அவளின் காதில் அமிலத்தைப் பாய்ச்சியது போலிருந்தது எஸ்ஐயின் கேள்வி.

கன்னத்தில் அறைந்து… சுற்றிவிட்டு, புடவையை உருவி தெருவில் விரட்டியது போலத் தோன்றியது மகாவுக்கு. குபுக்கென்று கண்ணில் நீர் வந்தது.

‘போடி.. போயி வெளியில ஒக்காரு’, என்ற எஸ்ஐயின் குரல் கேட்டதுதான் தாமதம், மகா கால்கள் தள்ளாட வெளியேறினாள். ஸ்டேஷனுக்கு வெளியே அரச மரமிருந்தது. அதன் நிழலில் பிள்ளையார் சிலையிருந்தது. அப்படியே உட்கார்ந்தவள் கண் மூடிக்கொண்டாள். தலையை கால் முட்டிகளின் இடையே பதித்துக்கொண்டாள். கட்டியிருந்த புடவை இல்லாததுபோல இருந்தது.

மகா எத்தனையோ சொல்லிப் பார்த்தாள். இந்த ஸ்டேஷனெல்லாம் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தாள். ‘இப்புடியே இருந்திடறேன்’ என்று சொல்லிப் பார்த்தாள். இதனை அவள் மூன்று வருங்களுக்கு முன்பும் சொல்லியிருந்தாள். என்ன பிரயோஜனம்? இவள் சொல்லி யார் கேட்கிறார்கள்?

‘அது பொம்பள போலீஸ் ஸ்டேஷனாம்’. என்று சொல்லித்தான் அம்மா மகாவை அழைத்து வந்திருந்தாள். பெண்கள் பிரச்சனையைத் தீர்க்க பெண் போலீஸ் மட்டும் உள்ள காவல்நிலையமாம். பெண்ணுக்கு எந்தப் பிரச்சனையும் வராதாம்.

அந்த எஸ்ஐ இராட்சசி பெண்தானா என்று மகாவுக்குச் சந்தேகம். சேர் நிறைய உட்கார்ந்திருந்தார் அந்த பெண் எஸ்ஐ. மகா பத்து வரை படித்தவள். எஸ்ஐயின் சட்டையில் இருந்த பேஜ்ஜைப் படித்துப் பார்த்து பாண்டியம்மாள் என்று தெரிந்து வைத்திருந்தாள். ஆனால், மகாவுக்குப் பாண்டியம்மாளைப் பிடிக்கவில்லை. சேரில் ஆடிக்கொண்டே அந்த அம்மா பேசியது, பெண் தோற்றத்தில் ஓர் ஆண் உட்கார்ந்திருப்பதாகத்தான் மகாவுக்குத் தோன்றியது.

மகா என்ற மகாலெட்சுமிக்கு இப்போது பதினெட்டு வயது. பதினைந்து வயதில் கல்யாணம் முடிந்திருந்தது. பள்ளிக்குச் சென்று வந்தவளை பெண் பார்க்க வந்திருந்தார்கள். மகா அன்று பள்ளியிலிருந்து வர லேட். கோக்கோ விளையாட்டுப் போட்டியிருந்தது. மகாவுக்கு கோகோ மிகப் பிடிக்கும். உட்கார்ந்திருப்பளை எப்போது தொடுவார்கள் என்று காத்திருப்பாள். தொட்டவுடனே அம்பு போல நேர் கோட்டில் விரைந்து, எதிரி விலகக் காத்திருந்து, மான் போலத் தாவி, அப்புறம் எதிரி அவுட்டு ஆகியே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த தொடுகை கிடைக்கும்போது வேகம் இன்னும் அதிகரிக்கும். நிதானம் அதைவிட அதிகரிக்கும். எதிரி ஆட்டம் காட்டும்போதெல்லாம் மகாவுக்கே தொடுகை கிடைக்கும். மகா அணிதான் ஜெயிக்கும். மகாவுக்கு அத்தனை வேகம், அத்தனை நிதானம்.

ஆனால், அவள் அம்மா தனத்திற்கு நிதானம் இல்லை. சொந்தத்தில் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. சிறுமலையில் கருப்புக் கோவிலின் அருகே மிளகு தோட்டமும் இருக்கிறது.. நடையாக நடக்கிறார்கள்… இன்னும் இரண்டு பெண்ணிருக்கும் போது மாப்பிள்ளை கிடைத்தால் தள்ளிவிட வேண்டியதுதானே என்று மகாவின் அம்மா தனம் நினைத்தாள்.

