வாழ்க்கை என்னை தள்ளி விட்டு என் மேல் ஏறி ஓடிக் கொண்டிருக்கிறது.மனமோ இரண்டு ஆண்டுகளுக்கு பின்தங்கி நிற்கிறது..

எப்படி இரண்டு ஆண்டுகள் கழிந்தது என்றே தெரியவில்லை.ஒரு மனிதனின் மரணம் எத்தனை மனிதர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை எண்ணும் போது வியப்பாக இருக்கிறது.

என் நண்பனின் மரணம் என்னுடைய வாழ்க்கையின் திசையினையே மாற்றி விட்டது எனும்போது அந்த நிகழ்வினை என்னால் மறக்க முடியவில்லை.

இன்று அவனுடைய இரண்டாவது நினைவு நாள்.. போன வருடம் அருகில் இருக்கும் ஆதரவற்றோர் விடுதியில் உணவு பறிமாறினோம். ஆனால் இந்த வருடம் எங்கள் நட்பு வட்டத்தினர் யாரிடமும் பணம் சுத்தமாக இல்லை.. அதனால் போஸ்டர் மட்டும் ஒட்டினோம் .அடுத்த வருடம் நிச்சயமாக பெரிய அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தீர்மானம். ஆனாலும் பணப் பற்றாக்குறை தானே எப்போதும் சிக்கல்.

இரண்டு ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. நான் இத்தனை நாட்களாக தொடர்ந்து செய்யும் ஒரே வேலை தெருத்தெருவாக தனியாகத் திரிவது மட்டும் தான். அப்படி நடக்கும்போது மனம் கொஞ்சம் லேசாகும். எனினும் என் வாழ்க்கையில் நடந்து விட்ட மாற்றங்களை அசை போடுவதும் தவறாமல் நடக்கும். அந்த வலியிலும் ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது.

அப்போது நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டு இரவு 8 மணி வரை வகுப்புகள் எல்லாம் வைத்திருந்தார்கள். ஆனால் உண்மையில் அதன் மூலம் கொஞ்சம் இருந்த படிக்கும் ஆர்வமும் காணாமல் போயிருந்தது. வகுப்பில் இருக்கும் மாணவிகளை எல்லாம் வேறு வகுப்புக்கு அனுப்பி விட்டு ஆசிரியர்கள் அங்கு சென்று விடுவர். எங்கள் வகுப்பிற்க்கு ஆசிரியர் எவரும் வரமாட்டார்கள். பிறகு எங்கள் ஆட்டத்தைக் கேட்கவா வேண்டும்?

அன்று பள்ளியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். கடைசியாக மனக்கவலை ஓரத்தில் எட்டிப்பார்க்காமல் மகிழ்ந்தது அன்றுதான். மழை வேறு. மழை பெய்ததால் அன்று 5 மணிக்கெல்லாம் வகுப்புகள் முடிந்திருந்தன. நண்பனுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.. வரும் வழியில் கௌதம் என்ற நண்பன் பதற்றத்துடன் சென்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவன் அவசரமாக என் அருகில் வந்து “உனக்குத் தெரியுமா நம்ம ஜே.பி செத்துட்டாண்டா" என்றான்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இதயம் வேகமாகத் துடித்தது.

"என்னடா சொல்ற? எப்படி ஆச்சு?" என்றேன்.

விபத்தாக இருக்க வேண்டும் என்று நொடிப்பொழுதில் என் மனம் ஊகித்தது. அவனுக்கு பைக் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளியில் இருந்து இப்போதெல்லாம் தாமதமாக வருவதால் அவனோடு நேரம் செலவழிக்க முடியவில்லை. இல்லையெனில் என் பொழுதுகள் அவனோடு தான் கழியும்.

"தற்கொலை பண்ணிட்டாண்டா. பதினோரு மணிக்கு தூக்குல தொங்கிட்டானாம்." என்றான்.

"என்னடா ஆச்சு?" எனக் கேட்டேன் பதற்றத்துடன்.

"அவன் ஏற்கனவே புது பைக் கேட்டுக்கிட்டு இருந்தான்னுதான் உனக்குத் தெரியுமில்லே. அதனால வீட்ல பெரிய சண்டை வந்திருக்கு போல. பாவிப் பையன் கேவலம் வண்டிக்காக உயிரை விட்டுட்டான்" என்றான்.

என்னால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. என் வீட்டுக்குப் போகும் வழியிலிருந்து பார்த்தால் அவன் வீடு தெரியும். பதறியடித்து வீட்டுக்கு ஓடினேன். அப்போதும் கூட என்னால் நம்ப முடியவில்லை.

அவன் வீடு முன்பு கூட்டமாக இருந்தது. விக்கி வந்து கொண்டிருந்தான். அவன் யதார்த்தமாக இந்தப் பக்கம் வந்து செய்தியினை அறிந்திருக்கிறான் போலும். அவன் கண்கள் கலங்கியிருந்தது. என்னை அணைத்துக் கொண்டான்.

