அந்த கிராம முன்னேற்ற சங்க முன்றலில் வசந்தி நிதானமாக நின்றிருந்தாள். தலைவர் சிவஞானசுந்தரம், அவர் ஒரு ஓய்வு பெற்ற அதிபர். செயலாளர் சுப்பிரமணியம், மாதர் சங்கத் தலைவி பிறேமா உட்பட பன்னிரண்டு பேர் ஊர்ப் பிரமுகர்கள் என்ற போர்வையில் வசந்தியைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். வசந்திக்கு எதிர்ப்புறமாக முறைப்பாட்டுக்காரனான இராகுலன் உட்கார்ந்திருக்கின்றான். கிட்டத்தட்ட எல்லோரும் கதைத்தாகிவிட்டது. வசந்தியின் பதிலைத் தான் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் அங்கு குழுமியிருக்கின்றவர்களின் கடமை முடிந்துவிடும்.

இந்த வாசிகசாலை, விசாரணை, முறைப்பாடு அவளுக்குப் புதிதல்ல. இந்த முறையுடன் மூன்று தடவைகள் இந்த நாடகம் அரங்கேறிவிட்டது. ஊருக்கும் உலகுக்காகவும் அவள் வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டு இப்போது ஊரார் முன்னிலையில் வந்து நிற்கிறாள்.

வசந்தி, சாம்பசிவம் யோகேஸ்வரி தம்பதிகளுக்குப் பிறந்த மூத்தமகள். அவளுக்குப் பின்னால் இரண்டு தம்பிமாரும் இரண்டு தங்கைமாரும் இருக்கினம். சாம்பசிவம் ஒரு சாதாரண் விவசாயி. தனது தந்தையார் வழிவந்த 03 பரப்பு தோட்டக் காணியம், குடியிருக்கிற வளவும் தான் இவர்களுடைய சொத்து. தனது சொந்தக் காணியில் செய்கிற சித்துப் பயிர் வருமானம் போதாமையால் பக்கத்திலை யாராவது கேட்டால் பாத்திகட்டுறது, தண்ணி மாறுறது என்று எப்பவாவது போய்க்கொள்ளுவார். வீட்டைச் சுற்றியும் குளிர்மைக்கு எண்டு வைச்ச வாழை, தேசியும் பயன் கொடுத்ததாலை ஏதோ கஸ்ரமில்லாமல் சீவிக்க முடிந்தது. யோகேஸ்வரியும் கெட்டிக்காரி. கோழிமுட்டை, தையல் எண்டு தன்ரை சம்பாத்தியத்திலை சீட்டுக்கள் கட்டி, தன் பிள்ளைகளுக்கும் சின்னச் சின்ன நகைகள் வாங்கி, குடும்பம் சந்தோசமாக ஓடிக்கொண்டிருந்தது.

மூத்தவள் வசந்தா ஓஃஎல் வரை படித்திருக்கிறாள். முதல் தடவை பரீட்சை எடுத்தபோது கணிதம் அவளுக்குச் சவாலாகிவிட்டது. இரண்டாம் முறை அவள் முயற்சிக்கவும் இல்லை. இரண்டு வருடங்கழித்து பொம்பிளைப்பிள்ளை, எதையாவது பழகியிருக்கோணும் எண்ட தாயின் ஆசைக்கு இணங்க பக்கத்திலிருக்கிற பாடசாலையில், பின்னேரங்களில் நடந்த தையல் வகுப்பிற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் தான், விதியின் கண்ணில் அவள் பட்டவிட்டாள். ஆம்… இராகுலனைச் சந்தித்தது அங்கே தான்.

