கல்யாணமாகி ஒரு மாதம் - A
கல்யாணமாகி 2 வருடம் - B
----------
ஆருயிர் நண்பன் ரமேஷ் - C
கண்ணதாசன் பாடல் -  D

A

"என்னங்க உங்களுக்‍கு ஹார்லிக்‍ஸ் வேணும்மா, பூஸ்ட் வேணும்மா"

இங்கி, பிங்கி போட்டு பார்த்ததில் பூஸ்ட்தான் வந்தது. ஆனால் எனக்‍கு ஹார்லிக்‍ஸ்தான் பிடிக்‍கும். அதனால்,

"எனக்‍கு ஃபில்டர் காஃபிதான் வேணும்"

B

"எருமைமாடு அந்தப் பாலை குடிச்சாத்தான் என்ன? அதுல என்ன வெஷம்மா கலந்திருக்‍கு, அப்பனும், பிள்ளையும் ஒரே மாதிரி வந்து வாச்சிருக்‍கு பாரு. எனக்‍கு வேலை வைக்‍கணும்னே பிறந்து தொலைச்சிருக்‍கு"

"ஏய்..... ஏண்டி பிள்ளைய திட்டுற"

"ம்....... எனக்‍கு கிறுக்‍கு பிடிச்சிருக்‍கு அதான் திட்டுறேன்"

"உனக்‍கு திமிறு அதிகமாயிடுச்சு"

"அதுக்‍கு இப்ப என்ன பண்ணணும்ங்கிறீங்க"

"இந்தா நீ போட்ட காஃபி, போய் எருமைமாடுக்‍கு ஊத்து"

"ம்ஹூம்.... இந்த ஊர்ல புதுசா ஒரு எருமை மாட்டை நான் எங்க போய் தேடுறது, நீங்களே குடிங்க"

மெதுவாக  " இதுல மரியாதை ஒரு கேடு"


A

"ஏங்க நமக்‍கு குழந்தை பிறந்தா என்ன பேரு வைக்‍கலாம்"

"விஜய், சூர்யா, தனுஷ்......."

"அதெல்லாம் வேண்டாம், வித்தியாசமா வைக்‍கணும்.....ஷ்...ஸ்.... அப்படின்னு முடியணும்"

"ஹ்ரித்தீஸ், சதீஸ், ராகேஷ்......"

"ம்ஹூம், வடமொழி பேர் எல்லாம் வேண்டாம்"

"முகேஷ், பிரகாஷ், சுபேஷ், வீரேஷ்....."

"எதுவுமே புடிக்‍கலைங்க"

B

"அடேய் சுப்பையா, டேய் சுப்பையா......அறிவு கெட்டவனே எங்க போய் தொலைஞ்ச இப்ப சாப்பிட வரப்போறியா இல்லையா"

(அலுவலகத்திற்குள் இருந்து வீட்டிற்குள் நுழையும் கணவன்)

"ஏண்டி எங்க அய்யா பேரை இப்படி ஏலம்போடுற"

(முறைப்பான ஒரு பார்வை) "ஏன்.... உங்க அய்யன் பேரு என்ன ஒலகத்துல இல்லாத ஓவியமான பேரா...... அந்தப் பேரைச் சொல்லிக்‍ கூப்ட்டா அவ்ளோ கோபமா உங்களுக்‍கு, அழகேசன்னு எங்கய்யா பேரை வைக்‍கிறதுக்‍கு துப்பில்ல, அப்படி வச்சிருந்தா உங்க கவுரவம் காத்துல பறந்திருக்‍குமாக்‍கும்"

"கூட கூட பேசுன பல்ல ஒடைச்சிடுவேன் ராஸ்கல்"

"ஓஹோ.... என் கை என்ன பூ பறிச்சுகிட்டு இருக்‍குமா.... நேரா போம்பளை போலீஸ் ஸ்டேஷனுக்‍குப் போயி, வரதட்சணை கொடுமை கேஸ் கொடுத்திருவேன் ஜாக்‍கிரதை"

