இப்போது இந்த நகரத்தில் நான் எங்கே இருக்கிறேன்? இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் இங்கே வந்து இறங்கிய பஸ் நிலையம் எங்கே இருக்கிறது? எதுவும் தெரியவில்லை; இலக்கற்று நடந்து கொண்டிருக்கிறேன். விளக்குகளின் பிரகாசமான ஒளியில் தெரு வெறிச்சோடிக்கிடக்கிறது. கடைகள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. எப்போதாவது சிலர் வாகனங்களில் என்னைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சில பாதசாரிகள் தென்பட்டார்கள் என்றாலும் அவர்களும் இந்த இடத்தைவிட்டு உடனே போய்விட வேண்டும் என்ற அவசரத்துடனேயே நடக்கிறார்கள். பெரிய பாரத்தை சுமந்து செல்வது போல இரவு ஏனோ இன்று மெதுவாக நகர்கிறது. உடல் அசதியில் தள்ளாடுகிறது. முகத்தில் அறைவதைப்போல குளிர் தாக்குகிறது. இப்போது போட்டிருக்கும் மட்டமான இந்த சொட்டர்கூட இல்லையென்றால் நான் செத்தேபோய்விடுவேன்.

பாதையோரத்திலேயே எங்காவது சுருண்டு படுத்துவிட்டால் என்ன? யாராவது பார்த்தால் ஏதோ பிச்சைக்காரன் என்றுதான் எண்ணிக்கொண்டு போவார்கள். என்னுடைய தோற்றம் அப்படித்தான் இருக்கிறது. தோற்றம் மட்டுமென்ன... ஒரு பிச்சைக்காரனைவிட என் நிலை என்ன அவ்வளவு ஒசத்தி? என்னுடைய ஊரில் தோட்டம், வீடு எதுவும் இல்லையென்றாலும்கூட, எல்லாம் இருந்தது போலத்தான்... அப்படித்தான் வாழ்ந்திருக்கிறேன். திரும்பவும் அங்கேயே போய்விடாலாமென்றுகூட தோன்றுகிறது. வரும்போது கிழவனுடன் வந்தேன். போகும் போது அவனையும் தொலைத்து விட்டு இப்படி வெறுங்கையுடன்... ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிருந்தால் கிழவன் ஒருவேளை பிழைத்துக் கொண்டிருக்கலாம். இந்த இரவில் அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்ப்பது என்பது என்னால் முடியாத காரியம். பயத்தில் என் உடல்வேறு வெடவெடக்கத் தொடங்கிவிட்டது. இதோ இன்னும் கூட அந்த நடுக்கம் அடங்கவில்லை. என்னால் அங்கிருக்க முடியாது என்பது புரிந்துவிட்டது. யாருமே இல்லாத அந்த இருள் அடர்ந்த கட்டிடத்தில் செத்துக் கொண்டிருக்கும் கிழவனுடன் ஒரு இரவை எப்படி கழிப்பேன்?  

