அந்த ஒரு ஜோடி கண்கள் பால் வீதியினிற்று பல நூறு ஒளியாண்டு தூரத்திலிருந்து பூமிக்கு வந்திருந்தது. பூமியின் ஒவ்வொன்றை பற்றியும் அது எங்கோ தகவல் அனுப்பியது. இப்போது பிரமாண்டமான கற்கோபுரத்தின் மீது தன் பார்வையை செலுத்தி ஆய்ந்தது, அது ஆயிரமாண்டு கற்கோபுரம் . நிறம், வடிவம் அனைத்தையும் பதிந்து அது அனுப்பிய வேகத்தில் உடனே அதற்கு பதிலும் கிடைத்தது. அதன் தொழில்நுட்பமும் அது சார்ந்த சமூகத்தின் நுட்பமும் அப்படி. பெருங் கோபுரத்தின் மிக அருகாக பெருவிழி பறந்து கொண்டிருந்தது. கோபுரத்தின் கம்பீரம், அதன் வடிவம், அது பூமியை துளைத்து நிற்கும் அடிதளம் வரை அதன் விழிகள் பாய்ந்தது. வெளிபுற ஆய்வு முடிந்து, உள்ளரங்கினுள் நுழைந்து பெரும் விலங்கினுருவம் தாண்டி உள்ளே பாய்ந்தது. பிரமாண்ட கோபுரத்தின் உள் பகுதி வெற்றிடமாய் பெரும் குகை போல, மேலே போக போக குறுகி கொண்டே போனது. அதனடியே உருளையான தொரு கரும் உருளை கிழே வட்டவடிவம்.

ஆம் அது மனிதர்களின் குறிஅடையாளம். அது பூமி பரப்பில் பார்த்தவைகளுடன் சரி பார்த்து ஆம் உண்மை தான் என்று பதிலனுப்பியது. அந்த பெரும் குறியின் மீது பால், பழம் என ஐந்து வகையானவைகளை ஊற்றி கொண்டிருந்தார்கள். கீழே இருப்பவர்கள் அதை அள்ளி வரிசையில் காத்து நிற்கும் மனிதர்களுக்கு அள்ளியும், கிள்ளியும் தந்தவர்களின் தட்டுகளில், பல வண்ண காகிதங்கள் விழுந்து கொண்டேயிருந்தன. பெற்ற அந்த அமிர்தங்களை நீளமான நாக்குகள் நக்கி சென்றன. அந்த இடம் பெரும் இருளில் ஆழ்ந்திருந்தது. ஆயிரமாண்டாக சூரியன் படாத இடம். பெருவிழிகள் அந்த பரந்து விரிந்த வளாகத்தை கடந்து வான் நோக்கி பறந்து உச்சியில் இருந்து பார்த்தது. எவ்வளவு பெரிய கைகள் இதை செய்ததோ அது வியந்தது. பெருங்கைகள் அல்ல சிறுங்கைகள் தாம் ஆனால் பல ஆயிரம் வலுவான கைகள் அதற்கு அறிவுறுத்தபட்டது. வேறு பல தகவல்களும், முன்பே பதியபட்ட விவரங்களும் அதற்கு தரப்பட்டது.

அந்த பிரமாண்ட அழகு கட்டி முடிப்பதற்க்குள் பல உயிர்கள் பலியாகி உள்ளன. விபத்து, தண்டனையென, ஆயிரக்கணக்கானவர் ஊன மாக்கபட்டுள்ளனர். பெரும் மக்கள் படையாக ஆறாயிரம் பேர் அந்த பிரமாண்டத்தை கட்ட உழைத்துள்ளனர். ஆனாலும் உழைத்தவர்கள், ஊனமானவர்கள் விந்திலிருந்து கருவான எவனுக்கும் இவ்விடம் அன்னியமாக்கப்பட்டு தூர விலக்கி வைக்கபட்டது. தெரிந்து பெரும் விழி ஒரு கணம் மூடி திறந்தது. ஆயிரமாண்டு பின்னோக்கி போக உத்தரவு கேட்டது.

