இதற்குமுன் எந்தத் திருட்டு வேலைகளிலும் ஈடுபடவில்லை. நேற்று ஒரே நாளில் தொடர்ச்சியாக இரண்டு வீடுகளில் திருடியிருக்கிறாள். யார் மேலோ அவளுக்குக்கோபம் இருந்திருக்கவேண்டும். மேலும், தானே நின்று சாதிக்கவேண்டும் என்று நினைத்திருப்பாள் போல. ஒரு வீட்டில் நாலரை சவரன், இன்னொரு வீட்டில் ஒண்ணரை சவரன் திருடுபோயிருந்தது!. நாலரை சவரன் வீடு மேற்கில் இருக்கிறது. ஒண்ணரை சவரன் வீடு ஒரு தெருத்தள்ளிக் கிழக்கில் இருக்கிறது. சவரன் அளவு வைத்தே யார் சற்று வசதிப் படைத்தவர்கள் என்பது உங்களுக்கேத் தெரியும்.

குறைவான நகை வைத்திருந்தவர் மிகவும் பாவம்தான். காலச் சுழற்சியின் போக்கிற்கேற்ப வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளவேண்டியிருந்தது. இருபத்தியைந்து வருஷத்திற்கு முன்பு ஏரி நிறையத் தண்ணீர் நிரம்பி யிருக்கும்! பக்கத்தில் இரண்டு ஏக்கர் வைத்திருந்தார்; கூடுதலாக நாய்க்கரின் இரண்டு ஏக்கர் கேட்டு பயிர்செய்தார். அம்மா, அப்பா, தம்பி எல்லாம் கூட்டாக யிருந்து விவசாயம் செய்தார்கள். அந்தக்காலமெல்லாம் எப்படித்தான், ஏன்தான் மாறிப்போனதோ!? அதன் பிறகு கூலிவேலைதான். ஏதோ ஒரு ஞானத்தோன்றலாகத்தான், இரண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கிவந்தார்; இன்று இருபதைக் கடந்திருந்தது. இப்போது அதுதான் குலத்தொழில்; ஒரு வகையில் வாழ்வைத்தள்ளவும் உதவுகிறது. அவ்வப்போது கிராமத்திலும், பக்கத்து ஊர்களிலும் தெரிந்தவர்கள் மரம் விற்பனைக்குச் சொன்னால் ஒரு தொழிலதிபரைப்போல் மனதில் தெம்புவரும். கூலியாட்கள் எப்போதும் அந்தத் திறமைக்கான மரியாதைத் தருவதேயில்லை. அவர் அதைப்பற்றி எப்போதும் கவலைப் பட்டதில்லை. மரத்தை நகரத்திற்கு ஏற்றிச்செல்லும் போதெல்லாம் வழியில் தென்படும் சின்னக் கன்றுகளைப்பார்த்து இது நல்லபடியாக வளரனும் என்று வேண்டுவதுபோல் மனதுருகுவார். நல்ல பெரிய சாலையோர மரங்களைப்பார்த்து இந்தமாதிரிக்கிடைத்தால் பெரிய தொகை தனக்கு மிஞ்சும் என்று பல கற்பனைகளையும் செய்துகொள்வார். கலியாண வயதில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இத்தனைக் காலத்திற்குபிறகும் அந்த நகைகள்தான் சேமிப்பாக இருந்தது. இத்தனைக்கும் அரிசிப்பானையில் இருந்ததை எப்படித்தான் ஷீலா கண்டுபிடித்தாளோ? அவளை, கிராமத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நிறையச் செல்லப்பெயர்கள் வைத்து அழைத்தார்கள்.