என் ஊர்க்காரர்கள் நிறையபேர் இந்த நகரத்தில் எங்கெங்கோ கலைந்து கிடக்கிறார்கள்; கிழவனைப் புதைக்க அவர்களில் யாராவதுதான் வரவேண்டும். சுடுகாடு எங்கே இருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை (இங்கே சாகிறவர்களை எங்கே கொண்டுபோய் புதைப்பார்கள்?). என் ஒரே சினேகிதன் சுடுகாட்டு மேட்டிலிருந்துதான் ஓடிப்போனான். அதுதான் அவனை கடைசியாகப் பார்த்தது. அவனும்கூட இங்கேதான் பெங்களூருக்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள். இவ்வளவு பெரிய ஊரில் அவனை எப்படி தேடிக் கண்டுபிடிப்பேன்? ஒருவேளை நான் இங்கே இருக்கிறேன் என்பது தெரிந்திருந்தால் அவனும்கூட என்னைத் தேடிக்கொண்டுதான் இருப்பான். இந்த உலகத்தில் என்மேல் பரிவுகாட்டியவன் அவன்தான். என் உடலை ஆராதித்தவன் அவன்தான். என் உறுப்பை பற்றி உறிஞ்சுவான். அதன் பளபளப்பான முனையை அவன் தன் நாவால் தீண்டும்போது உயிர் போவது போல இருக்கும். அவனை அணைத்துக்கொள்ளவும் அவனுடைய சிறிய உறுப்பை சுவைக்கவும் ஆவல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அந்த ருசி என் நாவில் இன்னும் தங்கித் தொல்லைபடுத்திக் கொண்டே இருக்கிறது. அவனுடையது தோல்பிரியாதது. நீர் சுரக்காதது. உச்சத்தில் அது துடிக்கும்; துவண்டு, என் மடியிலேயே உறங்கிப்போவான். பெண்கள் அண்டாத என் உலகத்தில் அவன்தான் என்னை ஆறுதல் படுத்தினான்.  

பெண்கள் மட்டுமல்ல, எல்லோருமே என்னை ஒரு ஈனப்பிறவியாகவே கருதினார்கள். என்னுடைய இடதுகாலில் ஆணி வளர்ந்திருந்தது. கொஞ்சம் தாங்கிதான் நடப்பேன். நான் குழந்தையாக இருந்தபோது அம்மைபோட்டு படுத்துக் கெடந்தேனாம். மாரி என் உடல் முழுவதும் முத்துகளை வாரி இறைத்திருந்தாள். கடைசியில் மீந்த முத்தை எங்க போடுவதென்று தெரியாமல் - அவளுக்கு என்ன கணக்கோ - என் கண்ணில் போட்டுவிட்டு போய்விட்டாள். ஒரு கண்ணும் இருண்டு போனது. வளர வளர என் அவலட்சணமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு எருமாட்டுத் தோலை முண்டுமுடிச்சான ஒரு கல்லின் மேல் இழுத்து கட்டினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது என் சரீரம். எல்லோரும் என்னை நொள்ளக்கண்ணன் என்றோ, நொண்டிக்காலன் என்றோதான் அழைக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் கோபித்துக்கொள்வதில்லை. எனக்கு என் அப்பன் வைத்த பெயர் அர்ஜுனன். எனக்கு இரண்டு சகோதரர்கள். சின்னவன் பெயர் நகுலன், அவனுக்கும் இளையவன் பெயர் சகாதேவன். இன்னும் தருமனையும், பீமனையும் பெற்றெடுப்பதற்கு முன்பே என்னுடைய அம்மா என் அப்பனிடம் அடிதாங்கமுடியாமல் கல்லைக்கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து செத்துப்போனாள்.  

நாங்கள் குபேரப் பரம்பரையில்லை. என் அப்பனுக்கு பங்காக வந்ததே கோவனம் அளவு நிலந்தான். அதையும் குடித்தே ஒழித்தான் கிழவன். கூலி செய்தால்தான் ஜீவனம். அதை எங்கே செய்தால் என்ன? சொந்த ஊரில், மானம் கெட்டுப் பிழைப்பதைவிட வேறெங்கேயாவது ஊரில் போய் பிழைக்கலாம் என்று கிழவன் சொன்னான். பிழைப்பைத் தேடி வேறு ஊருக்குப் போனோம். எங்களுடைய ஊரிலிருந்து பத்து மைல் தூரம் அந்த ஊருக்கு.  

