"வாங்க சார்...உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருந்தேன்.இதை சலூனா பாக்காதீங்க சார்.இதான் எனக்கு ஹைட் அவுட்டே.உக்காருங்க...உக்காருங்க...எப்டி ஆரம்பிக்கலாம்."

"தேவராஜனை எங்கூட தங்குறதுக்கு அனுமதிச்சது மட்டும் தான் என் வாழ்க்கையோட ப்ளெண்டர் மிஸ்டேக் சார்.தேவ் என்னோடு கல்லூரியில் படிச்சவன்.சத்தியமா சொல்றேன்..சொந்த ஊர்க்காரன்,சொந்தக்காரன், தெரிஞ்சவன் புதுசா பழகுனவன் இப்பிடி எந்த ரூபத்துல யார் வந்திருந்தாலும் ஒரு பிரச்சினையுமில்ல எனக்கு.இந்த ஒருத்தன் என்னைப் படுத்துன பாடு இருக்கே...நான் ரொம்ப பாவம் ஸார்.நான் தங்கியிருக்குறது ஒரு வீட்டோட மாடி போர்ஷன்.கீழே வீட்டுக்காரர் குடும்பம் இருக்காங்க.எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தரோட சிபாரிசுக்கு அப்புறம்  தான் எனக்கு இந்த வீடு கிடைச்சது.ஒரு பிரச்சினையுமில்லாம ஸ்மூத்தா  இருந்தது .இந்த தேவ் கடங்காரன் வர்ற வரைக்கும்."

"பாசமா கட்டிப்பிடிச்சி கண்ணீர் மல்க உருகாத கொறையா,ஒரு பப்புக்கு கூட்டிட்டு போயி, இடைப்பட்ட காலத்துக் கதையெல்லாம் பொறுமையாக் கேட்டு (கவனிங்க பாஸ்..என்னோட ட்ரீட்டு ) அவனை எங்கூடவே தங்கச்சொல்லி கூட்டிட்டு வந்தேன் என் ரூமுக்கு.இப்பிடியும் இந்த க்ரேட்டர் சென்னைல ஒருத்தன் இருப்பானான்னு தானே யோசிக்கிறீங்க.சத்தியமா நான் நட்புக்காக நாலா எட்டா சுருங்கிவிரியிற கேரக்டர் பாஸ்.நம்புங்க.."

"எங்க ரெண்டு பேருக்குமே நல்ல வேலை நல்ல சம்பளம்கிறதால வீக் எண்ட்ல சுத்துறதும்,சென்னையை சுத்தி இருக்கிற மழைமறைவுப் ப்ரதேசங்கள்ல ஒதுங்கி குடிக்கிறதும்,வாழ்க்கையை வியக்கிறதுமா முதல் நாலு மாசம் இணைபிரியாம இருந்தோம்.அப்போல்லாம் இப்பிடி கண் சிவக்க ஒரு நாள் வரும்னோ,என்ன செய்யிறதுன்னு அழாக்குறையா இப்பிடி சலூன்ல உட்கார்ந்து புது நண்பரான உங்க கிட்டே என் கதையை சொல்லி ஆறுதல் தேடுவேன்னோ யாராச்சும் சொல்லி இருந்தா நானே நம்பியிருக்க மாட்டேன் பாஸ்."

"இருங்க ஒரு தம்மை பத்த வெச்சுக்கிறேன்.நான் எள்ளுன்னா அவன் எள்ளா இருப்பான்.அவன் எண்ணைன்னா நான் எண்ணையா அவதரிப்பேன்.அப்பிடி ஒரு நட்பு சார் .எந்த குறையும் இல்ல.திரும்ப திரும்ப  சொல்றதுக்கு காரணம்,நான் அடிப்படைல நல்லவன் சார்.மனுஷங்களை எடைபோடுறதுல மட்டும் கொஞ்சம் வீக்கானவன்.அதான் தேவ் மாதிரியான ஆசாமிகள் கிட்டே மாட்டிக்கிட்டு முளிக்கிறேன்.சிரிக்காதீங்க சார்.என் கதையில நீங்க லைட்டா இல்ல,வெயிட்டா சிரிக்கிறதுக்கு  ,நிறைய்ய எடம் இருக்குது.நானும் சேர்ந்து சிரிக்கிறேன்."

