இந்திய அணுசக்தி புரட்டாளர்களின் முகத்திரை மீண்டும் ஒரு முறை தில்லியில் கிழிந்திருக்கிறது.

இந்தியாவில் கற்றறிந்த விஞ்ஞானிகள் என்று பெயர் பெற்ற பலர் ஒரு பக்கம் கடவுள் நம்பிக்கையாளர்களாகவும், மற்றொரு புறம் அணுசக்தி ரொம்ப பாதுகாப்பானது என்றும் பேசிக் கொண்டிருப்பது தொன்று தொட்ட வழக்கம். இவர்களது முகத்திரைகள் அடிக்கடி கிழிந்தாலும், எதுவுமே நடக்காதது போல பாசாங்கு செய்யப்படுகிறது. ஆக்கசக்தி என்ற முகமூடியுடன் அணுசக்தியை கட்டவிழ்த்து விடுவது இவர்களது வேலை.

தில்லியின் மேற்குப் பகுதியில் உள்ள மாயபுரி கழிவுச் சந்தையில் ஏப்ரல் மாதம் ஒரு கருவி கதிரியக்கத்தை உமிழ்ந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். இந்த கதிரியக்கக் கருவி எங்கிருந்து வந்தது என்று தேடிப் போனபோது, எல்லாவற்றையும் செய்து விட்டு மௌனமாக உட்கார்ந்திருந்த தில்லி பல்கலைக் கழகம் வசமாகச் சிக்கிக் கொண்டது. பல்கலைக் கழகத்தின் வேதியியல் ஆய்வுக் கூடத்தில் இருந்து கோபால்ட் 60 என்ற கதிரியக்கப் பொருள் அடங்கிய காமா இர்ரேடியேட்டர் கழிவுப் பொருளாக விற்கப்பட்டிருக்கிறது. கற்றறிந்த மேதாவிகளான பேராசிரியர்களுக்கே ஒரு கதிரியக்கப்  பொருளை எப்படி வெளியேற்ற வேண்டும் என்று தெரியாதபோது, பாவம் படிக்காத அந்தத் தொழிலாளிதான் என்ன செய்வார்? அடுத்த வேளை சோற்றுக்காக அந்தக் கருவியை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மேலும் எட்டு பேர் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அணுசக்தி ஆக்கசக்தி, அது பாதுகாப்பானது, கதிரியக்கத்தால் எந்தப் பிரச்சினையும் வராது என்று ஊரை ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள்தான், இதற்கு பதில் சொல்ல வேண்டும். 45 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட ஒரு சாதாரண கதிரியக்கக் கருவியே ஒருவரைக் கொன்று, எட்டு பேரை பாதிக்கும் எனும் போது, கல்பாக்கம், கூடங்குளத்தில் நிறுவப்பட்டிருக்கும் அணு உலைகள் எவ்வளவு பயங்கரமானவை. ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டுகளை விடவும் பெரியவை, இல்லையா?

இந்தக் கருவியை தில்லி பல்கலைக்கழகம் கனடாவிடம் இருந்து 1968ஆம் ஆண்டு வாங்கியிருக்கிறது. அப்போது கதிரியக்க பாதுகாப்பு இயக்குநரகம் இதை கண்காணித்து வந்தது. ஆனால் இந்த இயக்குநரகம் ஒழிக்கப்பட்டு 1983ஆம் ஆண்டு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏ.இ.ஆர்.பி) அமைக்கப்பட்டது. இது எந்த லட்சணத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதற்கு மாயபுரி கதிரியக்க விபத்து நல்ல சாட்சி. இதுபோன்ற தூங்குமூஞ்சி அமைப்புகள் எப்படி அணுஉலை விபத்துகள் நடந்தால் மக்களைக் காப்பாற்றப் போகின்றன?

1965ஆம் ஆண்டிலிருந்து 1975ஆம் ஆண்டு வரை ஆறு காமா இர்ரேடியேட்டர்களை இந்திய நிறுவனங்கள் வாங்கியுள்ளன. "இவற்றில் மூன்று கருவிகள் இன்னும் செயல்படும் நிலையில் உள்ளன. ஆனால், அந்தக் கருவிகளை வாங்கிய நிறுவனங்களின் பெயரை வெளியிட முடியாது" என்று அணுசக்தி ஒழுங்குமுறை வாரியச் செயலாளர் ஓம் பால் சிங் கூறியிருக்கிறார். மாயபுரிக்குச் சென்ற ஒன்றைத் தவிர, மற்ற இரண்டு கருவிகள் எங்கிருக்கின்றன என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. கதிரியக்க ஆபத்திலிருந்து மக்களுக்கு அரசு அளித்து வரும் பாதுகாப்பு இந்த நிலையில்தான் இருக்கிறது. எங்கிருக்கிறது என்றும் சொல்ல மாட்டார்கள், அதனால் என்ன ஆபத்து என்றும் சொல்ல மாட்டார்கள். ஏதோ ஒரு நிறுவனத்தில் என்ன கருவி என்றே தெரியாமலேயே யாராவது ஆய்வு மாணவன் இந்தக் கருவிகளை இயக்கிக் கொண்டிருப்பான். அவன் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தாராப்பூர் அணுமின் நிலையத்தில் சமீபத்தில் ஓர் ஆய்வு மாணவர் மர்மமான முறையில் இப்படித்தான் உயிரிழந்தார்.

தில்லி விபத்தில் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கழிவு பொருள்அகற்றும் தொழிலாளிகளின் நிலைமை திரிசங்கு நிலையில் உள்ளது. ஏனென்றால், கதிரியக்க பாதிப்பால் ஏற்படும் தாக்குதலைச் சந்தித்தவர்களுக்கு சிகிச்சைஅளிக்க நாட்டின் தலைநகரில் எந்த வசதியும் இல்லை. கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்டவர்களை எளிதில் நோய்த் தொற்றுகள் தாக்கலாம் என்பதுடன், கதிரியக்கம் தாக்கியவரை குணமடையச் செய்ய கதிரியக்கத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சையும் அளிக்க வேண்டும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சில தொழிலாளிகள், தீவிர கதிரியக்க நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உடனடியாக குணமடையாது.

"இது எலும்பு மஜ்ஜை நோய்க்குறி, குடல் - இரைப்பை நோய்க்குறி, இதயம் / மைய நரம்பு மண்டல நோய்க்குறி ஆகிய மூன்று பாதிப்புகளை உருவாக்கலாம்" என்று அணுசக்தி மருத்துவ நிறுவன முன்னாள் விஞ்ஞானி எச்.சி. கோயல் தெரிவிக்கிறார். முதலாவது ரத்த அணுக்களைக் குறைத்து, ரத்தக் கசிவையும், இரண்டாவது வயிற்றுப் போக்கு, எலெக்ட்ரோலைட் சமநிலை குலைவையும், மூன்றாவது உடல்நடுக்கம், வயிற்றுப் போக்கையும் தோற்றுவிக்கும் என்றார்.

அறிவியல் மனித குலத்துக்கு நன்மை மட்டுமே செய்கிறது, வளர்ச்சிதான் நாட்டுக்கு முதுகெலும்பு என்றெல்லாம் பிதற்றுகிறவர்கள் இந்ததொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பதில் சொல்ல வேண்டும்.

Pin It