வசந்தி இயல்பாகவே அழகான பெண். பதின்ம வயது அவளுக்கு மேலும் அழகூட்டியிருந்தது. அப்போது இவர்கள் வகுப்பிற்குச் சென்ற பாடசாலையில் கட்டட நிர்மாண வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்த வேலையின் ஒப்பந்த காரருடன் வேலைக்கு வந்திருந்த இராகுலனுக்கும், வசந்திக்குமிடையே நிகழ்ந்த பார்வைகள், சிரிப்புக்கள் காதலாக மாறியது. 18 வயதேயான, வசந்திக்கு இராகுலன் மன்மதனாகவே தெரிந்தான். வசந்தியின் சம்மத சமிக்ஞைகளையும், அப்பாவித்தனத்தையும் புரிந்து கொண்ட இராகுலன், துணிந்து தனது காதலை வெளிப்படுத்தியபோது, அவள் அதை பெரும்பேறாகவே கருதியிருந்தாள்.

அவளைவிட இராகுலன் 9 வயது மூத்தவன். தனது ஊர் மாவிட்டபுரம் என்றும், இடம்பெயர்ந்து இளவாலையில் வசிப்பதாகவும், தனக்கு மூன்று பெண் சகோதரிகள் என்றும், தனக்கு மூத்தவள் ஒருத்தி உட்பட மூவரும் திருமணமாகாதவர்கள் எனவும், தனது காதலையும், திருமணத்தையும் இலேசில் தனது வீட்டில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எனவும், என்றாலும் வசந்தியைத் தான் தன் உயிராய் நினைப்பதாகவும், எக்காலத்திலும் கைவிடப்போவதில்லை எனவும் சொல்லியிருந்தான். மூன்று மாத காலத்துக்குள் இராகுலன் அவளுக்கு உலகமாகவே ஆகிவிட்டிருந்தான். அவன் வார்த்ததைகளுக்கு அவள் கட்டுப்பட்டாள். அவனுக்காக உயிரை விடக்கூடத் தயாராக இருந்நதாள். தனது வாழ்வு இராகுலனுக்காகவே என்று வயது அவளைத் தூண்டிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் வசந்தியின் மூத்த தம்பிக்கு இவர்களுடைய காதல் விவகாரம் தெரியவந்தபோது, அதை அவன் வீட்டில் போட்டுடைத்துவிட்டான். பிறகென்ன, சாம்பசிவம் ருத்திரதாண்டவமாடத் தொடங்கிவிட்டார். தாயார் அடுக்களைக்குள் சென்று புத்திமதி சொன்னாள். “நீ பொம்பிளைப்பிள்ளை.. கண்டவன் எல்லாம் பல்லிளிக்கிறதைப் பாத்து காதல் எண்டு நம்பி ஏமாறக்கூடாது. அவன் ஆரோ மாவிட்டபுரத்தானாம். நாளைக்கு விட்டிட்டுப் போனா என்ன செய்யிறது. நாங்கள் தாய் தேப்பன், உனக்கு நல்லதுக்குத்தான் சொல்லுறம், இனி அவனுடன் கதைக்காதை என்று அன்பாலும் அதிகாரத்தாலும் கட்டுப்பாடு விதித்தபோது, அதை மீறிச் செல்லவேண்டுமென்று அவளும், தருணம் பார்த்திருந்த ராகுலனும் ஊரை விடடே ஓடிப் போனது தான் வசந்தி செய்த மடத்தனம். அவள் வயசு அவளைச் சிந்திக்க வைக்கவில்லை. பெற்ற தாய், தந்தை, குடும்பம் மரியாதை எண்ட எல்லாத்தயும் விட்டிட்டு, இராகுலனோடு போனவள், இளவாலையில் அவனுடன் தனிக்குடித்தனம் நடத்திய ஒரு மாதத்திற்குள்ளாலேயே அவனது சுயரூபத்தைக் கண்டுகொண்டாள். முதல் நாள் இராகுலன் குடித்துவிட்டு வந்தபோது, மனதளவில் ஆடிப்போயிருந்தாலும், ஏதோ நண்பர்களுடன் சேர்ந்து புதுப்பழக்கமாக்கும், தான் சொன்னால் கேட்டுக்கொள்ளுவான் என்று நம்பியவளுக்கு அதிர்ச்சி தரம் உண்மைகள் தொடர்ந்து வெளியாகியிருந்தன.