மிக உயரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பெரு விழி கண நேரம் திகைத்தது. அதனடியில் தெரிந்த எல்லாம் மாறின. கோபுரம் இருக்குமிடம் பெருங்காடாய் விரிந்தது. பெருங்கற்களின் குவியல் பரந்த வெளியில் சிற்பிகளின் உளிகள் ஓயாமல் கல்லில் மோதி எழும் ஓசை வெளியெங்கும் பரவி ஒலித்துக் கொண்டிருந்தது. பரந்து விரிந்து பெரும் பரப்பின் நடுவில் நீள் சதுரவாக்கில் பெரும் பள்ளம். பூமியின் ஆழத்திலிருந்து கட்டுமானம் வளர்ந்து கொண்டிருந்தது. செவ்வக கற்பாலங்கள் பள்ளத்தில் இறக்கப்பட்டன. ஒயாத கூச்சல், உத்தரவுகள், கல்லின் இடுக்கில் சிக்கிக் கொண்டவர்களின் மரண ஓலம், கற்பாலங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் போது எழும் ஓசை, வியர்வையின் பெரும் வாடை, அதனூடே எழும் ஆவியின் படலம் வான் நோக்கி எழுந்து கொண்டிருந்த அதே வேளையில் தந்தங்கள் உராயும் ஓசையும் பிளிறலும் கடும் உழைப்பின் மாசற்ற ஓசையைக் குலைப்பது போல பணியிட பரப்பின் நான்கு மூலைகளில் பெரும் சதுர வேள்வி மேடைகளில் நெய்கள் ஊற்றப்பட்டு பலவிதமான வேர்கள், ஒன்பது வகையான உணவு விதைகள், அதில் வீசப்பட்டு கொழுந்து விட்டெரிந்து கருகி சாம்பலாகிக் கொண்டிருந்தன.  

அதன் வாடை அப்பெரும் பரப்பை கடந்து சுற்றிநின்ற பெருங்காட்டினுள் போய் மறைந்தது. சூழ்ந்து நின்ற அறிவாளிகள் தங்கள் பேராசை கொண்ட வாயிலிருந்து, யாருக்கும் புரியாத வார்த்தைகளை, பாறைகளை செதுக்கி நேர்நிறுத்தி கொண்டிருக்கும் மனிதருக்கு தெரியாத மொழியில் பேராசையோடு புலம்பிக் கொண்டிருந்தனர். அந்த ஓசை அவர்கள் உதடுகளில் இருந்து புறப்பட்டு அவர்களது கொழுத்த காதுகளுக்கே திரும்பின. ஆனால் அது வான் வெளி கடந்து பாம்பின் மீது சல்லாபித்து கிடப்பவனிடம் போய் சேர்ந்ததாக சொல்லியிருந்தார்கள்.

மர்மங்கள் நிறைந்த ஓசைகளிடையே தீயினூடே வந்த புகை பரவி திரிந்ததொரு பகுதியில் பச்சை மாறாத தென்ன கீற்றுகளினால் வனையப்பட்ட குடில்கள், அழகிய பெண்கள் முழுமையாய் தெரியும் படியான அலங்காரங்களுடன் காமத்தின் மொழிகளந்து தாபத்தின் பெரும் மூச்சோடு அடிவயிற்றில் கிறுகிறுப்பு உண்டாக்கும்படியாய் சிரித்து பறித்து வந்த மலர்களை மாலைகளாக்கி கொண்டிருந்தார்கள்.

வேள்வியின் வெப்பத்தால் களைப்புண்டவர்கள் பாலறியா கொங்கைகளில் ஊரறியா பொழுதுகளில் திளைத்து தங்கள் வெப்பம் தணித்து வேள்வியினால் எழும் தீயின் புகையை மேகம் தழுவ வைத்து கொண்டிருக்கும் வேளையில் பேரழகிகள் மத்தியில் ரழகி மின்னினாள். அதே வேளையில் புகையின் மணத்துடன் சந்தனத்தை கைகளிலே குழைத்து கொண்டு அவளின் குடிலுக்குள்ளே ஒருவன் மார்பிலே புரண்ட இழையை தளர்த்திக் கொண்டு அவளுடைய சின்னஞ்சிறு ஆடைகளை விலக்கிக் கொண்டிருந்தான். முனங்கலும், சினுங்கலும், சிரிப்பு மாய் கடந்த நிமிடங்களில் புரிந்தது பெருவிழிக்கு.

சிறு கூடாரம், பெருங் கூடாரம், வெட்ட வெளியென்று, எங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது மாதிரியில் பல சிற்பங்கள் பதுமைகளாய் புடைத்து நின்றன. எரியும் தீயில் எண்ணை ஊற்றுபவர்களும், பெருந்தச்சர்களும் சேர்ந்து அவளில் உண்டாக்கியிருந்தார்கள்.