இரண்டுபக்கம் மலைகளும், நடுவில் ஒரு ஆறையும் கொண்ட வளமான ஊருதான் அது. தோண்டிய இடமெல்லாம் இறுகியபாறைகளும், நீர்காணாமல் காய்ந்து கொண்டிருந்த மரங்களும், கறுத்த பனைமரங்கள் நிற்கும் வறண்ட நிலப்பரப்பும், முட்புதர்களும் மட்டுமே கொண்ட எங்கள் ஊரை வெறித்துக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த ஊர் சொர்க்க பூமியாகவே தோன்றியது. வேலைக்கு ஒன்றும் பஞ்சமில்லை. ஆனால் எனக்குதான் எவரும் வேலைகொடுக்க முன்வரவில்லை. தம்பிகளோ ஆளுக்கொரு குடியானவர்களின் தோட்டங்களில் சேர்ந்து கொண்டார்கள். சுடுகாட்டு ஓனியில் குடிசை மாதிரி ஒன்று போட்டுக்கொண்டு அங்கேயே நாங்கள் தங்கிக் கொண்டோம். நான்தான் மற்றவர்களுக்கு சாப்பாடு செய்து போடவேண்டும். இந்த ஊருக்கு வந்த பிறகு கிழவனுக்கு கஞ்சா பழக்கம் வேறு வந்துவிட்டது. தன்னுடன் கஞ்சா புகைக்கும் ஒரு குடியானவனிடம் சொல்லி என்னையும் வேலைக்கு சேர்த்துவிட்டான் கிழவன். ‘மேயும் மாட்டைத் தோலை உரிப்பவன்’ என்று ஊரில் அந்தக் கவுண்டனை சொல்வதுண்டு. அப்போது அவனிடம் ஒரு சின்னப் பையனும் வேலை செய்துகொண்டிருந்தான். அவனும் பக்கத்து ஊரிலிருந்து வந்தவன்தான். ஆடு வாங்கிய கடனுக்கு பதிலாக பையனை கொண்டு வந்து இங்கே விட்டு விட்டுப்போயிருந்தான் அவனுடைய அப்பன். கவுண்டனுக்கு முப்பது உருக்களுக்கு மேல் ஆடுகள் இருந்தன. பையன் அதை கவனித்துக் கொண்டான். கூழை தூக்குச்சட்டியில் எடுத்துக்கொண்டு காலையில் காட்டுப்பக்கம் போனால் சாயங்காலம்தான் திரும்பி வருவான். 

அங்கு வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே நானும் கஞ்சா இழுக்கக் பழகிக்கொண்டேன். ஆனந்தமாக இருந்தது. கவுண்டனுக்கு வாங்கி வரும் பொட்டணத்தில் நானும் கொஞ்சம் எடுத்து வைத்து கொள்வேன். ஆரம்பத்தில் இதெல்லாம் அவனுக்குத் தெரியாமலே ரகசியமாக நடந்து வந்தது. ஒரு நாள் பம்பு செட்டில் புகைத்துக் கொண்டிருக்கும்போது பார்த்துவிட்டு அடித்தான். பிறகு இதுவே அவனுக்கு சாதகமாக போய்விட்டது. அடித்தாலும் உதைத்தாலும் நான் எங்கும் போய்விடமாட்டேன் என்று தெரிந்து கொண்டான். என் சம்பளத்தையும் வாங்கி குடித்துத் தீர்த்தான் கிழவன். எங்களுடைய மூன்றுபேர் கஷ்டத்தில் கிழவன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தான். நொண்டி மாடுதான் என்றாலும் என்னுடைய முதலாளிக்கு அதிகமாகவே உழைத்தேன். எனக்கென்று இருந்தது இரண்டு மக்கிப் போன சொக்காயும், ஒரு கந்தல் வேஷ்டியும்தான். அந்த சொக்காயில் ஒன்று அந்த கவுண்டன் கொடுத்தது. என்னுடைய மெலிந்த உடம்பில் அது தாறுமாறாகத் தொங்கிக் கொண்டிருந்தது.  

