கீற்றில் தேட...

அவர்
திக்கெட்டும் திரிந்தலைந்து
திரியாக  உடல்மெலிந்து...
பற்றற்று பரிதவித்து
வடபுலத்து மலையடியில்
பரமனடி கண்டுணர்ந்து
காவி உடையணிந்து
கடுந்தவத் துறவியானார்...                  
*
முற்றும் துறந்து
அவர்
துறவியானபின்னும்
தன்துறவுத்தனத்தை
மட்டும்
துறவாமல் தொடர்ந்தார்
*
தன்னை
கடவுள்கைக்கருவி
என்ற துறவி
பின்னர்
தான்னையே கடவுளென்றார்..?
 
*
துன்பத்தை உடையாக
துயரத்தை கொடையாக
கொண்டதொரு பெருங்கூட்டம்
துறவியை நாடி
துயர்நீங்கிச் சென்றது...
*
கண்டங்கள் தாண்டி
காலடிபட்டது..
பண்டங்கள் சூழ
பணமோ குவிந்தது...
*
துறவி
தன்
 துறவுத்தனத்தை
மட்டும்
துறவாமல் தொடர்ந்தார்..
.*
துறந்து துறந்து
இனி
துறப்பதற்கு எதுவுமின்றி
துறவி
ஒருநாள்
துயரத்தில் ஆழ்ந்தார்...?
*
துறக்கஏதுமின்றி
துடித்த துறவி கடைசியாய்
எழுந்து கதவைத் திறந்தார்
தன்
துறவையேத் துறந்தார்..!
 
- டி.அருள்செழியன்