பழையபடி அவன் வேலைக்குச் செல்லாது ஊர் சுற்றத் தொடங்கிவிட்டான். எப்பொதாவது கையில் காசு கிடைத்தாலும் அதையம் குடித்துவிட்டு வந்து வசந்தியுடன் சண்டை பிடிக்கத் தொடங்கிவிடுவான். ஏதாவது வாய் திறந்து அவள் பேசிவிட்டால், ஏச்சு, அடி, உதை தான்.

“ ஏன்ரி நீ என்னடீ கொண்டுவந்தனீ எண்டு பெரிசாக் கதைக்க வந்திட்டாய்……??? உன்ரை கொப்பர் தந்ததை நான் குடிச்சு அளிக்கிறனோடி?? சனியன்… கேள்வி கேக்கிறாய் கேள்வி

போடி போய் கொப்பரிட்டைக் காசு வாங்கிக் கொண்டு வா, என்னைப் பேய்க்காட்டலாமெண்டு மட்டும் நினைக்காதை.."

அவன் குடிபோதையில் வந்து சீதனம் கேட்டுத் துன்புறுத்தியபோது, வீட்டுக்காரர் முகத்தில் முழிக்கமுடியாது மறுத்த வசந்தியை ஒரு நாள் அடித்து, றோட்டால் தரதரவென்று இழுத்து வந்து, சந்தியில் வைத்து, “நாயே உன்னை நெருப்பு வைத்து கொழுத்திப்போடுவன்" எண்டு இராகுலன் கர்ச்சித்தபோது, ஊர் கூடி விட்டது. அவன் இழுத்து வந்தபோது, முழங்கை கல்லில் உராய்ந்த இரத்தம் சொட்டப் பரிதாபமாகக் கிடந்த வசந்தியைக் கண்ட அவளின் ஊர்க்காரர் ஒருவர், அவளுடைய தந்தை சாம்பசிவத்துக்கு சொல்லிவிட்டார். பெத்த பாசம், மனம் பொறுக்கமுடியாத தாயும் தகப்பனும் வந்தபோது, வசந்தி அழுத அழுகை அவர்களை உருக்கிவிட்டது. அந்த 90 நாட்களுக்குள்ளாகவே அவள் அலங்கோலப்பட்டுவிட்டதை ஜீரணிக்கமுடியாத சாம்பசிவம், எங்கையோ மாறி இரண்டு இலட்சம் காசும், 10 பவுன் நகையும் சீதனமாகத் தருவதாக வாக்களித்து குறித்த தினத்தில் எல்லாவற்றையும் கொடுத்து, கெட்டித்தனமாக அன்றே கல்யாண எழுத்தையும் எழுதிவிட்டார்.

மீண்டும் புது மாப்பிளையாக ஒரு மாதம் தான் இராகுலன் இருந்திருந்தான். தான் கடை போடப்போவதாகக் கூறி ஐம்பது ஆயிரங்களைச் செலவழித்ததேயன்றி கடை போடவேயில்லை. மிகுதிக் காசில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி, கூடிய விரைவில் அதையும் ஒரு குடிகார நண்பனுக்கு கடனுக்கு விற்றுவிட்டு, அதன் பெறுமதியை கொஞ்சம் கொஞ்சமாக அவன் சாராயமாகத் தீர்த்துவிட சீதனக்காசு இரண்டு இலட்சமும் வெற்றிகரமாகச் செலவழிக்கப்பட்டுவிட்டது. சீவியத்துக்கு எதுவும் கொடுக்காத போதும், குடிபோதையில் வாய்க்கு ருசியாக சமைச்சுப் போடச்சொல்லி வசந்திக்கு அடியும் உதையும் தான். தன்னுடைய நகைகளை பக்கத்தில் யாரிடமாவது அடகு வைத்து எத்தினை நாள் தான் அவளால் சீவிக்கமுடியும்.