"ஒருமுறை தேவுக்கு உடம்பு சரியில்லாதப்போ கிட்டத்தட்ட எட்டு நாள் ஒரு நர்சம்மா மாதிரி நா கவனிச்சுக்கிட்டேன் சார்.செஞ்சேன்ல...?பதிலுக்கு அவன் என்னை நோகடிக்கிறதா...?ஒரு நியாயம் வேணாமா..?ஒரு பொண்ணு தான் சார் காரணம்.சார்....சிரிக்கிறீங்கல்ல...இதுக்கு தாண்டா காத்துக்கிட்டு இருந்தேன்னு  சிரிக்கிறீங்கல்ல..?சார்...ரெண்டு பேரைப் பிரிக்கிறதுக்கு நடுவுல ஒரு பொண்ணு வந்தாபோதும்....பிரிஞ்சு தான் ஆகணும் போல.இது தான் லா..நான் ஒத்துக்குறேன்.ஆனா எதுலயும் நேர்மை வேணாம்,..?ஏ மச்சான்..சண்முகம்..நா சொல்றது உண்மை தானேப்பா...?டீ வந்துறுச்சா,எடுத்துக்கோங்க சார்.."

"அவ பேரு ஷர்மி.வீட்டுக்காரரோட தம்பி மக.,திண்டுக்கல்லே இருந்து ஏதோ புராஜெக்ட்காக சென்னைக்கு வந்திருந்தா 15 நாள் இங்கே தான் இருக்கப்போறாங்குற எடத்துல தான் கதையோட ட்விஸ்டே...ஷர்மி.அழகான பொண்ணு.வந்த ரெண்டாவது நாளே திருட்டுத் தனமா நான் பார்த்தேன்.தலைவா,நான் ரொம்ப ஃப்ராங்க் டைப்.நடந்ததை திரிச்சு சொல்ற பழக்கமே கிடையாது. உண்டுன்னா உண்டு அதான் நல்லது.பார்த்தேன்னாலும் எனக்கு மனசாட்சி உறுத்துச்சி.அதுக்கப்புறம் அந்த திசையையே நான் பாக்கலை.இந்த தேவ் இருக்கானே....என்ன செஞ்சான் தெரியுமா..?"

"ஒரு நாள் நான் வெளில போய்ட்டு வர்றேன்.ரூம் கதவு சாத்திருக்கு.ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கிசுகிசுன்னு பேசிக்கிறதும் சிரிக்கிறதும் சப்தம் கேட்டுச்சு.நா அப்டியே நின்னேன் பாஸ்.ஒண்ணும் ஓடலை.ஒரு ரெண்டு நிமிஷம் சப்தமே வரலை.ஆத்திரமாகி கதவை தட்டலாம்னு போறேன்....கதவு திறக்குது.அந்த பொண்ணு ஷர்மி திரும்பி அவனைப் பார்த்து பழிப்பு காட்டிசிரிச்சுக்கிட்டே என்னை க்ராஸ் பண்ணி போச்சு.எனக்கு ஆத்திரம் பலமடங்காயிருச்சு தலைவா"

உள்ளே போயி கட்டில்ல உக்காந்தேன்..ஷூ சாக்சை களட்டிக்கிட்டே ஸ்டைலா சொல்றேன்.." இங்க பாரு தேவு,நானும் ஹவுஸ் ஓனரும் தாயா பிள்ளையா பளகிட்டு இருக்கோம்.இதெல்லாம் நல்லால்ல..."ங்குறேன்.அவன் வில்லத்தனமா சத்யராஜ் மாதிரி சிரிப்போட,""நீ எப்டி வேணா பளகு...நான் குறுக்கே வர்றனா...?நா பளகுறது ஷர்மி கிட்டே தான்.நீயும் குறுக்கே வராத...அதான் மச்சி மரியாத..""ந்னான்.