மகாவின் அழுகையும் ஆர்ப்பாட்டமும் ஒன்றும் கதைக்காகவில்லை. வாடிப்பட்டி பெருமாள் கோவிலில் கண்ணன் மகாவுக்குத் தாலி கட்டினான்.

ஒரு பக்கம் மகாவுக்கு வேடிக்கையாக இருந்தது. ஊர்காரர்கள், உறவுக்காரர்கள், அப்புறம் இவளின் பத்தாம் வகுப்பு தோழிகள் எல்லாம் வந்திருந்தனர். பட்டுப் புடவை சரசரசவென்று சத்தம் போட்டது. இவளின் கையில் ஏதேதோ பரிசெல்லாம் கொடுத்தார்கள். இவளின் தோழிகள் அவ்வப்போது இவளைப் பார்த்து இரகசியமாகச் சிரித்தார்கள்.

வேடிக்கையெல்லாம் மாலை வரைதான். இரவு இவளை வீட்டின் உள்ளே விட்டு அம்மா கதவைச் சாத்திக்கொண்டாள். அந்த இரவையும் வலியையும் மகா இன்று வரை மறக்கவில்லை. கண்ணனைப் பார்க்கும்போதெல்லாம் கடித்துக் குதறுவதுதான் நினைவுக்கு வந்தது.

மறுநாள் அம்மாவிடம் சொல்ல நினைத்தாள். வெட்கம் பிடுங்கித் தின்றது. பக்கத்து வீட்டு செல்வியக்காவிடம் இவள் இஷ்டம்போல பேசுவாள். இவள் சொன்னதைக் கேட்ட செல்வியக்கா, ‘போடி இவளே.. ஆம்பளன்னா அப்டித்தான் செய்வாங்க’, என்று சொன்னதும் இவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

அப்புறம் திருப்பூர் பயணம். கண்ணன் அங்கே மெஷின் மெக்கானிக்காக இருந்தான். அந்த தெருவுக்குச் செல்லும் வழி இன்று வரை மகாவுக்கு நினைவில் இல்லை. சாலை, தெரு, சந்து பொந்து என்று நுழைந்து அந்த வீட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றார்கள். அதற்குள் மகா நிறையத் தெரிந்து கொண்டிருந்தாள். ஊரில் இருந்த ஐந்து நாளில் செல்வி நிறைய சொல்லிக்கொடுத்திருந்தாள்.

அவளை அழைத்துச் சென்று திருப்பூரில் விட்ட அன்று மாலையே அம்மா புறப்பட்டுவிட்டாள். தானும் கண்ணனும் வாழ அந்த அறை போதும் என்றுதான் மகா நினைத்தாள். அப்புறம்தான் தெரிந்தது கண்ணனின் அம்மாவும் தம்பியும் கூட அந்த அறையில்தான் தூங்குவார்கள் என்று… அந்த அறைக்கு அந்தப் பக்கம் சமையல் அறை. அவ்வளவுதான்.

சமையல் அறைக்குப் போய்விடலாம் என்று, பலமுறை கண்ணனிடம் சன்னமான குரலில், அவன் இரவுகளில் தொடும்போது மன்றாடியிருக்கிறாள். ஆனால், அவன் அதைக் கேட்டால்தானே.. அவளின் மனம் உணர்வற்றுப் போனது… உடல் மரத்துப்போனது.. எப்போதும் தள்ளியே படுக்க ஆரம்பித்தாள்.

கண்ணன் மெஷின் ரிப்பேரான ஒவ்வொரு கம்பெனியாகப் போய்க்கொண்டிருப்பான். விசைத்தறி இருக்கும் ஊருக்கெல்லாம் போய்த் தங்கி வேலை பார்த்து வருவான். அவனுக்கு ஜோடியாக இன்னொரு மெக்கானிக். அவனுக்குச் சொந்த ஊர் வாடிப்பட்டி. அவனின் மனைவி ஊரில் இருந்தாள். பதினைந்து நாளுக்கு ஒரு முறை அவன் ஊருக்குப் போய் மனைவிக்குப் பணம் கொடுத்து வருவான். அவன் போக முடியாதபோது கண்ணன் போவான். போனால், இரண்டு மூன்று நாள் தங்கிவிட்டுத்தான் வருவான். கண்ணனும் அவன் நண்பனும் வேலையை மட்டுமல்ல மனைவியையும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று தெரிந்தபோது மகா துடித்துப்போனாள். மனதுக்குள் சிறுத்துப்போனாள். அம்மா வீட்டுக்குப் புறப்பட்டுப்போனாள்.