இந்த நிலையில் வசந்தி கர்ப்பமடைந்தாள். தனது தலைப்பிரசவத்தை விட கணவனின் கொடுமைகளுக்காகவே பயந்தாள். ஆறுதலாயிருக்கவேண்டிய கணவனின் அடி தாங்கமுடியாது தவித்தாள். அன்பு அரவணைப்பு இல்லாமல் தனியாக அந்தச் சின்னப் பெண் படாதபாடு பட்டபோது, அவன் பகலெல்லாம் ஊர் சுற்றித் திரிந்தான்.

வசந்தி நிறைமாதக் கர்ப்பிணியாயிருந்த அன்றொரு நாள், பி.ப 05 மணியளவில், ஒரு குடிகார நண்பனைக் கூட்டிக் கொண்டு வந்த இராகுலன், அவன் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கப்போவதாகவும், அவனுக்கு சாப்பாடு போடும்படியும் கட்டளையிட்டான். அவள் செய்வதறியாது திகைத்து நின்றபோது, அவளைத் தள்ளிவிட்டு அடுப்படிக்குள் எட்டிப் பார்த்தான். அங்கே அடுப்பு மட்டுமல்ல சட்டி பானைகளும் காலியாயிருந்ததைக் கண்டு, கோபங்கொண்டான்.

என்னடி சோறு காச்சலையா?

அரிசி இல்லை……….

இல்லை எண்டா??

நீங்கள் தந்திட்டுப் போனதை காச்சி வைக்கலை எண்டு கத்துறீங்களா? அவளின் நிறைமாத வயிறு பசி தாங்க முடியாத வேதனையில் எரிந்தபோது அவளால் பேசாதிருக்கமுடியவில்லை.

என்னடி எதிர்த்துக் கதைக்கிறாய்?? வார்த்தைகள் வருமுன்னே அவள் கன்னம் சிவந்தது.

நண்பனுக்கு முன்பே தான் மானங்கெட்டுவிட்டதாக நினைத்த அவன், வசந்தியைத் தள்ளிவிட்டுப் போனபோது, அவள் நின்றிருந்த நிலையில் தலையும், வயிற்றினில் கதவும் அடிபட அக்கணமே அவளுக்கு வயிற்றுவலி எழுந்துவிட்டது. ஒவ்வொரு தாயும் அனுபவித்த அந்தக் குத்து, அந்த வேதனையை ஒரு தாய் வயிற்றில் பிறந்த அந்தப் போக்கிரி எங்கே உணர்ந்து கொண்டான். அவள் வேதனையால் கதறியதைக் கூடக் கண்டுகொள்ளாது, சைக்கிளை எடுத்துக் கொண்டு போய்விட்டான். சத்தம் கேட்ட முன்வீட்டுக்கார கிழவி தான் சத்தம் போட்டு ஊரவர்களையும் கூப்பிட்டு ஒரு ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு சாம்பசிவத்துக்கும் சொல்லியனுப்பிவிட்டாள்.

அழகான பொம்பிளைப்பிள்ளை. அதைக்கூட இராகுலன் ஒருநாளும் வந்து பார்க்கவில்லை. சாம்பசிவம் நேரிலும், வசந்தி ஆள்விட்டும் அவனைக் கூப்பிட்டபோதும் அவன் வரவேயில்லை.

