பாட்டி வீட்டுக்கு போகிறபோதெல்லாம் பக்கத்தில் அல்லி அக்கா வீட்டில்தான் வாசம். சிறுவயதின் விடுமுறைகளில் போவதற்கு பாட்டி வீடு இருந்தவர்கள் பாக்கியசாலிகள். அலைவரிசை கொஞ்சமும் ஒத்து வராத மாமா பெண், அப்படி என்ன பக்கத்து வீட்டில் எப்போதும் என, தூங்க வருவதற்குள் தலையணையை ஒளித்து வைத்தாலும் மதிப்பதில்லை. அல்லி அக்கா, அவர்களுடைய தங்கை சிவகாமி, தம்பிகள் ராஜு, ராமு இவர்களுடன் ஊரில் இருந்து வரும் அவர்களுடைய மாமா பெண் நீலாவும் சேர்ந்துதான் ஜமா. நீலாவுக்கும் பாட்டி வீட்டு பாக்கியம் ஒவ்வொரு விடுமுறைக்கும்.

அல்லி அக்கா வீட்டு ஹாலில் பொட்டு வைத்து பூ பொட்டு மாட்டி இருக்கும் வள்ளி அக்காவின் படத்தை கடந்து செல்லும்போது திக் திக் என்று நெஞ்சு அடித்துகொள்ளும். வள்ளி அக்கா பழைய நடிகை போல அழகு. அந்தக் காலத்திலேயே, எஸ்.எஸ்.எல்.சி படித்து இங்கிலீஷ் பிளந்து கட்டும் தாத்தா பி.ஏ.படிக்க வைத்தார் மகளை. பாட்டு, கண்மேட்டி போடுவது, வயர் கூடையில் சிவன் கண், அருநெல்லி மாடல், மணியினால் தாஜ்மஹால், வாழைப்பழ சீப்பு, கிணறு போடுவது என்று எதுவும் பாக்கி இல்லை. மாடி ரூமில் அடைப்பில் கிடக்கும் மணியில் போட்ட வெல்கம், ஓம் முருகா, தொங்கும் துணி கிளிகள் தைத்த தொட்டில் மாட்டல் எல்லாவற்றையும் தூசில் ரகசியமாய் கிளறி பார்ப்போம். அதில் இருந்து கிளம்பும் ஒருவித விரும்புகிறோமா, பயப்படுகிறோமா என கசியும் மணம், வெள்ளை அலரியும், தாழம்பூவும், திருநீறு பத்ரியும் சேர்ந்த மணத்தோடு ஒவ்வாத மரண வாசனை சொல்லும் ஊதுவத்தி மணத்தோடு வீசும்.

ஹாலை தாண்டிய ஒட்டு தாழ்வாரத்தின் உத்தரத்தில்தான் வள்ளி அக்கா சுருக்கிட்டுக்கொண்டாளாம். வாசல் தெளிக்க எழுந்த  பாட்டி பின்பக்கம் போனபோது எங்கும் இருள். விடியவில்லை. அன்று அழ ஆரம்பித்த பாட்டியின் விடியற்கால அழுகையுடந்தான் அல்லி அக்காவும், மற்ற பிள்ளைகளும் வளர்ந்தார்கள். அந்த வீட்டின் மூலை முடுக்கில் எல்லாம் வள்ளி அக்கா தீராத துக்கமாய் படர்ந்து விட்டாள். முதலில் துக்கமும் பின் பழக்கமுமாகி விட்ட சோகம் அது.

நவராத்திரி விடுமுறை குளிரிலும், கிறிஸ்மஸ் விடுமுறையின் பனியிலும், சித்திரை பெரிய லீவின் கடும் கோடையிலும் எங்களுடன் வள்ளி அக்காவும் துக்கமாக வாழ்ந்தாள். மொட்டை மாடியில் பாட்டு கச்சேரி. அல்லி அக்காவும், நீலாவும் நன்றாக பாடுவார்கள். இரண்டு பேரின் குரலும் சேர்ந்து கொள்ளும். அது பாமாலை நான் படிக்க வாக இருப்பினும் சரி, வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ஆனாலும் சரி. எல்லா பாட்டையும் இருவரும் ஒரே மாதிரி இழுப்பார்கள். அசங்கினால் ஒரே மாதிரி. திக்கினால் ஒரே மாதிரி. இழைவதும் ஒன்றே. பாடி முடித்ததும் நீலா அல்லி அக்காவின் மடியில் படுத்துக்கொள்வாள்.