ஆறு மாதம் ஆனபின்பும் கண்ணன் அழைக்க வரவில்லை. ஏன் வரவேண்டும்? இளமையும் இளமைக்கான துணையும் இருக்கும்போது ஏன் வரவேண்டும்?

ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்துப் பேசியும் கண்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. தாலியை அறுத்துக்கொடுத்துவிட்டுப் போய்க் கொண்டேயிருங்கள் என்று சொல்லிவிட்டு எழுந்துபோய்விட்டான்.

அப்புறம்தான் இந்த அனைத்து மகளிர் காவல்நிலைய பஞ்சாயத்து ஆரம்பித்தது.

எத்தனை நேரம் மகா பிள்ளையாருக்கு முன்பு அப்படியே உட்கார்ந்திருந்தாள் என்று தெரியாது. கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. தோலை உரித்து வெய்யிலில் போட்டது போல உணர்ந்தாள். கிழிந்த நைட்டி போட்டுக்கொண்டு மகாவின் ஊரில் சுற்றும் பைத்தியக்காரி போல தன்னை உணர்ந்தாள். ஆனால், பைத்தியக்காரி கொடுத்து வைத்தவள். தன் உடல் பற்றிய உணர்வு அந்த பைத்தியத்துக்கு இல்லை. மகாவுக்கோ அந்த எஸ்ஐ ஸ்டேஷனில் வைத்து தன்னைத் தோலுரித்துவிட்டதாகப் பட்டது. அந்த எஸ்ஐயின் கழுத்தைக் கடித்துக் குதறவேண்டும் என்று தோன்றியது.

‘எழுந்திரும்மா’, என்ற சண்முகம் தோழரின் குரல் கேட்டு மகா நிமிர்ந்தாள். தோழரின் தலைக்கு மேலே அரச மர இலைகளின் வழியே சூரியன் கண்களைக் கூச வைத்தான். அப்படியே திரும்பி தோழரைப் பார்த்து உட்கார்ந்துகொண்டாள்.

சண்முகம் இவளுக்கு எதிரேயிருந்த கல்லில் அமர்ந்தார். சண்முகம் என்றாலே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைதான் நினைவுக்கு வரும். மகா சின்ன பெண்ணாக இருந்த காலத்தில் சிவப்புத் துண்டு போடுவார். இப்போதெல்லாம் போடுவதில்லை. ஏனென்று கேட்டால், ‘மேக் அப் போடாதீங்க.. வேலையில செவப்பு இருக்கட்டும்’, என்று புதிதாக வந்த மாவட்ட செயலாளர் சொல்கிறார் என்று பதில் சொல்வார். ஆனபோதும், இப்போதெல்லாம் சிவப்புப் பையொன்றைத் தோளில் மாட்டிக்கொள்ள ஆரம்பித்திருந்தார். அதில் புத்தகங்கள், பேப்பர் என்று நிறைந்திருக்கும்.

‘அந்த அம்மா கேட்ட கேள்விக்கு உஷாத் தோழர் இருந்திருந்தாங்கன்னா, அந்த அம்மா தொப்பி கழன்றிருக்கும்.. நாங்களும் சும்மா உடல, கத்திக் காதறுத்துட்டுத்தான் வந்தோம்’, என்று மகாவை ஆறுதல் படுத்த ஆரம்பித்தார். தனம் அருகாமையில் நின்றிருந்தாள். தனத்திற்கு மகளின் முகத்தைப் பார்க்கத் தெம்பில்லை. ரோட்டைப் பார்ப்பவள் போலத் திரும்பி நின்று கொண்டிருந்தாள்.

‘தோ பாரு மகா.. ஸ்டேஷனுக்கு பணத்தை அள்ளி விட்டுருக்கானுங்க.. அந்தக் கண்ணன் ஊருல இல்லன்னு சத்தியம் பன்றாரு அம்மாக் கட்சி கவுன்சிலரு. அம்மாக் கட்சிக்காரங்க எப்போதும் அய்யாக்களுக்குத்தான் சப்போர்ட் பன்னுவானுங்க.. பத்தாதுன்னு ரெண்டு தொத்த வக்கீலுங்கள அழைச்சிகிட்டு வந்திருக்கானுங்க.. இப்ப பேசி காரியம் நடக்காது.. எஸ்பி ஆபீசுக்குப் போறம்னு மெரட்டிட்டு வந்துட்டோம்..எதுக்கும் செயலாளரையும் பார்த்துட்டு, அப்புறம் போவம்’, என்றார் சண்முகம்.