இராத்திரியில் கண் விழித்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது என்னுடன் அந்த பையனும் வந்து பேசிக் கொண்டிருப்பான். சில நேரங்களில் அவனுடைய அம்மாவை நினைத்து அழுவான். பையனோட அப்பன் எப்போதாவது வந்து விசாரித்துவிட்டு போவான். அப்படி அவன் வரும்போது, ‘உன் பையன் செய்யற வேலை என் பணத்துக்கு வட்டிக்குக்கூட கட்டாது’ என்று புகார் சொல்வான் கவுண்டன். அவனுடைய அப்பனும் பையனை ஒழுங்கா இருக்கச் சொல்லி கண்டித்துவிட்டுப் போவான். ஆடுகள் காட்டில் மேயும்போது கார்டு, வாச்சர் யாராவது பிடித்துக்கொண்டால், ‘உங்கப்பனா வந்து அபராதம் கட்டப்போகிறான். ஜாக்கிரதையா இருக்கவேண்டியதுதானடா தண்டக்கார நாயே’ என்று சொல்லி அடிப்பான்.

ஒருநாள் இரவு பட்டியிலிருந்த ஒரு ஆட்டைக் காணவில்லை. கவுண்டன் மேற்கே சந்தைக்கு போய்விட்டிருந்தான். பையனைக்கூட நம்பாமல் வழக்கமாக அவன்தான் பட்டிக்கு காவலிருப்பான். அவன் ஊரில் இல்லை என்ற தைரியத்தில் யாரோ களவாடிக்கொண்டு போய்விட்டிருந்தார்கள். பையன்தான் இரவு பட்டிக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டான். விஷயம் தெரிந்ததும் காலையிலேயே அவன் மனைவியிடம் சொல்லிவிட்டான். அவளோ அவனுக்கு மேலே, தாடகி; ஒன்றை ஒன்பதாக்கி, ஒன்பதை நூறாக்கக் கூடியவள்; பேய்வந்தது போல ஆடினாள். ஆனவரை விசாரித்து விட்டோம். நரி இழுத்துக் கொண்டு போயிருந்தால் தடயமாவது தெரிந்திருக்கும். களவு போனதற்கான ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஊரிலிருந்து வந்ததும் அந்தக் கவுண்டன் என்னைக் கூப்பிட்டு “அந்தப் பரதேசிக்கு பொறந்த பய ஆத்துப்பக்கம் வந்திருப்பான். நீ போய் ஆட்டப் பாத்துக்கிட்டு அவன அனுப்பு’’ என்று உறுமினான். எதிர்பார்த்தது போலவே விவகாரம் அவன் காதுக்குப்போய்விட்டது தெரிந்தது.  

என்ன நடக்கப்போகிறதோ என்று பயந்தபடி பையனை கூட்டி வருவதற்காக நான் போனேன். ஆற்றில் நீர்வரத்து குறைந்து போயிருந்தது. மணற் திட்டுக்களுக்கிடையே கொஞ்சமாக உயிர் வைத்துக் கொண்டிருந்தது ஆறு. நீர் அதிகமாக இருந்த போது மாட்டை கழுவுவதற்கும், குளிப்பதற்கு இங்குதான் வருவேன். ஓடும் தண்ணீரில் நெடுநேரம் மல்லந்த வாக்கில் படுத்துக்கிடப்பேன். சூரிய ஒளி என் ஒரு கண்ணையும் குருடாக்கும்படி கூசச்செய்யும்.  

சுடுகாட்டு மேட்டில் மூடிக்கிடந்த புதர்ச்செடிகளுக்கு மேலெல்லாம் காலைத் தூக்கிப்போட்டுக் கொண்டு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு துரிஞ்சை மரத்து நிழலில் அவன் உட்கார்ந்திருந்தான். தூக்குச்சட்டி அந்த மரத்தின் மொட்டை கிளை ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய முகம் வாடிப்போயிருந்தது.  

“இன்னிக்கி எந்தப்பக்கம் ஓட்டிகினு போனே’’ என்று கேட்டுக்கொண்டே அவனருகில் போனேன்.  

