில்லை. ஒருவேளை அந்த பயணி திரும்பி நின்று தேடிய கணத்தில் என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால், எனக்குள் அந்தப்பதட்டம் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை தொடங்கியிருக்காதோ என்றும் தோன்றுகிறது

- ஜீ.முருகன்

Pin It