மகாவுக்கு எதுவும் புரியவில்லை. செத்துப் போவது நல்லது என்று மட்டும் தோன்றியது. அப்புறம் அவர்கள் பஸ் நிறுத்தம் போனது, பஸ்சைப் பிடித்துக் கட்சி ஆபீஸ் போனது எதுவும் கவனத்தில் இல்லை.

கட்சி ஆபீசில் அந்தத் தோழர் கம்யூட்டரில் எதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இவர்கள் நுழைந்ததும் திரும்பி அமர்ந்தார். அந்த அறையில் மூன்று பிளாஸ்டிக் சேர்கள் மட்டுமே இருந்தன. வந்தவர்கள் எல்லாம் அமர்ந்துவிட மகா தரையில் அமர்ந்தாள்.

‘இரும்மா..’ என்றபடி எழுந்து சென்ற தோழர் பக்கத்து அறையில் இருந்து ஒரு சேரை இழுத்து வந்து போட்டார். போலீஸ் ஸ்டேஷனில் கால் கடுக்க நின்றிருந்த மகாவுக்கு உட்காரத் தோன்றியது. ஆனாலும், தயக்கமாக இருந்தது. எல்லோருக்கும் சமமாக உட்கார முடியுமா என்று யோசித்தாள்.

‘சும்மா உட்காரும்மா.. இது நம்ம ஆபீசு’, என்று சண்முகம் வற்புறுத்தி உட்கார வைத்தார்.

‘சொல்லுங்க சண்முகம்..’, என்று தோழர் ஆரம்பித்தார். சண்முகம் பிரச்சனையைச் சொல்லி முடித்தார். எந்த வார்த்தையும் பேசாமல் தோழர் கேட்டுக்கொண்டிருந்தார். கேட்டு முடிப்பதற்குள் இரண்டு சிகெரட்களைப் புகைத்திருந்தார்.

சற்று நேரம் மௌனம் நீடித்தது.

‘ஒனக்கு அந்தக் கண்ணனோட சேர்ந்து வாழ ஆசையா?’, என்று மகாவைக் கேட்டார் தோழர்.

மகா தலையசைத்தாள்.

‘சேர்ந்து வாழனுமா?... வேண்டாமா? வாயைத் தொறந்து சொல்லுத் தாயி.. தலைய எப்புடி ஆட்டுறன்னு யாருக்கு என்னத் தெரியும்?’, தோழரின் கண்கள் மகாவைப் பார்த்தபடியே இருந்தன.

மகா மெலிந்த உடம்புக்காரி. நல்ல உயரம்.. கருகருவென்று முடி. மாநிறம். அவள் உதட்டைச் சுழித்தபடி யோசித்தது இன்னும் பள்ளிச் சிறுமியாக இருக்கிறாள் என்பதைச் சொல்லியது.

‘வாழனும் தோழர்’, என்று மெல்லிய குரலில் சொன்னாள் மகா.

’ஏன்?’

மகாவிடம் வெகு நேரம் பதிலில்லை. தலைகுனிந்தபடியே இருந்தாள். கை விரலில் முந்தனை முனையை சுருட்டுவதும் விரிப்பதுமாக இருந்தாள்.

‘ஏன்… இவனை வுட்டுட்டு இன்னொருத்தனைக் கட்டிகிட்டா நல்லாருக்காதுன்னு யோசிக்கிறியா?’ தோழர் எந்தத் தயக்கமும் இன்றி கேட்டார்.

‘ஆமாந்தோழர்’, என்றாள் மகா பளிச்சென்று.

தோழர் சிறிது நேரம் யோசித்தார். ‘கல்யாணம் பண்ணிக்கிறது கெணத்துல உழற மாதிரிதான். எல்லா ஆம்பளையும் சனியன்தான்… ரெண்டாவது ஆம்பளன்னா ரொம்பப் பெரிய சனியன்னு யோசிக்கிறா..’ என்று தனக்குள் பேசுவது போல பேசினார்.