ஷீலா மேல்நிலையின் இறுதி வகுப்பிற்குள் நுழைகிறாள். சீருடைக்கு, சுடிதார் அளவு கொடுத்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லை. கூடவே, வீட்டில் அணிந்துகொள்ள ஜாக்கட் அளவு கொடுத்தபோதுதான், டைலர் அவளின் கப்பைப் பார்த்து சற்று வாய்ப்பிளந்தான். அடிக்கடி என்ன போன்  கெடக்குது  அம்மா சிலநேரம் தெருவிலே சண்டையிடுவாள்,  அதை பார்க்கும் சிலர், அவள் போக்கை  கண்டிக்கவேண்டும்  என்று சிலர் சொன்னார்கள். அவர்கள், பெரும்பாலும் தங்களுக்கு இஷ்டமானபடி செல்லப்பெயர் வைத்து அழைத் தவர்கள். அதற்கு கைமாறாக, ஷீலா ஒரு  கிரக்கத்தை ஏற்படுத்தும் சிரிப்பையே பதிலாக விட்டுச்சென்றிருந்தாள். சிலபெண்கள் எப்போதும்போல் கலியாணங் கட்டிக்குடுத்திருந்தா இன்நேரம் நாலஞ்சி பெத்திருக்கும் என்றும் சொல்வார்கள். சற்றுக் குள்ளமாக இருப்பாள். கேலிசெய்கிறளவு குள்ளம் இல்லை. உதட்டில் சாயம் பூசுவதில்லை. பூசினார்போன்றே சிவந்திருக்கும். கண்களின் கருவளையம் தவிர மற்ற இடம் மிக உயர்ந்தரக வெண்ணிற வண்ணம் பூசப்பட்டதுபோல் தூய்மையாய் இருக்கும். காலாண்டுத் தேர்வை முடிக்கிறவரை  அவ்வளவு ஒழுங்காகதான் பள்ளிக்குப் போனாள்.

போலீஸ் ஸ்டேஷனில் அந்தப்பையனைப் பார்த்தபோதுதான், பெண்கள் எந்தக் காலத்திலும் பலகீனமானவர்களாகவே இருக்கிறார்கள் என்று  மனம் முடிவுசெய்தது. அந்தப்பையன் சுவரின் மூலையில் உட்கார்ந்திருந்தான். அப்போதுதான், வெளியிலிருந்து வந்த ஏட்டு, ஏற்கனவே தகவல் தெரிந்திருந்த நிலையில் ‘இந்த நாய்தான் ஆட்டங்காட்டுச்சா?’ என்று தலைமேல் ஒருத் தட்டுத்தட்டினார். அந்தப்பையன் ஒரு சுருளு சுருண்டு பக்கத்து அறையில் நுழைவதுபோல் விழுந்தான். அவனுக்கு சார் சார் வேணாம்சார் என்று சொல்ல வரவில்லை. ‘ஊம்..’ என்று அழத்தொடங்கினான். அவன் தடுமாறியபோது காலில் இருந்த ரப்பர் செருப்பு, தூக்கி எறியப்பட்டு விழுந்தது. மேலும் போலீஸ், அப்படி சுருண்டு விழுந்தற்காக சிறிது வருத்தமும் முகத்தில் காட்டாமல்  “டே, எந்திரிச்சி நில்லுடா” என்ற போதுதான்,  அந்தப் பையனைப் பார்க்கநேர்ந்தது. ஏதேச்சியாக, காற்று சற்றுவேகமாக  அவன் சட்டையில் புகுந்தால்  டூவீலரோ, பஸ்பேரோ தேட வேண்டியதில்லை. அவன் நினைத்த இடத்தில் போய்சேர்ந்துவிடலாம். ஷீலா  ஏன் அவசரப் பட்டாள். குடும்பம், நிர்வாகம், ஏமாற்றுப் பேர்வழி இவர்களைத் தவிர்த்து. பொதுவெளிகளில் பெண்களுக்குச் சாதகமானச் சூழலே இருக்கிறது. இந்தச்சூழல்தான் அவள் ஏமாந்து போவதற்கும் காரணமா.? தெரியவில்லை.