6 மாதங்களின் பின் பிள்ளையம் கையுமாகப் போய் நின்றபோது, வீட்டில் வேறு யாரோ இருந்தார்கள். அவன் வீட்டு வாடகை கொடுக்காததால், இதுவரை வசந்திக்காக பெருந்தன்மையோடு பொறுத்திருந்த வீட்டுக்காரர், நல்ல தருணம் வரவே, யாரோ ஒருவருக்கு வீட்டைக் கொடுத்துவிட்டார். இராகுலனின் குடிவெறிக்கு இரையாகி நெளிந்தும், உடைந்தும் போன பாத்திரங்கள், பாய் தலையணைகளை அப்புறப்படுத்தி, இன்னொருவரைக் குடியேற்ற அவருக்கு நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. மீண்டும் திரும்பி தாய் வீட்டுக்கு வந்த வசந்தி, அவனுடன் சேர்ந்து வாழ எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. யாரோ தூரத்து உறவுக்கார விதவைப் பெண் ஒருத்தியின் வீட்டில் இராகுலன் சாப்பாடு, படுக்கை வைத்திருப்பதாக சாம்பசிவத்துக்கு யாரோ சொல்லியிருந்தனர். இதைப்பற்றி சாம்பசிவம் வசந்திக்கு எதையும் சொல்லவில்லை.

சரி அவன் உன்னைச் சரியாகக் கஸ்ரப்படுத்திவிட்டான். இனி நீ இந்தப் பிள்ளையோடை எங்களுடன் இரு. நாங்கள் பாக்கிறம் எண்ட தாய் தந்தை சகோதரங்களின் அரவணைப்பில், 11 மாதங்கள் சென்றிருந்தன. மீண்டும் இராகுலன் ஒரு நாள் வந்தான்.

தான் வசந்தியைக் கூட்டிக் கொண்டு போவதாக வந்தபோது, வசந்திக்கு எதுவுமே செய்யத் தெரியவில்லை. முதலில் இவன் இவ்வளவு செய்தவன், இனியும் இவனிடம் சென்று கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமோ என்று ஒரு கணம் சிந்தித்த தந்தை தாயிடம் கேட்டபோது, யாரோ ஒரு பெண்ணுடன் ராகுலனுக்கு தொடர்பிருந்ததை அறிந்திருந்த சாம்பசிவம், வசந்தியை அவனுடன் போகவிடவில்லை.

எப்படியாவது வசந்தியுடன் சேர்ந்துவிடவேண்டுமென்ற இராகுலன், இன்று கூடியிருக்கிற இதே கிராம முன்னேற்ற சங்கத் தலைவரிடம் போய் தான் திருந்திவிட்டதாகவும், வசந்தியை நன்றாக வைத்தப் பார்ப்பதாகவும் நாடகமாடினான். கிராம முன்னேற்ற சங்கக் கட்டடத்தில் ஊர்ப்பிரமுகர்கள் ஒன்று கூடி, அவன் திருந்திவிட்டதாகவும், நீ தான் பொம்பிளைப்பிள்ளை கொஞ்சம் பொறுத்தப் போகோணும் என்றும் தங்கள் ஆணாதிக்க மேலாண்மைகளின் செல்வாக்கில் மிண்டும் அவளை அவனுடன் சேர்த்துவிட்டனர்.