பெருங்கூடாரம் அதில் பெண்களின் பரிதாபகரமான கூக்குரல்கள் பல கேட்டன. அதில் அழகிகள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். பெரிய உடலுடன் வயோதிக பெண்கள் காவலிருக்க அந்த கூடாரத்தினுள் பெரு விழி நுழைந்தது. தூரத்தில் எங்கோ கன்று ஈனும் யானையின் அலறல் கேட்டு வேறு பல யானைகளும் பதிலுக்கு பிளிறின. அந்த பேரோசை கேட்டு அழகிகள் காதைப் பொத்தினார்கள். உருவானதை கலைத்த பின் பேரழகிகள் அடிவயிற்றைப் பிடித்து அலறி க் கொண்டிருந்தார்கள். கிழவிகள் சிறு சட்டிகளில் நிறைந்திருந்த குருதியை கூடாரத்துக்கு வெளியே எங்கோ கொட்டி கூடாரத்துக்குள் திரும்பினார்கள். சிகிச்சையின் போது அவர்களுக்கு மது தரப்பட்டிருந்தது. அந்த உலகம் உளிகளின் ஓசையால் நிரப்பப்பட்டிருந்தது. 

தென்னங் கீற்றுகளால் கூரையமைத்து சுற்றிலும் வண்ணத் திரைகளால் மறைக்கப்பட்டிருந்த பெருங்குடில்களில் மதுமயக்கத்துடன் வலியின் துயரத்தால் லேசான முனங்கல்களுடன் படுத்துக் கிடந்தார்கள். சிலர் ஜன்னி கண்டு காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒலத்தையும், கல்சிதறும் ஓசைகளையும் மீறி அந்தப் பெரும் பரப்பின் நான்கு மூலைகளிலும் அங்கு பேசும் மொழியல்லாது வேறுபட்ட புரியாத மொழியில் பெரும் கூச்சல் கேட்டபடி இருந்தது. பெரு விழி அதிலே ஆர்வமுற்று அங்கே நகர்ந்த பொழுதில் பெரும் சதுர மேடைகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதிலே தூய நெய்யும், சிறந்ததில் சிறந்ததான தானியங்களும் கொட்டப்பட்டன. நறுமணம் தரும் காய்ந்த தாவரங்கள் இன்னும் பலவும் அங்கே தீய்ந்து சாம்பலாகிக் கொண்டிருந்தன. எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றுபவர்களின் பேராசை மிக்க கூக்குரல் பேரோசையோடு ஒலித்துக் கொண்டிருந்தது. யானையின் பிளிறல் சற்று அதிகமாகவே கேட்டது.

சூலற்ற ஓட்டிய வயிறு, நிறைவான மார்பு, குறையற்ற உயரம், பெரிய விழிகள், நீள கூந்தல், பேசும் விரல்கள், நாட்டியத்தில் தேர்ச்சி, வளாகத்தில் எவரின் அழைப்பையும் மறுக்காமை, எப்போதும் அலங்காரம் என கருங்கல்லில் பெருங்காவியம் படைக்கத் துடிக்கும் பெருங்கலைஞர்களின் கற்கூடங்களில் ததும்பித் திரிந்தார்கள். பெருந்தச்சர்களின் உடல் ஊடுருவி பின் உள்ளமும் ஊடுருவிய சமயங்களில் பேதைகள் காதலின் போதையில் கட்டுண்டு கிடப்பர். அவளை ப் போன்றதோர் சிலையையோ, பதுமையையோ சிற்பி படைப்பான். அவளோ அவனோடு கலந்திருப்பாள். காதலால் கட்டுண்டவள் அவனைத் தவிர வேறு யாருடனும் கூட மறுப்பாள். அவளுக்கு பதில் சொல்வது சாட்டையும், நஞ்சும். நூற்றுக்கணக்கான பரிதாபக் கதைகள் அந்த பெருங்கற்களில் உளியை விடவும் வேகமாக மோதி அங்கே சுழன்று திரிந்தன. அந்த பிரமாண்டமான கோபுரம் முடிவதற்குள் இது போன்ற வகையிலும் வேறு பல வகையிலும் ஏராளமான உயிர்கள் மண்ணிலே புதைக்கப்பட்டிருக்கிறது. பெருவிழியில் தகவல் பதிந்திருந்தது.

கட்டிடத்தின் பல கட்ட வரைபடங்கள் நான்கு புறமும் பெரும் திரைச் சீலைகளில் வரையப்பட்டு சூரிய ஒளியில் சுடர்ந்து கொண்டிருந்தது.