ஏதோ கோயிலில் தாலி கட்டிவிட்டான் என்றுப்பேசிக்கொண்டார்கள். ஷீலா அரசாங்க விதியின் வயதை இன்னும் பூர்த்தி செய்யாததால்.  காதல் எதிர்ப்பாளர் களுக்கு சற்று தெம்பாகவே  இருந்தது. (அவர்கள் காதலிக் கிறபோது ஜி.ஓ மாறும்) போலீஸ் அவர்களுக்கானதாக, மிக சொர்ப்பத்தொகை யைத்தான் கையகப்படுத்தியது. பெண் உறவினர்கள் சுலபமாக எந்த மனவருத்தமும் இல்லாமல் கொடுத்தார்கள். தனி அறைக்குள் இருந்த ஷீலாவை ஒரு போலீஸ் அழைத்தபோது “இதுக்குள்ள ஆம்பள சுகம் கேட்குதா, போயி அப்பா, அம்மாவுடன் ஓழுங்கா இரு” என்றார். தனக்குள் எழும் காம ஆசையை, ஒரு பெண்ணிடம், இதைவிட  வெளிப்படையாக யாரும் சொல்லமுடியுமா? அதைப் பக்கத்தில் நின்றுகொண்டு உறவினர்கள் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது.  தாலியைக் கழட்டி டேபில் மீது வைக்க சொல்லிவிட்டு, அவள் பெற்றோருடன் அனுப்பினார்கள். அந்தப்பையன் கனவுகள் பயித்தியம் பிடித்து எந்தத்தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறதோ? தாலியை அவன் உறவுகளிடம் ஒப்படைத்து அனுப்பினார்கள். இல்லை துரத்தினார்கள்.  ‘வரண்ட புல்லுகளை முழ்கடித் திருக்கும் கானல் நீர்  நாவரண்ட ஆட்டுக்குட்டியின் ஓட்டத்தை நிறுத்தி திரும்பச்செய்ததுபோல’ வெறுமையின் பிம்பமாக வெளியேறினான். பெற்றோர்களுடன் ஐக்கியமாகச் செல்லும் காதலர்கள் இனி யாரையும் நினைக்கமாட்டார்களா?

ஷீலாவை அழைத்துவந்து தலைக்குத் தண்ணீணர் ஊற்றி உடலை மிகக் கவனமாகச் சுத்தப்படுத்தி வீட்டுக்குள் அழைத்தார்கள். மனசு.? இதேபோல அவனுக்கும் நடந்திருக்கலாம். ஷீலாவிற்கு பள்ளி வாழ்க்கை முற்றாக உடன்கட்டை ஏறிவிட்டது. அதற்காக  யாரும் பெரிதாக வருத்தப்படவில்லை. அடுப்படியில் தினந்தோறும்,  அவள் புகை இழுக்க ஆரம்பித்தாள். ஆறியபுண்  நிகழ்காலத்தை சந்தோசப் படுத்துவதுபோல் குடும்பம் மீண்டு கொண்டிருந்தது.  ஷீலாவை புதிதாக சிலர் ரசிக்க ஆரம்பித்தார்கள. ஏற்கனவே ரசித்தவர்கள் இன்னும் கூடுதலாக.