“லைனு ஓரமாத்தாண்ணா’’ என்று அவன் சொன்னான். 

“முதலாளி உன்னை ஊட்டுக்கு வரச்சொன்னான், விஷயம் அவன் காதுக்கு போய்விட்டது ‘’ என்று நான் சொன்னதும் பையன் பீதியுடன் என்னைப் பார்த்தான். 

“என்னை ஆட்டைப் பாத்துக்க சொல்லிட்டு உன்ன வரச்சொன்னான், லேட்டா போனா அதுக்கும் சேர்த்து விழும் சீக்கிரமாப் போ’’ என்றேன். 

அவனுடைய கண்ணில் தண்ணீர் கோர்த்துக் கொண்டது. அழுதுவிடுவான் போல இருந்தது.  

“ரெண்டு அடிஅடிப்பான், உங்கோத்தா ஒங்கொம்மான்னு திட்டுவான்...நம்ம விதி அப்படி...போய்வா’’ என்று அவனை அனுப்பிவைத்தேன். 

ஆடு மேய்க்கும் கோலை என்னிடம் கொடுத்துவிட்டு புதர்களுக்கிடையே போன பாதையில் சோர்வாக நடந்தான். ஆற்று மேடேறும்போது அவன் மீண்டும் கண்ணில் தென்பட்டான். நின்று திரும்பி என்னைப் பார்ப்பது தெரிந்தது. அவனை கடைசியாக பார்த்ததும் அதுதான். 

சாயந்திரம் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குப் போனதும்தான் எனக்கு விஷயம் தெரிந்தது; பையன் எங்கோ ஓடிப்போய்விட்டான் என்று. முதலாளி அவன் எங்கே என்று கேட்டு குடைந்தான். எனக்கொன்றும் தெரியாது என்று நான் சொல்லிவிட்டேன். கடைசிவரை அவன் நம்பவேயில்லை. மறுநாள் காலை பையனைத் தேடிக்கொண்டு அவனுடைய ஊருக்குப் போனான். மதியம் மூன்று மணி இருக்கும், நான் புழுதி ஓட்டிக்கொண்டிருந்த போது கவுண்டன் திரும்பி வந்தான். வரப்போரத்தில் ஏர் போனபோது அவன் அருகில் நின்றிருப்பது தெரிந்தது. பையனைப்பற்றி அவனிடம் கேட்க பயந்து எனது வேலையை செய்து கொண்டிருந்தேன். என்னுடைய முதுகில், இடிவிழுந்த மாதிரி இருந்தது. அலறிக்கொண்டே திரும்பிப்பார்த்தேன். கையில் பச்சைப் பனமட்டையை வைத்துக்கொண்டு அவன் சூரன் மாதிரி நின்று கொண்டிருந்தான். திரும்பவும் கைமேல் ஒரு அடி விழுந்தது. கையை உதறிக்கொண்டு ஓடினேன். அவன் துரத்திக்கொண்டே வந்து மீண்டும் முதுகில் அடித்தான். பெரியப்பெரிய மண்கட்டிகள் நிறைந்திருந்த புழுதியில் எனது காலை இழுத்துக்கொண்டு ஓடமுடியவில்லை, சுருண்டு விழுந்தேன். கண்கள் இருண்டது. செத்துப் போய்விடுவேன் என்று நினைத்தேன். ஒவ்வொரு அடியும் எனது மார்பில் விழுந்ததுபோல இருந்தது. பயந்து, அவனே என்னை தூக்கிக்கொண்டு போய் பம்புசெட்டருகில் போட்டு தண்ணீர் கொடுத்தான். எழமுடியாமல் அங்கேயே விழுந்துகிடந்தேன். முதுகு, கைக்கால்களில் எல்லாம் காயம். அந்தப் பையனுக்கு நான்தான் சொல்லிக்கொடுத்து எங்கேயோ அனுப்பி விட்டேனாம்; ஆடு களவுபோனதில் எங்களுக்கும் பங்கிருக்கிறதாம். அதற்காகத்தான் இந்த தண்டனை.  

