சின்னதாக ஓர் ஆசை எந்தவொருவருக்கும் இருக்கும். சின்னதாக… மிகச் சின்னதாக ஓர் ஆசை. ஆனாலும், அது கைகூடாததாகவே இருக்கும்.

எனக்கும் அப்படியொரு ஆசையுண்டு. நான் உறங்கப்போகும்போது என் தலையில் யாராவது கைவைத்து விரல்களால் முடியைக் கோதி விடவேண்டும் என்பதுதான் அந்த சின்ன ஆசை.

விரல்கள் தலையில் குறுக்கும் நெடுக்குமாய் கோலம் வரையும் போது தூக்கம் சொக்கிக்கொண்டு வரும். ஒவ்வொரு நாள் தூங்கவேண்டிய நேரம் வரும்போதும் அந்த ஆசை நெஞ்சில் வந்து நிற்கும். தலையைக் கோதும் கையொன்றை மனம் தேடும். ஆனால், அதற்கான கைதான் இன்று வரை வாய்க்கவில்லை.

எனக்கு இதைப் பழக்கியவர் என் தாய்தான். நானும் அவரும்தான் எங்கள் குடும்பம். அவருடைய அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர், நான் என் படிப்பு வேலையை முடித்த பின்னர் தூங்கப்போவோம். கோழி முட்டை கிளாஸ் பொருத்திய மண்ணெண்ணெய் விளக்கை சிறியதாக்கி வைத்துவிட்டுப் படுப்போம்.

சூழும் இருள் எனக்கு அச்சமூட்டும். விளக்கின் ஒளியில், கொடியில் தொங்கும் துணியின் நிழல், பேய்போல அசைந்தாடும். அன்னையின் வெப்பம் அருகேயிருந்தாலும் பயம் நெஞ்சை உலுக்கும். அவரின் முந்தானையை இறுக்கிக்கொள்வேன். அவரின் கரம் என் தலையைக் கோத ஆரம்பிக்கும்.

எங்கள் வீடு சாதாரண கூரை வீடு. இரண்டாண்டுக்கு ஒரு முறை சித்திரையில் கூரை மாற்றுவார்கள். கீற்றின் ஓட்டைகள் வழியே சில சமயங்களில் நிலா தெரியும். கூரை மாற்ற நாளாகும்போது நட்சத்திரங்களும் தெரியும். வேர்த்துக் கொட்டும்போது அம்மாவின் மற்றொரு கை விசிறியை வீசும். மின் விசிறியை நான் அனுபவித்தெல்லாம் வேலைக்குச் சேர்ந்தபின்னர்தான். ஒரு கை விசிறிவிட ஒரு கை தலையைக் கோதிக் கொண்டேயிருக்கும். தலையில் மேயும் பேனைப் பிடிக்கப் போவது போல விரல்கள் ஏதோ ஒரு லயத்தில் தலையில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணப்பட்டுக்கொண்டிருக்கும். பனை மட்டை விசிறியைப் பிடித்த கை ஓய்ந்தாலும் தலையைக் கோதும் கை ஓயாது. நான் தூங்கிய பின்னரும் அவர் தூங்கவில்லை என்பதைக் கோதிவிடும் அவர் கை உணர்த்திக்கொண்டேயிருக்கும்.

ஒரு பேன் கிடைத்துவிட்டால் மறுநாள் எண்ணெயில் குளிப்பாட்டி சீயக்காய் தேய்த்து.. தலைக்கு சாம்பிராணிப் புகை போட்டு அப்புறம் பேன் சீப்புகொண்டு அனைத்தையும் பிராண்டிப்போட்ட பின்னர்தான் ஓய்வார்.

தலையைக் கோதும்போது அவர் என்ன யோசித்திருப்பார் என்று இன்று யோசித்துப் பார்க்கிறேன். இரண்டாம் தாரமாக வாக்கப்பட வேண்டிய நிலையை யோசித்திருப்பாரோ? முதல் தாரத்துப் பிள்ளைகளிடம் அனுபவித்த சிரமங்களை அசைபோடுவாரோ? இளம் வயதிலேயே விதவையானதால் வாய்த்த வாழ்க்கைக் கொடுமையை அசைபோட்டிருப்பாரோ? தெரியவில்லை. பொதுவாகவே எனக்குப் பெண்களின் மனதைப் படிக்கத் தெரியாது.

எனக்குக் கல்யாணம் ஆனபின்பு என் மனைவி தலையைக் கோதி விடுவாள். அந்தக் கோதுதல் சில வருடங்களில் கடமையாகிப்போனதை விரல்கள் சொல்லின. அப்புறம் வாழ்க்கைச் சிக்கலில் நானும் அவரும் பிரிந்துவிட கடமைக்குத் தலையில் கை வைக்கக் கூட ஆளில்லை என்றானது.

சில நாட்களில் என் மகள் என் தலையைக் கோதி விட்டிருக்கிறாள். நான் அவளோட இருந்த நாட்கள் மிகக் குறைவு. ‘அப்பா தூங்கனும்மா’, என்று சொன்னால் என் தலையில் கைவைப்பாள். ஐந்து நிமிடத்தில் நான் தூங்கியிருக்க வேண்டும். இல்லையென்றால், ‘போப்பா ஒனக்கு வேலையில்ல’, என்று எழுந்துபோய்விடுவாள்.

அப்புறம்தான் என் தோழி எனக்குக் கிடைத்தாள். தோழி என்று சொல்வது மனைவி அல்ல என்ற பொருளில் அல்ல. மாறாக, எனக்குச் சமமான என் துணை என்ற பொருளில்.

சென்னையிலிருந்து, மதுரை வந்த பேருந்தில் நாங்கள் சேர்ந்து புறப்பட்டோம். எங்கள் வாழ்க்கை இனி இப்படித்தான் என்று முடிவு செய்துதான் புறப்பட்டிருந்தோம். அவள் தோளில் நான் உறங்க என் தலையை அவள் கை கோதிவிட்டுக்கொண்டிருந்தது. இடையில் நான் விழித்தபோதெல்லாம் அவளின் அரவணைப்பையும் என் தலையில் அவள் கையையும் உணர்ந்தேன்.

சில ஆண்டுகள் போன பிறகு என் தலையில் அவள் கை இறங்குவது குறைந்தது. கேட்டால், சற்று நேரம் தலை கோதுவாள். அப்புறம் ‘போடா’ என்று விலகிப் போய்விடுவாள்.

அந்த விலகல் அப்புறம் நிரந்தரமாகிவிட்டது. அவள் போய்விட்டாள்.

இப்போதெல்லாம் நான் தூங்கவேண்டும் என்றாகும்போது என் தலையை நானே கோதிக்கொள்கிறேன்.

அம்மா இருந்தால்… என்று மனம் யோசிக்கும். ம்… தலையைக் கோதியவாறே தூங்கிப்போவேன்.

அப்புறம்தான் புரிந்தது… எந்த உயிருக்கும் அம்மா ஒரு முறைதான் வாய்ப்பார். அப்புறம் தனிமைதான் நிரந்தரம்.

Pin It