A

"ஏங்க எங்க வீட்டுல 4 பவுன் நகை கம்மியா போட்டதுல உங்களுக்‍கு ஏதும் கோபமாங்க"

"அப்படில்லாம் ஒண்ணுமில்லையே"

"ஏன் கோபம் கிடையாது"

"அதான் 60 கிலோ தங்கத்தை அப்படியே கொடுத்துருக்‍காறே உங்கப்பா"

"சும்மா பொய் சொல்லாதீங்க, நான் வெறும் 55 கிலோதான்"

"ஓ​ஹோ.... அப்போ நீ 55 கிலோ தாஜ்மஹாலா"

"ச்சீ.... போங்க"

B

இடம் : ரயில்வே ஸ்டேஷன்

"ஏங்க ஒரு ரூபாய காயின் ​இருக்‍கா"

"ஏண்டி"

"குடுங்க"

"ஏன்னு கேக்‍குறேன்ல" சட்டைப்பையில் கைவிட்டு எடுத்துக்‍ கொள்கிறார்.

"ஒத்த ரூபாய்க்‍கு ஐ.நா. சபை லீடராட்டம் கேள்வி"

எடைபார்க்‍கும் எடை மெஷினில் ஏறி நின்று எடை பார்க்‍கிறார்

"ஏங்க இந்த மெஷின் சரியில்லைங்க"

"ஏண்டி"

"75 கிலோ காட்டுது, என்னோட எடை என்ன 75 கிலோவா"

"இல்லை எழுபத்தி நாலே முக்‍கா"

"ஏன் உங்களுக்‍கு ஆர்யா மாதிரி ஸ்லிம்மா இருக்‍கிறதா நெனைப்பாக்‍கும்"

"நீ பேசாமா வாறியா"

A

"ஏங்க இந்த சர்ட்ட போடுங்க. அப்போத்தான் விஜய் மாதிரி அழகா இருப்பீங்க"

"இல்லம்மா எனக்‍கு விஜய் ஸ்டைல்ல ட்ரெஸ் பண்ண புடிக்‍காது, ஐ லைக்‍ ஒன்லி தல அஜீத்"

"ம்... உங்கள முதல் தடவையா போட்​டோவுல பார்த்தப்ப அஜீத் மாதிரிதான் இருந்தீங்க"

"ம் என்னோட ஃபிரண்ட்ஸ் கூட என்னை 'தல'ன்னு தான் கூப்புடுவாங்க."

"அதுக்‍காக ரேஸ்ல போற மாதிரி எல்லாம் வண்டி ஓட்டக்‍ கூடாது"

"ஓகே.... உனக்‍காக மெதுவா ஓட்டுறேன்"

B

"ஏங்க உங்களுக்‍கு அறிவே இல்லையா.... ஏன் அந்த குப்பை லாரி பின்னாடியே வண்டிய ஓட்டுறீங்க. தாண்டி போக வேண்டியது தான..."

"வழிய விட மாட்டேங்கிறாண்டி, கொழுப்பெடுத்தவன் ரோட்டை குத்தகைக்‍கு எடுத்தவன் மாதிரி போய்க்‍கிட்டு இருக்‍கான்"

"ஏங்க, இந்தவண்டிய மாத்தி தொலைச்சாதான் என்ன?.... ஏன் மானத்தை வாங்குறீங்க"

"வண்டி ஓட்டும் போது தொணத் தொணங்காதடி  லூசு"

"ஆமாம்.... மனசுக்‍குள்ள  போயிங் விமானம் ஓட்டுறதா நெனைப்பு, வரட்டும் அந்த பேரிச்சம்பழக்‍காரன்... இந்த ஒன்றையனா ஸ்ப்லெண்ட்ரை ஒடைச்சு அவன்கிட்ட குடுக்‍கல.... என் பேர மாத்திக்‍கிறேன்"