கோவத்தை அடக்கிக்கிட்டேன்.என்னோட அன்பான ஸ்னேகிதத்தை நேத்து வந்த ஒரு பொட்டச்சிக்காக தேவ் விட்டுக்கொடுப்பான்னு நா நம்பலை.அதுக்கப்புறம் நான் எப்போ அந்த மேட்டரை எடுத்தாலும் அவன் பேசத்தயாராயில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.நானும் விடத்தயாரா இல்லை.அன்னிலேருந்து நாலாவது நாள் வெளில கெளம்புறான் தேவ்.அவனை வழியை மறிச்சு நிப்பாட்டுறேன்."தேவ்.என் கூட பேசு.ஷர்மி விஷயத்தை விடமுடியாது.நா ஹவுசோனர் கிட்டே சொல்லப் போறேன்"னென்.அதுக்கு அவன் சிரிச்சுக்கிட்டே "சொல்லிக்கோ.அதுக்கப்புறம்"என்றான்.

எங்கிட்டே "வேணாம்"ன்னு கெஞ்சி இருந்தாக் கூட நான் விட்டுருப்பேன்.நட்புக்காக எதையும் செய்றவன் .இதை செய்யலாம்.ஆனா இவ்ளோ மெதப்பா எங்கிட்டே பேசக்கூடாதுல்ல..?நேரா போறேன்.வீட்டு ஓனர் ரொம்ப நல்ல மாதிரி.டீவீஎஸ்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கார்.லீவே போடமாட்டார்.ஞாயித்துக் கிழமையைக் கூட ஞாபபப்படுத்தலைன்னா வேலைக்குப் போயிறுவார்.சாந்தமானவர்.சாந்தாராம்னு பேரு.

அவரைக் கூப்ட்டு சொன்னதும் அமைதியா கேட்டுக்கிட்டு இருந்தாரு.உடனே "ஷர்மி ஷர்மி"னு கத்துனாரு.அந்த பொண்ணு உள்ளே இருந்து வந்திச்சு.

"என்னம்மா,மாடிக்கு போனியா..?தம்பி என்னென்னமோ சொல்லுது..? அவரு கேட்டதுமே அந்த மாய்மாலக்காரி அழ ஆரம்பிச்சுட்டா.."நா எப்ப சித்தப்பா மாடிக்கு போனேன்...?என்னைப் பத்தி இல்லாததை ஏன்ணே சொல்றீங்க..?நீங்க நல்லாவே இருக்கமாட்டீங்க.."ந்னு பசப்புறா.உள்ளே இருந்து வந்த சாந்தாராமோட பொண்டாட்டி(கொஞ்சம் கனமான லேடி.என்னை சுத்தமா பிடிக்காது)""இதென்னங்க வம்பா இருக்கு,..?என் கண்ணுக்குள்ளேயே வெச்சு பாத்துக்கிட்டு இருக்கேன் ஷர்மிய....இந்தத் தம்பி என்னன்னமோ சொல்லுது.,அதும் நம்ம ஷர்மியோட சேர்த்து தேவா தம்பியையும்ல குறை சொல்லுது.ஹ்ம்...""ந்னு டீவீல வர்ற மாமியார்நடிகை மாதிரி பெர்ஃபார்மன்சை அள்ளீ ஊத்துச்சி அந்தம்மா. சட்டையை மாட்டிக்கிட்டே மாடிலே இருந்து தேவ் வேற வந்துட்டான்  இறங்கி.அவனை குற்றவாளியான்னு விசாரிக்கக் கூட தயாராயில்லை யாருமே.காத்து எனக்கு பாதகமாவும் அவனுக்கு சாதகமாவும் வீச ஆரம்பிச்சிருச்சின்னு புரிஞ்சிக்கிட்டேன்.