இந்த நிலையில்தான் ஊரே கலவரப்பட்டுப்போனது! ஆட்டுக்காரன் மனைவி வீட்டுக்கு வந்தபோதுதான்  சன்னலின் ஓரமாய் இருக்கும் சாவி திண்ணை மீதுக்கிடந்தது!. சற்று பீதியடைந்தவள் வீட்டில் நுழைந்தாள். தண்ணீர் தவலை திறந்த நிலையில். மூடியுடன், டம்ளர்க் கீழேக்கிடந்தது. இலவச டிவியில் பவர் சுச்சின்  சிகப்பு சிக்னல் எரிந்துகொண்டிருந்து. காலையில் பார்த்த நாடகத்திற் குப்பிறகு டிவியின்  எல்லா சுச்சிகளையும் அணைத்தது,  அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. இன்னும் கூடுதலான சந்தேகம் எழுந்தாலும்  தன் பிள்ளைகளைத்தான் நொந்துக்கொண்டாள். “நாய்களுக்கு எந்தப் பொறுப்பும்  இல்லை. போற எடத்துல அதுங்க மூஞ்சில காரித்துப்புனாத்தான் புத்தி வரும்” என்று புலம்பிக்கொண்டு எல்லாவற்றையும் சரிசெய்தாள். எதேச்சியாக  சனிமூலையில் பார்வை விழுந்த போதுதான்  அதிற்சிக் காத்திருந்தது. எப்போதும் ஓரளவு முதிர்ந்திருந்த மரமாக நாலைந்து அடி உயரத்திற்கு வரிசையாய் நிற்கும் பானை துண்டுபட்டுக் கிடப்பதுபோல்  இறக்கிவைக் கப்பட்டிருந்தது. சில்லரைகள்தான் சொல்லமுடியாது, மற்றபடி எதையும் பிள்ளைகள் தொடமாட்டார்கள். இப்போது அவள் குலை நடுங்கியது. பானையைத் துழாவினாள். கையில் எதுவுமே நிற்கவில்லை. வெளியே வந்து விழுந்துக் கத்தினாள். “கடவுளே உனக்குக் கண்ணில்லையா. என்ன இப்படி மோசம் செய்துட்டாங்களே ஒரு ஒரு குண்டுமணியா சேர்த்தேனே எந்தப்பாவியோ மோசம் போக்கிட்டானே. அவன் கைக்கு என்ன வருமோ?”  பெருத்தக் குரலில் கூப்பாடுப்போட்டாள். கூட்டம்  வேகமாகக் கூடியது. சங்கதித் தெரிந்தப்பிறகு  குடும்பத் தலைவன் தலைவி அவரவர் வீட்டுக்கு அவசரமாய்   ஓடினார்கள். பலர் நிம்மதியுடன் ஆசுவாசப்பட்டதுபோல் மீண்டும் அங்கு வந்தார்கள். ஷீலாவீட்டிற்கு, மேற்கு பக்க வீட்டிலிருந்து குடும்பத்தோடு அய்யோப் போச்சே, என் வீட்டிலும் போச்சே, என்று வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு  ஓடிவந்தார்கள். என் வீட்டில இருந்த நாலரை சவரன் காணலியே, நான் என்னப்பண்ணுவேன் நாங்க யாரயும் மோசம் பண்ணலியே. எங்களுக்கு ஏன் இந்தச்சோதனை” கூப்பாடுப்போட்டார்கள்.

கூடியக்கூட்டம் ஆளுக்கு எதேதோ பேசிக்கொண்டார்கள். ஒரு பெரியவர் “ரொம்ப நாளுக்கப்புறம்  இப்பதத்தான் இப்படி நடக்கிறது” என்றார். உடலில் சட்டையில்லை. கழுத்தில் டவலை மாலையாகப் போட்டுக் கொண்டிருக்கிறான். அவன் இப்படிச்சொன்னான், “வெளியூர்கள்ல இருந்து எவனாவது வந்திருப்பானா? பட்டம் பகல்லயே இத்தனை வீடு திருடு போய் இருக்கிறதுன்னா, ராத்திரியில நம்ம நிலமை என்ன? அரசு நிர்வாகம் டவுனுல மட்டும்தானே போலீஸ் ரோந்துப்போடுது.” என்றான்.

பெண்களும், ஆண்களும் அங்கங்கே நடுக்கம் நிறைந்த குரலில் பேசிக்கொண்டார்கள். சில தாய்மார்கள் குழந்தைகளைக் கீழே விடவில்லை. பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. சிலப்பெற்றோர்கள் வாலிபப் பிள்ளைகளை  “டே ராஜா வீட்டுக்கு முன்னாடி, ஒரு குண்டு பல்பாவுது போட்டு உடுங்கடா”