அப்புறம், ‘சரி, கண்ணனுக்கு ஏறக்குறைய பத்து ஏக்கர் நெலம் இருக்கு.. அப்புறம் ஏனவன் திருப்பூர் வேலைக்குப் போனான்?’, என்று தனத்தைப் பார்த்துக் கேட்டார்.

கண்ணனுக்குக் கல்யாணம் செய்து வைக்க வந்திருந்த அப்பா அப்புறம் வரவில்லை. பையனின் போக்கு சரியில்லை என்று விலக்கி வைத்துவிட்டாரம். கண்ணனுக்கு ஆதரவாக அம்மா இருக்கிறாள் என்பதால் கண்ணனின் அம்மாவையும் விலக்கி வைத்து விட்டாராம். அந்த விவரங்களை தனம் விளக்கமாகச் சொன்னாள்.

‘அது சரி கண்ணன் இவள வேணாமுன்னு சொன்னா, யாரு நஷ்ட ஈடு தர்றது? அவனோட சொத்துல பங்கு கேக்க வேண்டியதுதான்’, என்றார்.

மகாவுக்குப் புரியவில்லை. கண்ணனோடு மறுபடியும் சேர்ந்த வாழ முடியாதா? அப்புறம் பணத்தை வாங்கிக் கொண்டுவிட்டால் வாழ்க்கை இனித்துவிடுமா என்ன?

’மகளிர் காவல் நிலையம்னு பேசிறதெல்லாம் சும்மா.. எல்லாருகிட்டயும் காசு புடுங்கிறது சாதா போலீசு. பெண்களை பெண்கள் மெரட்டி காசு புடுங்கிறது மகளிர் போலீசு.. அவ்வளவுதான் வித்தியாசம்… பெண்கள் சங்கமா ஆகாட்டுனா எதுவும் நடக்காது.. நம்ம பெண்கள் அமைப்பாளர் வேற இப்ப ஊருல இல்ல..’, என்றவாறு தோழர் யோசிக்க ஆரம்பித்தார்.

அப்புறம் முடிவு செய்தவராக, ‘சரி.. நாளைக்கிக் காலைல மகளிர் காவல் நிலையம் போயிட்டு அந்த பாண்டியம்மா எஸ்ஐ வந்துடிச்சின்னா என்னக் கூப்பிடுங்க’, என்று முடித்துக் கொண்டார்.

மறுநாள் காலையில் போன் போட்ட இருபதாவது நிமிடத்தில் தோழர் காவல்நிலையம் வந்து இறங்கினார். இவர்கள் வணக்கம் சொன்னார்கள். பைக்கை நிறுத்தியவாறு கையை உயர்த்தியவர், மகாவைக் கைகாட்டி அழைத்துக்கொண்டு நிலையத்திற்குள் நுழைந்தார். எதிரே ஒரு பெண் காவலாளி உட்கார்ந்திருந்தார். தோழர் நின்றவாறு இன்ஸ்பெக்டர் அறைக்குள் பார்த்தார்.

‘அம்மா இல்ல’, என்றார் அந்தக் காவலாளி.

‘எங்க போயிட்டாங்க..?’, என்றார் தோழர்.

‘கூடங்குளம் ஸ்பெஷல் டூட்டி’, என்றார் அந்தப் பெண் காவலாளி.

தோழர் சிரித்தார்.. ’பெண்கள் பிரச்சனையெல்லாம் ஊருல முடிஞ்சு நல்லா இருக்காங்கன்னு அரசாங்கம் நெனக்கிதோ? கூடங்குளந்தான் இப்போ பிரச்சனையோ?’, என்றார் அந்தக் காவலாளியைப் பார்த்து. பாவம் அந்தப் பெண் காவலாளி.. பேந்தப் பேந்த விழித்தார்.

தோழர் எஸ்ஐ அறைக்குத் திரும்பினார். தோழர் நுழைந்தது முதல் பாண்டியம்மா தோழரையே கவனித்துக்கொண்டிருந்தார். தோழர் நேரே சென்று எஸ்ஐக்கு முன்னுள்ள சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

‘எங்க பெண்கள் அமைப்புத் தோழர் சென்னை போயிருக்காங்க.. அதனால நா வந்தேன். புரோக்கர்னு நெனச்சிக்காதிங்க..’, என்றார்.