சிற்பி ஒவ்வொருவனுக்கும் அவன் செதுக்கும் பகுதியின் அளவுகள் பற்றி துல்லியமாக மனப்பதிவு இருந்தது. ஒவ்வொருவனுமே நிபுணன். வேர் சுருளன் என்றொருவன். புருவத்துக்கு நூறு செதுக்கு, மூக்கு நுனிக்கு ஐம்பது செதுக்கு என்று கணக்கு வைத்திருந்தான். அவனைப் போலவே அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் கல்லை வடித்தெடுப்பதில் வல்லவர்கள். அவர்களால் முடியாதென்பது சிற்பத்தில் எதுவுமில்லை. வியர்ந்து நுண் ஆறென பாயும் கற்சிதறல் பாய்ந்து விழிகள் குருடாகும், கலைஞனின் விரல்கள் சிதைந்து பரிதாபக்குரல் எழும். பெரும் பாறை புரண்டதில் சிக்கி சிதைந்தவனின் மரண ஓலம், கரு சிதைப்பின் நஞ்சூட்டலால் வலிப்பு கண்டவளின் துயர் முனங்கல், பாரம் இழுத்து தடுமாறி சரிந்த யானையின் தந்தம் முறியும் ஒசை. ஆயிரமாயிரம் உளிகள் மோதியெழும் நாதம் இதையெல்லாம் மீறி, நெய்யின் கருகிய மணமும் அங்கு பரவி த் திரிந்தது.  

மிகப் பரந்த வெளியில் வேலை நடந்து கொண்டிருந்தது. பெரு விழி மேகம் தாண்டி மேலெழுந்து சென்று பார்த்தது. வளர்ந்து வரும் கோபுரத்தில் இருந்து பல மைல் தொலைவுக்கு மனிதர்களும், யானைகளும் பெரும் கற்களை இழுத்து வருவது தெரிந்தது. அப்படி இழுத்து வரும் வலுவான மனிதர்கள் வாயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. யானைகள் வாயிலுக்குள்ளும் நுழைந்து இழுத்துப் போயின. பெருங்குறி நிறுவப்பட்டிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவிலேயே வாயிலுக்கான சுவர்களுக்கு பெரும் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதற்கு பல நூறு அடி தொலைவிலேயே பாரம் இழுப்பவர்களில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே வாயிலைத் தாண்டி அனுமதித்தார்கள்.

பெரும் கற்பாலங்களை வேலையிடங்களுக்கு யானைகள் இழுத்துச் சென்றன. வலிவோடு தள்ளும் போதும், இழுக்கும் போதும் கால்கள் இடறி சரிந்து விழுந்ததில் பலமான காயங்களும், பல வேளைகளில் தந்தங்களும் முறிந்தன. போதையில் யானைகள் வெறி கொண்டு பாரங்களை இழுத்தும் தள்ளியும் சென்றன. காயம் பட்ட யானைகளுக்கு சிகிச்சையளிக்கும் கூடாரங்கள் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பெண் துணைக்கு ஏங்கும் ஆண் யானைகளை தனியாக ப் பிரித்து துணைகளுடன் தனித்து விடப்பட்டன. கன்று ஈன நாள் நெருங்கிய யானைகள் பணியில் இருந்து விலக்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. ஆனாலும் அந்த பெருங்கோபுரம் முடியும் வரை பணியிடையே உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை இருநூற்றியாறு என்று பெருவிழியின் பதிவுகள் காட்டியது.

தலைமைச் சிற்பி வலுவான பெருங்குதிரையொன்றில் புழுதி கிளப்பிக் கொண்டு நாற்புறமும் ஓயாமல் பாய்ந்து கொண்டிருந்தான். கரும் பாறை போன்று நிறத்திலும், உறுதியிலுமான பெரும் பரந்த மார்புடன் வீரனைப் போன்ற தோற்றத்தில் பெரிய கண்களுடன் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். அவன் புத்தியிலே கட்டிடத்தின் முழுமையும் புதைந்திருந்தது. அவன் ஏனோ கொழுந்து விட்டெரியும் யாகக் கூடத்தையும் அதன் புரியாத மொழியிலான கூச்சலையும் முகச் சுளிப்புடன் பார்த்து அலட்சியத்துடன் கடந்து போனான்.