என் ஆருயிர் நண்பன் என்னைபார்த்து கேக்குறான்."என்னடா நம்ம ரெண்டு பேருக்குள்ளெயும் எதுனா சண்டை இருக்கலாம்.அதுக்காக இப்பிடி ஃபேமிலி பீப்பிளை டிஸ்டர்ப் பண்ணிட்டிருக்கது நல்லா இல்லடா செல்வா"ங்குறான் அந்த நல்லவன்.அங்கே நா மெல்ல பின்வாங்குறென். அப்போ அந்த ஷர்மி அழுதுக்கிட்டே."இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை சித்தப்பா”ங்குறா தேவ் ஐ காமிச்சி.

நான் அப்டியே சரிஞ்சு  உடைஞ்சு மாடி ரூமுக்கு வந்தேன்.தேவ் வேகமா உள்ளே வந்தவன் என் கழுத்தை நெறிக்குறான்.,"டேய் டேய் விடுடா"ந்னு நான் சொல்றது எனக்கே கேக்கலை.அழுத்தமா நெறிச்சவன் மெல்ல விட்டான்."ஆமாடா...நான் அவளை இதே ரூம்ல வெச்சி தடவுனேன்.அவளுக்கு பிடிச்சிருக்கு.எனக்கும் பிடிச்சிருக்கு.உனக்கென்னடா?" அப்டின்னு ஒரு உணவுப்பொருள்ல ஆரம்பிச்சி என் உடலுறுப்புக்கள்,குடும்ப உறவுமுறைகள்,பாலுறவுத்தகவல்கள்னு என்னை திட்டித்தீர்த்தான்.அப்புறம் சொன்னான்."இனி உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை.என் மேட்டர்ல வந்தே...ஜாக்ரதைன்னான்."

எங்க ரெண்டு பேர் நட்பும் உடைஞ்சி தூள் தூளா சிதறுச்சி.அங்கே தான் இடைவேளையாச்சி.

அதுக்கப்புறம் நானும் அவனும் பேசிக்கவே இல்லை.மூணு மாசமாச்சு.எங்கூட அவன் பேச முயற்சிக்கலை.நானும் அவன் பக்கம் திரும்பி கூட பாக்கலை.எங்க ரூமுக்கு ரெண்டு சாவி உண்டுங்கறதால ரெண்டு பேரும் தனித்தனியா வாழ்ந்தோம்.இனி இவன் கூட எதுவுமே வேணாம்னு இருக்க ஆரம்பிச்சிட்டேன்.பிரிஞ்சு தனித்தனியா ஆயிட்டோம்னு சொல்லலாம் அப்பத்தான்..ஒரு நாள் காலையில எழுந்து பாக்குறென்,ரூம் முழுக்க ஒரே புகைமயம்.அந்த நேரத்துல எழுந்த உடனே என்ன நடக்குதுன்னு தெரியாம முழிக்கிறேன்.இந்த தேவ் இருக்கானே காவி வேட்டி கழுத்துல ருத்ராட்சக் கொட்டை,மூஞ்சி முளுக்க விபூதி,உடம்பு முளுக்க பக்தின்னு நிக்கிறான்.கண்ண கசக்கிட்டு பாக்குறென் எதிர்ப்புற சுவத்துல ஒரு ஆஜானுபாகுவான தாடிக்காரர் ஒருத்தரோட ஃபோட்டோவ ஒட்டி வெச்சு அதுக்கு சூடம் காமிச்சிக்கிட்டு இருக்கான்.அன்னிக்கும் நான் பேசலை.அவனா பேசினான்.