பாண்டியம்மாவுக்கு சற்று குழப்பம் வந்தது. வழக்கம்போல சிவப்புத் துண்டுடன் வரும் ஆளில்லை என்று தெரிந்தது.

‘இந்தப் பொண்ணுக்கு 15 வயசுல கல்யாணம் நடந்திருக்கு.. அதாவது குழந்தைத் திருமணம்..’

‘சார்… அது பழைய கத’, என்று பாண்டியம்மாள் குறுக்கிட்டார்.

தோழர் வலது கையை உயர்த்தி ‘நிறுத்து’ என்பது போல பிடித்துக் கொண்டு, ‘தெரியும்.. அது அந்தக் கண்ணன் செஞ்ச மொதல் தப்பு. அதுக்கே சட்டம் நடவடிக்கை எடுத்திருக்கனும்’, என்றார்.

பாண்டியம்மாவுக்குப் புரியவில்லை. மூன்று வருடம் கழித்த பின்னர் எப்படி நடவடிக்கையென்று யோசிக்க ஆரம்பித்ததார்.

‘இப்போ இவளை வெரட்டி விட்டுட்டு இன்னோரு பொண்ணோட தொடர்பு வைச்சிருக்கானாம்.. வாழறதுக்குப் பணங் கேக்குறான்னு சொல்றாங்க.. இப்புடி அடுத்தடுத்த தப்பு செய்யற ஆம்பளய காப்பாத்தன்னு பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் வைச்சிருக்கிங்களா..?’

பாண்டியம்மா பதில் சொல்லவில்லை.

‘திருப்பூர்ல இவங்க வாழ்ந்த ரூமு என்ன சைசுன்னு தெரியுமா? அந்த ரூமுல எத்தனை பேரு இருப்பாங்கன்னு தெரியுமா?’ என்றவர் சற்று நிறுத்தினார்.

‘ஒங்க குவார்ட்டர்சுல எத்தன ரூமு?’. மறுபடியும் சற்று நேரம் நிறுத்தினார்.

‘அப்புறம் இவ படுக்காததால வெரட்டிட்டான்னு சொன்னிங்களாமே? ஒங்களுக்கு கொழந்தையத் தெரியுமா? பொண்ணுங்களத் தெரியுமா?’

பாண்டியம்மா உறைந்து போயிருந்தார். இந்த ஆள் பச்சை பச்சையாகத் தன்னைக் கேள்விக் கேட்கிறான் என்று தெரிந்தது. ஆனால், மனது சுட்டது. அந்த அம்மாவின் தலைக்கு மேலிருந்த பெண் முதலமைச்சர் படம் வெட்கமேயில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தது.

‘சரி… அவன புடிச்சு உள்ள போடனும்… தொத்த வக்கீல் புரோக்கருங்க சொன்ன மாதிரி கேட்டிங்கன்னா… ஒங்க ஸ்டேஷன் மானம் போயிடும்… அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடக்கும்… பொம்பளைங்க ஸ்டேஷன்தானே இது? அதனால பொம்பளங்க ஆர்ப்பாட்டம்..’, என்ற தோழரின் குரலில் கிண்டல் இருந்தது.

அப்புறம் அவர் எழுந்து புறப்பட்டார்.

அடுத்த நாள் மகாவும் தனமும் கட்சி ஆபீஸ் போனார்கள். தோழரிடம் நடந்தைச் சொன்னார்கள். நேற்று இரவே கண்ணனும் கண்ணனின் அக்காவும் கைதாம். பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று ஆள் வந்திருக்கிறதாம். பாண்டியம்மாள் எஸ்ஐ அனுப்பி வைத்தாரம்.

தோழர் ‘சரி’, என்றார்.

‘இல்லத் தோழர் பேசிக்கலாம்னா.. அவனுங்க 30 ஆயிரம் தாரேங்கிறானுங்க.. ஒங்க கிட்ட கேக்காம’

‘என்னத்தைக் கேக்குறது.. கட்சி தலையிட்டதால அந்த ஆளுங்க அரெஸ்ட்.. ஆனா.. பாண்டியம்மாவோட வருமானமுல்ல ஏறிகிட்டு போவுது..’ என்று தோழர் யோசித்தார்.

மகாவின் முகத்தைப் பார்த்தபடி இருந்தார். இந்தப் பெண்ணின் வாழ்க்கையை உத்திரவாதம் செய்வதா, பாண்டியம்மாவுக்கு வேட்டு வைப்பதா என்று யோசித்தார்.