பெருவிழி பேரார்வத்துடன் எல்லாவற்றையும் பார்த்தபடியே பெரு வாசல் தாண்டிப் போனது. வாயிலில் இருந்து பல பத்து மைல்களுக்கு மனிதர்களுடன் யானைகளும் பல இடங்களில் பெரும் கற்பாலங்களை இழுத்துக் கொண்டிருந்தன. பாறை பாலங்களை இழுப்பவர்களின் முதுகிலே சாட்டைகள் விளாறும் ஓசைகளினூடே யானைகளின் பிளிறலும் கேட்டது. பாறைகளை நகர்த்தியும், தள்ளியும், புரட்டியும் அவர்களும் பாறைகளைப் போல இருந்தார்கள். வயிறு மார்பு விரிந்து பக்க எலும்புகள் வரிசையாகத் தெரிந்தன. கட்டமைந்த பெரும் முதுகிலே சாட்டை உரித்தெடுத்ததால் ரத்தம் துளிர்த்திருந்தது. எச்சிலற்று உலர்ந்த நாவை ஈரப்படுத்திக் கொள்ளத் துடித்தார்கள். குறிப்பிட்ட எல்லை வரும் வரை அவர்களுக்கு குடி தண்ணீர் தர மறுக்கப்பட்டது. குடிநீரை அடைய அவர்கள் வெறி கொண்டு பாரத்தை இழுத்தார்கள் . குளங்கள் நெருங்கிய போதும் ஆசைதீர குளத்தில் இறங்கி முகர்ந்து குடிக்க முடியாது. அவர்கள் கையேந்தி நிற்க கலயங்களில் அளவோடு ஊற்றினார்கள். தாகம் தீராத நிலையில் பாரம் இழுக்க தயாராக வேண்டியிருந்தது. கொடிய முப்பிரி நுனி கொண்ட சாட்டை தயாராக இருந்தது. உலகின் மொத்த சுமையும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டதாகக் கருதி பெரும் வலியோடும் வலுவோடும் இழுத்துப் போனார்கள். பெரும் உழைப்பு அணி வரிசையெங்கும் சாட்டையொலியும் விபத்தில் சிக்கி நசுங்கும் அவலமிக்க அலறல்களுமாய் பேரணி போய் க் கொண்டே இருந்தது.

சாட்டையடி பொறுக்க முடியாத பாரம் இழுப்பவன், வரிசையிலிருந்து விலகி கங்காணியின் கையிலிருந்து சாட்டையைப் பிடுங்கி அவனை கீழே தள்ளினான். பெருங்கோபத்துடன் வெறி கொண்டவனைப் போல் அவன் மீது பாய்ந்து கயிறுகளை இழுத்து மரபட்டை போல் இருந்த கைகளை முறுக்கி எதிரியின் தொண்டையிலே பாய்ச்சினான். அடிமை மேய்ப்பனின் குரல்வளை உடைந்து மூச்சு திணறினான். வேறு ஒரு கங்காணியின் வேல் கம்பு பாரம் இழுப்பவனின் முதுகிலே பாய்ந்து இதயத்தை துளைத்துக் கொண்டு மார்பிலே வெளிப்பட்டது.

அங்கு எதுவுமே நடவாதது போன்று பெரும் கற்பாலங்கள் இழுபட்டுக் கொண்டிருந்தன. இரண்டு உயிரற்ற உடலுக்காக யாரும் காத்திருக்கவில்லை. அவர்களின் சாட்டைகள் பெரும் வலிவோடு பாரம் இழுப்பவர்களின் முதுகிலே வெறியோடு பாய்ந்தது. மன நோயாளிகளே மனிதர்களை மேய்க்கும் வேலையில் இருந்தார்கள். மூக்கின் நுனியில் எறும்பு கடிக்கும் போது அதைத் தட்டி விட கை போனாலும் சாட்டையடி தோலைப் பிய்த்தெடுத்தது. வழி நெடுக்க இதே வதை தான். நீள வாக்கில் கரும் பாறையொன்று இரண்டு யானைகள் பின் தள்ள இரண்டு யானைகள் கயிறால் பிணைக்கப்பட்ட கற்பாலத்தை இழுத்தது. ருளும் காட்டு மரங்களை அடியிலே லாவகமாக ப் போடவேண்டும். அதற்கு பாறைகளை இழுத்து விடலாம் போல இருந்தது அவர்களுக்கு.