வசந்தியைத் தூரத்துக்கு அனுப்பவிரும்பாத சாம்பசிவம், தனது காணியின் ஒரு ஓரத்திலே ஒரு கொட்டிலைக்கட்டி, அதிலே வசிக்குமாறு சொல்லியிருந்தார். ஓரு 15 நாட்கள் ஒழுங்காக இராகுலன் வேலைக்குப் போய் வந்தான். பெரிதா குடித்ததாகவும் வசந்தி கண்டுகொள்ளவில்லை. சரி திருந்திவிட்டான் என்றிருந்த போது, ஒரு நாள், இவர்களுடைய காணியிலுள்ள மரத்திலிருந்து இறங்கி வந்ததை தற்செயலாகக் கண்டுகொண்ட வசந்தி தனது மூத்த தங்கை அப்போது தான் குளித்துவிட்டு ஈர உடுப்புக்களைக் காயப் போடுவதைக் கண்டவுடன் பதறிப்போனாள். 16 வயதேயான அந்த அப்பாவிப்பிள்ளை நடந்தது எதனையும் அறிந்திருக்கவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், வசந்தி தாய் வீட்டில் இருந்தவள். புருசன் வேலைக்கு எண்டு போனவன் திரும்பி வந்திருக்கவில்லை. பிள்ளையை நித்திரையாக்கிவிட்டு வந்தவள், பிள்ளை அழுஞ் சத்தம் கேட்டு தையல் மெசினில் ஏதோ தைத்தக் கொண்டிருந்தவள், பிள்ளையைத் தூக்கி வரும்படி, மூத்தவள் ராதாவை ஏவியிருந்தாள். அக்காவின் பிள்ளை அவளுக்கும் செல்லம். ஆசையோடு தூக்கப் போன ராதாவோ வசந்தியோ இராகுலன் வீடு திரும்பியிருந்ததை அறிந்திருக்கவில்லை. உள்ளே சென்று பிள்ளையைத் தூக்கிக்கொண்டு திரும்பியவள், குடிசை வாசலில் இரண்டு கைகளையும் ஊன்றியபடி, வெற்றிலை வாயுடன் நின்று இராகுலன் சிரித்தபோது, ஒன்றும் விளங்காத ராதா தானும் ஒப்புக்குச் சிரிப்பதாக பாவனை செய்துகொண்டு, அப்பால் போக எத்தனித்தாள்.
இருந்த ஒரேயொரு வாசலை மறைத்துக்கொண்டு நின்ற அவனைப் பார்க்க பயமாயிருந்தது. நிறைந்த போதையில் அருகில் நின்ற ராதாவை அவன் கட்டிப்பிடிக்க முற்பட்டபோது, குழந்தையை இறுக்கப்பிடித்தபடி ராதா கத்திய சத்தத்தில், குழந்தையும் அழத்தொடங்கிவிட்டது. சத்தங்கேட்டு ஏக காலத்தில் ஓடிவந்த வசந்தியும், அவளது மூத்த தம்பி நாதனும் வந்தபோது, ஒரு கையால் ராதாவின் தோளைத் தொட்டுக்கொண்டும், மறுகையால் அவளது வாயைப் பொத்திக்கொண்டும் ராகுலன் நின்றிருந்தான். குடிபோதையில் அவன் அவர்கள் வந்ததைக் கவனிக்கவில்லை. நாதன் ஒரு விநாடி தன்னும் பின்நிற்கவில்லை. இராகுலனின் பின்சட்டையைப் பிடித்து மறு கையால் பளார் என்று அறைந்து விட்டு குழந்தையை வாங்கி வசந்தியிடம் கொடுத்துவிட்டு அழுதுகொண்டிரந்த ராதாவைக் கூட்டிக் கொண்ட போய்விட்டான். நிறைந்த வெறியோடு தனது நிறைவேறாத ஆசையை கண்மூடித்தனமாக, வசந்தியின் மேல் காட்டிவிட்டுப் போனவன் தான் அன்று முதல் வீட்டுக்கு வரவேயில்லை. மீண்டும் வசந்தி கர்ப்பமடைந்திருந்தாள். இரண்டாவதும் பெண் குழந்தை. பிறந்தபோது வந்து பார்க்காத இராகுலன் குழந்தைக்கு 6 மாதமான பின்னர் மீண்டும் தான் சேர்ந்து வாழப்போவதாக கிராம முன்னேற்ற சங்கத்தில் வந்து முறையிட்டிருந்தான்.

மீண்டும் கூட்டத்தினர் முன்னே வசந்தி. பின்னுக்கிருக்கின்ற பிள்ளைகளின் நலன்களைக் கருத்திற் கொண்ட சாம்பசிவம், அவர்களை தனது காணியில் குடியிருக்க அனுமதியளிக்கவில்லை. தனதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்ட வசந்தி, தனது அம்மம்மாவின் காணியில் கொட்டில் போட்டுக்கொண்டு இராகுலனுடன் வாழ்ந்துவந்தாள்.