A

"இங்க பாரும்மா, டெய்லி டேட்ஸ் சாப்பிடணும்..... அப்போதான் உடம்புக்‍கு நல்லது, ​டேட்ஸ்ல நெறைய இரும்புச்சத்து இருக்‍கு தெரியுமா"

"அதெல்லாம் வேண்டாம்ங்க... எனக்‍கு பேரிச்சம்பளம் பிடிக்‍காது"

"டெய்லி ஒரு பேரிச்சம்பளமாவது சாப்பிட்டாத்தான் ஒடம்புக்‍கு நல்லதுன்னு டாக்‍டர் சொல்லியிருக்‍காரு, ஒரு ஆப்பிளாவது சாப்பிடு"

"எனக்‍கு ஆப்பிள் வேண்டாம்"

"வேற என்ன வேணும்"

"பலாப் பழம்தான் வேணும்"

"ஒரு முழு பலாப்பழம்மா"

"ஐயோ..... ஒரு சுளைதாங்க, சும்மா கிண்டல் பண்ணாதீங்க"

B

"ஏங்க .....பைனுக்‍கு சாப்பிடறதுக்‍கு ஃப்ரூட்சே இல்லைங்க.... நான் சொல்லறத எல்லாம் வாங்கிட்டு வாங்க"

"சொல்லு"

"ஒரு கிலோ ஆப்பிள், ஒரு கிலோ ஆரஞ்சு, 2 தண்ணிப்பழம், ஒரு பலாப்பழம், திராட்சை சீட்லெஸ் ஒரு கிலோ"

"ஏண்டி கடை வைக்‍கப் போறியா"

"சொல்றத மட்டும் கேளுங்க..... சீதாப்பழம் ஒரு கிலோ, கொய்யா ஒரு கிலோ, வாழைப்பழம் ஒரு சீப், அப்படியே 4 எலும்பிச்சம்பழம் வாங்கிக்‍கோங்க"

சிறிது நேரம் கழித்து

"என்ன யோசிக்‍கிறீங்க இன்னும் போகலையா?"

"இல்லை பழக்‍கடைய இங்க கொண்டு வர்றதவிட நாம பழக்‍கடைக்‍கு ஷிப்ட் ஆயிட்டா என்ன? இது பெட்டர் ஐடியாவா தோணல"

A


"என்னங்க, ஏதாவது ஒரு அப்பார்ட்மென்ட்ல நல்ல வீடா பாருங்க..... அப்போதான் நமக்‍கு சேஃப்டி, கரண்ட் லைன் பீஸ் போகாது, தண்ணிப்பிரச்னை இல்லை, பிரச்னையே இருக்‍காதுங்க"

"சரிம்மா, நீ சொன்னாலும், சொல்லலைன்னாலும்நான் அபார்ட்மென்ட்லதான் வீடு பார்க்‍கப் போறேன், போதுமா...."

"தேங்ஸ்ங்க....."

B

"யோவ் இப்டி 2 வது மாடில வீடு பாத்துருக்‍கியே, கரண்ட் போச்சுண்ணா, தண்ணி என்ன வானத்துல இருந்தா வரும், போய் 2 குடம் தண்ணி அடிச்சுட்டு வாங்க"

"அடிச்சுட்டு வர்றேண்டி, இன்னைக்‍கு நைட் 2 ரவுண்ட் தண்ணியடிச்சுட்டு வந்து உன்னை வச்சுக்‍கிறேன், என்னையா வேலை வாங்குற, இதுல யோவ்ன்னு வேற கூப்பிடுற, பாத்துக்‍கிறேண்டி...... பாத்துக்‍கிறேன்...."