வானம் திடீரென கருத்து மின்னல் வெட்டியது. கரும் பாறைகள் வான் ஒளியால் பளீரிட்டது. பெரும் மழை ஓயாதோ என அஞ்சும் படி காற்றுடன் வீசியடித்தது. எதுவும் நகர்தலை நிறுத்தவில்லை. சாட்டைகள் இப்போது மின்னலைப் போல பாய்ந்தன. காற்றிலே மரங்கள் பேயாட்டம் ஆடின. தாகத்தால் தவித்தவர்கள் மழைநீரை நாவிலே ஏந்தி விழுங்க முயன்றார்கள். அவர்களின் காயங்களில் பாய்ந்த சாட்டையின் நுனி ரத்தத்தை பீறிட வைத்தது. பரந்த முதுகிலிருந்து ரத்தமும் வான் நீரும் கலந்து வழிந்தன. மண் தரை சேறானது. பெரும் பாரங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன. பாறைக்கடியில் ஒரே நேரத்தில் இருவர் சிக்கிக் கொண்டனர். யாருக்காகவும் பாரம் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருந்தது. சிக்கியவர்கள் கூழாவதைத் தவிர வேறு வழியில்லை. வெகுண்டவர்களை சிதைத்து சாய்க்க வாளும், வேலும் தயாராக இருந்தன. சாட்டை வீச்சின் போது உயிரை இழந்தவர் ஒரு புறமிருக்கட்டும், ஆண்மையிழந்தோர் ஏராளம். நீதியும், நியாயமும் பொருள் உள்ளவனுக்கும் அதிகாரத்தில் இருப்பவனுக்கும் தான். கணவாய் போய்கள் நீதியின் முன் வேறு எதிர்பார்க்க முடியாது.

பெருவிழியின் கவனிப்புக்குள்ளான காட்சிகள் அதையே கூட நடுங்கச் செய்தது. ஆனாலும் துணிவுடன் அது நீண்ட பெரும் உழைப்பு பேரணியை பார்வையிட்டு சென்றது. பெரும் மலைகளில் போய் அது முடிந்தது. பாறைகளை பிளந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் தந்திரத்துக்கு முன் மலைகள் அசைத்தும் பிளந்தும், தகர்ந்தும் உருமாறிக் கொண்டிருந்தன. முக்காலடி துளைகளை வரிசையாக அடித்து குறிப்பிட்ட பச்சிலை சாறு ஊற்றி அதில் சொருகப்பட்ட மரம் ஊறிப் பெருத்தது. ஒரே நேரத்தில் ஒரே வரிசையில் இது நடந்தேறும் போது பெரும் பாறை பிளந்து சரியும். மலைகள் மட்டும் சிதையவில்லை மனிதர்களும் தான். அவர்களின் மரண ஒலம் அங்கு ஒயாமல் கேட்டு கொண்டிருந்தது. கற்பாலம் பிளக்கபட்டு சாயும் போது வடிவான கற்கள் உடைந்துவிடாமல் இருக்க பெரும் வைக்கோல் போர்கள் சமமற்ற தளங்களில் தாங்கிப் பிடிக்க உயிருள்ள மனிதர்களே முட்டு கொடுக்க நிறுத்தப்பட்டார்கள். அதில் தப்பியவர்கள் குறைவு தான்.

நெருப்பு கொழுந்துவிட்டெறிந்தன. அவர்கள் குடித்தது போக மீதமிருந்த நெய் பூராவும் அதிலே ஊற்றப்பட்டது. அவர்கள் தின்று தீர்த்தது போக மீத மிருந்த விதைகள் அதில் வீசப்பட்டன. அவர்கள் உரக்க கத்தினார்கள். அது அவர்களிடமே வந்து சேர்ந்தது. காய்ந்த குச்சிகளை எரித்து அதன் வெப்பத்தில் அவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். விபத்தில் செத்தவர்கள் உடல்கள் பூமியின் மேல் எரித்தும், புதைத்தும் அடையாளமற்றுப் போனது. எந்த பதிவும் கிடையாது. ஆனாலும் பெருவிழி தனக்குள் அனைத்தையும் பதிந்து கொண்டது துயரத்தோடு. கோபுரம் வளர வளர அதன் உச்சி குறுகிக் கொண்டே போனது. பெருவிழி வானில் இருந்து பூமி உருண்டை முழுவதும் தேடியது. இது போன்றதொன்று எங்குமேயில்லை.