"வேகமாக் கெளம்பு.. ஜீ.ஹெச் மார்ச்சுவரியில் வெச்சிருக்காங்க. பசங்களுக்கு சொல்லிரு" என்றேன். என்னால் வேறெதுவும் பேச இயலவில்லை.

வீட்டுக்கு வந்து அவசர அவசரமாகக் கிளம்பினேன். அவன் இறந்து விட்டான் என்று என் குடும்பத்தாருக்கு மத்தியானமே தெரிந்திருக்க வேண்டும். இப்போது நான் போகாமலிருக்க முடியாது என்பதும் என்னைத் தடுக்கவும் முடியாது என்பதும் என் அப்பாவுக்கு நன்றாகத் தெரியும்.

வாழ்க்கையில் அந்த நாளை மறக்க முடியாமல் போனதற்கு மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறையும் கூட காரணம் தான்... ஏதோ சாக்குத் துணிகள் போல சடலங்கள் ஒன்றின் அருகில் ஒன்றாகப் போட்டிருந்தார்கள்.

பல கட்டுகளைத் தாண்டி இறுதியில் ஒரு அறையின் படுக்கையில் அவன் உடம்பைப் வைத்திருந்தார்கள். அந்த அறையின் குளுமை உடலையும் மனதையும் என்னவோ செய்தது. அவனை வைத்திருந்த படுக்கையின் கீழே இரண்டு பிணங்கள் ஒரே கைலிக்குள் போர்த்தப்பட்டு கிடந்ததை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. ஒருவேளை இவனது உடலும் பார்வை நேரத்துக்குப் பிறகு தரைக்குப் போகலாம். யார் கண்டது. நாங்கள் அந்தக் கோலத்தில் அவனைப் பார்க்கவில்லை. பார்க்கும் திராணியும் எங்களுக்கு இல்லை.

அவன் உடலைக் கூறு போட்டு அடுத்த நாள் மதியம் கொடுத்தார்கள். பெற்றோர்கள் கதறி அழுது கொண்டிருந்தார்கள். என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவனது தாயின் வேதனை பலமடங்கு அதிகரித்ததற்கு காரணம் நாங்கள் எப்போதும் ஒன்றாக இருந்தது மட்டுமல்லாமல் உருவ ஒற்றுமையும் கூடத்தான். அதைப் புரிந்து கொண்டு நான் கொஞ்சம் தள்ளியே நின்றேன்.

அவனது இறுதிப் பயணம் தொடங்கியபோது எங்கள் தெருக்காரரான கணபதி மாமா என்னை "வண்டியில ஏறுடா" என்றார். ஆனால் இப்போது நான் சங்கடத்தோடு சேர்ந்த தர்ம சங்கடத்தில் வேறு இருக்கிறேன். என்னால் மயானத்திற்க்குப் போக முடியாது. அவரிடம் வரவில்லையென்று கூறிவிட்டேன்.

காரணம் வேறு ஒன்றும் இல்லை.. நான் பிறப்பால் ஒரு பிராமணன். அதனால் தந்தையின் மறைவுக்கு முன் மயானம் சென்றால் தந்தைக்கு ஆகாதாம். வீட்டைவிட்டு கிளம்பும் முன்னே என்னிடம் உறுதியாகக் கூறித்தான் அனுப்பினார்கள். போனால் கண்டிப்பாக தெருக்காரர்கள் வீட்டில் சொல்லிவிடுவர். அதோடு ஒருவேளை நான் சென்று இயல்பாக அவருக்கு தலைவலி வந்தால் கூட என் மீது பழி போட்டுவிடுவார்கள். இந்தக் காரணங்களால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு செல்லாமல் இருந்தாலும் கேவலம் மூட நம்பிக்கைகள் என் நண்பனின் இறுதிப் பயணத்திற்கு நான் செல்வதைத் தடுத்து விட்டதே என்று நினைக்கும் போது குற்ற உணர்ச்சி இப்போதும் பீறிட்டு வருகிறது.

அந்த கணபதி மாமா எனைப் பற்றி என்ன நினைப்பார்? எவனோ எழுதி வைத்த சாஸ்திரம் ஏன் என்னுடைய நெருங்கிய நண்பனின் இறுதிப் பயணத்தில் என்னை கலந்து கொள்ளத் தடையாயிருந்தது?

அன்று நான் வீடு திரும்பும் போது வீட்டுக்குப் போவதாகத் தோன்றவில்லை. என் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது இது தான்-ஒரு மனிதனின் உணர்வுகளைவிட, அவனது சுதந்திரத்தைவிட வேறென்ன பெரியதாக இருக்க முடியும்?

இந்தக் கேள்விகள் தான் என்னை இன்று ஒரு கம்யூனிஸ்ட் ஆக்கியிருக்கிறது என்பதால் தான் இதையெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். எனினும் இதை நான் எழுதியிருக்கக் கூடாது இல்லையா?!!!!!!!

Pin It