‘சரி.. அவனோட அப்பன் நெலத்துல ஏக்கர் என்ன வெல போகும்?’, என்று கேட்டார்.

தனத்துக்குப் புரியவில்லை.. ஆனாலும், 'ஏக்கரு ரெண்டு மூனு லெட்சம் போகுந்தோழர்.. ஆனா வெசாரிக்கனும்’, என்றாள்.

‘அந்தத் தொகைய கேளுங்க.. அதவுட முக்கியமா, சாயங்காலம் நம்ம கிராமத்துப் பெண்களைக் கூப்பிட்டு ஒக்கார வைங்க.. நான் வரேன்’, என்றார்.

மகாவுக்கும் தனத்துக்கும் தோழர் ஏதோ திட்டம் போடுகிறார் என்று புரிந்தது. இனம் புரியாத நம்பிக்கையுடன் புறப்பட்டார்கள்.

தோழரின் திட்டம் மிகச் சுருக்கமானது. திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம்.. ஆனால், மதுரையில். பெண்கள் காவல் நிலையத்தின் ஆண்கள் ஆதரவுப் போக்குக்கு எதிராக..

ஆர்ப்பாட்டம் நடந்தது. பேச்சி, செல்வி என்று நிறைய பெண்கள் பேசினார்கள். பெண்கள் காவல் நிலையத்தில் தங்களுக்கு என்ன நடந்தது என்பதையெல்லாம் புட்டுப்புட்டு வைத்தார்கள்.

இரண்டு நாட்கள் கழித்த பின்னர் மகா வேலை செய்யும் தேங்காய் நார் கம்பெனிக்கு தனம் ஓடி வந்தாள். மகளைக் கையோடு அழைத்துகொண்டு வீட்டுக்குச் சென்றாள். போகும் வழியிலேயே பதட்டத்துடன், கண்ணனின் அப்பா தேடி வந்திருப்பதைச் சொன்னாள்.

மகாவின் தலையெல்லாம் தேங்காய் நாறு தூசு படிந்திருந்தது. மட்டையை அள்ளி மெஷினுக்குள் கொட்டும் வேலை அவளுக்கு. காற்றில் எங்கும் தூசு இருக்கும். வேலைக்குச் சேர்ந்த போது மிகவும் சிரமப்பட்டாள். அப்புறம் பழகிவிட்டது.

எதற்கு வந்திருக்கிறார் அந்த ஆள் என்று மகாவுக்குப் புரியவில்லை. மறுபடியும் கண்ணனோடு வாழக் கூப்பிடுவாரோ? என்ன நடந்து கொண்டிருக்கிறது?

தனத்தின் வீடு, தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடிசைதான். அவளின் அப்பா அந்தத் தோட்டத்திற்கு காவலாளி. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம். அதற்கப்புறம் விழுகின்ற மட்டைகளைப் பொறுக்கி விற்றுக்கொள்ளலாம். அவர் வேலைக்குச் சேர்ந்தபோது இருபது ரூபாய் சம்பளம். இருபது வருங்கள் கடந்துவிட்டன.

தென்னந்தோப்புக் குடிசையின் முன்னே கயிற்றுக்கட்டிலில் கண்ணனின் அப்பா உட்கார்ந்திருந்தார். அவருடன் ஊர் பெரிய மனிதர் ஒருவர் வந்திருந்தார். தனம், மகா, அவளின் அப்பா எல்லோரும் கீற்றுகளைத் தரையில் போட்டு அமர்ந்தனர். மோட்டார் ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்ருந்தது. குடிசைக்குள் அடை காத்த கோழி குபுக் குபுக் என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.

‘இன்னும் யார் வரனும்?’ என்று பேச்சைத் துவங்கினார் ஊர் பெரியவர்.

‘கட்சிக்காரரு வருனும்ல.. அவங்க இல்லாட்டி எம்பொண்ணு வாழ்க்கை ஒன்னுமத்துப் போயிருக்கும்ல’, என்றார் மகாவின் அப்பா.

யார் அந்தக் கட்சிக்காரர் என்று பெரியவர் கேள்வி கேட்க, தனம் விளக்க ஆரம்பித்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சண்முகம் சைக்கிளில் வந்துவிட்டார்.

அவருக்கென்று ஒரு கல்லை உருட்டிப் போட்டார் மகாவின் அப்பா.