"என்ன மன்னிச்சிரு.நான் திருந்திட்டேன்.எல்லாத்துக்கும் இந்த மகான் தான் காரணம்னான்.எனக்குப் புல்லரிச்சிது.அடிப்படைல நா ரொம்ப நல்லவன்ல..."யாரு தேவு இது?ந்னேன்"அதுக்கு அவன் அர்த்தத்தோட சின்னதா சிரிச்சு ரெண்டு கையையும் வானத்தை நோக்கி தூக்குனான்.மென்மையான குரல்ல சொன்னான்."இவரு யாருன்னு சொல்ற அளவுக்கு நான் யாரு,நீ யாரு..?நான்,நீ,இவர் எல்லாமே வெறும் பெயர்கள்.வெறும் உயிர்கள்.இவருக்குப் பெயரும் உயிரும் கிடையாதுங்குறது தான் ஆரம்பமே.இவரொரு மகான்.தாடீசாமியார்னு சொல்வாங்க..இது வரைக்கும் வார்த்தைகளால் சொல்லப்பட்ட எல்லா தத்துவங்களுக்கும் தன்னோட மௌனத்தால் மாற்று கண்டுபிடிக்கிறாரு""ன்னான்.

எனக்கு ஆச்சரியமா இருந்தது.மழைக்குக் கூட கோயில்லயே ஒதுங்காதவன் தேவ்.ஆனாலும் அவன் மனம் திருந்துறதுக்கும்,மன்னிப்பு கேக்குறதுக்கும் காரணமா இருந்த அந்த சாமியாரை எனக்கு ரொம்பவே பிடிக்க ஆரம்பிச்சுருச்சி.தேவோட நடவடிக்கைகள் எல்லாம் மொத்தமா மாறிடுச்சி.சீக்கிரமே எழுந்துக்குறான்.டெய்லி மூணு வேளை என்ன என்னமோ மந்திரங்களை உச்சரிக்கிறான்.சுத்தபத்தமா இருக்கான்.குடிக்கிறதில்ல.சிகரட்டை கூட நிப்பாட்டிட்டான்னா பாருங்களேன்.எங்கிட்டேயும் அவன் பழைய மாதிரி பழக ஆரம்பிச்சான்.

.என்ன சார்... கதை முடிஞ்சுருச்சின்னு நினைக்காதீங்க..நா சொல்ல வந்த கதை இனிமே தான் ஆரம்பிக்குது.அவனோட சேர்ந்து மெல்ல மெல்ல நானும் அந்த தாடி மகானோட சிஷ்யனாவே ஆயிட்டேன்.தினமும் கவிச்சி இல்லாம வாழ முடியாத தேவ் இப்ப வாரத்துல ரெண்டு நாள் மௌனவிரதம் இருக்கான்.மெல்லிசு குரல்ல தேவ் பண்ணுற உபதேசங்களை கேட்டுக்கிட்டே இருக்கலாம்.ஒரு நா என் கூட வேலை பாக்குற செந்தில் என்னைய பார்க்க ரூமுக்கு வந்தப்ப மகானோட படத்தை பார்த்துட்டு கேலி பண்ணிட்டாரு.பழைய தேவ்வா இருந்திருந்தா அடிச்சிருப்பான்.ஆனா தேவ் கோவப்படாம அவரோட விவாதிக்க ஆரம்பிச்சான்.

"இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்"நு செந்தில் சொல்ல,தேவ் "ஆமாம்.என் திருப்திக்காக நான் செய்றேன்.ஆனா இது பைத்தியக்காரத்தனம் தான்."அப்டின்னு அவன் சொன்ன முதல் பதில்லயே செந்தில் ஆடிட்டாப்ள.அதுக்கப்புறம் செந்தில் கேக்குற கேள்விகளுக்கெல்லாம் டாண் டாண்னு பதில அடிச்சி விட்டான் நம்மாளு.அசந்துட்டாப்ல செந்தில்.எங்க இருக்காரு மகான் நான் பாக்க முடியுமா..?ந்னு செந்தில் கேக்க,"என்னை பாக்கணும்னு அவர் முடிவு பண்ணாரு.நா பார்த்தேன்.உங்களுக்கு அந்த பாக்கியத்தை அவர் தான் குடுக்கணும்.மகான் ஒரே நேரத்துல பல திசைகள்ல நடக்குறவரு.அவரு நினைச்சா தான் நம்மளை பாக்க வருவாருங்குறான்." எனக்கு மெய் சிலிர்த்துருச்சி.கன்னத்துல போட்டுக்கிட்டேன்.கெளம்புறப்ப செந்தில் தேவுகிட்டே கேட்டு அந்த மகானோட ஒரு ஃபோட்டோவ வாங்கிக்கிட்டது தான் உச்சகட்டமே..

இந்த மாதிரி எனக்கும் தேவுக்கும் இடையில புகுந்த மகான் எங்க லைஃபையே சமானப்படுத்துவாருன்னு நா எதிர்பாக்கலை.எல்லாம் போன சனிக்கிழமை வரைக்கும் தான்..தன் சித்தி மக கல்யாணத்துக்காக ஊருக்குப் போயிட்டான் தேவ்.வெள்ளிக்கிழமை எதிர்ப்பாராம எனக்கு லீவு கிடைச்சிது.கூட வேலை பாக்கிற பசங்க எல்லாருமா பாண்டிச்சேரி போலாம்னு கூப்ட கெளம்பிட்டோம்.ஒரே ஆட்டமும் பாட்டமுமா கெளம்பி பாண்டி போயிட்டு சனிக்கிழமை காலைல 11 மணிக்கு திரும்பி வந்தாச்சி. கோடம்பாக்கம் சந்திரபவன் ஒட்டின சிக்னல்ல யூ எடுத்து திரும்புறேன்.என் பின்னாடி செந்தில். பக்கத்துல உரசுனாப்ல க்ராஸ் பண்ணிட்டு போன ஒரு ஃபோர்ட் கார்ல பின் சீட்டில் இருந்தது...சாட்ஷாத் தாடி மகானே தான்.அதுக்கப்புறம் என் வண்டில பறக்குறேன்,அந்த நீளநெடுஞ்சாலையோட வேகமான வாகனம் என்னோட பல்சர் தான்ற மாதிரி பல பேரு வாயில விழுந்துருப்பேன்.நல்ல வேளை கீழே விழலை.துரத்திட்டு போய் அந்த வண்டி நின்ன வீட்டு வாசலுக்கே போயாச்சி.

போர்ட்டிக்கோல நிக்குது கார்.பந்தாவா இறங்குறாரு மகான்.அவர் வீட்டு உள்ளே போறதுக்கு உள்ளே அவரைப் பிடிச்சிறணும்னு நின்ன எடத்துலேருந்தே கத்துறென்..."ஐயா..சாமீ..."ந்னு.அவர் நிக்கிறாரு.திரும்பி பார்த்தவர் கண்கள்ல கருணையை தேடுறென்.ஓடிப்போயி அவரு கால்ல விழுறேன்.பின்னாடியே செந்திலும்."சாமி உங்க அருள் வேணும் எனக்குங்குறென்."

முந்துன நாள் முழுக்க அடிச்ச மப்பு எதுவும் என் நடத்தைல இல்லைன்னாலும் வாசனை வந்ததுனால மூஞ்சியை சுளிக்கிறாப்லன்னு நினைச்சேன்..அதுக்குள்ளே அவர் வீட்டு வேலைக்காரன் வந்துர்றான் பக்கத்துல."டேய் முத்து யாருன்னு கேளு'ங்குறாரு மகான்.அதுக்கு அந்த முத்து "யாருங்க நீங்க ரெண்டு பேரும் என்ன வேணும்..?எதுக்கு எங்க முதலாளி கால்ல விழுறீங்க?"ந்னு அதிகாரத்திமிர்ல கேக்குறான்.எனக்கு என்னன்னவோ தோணுது மகான் கிட்டே பேசணும்னு,ஆனா வார்த்தை வரலை.ஒரே ஒரு கேள்வி கேக்குறேன்.