கொஞ்ச நாள் கழித்து பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது. இராகுலன் வேலைக்குப் போவதில்லை. குடித்துவிட்டு வந்து குழந்தைகள் குழறக் குழற வசந்திக்கு அடிப்பான். பிள்ளைகள் நித்திரையாவதற்கு முன்பே அவளைத் தன் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்துவான். பிள்ளைகளை வளர்ப்பதற்காக வசந்தி இப்போது வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது. அயலிலுள்ள பெண்களுடன் சேர்ந்து தோட்ட வேலைகளுக்குச் சென்று களைப்போடு வரும் வசந்திக்காகவே எதிர்பார்த்து, அவள் கொண்டு வரும் காசைப்பறிக்க காத்திருப்பான். வசந்தி கொடுக்க மறுக்கும் போது,

எங்கையடி போய் ஆடிப்போட்டு வாறாய்??

ஆரடி உன்ரை கள்ளப்புருசன்?? அவன்ரை துணிவிலை தானேடி என்னை நீ மதிக்கிறாயில்லை…

புருஷன் என்ற எல்லையை மீறி அவன் அவளை வார்த்தைகளாலும் கொடுமைப்படுத்தியதை எப்படித்தான் பொறுத்துக்கொண்டு வசந்தி வாழ்ந்திருந்தாளோ தெரியாது.

அன்றொருநாள் வசந்தியுடன் சண்டை பிடித்துவிட்டு பக்கத்தில் இருந்த கொட்டன் ஒன்றினால் அவளது தலையில் அடித்துவிட்டான். மத்தியான நேரம் இரத்தம் பின்கழுத்து வழியாக ஓட மயங்கிச் சரிந்தவளை விட்டுவிட்டு போயே விட்டான். வயதான அம்மம்மாக்காரி தான், நாதனுக்கு அறிவித்து அவன் சைக்கிளில் ஏற்றிச் சென்று மருந்து கட்டியபோது, அவளைப் பரிசோதித்த பெண் வைத்தியர், அவள் மூன்றாவது பிள்ளைக்குத் தாயாகப்போவதை உறுதிப்படுத்தியிருந்தார். இரண்டு மாதங்கழித்து தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி இராகுலன் கோப்பாயில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டதாக சாம்பசிவம் அறிந்துவந்து வசந்தியிடம் சொன்னபோது, ஒரு கணம் தன் விதியை நினைத்து தனக்குள் அழுதுகொண்டாள்.

சரியாக ஒரு வருடம் கழித்து அதே இராகுலன் அதே கிராம அபிவிருத்தி சங்கத்தில் வசந்தியுடன் தன்னைச் சேர்த்துவைக்குமாறு மீண்டும் வந்து முறையிட்டிருக்கின்றான்.

“ஐயா! இனி நான் ஒழுங்கா திருந்தி இருக்கிறன் ஐயா, என்ரை மூன்று பிள்ளைகளையும் ஒழுங்காப் பாக்கிறன் ஐயா” இராகுலன் பவ்யமாகக் கைகட்டி கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டிருந்தான்.

“எடி பிள்ளை வசந்தி அவன் தானே சொல்லுறான் தான் திருந்தியிட்டன் எண்டு… அவனோடை போய் இரடி பிள்ளை. போ.. போ…” தனது மூன்று ஆண்பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்ட ஒரு பெரிசு ஆலோசனை சொன்னது. எப்படியாவது அவளை அவனுடன், அனுப்பிவிடுவதில், தங்களுடைய power ஐ மீண்டும் ஊருக்குள் நிலைநாட்டுவதிலேயே பெரிசுகள் எல்லாம் குறியாயிருந்தன.