ஊர்த் தலைவர் வந்தார். அவர் காது சற்று பெரியதாய் இருந்தது. அடிக்கடி காற்றில் ஆடும்போல் இருந்தது. அந்த ஊருக்கு எப்போதும் தான் ரட்சகர் என்ற தொனி இருந்தது. “யாரோ ஔவுப் பார்த்துதான் இதைச்செய்திருக்கிறார்கள். காலையில் கேஸ்குடுக்கலாம் கவலப்படாதிங்க. போங்கப் போங்க” என்றான். இதற்குள் லேசான துப்புக்கிடைத்தது. ஆட்டுக்காரன் வீட்டுக்கு மூணாவது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவன், “யாம்பா அந்தப் பொண்ணுதாம்பா, என்னமோ சன்னல்ல கையவுட்டு எடுத்தது. அதன்பிறகு, ரொம்ப நேரம் கழித்துதான் வெளியவந்தது. அவுங்க வீட்டுக்கு எப்பவும்  வந்து போவுந்தானேன்னு,  நானும் வெறுமனே இருந்துவிட்டேன்.”

கைக்கு அடங்காம காற்றில் திரிந்த பலூன், திடீர் மழையில்  காலடிக்கு வந்ததாக’ ஜனங்கள் பேசிப்பேசி ஓய்ந்து வீடுகளுக்கு போகிற நேரம்பார்த்து. இந்தத் தகவல் புத்துயிர் ஊட்டியது. ஷீலாவீட்டின் முன் கூடினார்கள். அதற்கேற்றார்போல் ஷீலாவை வெளியேக் காணவில்லை! சந்தேகம் வலுத்தது.

அங்கங்கே மீண்டும், அவரவர்க்கு பிடித்தமான நபர்களுடன் நாக்கு கோலாட்டம்போட்டது. நிறைய திருட்டுக்கதைகள் வெளியில் வந்தன. பக்கத்து வீடுகளில் “அந்தப்பெண்தான்  எடுத்திருப்பா. அவள் அப்பன் யாரு, அந்தப்பழக்கம் அப்படியே வருது. பதினைந்து வருஷத்துக்கு முன்னால் இந்தமாதிரி நிகழ்வு அடிக்கடி நடக்கும். ஆனா, ஒரு முரைகூட திருடன் பிடிபட்டதேயில்லை. இந்தப்பொருள்தான் போகும்னு கெடையாது. வீட்டுல பெரியப்பெரிய ஒறையில நெல்லு கொட்டிவச்சியிருப்பாங்க வீட்டுக் காரனுக்குத் தெரியாமயே காலியாகி இருக்கும் வீட்டுக்காரன் கொஞ்சம் நாள்கழித்து விதைக்கு எடுக்கவோ, நெல் அவிக்கவோ ஆள் இறங்கும் போதுதான் அதிற்சியாக இருக்கும். அவனுககு வயிறு எரிந்தாலும், அது எப்போதோ  நடந்துவிட்டு இருப்பதால் வெளியிலும் சொல்லமுடியாது. சில வீடுகளில் பணம் போய்விடும். சாட்சிகள் இருக்காது. ஆனால், பலமான நம்பிக்கை அவன் மீதுதான் இருக்கும். துணிந்து சிலர் கேட்டால், மூர்க்கமாக, அசிங்கமான வார்த்தைகளில் பேசி எதிராளியை வாயடைக்கச்செய்வான். எதிராளிக்கு அவனைவிட அசிங்கமான வார்த்தையில் பேசமுடியும். அவன் அதை யோசித்ததேயில்லை. சிலநேரம் யார் சாட்சி நீப்பாத்தியா என்று தைரியமாகக் கேட்பான். மேலும், அந்நாளில் ஒரு தலையாரியைத்தவிர  அரசுப்பணியில் இருப்பது அவன் தகப்பன் மட்டுந்தான். அவன் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்தாலும் ‘உழைப்பவனைப்போல்’ எந்த தேவைக்காகவும் ஏங்கியதேயில்லை. இருந்தாலும் திருடுவான். அதனால், சிலர் அவன் தகப்பனிடம் சொல்லுவதற்கு தயங்குவார்கள்.  அப்போதெல்லாம் எந்தெந்த வீட்டுல என்னப்போகுமோன்னு சொல்லமுடியாது. ஊர் முழுக்க  கதிகலங்கி நிப்பாங்க. திருடியதற்கு முன்நேரமும்,  பின்நாட்களிலும் திருடுகொடுத்தவர்களிடம் நன்றாகப்பேசுவான். சிலசமயம் திருடுபோன வீட்டில் அவனுக்குத் தோதான நபரை ‘வாய்யா திருடியவன் என்னிக்காவது மாட்டாமலா போயிடப்போறான், குடிக்க அழைத்துச்செல்வான்.