ஏறக்குறைய பத்து சித்ரா பவுர்ணமியை நான், அல்லி அக்கா, நீலா, சிவகாமி, ராமு, ராஜு அந்த மொட்டை மாடியில் கழித்தோம். அல்லி அக்கா கல்யாணம் ஆகி போகும் வரை. பழைய பாடல்கள் கேட்கும்போது  மனம்  ஒருமுறை விசிக்கும்.

நான் கல்லூரியில் இருந்து வந்தவுடன் அம்மா, அல்லி அக்கா இறந்துவிட்டதை சொன்னார்கள். ஒரு செய்தி போல இதை அவர்கள் சொன்னதற்காக, என்னிடம் அப்போதே தெரிவிக்காததற்காக காளி போல் ஆடினேன். எனக்கு சிவகாமியை விட நீலாவை பார்க்க வேண்டும் போல இருந்தது. அல்லி அக்கா கயிற்றில் தூக்கு போட்டுக்கொண்டார்கள் எனவும் பெரிய காரணம் எதுவும் இல்லை, அல்லது தெரியவில்லை என்பதும் கலங்கடித்தது. நான் நினைத்தபடி நீலாவையோ, முயற்சிக்காததால் சிவகாமி, ராமு, ராஜுவையோ அந்த லீவில் பார்க்க முடியவில்லை. ஒரு மரணத்தை தூர இருந்து யோசிப்பதை விட சம்மந்தப்பட்டவர்களை பார்த்து விடுவது எவ்வளவோ அழுத்தங்களை குறைத்துவிடும். துக்கம் தள்ளக்கூடாது என்று பெரியோர் எழுதிய விதிக்கு இததான் காரணமாக இருக்கும். கல்லூரியின் ஓய்வான விடுதி தனிமைகள் என்னை அழுத்த ஆரம்பித்தது.

நான் பரிட்சைகள் முடித்து ஊருக்கு போகும்போது சித்திரை நிலவு இரவு என்னுடன் காய்ந்தது. பயணங்களின் காதலி நான். "இங்க வந்து உக்கார்ந்துக்கோம்மா", என்று பேனட்டில் உட்கார வைத்துக்கொண்ட டிரைவர் பழைய பாட்டுகளை போட்டிருந்தார். இரவு, நிலவு, அல்லி அக்காவும் நீலாவும் பாடும் பாடல்கள். எப்போதும் பாடல் வரிசைகள் ஒன்றேதான் போலும். காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம் என்று அடுத்து எதிர்பார்த்து இருந்தாலும் கதுக்கென்று நெஞ்சை அடைத்தது. என்னம்மா, என்னம்மா என்று ஓட்டுனர் தண்ணீர் தந்தார். நான் தண்ணீர் குடிக்கவில்லை. சத்தமின்றி அழுதேன்.

கல்லூரி மறுபடி திறந்து விட்டார்கள். தினமும் மழை. புதிதாய் கல்யாணம் ஆகி பணிக்கு வந்திருந்த சுசீலா மிஸ்ஸை வேடிக்கை பார்ப்பதும் அவர்களின் அசைவுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதும் சுவாரஸ்யமாக இருந்தது. கல்யாண கனவுகள் அழகானவை. புதிதாய் திருமணம் ஆனவர்களை வேடிக்கை பார்ப்பது இன்னும் சுவாரஸ்யம். ம்ம்ம்.சொல்ல மறந்துவிட்டேனே, நான் பாடல் கேட்பதில்லை. ஏனெனில், நான் பஸ்ஸில் நெஞ்சை அழுத்திய உள்ளுணர்வில் அழுத சித்ரா பவுர்ணமி இரவில்தான் நீலா தற்கொலை செய்து கொண்டாள்.
Pin It