கீற்றில் தேட...

பிரியங்களை
வெட்டிச் சாய்க்கிறாய்
சுயநலத்துடன்..
மீண்டும்
உன்னிடமே திரும்புகின்றன..
வெட்டுண்ட பிரியங்கள்
ஒவ்வொன்றும்
வேர்கொண்டு...
----------------------------
அறிவு ஜீவியின்
மனநிலையையும்
பைத்தியக்கார
மனநிலையையும்
சேர்த்த கலவையாகவே
வெளிப்படுகிறது
காதலின் மனநிலை
-----------------------
மிகவும் அதிர்ஷ்டமானது
ஒரு காதல்
கவிஞனை உருவாக்குவது..

மிகவும் துரதிர்ஷ்டமானது
ஒரு கவிஞனுக்கு
காதல் கைகூடாமலிருப்பது
---------------------------
இருளை இருளாலும்
ஒளியை ஒளியாலும் கூட
வெல்ல முடியும்
முடியாது
காதலை காதலால் வெல்ல..
-----------------------------
வன்முறை வேறு
அன்பு வேறென்றுதான்
நினைத்திருந்தேன்
காதலைச் சந்திக்கும் வரை..

சந்தித்த நொடியிலிருந்து
இந்த கவிதை படிக்கப்படுகிற
இந்த நிமிடத்தின் நகர்தலிலும்
சிக்கித் தவிக்கிறேன்
ஒரு இனிய வன்முறைக்குள்..

எங்கே போய் சேர்க்குமோ?
போய்ச் சேருமுன் சாய்க்குமோ?

காதலில் தொலையும் வாழ்க்கை
மீட்கப்படும்
அதே காதலாலயே..
--------------------------------
என் உணர்ச்சிகளின்
கோப்பையிலிருந்து
வழியும்
வார்த்தையை
உனக்குப் பருகத் தருவேன்
என் கடைசிச் சொட்டு
காதல் தீரும் வரை..

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)