அவனுக்குப்பக்கத்து வீட்டில் மிகவும் ஏழ்மையான விதவைப்பெண் இருந்தாள். அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மூத்தப் பெண்ணுக்கு கொஞ்சநாள் முன்தான் கலியாணம் நடந்தது. அவளுக்கு வந்தவன் இவனைவிட அயோக்கியன் கொஞ்சநாளிலேயே அவளை விட்டு ஓடிவிட்டான். அந்தப்பெண் தாய்வீட்டிற்கே வந்துவிட்டாள். ‘கத்திரி வெயில் வீட்டின்மேல் படுத்திருந்து, இரவில் பேயாக அழுத்த வரும் என்பதற்காக’ அந்த இளம்பெண் வீட்டுவாசலில்தான் படுத்தாள். நல்லத்தூக்கத்தில் அவள் கழுத்தில் இருந்த அரை சவரன் தாலியை அறுத்துக்கொண்டு வந்துவிட்டான். கயிறைக்கூட விடவில்லை. அந்த இரவு சற்றுத் தள்ளி, அவன் வீட்டுத்திண்ணையில் படுத்திருந்திருக்கிறான். இளம்பெண் தன் வீட்டிலேயே அழுது அழுது  விட்டுவிட்டாள். அதனாலேயே அந்தப்பெண் பித்தாகிவிட்டாள் என்று இன்றும் பேசிக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் அக்கிரமம் பண்ணவனாச்சே அவன், அதத்தான் இன்னிக்கி அவள் பொண்ணு செய்யிறா” என்று கதைக்கதையாகச் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

இதற்கிடையில் சிலப்பெண்கள் ஷீலாவீட்டுக்குள் நுழைந்து அவளை வெளியே அழைத்து வந்தார்கள். ‘எனக்கே ஒடம்பு சரியில்லாம படுத்திருக்கிறேன். நான் எடுக்கவில்லை’  என்று சாதித்தாள். அவள் அப்பன் இப்போதெல்லாம் அடிக்கடியான மரணப்படுக்கையில் விழுந்துவிடுகிறான். அனால், மனைவியின் ஓட்டல்சப்ளையர் வருமானத்திலும், தன் மூத்தப் பிள்ளையின் கம்பெனி வருமானத்திலும் பிழைத்துவிடுகிறான். அப்படித்தான் இந்தமுறையும் தேறிவந்திருந்தான் “என் பொண்ணுதான் கெடைச்சாளா. அவதான் எடுக்கலைன்னு சொல்றாளே. போங்கையா” எனக்கத்தினான். மேலும் கத்தத் தெம்பில்லாமல் திண்ணையில் உட்கார்ந்துவிட்டான். ஷீலாவைப் பெண்கள் விடவில்லை. துளைத்துக் கொண்டிருந்தார்கள். ஷீலாவின் துரதிர்ஷ்டம் மேலும் சிலசாட்சிகள் இறுகியது. பாம்பின் காலாய் இருக்கும் எதிர்வீட்டு சின்னப்பையன் “நான் மெத்தமேல இருந்துப்பார்த்தேன், ஷீலா எதையோ அவுங்க வீட்டுப்பின்னாடி பொதைச்சது” என்றான்.

