பாம்பு படம் காட்டிய கதை

கல்தோன்றி மண் தோன்றாத காலத்து முன்தோன்றிய மூத்தகுடிகள் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஒரு வளமான தேசத்தின் குடிமக்கள் வர்க்க, இன, மொழி, சாதி, மத ஒடுக்குமுறைகளாலும், சுரண்டல்களாலும் பெரும்துயரில் சிக்குண்டு அவதிப்பட்டுக் கிடந்தனர். அவ்வேளையில் ஒரு நச்சுப் பாம்பு குட்டி ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு படம் காட்டிக் கொண்டிருந்தது. சோசலிசம்… சுதந்திரம்… விடுதலை…என்று விதவிதமாய் படங்கள் காட்டியது. அந்தப் பாம்புக் குட்டியை போனால் போகட்டும் என்று மக்கள் காப்பாற்றினார்கள். ஆனாலும் அந்த பாம்புக் குட்டி விடாமல் படம் காட்டிக் கொண்டிருந்தது. வேடிக்கைக் காட்டினால் கூட்டம் கூடத்தானே செய்யும். அந்த பாம்புக் குட்டியை வேடிக்கை பார்க்க பெரும்கூட்டம் கூடியது. கும்பலைப் பார்த்ததும் அந்த பாம்புக் குட்டி அடுக்கு மொழியில் அலங்கார வார்த்தைகளை அள்ளி வீசியது. “விடுதலை.. விடுதலை.. விடுதலை..” என்று பெருங்குரலில் முழங்கத் தொடங்கியது. உரிமையே உரிமை என்று மேடையில் நாடகம் போட்டது. கண்ணகி, கற்பு என்று கதைகள் சொன்னது…, பாடியது, ஆடியது, கூத்தாடியது. வித விதமாக வளைந்து நெளிந்தது.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆளுக்கும், ஒவ்வொரு சமயத்திற்கும் தகுந்தாற் போன்று ஒவ்வொரு படத்தைக் காட்டியது. அதன் பளபளப்பில், அடுக்குமொழியில், படமெடுத்து ஆடியதில் பெரும் கூட்டம் மயங்கியது. தானைத் தலைவா, உலகத் தலைவா..ஒப்பற்ற ஒரே தலைவா.. என்று கொண்டாடியது. நச்சுப்பாம்பை நல்ல பாம்பென நினைத்து மக்கள் அரியணை ஏற்றினர்.

ஆட்சிக் கட்டிலை கண்டதும் கண்முன் தெரியாமல் ஆளவட்டம் போட்டது. சுதந்தரம் நாறுகிறது, சுயாட்சி மணக்கிறது என்று திருப்பிப் போட்டது. நாற்காலி சுகத்தில் பிதற்றி நாற்காலியைப் பின்னி பிணைத்துக் கொண்டது. கண்ணகி, கற்பு என்று கதை விட்டதை மறந்து மனைவி, துணைவி…. தலைவி... சைடு.. கீப்… என்று வகைவகையாய் வகை தெரியாமல் வாழ்ந்தது. வதவதன்று தேசமெங்கும் குட்டிகளைஒ போட்டது. அவைகள் ஒவ்வொன்றும் படமெடுத்து எங்கும் ஆடி ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டிருந்த‌ன. அவைகளை சொன்னால் இந்த குட்டிக் கதை பெரும் கதையாடலாய் நாறும்.

பின்பு திடுமென ஒருநாள் அந்த நல்ல பாம்பு ஒரு கொடிய விரியன் குட்டியை போட்டது. இரண்டு ஆண்கள் இணைந்துதான் அய்யப்பன் சாமி பிறந்தார் என்பதை நம்பும் மக்கள் இதையும் நம்பினர். அது வளர்ந்ததும் ஒன்றை ஒன்று விழுங்க முயன்றது. ஒன்றை ஒன்று மேடை போட்டு திட்டின. ஆனால் திரைமறைவில் கூடி குலாவின. இவ்விரண்டுக்கும் இடையில் நடந்த சண்டைகளில் நாடே நாறிப் போனது. அந்த நாட்டில் நல்ல பாம்புக் குட்டிகளும், விரியன் குட்டிகளும் மட்டும் வாழமுடியும் என்று ஆனது. அது மனிதர்கள் வாழ முடியாத தேசமாயிற்று. இந்த பாம்புகளின் மகுடி ஒசையில் நாடே மயங்கி நாறிக் கிடந்தது.

மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கம் தெளிந்து உற்று நோக்கினர். அரியணையில் இருந்தபொழுது அவைகள் குடித்த மனித உயிர்கள் கணக்கில் அடங்காதவை. பாம்புப் புற்றுகளை தேசமெங்கும் கட்டி எழுப்பினர். அதுவும் அதன் பரிவாரங்களும் செய்த அட்டூழியங்களால் மக்கள் அதை ஒரங்கட்டினர்.

அது இதுவரை காட்டிய படம் காட்டியதெல்லாம் “பட்டை நாமத்தை” தான் என்று மக்களுக்குப் புரிந்தது.

ஆனால் காலம் கடந்து போயிற்று. நல்ல பாம்புகளும், விரியன் பாம்புகளும் மட்டுமே அந்த அரியணையில், நாற்காலியில் அமர முடியும் என்பது எழுதாத சட்டமாகி போனது.

இந்த தேசத்தின் இரத்த உறவுகள் பக்கத்து தீவுக்காட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த காட்டின் ராஜாவான சிங்கம் தனது சொந்த மக்களை, இந்த தேசத்தின் இரத்த உறவுகளை, மண்ணின் மைந்தர்களை வேட்டையாடி, நரமாமிசம் தின்றது. மக்கள் துடிதுடித்து பதைத்தனர். நர வேட்டையை தடுக்கப் போராடினர்

ஒருநாள் அதிகாலையில் இந்த நல்ல பாம்பு முட்டையையும், பாலையும் குடித்து மயங்கிக் கிடைக்கையில் அதற்கு திடுமென குயுக்தி தோன்றியது. தலையிலும், காலிலும் மனைவியும், துணைவியும் வெண்சாமரங்கள் வீச பரிவாரங்களுடன் கடற்கரையில் மாபெரும் உண்ணாவிரதம் அறிவித்தது. தானை தலைவன் உண்ணாவிரதம் கண்டு நாடே கண்ணீர் விட்டது; பொங்கி எழுந்தது என்று சின்னத்திரையில் பெரிய படம் காட்டிது. இந்த உண்ணாவிரதம் கண்டு சிங்கம் நரவேட்டையை நிறுத்தி விட்டது என்று தேர்தல் படம் காட்டியது. எருதுகளும், குதிரைகளும் அலற சக்கரத்தின் மீது அமர்ந்திருந்த மூன்று சிங்கங்களும் அந்தப் படத்தை பெரியதாக ஊதி பெருக்கி காட்டின‌. ஆனால் நரவேட்டை தொடர்ந்தது…. தொடர்கிறது…

இப்பொழுது புதுக்கதை ஒன்றை இந்தப் பாம்புகள் கூற தொடங்கி உள்ளன. மிகவும் வயதாகி விட்டதால் இந்த நல்ல பாம்பு இனி மேல் “மாணிக்கங்களை” மட்டும்தான் கக்கும் என்பதாக அது இருந்தது. மக்கள் எல்லாரும் இந்த வயதான பாம்பு மாணிக்கங்களை கக்கும் என்று வாயைப் பிளந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தனர்.

அந்த கிழப்பாம்பு மிகப் பெரியதாக வாயைப் பிளந்து பெரிய படம் எடுத்தது. வாயை திறந்து அது..உஸ்ஸ்..உஸ்ஸ் கக்கியது. ஆனால் அதிலிருந்து மாணிக்கங்கள் கொட்டவில்லை. “உஸ்ஸ் … உஸ்ஸ்… டேஸ்சோ……டேஸ்சோ… டேசோ.” என்று கடும் விசத்தைத்தான் கக்கியது. கடைவாயில் இரத்தம் ஒழுக நமட்டுச் சிரிப்பை சிங்கங்கள் உதிர்த்தன.

இப்பொழுது மக்களுக்கு இன்னும் மிகவும் தெளிவாகப் புரிந்தது. அது நல்ல பாம்பல்ல கொடிய நச்சுப்பாம்புதான். எத்துணை வயது முதிர்ந்தாலும் அது மாணிக்கங்களை கக்காது. பட்டை நாமம் படத்தைத்தான் காட்டும் என்று!

Pin It