“சரி சாம்பசிவம் சமாளிச்சு சேர்த்துவை…… குடும்பமெண்டா அப்பிடி இப்பிடித் தான் இருக்கும்." தலைவர் தனது முடிவை அறிவித்துவிட்டு எழும்புவதற்கு ஆயத்தமானார்.

"கொஞ்சம் பொறுங்கோ ஐயா…" இதுவரை மௌனமாயிருந்த வசந்தி வாய் திறந்தாள்..

"இனியும் இவருடன் என்னாலை சேர்ந்து வாழ முடியாது…”

“இப்பிடி நான் சொல்லுறதுக்கு நீங்கள் என்னை மன்னிக்கோணம்.. ஆனாலும் என்ரை முடிவை நான் இந்த இடத்திலை சொல்லித் தான் ஆகோணும். இனியும் நான் இவருடன் வாழ தயாராயில்லை ஐயா…

ஐயா.. மூண்டு மாதக் காதலிலை முன்னைப்பின்னைத் தெரியாத இவரை நம்பி என்ரை அப்பா, அம்மா, சகோதரங்களை விட்டிட்டு என்னை வாழவைப்பார் எண்ட நம்பிக்கையிலை தான் ஐயா நான் இவருடன் போனன். ஆனா…….அது தான் நான் செய்த முதலாவது தப்பு. என்னை நம்பி எல்லாத்தையும் விட்டிட்டு வந்திருக்கிறாளே எண்டு குடிச்சியா, சாப்பிட்டியா எண்டு ஒரு நாள், ஒருநாள் இவர் கேட்டிருப்பாரா என்னை… இல்லை ஒரு கால் மீற்றர் துணி வாங்கித் தந்திருப்பாரா?? இவரைக் கலியாணம் கட்டி நான் கண்டதெல்லாம், அடியும் உதையும் ஏச்சும் பேச்சும்.. தான்…

வேண்டாம் ஐயா.. இனி எனக்கு இந்த மானங்கெட்ட வாழ்க்கை வேண்டாம்.. ஒவ்வொரு முறையும் ஒரு பொண்ணாப் பிறந்தவளா இவரை நம்பிப் போய் நான் குடித்தனம் நடத்தினதெல்லாம் போதும்.

எனக்கு கைகால் இருக்கு.. இதுவரை பட்ட வேதனைகள் அவமானங்கள் எல்லாம் என்னை மாத்தியிருக்கு ஐயா.. என்னை நம்பி மூண்டு பொம்பிளைப் பிள்ளையள் இருக்கு.. அதுகளை நான் நல்லா படிப்பிக்கோணும்…..தன்னம்பிக்கையுள்ள ஒரு தாயா என்னாலை வாழமுடியும்….. இதுவரை நான் பட்ட அனுபவம் எனக்கு இந்த உலகத்திலை வாழுகின்ற பக்குவத்தையும் தைரியத்தையும் தந்திருக்கு..

நானும் இந்த உலகத்தில் வாழுவன் ஐயா… புருஷன் எண்ட எனக்கு கிடைச்ச இந்த கொடுமைக்கார விலங்கு எனக்கு இனி வேண்டாம்… ஒரு பொம்பிளை நினைச்சா எதையும் சாதிக்கலாம்… என்ரை பிள்ளைகள் எனக்கு போதும்… இனி தான் நான் வாழப்போறன்….. அடக்குமுறையும், ஆதிக்கமும் நிறைந்த இந்த பந்தத்தை விட்டிட்டு இனி தான் நான் சந்தோசமா வாழப்போறன்…

என்னாலையும் வாழமுடியும்…….. வாழ்ந்து காட்டுறன்…"

மேலேயிருந்து ஒரு பல்லி சட் சட் என்றது.

உச்சத்திலை பல்லி சொன்னால் அச்சமில்லைத் தானே……

Pin It