நாலரை சவரத்தான் "மாட்டிக்கிடுச்சிடா குடுமி. சொல்றாளா இல்லியாப் பாருடா. சொல்லலனா ஒண்ணும் பண்ணாதிங்க விட்டுடுங்க. நாம செய்யவேண்டியதச் செய்தா தானா கொண்டாந்து போட்டிடுறா, டே, இங்க வாங்கடா  நீப்போயி பூசாரியக்கூப்டா,  ஒருத்தன் நாலு முட்ட எடுத்தா.  கோழி கூண்டுக்கு வந்துடுச்சாப்பாரு, அதையும் புடிச்சா.” இப்படிச்சொல்லியபோது அவனுக்கு மூச்சு வாங்கியது. இருந்தாலும் எதிர்ப்பட்ட ஒருவனிடம் “ டே, போயி வெத்திலப்பாக்கு, பழம், கற்பூரம் ஒண்ணுவிடாம வாங்கயாடா. ரெண்டுல, ஒண்ணுப்பாத்துடுறேன்” ஆவேசமடைந்தான்.

அந்த ஊருக்கு மரம், செடி, கொடிகளைத் தாண்டி  கேபில் கனைஷன் சுலபமாய் வந்துகொண்டுதான் இருந்தது. சாட்சிகள் இறுகியபோது ஷீலா சற்றுத் தடுமாறினாள். சில பெண்கள் நயமாகப்பேசி அவளிடமிருந்து உண்மை வரவழைத்துவிட்டாள் தன்னுடைய சாமர்த்தியம் மெச்சப்படும் என நினைத்தார்கள். சிலர் எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று புகழ்ந்தார்கள். இதற்கிடையில் கடைக்குப்போனவன் மூச்சிரைக்க ஓடிவந்தான். இன்னொருவன் சேவலைக் கையில் பிடித்திருந்தான். அதுக் கத்த முடியாமல் கழுத்து இறுகியிருந்தது. இறக்கை மட்டும் படபடவென அடித்தது. நீங்கள் ஷீலாவின் நிலமையை நினைத்துப்பார்க்கவேண்டும். சுற்றி இருந்த மக்கள் ஏதோ விபரீதம் ஏற்படப்போகிறது என நினைத்தார்கள்.

தாம்பாளத்தட்டை அவசர அவசரமாய் கழுவி இருப்பார்கள்போல ஈரம் இருந்தது. வெத்திலைப்பாக்கு பழம் வைத்து கற்பூரத்தைக் கொளுத்தினார்கள். கற்பூரம் எரிந்தபோது அதைச்சுற்றி தட்டில் இருந்த ஈரம் தீய்ந்து வரண்டுகொண்டேபோனது. தட்டில் இருந்த முட்டைக்குக் குங்குமம் மஞ்சள் வைத்து எதோ புரியாத வார்த்தைகளைச் சொல்லினார்கள். பிறகு  எடுத்து நாலுபேரிடம் கொடுத்து அவள்வீட்டின் நாலு மூலையிலும் வைக்கச் சொன்னார். ஒருவன் இரண்டு கையையும்குவித்து முட்டையை மிக பயபக்தியுடன் ஷீலா இருக்கும் பக்கமாக எடுத்துச் சென்றான். பலியாடு, வெட்டப்போகிறவன் கத்தியோடு நிற்பதையும், தன் கொம்புகளையும் இறுக்கி இழுத்துப் பிடித்திருப்பவனையும் கழுத்துக்கு மாலைப் போட்டவனையும் மிகப்பொறுமையோடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. ஷீலா தானும் ஆடுதான் என்ற நிலைக்கு வந்தாள்.