."நீங்க தானே தாடி மகான்..?"அவ்ளோ பலகீனமா என் குரல் இருந்ததே இல்லை. அதுக்கு அவரு கடுகடுத்த குரல்ல,":நான்சென்ஸ்....முத்து,இவங்களை வெளில தள்ளி கதவை சார்த்து"ந்னுட்டு போயிட்டாரு.எதுத்த சந்து டீக்கடைல போயி ஒரு தம்மை பத்தவெக்கிறென்.எனக்கு ஒண்ணுமே புரியலை.இவரு மகான் தான்.தினமும் அந்த முகத்தை எவ்ளோ க்ளோஸ் அப்ல பார்த்துருப்பேன். மௌனயோகம்னு ஒண்ணு.அந்த முகத்தை இமைக்காம பார்த்துட்டே இருக்கணும்.அதான்.அதை தேவ் சொல்லிக்கொடுத்தான்.அவனைவிட நான் தான் அதை அதிக முறை செஞ்சிருப்பேன்.ஆனால் ஏன் மகானுக்கு தன்னை பிடிக்கலியா அல்லது தான் குடிச்சிட்டு வந்ததால் வெரட்டிட்டாரா..?"ந்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.கண்ல தண்ணீ.

அப்போதான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சி...ஒருவேளை....அவசரமா செந்திலோட ஃபோனை வாங்கி தேவுக்கு அடிச்சேன்..எடுத்தான்.

"ஏண்டா தேவு....நா இப்போ எங்கே இருக்கேன் தெரியுமா...?"ந்னு கேட்டேன்.கிட்டத்தட்ட அழுகையோட விளிம்புல.

"சொல்றா...ஏன் உன் ஃபோன் என்னாச்சி...?"நனான் தேவ்.

"அடேய் பாவி,நான்..இப்ப....தாடிமகானை..."எனக்கு பேச்சு கோர்வையா வரலை..

கெக்கெக்கேக்கன்னு சிரிக்கிறான்."சாரி மச்சி..கொஞ்சம் ஓவரா வெள்ளாண்டுட்டேன்ல..?அவரு தாடி உண்மை தான்.மகானெல்லாம் கிடையாது.நான் வேலை பார்த்த கம்பெனி எம்டி தான் அவரு...சும்மா கலாய்ச்சேன்.அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்டா மச்சி.நானும் ஷர்மிளா,அதாண்டா ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு வந்தாள்ல...அவளும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ல காலைல கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்டா...நீ என் மேல கோவப்படாதே.உங்கிட்டே சொல்லிருக்கலாம்.நீ என்ன செஞ்சிருப்பே...ஓவியமாட்டம் அவ சித்தப்பன் கிட்டே போட்டு விட்டுருப்பே.அதான் சொல்லலை. யோசிச்சிப் பாரு...உங்கிட்டே என் கல்யாணமேட்டரை சொல்லாததுக்கும் தாடிமகானுக்கும் எல்லாத்துக்கும் ஒரே ஒரு காரணம் தாண்டா மச்சி.பிசியா இருக்குறப்போ...நாம மத்தவங்க விஷயத்துல குறுக்கிட மாட்டோம்..உன்னை பிசியா வெச்சிருந்தேன்...நானே சொல்லிருப்பேன். அதுக்குள்ளாற நீ எம்டியை பார்ப்பேன்னு சத்தியமா நானே நினைக்கலைடா..."

சொல்லிட்டு வெச்சுட்டான் சார்.எல்லாம் புரியுது சார்.என் நண்பன் மேல நான் பொறாமைப்பட்டேனோ..?அதான் என்னை பிசியாக்கி பார்த்தானோ...இது மட்டும் புரியலை சார்.

Pin It