"இந்த வேலைய செய்யக்‍ கூட ஒடம்பு வளையலைன்னா என்னைய மனுஷன் நீ, குடிக்‍கிறதுக்‍கு ஒரு காரணம் வேற, இந்த மாதிரி அல்ப விஷயத்துக்‍கு நாங்களும் குடிக்‍க ஆரம்பிச்சா உலகம் தாங்காது. வீடு பாத்திருக்‍கிற மொகரைய பாரு, ஒரு காய் வாங்க முடியுதா.... ஒரு பால்பா க்‍கெட் வாங்க முடியுதா.... எல்லாத்துக்‍கும் கீழ இறங்கி ஏற வேண்டியிருக்‍கு.... கேஸ் கம்பெனி காரன் கூட மேல வர 40 ரூபாய் கேக்‍குறான். எல்லாம் என் தலையெழுத்து"

A

"என்னங்க எலெக்‍ட்ரிக்‍ ஸ்டவ்லயே எத்தனை நாளைக்‍குங்க சமைக்‍கிறது"

"அதான் கேஸ்க்‍கு அப்ளை பண்ணியாச்சுல, இன்னும் 15 நாள்ள வந்துரும்மா"

"அது வரயெல்லாம் என்னால பொறுக்‍க முடியாது, எலெக்‍ட்ரிக்‍ ஸ்டவ்ல சமைச்சு முடிக்‍கிறதுக்‍குள்ள போதும் போதும்னு ஆயிடுது"

"சரி கவலையை விடு 5 ஆயிரம் ரூபாய் செலவானாலும் பரவாயில்லை, இன்னைக்‍கே, கமர்ஷியல் சிலிண்டர் ஒண்ணு கொண்டு வந்திடுறேன்"

"தேங்க்‍ஸ்ங்க, கேஸ் வந்ததுக்‍கு அப்புறம், உங்களுக்‍கு அறுசுவையும் வகை வகையா சமைச்சுப் போடுவேன் பாருங்க"

B

"அடியே பழைய சோத்த வச்சுட்டுப் போறியே, கொஞ்சம் ஊறுகாயாவது வைடி"

"கெட்டுப் போச்சு........"

"வெங்காயம் கூட இல்லையா"

"இல்லை....."

"வெறும் சோத்த எப்டி சாப்டுறது"

"ஒரு கையால அள்ளி, வாய் வழியா சாப்பிடுங்க, உலகத்துல எல்லாரும் அப்படித்தான் சாப்பிடுவாங்க"

"என்னடி... நக்‍கல் அதிகமாயிகிட்டே ​இருக்‍கு"

"மனசுக்‍குள்ள என்ன பிர்லா பேரன்னு நெனைப்பா, போடுறத தின்னுட்டு கெளம்புங்க"

C

"ஹாய்டா மச்சி"

"ஹாய்டா"

"ஏன்டா மச்சி அடுத்த மாசம் உனக்‍கு கல்யாணம்ல"

"ஆமாண்டா..... மறக்‍காம வந்திரு"

"ஏன்டா, உன் வுட்பி கராத்தேல ப்ளாக்‍ பெல்ட்டாமே, நிஜமாவா..."

"ஆமாண்டா மச்சி, கையால ஒரே அடி....... தேங்காயை ரெண்டா ஒடைச்சிடுறான்னா பாத்துக்‍கோயேன்"

"ஓஹோ....."

(சிறிது நேரம் மயான அமைதி)

"ஆமா, ஏண்டா மச்சி கேக்‍குற"

"ஒண்ணுமில்ல சும்மாத்தான் கேட்டேன்"

(சிறிது நேரம் மயான அமைதி)

"மச்சி, இந்த ஒருவனுக்‍கு ஒருத்திங்கறதுல உனக்‍கு நம்பிக்‍கை இருக்‍காடா...."

"என்னடா லூசு மாதிரி பேசுற..... அதானடா நம்ம பாரம்பரியம், அதானடா நம்ம கலாச்சாரம்..... நீ என்ன அமெரிக்‍காவுலயா பொறந்திருக்‍க"

(சிறிது நேரம் மயான அமைதி)

"ஓ.கே. மச்சி ஹேப்பி மேரீடு லைஃப்"

D-கண்ணதாசன் பாடல்

"...... உனக்‍கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு......."

Pin It