கோபுரத்தின் உச்சியில் இருந்து மரப் பாலம் சரிந்து கொண்டே வெகு தொலைவு போய் பசுஞ்சோலைகளுக்கிடையே மறைந்தது. முடிவுற்ற பெரும் மரப் பாலத்தில் முடிவுறாத வேலையாய் தச்சர்கள் மரப் பலகைகளை இணைத்துக் கொண்டிருந்தார்கள். பாலத்தின் உறுதித் தன்மையறிய ஒரே சமயத்தில் ஐம்பது யானைகள் மந்தையாக ஓட்டிச் சென்றார்கள் வானில் இருந்து இடிஇடிப்பது போன்று யானைகள் பலகைகள் மேல் நடந்து செல்லும் ஓசை சுற்றுப்புறத்தையே அதிரவைத்து க் கொண்டிருந்தது. தாங்கு கட்டையில் இருந்து முறியும் ஓசைதாவது கேட்கிறதா என்று ஆயிரமாயிரம் ஆட்கள் மரக் கட்டுமானங்களில் தாவித் தாவி பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். மரத்தின் உருளும் ஓசையும் அதை தூண்டாரடும் ரம்பங்களின் ஓசையுமாக பெரும் பரப்பில் ஒர் அதிசயமாய் நடந்து கொண்டிருந்தது. பெருங்கல் ஒன்று பாலத்தின் மீதேற தயார் நிலையில் இருந்தது. பலமான பல உயிர்களின் மேல் சவாரி செய்தபடி சாரத்தின் நுனியில் ஏறக் காத்திருந்தது. பெருந்தச்சனின் குரலுக்கு யானை  முதல் ஆட்கள் வரை கட்டு ப்பட்டார்கள். அவன் அந்த பெருங்கல்லை ஒருவனாகவே உருட்டிக் கொண்டு போய் விடுபவன் போல கல்லை அலட்சிய மாக ப் பார்த்தான். அவனே பாறையால் செதுக்கப்பட்டவன் போலவே இருந்தான்.

பலகை வழுவழுப்பாக்கப் பட்டிருந்தது பாலத்தில் உருட்டைக் கட்டைகள் உதவாது சரிவில் உருட்டி கொண்டு ஒடி விடும் என்பதால் குன்றென நிற்கும் கல்லை முன் நோக்கி தள்ள ஆறு யானைகள் முன்புறம் இழுக்க மூன்று வரிசைகளில் நான்கு யானைகள் வழுக்கிச் செல்ல மசகிடும் ஆட்கள் பின் புறம் நழுவாமல் இருக்க முட்டுக் கட்டைகள் என பெரும் படையே பாறையின் முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் அணி வகுத்திருந்தார்கள். பரந்து, விரிந்து, நீண்டு, ஒரு ஊரையே புதைத்து விடுமளவு மிகப் பெரும் பள்ளத்தில் போய் முடியும் சாரத்தைக் கட்டி கல்லையும் அதன் மீது நகர்த்திக் கொண்டிருந்தார்கள். யானைகள் ஒரடி நகர ஒன்பது முறை பிளிறியது. மேடையின் சரிவில் யானைகள் இடறி விழுந்து எழுந்தன. முதல் நாள் மாலை பொழுது சில பத்தடிகள் முன் நகர்ந்திருந்தது பெருங்கல். ஓரிடத்தில் யானைகள் தடுமாறின. எரிச்சலடைந்த யானையொன்று பாகனின் கட்டுக்குள் அடங்காமல் முன்காலைத் தூக்கி வானதிரப் பிளிறியது. யாழை மீட்டி அடக்க அவகாசம் இல்லை. பெருங் கூச்சல் குழப்பமாய் களேபரமான சூழலில் பாலம் முறியும் ஓசை பெருங்கல் பாலத்தை முறித்துக் கொண்டு பள்ளத்தில் சரிய பெருஞ்சேதம். யானைகளின் கடைசிப் பிளிறலில் மனிதர்களின் மரண ஓலம் காணமல் போனது. கல் உறுதியாக பெரும் மரத்தூண்களை மண்ணில் அழுத்திக் கொண்டு ஒன்றும் அறியாதது போல் அமைதியாகக் கிடந்தது. பௌர்ணமி நிலவு ஒளிவீசியது. அதையும் மீறி பெரும் பந்தங்கள் சுடர்ந்தன. அடர்ந்த மீட்பு வேலைகள் இரவும், பகலும் நடந்து கொண்டிருந்தது. கல்லைப் புரட்டி புரியாத மொழி பேசுவோரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் அதன் மீது பூவையும், நெருப்பையும் காட்டி பல விதமாக பூசை செய்து கொண்டிருந்தார்கள்.