‘கோச்சிக்காதீங்க.. திடீர்னு போனு போட்டிங்க.. அப்ப நான் ஆபீசுல இருந்தேன்’, என்று ஆரம்பித்தார்.

கண்ணனையும், அவன் அம்மாவையும் கைது செய்து விட்டார்களாம். இன்னும் நாலைந்து பேருக்கு பெயில் வாங்க அலைகிறார்களாம். கிடைக்கவில்லையாம். போலீஸ் தேடுகிறதாம். வேறுவழியில்லை; பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று புறப்பட்டு வந்திருக்கிறார்களாம். கதைச் சுருக்கத்தைக் கேட்ட தோழர் சண்முகம், ‘அப்ப என்ன செய்லாம்னு சொல்லுங்கய்யா’ என்றார் கண்ணனின் அப்பாவைப் பார்த்து.

அவர் தொண்டையைச் செறுமிக்கொண்டார். அமைதியான பேர்வழி என்பது போல தெரிந்தது.

‘எனக்கு இந்த நெலம வந்துருக்கக் கூடாது… ஆகாதப் புள்ளையப் பெத்தா தேடாத எடம் தேடித்தா போகனும்’, என்றவர் தான் பெற்ற மகனைத் திட்டித் தீர்த்தார்.

‘மகாலெட்சுமிய நாங்கொற சொல்ல மாட்டேன். அது பச்ச மண்ணு..’ என்றார். ‘அதனால, எம் பையங்கிட்ட பேசிட்டேன். எதுவும் கதைக்காகல.. பேசமா அவனுக்குப் போற பங்குல ரெண்டு ஏக்கர மகா பேருக்கு எழுதிடரேன்.. நீங்க வைச்சிக்கிட்டாலும் சரி. இல்லை வித்து பணமாக் கேட்டிங்கன்னா வித்துக் கொடுக்கறேன்.. என்ன மட்டும் சிக்கல்லேந்து எடுத்துவுடுங்க.. அதுபோதும்’, அவரின் குரல் உள்ளொடுங்கி ஒலித்தது. வேட்டி மடிப்பிலிருந்து வெற்றிலையை எடுத்து தயார் செய்ய ஆரம்பித்தார்.

மறுபடியும் மௌனம் சூழ்ந்தது.

தோழர் சண்முகம், ‘சொல்லு மகா.. ஒனக்குச் சம்மதமா?’, என்றார்.

’தோழரே நா அப்பாகிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிறனே?’ என்றாள் மகா. இத்தனை நாளுக்குள் செயலாளர் அவளுக்கு அப்பாவாகியிருந்தார்.

சண்முகத்தின் செல்லில் இருந்து தோழரை அழைத்தாள் மகா. தோழர் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மகாவுக்குச் சம்மதம் என்றாள் முடித்துக்கொள்ளலாம் என்றார்.

‘அது சரிப்பா.. எப்புடி எங்க மாமா இப்புடி தேடி வந்தாரு.. என்ன செஞ்சிங்க..?’, என்று சந்தேகத்தைக் கேட்டாள்.

‘நா என்ன செஞ்சேன்… எல்லா நீங்கதான். ஒங்க ஆர்ப்பாட்டம் முடிஞ்சு எங்கிட்ட டிபார்ட்மெண்ட்லேந்து கேட்டாங்க.. பாண்டிம்மா பணம் வாங்கினதையும், கைது பண்ணிட்டு பேசிப் பிரிஞ்சுக்குங்கன்னு பேரம் பேசுனதையும் சொன்னேன். அவ்வளவுதான். சமயத்துல எங்கோ அடிச்சா எங்கோ பல்லு போகும்பாங்களே அது நடந்துடிச்சி… அவ்வளவுதான்’, என்றார்.

‘சரிப்பா.. நானு அம்மாகிட்ட கொடுக்கிறே’, என்றவளை தோழர் தடுத்தார்.

‘இன்னொரு சேதி தெரியுமா.. பாண்டிம்மா எஸ்ஐ சஸ்பெண்டு.. அனேகமா இனி இந்த ஸ்டேஷன்ல போட மாட்டாங்க’

’சூப்பரப்பா’, என்றாள் மகா குதூகலத்துடன். போனை அம்மாவிடம் கொடுத்தவளுக்கு தலை கால்புரியவில்லை.

‘தொப்பிய கழட்டிட்டம்ல’, என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

Pin It