நாலரை சவரத்தான் “இன்னும் கொஞ்சநேரத்துல எடுத்தவங்களே கொண்டாந்து போடனும்பாரு.” என்றான். ஷீலாவின் அம்மா வீட்டின் முன் கூட்டத்தைப்பார்த்து மிரண்டு எம்மா என்னடி நடந்துச்சி.  மகளைநோக்கி ஓடினாள். ஊருக்குள் நுழையும்போதே யாரோச் சொல்லி இருக்கிறார்கள். காலையில் ஏழரைமணிக்கு ஓட்டலில் நுழைந்தால் சமயத்தைப்பார்த்து வேலை செய்யவேண்டும். எச்சில் இலை எடுக்கும்போது மட்டும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்  வேலை நடந்ததா என்பது தெரியக்கூடாது. சில கண்கொத்திக் கஷ்டமர்கள் ஏம்மா எச்சில் எலையை எடுத்துட்டு,  நீயே சாப்பாடுப் போடுறியா? என்று மூஞ்சில் அடிப்பார்கள். சிலர் அப்படிக்கேட்க மனசுவராமல் ஒரு மாதிரி அறுவறுப்பாகப் பார்த்துவிட்டால், அதற்காக தேவையே இல்லாமல் லேசான வசீகரம் கலந்த புன்னகையை உதிர்க்க வேண்டியிருக்கும். அப்போது  முன் வரிசையின் ஐந்து பல்லுக்குப் பக்கத்தில் ஓட்டைத்தெரிந்து சற்று அழகைக்கெடுத்தாலும் அதை அவமானமாக நினைக்கமாட்டாள். ஓட்டளுக்கு ஒரே பெண் ஆள் அவள்தான். அந்தக்களைப்பு தீரவில்லை. இப்போது வீட்டின் வாசலுக்கு நேராக வந்து விழுந்துவிட்டாள். உடனே ஷீலா அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.  “எம்மாடி எடுத்திருந்தா கொடுத்துடுமா அவுங்க என்ன என்னமோ செய்யிராங்க”  

கூட்டத்தில் யாரோ ஒருவன் “இவ்வளவு பேருக்கேக்குறாங்க ஏதாவது மூச்சு உடுதாபாரு.  அந்த கோழிய அறுத்து வீட்டச்சுத்தி ரத்தத்தை விடுங்கடா. தானா எடுத்துக்குடுப்பா”

“போடீப்பாவி. நீ எங்கியோ போறவ. இந்த வீட்டுல இருக்கப்போற  தலபுள்ளை நல்லா வாழனும். போடியம்மா, உனுக்கு புண்ணியமாப்போவுது” ஒரு பெண் கணிந்த குரலில் சொன்னாள். இப்போது ஷீலா வீட்டில் நுழைந்தாள். மூலையில் தரையில் புதைத்துவைத்திருந்ததை கிளறி எடுத்தாள். அவள் பின்னாடியேப்போனவர்கள் “நாலரை சவரன் கெடச்சிடுச்சி” என்றார்கள். ஆட்டுக்காரனும், மனைவியும் ஓடிவந்தார்கள். யம்மா எங்க நகை எங்க என்று கெஞ்சினார்கள். ஷீலாத்திரும்பி வீட்டின் பின்னாடி போனாள். முட்டை வைத்திருந்த பக்கத்தில் கிளறினாள். அந்த நகையும் எடுத்துக்கொடுத்தாள். ஒவ்வொரு நகையும் எடுக்கும்போதும் சிறியவரும், பெரியவர்களும் ஆவலாக அலைமோதி ஓடுகிறார்கள்.  எந்த மனிதனுக்கும் தனக்குப்பிடித் தமானதில் தானே ஆவல் அதிகமாக இருக்கும். ஷீலா தலைகுனிந்து வீட்டில் நுழைந்தாள். இப்போது அவள்கூட யாரும்போகவில்லை.

திடிரென்று வீட்டின் கூரையில் சொருகியிருந்த தடியை பிடுங்கக்கொண்டு ஓடினான். முறிந்திருந்த கூரையிலிருந்து வைக்கோலும், ஓலையும் கொட்டியது. “தெவிடியா முண்ட, என் மானத்தை வாங்கிட்டியே. நான் எப்பிடி தலைநிமிர்ந்து வாழமுடியும். எனக் கடுமையான வார்த்தைகளால் பேசிக்கொண்டே அடித்தான். அடி விழுகிற சத்தம் குறைவில்லாமல் கேட்கிறது. சங்கிலித் தொடரான வசைமொழி வெளிநின்ற சிலர் காதுக்கு இனிமையாக இருக்கிறது.  

வீட்டில், நகைகளை எடுத்த மண் குழி திறந்திருந்தது. பக்கத்தில், ஜிப்பு பிதுங்கும் படியாக தோல்பை ஒன்று தலைமறைவாக இருந்து. ஷீலா ஏனோ சிறிதும் அழவேயில்லை!
Pin It