மறுபுறத்தில் பாலம் சீரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. முக்கியமாக கல்லை இரண்டாகப் பிளந்து கோபுரத்தின் உச்சியில் கொண்டு போய் இணைக்க பெருந்தச்சன் முடிவெடுத்தான். பல நூறு ஆண்டுகள் மக்கள் அதை ஒரே கல் என்று தான் நினைப்பார்கள், நினைக்க வேண்டும். இங்கு நடப்பதை வெளியில் சொன்னால் குலம் அழிந்து விடும் என்ற அச்சுறுத்தல்கள் அந்த வாளாகமெங்கும் எதிரொலித்தது. அது பெரும் பாலும் நம்பப்பட்டது.

சிற்பக் கலையின் வல்லுனர்கள் கூடி நின்று ஒரு கல்லை இரு கல்லாக அறுவையை நிகழ்த்தினார்கள். முப்பது இரவு, முப்பது பகல் போரடிப் பிளந்த முதல் துண்டு பாலச்சரிவின் நுனியில் ஏற்றபட்டது. இந்த முறை தவறு நேர்ந்தால் பணியில் இருப்பவர்களின் தலைசீவப்படும் என்று எச்சரித்திருப்பதாக அதிகாரமற்ற தகவல்கள் பரவித் திரிந்தன. கொழுத்து திரிபவர்களின் தந்திர சாகசங்களுக்கு அளவேது. நித்தமும் அவர்கள் மக்களை அச்சுறுத்தி கட்டுக்குள் வைக்கும் வேலையை இடையறாது செய்து கொண்டே இருந்தார்கள்.

புரியாத மொழியில் முழங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு பொன்னும், மணியும், மெல்லிய பட்டுடைகளும் பசுக் கூட்டமும் கூட தந்து மகிழ்வித்துக் கொண்டிருந்த தலைவனின் செயல் தான் பெருவிழிக்கு புரியாததாக இருந்தது. கல் இழுபட்டது. பெரும் பிளிறலுடன் யானைகள் வலுவோடு இழுத்துச் சென்றன. இரண்டு பெருந்துண்டுகளும் உச்சி போய் சேர்வதற்க்குள் இரு முறை முழு நிலவு நாளைக் கண்டிருந்தது உழைப்புக் கூட்டம்.

இரண்டும் இணைந்து ஒன்றானது போல சாதனை செய்த சிற்பிகளை தலைவன் கொண்டாடினான். வடக்கிலிருந்து முகர்ந்து வரப்பட்ட நீர் பொழியப்பட்ட பெருங் கோபுரம் நிலவொளியில் உயர்ந்து நின்றிருந்தது. கல் உடைத்தவன், கல் சுமந்தவன் விந்திலிருந்து வந்த யாரும் வாசலுக்குள் அல்ல வாசல் வீதி வழியே கூட வரக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டது. பெருவிழி நிகழ்காலத்துக்கு திரும்பியது. பெருவிழி இமைக்க மறந்து தன்னுள் பழைய பட்டியலை பார்த்ததும் புதியதை வேறு எங்கோ அனுப்பியும் தனக்கு தானே கேள்வி யெழுப்பியது.

எதற்காக இது? கேள்வி எழுப்பியது அது தெரியாது. நுண்மையான ஒரு சமூகத்தின் வலிமைக்கான, பண்பாட்டுக்கான சாட்சி இது. விபத்தில் பலியான உயிர்கள் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பது. ஊன மானவர்கள் மூவாயிரத்து பதினாறு பேர். இந்த சேவையில் மாண்ட பொது மகளிர் ஆயிரத்து முன்னூற்று பத்து பேர். பலியான யானைகள் நானூற்றி ஐம்பத்தேழு. தண்டனையால் உயிர் போனவர்கள் நூற்றி எண்பது பேர்.

புரியாத மொழி பேசி திரைகளுக்குப் பின்னே பெரும் திறம் காட்டிய சிறு கூட்டத்துக்கு கணக்கிலடங்கா எண்ணிக்கையில் ஊர்களும், எண்ண நாள் பிடிக்குமளவு பசுக்களும், அவைகளும், இவர்களும் மேய்ந்து திரிய பெரும் நிலங்களும், இலவசங்களாக வழங்கப்பட்டன.

மாபெரும் கோபுரம் உயர்ந்து நின்றது. இமைக்க மறந்து உயரத்தில் இருந்து பெருவிழி பார்த்தது. நேரம் முடிந்து திரும்பி வா என்று தகவல் வந்ததும் பெருவிழி பயணிக்கத் தொடங்கியது எங்கோ...

- கரன் கார்க்கி

Pin It