ஏதோ ஒரு வைராக்கியம் ... அன்றைக்கு இரவே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அந்த ஊரை விட்டு கிளம்பி என்னுடைய சொந்த ஊருக்கே திரும்பிப்போனேன். வேலை செய்தால் யாராவது கூழ் ஊற்றாமலா போய்விடுவார்கள்? இரண்டு நாள் கழித்து என்னுடைய அப்பனும் தேடிக்கொண்டு அங்கே வந்துவிட்டான். நடந்த கதையை எல்லாம் கேட்டான். நொண்டி மாடு என்றால் கொஞ்சம் இரக்கம் வரத்தானே செய்யும். காயங்களைப் பார்த்து அவன் அழுதான். போதையில் இருக்கும்போதுதான் அவன் இப்படி அழுவான். 

அந்த ஊரிலேயே கொஞ்சம் நாள் இருந்தோம். அது ஒன்றும் செழிப்பான பூமி இல்லை. ஏரியில் தண்ணீர் இருந்தால் வயிறு ரொம்பும். இல்லையென்றால், பிழைப்புக்கு வேறு இடம் தேடவேண்டியதுதான். இரண்டு வருஷமாக மழையில்லை. எல்லோரும் பஞ்சம் பிழைக்க மெட்ராஸ், பெங்களூர் என்று மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிப் போனார்கள். ஒரு ஆள் எங்களையும் பெங்களூருக்கு தன்னுடன் வருமாறு கூப்பிட்டான். வேலை பார்த்துத் தருவதாகச் சொன்னான். நாங்களும் அவனுடன் புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்தோம்.  

தன் ஜென்மத்தில் இதைப் போன்ற ஒரு ஊரை பார்த்ததில்லையென்று கிழவன் சொன்னான். ஒவ்வொரு தெருவும் எவ்வளவு நீளம்! பெரிய பெரிய கட்டிடங்கள், கண்ணாடி மாளிகைகள்! கண்கள் வியக்கப் பார்த்தோம். இவ்வளவு பெரிய நகரத்தில் யார் எங்களை உட்கார வைத்து சோறுபோட போகிறார்கள்? கூட்டி வந்த ஆள் எங்களை ஒரு கட்டிட வேலையில் சேர்த்துவிட்டான். நாங்கள் இருவரும் இன்னும் முடிக்கப்படாமல் இருந்த அந்தக் கட்டிடத்தின் அறையிலேயே தங்கிக் கொண்டோம். எங்கள்மேல் இரக்கப்பட்டும், பாதுகாப்பு கருதியும் எங்களை அங்கே தங்கிக்கொள்ள அனுமதித்திருந்தார்கள். கூலி இங்கே கொஞ்சம் பரவாயில்லைதான். நாங்கள் இருவரும் சாப்பிட்டது போக மீதி இருக்கத்தான் செய்தது. எவ்வளவு சேர்ந்தால் என்ன, எல்லாவற்றையும் குடித்து ஏப்பம்விட கிழவன் கூடவே இருக்கிறானே. இப்படி உடம்பை வருத்தி சம்பாதித்துக் கொடுக்கிறானே என்று சிறிது வருத்தம்கூட அவனிடம் தென்படுவதில்லை. இரவானால் குடித்துவிட்டு வந்து பொண்டாட்டியை அடிப்பது போல அடிப்பான். மேஸ்திரிக்கு இரக்க சுபாவம். நான் நொண்டியாக இருந்து கஷ்டப்படுவதைப் பார்த்து சுலபமான வேலையாகக் கொடுப்பான். எப்படியோ இரண்டு மாசத்தை ஓட்டிவிட்டேன்.

