மாமரத்தின் காய்ந்த இலைகளின் மீது செல்வம் கையில் எவர்சில்வரில் மூடியிட்ட ஒரு பாத்திரத்துடன் அலைபாய்ந்து நிற்பதற்கும் வாசலில் அரவம் கேட்டு அந்த ஓட்டு வீட்டுக்குள்ளிருந்து ஒரு அழகான சுடிதார்ப்பெண் எட்டிப்பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. அவளின் இடதுகைக்குள் அடக்கமாய் இன்னுமொரு பெண் அவளின் சாயலில்.
"ஏங்க, பாசந்தி..."
"ஹலோ, யார் நீங்க? என் பேரு வாசந்தின்னு உங்களுக்கு எப்படி தெரியும்?".
"உங்க பேரு வாசந்தியா?"
"அதிருக்கட்டும்... உங்களுக்கு என் பேரு எப்படி தெரியும்ன்னு கேட்டேன்?".
"எனக்கு பாசந்திதாங்க தெரியும்..."
"அதாங்க கேக்குறேன்.. என் பேரு வாசந்தின்னு உங்களுக்கு எப்படி தெரியும்னேன்?"
"நான் எப்போங்க வாசந்தின்னு சொன்னேன்.. நான் பாசந்தின்னுதானே சொன்னேன்... ரொம்ப நாளா இதுக்கு இதாங்க பேரு" என்றுவிட்டு கொண்டுவந்திருந்த எவர்சில்வர் பாத்திரத்தின் மூடியை சற்றே விலக்கி சாய்த்துக்காட்டினான் செல்வம். உள்ளே வாசந்தி...(அட..ச்சே) .. பாசந்தி.
"ஓ.. சாரிங்க..."
"அய்யோ, சாரி இல்லங்க... நீங்க போட்டுக்கிட்டு இருக்குறது சுடிதாருங்க".
"அய்யோ ராமா, மன்னிச்சுக்கோங்கன்னு இங்கிலீஸ்ல சொன்னேன்ங்க".
"ஓ.. நமக்கு அவ்ளோ இங்கிலீஷ் வராதுங்க"
வாசந்தி கை நீட்டி பாசந்தி வாங்கிக்கொள்ள, பாசந்தியை விட அதிகமாக இனித்தாள் வாசந்தி செல்வத்துக்கு.
"வீட்ல விசேஷமுங்கலா?"
"ஆமா".
"என்ன விசேஷங்க??"
"ஆங்... பொண்ணு பாக்க வராங்க" சாயல் முந்திக்கொண்டது.
"ஓ.. யார?" என்றுவிட்டு உள்ளர்த்தத்துடன் செல்வம் நிறுத்த,
"ஆங்.. யாரையோ? உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்" வாசந்தி சிடுசிடுத்தாள். அவள் முகத்தில் ஏதோவொன்று அதைப் பொய் என்றது.
"ஒரு ஜெனரல் நாலெட்ஜூ....".
"இது தமிழ் இல்லையே!!".
"ஹி..ஹி..ஹி... இங்கிலீசுதாங்க வராது.. இந்தி ஓரளவு வரும்"
"அட கண்றாவியே!!"
"என்னங்க...??".
"ஒ..ஒண்ணுமில்ல.. இது... பரவாயில்லையே கொஞ்சம் முன்ன தான் உங்க கடைல அப்பா சொல்லியிருந்தார்.. உடனே ரெடி பண்ணிட்டீங்களே".
"எப்போ சொன்னாலும் ரெடி பண்ணியிருப்போங்க... எங்க கடைல எப்பவுமே டைமிங், சுத்தம் எல்லாம் இருக்...."
"ஹலோ.. உங்களுக்கு காது செவிடா? அப்பா சொன்னாருன்னு சொன்னேன்".
"ஓ..அப்பான்னு சொன்னீங்களா!!.. அப்போன்னு கேட்டிச்சு..அது என்னவோங்க... இப்ப உங்கவீட்டுல தாங்க இப்படியெல்லாம் நடக்குது?"
"எப்படியெல்லாம்?"
"அதான், அப்பான்னா அப்போன்னு, பாசந்தின்னா வாசந்தின்னு..."
"ம்ம்..சரி.. அப்புறம்"
"அப்புறமா..ஆங்.... எங்க விட்டேன்??.. ஆங்.. அதாங்க.. எங்க கடைல எப்பவுமே டைமிங், சுத்தம் எல்லாம் இருக்குமுங்க. இப்படித்தான் பாருங்க, மூலக்கடை பாய் வீட்டு விசேஷத்துக்குக்கூட...."
"யோவ்.. எனக்கு நல்லா வாயில வந்திடும்... போய்யா" என்றுவிட்டு படாரென கதவை சாத்துகையில் களுக்கென்று சாயலின் சிரிப்புச்சத்தம் கேட்டது.
பத்து நிமிட இடைவேளை விட்டு மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்க, சந்தேகத்துடன் கதவு திறந்தாள் வாசந்தி. கையில் மூடிய எவர்சில்வர் பாத்திரத்துடன் வேறொருவன் நின்றிருந்தான்.
"ஏங்க பாசந்தி..."
வாசந்தி இம்முறை சுதாரித்தவளாய்...
"ஆங்..பாசந்தியா... முன்னாடியே வந்திடுச்சே"
"முன்னாடியா? நான் இப்போதானே வரேன்.. உங்க அப்பா ஆர்டர் பண்ணியிருந்தாருங்களே".
வாசந்திக்கு பெண் பார்க்க வருவதாகச் சொன்ன மாப்பிள்ளையைப் பற்றி தான் கேள்விப்பட்டதுவும், முதலில் வந்த பாசந்தி குறித்தும் ஏதோ புரியத்துவங்கிக்கொண்டிருந்த வேளையில் எட்டிப்பார்த்த சாயல் தொடர்ந்தது...
"அக்கா, அப்போ முன்னாடி வந்தது பாசந்தி இல்லக்கா.. அல்வா" என்றுவிட்டு மீண்டும் களுக்கென்று சிரித்தது.
****
(நன்றி குங்குமம் (9.7.2012) வார இதழ்)
- ராம்ப்ரசாத் சென்னை (