நான் இங்கே வந்ததே என் சினேகிதனைத்தேடித்தான் என்பது போல, கொஞ்சம் நாட்களாக அவனைப்பற்றிய யோசனையாகவே இருந்தது. இன்று காலையிலிருந்தே அது இன்னும் தீவிரமாகத் தாக்கத் தொடங்கியது. ஆனால் கிழவன் என்னை எங்கும் போகமுடியாமல் செய்துகொண்டிருந்தான். ஒன்றும் தெரியாத என்னை, இந்தப் பெரிய நகரம் எப்போதும் விழுங்கக் காத்திருப்பது போல நினைத்து, அவன் கூடவே இருக்குமாறு பார்த்துக்கொண்டான். இங்கே வந்த புதிதில், ஊர்க்காரர் யாரிடமாவது விசாரித்தால் அவன் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை விலகிப்போகப்போக என் நிம்மதியை இழக்கத் தொடங்கிவிட்டிருந்தேன். ஒரு பிசாசின் பிடியில் இருப்பதைப் போல நான் இருந்தேன்.  

இந்த இரவின் முன்னேரத்தில்தான் எல்லாம் மோசமாக நடந்து முடிந்தது. கிழவன் குடித்துவிட்டு வந்து, காசுகேட்டு குடைந்தான். என்னிடமிருந்தது பத்து ரூபாய் சில்லரை மட்டுந்தான். நாளைக்கு இருந்திருந்தால் இந்த வாரத்திற்கான சம்பளத்தையாவது வாங்கியிருக்கலாம். கிழவனுக்கு குடித்திருந்தது போதவில்லை. திரும்பவும் குடிக்கத்தான் அவன் காசுகேட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான். நான் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்ததும், ‘நொள்ளத்தேவிடிய மகனே’ என்று திட்டிக்கொண்டே கையிலிருந்த தண்ணீர் டம்ளரை தூக்கி என் முகத்தில் வீசினான். அது என் நெற்றியைக் வெட்டிவிட்டு கீழே விழுந்து உருண்டது. ரத்தம் கசிந்துகொண்டு வந்து, என் பனியனில் ஒழுகியது. ஒரு கிழட்டு நாயைப்போல அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓடிப்போய் அவன் தலையைப் பிடித்து சுவரில் வேகமாக மோதினேன். அவனுடைய தலை மோசமாக நசுங்கிப் போய்விட்டது. கிழவன் கீழே விழுந்து துடித்தான். தலையிலிருந்து வழிந்த ரத்தம் தரையை நனைத்தது. இன்னும் கதவுகள் பொறுத்தப்படாமல் வெறும் சிமண்ட் பைகளால் மூடப்பட்ட ஜன்னல்வழியே புகுந்த காற்றிலும், பயத்திலும் என் உடல் நடுங்கத்தொடங்கியது. ஆரம்பத்தில் கொஞ்சம் உரத்துக்கேட்ட அவனுடைய முனகல் மெல்ல அடங்கிக் கொண்டு வந்தது. எட்டியிருந்தே சிறது நேரம் அவனைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அச்சமூட்டும் பேய்கள் வந்து புகுந்துவிட்டது போன்ற அவ்விடத்தைவிட்டு ஓடவேண்டும் என்ற உந்துதல் எழுந்ததை மட்டுந்தான் என்னால் சொல்ல முடியும். அவனை அப்படியே விட்டுவிட்டு நான் புறப்பட்டு வந்து விட்டேன்.  

கிழவன் இந்நேரம் செத்துப்போயிருப்பான். அந்த இருள் நிரம்பிய கட்டிடத்தில் தனியாக அவன் கிடப்பான். காலையில்தான் யாராவது அவனுடைய பிணத்தைப் பார்ப்பார்கள். நிச்சயம் நான்தான் அவனை கொன்றேன் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும்.

- ஜீ.முருகன்

Pin It